சனி, 24 அக்டோபர், 2020

பிக்பாஸ் சீசன்-4 ஒரு பார்வை

பிக்பாஸ் பற்றி எழுதுங்களேன்... ஏன் எழுதவில்லை என்ற கேள்விகள் நிறைய வர ஆரம்பித்திருக்கின்றன. சென்றமுறை சிலருக்குப் பிடிக்கும் விதமாகத்தான் எழுதியிருப்பேன் போல...😀 இல்லைன்னா கேக்க மாட்டாங்களே. பிக்பாஸ் பாக்குறவங்களை தப்பானவர்கள் என்று சொல்பவர்கள் இத்துடன் வாசிப்பதை நிறுத்திவிடலாம்.


இங்கு வாசிப்பும் எழுத்துமே வாழ்க்கையை நகர்த்தப் போதுமானதாக இருப்பதில்லை... அலுவலக அழுத்தங்கள், ஊரில் இருந்து வரும் செய்திகள் என மனசு எப்போதும் சோர்வுடனேயே இருக்கும் போது ஏதாவது ஒன்றைப் பார்த்து மனசை இலகுவாக்கிக் கொள்ள வேண்டிய சூழல் கட்டாயமாகத் தேவைப்படுகிறது... கண்டிப்பாகட் தேவைப்படும் இங்கு இருக்கும் ஒரு கட்டில் வாழ்க்கை மனிதர்களுக்கு... எனவே நான் படம் பார்ப்பேன், கிரிக்கெட் பார்ப்பேன், இப்ப பிக்பாஸூம் பார்ப்பேன்.

சரி விஷயத்துக்கு வருவோம்... பிக்பாஸ்-4 ஆரம்பித்து இப்ப மூன்று வாரங்கள் முடிந்து விட்டது... இதுவரை 4 என்பதால் போரடிக்கத்தான் செய்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய அன்றும் சென்ற வார இறுதியிலும் ஆண்டவரின் ஆக்ரோஷமான செயல்கள் எதுவும் இல்லை... என்ன பேசுறோம்... எதுக்குப் பேசுறோம்... ஏன் சிரிக்கிறோம்... அரசியல் பேசி என்ன செய்யப் போறோம்... என்றெல்லாம் இல்லாமல் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்... ஆரம்பத்தில் டாபர் ஹாபர்ன்னு  நிகழ்வுக்கு செலவு செய்யும் கம்பெனி பெயரை ஒரு இழுவையா அவர் சொல்வது போலதான் இருந்தது அவரின் பேச்சுக்கள்... அதற்கு முக்கியக் காரணம் ஆளில்லாத டீக்கடையில் டீ ஆத்துவதுதான்... இன்னும் கமல் ஆட்டத்துக்குள் வரவில்லை.

உள்ளிருக்கும் பதினாறு பேரில் சுரேஷ் சக்கரவர்த்தி  நோபால்/ ஒய்டு பால் என எல்லாத்தையும் சிக்ஸராக்கிக் கொள்வதில் தனிச்சிறப்பு பெற்றிருக்கிறார். சனத்தை அடித்து விட்டு அதை அப்படியே மாற்றிப் போட்டு அழுகாச்சி முகம் காட்டி தனக்கான இடத்தை சற்றே முன் நகர்த்திக் கொண்டு விட்டார். பாவம் சனம், அடி வாங்கி வாய்யா... வாடா... அடேய்ன்னு எல்லாம் கத்திட்டு அடிச்சாட வேண்டிய பந்துல அவுட்டாயிப் போயிருச்சு. சனத்தோட மைனஸ் பாயிண்டே தேவையில்லாத மூக்கு நுழைப்புத்தான்... விட்டுட்டுப் போம்மான்னா அப்பவும் விடாமல் மூக்கை ஆட்டிக்கிட்டே இருக்கு.

அனிதா சம்பத்... இல்லையில்லை ஆத்தி சம்பவம்... நியூஸ் வாசிப்பவர்... வாயைத் தொறந்தா ஆத்தா நீ எப்ப முடிப்பேன்னு கேட்டுட்டு பக்கத்துல இருக்கவங்க தூங்கிருவாங்க.. காலையில கோழி கொக்கரக்கோன்னு கூவுனதும் எழுந்து பார்த்தா அப்பவும் பேசிக்கிட்டு இருக்கும் போல... ரொம்பக் கஷ்டம்... பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கவனுகளுக்கு நூறு நாளுன்னா அதோட வீட்டுல இருக்கவனுங்களுக்கு ஆயுசுக்கும்... இதே பாதைதான் ஆரி... ஆனா விளையாட்டுல நல்லா விளையாண்டாலும் அறிவுரை மழையில் நனைந்த பயலுக நல்லாவே விளையாடலைன்னு சொல்லி ஜெயில்ல போட்டுடுறானுங்க.  இவனுககிட்ட இருந்து மீண்டுட்டா ஆரி முன்னோக்கி போகலாம். 

ஷிவானி... நீ எப்பத்தான் பேசுவேன்னு பிக்பாஸ் போன தடவ லாஸ்லியா பின்னால சுத்துன மாதிரி இப்ப ஷிவானி பின்னால சுத்துறாரு... குயில் மாதிரி இருக்கு அழகா கூவும்ன்னு நெனச்சிருப்பாரு போல... ஆனா அது கூவல... வெளாடவே மாட்டேன்டா... பேசவே மாட்டேன்டா... ஒம்பதாவதுல வாங்குன ட்ரஸைப் போட்டுக்கிட்டு பிக்பாஸ் டிவிக்கு முன்னால வந்து உக்காந்து அட்டணக்காலு போட்டேன்னா அத்தன பயலும் விழுந்துருவானுங்க... பின்ன என்ன நீங்க வாராவாரம் ஷிவானி சரியில்லன்னு வெளியேத்த ஓட்டுக் குத்துவிய... அது நல்லாத்'தேனே' உக்காந்திருக்குன்னு என்னய இங்கயே குத்தவக்க வெளியில இருக்க ரசிகாஸ் ஓட்டுக் குத்துவானுங்கன்னு மெதப்போட இருக்கு.

அர்ச்சனா... நல்லாத்தான் வந்துச்சு... டிவியில நிகழ்ச்சி நடத்தும் பெண்களில் மனம் கவர்ந்தவராய் இருந்தவர்... வீட்டுக்குள்ள வந்ததும் டீச்சரம்மா மாதிரி கம்பெடுத்து எல்லாரையும் முட்டி போட வைக்கிது... ரியோவுக்கு அடகாத்த அம்மா கோழியா இருந்துக்கிட்டு மத்தவங்களை பக்கத்து வீட்டுக் கோழியாக் கொத்தி விரட்டுது. பிக்பாஸ் கண்டிக்கலைன்னா வீட்டுக்குள்ள நாந்தான்டா பிக்பாஸ்ன்னு மொத்தக் குத்தகை எடுத்துரும்ன்னு தோணுது.

பாலாவைப் பொறுத்தவரை கோபமே முன்னால நிற்கிறது என்றாலும் ஆரம்பத்தில் பிடிக்காமல் இருந்தாலும் இப்போது பிடித்துப் போய்விட்டார். உண்மையாக விளையாடும் சிலரில் இவரும் ஒருவர்... மனதில்பட்டதை போட்டு உடைத்து விடுகிறார். சனம் மீது அவ்வளவு கோபத்தில் இருந்தாலும் அவருக்காக பேச வேண்டிய இடத்தில் பேசுவது சிறப்பு. அர்ச்சனாவுக்கு ஆப்படிக்கப் போவது இவராகத்தான் இருக்கும்.

வேல்முருகன் அவர் பாட்டுக்கு ஏதோ ரெண்டு பாட்டுப் பாடிக்கிட்டு இருந்தாரு... இப்ப நான் என்ன சொன்னேன்... எனக்குத் தெரியலைன்னு பாட்டாப் பாட வச்சிட்டானுங்க... நிறமும் வந்த சூழலும் ஒரு மனிதனை மற்றவர்கள் தள்ளி வைக்க காரணமாக இருக்கும் பட்சத்தில் அதை உடைத்தெரியும் வலு அவரிடம் இருக்க வேண்டும். அது ஏனோ வேல்முருகனிடம் இல்லை... கிராமத்தான் நான் என்பதில் பெருமைப்பட வேண்டுமேயொழிய நான் கிராமத்தான் என வருந்த வேண்டியதில்லை... கிராமம் செப்பனிட்டுத்தான் அனுப்பி வைக்குமே தவிர வக்கற்றவனாக அனுப்பாது... வேல்முருகன் பாடுவதை விட்டு அடுத்தவரை பாட வைக்க வேண்டும்.

ரமேஷ்... இந்தாளுக்கிட்ட உண்மையா பேசுற, விளையாடுற, எல்லாத்தையும் ஏத்துக்கிற மனசு இருக்கு... இதே போக்கில் பயணித்தாலே போதும்... தனக்கான இலக்கை அடைவதில் சிக்கல் இருக்காது... சோம் சேகர் நல்லவனாத்தான் தெரியிறான்... ஆனா அனிதாவுக்கு ஏன் இத்தனை பயம்ன்னுதான் தெரியலை... இன்னும் வெளிச்சத்துக்குள் வராதவர்களில் இவரும் ஒருவராகத்தான் இருக்கிறார்...வர வேண்டும் பன்னீர் செல்வம்... நீ வர வேண்டும்... அய்யோ இது தியானச் செம்மல் ஐயா OPS-க்கான அழைப்பு இல்லை... சோம் முன்னுக்கு வரச் சொல்லும் அழைப்பு.

சம்யுக்தா இவரும் இன்னும் ஆட்டத்துக்கு வரவில்லை என்றாலும் ரொம்பத் தெளிவா விளையாடுவாருன்னு தோணுது... இவரோட உடைத் தேர்வு சிறப்பு.  ரியோவைப் பொறுத்தவரை உலகத்தில் இருக்கும் உச்சபட்ச அறிவாளிகளில் முதலாமானவன் நான்... எனக்கு எல்லாம் தெரியும்... நானே பிக்பாஸ்க்கும் பிக்பாஸ் எனச் சில வட்டத்தை உருவாக்கி, விஜய் டிவியின் செல்லப்பிள்ளை நானு என்னை அவ்வளவு சீக்கிரம் வெளியேத்திட மாட்டாங்கன்னு இருக்கார்... இவரின் பேச்சும் செயல்களும் நமக்கே பிடிக்கலை... ரம்யாவிடம் மூக்கு உடைபட்டது போல் சீக்கிரம் எல்லாரிடமும் அடி வாங்குவார்.

நிஷா...எதார்த்த மனுஷி... கலகலப்புக்குச் சொந்தக்காரி... அர்ச்சனா - ரியோன்னு தூபம் போடுவதை விட்டுவிட்டு பட்டிமன்றத்தில் அசத்தியது போல் விளையாட்டிலும் அசத்தினால் நூறு நாள் வேலைத்திட்டத்தில்... ச்சை...  ஆமா வேலை இல்லாத சினிமா பிரபலங்களுக்கு நூறுநாள் வேலைத்திட்டம்தானே இது... அதனால சொன்னது தப்பில்லைதான் என்றாலும் நூறுநாள் ஓட்டத்தில் வெற்றியைப் பெறாவிட்டாலும் இறுதிவரை பயணிக்க முடியும்... செய்வீர்களா நிஷா..?

கேப்ரியாலா அழகி... இன்னும் விளையாடவில்லை... பாலாவுடனும் ஆஜித்துடனும் நெருக்கம்... இவரை காதல் வலையில் விழ வைக்க, பிக்பாஸ் பெரும் பிரயத்தனம் பண்ணிக் கொண்டிருக்கிறார்... நூறுநாள் வண்டியை ஓட்டணுமே... மூனுவாரமாப் பஞ்சரான டயரோடதான் போய்க்கிட்டு இருக்கு... எங்கே பாலாவை லவ்விருமோன்னு ஆஜித்துக்குப் பெருங்கவலை மனசுக்குள்ள இருக்கு போல... தமிழ் சினிமா முரடனைத்தானே லவ்வச் சொல்லிக் கொடுத்திருக்கு. ஆனா கேப்ரி அதிலெல்லாம் விழாமல் தன் விளையாட்டை விளையாண்டால் போதும் வெளியில் இருக்கும் ரசிகாஸ் ஓட்டுப் போட்டு உக்கார வச்சிருவானுங்கன்னு தோணுது... பாப்பா செய்யுமான்னு தெரியலை.

ஆஜித் தன் கதையைச் சொன்னப்பவே நான் தெரிய தில்லாலங்கடின்னு சொல்லாமச் சொல்லிட்டான். வால்டர் வெற்றிவேல் படத்துல சத்தியராஜூக்குத் தம்பியா வந்து வில்லத்தனம் பண்ணுவானே... வீட்ல எல்லாரும் பேசுடா... பேசுடான்னு சொல்லுவாங்களே அப்படி ஒரு ஆளுதான் இந்த ஆஜித்... விபரமான வில்லன்...இன்னும் இறங்கலை.... பத்து வாரத்துக்கு தன்னைக் காப்பாத்திக்க ஆயுதம் இருக்குன்னு ஒரு மிதப்பு அவனுக்குள்ள... சைலண்ட் வில்லன்... ரொம்ப மோசமானவனா இருப்பான்... வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைக்கிற ரம்யாவோட முதுகில் ஒருநாள் குத்துவான் என்பது திண்ணம். இவனே இந்த வீட்டுக்குள் முக்கியமானவனாகவும் இருப்பான்.


கடைசியாக ரம்யா பாண்டியன்... அழகு இருக்க இடத்துல அறிவும் இருக்கும் பெண்... இடை காட்டிப் போட்டா போட்டுப் பிரபலமானவர்... ரொம்பத் திறமையா விளையாடுறாரு... எதையும் பட்டென புரிந்து கொண்டு பேசுவது சிறப்பு... இருப்பவர்களில் தன் பாதை என்ன... இதை எப்படிக் கடக்க வேண்டுமென அழகிய திட்டமிடலுடன் பயணிக்கிறார். எதிரிகளுக்குச் சிம்மசொப்பனம் என்று பார்த்தால் இவரே நம்பர் ஒன் என மற்றவர்களே சொல்லி விட்டார்கள்... சென்ற சீசனில் சேரன் மனங்கவர்ந்தவர் என்றால் இந்த முறை ரம்யா... இதே முகத்துடன் பயணிக்கிறாரா... இல்லை முகத்திரையை கிழித்துப் போடுகிறாரா என்பதை இனி வரும் நாட்களில் பார்க்கலாம்.

சென்ற சீசனையெல்லாம் பார்த்து விட்டு வந்து எல்லாருமே ரொம்பப் பாதுகாப்பாக விளையாடுவது நிகழ்ச்சியில் பெரும் தொய்வைக் கொடுத்துள்ளது என்பதே உண்மை. பிக்பாஸ் இதுவரை ஏனோதானோன்னுதான் போய்க்கிட்டு இருக்கு... இனிமே அடித்து ஆடுவார்கள் என நினைக்கலாம்... பிக்பாஸ் டாஸ்கில் அடித்து ஆடுறாரா... இல்ல தூங்கி எந்திரிச்சி ஆட்டம் போடுற ஷிவானி பின்னால கேமராவோட ஓடுறாரான்னு பார்ப்போம்.

பிக்பாஸ் பதிவுகள் அப்போ அப்ப வரலாம்.

-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

  1. நானே கேட்கலாம் என்று இருந்தேன்... ரைட்டு, தொடர்க...

    அறிவுரை ஆலோசனை சொன்னால் குறை...! பாவம் ஆரி... அடுத்து இதே நிலை அர்ச்சனா...!

    நடந்தவற்றை வைத்து, ஒவ்வொருத்தரின் கணிப்பு செம...

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி