கலக்கல் ட்ரீம்ஸ் தசரதனின் முதல் நாவல்.
அசோலா என்றால் தீவனமாம்... ஒரு நாவலில் இரண்டு விதமாய் எழுதப்பட்ட கதைகள் வாசிப்பவர்களுக்கு நல்ல தீனிதான்...
கர்மாவில் நல்லதும் உண்டு... கெட்டதும் உண்டு... ஒரே ராசி, நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களின் கர்மாவைப் பொறுத்தே ஈபிஎஸ் ஆவதும் ஓபிஎஸ் ஆவதும் என்று சொல்லித்தான் இரண்டு கதைகளையும் பிரிக்கிறார்... இரண்டும் வேறுபட்டு இருக்கிறதா... இல்லை வேரோடு சாய்க்கிறதா என்பதுதான் அசோலா.
ஒரு எழுத்தாளன் தனது முதல் நாவலில் இத்தனை ராவாக சாவுகளைச் சொல்லுதல் என்பது எனக்குத் தெரிந்து இந்த நாவலாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். எல்லாரையும் கொன்று விடு என்றுதான் பேனாவை எடுத்திருக்கிறார் நாவலின் ஆசிரியர் தசரதன்.
அண்ணே எம்போக்குல எழுதினேன்... இதுதான் வடிவம்... இதற்குள் அடக்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவேயில்லை... எழுத்துக்கு சிறகு முளைத்துப் பறப்பதாய் நினைத்து அதன் பாதையில் பயணித்து முடித்தேன். வாசித்தவர்களில் நாற்பதுக்கு மேலிருப்பவர்கள் நல்ல கதை என்றார்கள்... நாற்பதுக்கு கீழிருப்பவர்கள் இதென்னய்யா இப்படி ஒரு கஷ்டமான வாழ்க்கை எனச் சொன்னார்கள் என்றார் சிரித்தபடி.
அப்பாவின் இறப்பில் ஆரம்பித்து... அதன் பின் அண்ணன்.... தங்கை... அம்மா.... இறுதியில் அவனும் என முடிகிறது முதல் நாவல். அப்ப அடுத்த நாவல்..?
அதுவும் அப்பாவின் இறப்பில் ஆரம்பித்து... தங்கை... அண்ணன்... அம்மா... மனைவி... அவன் என முடிகிறது. இறப்பின் வலியைச் சுமந்து பயணிக்கும் கதைக்களத்தை எடுத்த ஆசிரியர் தன் எழுத்தின் மூலமாய் நம்மை வசீகரித்து அதற்குள் ஈர்த்துக் கொள்வதே சோகத்திலும் சுகமாய்.
முழு நாவலையும் அதன் நாயகனே சொல்வது போல் எழுதியிருப்பது சிறப்பு... வாசிக்க ஆரம்பித்துச் சில பக்கங்கள் கடக்கும் போது ராஜி நமக்கு எதிரே அமர்ந்து கதை சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே நாம் பயணிக்க ஆரம்பித்து விடுகிறோம். வித்தியாசமான எழுத்து முறை.... விறுவிறுப்பாக நகரும் கதைக்களம்.
இப்படி ஒரு கதையை எடுத்து எழுதி, அதை தனது முதல் நாவலாய் கொண்டு வருவதற்கு பெரும் தைரியம் வேண்டும்... அந்தத் தைரியம் தசரதனுக்கு மனதிலும் எழுத்திலும் இருக்கிறது.
என்னோட கதைகள் பெரும்பாலும் சோகமாய் முடியும்... என்னய்யா அழுகாச்சிக் கதையா இருக்கு என்பார்கள் நண்பர்கள்... இங்கே கதை முழுவதும் சோகம்... தசரதனிடம் அதைச் சொல்லிக் கேட்டபோது சிரித்தார்... அடுத்த கதை இப்படி இருக்காது என்றார்.
அசோலா நல்லதொரு எழுத்தாளராய் தசரதனை முன்னே நகர்த்தி வைத்திருக்கிறது... அடுத்தடுத்து வரும் நாவல்கள் அவரை ஒரு சிறந்த நாவலாசிரியராய் முன் நிறுத்தி வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அசோலா வாசிக்க வேண்டிய நாவல்.
-‘பரிவை’ சே.குமார்.
நல்லதொரு அறிமுகம். நன்றி.
பதிலளிநீக்குநல்ல விமர்சனம் குமார்...
பதிலளிநீக்குவித்தியாசமான தலைப்பு.
பதிலளிநீக்கு