திருவிழா-
இது எனது மூன்றாவது புத்தகம் - இரண்டாவது நாவல்.
கல்லூரியில் படிக்கும் போதிலிருந்து எழுதினாலும் புத்தகம் போடும் எண்ணமெல்லாம் இருக்கவில்லை. சென்னையில் வேலை பார்க்கும் போது காசு கொடுத்து புத்தகம் போட்டு வீட்டில் வைத்திருக்கும் நண்பர்களைப் பார்க்கும் போது இது எதற்காக என்றுதான் எனக்குத் தோன்றும். அதுவும் அதை ஒரு போதைபோல தொடர்ந்து செய்யும் நண்பர்களிடம் இதனால் உனக்கென்ன லாபம் என்று கேட்டதும் உண்டு.
மனசு வலைப்பூவில் எழுத ஆரம்பித்து எனது சிறுகதைகள் அதற்கென ஒரு இடத்தைப் பிடித்து, பல இணையப் போட்டிகளில் வெற்றி பெற்ற கதைகளாய் மாறிய போது பல நண்பர்கள் புத்தகமாக்கு என்று சொன்னார்கள். அப்பவும் பணம் கொடுத்துப் போடும் அளவுக்கோ, அப்படிப் போட்டு வீட்டில் பெட்டியில் அடுக்கி வைக்கும் அளவுக்கோ வசதியில்லை என்பதைச் சொல்லி, இது ஆத்ம திருப்திக்காக எழுதுவது, இது ஒரு தொழிலாய் மாற்றிக் கொள்ளும் அளவுக்கு வாய்ப்போ, வசதியோ இல்லை என்று சொல்லிவிட்டேன்.
எதிர்பாராத வாய்ப்பாய் நண்பர்கள் மூலம் சகோதரர் 'கலக்கல் ட்ரீம்ஸ்' தசரதன் கிடைத்தார். பற்றெனப் பற்றிக் கொள் என்பதாய் எதிர்சேவையில் ஆரம்பித்த உறவு இதோ திருவிழாவில் இன்னும் இறுக்கமாகியிருக்கிறது. 2020 - எதிர்சேவை (சிறுகதை தொகுப்பு), 2021 - வேரும் விழுதுகளும் (நாவல்), 2022 - திருவிழா (நாவல்) என எங்கள் பயணம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது, இன்னும் தொடரும்.
திருவிழா -
இரண்டு திருவிழாக்கள், குடும்பப் பகை, காதல், கோவில்கள் பற்றிய செய்திகள், புத்தகங்கள் பற்றிய விபரங்கள் என விரிவாகப் பேசியிருக்கும் நாவல். பக்கம் அதிகமாக இருந்ததால் 'வேண்டாம் தசரதன்... சிறுகதைகள் இருக்கு... ஒரு பத்துக் கதையை புத்தகமாகப் போடுவோம்' என்று சொன்னபோது 'அண்ணே... நாவல்தான் போடுறோம்... சிறுகதை நான் அப்புறம் போடுறேன்' என்று சொல்லிவிட, பக்கத்தைக் குறைப்போமென தாய்மையைப் பேசும் ஒரு பகுதியை அப்படியே தூக்கிவிட்டு கொடுத்து 500 முதல் 550 பக்கத்துக்குள் வருமென நினைத்தேன். அதையும் விடக் கூடுதலாய்தான் வந்தது.
நான் இவ்வளவு பக்கமா என யோசித்தபோது, 'அண்ணே எத்தனை பக்கம் வந்தாலும் போடுறோம்' என்றார் தசரதன். 'இல்லை தசரதன் இத்தனை பக்கம் படிப்பாங்களா...? ஒரு இடத்தில் கொஞ்சம் சோர்வானாலும் புத்தகத்தையே தூக்கிப் போட்டுடுவாங்க... முதல்ல உங்களுக்குப் பிடிச்சிருக்கா..?' என்றேன் யோசனையாய். 'அண்ணே எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கதாலதான் எத்தனை பக்கம் வந்தாலும் போடணும்ன்னு சொல்றேன்' என்றவர், 'புத்தகம் குறித்த விளம்பரம் போடும்போது இந்தப் புத்தகம் வாங்கிப் படித்து உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் புத்தகத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அதன் விலையின் இருமடங்குக்கு கலக்கல் ட்ரீம்ஸின் புத்தகங்களை வாங்கிக் கொள்ளலாம் அப்படின்னு போடப்போறேன்' என்றார். அப்படியே விளம்பரமும் கொடுத்திருக்கிறார். என் மீதான அவரின் நம்பிக்கை எனக்கு உண்மையிலேயே வியப்பாய் இருந்தது. இப்படி ஒரு உறவு கிடைக்கும் என்று நினைக்கவில்லை, கிடைத்ததை விட்டுவிட்டு விலகவும் விருப்பமில்லை. தொடரட்டும் இப்பந்தம் இன்னும் இன்னுமாய்.
வேரும் விழுதுகளைப் போல் ஒரு குடும்பத்தின் கதைதான் என்றாலும் இதில் பிரிவும், காதலும் , திருவிழாக்களும் பேசப்படுவதால் ரொம்ப சோகமாக இருக்காது என்று என்னால் சொல்லமுடியும். அதே நேரம் சில உணர்ச்சிப்பூர்வமான இடங்களும், சில நகைச்சுவையான பேச்சுக்களும் இருக்கும். கண்ணன் - புவனாவின் காதல்தான் கதையை நகர்த்திச் செல்லும். புவனாதான் இதில் கோவில்கள் பற்றியும், புத்தகங்கள் பற்றியும் பேசுவாள். கதையின் முக்கியான கட்டம் மதுரையில் அழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்வில் நடக்கும்.
எதையும் நீக்காமல் வைத்திருந்தால் கதை எப்படி இருந்திருக்குமோ அப்படித்தான் இப்போதும் இருக்கும். இதில் வரும் காதாபாத்திரங்கள் எல்லாம் வாசிப்பவர்களைக் கண்டிப்பாக கவர்வார்கள் என்று என்னால் அடித்துச் சொல்ல முடியும். கதையும் தொய்வில்லாமல் நகரும் என்றும் என்னால் சொல்ல முடியும்.
மொத்தப் பக்கம் - 625.
விலை - 550 (10% தள்ளுபடி உண்டு)
விருப்பமிருந்தால் வாங்கி வாசித்து உங்கள் எண்ணத்தை எனக்குச் சொல்லுங்கள்.
திருவிழா மட்டுமின்றி கலக்கல் ட்ரீம்ஸின் வெளியீடுகளை வாங்க உங்களுக்கு விருப்பமிருந்தாலோ அல்லது நண்பர்கள் யாரும் வாங்க விரும்பினாலோ தசரதனைத் தொடர்பு கொள்ளலாம். நன்றி.
Dhasarathan
Kalakkal Dreams Enterprises
Cuurent . A/c no. : 156602000000979
IFSC code: IOBA0001566
Indian Overseas Bank
Porur Branch.
Gpay no. 9840967484
- 'பரிவை' சே.குமார்.
மூன்றாவது புத்தக வெளியீடு - மகிழ்ச்சி குமார். தொடரட்டும் உங்கள் சிறப்பான புத்தகங்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
பதிலளிநீக்குஅருமை... வாழ்த்துகள் குமார்...
பதிலளிநீக்குகுமார் உங்களின் மூன்றாவது புத்தக வெளியீட்டிற்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகண்ணன் புவனா...புத்தகப் புழு புவனா! அந்தக் க்தைதானா இப்போது நாவலாக? சூப்பர்..
கீதா