வியாழன், 22 ஜூன், 2023

கேலக்ஸி பதிப்பக முதலாம் ஆண்டு வெற்றி விழா - நிறைவுப் பகுதி

ஞாயிறு (ஜூன்-18) மாலையைச் சிறப்பானதொரு மாலையாக்கியது கேலக்ஸியின் முதலாம் ஆண்டு வெற்றி - நிறைவு - விழா. விழா நிகழ்வின் தொடர்ச்சியாய்...

பால்கரசு வாத்தியாரைப் பற்றிப் பேச ஒரு போலீஸ் ஆபீசரைப் போல் எழுந்து, நடந்து போனார்.... கேலக்ஸிக்கு வாழ்த்துத் தெரிவித்து தனக்குத் தெரிந்த சுப்பிரமணி வாத்தியாரைப் பற்றிப் பேசினார். அவர் மாணவர்களை நல் வழிப்படுத்தியதுடன் கிராமமக்களைக் குடிக்க விடாமல், மரம் வளர்த்து, குளம் வெட்டி எல்லாருக்கும் முன் உதாரணமாக இருந்தார் என்றும் அப்படி ஒரு வாத்தியாராய் இந்த வாத்தியார் இருப்பார் என்றும் குமாருடைய புத்தகம் வெளியாகி இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி என்றும் சொன்னார். மேலும் பாலாஜி அண்ணனைத் தான் பெருமையுடன் பார்ப்பதாகவும் அவர் தன்னோடு பயணிக்கும், இங்கிருக்கும் எழுத்தாளர்களில் எட்டு எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக் கொடுத்து தான் மட்டுமின்றித் தன்னைச் சுற்றி இருக்கும் அனைவரும் வளர வேண்டும் என்று நினைப்பதை எங்க ஊர் சுப்பிரமணி வாத்தியாரோடு இணைத்துப் பார்க்கிறேன் என்று சொன்னார்.
அடுத்துப் பேச வந்த தெரிசை சிவா, தனக்கும் பாலாஜி அண்ணனுக்குமான நட்பையும் தனது கதைகளை எல்லாம் அவர் பலரிடம் கொண்டு போய் சேர்ப்பதையும் சொல்லி, எங்க மொழி நடையில் ஏதாவது ஒரு கதை படித்தால் உடனே எனக்குப் போன் பண்ணி சிரித்துக் கொண்டே இருப்பார் அதனாலேயே அண்ணனின் போன் வந்தால் நான் வெளியில் எழுந்து வந்து விடுவேன். அப்புறம் இதற்கு என்ன அர்த்தம், அதற்கு என்ன அர்த்தம் எனக் கேட்டுத் தெரிந்து கொள்வார். கேலக்ஸியில் புத்தகம் கொண்டு வர வேண்டுமெனச் சொல்லி எழுதி அனுப்பச் சொல்லி, நான் மறந்தாலும் அடுத்தது எங்கே எனக் கேட்டு வாங்குவார். அவர் விரட்டினாலும் நான் இன்னும் முடிக்காமலேயே இருக்கிறேன். விரைவில் கேலக்ஸியில் புத்தகம் கொண்டு வருவோம். பாலாஜி அண்ணனுக்கு அவரது நூல்களைக் கொடுத்த விபரங்களையும் அவர் பாராட்டியதையும் பற்றி விரிவாகப் பேசினார். பரிவை குமார் மண் மணத்தோடு எழுதுவார், வாத்தியாரும் அப்படியானதாக இருக்கும் என்று நினைக்கிறேன் என்று சொன்னார்.


அடுத்துப் பேச வந்த அபுதாபி தமிழ் மக்கள் மன்றத்தின் சிவக்குமார் அவர்கள், இங்கு வந்து உங்களை எல்லாம் பார்க்கும் போது, ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியாய் நிற்பதைக் காணும் போது, உங்களின் தமிழைக் கேட்கும் போது எனக்கு மகிழ்வாக இருக்கிறது என்று சொல்லி பாலாஜி அண்ணனுக்கு வாழ்த்துச் சொன்னதுடன் நானும் மதுரைக்காரன்தான் என்று சொன்னார்.
அதன்பின் பேச வந்த முஹைதீன் பாட்ஷா, கேலக்ஸியில் புதியவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதுடன் 2016-ல் கொண்டு வர நினைத்து முடியாமல் போன தனது கவிதை நூலை நீ கொடு நான் கொண்டு வருகிறேன் என்று சொல்லி பாலாஜி அண்ணன் கொண்டு வந்தார். ஊக்குவிக்க ஆள் இருந்தால் பாக்கு விற்பவனும் தேக்கு விற்பான் என்ற பழமொழியை சற்றே மாற்றிச் சொல்ல, அந்த நேரத்தில் பலர் வாத்தியார் ஆனார்கள் என்றாலும் யாரும் சரியாகச் சொன்னதாய் எனக்குக் கேட்கவில்லை. கேலக்ஸியின் பயணம் இன்னும் சிறப்பாக அமைய
வாழ்த்துகள்
சொன்னார்.
'எல்லாரும் பேசிட்டீங்களா... வேறு யாரும் இருக்கீங்களா... பசி வந்திருச்சுப்பா' என்று சொன்ன பாலாஜி அண்ணன் , பிர்தோஷ் பாஷாவைப் பேச அழைத்தார். அவரும் இந்த விழாவை அபுதாபியில் வைக்கத்தான் எண்ணியிருந்தோம், சிறப்பு விருந்தினராய் 20 பேரைத் தயார் பண்ணி அண்ணனுக்கு விபரம் அனுப்ப, டேய் விழாவுக்கு வர்ற ஆட்களைவிட சிறப்பு விருந்தினர் அதிகமா இருக்காங்கடா எனச் சொல்லிவிட்டார். வேறு சில காரணங்களால் விழாவை அங்கு வைக்கவில்லை என்றாலும் இங்கு மிகச் சிறப்பாகவே நடக்கிறது. அண்ணனின் கடின உழைப்பையும் அவருக்கு உறுதுணையாக நிற்கும் அவரின் குடும்பம், ஜெஸிலா மேடம் என எல்லாருக்கும் நன்றியையும் வாழ்த்துக்களையும் சொல்லி அமர்ந்தார், அண்ணன் சொன்ன இரண்டு நிமிடத்தைக் கடைபிடித்தார் என்று நினைக்கிறேன்..
ரமாமலர் அவர்கள் பேச வந்தபோது அபுதாபி எழுத்தாளர் குழும வழி பாலாஜியுடன் பழக்கம் என்றாலும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை, தற்போது அடிக்கடி சந்திக்க முடிகிறது என்று சொல்லி, புத்தகத்தை வாங்கிப் படியுங்கள் என சசி அண்ணன் சொன்னதை அவரும் வலியுறுத்தி நான் நிறைய புத்தகங்கள் வைத்திருக்கிறேன். வீட்டில் ஒரு சிறிய நூலகமே வைத்திருக்கிறேன். என் புத்தகம் எனக்கு மட்டுமே, யாருக்கும் இரவல் கொடுப்பதில்லை, படிக்க நினைத்தால் என் வீட்டில் வந்து படிக்கலாம். நிறைய சின்னப்பிள்ளைகள் எல்லாம் வீட்டில் வந்து படிக்கிறார்கள் என்று சொன்னார். மேலும் கேலக்ஸியின் வளர்ச்சி வரும் வருடங்களில் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும்... இருக்கும் என்று சொன்னார்.
இதற்கு இடையில் மீண்டும் மைக்கைப் பிடித்த பிலால் அண்ணன் விழா நடத்த இடம் கொடுப்பதுடன் பாலாஜிக்குப் பெரும் பக்க பலமாக இருக்கும் ஜெஸிலாவைப் பற்றிச் சொல்ல மறந்துவிட்டேன். அவருக்கு வாழ்த்துகளும் நன்றியும் எனச் சொன்னார்.
அடுத்து பாலாஜி அண்ணன் எல்லாருக்கும் நன்றி சொன்னார். தான் வீட்டில் தங்குவது ஆறு மணி நேரம் மட்டுமே என்றும் குடும்பப் பாரம் முழுவதையும் அவரின் மனைவி சுமப்பதாகவும், பிள்ளைகளின் படிப்பு முதல் எதையும் அவரின் காதுக்கு கொண்டு வருவதில்லை என்றும் சொல்லி, அவருக்கு நன்றி சொன்னார். அதேபோல் தனது வளர்ச்சி மற்றும் வீழ்ச்சியில் எப்போதும் உடனிருக்கும் எழுத்தாளர் ஜெஸிலா அவர்களுக்கும், எங்களைப் போன்ற தம்பிகளுக்கும் அண்ணன்களுக்கும், அழைப்பை ஏற்று வந்து வாழ்த்தியவர்களுக்கும், வாத்தியார் புத்தக வடிவமைப்பை மிக நேர்த்தியாகச் செய்து கொடுத்த தசரதனுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
ஐயா அபுதாகீர் அவர்களும் அவரின் மகளும் பாலாஜி அண்ணனுக்கும் எழுத்தாளர் ஜெஸிலா அவர்களுக்கும் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்கள்.
எல்லாருக்கும் சிறப்பான பிரியாணி இரவு விருந்தாக வழங்கப்பட்டது.
எப்பவும் போல் எல்லாரும் இருக்கும் போட்டோ எடுக்கப்பட்டது.
எப்பவுமே நான் புத்தகத்தில் கையெழுத்துப் போட்டுக் கொடுப்பதில்லை ஆனால் நேற்று அத்தனை பேருக்கும் கையெழுத்து இட்டு, போட்டோ எடுத்ததெல்லாம் கொஞ்சம் ஓவராகத்தான் தெரிந்தது என்றாலும் நண்பர்கள் கேட்கும் போது மறுக்க முடியவில்லை. அப்படியும் சொல்லிப் பார்த்தேன், இல்லை எழுதுங்க என்று நின்றார்கள்.
அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பை பிலால் அண்ணன் வாங்கிக் கொண்டு போட்டோவும் எடுத்துக் கொண்டார்.
தம்பி முகமது பிர்தோஷ் தனது யூடியுப் சேனலுக்காக எல்லாரையும் பேட்டி எடுத்தார். நானும் கூட வாத்தியாரைப் பற்றிப் பேசினேன். அந்தத் தொகுப்பை அவரின் புத்தகப்பித்தன் என்னும் யூடியுப் சேனலில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
என்னுடன் பேசிய டாக்டர் பெனடிக்ட் 'இந்த வாத்தி - 'யார்?' எனப் படித்துவிட்டுச் சொல்கிறேன் என்றார்.
சிவக்குமார் அவர்கள் புத்தகத்தில் எனது போன் நம்பரை எழுதச் சொல்லி வாங்கிக் கொண்டார். அவரின் மனைவி என்னுடன் நீண்ட நேரம் பேசினார், போன் நம்பர் கொடுங்க, நாங்க அபுதாபிதான்... புத்தகத்தைப் படிச்சிட்டுப் பேசுறேன் என்று சொன்னார்கள்.
எல்லாரும் கிளம்ப இருந்த போது திரு. எஸ்.எஸ்,மீரான் அவர்கள் வந்தார். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். பாலாஜி அண்ணன் என்னையும் அறிமுகம் செய்து வைத்தார்.
எப்பவும் போல் விழா முடிந்ததும் நாங்கள் சுத்தம் செய்யும் பணியில் இறங்க, பிலால் அண்ணன் வேகவேகமாக வேலைகளைப் பார்த்தார். எங்களுடன் வாசுவும் இணைந்து கொண்டார்.
ருவைஸில் இருந்து விழாவுக்கு வந்திருந்த எழுத்தாளர் சிவமணிக்கு எங்களுடன் முஸாபா வரை வர ஆசை இருந்தது என்றாலும் நாங்க கிளம்ப எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும் அதற்குள் நீங்க பாதித் தூரம் போயிடலாம் என்று சொன்னதால் எங்களுக்கு முன் கிளம்பிச் சென்றார். நாங்கள் போன் செய்தபோது ருவைஸ் பயணத்தில் பாதித்தூரத்திற்கு மேல் கடந்திருந்தார்.


'நீங்க விழா குறித்து எழுதுறது ரொம்பவே நல்லாயிருக்கும், நீங்கள் பகிர்ந்ததும் வாசிப்பேன்... இந்த விழா பற்றியும் எழுதுங்க. உங்க புத்தகத்தைப் படிச்சிட்டு சொல்றேன்' எனச் சொல்லிச் சென்றார் ரமாமலர்.
புரோ ஆக்டிவ் எக்ஸெல் அலுவலகத்தைச் சுத்தம் செய்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு நாங்கள் கிளம்பியபோது எப்பவும் போல் டீ சாப்பிடலாம் என்று சொன்னதும் ஜெஸிலா மேடம் நான் வாங்கித் தருகிறேன் வாங்க எனச் சொல்லிக் கூட்டிச் சென்றார்.
விழாவின் நிறைவு வரை குளுகுளு ஏசியோடு கழித்து, ஜூஸ் கடைக்கு வெளியே சற்றே சூடான காற்றை வாங்கிச் சூடாகி, அரை மணி நேரத்துக்குப் பிறகு வந்த புளிப்பான எலுமிச்சை ஜூஸை சற்றே காரமான சூழலில் அருந்தி, அதுவும் பிள்ளைகளுக்குச் சொன்ன ஜூஸ் வராததால் ராஜாராம் வேறு கட்டையை எடுத்துக் கொண்டு அடிக்கடி எழ, அவரை சற்றே அடக்கி ஒரு வழியாக ஜூஸ் வந்து சேர்ந்தபோது எங்களுக்கு நேரமாகிவிட்டதெனச் சொல்லிக் கிளம்பினோம்.
மீதமிருந்த பிரியாணியை எடுத்துக் கொண்டு வந்தோம். வரும் போது பாடல்கள், காரசாரமான விவாதம் எனப் பயணித்து அறையை அடைந்த போது இரவு 12 மணிக்கு மேல் ஆகியிருந்தது. எங்களை எப்பவும் போல் இருப்பிடம் வந்து கூட்டிச் சென்று இருப்பிடத்துக்கு கொண்டு வந்து விட்ட பால்கரசுக்கு நன்றி.
எப்பவும் போல் சுபான் அண்ணாச்சி மிகச் சிறப்பாக போட்டோக்களை எடுத்திருந்தார். எல்லாரையும் தனித்தனியாக, அழகாக போட்டோ எடுத்திருந்தார். சரி நம்ம போட்டாவும் இருக்கும் எனத் தேடினால் நானும் பால்கரசும் மட்டும் மிஸ்ஸிங். அதென்னவோ தெரியலை பக்கத்துல இருந்தவங்க எல்லாரையும் தனித்தனியாக ஒன்று இரண்டெனச் சுட்டுத் தள்ளியிருக்கிறார். எங்களைக் காணோம். ஒருவேளை போட்டோ அழகாயிருக்குன்னு வச்சிக்கிட்டாரோ என்னவோ... இருந்தாலும் சுபான் அண்ணா இதெல்லாம் ஓரவஞ்சம் அண்ணா. சரி பால்கரசு அடுத்த கூட்டத்தில் பார்த்துக் கொள்வோம்.
வாசுவும் 60 போட்டோக்களுக்கு மேல் எடுத்திருந்தார்.
மனநிறைவான ஒரு விழா - மகிழ்வான தருணங்கள்.
புத்தகம் - விருது என கடினமாக சூழலைக் கடந்து வந்து கொண்டிருப்பவனுக்கு மனநிறைவையும் மகிழ்வையும் ஒரு சேரக் கொடுத்த தினமாய் அமைந்தது.
கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
கேலக்ஸி அதன் பாதையில் பயணித்து சிறப்பான இடத்தை அடைய
வாழ்த்துகள்.

நன்றி.

படங்கள் : சுபான் அண்ணன்.
-பரிவை சே.குமார்.

1 கருத்து:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி