மலையாளத்தில் கப்பேள என்றால் மேரி மாதாவை மட்டும் வைத்து வழிபடும் ஒரு சிறிய இடம் என்று சொல்கிறார்கள். அப்படியானதொரு மேரி மாதாவின் சிலையொன்று நாயகியின் வீட்டினருகே இருக்கிறது. அதுவே அவள் அடிக்கடி போய் வழிபாடு செய்யுமிடமாகவும் இருக்கிறது.
ஒரு சிறிய கரு... அதை திரைப்படமாய் விவரித்துக் கொண்டு செல்லுதல் கேமரா விழுங்கியிருக்கும் வயநாட்டைப் போல் அழகு... அவ்வளவே. கேரள இயக்குநர்கள் கேமராவைத் தூக்கிக் கொண்டு எங்கும் அலையத் தேவையில்லை... இயற்கையின் அழகு எல்லா இடத்திலும் விரிந்து கிடக்கிறது... அப்படியான அழகைத்தான்... மழையை, மரங்களை, பூக்களை என எல்லாவற்றையும் அழகாய் உள் வாங்கியிருக்கிறது கேமரா... நாயகி அன்னா பென்னையும் சேர்த்தே.
ஒரு ராங்கால்... அதன் பின்னான கதை நகர்வு என்று சொல்லப்படும் கதையின் ஆரம்பம் காதல் கோட்டை போல் இருக்கலாம் என நினைக்க வைக்கிறது ஆனால் அதன் பின்னான கதையின் பயணத்தில் இது வேறொரு களத்தில் பயணிக்கும் படம் என்பதை உணர முடியும்.
இந்தப் படத்தைப் பார்த்த பின்னரே நண்பர்களின் விமர்சனங்களை வாசித்தேன் சிலர் ஆஹா... அதகளம்... கேரள இயக்குநர்கள் அடித்து ஆடுகிறார்கள் எனத் தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்... இவர்களில் பலர் உள்ளூர் படங்களைத் தவிர்த்து உலகம் படங்களைக் கொண்டாடும் வர்க்கம். இன்னொரு பக்கம் இது சாதாரணக் கதைதான்... இதே கதைக்களத்தில் நிறைய எடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்... ஆஹா... ஓகோன்னு சொல்ல இதில் ஒன்றுமில்லை... இதைவிட அருமையான தமிழ்ப்படங்கள் எல்லாம் வந்திருக்கின்றன... அதையெல்லாம் நாம் கொண்டாடுவதில்லை எனச் சொல்லியிருக்கிறார்கள். நான் அந்த இன்னொரு பக்கத்தில்தான் நிற்கிறேன்.
மலையாளப் படங்கள் பலவற்றைப் புகழ்ந்து எழுதியவன்தான் நான் என்றாலும் எனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே அதைப் பற்றி விரிவாகவும் புகழ்ந்தும் எழுதுவேன். அப்படியெழுதிய படங்களை நண்பர்கள் பார்த்து நல்லபடம் எனப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுதான் எழுத்தின் வெற்றி எனலாம்...
அப்ப இது நல்ல படமில்லையா..? என்றால் அப்படிச் சொல்லிவிட முடியாது... பார்க்கலாம் வகைதான்... பரவச வகையெல்லாம் இல்லை.
ஆட்டோ ஓட்டும் நாயகன் ராங்கால் என வந்த நம்பரில் பேசும் போது எதிர்முனையில் இருக்கும் பெண், ஆரம்பத்தில் அந்த அழைப்பைத் தவிர்த்து பின் காதலில் விழுதல் என்பது அபத்தம். மேலும் அவன் எப்படிப்பட்டவன் எனபதை அறியாமல், செல்போனில் பேசும் போது கூட போட்டோ அனுப்பச் சொல்லாமல், பழகுதல் என்பதெல்லாம் இதனால் பின்னால் உனக்குப் பெரும் பிரச்சினை வரும் என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகிறது.
நாயகன், வில்லன் கதாபாத்திர அமைப்பே இறுதியில் இப்படித்தான் நிகழும் என்பதை நமக்குத் தெரிந்து விடுவதால் சுவராஸ்யம் என்பது அடிபட்டுப் போய்விடுகிறது. படத்தில் நாயகி கோழிக்கோடு பேருந்து நிலையத்தில் இறங்கிய பின் நகரும் காட்சிகள் ஒரு த்ரில்லர் படத்தைப் பார்ப்பது போல் பரபரவென நகர்கிறது. ஆனால் அதற்கு முந்தைய பகுதி... மெல்லத்தான் நகர்கிறது. காதலில் கூட நாயகிதான் முன் நிற்கிறாள்... நாயகனிடம் காதல் மகிழ்ச்சிகள் காணாமல்தான் இருக்கின்றது.
படிப்பை நிறுத்தி விட்டு வீட்டிலிருக்கும் நாயகி ஜெஸியாக அன்னா பென்... இவர் நடித்த கும்பளங்கி நைட்ஸ், ஹெலன் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட்... சின்னச் சின்ன விஷயங்களைக் கூட மிக நுணுக்கமாய் பண்ணும் நடிப்பழகி... பார்வதி, மீரா ஜாஸ்மினுக்குப் பின் நடிப்பில் சொல்லுபடியான நாயகி. இந்தப் படத்திலும் அவரின் நடிப்பில் குறை வைக்கவில்லை. ஒரு சிறு பெண் காதலில் விழும் அழகை அத்தனை அழகாக பார்ப்பவர்களுக்குக் கடத்தியிருக்கிறார்.
அதுவும் அவரை விரும்பும், திருமணம் செய்து கொள்ள முடிவும் செய்திருக்கும் ரெடிமேட் கடை முதலாளி பென்னி (சுதி கொப்பா), தனது கடை திறப்பு விழாவில் ஜெஸியை போட்டோ எடுத்து அதை ஊரின் மையப்பகுதியில் தன் கடைக்கான விளம்பரமாக வைத்திருப்பதைப் பார்த்து விட்டு கொடுக்கும் லுக்கும், அதன் பின் தன் தோழியுடன் நடந்து வரும்போது காட்டும் கெத்தும் செம... அன்னாவுக்காக ஒருமுறை பார்க்கலாம்.
நாயகன் விஷ்ணுவாக வரும் ரோஷன் மாத்யூ ரொம்ப நல்லவன்... அவசர உதவி என்றால் பணம் வாங்காமலே ஆட்டோவில் ஏற்றிச் செல்பவன்... இயக்குநர் சொன்னதைச் செய்திருக்கிறார். வில்லன் ரோய்யாக வரும் ஸ்ரீநாத் பாஷி (இவரும் கும்பளங்கி நைட்ஸில் நடித்தவர்தான்) பாட்டிலை எறிந்து ஒருவனை அடித்து விரட்டுவதில் ஆரம்பித்து இறுதிவரை அடித்து ஆடி, நாயகனைப் பின்னுக்குத் தள்ளி விடுகிறார். இவரின் காதலியாக பள்ளி ஆசிரியையாக வரும் தன்வி ராம் (அம்பிலியில் நாயகி) அழகாய் இருக்கிறார்... நடிப்பிலும் குறையில்லை.
இந்தக் காலப் பிள்ளைகள் செல்போனில் முகம் தெரியாமல் பேசி அதன் பின் அனுபவிப்பதைத்தான் படமாக்கியிருக்கிறார்கள். அதற்குப் பாராட்டலாம்.
படத்தின் முடிவு என்னாகும் என நகர்த்திச் சென்றிருந்தால் ஒருவேளை ஆஹா... ஓகோ ரகமாக இருந்திருக்கும்... நமக்கெல்லாம் ஆரம்பத்திலேயே இப்படித்தான் இருக்கும் என தெரிந்து விட்டதால் அந்தக் கடைசி இருபது நிமிடம் கூட அவ்வளவு விறுவிறுப்பைக் கொடுக்கவில்லை.
கேமரா காட்டும் கேரள அழகுக்காகவும்... அழகாக நடிக்கும் அன்னாபென்னுக்காகவும்... பெண்பிள்ளைகளுக்கு ஒரு விழிப்புணர்வு என்பதாய் கதை சொன்னதற்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.
-'பரிவை' சே.குமார்.
நல்ல விமர்சனம். அறிமுகத்திற்கு நன்றி.
பதிலளிநீக்குநீங்கள் இதற்கு முன் சொன்ன ஓரிரு படங்களையும் பார்த்து விட்டோம்... (மடிக்கணினி வாங்கியபின்) இதையும் பார்க்கிறோம் குமார்...
பதிலளிநீக்குஅருமையான விமர்சனம்
பதிலளிநீக்குநன்றி நண்பரே
பார்க்க முயற்சிக்கிறேன்.
பதிலளிநீக்குஅவசியம் பார்க்கவேண்டுமென்ற ஆவலை தூண்டும் விமர்சனம்.
பதிலளிநீக்குமலையாள படங்கள் ஆரவாரமோ ஆர்பாட்டமோ இல்லாமல் அமைதியாக அதே சமயத்தில் தெளிவான கதையோட்டம் கொண்டவை என்பதற்கு இப்படமும் ஒரு சாட்சி..
என்னிடம் அமேசான், நெட்பிளிக்ஸ் இரண்டும் இருந்தும் பாடம் பார்க்கும் மூடே இல்லை. மகன்கள் மொழிவாரியாகப் பார்த்துத் தள்ளுகிறார்கள்!
பதிலளிநீக்குவிமர்சனம் நல்லாருக்கு குமார். இந்தப் படம் பத்தி எங்க குடும்ப குழு ல ஸோ ஸோ தான்னு சொல்லிருந்தாங்க
பதிலளிநீக்குகீதா