ஞாயிறு, 7 மார்ச், 2021

மனசு பேசுகிறது : பிறந்தநாளும் விழுதுகளும்

 மார்ச் - 7.

பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது எனக்கு எப்போதுமே விருப்பமில்லாத ஒன்று. அதைப் பற்றி யோசிக்காமல் அந்த நாளைக் கடந்து செல்வேன். கல்லூரியில் படிக்கும் போது நண்பர்கள் விடாப்பிடியாகக் கொண்டாடுவார்கள். பெரும்பாலும் ஐயா வீட்டில் கூடும் என் நட்புகளின் விருப்பத்தின் பேரில் அங்கு கொண்டாடுவோம். திருமணத்திற்குப் பின் மனைவி, பிள்ளைகள் என அதைத் தூக்கிப் பிடித்து இழுத்துச் செல்கிறார்கள்.

நாலைந்து நாட்களுக்கு முன்னரே பிறந்தநாளுக்குத் தெறிக்க விடுறோம் என்றான் விஷால். என்னடா பண்ணப் போறே கேக் வெட்டிக் கொண்டாடப் போறியான்னு கேட்டதுக்கு 'ம்க்கும்... நீங்க அங்க இருக்கீங்க... பாப்பா ஹாஸ்டல்ல இருக்கு... அம்மா சாப்பிட மாட்டாங்க... அம்புட்டுக் கேக்கையும் நான் எப்படிச் சாப்பிடுவேன்... அதெல்லாம் வேண்டாம்... கோவில் போறோம் உங்க பேர்ல அர்ச்சனை பண்றோம்... ஆனாலும் தெறிக்க விடுறோம் என்றான். உண்மைதான் இங்கு வந்த பின் எல்லாமே இழப்புதான்... குடும்பத்தைப் பிரிந்த வாழ்க்கையில் வருடங்களும் வயதுமே ஏறிக் கொண்டிருக்கிறது அவ்வளவே. வலிகள் நிறைந்த வாழ்க்கை.

விஷால் சொன்னது போல் நேற்றிரவு அவங்க அம்மாவின் செல்போனில் வாட்ஸப் ஸ்டேட்டஸில் அழகான பாடல்களுடன் படங்களைத் தொகுத்து தெறிக்கத்தான் விட்டிருந்தான். அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி... அழகாகத் தொகுத்திருக்கிறான். பிள்ளைகள் வளர்கிறார்கள்.

சென்ற வாரம் பேசும் போது நான்தான் அடுத்த சனிக்கிழமையே முதல்ல வாழ்த்தைச் சொல்வேன் என்று சொன்ன மகளை நேற்று ஹாஸ்டல் வார்டன் வெளியில் இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை. இன்று இரவுதான் பேச முடியும்... அவரின் மனம் முழுவதும் இங்குதான் இருக்கும்.

எப்பவும் டிரெஸ் கூட எடுக்க மாட்டீங்க... இந்த வருசம் எடுக்கிறீங்க என்ற மனைவி மற்றும் விஷாலின் கறாரான வார்த்தைகளுக்காகவே இந்த வருடம் சட்டை எடுத்துக் கொண்டேன். அவ்வளவே நம் பிறந்தநாள்.

நேற்று மாலை மனைவி, மகனின் வாழ்த்தை அடுத்து இரவு பதினோரு மணிக்கு குமாருக்கு இன்னைக்குப் பிறந்தநாள் என மேகலாவிடமும் ஐயாவிடமும் அம்மா சொல்லியிருக்கிறார். உடனே அங்கிருந்து போன்... அம்மா, மேகலாவுடன் ஐயாவும் வாழ்த்தியது இந்தப் பிறந்தநாளை எனக்கு மறக்க முடியாத நாளாக்கி விட்டது. ஊரில் இருக்கும் போது அவர்களிடம் ஆசி வாங்கியது... நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் அது கிட்டியது... நானே மறந்தாலும் அம்மா எப்போதும் மறக்கமாட்டார். நினைவு வைத்து வாழ்த்துவதில் அவருக்கும் நிகர் அவரே.

இந்த வருட இன்னுமொரு சந்தோஷம் கலக்கல் ட்ரீம்ஸ் தசரதன் 'எதிர்சேவை' சிறுகதை தொகுப்பைத் தொடர்ந்து நாவல்தான் போடுறோமென 'வேரும் விழுதுகளும்' நாவலை இந்த சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு கொண்டு வந்ததும், அதற்கு ஐயாவின் அணிந்துரையும்.

இத்தோடு இன்னொரு விஷயமும் சொல்ல வேண்டும், வேரும் விழுதுகளும் நாவல் குறித்து முகநூலில் பகிர்ந்த போது நண்பர் ஒருவர் தனிச்செய்தியில் வந்து கதை நல்லாயிருந்தா வாங்கப் போறாங்க... அதெதுக்கு நீங்க அதைப் பற்றியே பேசிக்கிட்டு இருக்கீங்க என்றார். 

அன்று காலைதான் எழுத்தாளர் நந்து சுந்து தன்னோட புத்தகம் கிடைக்கும் இடம் குறித்த பதிவொன்றை முகநூலில் எழுதியிருந்தார். அதில் எனது எழுத்தை நம்பி பதிப்பித்த பதிப்பாசிரியருக்கு இது கூட செய்யவில்லை என்றால் எப்படி..? அப்படித்தான் எழுதுவேன் என்பதாய்ச் சொல்லியிருந்தார்.

அதுதானே உண்மை... நம்பிக்கையோடு நம் எழுத்தை எந்தக் கைமாறும் எதிர்பார்க்காமல் பதிப்பித்திருக்கும் நட்புக்கு நாம் இதைக்கூடச் செய்யவில்லை என்றால் எப்படி..? அவர் சொன்னதையே நானும் சொன்னேன்.

எழுதுவேன்... இன்னும் எழுதுவேன்... என்னால் முடிந்ததே அதுமட்டும்தான்.

வாழ்க்கை சில நேரம் மகிழ்ச்சியை நிரப்பித்தான் நகர்கிறது. இன்று மகிழ்வாய்.

-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி