நான் முகநூலில் பெரும்பாலும் அதிகம் எழுதுவதில்லை... நிறைய வாசிப்பேன்... வெட்டியாய் பொழுது போக்குவதென்பது அங்கு ரொம்பக் குறைவுதான். எழுதவோ படிக்கவோ செய்யும் போது பெரும்பாலும் இளையராஜா, சமீபத்தில் தேவா இசையில் எஸ்.பி.பி. பாடிய மூன்று மணி நேரத் தொகுப்பு, நாடக நடிகர் முத்துச்சிற்பி, கிராமியப் பாடகர்கள் இளையராஜா, அபிராமியின் பாடல்களுடன் ஐக்கியமாகி விடுவதுண்டு. முகநூல் சில நேரங்களில் நமக்கு நல்லதொரு வாய்ப்பை வழங்கவும் செய்யும். அப்படித்தான் நண்பரும் அகல் மின்னிதழ் ஆசிரியருமான சத்யா தொடரச் சொன்ன பத்து நாள் பத்துக் கோவில் குறித்த விபரங்களைச் சொல்லும் தினம் ஒரு கோவில் அமைந்தது.
கோவில் பற்றிய செய்தி, மூலவர், பரிகார தெய்வங்கள், ஸ்தல விருட்சம், தீர்த்தம் என்பவற்றைப் பற்றி எழுத வேண்டும் என்பதுதான் விதி. எல்லாருமே சுருக்கமாகத்தான் விபரங்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நமக்கு ஒரு வேலையில் இறங்கிவிட்டால் கொஞ்சம் அது குறித்து விரிவாகப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு என்பதால் சற்றே விரிவாக, முதல் பதிவு மட்டும் கொஞ்சம் சுருக்கமாக இருப்பது போல் எனக்குத் தோன்றுகிறது. மற்றதெல்லாம் மிக விரிவாகத்தான் எழுதியிருக்கிறேன். இதற்காக நிறைய வாசிக்க முடிகிறது... நண்பர்களும் சில விஷயங்களை அன்போடு அள்ளித் தருகிறார்கள்.
எங்க சிவகங்கை மாவட்டக் கோவில்கள் பற்றித்தான் எழுதுவது என்பதை ஆரம்பத்திலேயே முடிவு செய்துவிட்டேன்... பத்துக் கோவில்கள் மட்டுமே என்பதால் எண்ணற்ற கோவில்களில் பத்தைத் தேடி எடுத்தல் என்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது. நேற்று வரை எட்டுக் கோவில்களைப் பற்றி பகிர்ந்திருக்கிறேன். இன்னும் இரண்டு கோவில்கள் பகிர வேண்டும். அங்கு பகிர்ந்ததை இங்கும் தினம் ஒன்றாய் பகிர்ந்து கொண்டால் சேமித்து வைத்தது போலவும் இருக்கும் அல்லவா... அதனால் தினம் ஒன்றாய் இங்கும்...
முக்கியமான ஒன்றை கோவில்களைத் தேடி வாசித்ததில் கண்டு பிடிக்க முடிந்தது. ஆண்டாண்டு காலமாய் மூலவராய் ஆண் தெய்வம் இருக்கும் கோவில்களுக்குள் ஒரு பெண் தெய்வம் பிரதிஷ்டை செய்யப்பட்ட உடன் அந்த கோவில் பெண் தெய்வத்தின் ஆட்சியில் வந்து விடுகிறது... அந்த அம்மனின் பெயரில்தான் அக்கோவிலே அழைக்கப்படுகிறது. அதுவரை அழைக்கப்பட்டு வந்த மூலவரின் பெயர் மறைவதுடன் அவரும் ஒரு சன்னதியில் மௌனியாய் அமர்ந்து விடுகிறார். இங்க ஒண்ணு யோசிக்கணும்... வாழ்க்கையும் அப்படித்தானே இருக்கு... கல்யாணத்து வரைக்கும் ராஜா... அப்புறம்...? சரி... சரி... வாங்க பத்து நாளைக்கு கோவில் உலா வருவோம்.
பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர்
'ஒன்பது கோளும் ஒன்றாய் காண பிள்ளையார்பட்டி வாருங்கள்' என்ற பிரசித்தி பெற்ற பாடல் வரிகளுக்கு இணங்க கணபதியைத் தொழுது தொடங்கலாம்.
இக்கோவில் 1300 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடைவரைக் கோயில் என்பது வரலாறு சொல்லும் சேதி.
சிவகங்கை மாவட்டத்தில் அமைந்திருக்கும் உலகப் பிரசித்திபெற்ற இக்கோயில் காரைக்குடி (16 கி.மீ) - திருப்பத்தூர் (12 கி.மீ) சாலையில் இருக்கும் பிள்ளையார்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் இரண்டு பகுதிகளாக இருக்கிறது. கற்பக விநாயகர் இருக்கும் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும் மருதீசர் இருக்கும் மற்றொரு பகுதி கற்றளி மண்டபக் கோவிலாகவும் இருக்கிறது.
6 அடி உயர கற்பகவிநாயகரின் சிற்பம் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருக்கிறது. விநாயகரின் தும்பிக்கை வலது புறமாக சுழித்து இருப்பது இக்கோவிலின் சிறப்பு. தேசி விநாயகர் என்ற மற்றொரு பெயரும் இவருக்கு உண்டு.
இது குடைவரைக் கோவில் என்பதால் சன்னதியைச் சுற்றி வலம் வர முடியாது எனவே பெரும்பாலான பக்தர்கள் கோவிலைச் சுற்றி வரும் சாலையில் வலம் வருவதைக் காணலாம்.
கற்பக விநாயகர் வடக்குத் திசை நோக்கி அமர்ந்திருக்கிறார். மேலும் கார்த்தியாயினி, நாகலிங்கம், பசுபதீசுவரர் சன்னதியும் இங்கு இருக்கிறது.
இதே கோவிலுக்குள் கிழக்குப் பார்க்க லிங்க வடிவில் மருதீசர் இருக்கிறார். இக்கோவிலில் தெற்குப் பார்க்க வாடாமலர் மங்கை நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். மேலும் சிவகாமியம்மன் மற்றும் நடராஜருக்குத் தனிச் சந்நிதிகள் இருக்கின்றன. வடபுறச் சுவரில் லிங்கோத்பவர் இருக்கிறார்.
ஏழு நிலைகளுடன் உயர்ந்து நிற்கும் ராஜகோபுரம் கிழக்கு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு வாயிலில் மூன்று நிலைகளுடன் விநாயகக் கோபுரம் இருக்கிறது.
எருக்காட்டூர், மருதங்குடி, திருவீங்கைக்குடி, திருவீங்கைச்வரம், இராச நாராயணபுரம், மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேச மாநகரம், பிள்ளைநகர் என இக்கோவிலுக்கு முற்காலப் பெயர்கள் இருந்ததாக கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.
கோவிலுக்கு எதிரே திருக்குளம் அமைந்துள்ளது. அசுத்தம் செய்யாதிருக்க சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டிருக்கும்.
விநாயகர் சதுர்த்தி விழா பத்து நாட்களுக்கு மிகச் சிறப்பாக, பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
நகரத்தார் மேற்பார்வையில் இருக்கும் இக்கோயிலில் அரசு அன்னதானத் திட்டம் கொண்டு வரும் முன்பிருந்தே அன்னதானம் மிகச் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் காலணி பாதுகாக்க கட்டணம், மூலவரைக்காண கட்டணம் என எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. கோயிலும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளும் மிகத் தூய்மையாக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.
சிவன் கோவில் என்றாலும் கற்பக விநாயகரே முன்னவராய் நின்று பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் என்ற பெயரே வழக்கத்தில் இருக்கிறது.
அலங்கார மண்டபத்தில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.
தல விருட்சம் : அர்ச்சுனா மரம்.
கற்பகவிநாயகர் மற்றும் மருதீசரைச் செதுக்கிய சிற்பியின் பெயர் ஏக்காட்டூர் கோன் பெருபரணன் எனக் கல்வெட்டியில் பொறிக்கப்பட்டிருக்கிறது.
நாளை குன்றக்குடி...
*****
இந்த வாரம் எங்கள் பிளாக் கேட்டு வாங்கிப் போடும் கதையாக எனது 'வெண்ணையும் சுண்ணாம்பும்' பகிரப்பட்டிருக்கிறது. வாசிக்காதவர்கள் வாசித்துக் கருத்துச் சொல்லுங்க... என் எழுத்தில் மாற்றம் செய்ய உங்கள் கருத்து உதவியாய் இருக்கும். நன்றி.
கதையை வாங்கிப் பகிர்ந்த ஸ்ரீராம் அண்ணனுக்கும் மற்றும் ஆசிரியர் குழுவுக்கும்... அங்கு தங்களின் நிறைவான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.
வலைப்பூவில் கருத்து இட முடிவதில்லை என்பதால் இங்கும் எங்கும் கருத்து என் கருத்துகள் பகிர முடிவதில்லை. என்னடா இவனை நம்ம பக்கமே காணோம்ன்னு நினைச்சிடாதீங்க... வலைப்பூ மருத்துவரும் என் அன்பு அண்ணனுமான திண்டுக்கல் தனபாலன் அண்ணன் ரொம்பவே முயற்சித்தார்... ஆனாலும் ஏனோ சதி செய்கிறது... விரைவில் சரியாகும் என்று நம்புவோம்.
நன்றி.
'பரிவை' சே.குமார்.
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருடன் ஆரம்பித்திருக்கிறது ஆலய உலா... மிகச் சிறப்பான கோவில். இரண்டு முறை இங்கே சென்று வந்திருக்கிறேன். விழாக்கள் இல்லாத நாட்களில் நிம்மதியாக அமர்ந்து அமைதியை உள்வாங்கி வந்திருக்கிறேன்.
பதிலளிநீக்குசிறப்பாகத் தொடங்கி இருக்கிறீர்கள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
அட... நம்ம பிள்ளையாரில் ஆரம்பம்... சிறப்பு...
பதிலளிநீக்குஅருமையான கோயில் உலா, தொடர்கிறேன், உங்களுடன்
பதிலளிநீக்குபிள்ளையார்பட்டி பலமுறை தரிசித்த கோயில்....
பதிலளிநீக்குமகிழ்ச்சி.. நன்றி...
பிள்ளையார்ப்பட்டி கோவில் உலா அருமையான தொடக்கம்!
பதிலளிநீக்குபிள்ளையார் பட்டி கற்பகவிநாயகர் தரிசனம் கிடைத்தது.
பதிலளிநீக்குநமது குலதெய்வம் கற்பகவிநாயகர்தான். போர்த்துக்கேயர் காலத்தில் கற்பூரத்துக்கு தடைவந்தபோது பிள்ளையார் இங்குள்ள புன்னை மரப்பொந்தினுள் கற்பூரம் விளைந்து இருக்கிறது எடுத்துக்கொள் என கனவில் கூறியதும் அங்கு கற்பூரம் கிடைத்ததாகவும் தலவரலாறு சொல்கிறது இன்றும் புன்னைமரம் இருக்கிறது. பிள்ளையார் கற்பகவிநாயகர் என்றே அழைக்கப்படுகிறார்.
பக்தி இலக்கியமும் தேவை தானே!
பதிலளிநீக்குபிள்ளையாரில் தொட்ட பணி
வெற்றியில் முடியும் காண்!
அற்புதம். திருக்கோவில்கள் தான் நமது மண்ணின் அடையாளம். அரசர்கள் ஆண்டாண்டு காலமாக கோவில்களை கட்டி காப்பாற்றினார்கள். அக்கோவில்களைக் காப்பது நம் கடமை.
பதிலளிநீக்குபிள்ளையார்ப்பட்டி சென்றிருக்கிறேன் குமார். தங்கையுடன் அவள் மகளுக்கான வேண்டுதலுக்காக திருப்பத்தூரில் தங்கி அங்கு சுற்றி இருக்கும் பைரவ்ர் கோயில்களுக்கும் ஒரே நாளில் செல்ல வேண்டும் என்று அவள் சென்ற போது சென்றேன். அதில் பிள்ளையார்பட்டியும் ஒன்று.
பதிலளிநீக்குநல்ல தகவல்கள்
கீதா
பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் எல்லோருக்கும் நன்மைகளை அருள வேண்டும்.
பதிலளிநீக்குகண்ணதாசன் அவர்கள் பாடல் -
அற்புத கீர்த்தி வேண்டின்
ஆனந்த வாழ்க்கை வேண்டின்
நற்பொருள் குவிதல் வேண்டின்
கற்பகமூர்த்தி தெய்வக்
கள்ஞ்சியத் திருக்கை சென்று
பொற்பதம் பணிந்து பாரீர்
பொய்யில்லை கண்ட உண்மை.
பதிவு அருமை. தலவரலாறும் கோவிலின் சிறப்பும் நிறைய தடவை போய் இருக்கிறோம்.
அடுத்து முருகனை தரிசிக்க தொடர்கிறேன்.