நேற்றுடன் முகநூலில் பத்துக் கோவில்களைப் பகிர்ந்து முடித்தாலும் இன்னும் சில கோவில்கள் குறித்து தொடர்ந்து அங்கு பகிரும் எண்ணம் இருக்கத்தான் செய்கிறது. அங்கு பகிர்ந்தால் இங்கும்தான் தொடரும்.
இறுதி நாளான நேற்று பிரான்மலை பற்றி வாசிக்கும் போது நமக்குத் தெரியாத எத்தனையோ விஷயங்களை அறிய முடிந்தது. பிரான்மலை என்பதைச் சாதாரணமாகக் கடந்து சென்றிருக்கிறேனே ஒழிய அதன்பின்னே இருக்கும் பெரும் வரலாறையும் அங்கிருக்கும் சிவன் கோவில் பற்றிய செய்திகளையும் வாசிக்கும் போது வியப்பாக இருந்தது.
இதன் காரணமாகவே எங்கள் மாவட்டத்தில் இருக்கும் இன்னும் சில கோவில்களைப் பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம் நிறைந்திருக்கிறது.
வெள்ளையர் எதிர்ப்பில் சிறந்து விளங்கிய, வேலுநாச்சியார், மருது சகோதர்களை தன் மீது சுமந்த காளையார்கோவிலே இன்றைய பகுதியில்... சரி வாங்க சுதந்திர ஆன்மீக உலா போகலாம்.
காளையார் கோவில் காளீஸ்வரர்
காளையார்கோவிலுக்கு திருக்கானப்பேர் என்ற பெயரும் உண்டு.
சண்டாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க காளி இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் குளித்து சிவபெருமானை வழிபட்டு, தனது கரிய உருவமும் பாவமும் நீங்கப் பெற்று சுவர்ணவல்லியாக மாறிக் காளீஸ்வரரைத் திருமணம் செய்து கொண்டதாக தல வரலாறு சொல்கிறது.
இந்திரனின் ஐராவத யானை மகரிஷி ஒருவர் கொடுத்த சாபம் நீங்க இத்தலத்திற்கு வந்து, இறைவனை வழிபட்டதாகவும் அப்போது தன் தந்தத்தால் பூமியைக் கீறி, ஒரு பள்ளத்தை உண்டாக்கி தீர்த்தமெடுத்து இறைவனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாகவும் அந்த யானை உண்டாக்கிய பள்ளமே யானை மடு (கஜபுஷ்கரணி) என்ற தீர்த்தக்குளம் என்ற புராணக் கதையும் உண்டு. இக்குளம் நடுவில் அழகான நீராழி மண்டபத்துடன் சதுர வடிவில் கோவிலுக்கு அருகில் இருக்கிறது. இங்கு தெப்பத் திருவிழா நடத்தப்படும்.
இத்திருத்தலத்தில் காளி உருவாக்கிய சிவகங்கைத் தீர்த்தம் மற்றும் விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்ஷன தீர்த்தம் ஆகியவை உள்ளன.
இரண்டு பிரகாரங்களைக் கொண்ட இக்கோவிலில் படைப்பு, பாதுகாப்பு, நிறைவு ஆகியவற்றைக் குறிக்கும் விதமாக சுவர்ண காளீஸ்வரர், சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர் என மூன்று சிவன் சன்னதிகள் இருக்கின்றன. மூவரில் சுவர்ண காளீஸ்வரர் நடுவில் வீற்றிருக்கிறார். இவரே இத்தலத்தில் தேவாரப் பாடல் பெற்ற மூர்த்தியாவார். இவரின் பெயரில்தான் கோவில் அழைக்கப்படுகிறது. இவருக்கு வலது பக்கம் சோமேஸ்வரரும் இடது பக்கம் சுந்தரேஸ்வரரும் இருக்கிறார்கள். அம்மன்களான சுந்தரவல்லி, சௌந்தரநாயகி, மீனாட்சி ஆகியோருக்கும் இங்கு தனித்தனிச் சன்னதிகள் உள்ளன.
திருஞானசம்பந்தர் மற்றும் சுந்தரரால் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம் இது.
(மன்னர் முத்து வடுகநாதர்) |
மருது சகோதரர்களால் கட்டப்பட்ட 9 நிலைகளைக் கொண்ட 157 அடி உயர இராஜகோபுரமும் அதன் அருகிலேயே முதலாம் சுந்தரபாண்டியனால் கட்டப்பட்ட 5 நிலைகளைக் கொண்ட சிறிய கோபுரமும் கிழக்குப் பார்க்க உயர்ந்து நிற்கின்றன. இராஜ கோபுரத்தில் ஏறி நின்று பார்த்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் தெரியும் என்பார்கள்.
1772 - ஜூன் 25 அன்று இக்கோவிலில் வைத்துத்தான் சிவகங்கை மன்னரும் வேலுநாச்சியாரின் கணவருமான முத்து வடுகநாதரை ஆங்கிலேய படைத்தளபதி பான்சோர் சுட்டுக் கொன்றான். அதன் பின் வேலுநாச்சியார் மருது சகோதரர்களுடன் இணைந்து வெள்ளையரை எதிர்த்துப் போராடினார்.
வெள்ளையர்களுக்கும் மருது சகோதரர்களுக்கும் இடையிலான போரின் போது தப்பிச் சென்ற மருது சகோதர்களைக் கைது செய்ய முடியாத வெள்ளையத் தளபதி சரணடையாவிட்டால் கோபுரத்தை இடித்துத் தரைமட்டமாக்குவேன் என்று சொன்னதாலே அவர்கள் வெள்ளையரிடம் சரணடைந்தது, தூக்கிலடப்பட்டனர்.
இக்கோயில் சிவகங்கையில் இருந்து தேவகோட்டை செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது.
சிவகங்கை சமஸ்தானத்துக்கு சொந்தமான இக்கோவில் சில காலம் பூட்டி வைக்கப்பட்டு அதன் பின் மராமத்துப் பணிகள் நடந்தபோது மொத்தச் செலவு தொகையையும் தேவகோட்டை ஜமீன்தார் அள.அரு.இராமசாமி செட்டியார் ஏற்றுக்கொண்டார்.
கோவிலின் உள்ளே சூரியன், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், விநாயகர், சுகந்தவனப்பெருமாள், விசுவநாதர், லிங்கோத்பவர், வீரபத்திரர், சப்தமாதர், கெஜலட்சுமி, சுப்பிரமணியர், பிரம்மா, நடராஜர், சண்டீஸ்வரர்,சனீஸ்வரர், பைரவர், சந்திரன் ஆகிய தெய்வங்களும் இருக்கின்றன.
காளீஸ்வரர் திருவிழா தை மாதம் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
2016-ல் அகல் மின்னிதழில் நான் எழுதிய 'கொஞ்சம் ஆன்மீகம் கொஞ்சம் வீரத் தமிழர் வரலாறு' என்னும் கட்டுரையில் இன்னும் விரிவாக வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் மற்றும் காளீஸ்வரர் கோவிலைப்பற்றி அறியலாம்.
நாளை கண்டதேவி...
-'பரிவை' சே.குமார்.
பேஸ்புக்கில் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குசிறப்பான கோவில்...
பதிலளிநீக்குதேவார பாடல் பெற்ற திருக்கோயில்..
பதிலளிநீக்குதமிழகத்தின் வீர வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த திருக்கோயில்...
ஈசனுடன் மருது சகோதரர்களையும் வணங்குகின்றேன்..
காளையார் கோவில் மருது சகோதரர்கள் கதை அறிந்திருக்கிறேன் மற்றையவை புதியவை.
பதிலளிநீக்குசிறப்பான தகவல்களுடன் இனிய அறிமுகம் ....
பதிலளிநீக்குநாங்கள் இந்த கோவிலை இரண்டு , மூன்று முறைப் பார்த்து இருக்கிறோம்.
பதிலளிநீக்குஇந்த கோவில் யானை, இந்த கோவில் தேர் சிற்பங்கள் எல்லாம் இப்போது மீண்டும் முகநூல் காட்டியது.
கோவிலில் கல்சங்கிலிகள் மிகவும் அழகாய் தொங்கும்.
மருது சகோதரர்களுக்கும் சிலை உண்டு.
சிறப்பான கோவில் உலா... தகவல்கள் அனைத்தும் சிறப்பு.
பதிலளிநீக்குநல்ல தகவல்கள் கோயிலைப் பற்றி அறிந்துகொண்டோம். சென்றதில்லை.
பதிலளிநீக்குதுளசிதரன்
மருது சகோதரர்கள் கதை ஓரளவு அறிவேன். நீங்கள் இங்கு முன்பு குறிப்பிட்டிருக்கீங்களோ? அல்லது வேறு தளத்தில் வாசித்திருக்கிறேனோ இங்குதான் என்று நினைவு. நல்ல தகவல்கள் குமார்
கீதா