'குச்சிக்குள்ள கெடந்த சனம்
கோணிச் சாக்குல சுருண்ட சனம்'
சமீபத்தில் மாமன்னன் படத்தில் வடிவேலு பாடிய பாடல் எல்லோராலும் பாராட்டப்பட்டது என்பதை நாம் அறிவோம். அரசியலில் எல்லாரையும் கோடிகளில் புரள வைக்கும்... அந்தக் கோடிக்கான கதையைக் கேட்டால் நண்பன் கொடுத்ததுன்னு பதில் வரும். நான் தெருக்கோடியில இருக்கேனேன்னு அவங்ககிட்ட கேட்டா, நீ எனக்கு ஓட்டுப் போட்டியாங்கிற கேள்வியும் வரும். அதை விடுங்க ஆனால் அதே அரசியல் கோடிகளில் புரண்ட ஒருவரை வீட்டில் முடக்கிப் போட்டது என்றால் அது வடிவேலுவைத்தான் என்பதை நாம் எல்லாரும் அறிவோம். வாயால் சம்பாதித்த கலைஞனின் வாய்தான் எதிரியாகவும் மாறியது.
முன்பெல்லாம் இசைக்காக இசையமைப்பாளர்கள் கொண்டாடப்பட்டாலும் பாடலை எழுதிய கவிஞரின் பெயரும் எல்லாருக்கும் தெரிந்தே இருக்கும். கண்ணதாசன், பட்டுக்கோட்டை, வைரமுத்து, வாலி, புலமைப்பித்தன், மருதகாசி, காமகோடியான், கங்கை அமரன் இன்னும் இன்னுமாய் பல கவிஞர்களின் பெயரும் பாடலுடன் தெரிந்தே இருக்கும் ஆனால் இன்று எழுதும் கவிஞர்களின் பெயர்களை அப்படி எல்லாருக்கும் தெரிந்து விடுவதில்லை, ஏனென்றால் இன்று இசையமைப்பாளர் மட்டுமே முன் நிறுத்தப்படுகிறார். பாடலாசிரியர்கள் கண்டு கொள்ளபடுவதில்லை.
மாமன்னனில் வடிவேலு பாடியிருக்கும் இந்தப் பாடலை எழுதியது அண்ணன் யுகபாரதி அவர்கள், - இந்தப் படத்தில் எல்லாப் பாடலும் இவர்தான் - எப்படிப்பட்ட வரிகள் இவை என்பதை பாடலைக் கேட்டால் கண்டிப்பாக உணர்வீர்கள். 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்து...' திரைத்துறைக்குள் நுழைந்தவர், மறைந்த பாடலாசிரியர் நா, முத்துக்குமாருக்குப் பிறகு தனது அழகான வரிகளால் மக்கள் கவிஞராய் உயர்ந்து நிற்கிறார் என்றால் மிகையில்லை. 'எள்ளு வய பூக்களையே' எப்படியான தாக்கத்தை உண்டாக்கியதோ அதே தாக்கத்தைத்தான் இந்த 'மலையிலதான் தீப்பிடிக்கிது ராசா'வும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் பாடல் குறித்தான கொண்டாட்டங்களில் இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானும் பாடியதற்காக வடிவேலும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடப்பட்டார்கள். பாடல் எழுதிய அண்ணன் யுகபாரதியைக் கொண்டாடியவர்கள் வெகு சிலரே. கருத்தம்மாவுக்குப் பின் ரஹ்மானின் கிராமத்து இசைக் கலக்கல் என்று சொன்னாலும் கருத்தம்மா கொடுத்த கிராமத்து இசைத்தாக்கத்தை இது கொடுத்ததா என்றால் முழுமையாகக் கொடுக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது.
இங்கே இன்னொன்றை நாம் கவனிக்க வேண்டும், சமீபமாய் சமூக வலைத்தளங்களில் ஒருவரைத் தூக்க மற்றரைத் தாக்கும் பாங்கு, இது ஒரு கேடு கெட்ட மனநிலை. இங்கே மதம் என்னும் மதம் பிடித்துப் பலகாலம் ஆகிப்போச்சு. உன் மதம் என்ன கிழித்தது என்று பேசுவதில் மாற்று மதத்தாருக்கு இருக்கும் மகிழ்வும் சந்தோசமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. சாதியும் மதமும் அதன் பின்னான அரசியல்களும் சம விகிதத்தில் விதைக்கப்பட்டு, விஷமாய் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இது எதில் கொண்டு போய் முடிக்கப் போகிறதோ என்று நினைக்கும் போதுதான் பெரும் கவலை மனசுக்குள் குடிகொள்கிறது.
நாம் ஒரு கட்சியை விரும்புவது போல்தான் மற்றவர்களும், இது சுதந்திர நாடு... அவரவருக்கான விருப்பம் அவரவர்கானதே என்பதை ஏற்க மறுத்து நாம் தாங்கிப் பிடிக்கும் கட்சியைத்தான் அவனும் தாங்கிப் பிடிக்க வேண்டும், அவன் மாற்றுக் கட்சிக்கு மணி அடித்தால் அவனை வைத்து அடிப்போம் என்ற மனநிலையால்தான் இங்கே நடக்கும் தவறுகளுக்கு கூட குரல் கொடுக்க மனமின்றி முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
வடிவேலு கிட்டத்தட்ட 32 வருடங்களுக்கு முன் தன் முதல் படத்தில் - பாடல் : போடா போடா புண்ணாக்கு, படம் : என் ராசாவின் மனசிலே, வருடம் : 1991 - முதல் பாடலைப் பாடினார். அதன்பின் 31 பாடல்களைப் - இது 32வது பாடல் - பாடியிருக்கிறார். மாமன்னன் பாடல் வந்தபோது ரஹ்மான் மட்டுமே வடிவேலுவைச் சரியாகப் பயன்படுத்தியது போலும் இதுவரை பயன்படுத்திய இசையமைப்பாளர்கள் - குறிப்பாக இசைஞானி, தேவா - சரியாகப் பயன்படுத்தவில்லை என்று ஒரு பக்கம் அடித்துத் தள்ளிக் கொண்டிருந்தார்கள்.
இப்படியான தற்குறித்தனமான பதிவுகளைப் பார்த்துச் சிரிப்புத்தான் வந்தது. பாத்ரூம் பாடகன் என்பதைப் போல் தான் வேலை செய்து கொண்டிருக்கும் போது பாடித் திரிந்தவரை முதல் படமான என் ராசாவின் மனசிலே - என் தங்கை கல்யாணிதான் முதல் படம் என்றாலும் இதுதான் அதிகாரப்பூர்வமாய் முதல் படமாய் அவருக்கு அமைந்தது - பாட வைத்த பெருமை இசைஞானிக்குத்தான் உண்டு என்பதை ஏற்றுக் கொள்ள இங்கு யாருக்கும் மனமில்லை. அதனால்தான் இப்படியான வன்மப் பகிர்வுகள்.
ரெண்டு வருசத்துக்கு முன்னால இருந்த குரல் இப்போது இருப்பதில்லை என்னும் போது முப்பத்தி இரண்டு வருடங்களுக்கு முன் இருந்த குரல் இப்போது அப்படியே இருக்கும் என்றும் அதை ரஹ்மான் மிகச் சிறப்பாகப் பட்டை தீட்டி விட்டார் என்றும் நினைக்கும் எண்ணத்தை என்னவென்று சொல்வது..?
இளையராஜா ராஜ்யசபா எம்.பி ஆன பின் அவரை இவர்கள் பார்க்கும் பார்வை இருக்கே... அடேயப்பா, எத்தனை கேவலமாகப் பேச வேண்டும் அத்தனை கேவலமாகப் பேசுவதுடன் ஒருமையில் அவன், இவன் என்று சொல்லிக் களமாடுவதைப் பார்க்க வேண்டுமே. அதில் கருத்துக்கள் போடுவது யாரென்று பார்த்தால் எல்லாருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இந்த மனிதர்களுக்கு அத்தனை ஆனந்தம். இப்படி நாம் ஆனந்தித்துக் கிடக்கும் போது நாம் சேற்றை வாரி வீச நினைக்கும் மனிதர்களோ மலர் வனத்துக்குள் அழகாய் பயணித்துக் கொண்டிருப்பார்கள். அப்படித்தான் தனது நாட்களை பூவாசமாய் மாற்றிக் கொண்டு பயணிக்கிறார் இசைஞானி.
அந்த மனிதரின் பாட்டுத்தான் எங்களின் சுக, துக்கங்களில் எல்லாம் இரண்டறக் கலந்திருக்கிறது என்பதை வெளியில் சொல்லாமல் வேண்டுமானால் இவர்கள் இருக்கலாம், ஆனால் அதுதானே உண்மை. தமிழன் இருக்குமிடமெல்லாம் ஒலித்துக் கொண்டுதானே இருக்கிறது.
இந்தப் பதிவின் ஆரம்பத்தில் சொன்னதுதான்... அதாவது அரசியல் ஆதரவு என்பது அவரவர் விருப்பதைப் பொறுத்தது, இதில் உன் விருப்பத்தைத் திணிக்க வேண்டிய கட்டாயம் எங்கே வந்தது..? நான் விரும்பும் தலைவரைத்தான் நீ துதிக்க வேண்டும் எனச் சொல்ல நீங்கள் யார்..? ஆளும் கட்சியை வைத்துப் போலிச் செய்திகள் தாங்கிய மீம்ஸ் போட்டால் சிறையில் தள்ளும் அரசு, அதே எதிர்க்கட்சியினரை என்றால் தனது உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்களில் அடித்து ஆடுவதைப் பார்த்து ரசிக்கத்தானே செய்கிறது..? போலி என்றால் எல்லாம் போலிதானே... அதில் ஏன் பிரிவினை...? இந்தப் போலி விசயத்தில் சமூக வலைத்தள, கடைநிலை உறுப்பினர்கள் அடித்து ஆடுவார்கள்... அதே அவர்கள் சார்ந்த கட்சி குறித்த உண்மைச் செய்தி என்றால் கூட வெளியில் சொல்லாமல் GEM - Ginger Eating Monkey - ஆக, அப்படி எதுவும் நடக்காதது போல் இருப்பார்கள். என்னே ஒரு கட்சிப் பக்தி, இது ஒரு பைசாவுக்குக் கூட பிரயோசனமில்லாத பக்தி என்பதை உணராத வரை அவன்தான் உன் தலைவன்.
இந்தா ஒரு குழந்தை அப்பனின் குடியால் தன் உயிரை விட்டிருக்கிறது...? யாராவது அதைப்பற்றிப் பேசுகிறோமா என்றால் இல்லை. காரணம் நம் முட்டு ஆளும் அரசுக்கானது. நமக்குப் பிடித்த அரசு தலைமைப் பீடத்தில் இருக்கும் போது இப்படியான நிகழ்வுகள் என்றால் பேசவே மாட்டோம். அதே நேரம் அரசுக்கு ஆதாரம் கிடைக்கும் என்றால் இந்நேரம் சமூக வலைத்தளங்களில் சரமாரியாக பதிவுகள் வந்து விழுந்திருக்கும். அனிதாக்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் நாம் விஷ்ணுப்பிரியாக்களைக் கண்டு கொள்ள மாட்டோம். அவள் குடிக்கு எதிராக அல்லவா தன் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறாள்.
போன ஆட்சியின் போது வீதிக்கு வீதி கொடி பிடித்த, மதுவுக்கு எதிராக ஆடித் தீர்த்த மதுரை நந்தினி எங்கே போனாள்...? இந்த திருமுருகன் காந்தி, கோவன் எல்லாம் செயல் இழந்து கிடக்கிறார்களோ..? இந்த மனிதர்கள் எல்லாருமே பிஸ்கெட்டுக்கு ஆடுபவர்கள் என்பதை நிரூபித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நாம்தான் சாதியையும் மதத்தையும் தூக்கிச் சுமந்து இவர்களைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். சமீபமாய் பள்ளிகளில் கஞ்சா, கள்ளச்சாராயம் எனத் தமிழகம் தறிகெட்டு நிற்கும் போது போன ஆட்சியில் போராடிய இவர்களுக்கு எல்லாம் இது காதில் விழவில்லை போலும்..? இவர்கள்தான் மக்கள் சேவகர்கள்... இல்லையா..?
சரி மாமன்னனுக்கு வருவோம்...
பல வருட வலியைச் சுமந்த ஒரு மனிதன், மீண்டு 'நாய் சேகர்'-ஆக வந்தபோது இந்த மக்கள் கொண்டாடித் தீர்ப்பார்கள் என்ற நப்பாசையில் மொத்தமாக மண் விழுந்த வலியையும் சேர்ந்து சுமந்து நிற்கும் போதுதான், எதார்த்தப் படைப்பாளி - நமக்கு அப்படித் தெரிந்தவர்தான் - மாரி செல்வராஜ் கை கொடுக்கிறார், எங்கள் அண்ணன் யுகபாரதியின் வரிகள் கிடைக்கின்றன, இசைப்புயல் ரஹ்மானின் இசையும் சேர்ந்து கொள்ள, அதைக் கெட்டியாய் பிடித்துக் கொள்கிறார். அதில் ஜெயிக்கவும் செய்கிறார். இந்த வெற்றியின் பின்னணியில் இந்த மூவரும் சமமாய் இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது. அதற்காக இசைஞானிக்கு இசை அமைக்கவே தெரியாது என்று பேசுவதெல்லாம் எத்தனை மட்டரகமான பேச்சு.
இதே இசைஞானி ஆன்மீகம் பேசாமல், ராஜ்யசபா எம்.பி ஆகாமல் இருந்திருந்தால் அல்லது தாங்கள் முட்டுக் கொடுக்கும் கட்சிக்கு ஒரு முட்டாக இருந்திருந்தால் விடுதலை படத்தின்இசையை எவ்வளவு தூரம் சிலாகித்து, அவரைக் கொண்டாடியிருப்போம். அதெல்லாம் செய்யாமல் அந்தாளு குங்குமத்தை வச்சிக்கிட்டு, சாமி கும்பிட்டுக்கிட்டு, தங்களுக்குப் பிடிக்காத ஒரு கட்சியின் ராஜ்யசபா உறுப்பினராய் ஆகி இருப்பதால் அவரை அடித்துத் தாக்க வேண்டும் எனப்தற்காகவே வடிவேலு பாடிய பாடலுக்கு கூட அவரை அடித்து மகிழ்கிறோம். இந்த மனநிலை மாறினாலே நாமெல்லாம் மனிதர்களாக வாழ ஆரம்பித்து விடுவோம். ஆனால் இது இப்போது மாறும் என்று தோன்றவில்லை.
வடிவேலு பாடிய பாடலுக்கும் இசைஞானிக்கும் என்ன சம்பந்தம்..? அந்தாளு ரஹ்மான் இசை சரியில்லைன்னு சொன்னாரா..? இல்லை யுகபாரதியின் வரிகள் சரியில்லைன்னு சொன்னாரா..? அவர் தங்களுக்கு விருப்பமில்லாத விசயங்களைப் பண்ணுகிறார் என்பதை மட்டுமே மனதில் வைத்து வன்மப் பதிவுகள்... நம் விருப்பத்தை அவர் ஏன் செய்ய வேண்டும்..? அவருக்கான வாழ்க்கையை அவர் வாழட்டுமே... அதில் நமக்கென்ன வருத்தம்..?
ஜடேஜாவோட பொண்டாட்டி காலில் விழுந்ததை அத்தனை கேவலமாகப் பேசும் நாம், தோனி கையில் பகவத்கீதையை வைத்திருப்பதை விமர்சிக்கும் நாம், செத்தவன் எந்த மதத்துக்காரன் எனப் பார்த்துப் பதிவு போடும் நாம், எப்போது திருந்தப் போகிறோம்...? இந்தச் சமூக ஊடகச் சனியன் தலைவிரித்து ஆடும் வரை நாமெல்லாம் திருந்த வாய்ப்பே இல்லை... இந்தச் சமூக ஊடகமும் நாளுக்கு நாள் தரம் தாழ்ந்துதான் போகிறதே தவிர, நல்லன எதுவும் செய்யவில்லை. நாமாக மாறினால்தான் உண்டு.
மீண்டும் மனிதம் மலரும் என்று நினைத்தால் சத்தியமாக அதற்கான வாய்ப்பே இல்லை.
மாமன்னன் பாடல் மிகச் சிறப்பு....
வடிவேலுவின் குரல் நல்லாயிருக்கு...
ரஹ்மானின் இசை கலக்கல் ரகம்...
மாரி செல்வராஜ் சாதிய வட்டத்தை விட்டு நல்லதொரு படத்தைக் கொடுத்திருப்பார் என்று நம்புவோம்.
இதையெல்லாம் தாண்டி படத்துக்குப் படம் தனது சிறப்பான வரிகளால் யுகபாரதி அண்ணன் யுகத்தின் பாரதியாய் உயர்ந்து நிற்பதற்கு வாழ்த்துகள்.
ரஹ்மானைக் கொண்டாடும் நாம் வரிகளுக்காக நம் மக்கள் கவிஞர் அண்ணன் யுகபாரதியையும் கொண்டாடுவோம்.
-பரிவை சே.குமார்.
கவிஞர்களுக்கான அங்கீகாரம் தரப்படுவது இல்லை என்பது வேதனையான உண்மை.
பதிலளிநீக்குஅரசியல் காழ்ப்புணர்வு அதீதமாக போய்க்கொண்டு இருக்கிறது. அதிலும் இப்படி இருப்பவர்கள் பலருக்கும் உண்மை நிலை தெரியவே தெரியாது. நடப்பது என்ன என்றே தெரியாமல் இருப்பவர்கள். விட்டுவிலகி இருப்பதே மேல்.
இந்தப் பாடல் பற்றி இப்போதுதான் கேள்விப்படுகிறேன். தேடிப்பார்த்து கேட்கிறேன். விடுதலை படத்தில் இளையராஜா பாடல் அருமை. இந்த வயதிலும் குரலில் சுருதி கெடாமல் பாடி இருக்கிறார்.
பதிலளிநீக்குமனம் என்னென்ன நினைத்ததோ, அதை அப்படியே இங்கு கண்டேன்...
பதிலளிநீக்குபிறப்பில் வேறுபாடு காணும் "கீழ்கள்" இருக்கும் வரை நம் நாடு முன்னேறாது...
பதிலளிநீக்குபதிவின் கருத்துகள் அனைத்தும் டிட்டோ..கவிஞர்கள் கொண்டாடப்பட வேண்டும்.
பதிலளிநீக்குகீதா