வெள்ளி, 25 ஜூன், 2021

மனசு பேசுகிறது பாரத் முதல் பலகை வரை

bharatwriters.com தளத்தில் இந்த வாரத்தில் எனது சிறுகதையான 'கமலம்' வெளியாகியிருக்கிறது. இன்றும் நாளையும் தளத்தில் இருக்கும். ஞாயிறன்று அடுத்த இதழ் மாற்றி விடுவார்கள். முடிந்தவர்கள் இன்று அல்லது நாளை வாசித்து உங்களோட 'LIKE'-யைத் தட்டி விட்டீங்கன்னா, ஏதோ கொடுக்கிற காசுல முன்னப் பின்ன வரும்ன்னு சொல்றாங்க... செய்வீர்களா..?



கமலம்

சிறுகதைகள் பிரிவில் இரண்டாவது கதையாக 'கமலம்' இருக்கிறது. வாசித்து உங்கள் கருத்தையும் இங்கு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும். கதைக்கு தலைப்பாய் கமலத்தின் விடுமுறை நாள் என்றுதான் வைத்திருந்தேன். அனுப்பும் போது கமலம் என்று அனுப்ப, அதையே தலைப்பாக ஆக்கிவிட்டார்கள். கமலத்தின் விடுமுறைநாள், அதாவது பிள்ளைகள் பள்ளி செல்லாத ஒருநாள் அவளுக்கு எப்பவும் போல் வேலைகளுடன்தான் விடியும் என்பதைச் சொல்லும் கதை. முழுக்க முழுக்க வட்டாரப் பேச்சு வழக்கில் எழுதிப் பார்த்த மற்றொரு கதை இது. வாசித்துச் சொல்லுங்க.


மீபத்தில் பார்த்த 'ஷேர்ணி' - ஷேர்ணி  என்றால் இந்தியில் சிங்கம் என்பதாகவும் பெண் சிங்கம் என்பதாகவும் சொன்னார்கள். வித்யாபாலன் நடிப்பில் வந்திருக்கும் படம். மனிதர்களைக் கொல்லும் சிங்கத்தை வேட்டை ஆட வேண்டும் அவ்வளவே. இந்த ஆட்டத்துக்கு இடையே நடக்கும் அரசியல், அரசாங்க அதிகாரிகள் பார்க்கும் வேலைகள், இவர்களுக்கு இடையே ஒரு பெண் சிங்கமாய் வித்யாபாலன் காட்டுக்குள் அலைந்து திரிவது, கிராமத்து மக்களின் எதார்த்த நடிப்பு எனப் படம் பார்க்கும் நம்மை ஈர்த்துக் கொள்கிறது. இது குறித்து விரிவாக எழுதலாம் என்ற எண்ணம் இருக்கிறது. பார்க்கலாம்.

சைலன்ஸ் - இதுவும் இந்திப் படம்தான் (படம் நல்லாயிருக்கு என்றதால் பார்த்ததுதான்... எனக்கு இந்தியெல்லாம் அவ்வளவாய் தெரியாது. கலைஞர் இந்தி படிக்கக்கூடாதுன்னு சொன்னதால படிக்கலை - ஷெர்னியில் ஆங்கிலத்தில் வசனங்களைப் போட்டதால் புரியாதவையைப் புரிந்து கொள்ள முடிந்தது. இதில் கதை புரிந்ததால் பார்க்க முடிந்தது) ஒரு கொலை - அதன் பின்னான துப்புப் துலக்கலில் தோழியின் கணவனா, அப்பாவின் நண்பனின் மகனாய். தோழனாய் இருப்பவனா, வேறு யார் என்பதை இறுதிவரை சஸ்பென்ஸாக கொண்டு செல்லும் படம்.



கொலையைப் பற்றி விசாரிக்கும் தனிக்குழுவில் இருக்கும் ஏசிபி மனோஜ் பாஜ்பாயி... என்ன மனுசன்யா... செம கலக்கல் நடிப்பு... படத்தைப் பார்க்க ஆரம்பித்தால் இடையில் நிறுத்த மனசே வராது. அவருடன் இருக்கும் இன்ஸ்பெக்டர்களான பிராச்சி தேஜாய், சாஹில், வாக்கர் என எல்லாருமே தங்கள் நடிப்பில் கலக்கியிருப்பார்கள்.  படத்தில் விசாரணை ஆரம்பித்த போது நான் மூன்று பேர்தான் கொலை பண்ணியிருக்க வேண்டும் என நினைத்தேன். அதன் பிறகு இவர்தானென ஒருவரை நிறுத்திப் பயணிக்க, ஓரிடத்தில் இவராய்த்தான் இருக்க வேண்டுமென  ஒருவரை மனதில் இருத்திப் பயணிக்க முடிவில் அவரேதான் என்றாலும் படம் செம விறுவிறுப்பு. முடிந்தால் பாருங்கள்.

ங்கப்பலகை முகநூல் குழுமத்தில் நிறையப் பிரபல எழுத்தாளர்களுக்கு மத்தியில் நாமும் அவ்வப்போது ஏதாவது எழுதுவதுண்டு. அங்கு சில வாரங்களாக மன்றில் என்னும் அமைப்பு சிறுகதைப் போட்டி நடத்தி வருகிறது. வாரம் ஒரு தலைப்பு கொடுப்பார்கள். அதற்குப் புதன்கிழமைக்குள் சிறுகதை எழுத வேண்டும். அவர்கள் தொகுக்க இருக்கும் சிறுகதைப் புத்தகத்தில் இடம்பெறவென ஒரு கதையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள். நான் இதுவரை எழுதவில்லை. இந்த வாரம்தான் எழுதிப் பார்த்தேன். சின்ன விதி மீறல் பண்ணியிருந்தேன் அதனால் என் கதைக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

நேற்று அந்த அமைப்பில் இருந்து ஒருவர் உங்களுடன் பேச வேண்டும் என்றார். கூப்பிட்ட போது உங்க கதை செமையா இருந்தது. அருமையான நடை... எல்லாரும் எடுத்திருந்த கருதான் என்றாலும் நீங்க சொன்னவிதம், முடிவு என எல்லாமே கலக்கல். அந்த வரிகள் உள்ளே வரக்கூடாது என்று சொல்லியிருந்தோம். நீங்க அந்தப் பாடல்களைப் பயன்படுத்திட்டீங்க என்றவர் கொஞ்ச நேரம் பேசியதில் அதெப்படி கணிப்பொறியும் இலக்கியமும் உங்களுக்குச் செட் ஆயிருக்கு என்றார் ஆச்சர்யமாம்... எல்லாம் கல்லூரியில் படித்த மூன்றாண்டுகள் நான் பெரும்பாலும் கழித்த எங்க தமிழய்யா விட்டில் விழுந்த விதைதான் என்றேன். சிரித்தார்... அருமையா எழுதுறீங்க... புத்தகம் கூட போட்டிருக்கீங்க போல... தொடர்ந்து எழுதுங்க என்றார்.

-'பரிவை' சே.குமார்.

5 கருத்துகள்:

  1. படங்கள் + எழுத்து - நேர திட்டமிடல் அருமை...

    பதிலளிநீக்கு
  2. கமலத்தின் ஒருநாள் ஆரம்பம் வெகு இயல்பு.  உங்க எழுத்துக்கு கேட்கணுமா?

    சைலன்ஸ பார்க்க ஆசை.  பேமிலி மென் ஹீரோ நடிச்சிருக்காருங்கறீங்க...   பார்த்துடுவோம்.

    பதிலளிநீக்கு
  3. கமலம் சுட்டிக்குச் சென்றதும் முதலில் ஆப்பிரிக்கா என்று ஒரு கதை இதுவா என்று வாசித்து வரும் போதே தெரிந்தது இது குமாரின் எழுத்து இல்லையே என்று...2 வதிற்குச் சென்றதும் உங்கள் கதை...இயல்பான நடையில் உங்கள் ஊர் பேச்சில் கமலத்தின் ஒரு நாள் கடக்கிறது. யதார்த்தம். உங்கள் எழுத்தைப் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை! அருமை குமார். வாழ்த்துகள்.

    சைலன்ஸ் மலையாளம் படம் பார்த்தேன் அதே பட்ம் தானா ஹிந்தியில்? நன்றாக இருந்தது. நல்ல சஸ்பென்ஸ் என்றாலும் யாராக இருக்கும் என்று யூகிக்க முடிந்தது போகப் போக.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துகள் குமார்.

    ஷெர்ணி அல்ல, ஷேர்ணி.... ஷேர் - ஷேர்ணி! ஆண் சிங்கம் - பெண் சிங்கம்.

    பதிலளிநீக்கு

  5. நன்றி தனபாலன் அண்ணா...

    நன்றி ஸ்ரீராம் அண்ணா...

    நன்றி துளசி அண்ணா... / கீதா அக்கா, தமிழ் மலையாளத்தில் வந்ததா தெரியலை. இது நல்ல விறுவிறுப்பான படம்.

    நன்றி வெங்கட் அண்ணா...
    எல்லாரும் ஷெர்னி என்றுதான் போட்டிருந்தாங்க... நமக்கு ஹிந்தி அவ்வளவாக தெரியாது. நீங்க சொன்னதும் நிறுத்திட்டேன். நன்றி அண்ணா.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி