மலையாளத் திரையோரம்...
ஆசிப் மீரான் அண்ணன் எழுதியிருக்கும் மலையாளத் திரைப்பட விமர்சனக் கட்டுரைகள் அடங்கிய நூல். இதில் மொத்தம் 19 படங்கள் குறித்தான விமர்சனப் பார்வை இடம் பெற்றிருக்கிறது.
இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ஒரு திரைப்படம் மீதான பார்வை என்றில்லாமல் அதற்கு வெளியே அந்தப் படத்தின் கதையோடு ஒத்த நிகழ்வுகள், அரசியல், தமிழ் மலையாளப் பட - நடிகர்கள் குறித்தான பார்வைகள், இயக்குநரின் முந்தைய படம் பற்றியெல்லாம் விரிவான அலசலாக இருப்பதே இத் தொகுப்பின் சிறப்பு எனலாம்.
இங்கே அவர் சொல்லியிருக்கும் படங்களில் பழைய படங்கள் தவிர்த்து பெரும்பாலான படங்களை நான் பார்த்திருக்கிறேன் என்பதாலும் அது குறித்து நானும் ஏதோ எழுதியிருக்கிறேன் என்பதாலும் நம் பார்வையில் இருந்து அண்ணனின் பார்வை எப்படி வேறுபடுகிறது என்பதை உணர முடிந்தது. அவரின் படம் தாண்டிய கழுகுப் பார்வை - குறிப்பாக அரசியலும் தமிழ் சினிமாவும் - என்னிடம் இல்லை என்றுதான் தோன்றியது.
இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியிருப்பது எழுத்தாளர் ஆபிதீன் அண்ணன் அவர்கள். அவர்களின் பேச்சு, எழுத்து எல்லாமே நகைச்சுவையைக் கலந்து, இங்கே கலந்து என்பதைவிட நகைச்சுவையால் மொத்தமாகக் கட்டப்பட்டு, வாசிப்போரை ரசித்துச் சிரிக்க வைப்பதாய் இருக்கும்.
'ஆசிப்பின் தேர்ந்த ரசனையும் கூரிய பார்வையும் எனக்கு மிகவும் பிடிக்கும்' என்று ஆரம்பித்துத் தன் நகைச்சுவைக்குள் நகர்ந்து, அதன் பின் அதிலிருந்து சற்றே விலகி, 'கட்டுரைகளின் ஊடே கரன் தாப்பர் - அருந்ததி நேர்முகத்தை அவர் சேர்க்கும் விதம், மம்மூக்கா வாங்கிய விருதை முன்வைத்து - ஆட்சியாளர்களைச் சொறியும் நம்மவர்களுக்கு மட்டும் விருதென்ற வழக்கம் கேரளாவில் இல்லை - அடித்துத் துவைப்பது, மூசா நபி காலத்துக் குறியீடுகளை இன்னும் முன்னிறுத்தும் அடூர் கோபாலகிருஷ்ணன், நாலு பெண்கள் படத்தில் 'படுத்திருந்தார்' என்று எழுதும் குசும்பு, அன்வர் ரஷீதின் அற்புதமான குறும்படமான ப்ரிட்ஜ் கதையில் அவர் நெகிழ்ந்தது என்று நிறைய விசயங்களைத் தனது அணிந்துரையில் ஆபிதீன் அண்ணன் எழுதியிருக்கிறார்.
தனது முன்னுரையில் தான் மலையாளப் படங்களைப் பார்க்க ஆரம்பித்த கதையைச் சொல்லி, ஆரம்ப காலத்தில அவர் எழுதிய கட்டுரைகளை விட பின்னாட்களில் எழுதியவை நீளம் அதிகமிருந்தாலும் அதையும் வாசிக்கச் சிலர் இருந்தது மகிழ்ச்சி என்று சொன்னதுடன் இந்நூல் வெளிவர முக்கியக் காரணமாக இருந்தது ஜெஸிலாவும் மதுமிதாவும்தான் எனத் தன் நன்றியத் தெரிவித்திருக்கும் அண்ணன் ஆசிப் மீரான், 'இதில் நான் தேர்ந்தெடுத்திருக்கும் படங்கள் எல்லாமே மலையாளத் திரை உலகின் மிக முக்கியமான படங்களென்று சொல்ல முடியாது. என்னுடைய தேர்வில், என்னுடைய பார்வையில், எனக்குத் தோன்றியதைச் சொல்லும் எனது திரைப்பார்வை இது' என்று சொல்லியிருக்கிறார்.
இதில் 'ஷிக்கார்', 'பலேரி மாணிக்கம்', 'கேரளா கஃபே', 'ப்ரம்மரம்', 'கல்கத்தா நியூஸ்', 'ஆலிஃப்', 'எந்நு நின்டெ மொய்தீன்', 'நீராளி', 'கம்மட்டிப்பாடம்', 'சுடானி ஃப்ரம் நைஜீரியா', 'கையொப்பு', 'தொண்டி முதலும் த்ருக்சாட்சியமும்', 'டேக் ஆஃப்', 'கதாவசேஷன்', 'பஞ்சவடிப்பாலம்', 'நாலு பெண்ணுங்கள்', 'ஈடா', 'கும்பளங்கி நைட்ஸ்', பிராஞ்சியேட்டன் த செயிண்ட்' போன்ற படங்கள் குறித்தான விரிவான பார்வை இருக்கிறது. இவற்றை வாசித்தால் கண்டிப்பாக இந்தப் படங்களிள் சிலவற்றையாவது தேடிப் பார்க்கச் சொல்லும். அதுவே இத் தொகுப்பின் வெற்றி எனலாம்.
ஷிக்கார் - மனமாடும் வேட்டை - குறித்தான கட்டுரையை வாசித்தபின் அந்தப் படத்தைப் பார்த்தே ஆக வேண்டும் எனத் தோன்றியதால் யூடிப்பில் தேடிப் பிடித்து பார்த்தேன். கட்டுரையில் சொல்லியிருந்தது போல் படம் சிறப்பாக இருந்தது. இதில் சுராஜ் வெஞ்ஞாரம்மூடு என்ற பெயரை என்ன எழவு பேருடா இது என்று சொல்லியிருப்பவர்தான் தொண்டிமுதலும் த்ருக்சாட்சியமும் படத்தின் விமர்சனப் பார்வையில் நல்ல கதாபாத்திரங்களை அநாயாசமாகச் செய்யும் ஆற்றல் தனக்கு உண்டு என்பதை நிருபித்திருக்கிறார் என்று சொல்கிறார். ஷிக்கார் படத்தில் சுராஜின் கதாபாத்திரம் நமக்கு கடுப்பைத்தான் தருகிறது.
ஒவ்வொரு படத்தின் விரிவான பார்வைக்குப் பின் இறுதி வரியாக பார்க்கலாமா வேண்டாமா என்பதை அவர் சொல்லியிருப்பதை வைத்தே படத்தைப் பார்க்கும் முடிவை நான் எடுக்கலாம்.
நம்மைப் பொறுத்தவரை சினிமாதான் வாழ்க்கை, நடிகனே தெய்வம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம், மலையாளிகளைப் பொறுத்தவரை அது ஒரு தொழில், அதில் சிலர் நடிக்கிறார்கள், அவர்களும் மனிதர்களே அவ்வளவுதான். படத்தில் வரும் வசனங்கள், சாதிய, மதக் குறியீடுகளைத் தூக்கிக் கொண்டு வீதிக்கு வருவதில்லை என்பதைப் பல இடங்களில் சொல்லியிருக்கிறார். அதுதான் உண்மையும் கூட. இதில் வேடிக்கை என்னவென்றால் மலையாளப் படங்களை வைத்து சாதி, மத அரசியல் பேசுபவர்கள் நாம்தான், அதுவும் சமீபத்தில் மலையாளத்தில் வந்த - (எ.கா) த இண்டியன் கிச்சன், பிரியாணி - படங்களை வைத்து நாம் ஆடிய ஆட்டங்கள் எல்லாரும் அறிந்ததே.
அண்ணனின் தமிழ் சினிமாவோடான ஓப்பீடுகள் மீது ஏற்பில்லை என்றாலும், பழைய தமிழ்ச் சினிமா நல்லாத்தான் இருந்தது என்பதையும் சமீபத்தில்தான் சாதி, மதங்களைத் தூக்கிக் கொண்டு அடித்து, தமிழ் சினிமாவை தரம் தாழ்த்திக் கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் மனதில் நிறுத்திப் பார்க்கும் போது இன்றைய நிலையில் அண்ணனின் ஒப்பீடு மிகச் சரியானதே எனலாம். மற்றபடி பழைய படங்களோடு மலையாளத்தின் பெரும்பாலான பழைய படங்களை ஓப்பீடு செய்ய முடியாது என்பதே என் எண்ணம்.
புதிய இயக்குநர்கள் சின்னதாய் ஒரு கதையுடன் வந்து ஜெயிக்கிறார்கள் என்பதை அண்ணன் சொல்லியிருக்கிறார். அது உண்மையே, மலையாளப் படங்கள் மீதான ஈர்ப்பு எனக்கு ஏற்படக் காரணமே சிறியதொரு கதையை மிகச் சிறப்பாக எடுக்கும் விதம்தான். நாம் இன்னும் நாயகனுக்குப் போற்றி பாடிக் கொண்டு, அரிவாளைத் தூக்கி மதுரையின்னாலே ரவுடிதான்னு கட்டுக்கதைகளை அவிழ்த்து விட்டுக்கிட்டுத் திரியும் போது அவர்களுக்கு மட்டும் எப்படி இப்படியான கதைக்களங்கள் அமைகிறது என்ற ஆச்சர்யம் எனக்கு எப்போதும் உண்டு.
புதிய இயக்குநர்கள் அங்கே கதையுடன் வந்து தங்கள் திரைத்துறையை மேல் நோக்கிக் கொண்டு செல்லும் போது நம் பக்கமோ புதியவர்கள் சாதியோடு அல்லவா வருகிறார்கள். அப்புறம் எப்படி நல்ல படங்கள் நமக்குக் கிடைக்கும். சமீபத்திய படங்களைப் பார்ப்பதைவிட பார்க்காமலே இருப்பது மேல் எனத் தோன்ற வைத்துவிட்டார்கள் பு(சா)திய இயக்குநர்கள்.
அந்த வகையில் பார்த்தால் அவரின் ஒப்பீடு தேவையான ஒன்றுதான். எல்லாப் படங்களையும் இந்த வட்டத்துக்குள் வைக்காமல் சுறா, ஆஞ்சநேயா, அஞ்சான் போன்ற கலைப் படைப்புகளை மட்டும் இந்த வட்டத்துக்குள் கொண்டு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம். இது என் எண்ணம் மட்டுமே, தமிம் படமென்றால் அடிப்பேன்டா என்பதுதான் எங்கள் அண்ணனின் எண்ணம் என்பதால் தொடர்ந்து படையல் போட்டுக் கொண்டே இருங்கள் அண்ணா.
எங்கள் குழும விழாக்களில் அண்ணனின் பேச்சு எல்லாரையும் ஈர்க்கும் ஒன்றாக இருக்கும், சாத்தை மாநகரின் நக்கல் நையாண்டி யார் மனசையும் நோகடிக்காத வண்ணம் அவரின் பேச்சில் எப்போதும் இழையோடும். அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று கேட்பவருக்கு எண்ண வைக்கும். அப்படித்தான் இந்தப் புத்தகத்தில் இருக்கும் சினிமா விமர்சனக் கட்டுரைகள் இருக்கின்றன. ஆலிஃப் பற்றிய விமர்சனப் பார்வையில் முஸ்லீம்கள் குறித்தான பார்வையில் மலையாள சினிமா என்பதாய் எழுதியிருப்பது சிறப்பு. இந்தத் தொகுப்பில் சிறந்த விமர்சனக் கட்டுரை என்று அதைச் சொல்லலாம்.
அதேபோல் நீராளியை வைத்துச் செய்திருக்கிறார். அய்யய்யோ காப்பாத்துங்க என்ற வசனம் திரையில் வரும்போது 'கொய்யால அது படம் பாக்குறவங்களோட வசனம்டா' என்று அலறத் தோன்றியது என்று சொல்லிய வரிகளை வாசித்தபோது சிரிக்காமல் கடக்க முடியவில்லை. ஈடா படத்தின் விமர்சனத்தில் மலையாளிகளின் தேசிய பொழுது போக்கான ஹர்த்தால் (பந்த்) தினத்தில் படம் ஆரம்பிக்கிறது என்று எழுதியிருப்பதைப் போன்ற சொல்லாடல்கள் புத்தகம் முழுவதும் நிரம்பிக் கிடக்கின்றன. ஒரு படத்தின் விமர்சனத்தில் இசங்கள் பற்றிச் சொல்லி வரும் போது 'மயிரு இசம்' என்று கடுப்போடு எழுதியிருக்கிறார்.
ஒவ்வொரு படத்தின் விமர்சனக் கட்டுரைகளிலும் படம் தவிர்த்து பலவிதமான பார்வைகள் இருக்கின்றன. அந்தப் பார்வையின் ஊடே நமக்குப் பல செய்திகளைத் தந்து விடுகிறார்.
ஒவ்வொரு படத்தையும் விரிவாக அலசியிருப்பது சிறப்பு, மிகச் சிறப்பான புத்தகம் இது. சில படங்கள் பற்றி எழுதியிருக்கலாம் எனத் தோன்றியது, அவையெல்லாம் அடுத்த புத்தகமாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மேலும் மலையாளத் திரையோரம் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட இருக்கிறது என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி.
விமர்சன விரும்பிகள், குறிப்பாக மலையாளப் படங்களைத் தேடிப் பார்ப்போர் வாசிக்க வேண்டிய புத்தகம் 'மலையாளத் திரையோரம்'.
தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா.
-----------------------------------------
மலையாளத் திரையோரம்
ஆசிப் மீரான்
தமிழ் அலை வெளியீடு
112 பக்கம், 100 ரூபாய்
-----------------------------------------
-'பரிவை' சே.குமார்.
அருமையான விமர்சனம் குமார்...
பதிலளிநீக்குவிமர்சன நூலுக்கே விமர்சனம். அருமை
பதிலளிநீக்குநூலை வாசிக்கும் ஆவலைத் தூண்டும் மதிப்புரை. சிறப்பு
பதிலளிநீக்குநல்ல விமர்சனம். ஆமாம் சமீபத்திய தமிழ்ப்படங்கள் கவரவில்லை. அதே சமயம் மலையாளப் படங்கள் அருமையா எடுக்கறாங்க. ஆனால் நீங்க சொல்லியிருக்காப்ல பழைய தமிழ்ப் படங்களோடு மலயாளப் படங்களை ஒப்பிட முடியாது தமிழ்ப் படங்கள் அத்தனை நன்றாக இருந்தன. 90 களில் இருந்து நல்ல படங்கள் மலையாளப் படங்கள் வரத்தொடங்கின அதுவும் சமீப வருடங்களில் நிறையவே. வெஞ்சாரமூடு என்பது ஊரின் பெயர். உங்களுக்குத் தெரியுமே கேரளத்தவர்கள் ஊரின் பெயரோடு அல்லது குடும்பப் பெயரோடு/சர் நேம் வைப்பது வழக்கம் என்று. அவர் மிகவும் நன்றாக நடிக்கிறார். கலாபவன் பயிற்சி என்று நினைக்கிறேன் சரியாகத்தெரியவில்லை. குமார் உங்கள் விமர்சனம் நல்லாருக்கு
பதிலளிநீக்குகீதா