வியாழன், 3 மார்ச், 2022

கோவையின் முகம் வேலாயுதம் ஐயாவின் கரங்களில் 'திருவிழா'

திரு. வேலாயுதம் ஐயா...

விஜயா பதிப்பக உரிமையாளர்...

கோவையின் சிறப்பு முகங்களில் ஐயாவும், அவரின் பதிப்பகமும்...

வாசிப்பால் உயர்ந்தவர், கோவை மக்களை மட்டுமல்ல தமிழக, இந்திய அளவில் வாசகர்களை வாசிப்பை நேசிக்க வைத்தவர்.

'புத்தகத்தை வாசி' என்பதைவிட 'புத்தகத்தை நேசி' என்பதே எனக்கு மிகவும் பிடித்தமான வரி. ஒரு புத்தகத்தைக் கடமைக்கு வாசிப்பதைவிட நேசத்தோடு வாசிக்கும் போதுதான் வாசகனால் அதில் சொல்லியிருப்பதை ஆத்மார்த்தமாக உள்வாங்கிக் கொள்ள முடியும். அப்படி உள்வாங்கிக் கொண்ட மனிதனை யாரும் உயர்த்திவிட வேண்டும் என்பதில்லை, அவனே தனக்கான உயரத்தை நிர்ணயித்துக் கொள்வான் என்பதற்குச் சிறந்த உதாரணம் வேலாயுதம் ஐயா அவர்கள்.

'வெற்றி பெற்ற ஒவ்வொரு மனிதனுக்குப் பின்னாலும் ஒரு புத்தகம் இருக்கிறது' என்பதுதான் இவரின் கருத்து, இதை இவர் எங்கும் எப்போதும் பொதுவெளியில் சொல்லத் தவறுவதேயில்லை. படித்தது எட்டாவதுதான் என்றாலும் அப்போதே இவரின் தேடல் புத்தகங்களாய்த்தான் இருந்திருக்கிறது. பள்ளிக்குச் செல்லும் போது கொடுக்கும் சில்லறைக் காசுகளை எல்லாம் சேர்த்து வைத்துப் புத்தகங்களை வாங்கி வாசித்து இருக்கிறார். ஆம்... வாசிப்பின் ருசியை ரசித்துச் சுவைத்ததால்தான் இன்று வாசகர்கள் கொண்டாடும் பதிப்பத்தை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார் வேலாயுதம் ஐயா.

வானம் பார்த்த பூமியான தென் தமிழகத்தில் அம்பதுகளின் விவசாயக் குடும்பத்துக்கேயான வறுமையின் காரணமாக படிப்பை விட்ட போதிலும், ஜவுளிக்கடை, பல சரக்குக்கடை என வாழ்வின் நிமித்தம் ஓடிக் கொண்டிருந்தாலும் பள்ளி நாளில் தொடங்கிய புத்தக வாசிப்பை மட்டும் கடினமான சூழலிலும் தன்னுடன் இறுகப் பற்றிக் கொண்டே பயணித்திருக்கிறார்... இன்னும் பயணப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவ்வாசிப்பை இன்று வரை சுவாசித்துக் கொண்டிருப்பதுடன் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் கொண்டாடிக் கொண்டும் இருக்கிறார்.

மு.வ-வின் 'பெற்ற மனம்' என்னும் நாவலை வாசித்த பின்னர்தான் - அக்கதை அப்போதைய அவரின் வாழ்க்கையை ஒத்திருந்திருக்கிறது - சமூக நாவல்களைத் தேடி வாசிக்க ஆரம்பித்திருக்கிறார். புத்தகங்களின் மீதான காதலால் தனது பல சரக்குக்கடையின் ஒரு பகுதியில் புத்தகங்களை வைத்து விற்க ஆரம்பித்திருத்தவர், 1977-ல் விஜயா பதிப்பகம் என்னும் புத்தக விற்பனை நிலையத்தைத் தொடங்கி, இன்று வரை கோவையில் பிரதான முகமாகத் தனது பதிப்பகத்தைச் சிறப்பாக நடத்தி வருகிறார்.

வேலாயுதம் ஐயாவுக்கு வாசகர்கள் மீது அபார நம்பிக்கை என்பதை விட அளவில்லாத அன்பு என்றுதான் சொல்ல வேண்டும். பேட்டிகளில் எல்லாம் வாசகர்கள் இல்லையென்றால் நானில்லை என்பதை மனம் திறந்து சொல்கிறார். தனது வாடிக்கையாளர்களை மதிப்பவனின் தொழில் எப்போதும் சோடை போனதில்லை என்பதை, பல கடைகளின் வளர்ச்சியில் கண் கூடாகக் கண்டிருப்போம். அப்படியான ஒரு வளர்ச்சியை, தன் வாசகர்களை மதித்து, அன்பு பாராட்டி, ஐயாவென அவர்கள் இவர் கேட்டதையும் கேட்காததையும் செய்யும் அளவிற்கு நெருக்கமாகி, அந்த அன்பினை மூலதனமாக்கி, தன் உழைப்பால் விஜயா பதிப்பகத்தை விருட்சமாய் வளர்த்து வைத்திருக்கிறார்.

இப்போது பல பதிப்பகங்கள் வாசகர்களை இணைத்து விழாக்களைக் கொண்டாடி வந்தாலும் 1979-ல் இந்தியாவிலேயே முதல்முறையாக வாசகர்களை இணைத்து 'வாசகர் திருவிழா'வை நடத்தியிருக்கிறார். இப்போதும் இவரின் எல்லா விழாக்களிலும் வாசகர்களே முக்கியப் பங்காற்றுகிறார்கள். இவர் கொடுக்கும் பல விருதுகளுக்கான தொகையை விஜயா வாசகர் வட்ட உறுப்பினர்கள்தான் கொடுக்கிறார்கள்.

ஜெயகாந்தன் விருது, கவிஞர் மீரா விருது, புதுமைப்பித்தன் விருது, சக்தி வை. கோவிந்தன் விருது (சிறந்த அரசு நூலகருக்கானது), வானதி திருநாவுக்கரசு விருது (சிறந்த புத்தக விற்பனையாளருக்கானது) கி.ரா. விருது என எழுத்தாளனைக் கொண்டாடித் தீர்ப்பதுடன் சாகித்ய அகாதெமி விருது பெற்றவர்களுக்குப் பாராட்டு விழாவும் நடத்திச் சிறப்பிக்கிறார் வேலாயுதம் ஐயா. இவர் கொடுக்கும் விருதுத் தொகைகளைக் கேட்கும் போது வியப்பாக இருக்கிறது. எதுவும் குறைவான தொகை இல்லை, அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாயைக் கி.ரா. விருதாளருக்குக் கொடுக்கிறார். கொடுப்பதற்கு மனிதர்கள் இருந்தாலும் அதை உருவாக்கி, இடை நிறுத்தாமல் கொண்டு செலுத்த மனம் வேண்டுமல்லவா..? அந்த மனம் வேலாயுதம் ஐயாவுக்கு இருக்கிறது.

தமிழகத்தின் மிகப்பெரும் எழுத்தாளுமைகள் என்னுடன் சகஜமாகப் பழகவும், என்னைத் தேடி வந்து சந்திக்கவும் காரணமாய் இருந்ததும் இருப்பதும் இந்த வாசிப்பும், புத்தக நேசிப்பும்தான் என்று சொல்லும் வேலாயுதம் ஐயா, 'வறுமையினாலும் விரக்தியாலுமே பல நல்ல எழுத்தாளர்களை இழந்திருக்கிறோம்' என்றும் 'இன்று எழுத வருபவர்கள் ஒன்றிரண்டு புத்தகங்கள் வெளிவந்ததும் தன்னை மிகப்பெரிய ஆள் என நினைத்துக் கொள்கிறார்கள், அது தவறு, இதைக் காலமும் வாசகர்களும்தான் முடிவு செய்ய வேண்டும்' என்றும் சொல்கிறார்.

தனது பிறந்தநாளுக்கோ பண்டிகைகளுக்கோ புத்தாடை உடுத்தாமல் எழுந்தாளர் எஸ்.ஆர்.ரெங்கநாதன் பிறந்தநாளான ஆக-12, உலக புத்தகத் தினமான ஏப்-13, உ.வே.சா பிறந்த நாளான பிப்-18 ஆகிய தினங்களில்தான் புத்தாடை உடுத்துகிறார். எழுத்தின் மீதான அவரின் ஆழமான நேசத்தையே இது காட்டுகிறது.

தன்னை யார் பாராட்டினாலும் அது எனக்கானது அல்ல எனக்குப் புத்தகம் பிடிக்கும் அவ்வளவுதான்... புத்தகங்களோடு பயணிப்பதே எனக்கான மகிழ்ச்சி என்று சொல்லும் இவர், 'இதயம் தொட்ட இலக்கியவாதிகள்' என்னும் தலைப்பில் கண்ணதாசன் உள்ளிட்ட பதிமூன்று ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைத் தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.

இவர் புத்தகக்கடை ஆரம்பித்தபோது பாடப்புத்தகங்கள் இல்லாமல் ஒரு புத்தகக்கடையா எனக் கேட்டவர்கள் இதெல்லாம் ஓடாது... இந்தத் தொழிலில் வெற்றி பெற முடியாது என்றெல்லாம் எதிர்மறையாய் சொன்னபோது 'ஒரு புத்தகக்கடை தோல்வியடைந்தால் அது நிர்வாகத்தின் தவறில்லை... படிக்கிறவங்க மற்றும் அறிவாளிங்க சமுதாயத்துல இல்லை அதனாலாதான் இந்தக் கடையில புத்தகங்கள் விற்பனை ஆகவில்லை, எனவே நான் மீண்டும் பல சரக்குக்கடையில் மட்டும் கவனம் செலுத்துவேன்’ என்பதுதான் இவரின் பதிலாய் இருந்திருக்கிறது.

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை நிரூபித்து, இன்று பலதரப்பட்ட மனிதர்களைச் சந்தித்து, பல புத்தகங்களைப் பதிப்பித்து, பல்வேறு விருதுகளைப் பெற்று, பல விருதுகளைக் கொடுத்து வெள்ளிவிழாவை நோக்கி விஜயா பதிப்பகத்தைச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார் வேலாயுதம் ஐயா.

ஆட்டுக்குளத்தில் -பாலாஜி அண்ணன் ஊர் - பிறந்து கோவையின் முகமாய் மாறியிருக்கும் வேலாயுதம் ஐயாவைப் பற்றிய விபரங்கள் எனக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் தெரியும். எழுத்தாளனையும் எழுத்தையும் கொண்டாடும் இந்த மனிதரின் கைகளுக்கு எனது 'திருவிழா' நாவல் சென்றடைந்திருக்கிறது, இயக்குநர் திரு. மனோபாலா, கவிஞர் திரு. யுகபாரதி எனத் திருவிழாவைக் கொண்டு சேர்த்த பாலாஜி அண்ணனே வேலாயுதம் ஐயாவிடமும் கொண்டு சேர்த்திருக்கிறார், அவருக்கு நன்றி.

'ஒரு புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்து சில பக்கங்களிலேயே இது வாசிக்க உகந்ததா இல்லையா என்று முடிவு செய்துவிடுவேன்' என்று சொல்லும் ஐயாவின் 'திருவிழா' குறித்தான கருத்துக்களுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்.

'வேரும் விழுதுகளும்' கொடுத்த நம்பிக்கையை எனக்குள் 'திருவிழா'வும் கொடுத்திருக்கிறது என்றாலும் பரவலான பார்வையை இந்நாவல் பெற்றிருப்பது மகிழ்வான விஷயம்... திருவிழா என் எழுத்து ஆர்வத்தை இன்னும் ஆழமாய் நேசிக்க வைத்திருக்கிறது. இதை எல்லா இடங்களுக்கும் கொண்டு சேர்க்கும் உறவுகளுக்கு நன்றி.


என் புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட திரு. வேலாயுதம் ஐயாவுக்கும் நன்றி.

*****************

சென்னை புத்தகத் திருவிழாவில் கடை எண் : 37, கலக்கல் ட்ரீம்ஸில் எதிர்சேவை, வேரும் விழுதுகளும், திருவிழா புத்தகங்கள் கிடைக்கும்.

தொடர்புக்கு,

தசரதன்
9840967484

Kalakkal Dreams Enterprises
Current . A/c no. : 156602000000979
IFSC code: IOBA0001566
Indian Overseas Bank
Porur Branch.
Gpay no. 9840967484
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி