திங்கள், 25 ஜனவரி, 2021

மனசு பேசுகிறது : எதிர்சேவைக்கு விருது

திர்சேவைக்கு தேனி தமிழ்நாடு முற்போக்கு கலையிலக்கிய மேடையின் 'தஞ்சை பிரகாஷ் நினைவு வளரும் படைப்பாளர் விருது' கிடைத்திருக்கிறது. நேற்று நடந்த விழாவிற்கு மனைவியும் செல்ல முடியாத நிலையில் சகோதரர் நந்தகுமார் அவர்கள் பெற்றுக் கொண்டார். அவரின் மகளுக்கு அங்கு விருது வழங்கப்பட்டதால் அவர் சென்றதால் அதை அவரே வாங்கிக் கொண்டார். என் புத்தகத்தை தேனி திரு.விசாகனிடம் அறிமுகம் செய்தவரும்... புத்தகத்துக்கான அறிமுக கூட்டத்தை நடத்தியவரும் இவரே என்பதால் விருதையும் அவரே பெற்றுக் கொண்டதில் பெருமையும் மகிழ்ச்சியும்.


இந்த எழுத்து என்ன செய்யும்...? சோறு போடுமா..? என்ற வார்த்தையை கல்லூரியில் படிக்கும் போது எழுத ஆரம்பித்ததில் இருந்து இன்று வரை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். நான் எழுதுவது சோறு போடும் என்பதற்காக அல்ல... கல்லூரியில் படிக்கும் போதுதான் எழுத ஆரம்பித்தேன்... அன்று முதல் இன்று வரை தொடர்கிறது... எங்கள் வீட்டில் யாரும் எழுதுவதில்லை... எனக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது பிடித்துக் கொண்டேன். எங்க தாத்தா கவி சொல்வார் என்று சொல்வார்கள். நான் தாத்தாவைப் பார்த்தது கிடையாது.

எனது முதல் எழுத்து பத்திரிக்கையில் பிரசுரமானது கவிதையாகத்தான்... 'ஒரு கட்டவுட் நிழலுக்கு கீழே...' என்ற தலைப்பில் ஒரு கல்லூரி மாணவன் எழுதிய கவிதை என்ற வாசகத்துடன் தாமரையில் வெளிவந்தது. அதுவே எனக்கான திரியாய் இருந்தது... அதைத் தூண்டி விட்டுக் கொண்டே இருந்தவர் பழனி ஐயா... கவிதை எழுத ஆரம்பித்து கதைக்குள் வந்தபின் கவிதையை மறந்தாச்சு... தாமரையில் வெளியான கவிதை எழுத்தாளர் பொன்னீலன் அவர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டது. அது குறித்து கடிதம் ஒன்று ஐயா வீட்டுக்கு அனுப்பினார். பின்னர் கலையிலக்கியப் பெருமன்ற விழாக்களுக்கு வரும் போதெல்லாம்  எப்படி எழுதுறே... என்ன எழுதிக்கிட்டு இருக்கே... நிறைய வாசிக்கணும் என்பார்.  இவர்களைப் போன்றோரின் பேரன்பே எழுத்தைத் தொடர வைத்தது.

பத்திரிக்கைகளில் கதைகள் வர ஆரம்பித்த பின் நிறைய எழுதணும்ன்னு தோண, கிறுக்கிக்கிட்டே இருக்க, இதுதான் சோறு போடப்போகுதாக்கும்... வய வேலை கிடக்கு... மாட்ட அவுத்துக்கிட்டுப் போயி காலாற மேய விட்டுக் கொண்டாரலாம்... எப்பப்பாரு பேப்பரும் பேனாவுமான்னு அப்பா எப்பவும் திட்டத்தான் செய்வார். அம்மா எதுவும் சொல்வதில்லை... ஆனாலும் அப்பா பேசும்போது அம்மாவும் நாலு வார்த்தையை நறுக்கென வைக்கத்தான் செய்யும். அப்படி இருந்தும் எழுத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தேன். எங்களின் எழுத்தார்வத்துக்குச் சோறு போட்டது நாங்கள் நண்பர்கள் அறுவர் சேர்ந்து நடத்திய 'மனசு' கையெழுத்துப் பிரதி. கல்லூரி இதழ்களில் எங்கள் இதழுக்கென தனி மரியாதை இருக்கத்தான் செய்தது. இவையெல்லாமே எழுத்தின் மீதான பற்றுதலை இன்னும் அதிகமாக்கியது எனலாம்.

இன்று வரை எழுத்து சோறு போடும் என்றெல்லாம் எழுதவில்லை... மனசுக்குப் பிடித்துச் செய்யும் ஒரு காரியம் எழுத்து... எனவே அதைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன் அவ்வளவே. நேற்றுக் கூட ஒரு தம்பி பேசும்போது என்னாலெல்லாம் இப்ப எழுதவே முடியலைண்ணா.... எப்படின்னா உங்களுக்கு நேரம் இருக்கிறது... பிக்பாஸ் அடிச்சி ஆடி அம்பது எழுதியிருக்கீங்க... பிரதிலிபி போட்டிக்கு தொடர்கதை பதியுறீங்க... எனக் கேட்டார். இவ்வளவுக்கும் அவர் தினமும் நாலைந்து எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்... இருந்தாலும் சமீபமாய் வேலையின் காரணமாக எழுதவில்லை என்பதால் நீங்க எழுதித் தள்ளுறீங்க எனச் சொன்னார். நான் எப்போது எழுதித் தள்ளுவதெல்லாம் இல்லை... ஆனால் எழுதணும் என்று நினைத்தால் அது எந்த நேரமாக இருந்தாலும் தள்ளிப் போடுவதில்லை... தள்ளிப் போட்டால் பின்பு எழுதமாட்டேன் என்பதை நானறிவேன். கொஞ்சம் வேகமாக தட்டச்சு செய்ய முடியும் என்பது கூடுதல் பலம் அவ்வளவே.

என் கதைகள் நிறையப் பரிசுகளைப் பெற்றுத் தந்திருக்கின்றன... என் எழுத்து அதற்கான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதெல்லாம் மகிழ்ச்சிதான்... நான் எப்போதும் எந்த மகிழ்ச்சியையும் அதிகம் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை... இந்த விருது பற்றி கொஞ்சம் அதிகமாகவே பகிர்ந்து கொண்டேன்... காரணம், எத்தனையோ வருடக் கனவு புத்தகம் கொண்டு வர வேண்டும் என்பது... பொருளாதாரச் சிக்கலினால் அது முடியாமலேயே போய்க் கொண்டிருந்தது. சென்ற ஆண்டு புத்தகம் கொண்டு வர வேண்டும் எனச் சகோதரர்கள் இருவர் எடுத்த முடிவும் அவர்களுடன் நான் செய்கிறேன் என எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்து கொடுத்த கலக்கல் ட்ரீம்ஸ் தரசரதனுமே எதிர்சேவைக்கான எல்லா நல்ல விஷயங்களுக்கும் சொந்தம் கொண்டாட வேண்டியவர்கள். இவர்கள் இல்லையென்றால் எதிர்சேவை இல்லை... விருது, விருந்து எல்லாம் மறுபக்கமே... எழுத்துக்கான அங்கீகாரம் கிடைக்க இவர்களே முக்கியக் காரணம்... 

இவர்களைப் பற்றி நிறையப் பேசிட்டேன் என்றாலும் பேசுவதற்கு இன்னும் நிறைய இருக்கு என்பதே உண்மை... அடுத்த புத்தக முயற்சியிலும் தசரதன் அவராகத்தான் இறங்கினார்... சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு வரும் என்று நம்புகிறோம். முதல் புத்தகத்துக்கு விருது என்பது இன்னும் எழுதுடா... எதையும் எதிர்பார்க்காதே... உன் எழுத்து அதற்கான இடத்தைச் சென்றடையும் என்று சொல்வதாய்த்தான் எனக்குத் தோன்றுகிறது.

விருது கொடுத்த தேனி தமிழ்நாடு முற்போக்கு கலையிலக்கிய மேடைக்கும் அதற்குப் பரிந்துரைத்த திரு. விசாகன் அவர்களுக்கும், விருதைப் பெற்றுக் கொண்ட சகோதரர் நந்தா அவர்களுக்கும், வாட்ஸப், முகநூல் மற்றும் போனில் வாழ்த்திய நண்பர்களுக்கும் நன்றி.

பிரதிலிபியி ஒரு தொடர்கதைப் போட்டி... நானும் ஒரு கதையைப் பகிர்ந்து கொண்டு வருகிறேன்... 'அணைக்குள் அடங்காத ஆசை'. கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்... முடிந்தவர்கள் வாசித்து உங்கள் கருத்தை அங்கு பகிருங்கள்.

நன்றி.

-'பரிவை' சே.குமார்.

9 கருத்துகள்:

  1. எழுத்து  நன்றாகவே உங்களுக்கு வசப்பட்டிருக்கிறது.  மென்மேலும் உயரங்களைத்தொட வாழ்த்துகள் குமார்.

    பதிலளிநீக்கு
  2. எதிர்சேவைக்காக உங்களுக்குக் கிடைத்த பரிசு - வாழ்த்துகள் குமார்.

    மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்தும் அதற்கான பரிசுகளும்.

    பதிலளிநீக்கு
  3. வாழ்த்துகள் குமார்...

    பதிலளிநீக்கு
  4. பாராட்டுகள்! தொடர்ந்து எழுதுங்கள். எழுத்தாளர்களுக்கு குடும்பத்தில் ஆதரவு கிடைப்பது அரிதுதான்.

    பதிலளிநீக்கு
  5. உங்களின் எழுத்துகள் ரசனைக்குரியவை! கிராமிய வாழ்வியலை அழகாகச்சொல்பவை! தங்களின் நூலுக்கு விருது கிடைத்தமை அறிந்து மகிழ்ந்தேன். வாழ்த்துகள்! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

    பதிலளிநீக்கு
  6. அருமை அருமை. விருதுக்கு வாழ்த்துகள் சகோ. நெகிழ்வான நினைவுகள்.புத்தகம் பலரைச் சென்றடைந்து இன்னும் விருதுகள் பெற வாழ்த்துகள் குமார் சகோ.

    பதிலளிநீக்கு
  7. அருமை அருமை வாழ்த்துகள் சகோ. இன்னும் பல விருதுகள் பெற்று புத்தகம்பலரைச் சென்றடைந்து பேர் வாங்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி