ஆணும் பெண்ணும்...
மலையாளத்தில் சமீபத்தில் சின்னச்சின்னக் கதைகளின் தொகுப்பாய்... ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லை என்றாலும் கதைகள் சொல்லும் விஷயம் ஒரே மாதிரியானதாய் இருக்கும் படங்கள் நிறைய வருகின்றன. அப்படித்தான் சில நாட்களுக்கு முன்னர் விசுத ராத்திரிகள் என்றொரு படம் பார்த்தேன். அதில் பேசப்பட்ட கதைகள் எல்லாமே ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களைப் பற்றியது. அதே போல் சமீபத்தில் பார்த்த படம் ஆணும் பெண்ணும்.
சாவித்திரியின் கதை சுதந்திரப் போராட்டக் காலத்துக் கதை... உண்மைக் கதை என்பதாய் சொல்லப்படுகிறது. கம்யூனிசம் பேசுகிறது. கம்யூனிசத்தைச் சேர்ந்த பெண் தப்பியோடி ஒரு தம்புரான் வீட்டில் வேலைக்காரியாகும் போது அங்கு இருக்கும் ஆண்களின் காமப் பார்வையில் இருந்து எப்படித் தப்பிக்கிறாள்... தன்னைக் காத்துக் கொள்ள அவள் என்ன காரியம் செய்கிறாள் என்பதைக் காட்டும் படம்... இதில் கைகால் விலங்காத மனிதன் கூட அவளைக் காமப்பார்வை பார்ப்பதாய் காட்டுவது எதற்காக...? அந்தாளுக்கு சாப்பாடு கூட ஊட்டி விடத்தான் வேண்டும்... பின் ஏன்..? ஆண்கள் எல்லாம் தப்பானவர்கள் என்று காட்டவா... இதில் சம்யுக்தா வர்மா சாவித்திரியாய்...
அடுத்த கதை சுதந்திரத்துக்குப் பின்னானது என்று கொள்ளலாம்... வேலைக்காக வந்த இடத்தில் பால்காரியுடனான சிநேகம்... அம்மை போட்டிருக்கும் போது பால்காரியின் தாய்மையான பார்வை என ஒரு அழகான கதை நகர்த்தல். அவனின் விருப்பத்தைச் சொல்லும் போது அவள் மறுக்க, அதன்பின்னான வாழ்க்கை நகர்த்தல்களும் இறுதியில் இருவரின் சந்திப்பும் எனக் கதை தேயிலைத் தோட்டத்துப் பசுமைக்குள் அழகாய் நகர்கிறது. ரசியம்மாவாய் பார்வதி....
மூன்றாவது கதை தற்காலத்தில் நிகழ்வது... காதலிக்கும் போதே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை எழுவதும், அதற்காக ஆளரவம் அற்ற வனப்பகுதிக்கு போக முடிவு செய்து அவளிடம் கெஞ்சிக் கூத்தாடி, அழுது காரியம் சாதிக்கக் துடிப்பதும், அதை அவள் தன் போக்கில் சீண்டி விட்டு ரசிப்பதும், அவனின் பதட்டமும் பயமும் அவர்களின் கூடலுக்குப் பின் எதில் கொண்டு போய் முடிக்கிறது என்பதைச் சொல்கிறது. அவர்களின் உடைகளை எடுத்துக் கொண்டு போகும் நெடிமுடி வேணு, மனைவியிடம் சொல்லும் போது அந்த வனப்பகுதியில் அவர்களின் நிலை... இதில் ராணியாக தர்ஷனா ராஜேந்தர்.
பார்வதி பால்காரியாய் எங்கப்பா கேரளம், அம்மா கன்னடம் நான் பொறந்தது தமிழ்நாடு எனச் சொல்லிக் கொண்டு மலையாளத்தை வித்தியாசமாகப் பேசியபடி, வெடிச்சிரிப்புடன் நகர்வது அழகு. பார்வதிக்காக எழுதிய கதை என்றே தோன்றுகிறது. நடிப்பு ராட்சஸிக்கு இதுவும் கலக்கலான படமே. மூவரில் முதலிடம் இவருக்கே.
சம்யுக்தா அழகாய் வருகிறார் அவ்வளவே... ஜோஜூ சார்ஜிடம் மாட்டிக் கொண்டு முழிக்குமிடத்தில் நல்லாவே செய்திருக்கிறார் என்றாலும் சாவித்திரியா..? ரசியம்மாவா..? ராணியா..? என்ற போட்டியில் சாவித்திரி மூன்றாவது இடத்தில்தான் நிற்கிறார்.
வித்தியாசமான படம்... பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.
நல்ல விமர்சனம்...
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம்
பதிலளிநீக்குkappela movie விமர்சனம் pls...
பதிலளிநீக்கு