புதன், 15 டிசம்பர், 2021

பிக்பாஸ் : தாமரை Vs பாவனி

பிக்பாஸில் ப்ரியங்காவின் செயல்பாடுகள் குறித்து நீண்ட கட்டுரை எழுதலாம். அதுக்கு முன்னர் பாவனியைச் சுற்றும் பிரச்சினைகளைப் பற்றி இன்னும் பார்க்க வேண்டியது இருக்கிறது.

பாவனி - அபிநய் பிரச்சினை பேசப்பட்ட பிறகு, அதாவது பெண்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு, என் பெண்ணுக்கு நான் பையன் பார்க்கிறேன் என்று சொல்வதெல்லாம் இப்போது தேவையே இல்லை, அவர்களுக்கான வாழ்க்கையை அவர்களே முடிவு செய்ய வேண்டும். நீங்கள் ஏன் அவர்களின் அந்தரப்புரத்தில் எட்டிப் பார்க்கிறீர்கள் என்றெல்லாம் பேசிய கமல்தான் இந்த விவாதத்தின் இறுதியில் அபிநய்க்காகப் பரிந்து பேசி, பாவனி மீதே எல்லாத்தையும் இறக்கி வைத்தார்.


எல்லா விஷயத்திலும் மூக்கை நுழைத்து நான் சொல்வதைக் கேள் என ஆங்கில ஆசிரியராய் வலம் வரும் ப்ரியங்கா கமல் பேசும் போது எதுவுமே பேசாமல் என்னமோ ரொம்ப நல்லவராட்டம் இருந்துவிட்டு, மச்சான் அவ அப்படித்தான் என அபிநய்யை ஏற்றி விட்டுக் கொண்டுதான் இருந்தார். ரெண்டு பேரும் உக்காந்து பேசுங்க என்று கூட சொன்னார். கமல் இதை யாரும் பேச வேண்டாம் எனச் சொல்லியிருந்தார். ராஜூ மட்டும்தான் இதிலிருந்து விலகியிருந்தார் எனத் தோன்றியது. சிபி, அக்சராவெல்லாம் கூட ஒரிரு இடத்தில் பேசினார்கள். பாவனிதான் இந்த விஷயத்தைப் பேச வேண்டுமென செய்தி சேகரிப்பு போட்டியின் போது சொன்னார்... இல்லையில்லை கெஞ்சிக் கேட்டுக் கொண்டார் எனப் பிரியங்காவிடம் அக்சரா சொன்னது எவ்வளவு தூரத்துக்கு உண்மை எனத் தெரியவில்லை.

ஜெமினியின் பேரர் ரொம்பவே சோகமாகச் சுற்றி வந்தார். பாவனி பேச அழைத்துப் பேசிய போது அவர் எதையும் ஏற்கும் மனநிலையில் இல்லை, அண்ணா எனக் கூப்பிடாதே, நான் உன்னை விரும்புறேன் என அபிநய் பாவனியிடம் பேசியவை, எழுதிக் காட்டியவை எதையுமே குறும்படத்தில் காட்டவில்லை என்னும் போதும், சென்ற வாரத்தில் அபிநய் போயிருக்க வேண்டிய சூழலில் அண்ணாச்சியை அனுப்பிய போதும் பிக்பாஸ் அபிநய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதுடன் உள்ளே தங்க வைப்பதிலும் முனைப்பாய் இருப்பது தெரியும். இந்த விஷயத்தில் பாவனியே பாவம். சொல்லப்போனால் பலிகடா ஆக்கப்பட்டுள்ளார் என்றே தோன்றுகிறது.

கமல் பேசும் போது தாமரை நான் பேசுறேன்னு நின்னார், பேச வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. அப்படியே கொடுத்திருந்தால் என்ன செய்திருப்பார், பாவனி மீதே அத்தனை குற்றத்தையும் இறக்கி வைத்திருப்பார் ஏனென்றால் அவருக்குப் பாவனியைப் பிடிக்காது. அவன்தான் விரட்டி விரட்டி வர்றான்னா நீ ஏன் பேசுறே விலகிப்போ என அவர் சொன்ன அந்த வார்த்தை சரியாக இருந்தாலும் தாமரைக்கு பாவனி என்றால் பாகற்காய்தான் என்பதால் அவரிடமிருந்து அபிநய் தப்பானவர் என்ற வார்த்தை வர வாய்ப்பேயில்லை என்பது நிகழ்வுக்குப் பின் அபிநய்யைக் கட்டி அணைத்து அருகமர்த்திப் பேசியதில் தெரிந்திருக்கும்.

மனதளவில் பாதிக்கப்பட்ட பாவனிக்கு அமீரைத்தவிர வேறு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை. சென்ற வாரம் வரை தலையில் தூக்கி வைத்து ஆடிய ப்ரியங்கா கூட சற்று தள்ளியேதான் நிற்கிறார். இது பாவனிக்கும் புரிந்திருக்கிறது அதனால்தான் நேற்றைய திங்கள்கிழமை நான் கொஞ்சம் அதிகமாப் பேசிட்டேன் போல, என் மேலதான் தப்பெல்லாம்... எல்லாருடைய பார்வையும் என்னை வித்தியாசமாய் பார்க்கிறது எனப் புலம்பினார். அதுதான் உண்மை. இங்கே பெண்களுக்குச் சுதந்திரம் இருக்கு என்றாலும் பிரச்சினை என்று வரும்போது ஆண் செய்வது சரியெனத்தான் எடுத்துக் கொள்ளப்படுகிறது. அபிநய்க்கு வெளியே குடும்பம் இருக்கு என்று எல்லாரும் சொல்லும் போது கணவனை இழந்ததால் பாவனிக்கு வெளியே குடும்பம் இல்லையா..? அம்மா, அப்பா, மாமியார் இருக்காங்கதானே... அப்ப அவங்க மனசு பாதிக்காதா..? என்ன சார் நியாயம் பேசுறீங்க... பிரச்சினையின்னு வந்த பின்னால இனி நமக்குள்ள எதுவுமில்லையின்னு தூக்கிப் போட்டுட்டுப் போகாம அவள நான் இதுவரை தங்கத்தட்டில் வைத்துப் பார்த்துக்கிட்டேன், இனி நீ பாத்துக்கன்னு அமீர்க்கிட்ட சொல்ல வேண்டிய காரணம் என்ன? அமீர் வந்த பின்தான் நான் பாவனியிடம் இருந்து ஒதுங்கினேன் என்று சொல்லும் அபிநய் தப்பானவர் இல்லையா..? இரண்டு பேரும் செய்தது தவறென யாருமே பேசாதது ஏன்...?

இந்த தாமரை - பிக்பாஸ் வருமுன்னே எனக்குப் பிடித்த நாடக நடிகை - எனக்கு எதுவும் தெரியாது, பசியின்னு யாராச்சும் இருந்தா என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியாதுன்னு பெருசாப் பேசுவார். எல்லாருக்கும் பாயாசம் எடுத்துக் கொடுக்கும் போது பாவனிக்கு மட்டும் கொடுக்கவில்லை, கொடுத்திருந்தால் குடிக்க மாட்டார் என்பது தாமரையின் வாதம், - அப்படி எப்போதோ நடந்துச்சாம் -  என்றாலும் பாவனி கண்டிப்பாக குடித்திருப்பார் என்பதுதான் உண்மை. தாமரை செய்தது மிகப்பெரிய தவறு, அதை உணராமல் நான் செய்தது சரியே என வாதிப்பதுதான் கடுப்பைக் கொடுக்கிறது. இதை யார் எடுத்துச் சொன்னாலும் அவர்கள் தப்பானவர்கள். சட்டியில இருக்கு எடுத்துக்க வேண்டியதுதானே என்ற அவரின் வாதப்படி பார்த்தால் அதை எல்லாரிடமும் சொல்லியிருக்கலாமே... மற்றவர்களு ஏன் எடுத்துக் கொடுக்கணும். எனக்கு அவ பாயசம் கொடுக்கலை அதனால அவ சமைத்ததை சாப்பிடமாட்டேன் என பாவனி சொன்னது சரியே, அதையே இங்க பாருங்க அவ என் சாப்பாட்டை சாப்பிடலை, இதுக்குத்தான் அவளுக்கு நான் கொடுக்கலை என மொட்டத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சிப் போட்டார் தாமரை. இங்கே சிபியும் வருணும் அவருக்கு ஜால்ரா போடுவதுதான் ஏன்னு தெரியலை. ராஜூ, சஞ்சீவைப் போல இவர்கள் ஏன் அது தவறெனச் சுட்டிக்காட்டவில்லை.

கமல் வரும் போது இந்த சாப்பாட்டுப் பிரச்சினை பேசப்பட்டால், பேசப்பட்டால் என்ன பேசுவார், கமலுக்கு தான் ஒரு பேசு பொருளாக ஆக வேண்டும் என்பதில் தாமரைக்கு எப்போதும் விருப்பம் அதிகம். அதற்காகவே சில சண்டைகளைப் போடுவார். தாமரை, அன்னபூரணி நீங்க இப்படிப் பண்ணலாமா என்று கமல் கேட்டதும் சாரிங்க சார், எனக்குப் புரியலிங்க சார், இனி அப்படிச் செய்ய மாட்டேன் சார் என ஒரு கும்பிடு போடுவதை நாம் கண்டிப்பாக இந்த வாரம் பார்ப்போம். நான் நல்லவள் என்று சொல்லும் தாமரை, தற்போதைய நிலையில் பாவனிக்கு ஆதரவாகப் பேசி, இந்தா சாப்பிடு எனக் கொடுத்திருந்தார் என்றால் இன்னும் முன்னேறிப் போவார். சாப்பாட்டு விசயத்தில் தாமரை தலை சாய்ந்துவிட்டது எனத்தான் சொல்ல வேண்டும்.

ப்ரியங்கா தன்னிடம் அடித்துப் பேசி சண்டை போட்டுவிட்டு கொடுக்கும் ஒற்றை முத்தத்தில் மயங்கிக் கிடக்கும் தாமரை, எப்போதோ செய்த பாவனியின் செயலை மட்டும் பாயாசம் வரை கொண்டு வருதல் என்பது மோசமான செயல். ஊற்றிக் கொடுத்து அவர் குடிக்கவில்லை என்றால் உனக்குத்தான் நல்ல பேர் வருமே ஒழிய கெட்ட பெயர் அல்ல என சஞ்சீவ் சொன்னதைக் கூட தாமரை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் செய்வதே சரி எனச் சொல்லி அதைப் பிடித்துக் கொண்டு நிற்பது தாமரைக்குப் புதிதில்லை என்றாலும் சாப்பாட்டு விஷயத்தில் அவர் இப்படிச் செய்வார் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள்.

போட்டிகளில் எல்லாம் விட்டுக் கொடுக்கும் ராஜு இனி அப்படிச் செய்யாமல் இருந்தல் நலம், இவனுககிட்ட கத்த முடியாது என ஆரம்பத்திலேயே வெளியாவதெல்லாம் வேலைக்கு ஆகாது. அடித்து ஆட வேண்டும், செய்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த வாரம் எல்லாரும் நாமினேசனில் என்றாலும் தினம் ஒரு போட்டி நடத்தப்பட்டு அதன் வெற்றியாளர் நாமினேசனில் இருந்து காப்பாற்றப்படுவார் என பிக்கி சொல்லிவிட்டு கடந்த இரண்டு நாட்களில் சிபி மற்றும் நிரூப்பைக் காப்பாற்றியிருக்கிறார்.

அபிநய் இப்போது அக்சராவை இறுக்கிப் பிடித்திருக்கிறார். இது நட்பு அடிப்படையிலானதா இல்லை அங்கும் பிரச்சினை வருமா என்பது வரும் வாரங்களில் வருண் மூலம் தெரியவரும் என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து பேசுவோம்.

-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி