செவ்வாய், 26 மே, 2020

மனசு பேசுகிறது : எழுத ஆரம்பித்திருக்கும் நாவல்

ங்கு பதிவெழுதி ரொம்ப நாளாச்சு... நிறைய எழுதணும்ன்னு நினைச்சு இந்தக் கொரோனா காலத்துல வீட்டிலிருந்து வேலை பார்க்கும் சூழலில் எதிலுமே மனம் ஒட்டவில்லை என்பதே உண்மை. எழுத நினைத்த எதுவும் எழுதும் எண்ணமே வரவில்லை என்பதும் உண்மை. உடல் நலமும் இரண்டு வாரங்களுக்கு மேல் சரியில்லாமல்தான் இருந்தது... அது கொரோனாவாலா அல்லது தட்பவெட்ப நிலை மாறுதலாலா என்பதை அறியாமலேயே சரியாகி இருக்கிறது. இந்தப் பிரச்சினை எனக்கு மட்டுமல்ல... அறையில் இருக்கும் ஐவருக்கும் இருந்தது... இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என்றாலும் எழுத மட்டும் எண்ணம் எழவேயில்லை... 

கறுப்பர் நகரம், நீலப்படம் என இரண்டு நாவல்கள் குறித்து எழுதும் ஆசையும் கறுப்பர் நகரத்தைக் காற்றுவெளி மின்னிதழுக்கு அனுப்பும் எண்ணமும் இருந்தது ஆனால் எதுவுமே நடக்கவில்லை. நகரும் நாட்கள் சம்பளக் குறைப்பு நிகழ்ந்திருக்கும் சூழலில் குடும்பச் செலவுகள், பள்ளிக் கட்டணங்கள் என எனக்கு முன்னே சஞ்சீவி மலையைத் தூக்கி வைத்துக் கொண்டு பயணிப்பதால் எதிலும் ஒட்டுதல் இல்லாமலேயே நகர்கிறது... வாழ்க்கை இப்படியேதான் நகருமா இல்லை மாறுதல்களோடு மகிழுமா என்பது தெரியாமலேயே நகர்கிறது.

கறுப்பி நாவல் குறித்து ஒரு வருடம் முன்னர் பகிர்ந்த பதிவை இன்று மீளாக சகோதரர் இராஜாராம் அவர்கள் பகிர்ந்து முடிக்காமல் வைத்திருக்கும் எல்லாவற்றையும் முடியுங்கள் என்றும் சொல்லியிருந்தார் முகநூலில்... கறுப்பி எழுதி ஓராண்டு ஆகிவிட்டதா என்ற ஆச்சர்யம் எனக்குள்... அப்படியானால் கலையாத கனவுகள், வேரும் விழுதுகளும் எல்லாம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியவை... நாளும் பொழுதும் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது... நான்தான் இன்னும் அதே இடத்தில் நிற்கிறேன் போல.

இராஜாராம் சொன்ன பிறகுதான் சமீபத்தில் எழுத ஆரம்பித்த நாவலை அப்படியே வைத்திருப்பதும் மனசுக்குள் வந்து சென்றது. இன்றாவது நான்காவது அத்தியாயத்தை எழுதி விட வேண்டும் என்ற எண்ணம் மனசுக்குள் துளிர்த்திருக்கிறது... அது இரவுக்குள் நிகழ்ந்தேறுமா என்பது தெரியவில்லை... நிகழ்வும் வாய்ப்பிருக்கிறது என்றும் தோன்றுகிறது. இந்த நாவலில் அழகர் கோவிலையும் ஒரு காதலையும் (கிட்டத்தட்ட எதிர்சேவையை விரித்து எழுதுவது போல்) சொல்லவே எண்ணியிருக்கிறேன். எப்பவும் போல் கதை பயணிக்கும் போது அதன் பாதையில் நானும் பயணிப்பேன் என்பதால் அதன் இறுதி வடிவம் சுபம் போடும்போது மட்டுமே தெரிய வரும்.

அந்த நாவலின் முதல் அத்தியாயம் உங்கள் பார்வைக்காக இங்கே வாசித்து இது நல்லவிதமாகப் பயணிக்குமா என்பதைச் சொல்லுங்கள். நன்றி.

--------------
அழகர் கோவில் - தமிழ் விக்கிப்பீடியா

விடிந்தும் விடியாமலும் இருந்த காலைப் பொழுதில் மேலூரில் வேன் நிறுத்தப்பட்டது. 

"காப்பி டீக் குடிச்சிட்டு தேங்காபழம் பூமாலயெல்லாம் வாங்கிட்டுப் போயிடலாம்ப்பா..." என்றபடி முன்பக்க இருக்கையில் இருந்து இறங்கினார் அழகர்சாமி. இளவயதில் ஆஜானுபாகுவாக இருந்திருப்பார் என்பதை அவரின் உயரமும் உடலும் காட்டியது... இப்போது வயசு அவரது உடலில் பல மாற்றத்தைச் செய்திருந்தது... கருத்த உடம்பில் தும்பைப்பூப் போல தலைமுடி வெள்ளைவெளேர் என இருந்தது. வெள்ளை மீசை சற்றே பெரிதாய்...

வேனிலிருந்து அவரது மனைவி பவானி, மகன்கள் ராஜு, கருப்பு... மருமகள்கள் சத்யா, சுந்தரி... சின்ன மாப்பிள்ளை அழகப்பன், மகள் கனகவல்லி, பேரன் பேத்திகள் என ஒவ்வொருவராய் இறங்கினார்கள். இறங்கியதும் சொல்லி வைத்தார் போல் எல்லாரும் கிட்டத்தட்ட எண்பது மைல் பயணம் கொடுத்த அயர்ச்சியைப் போக்கும் விதமாக உடம்பை முறுக்கி நெட்டி எடுத்தனர்.

"ஏம்ப்பா செலுவம்... நீயும் வா டீக்குடிச்சிட்டு வரலாம்..."

"இந்தா வாரேம்ப்பா..." என்றபடி டிரைவர் இருக்கையில் இருந்து இறங்கினான் செல்வம். அவருக்கு ஒரு வகையில் உறவுக்காரன்தான்... வீட்டுல நல்லது கெட்டது எதுனாலும் செல்வத்தோட வண்டியைத்தான் கூப்பிடுவார். மத்தவனுங்க மாதிரி இம்புட்டுக் கொடுன்னு கறாரா நிக்கமாட்டான்... ஒருவேளை நேரமானால் வண்டியை கண்மண் தெரியாமல் ஓட்டமாட்டான்... எல்லாத்துக்கும் மேலாக முகத்தில் இறுக்கதைத் தேக்கி வைத்திருக்க மாட்டான். எப்பவும் சிரித்த முகத்தோடு எல்லோருடனும் நல்லாப் பேசியபடி வருவான் என்பதால் அவனை மட்டுமே கூப்பிடுவார்.

டீக்கடையில் சூடாக வடை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

யாருக்கு வடை வேண்டுமெனக் கேட்டு வாங்கிக் கொடுத்தவர் தானும் ஒன்றைப் பிய்த்துப் போட்டுக் கொண்டு "நல்லாருக்கு செலுவம்... நீயும் ரெண்ட பிச்சிப் போட்டுட்டு டீக்குடி" என்றார். அவனோ "காலையில எதுக்குப்பா... எனக்கு வேணாம்... டீ மட்டும் போதும்..." என்றான்.

வேனில் ஏறிவிட்டால் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்வது வரை டீக்காபி என எதற்காகவும் நிறுத்தமாட்டான். வண்டியில் பயணிப்பவர்கள் நிறுத்தச் சொன்னால் மட்டுமே நிறுத்துவான் என்பதை வேலாயுதமும் அறிவார் என்பதால் 'டேய் சவாரி வந்திருக்கோமுன்னு நெனக்காத... நம்மதான் வந்திருக்கிறோம்... சும்மா சாப்பிடு...' என்றபடி வடையை எடுத்து நீட்டினார் அழகர்சாமி.

"வேணாம்ப்பா... வேணுமின்னா சாப்பிடப் போறே..." என்று சிரித்து மறுத்துவிட்டான்.

"நம்ம ஊர்லயே தேங்காபழம் வாங்கிட்டு வந்திருக்கலாம்... இங்க யான வெல சொல்லுவானுங்க..." என்றான் நடுவுலான் ராஜூ... அவனின் முகத்தில் சிரிப்பில்லை.

"ஆமா... நம்மூருல பூவுக்கு ஒரு வெல சொல்லுவான்... இங்க நூறு ரூவாய்க்கி வாங்குற மால அங்க நூத்தியெம்பதாயிருக்கும்... கூட்டிக் கழிச்சிப் பார்த்தா இங்க வாங்குறதுதான் ஒரு வகயில லாபம்... " மகனுக்குப் பதில் சொல்வது போல ஆரம்பித்து மாப்பிள்ளையைப் பார்த்து "இல்லயா தம்பி..." என்றார்.

"ஆமா மாமா... இங்க கொறச்சித்தான் இருக்கும்..."

"ஆமாமா... கொறயுதாம் கொறயுது... அட ஏம் மச்சான்... நீங்க வேற...  எல்லாம் ஒண்ணாத்தான் இருக்கும்... இங்க வாங்குறதுக்கு ஒரு கத சொல்றாக... அம்புட்டுத்தான்..." முணங்கினான் ராஜூ.

"இங்க கத்துறவுக... அங்க வாங்கியிருக்கலாமுல்ல... நானா வேணாமுன்னேன்..." சூடானார்.

"இப்ப என்ன... இங்கயும் ஆரம்பிச்சிட்டீங்களா... போற எடம்பூராம் அப்பனுக்கும் மகனுக்கும் பஞ்சாயத்துத்தான்... டேய் நீ சும்மாயிருடா... அங்கிட்டுப் போ... அவருல்ல வாங்கிட்டு வரப்போறாரு... போ..." என மகனை அடக்கினாள் பவானி.

 "ஆமா... அவருக்கு எப்பவும் சப்பக்கட்டு கட்டிக்கிட்டே இரு..." என்றபடி நகர்ந்தான் ராஜூ

அழகர்சாமி வாய்க்குள் எதையோ முணங்கியபடி மொத்தம் எவ்வளவுன்னு கேட்டு அவரும் ஒரு முறை கணக்குப் பார்த்து சட்டையைத் தூக்கி இடுப்பில் கட்டியிருந்த பச்சை இடைவாரின் ஜிப்பைத் திறந்து பணத்தை எடுத்து ஒரு ஆட்டு ஆட்டிவிட்டு கல்லாவில் இருந்தவரிடம் கொடுத்துச் சில்லறை வாங்கிக் கொண்டு தோளில் கிடந்த சின்னத் தேங்காய்பூத் துண்டால் மீசையைத் துடைத்து விட்டுக் கொண்டார் ஒரு செருமலுடன்.

"எல்லாரும் வண்டியில இருங்க... மாப்ள நீங்க எல்லாரயும் வேனுக்கு கூட்டிப் போங்க... இந்தப் பயலுக அங்கிட்டு இங்கிட்டு ஓடாமப் பாத்துக்கங்க... நா போயி தேங்காபழம் வாங்கிட்டு வாறேன்... செலுவம் நீ வாப்பா..." என்றபடி இடது பக்க வேஷ்டி முனையைக் கையில் பிடித்துக் கொண்டு வேகமாக பூக்கடைகளை நோக்கி நடந்தார்.

செல்வம் அவர் பின்னால் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

காலை நேர மேலூரில் அப்போதுதான் கடைகள் திறக்கப்பட்டுக் கொண்டிருந்தன. உள்ளூர்ப் பேருந்துகள் தவிர வெளியூரில் இருந்து வரும் பேருந்துகள் எல்லாம் மெயின் ரோட்டிலேயே நின்று ஆட்களை இறக்கவும் ஏற்றவும் செய்து கொண்டிருந்தன. அருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலில் இருந்து 'ஒன்பது கோளும் ஒன்றாய்க் காண பிள்ளையார்பட்டி வாருங்கள்' என்ற பாடல் மெல்ல ஒலித்துக் கொண்டிருந்தது. பேருந்து நிலையத்துக்கு அருகில் இருக்கும் டீக்கடையில் 'முருகனைக் கூப்பிட்டால்' எனப் பாடிக் கொண்டிருந்தது.

மகன்களைக் கூட்டிக் கொண்டு போனால் மறுபடியும் ஏதாவது சொல்வார்கள்... இல்லையேல் வாய்க்குள்ளே முணங்குவார்கள்... அதெல்லாம் அவருக்குப் பிடிக்காது என்பதால் எதுவும் சொல்லாத செல்வம் போன்றோரே எப்போதும் அவரின் தேர்வாக இருக்கும்.

"ஏம்ப்பா நேத்தே மார்க்கெட்டுல வாங்கி வச்சிருக்கலாம்ல்ல... நம்ம குணாளங்கிட்ட பெரிய பெரிய தேங்காயா இருந்துச்சு... இருபது ரூபாதான் சொன்னான்... மொத்தமா வாங்கினா கொறச்சுக் குடுத்திருப்பான்..."

"வாங்கியிருக்கலாம்தான்... எனக்கிட்ட அவன் அதிகமாக் கேக்க மாட்டாந்தான்... நேத்து எனக்கு  வய வேல இருந்துச்சு... இவனுக எங்க போறேங்கிறானுக... எல்லாத்துக்கும் நாந்தான் போகணும்... பேச்சு மட்டும் பெருசாப் பேசுவானுக... ஒரு வேலக்கி லாயக்கில்ல... எப்புடித்தான் குடும்பத்தை ஓட்டப் போறானுங்களோ தெரியல..." கோபமாய்ப் பேசினார்.

"விடுங்க.... அண்ணனுங்க எதாச்சும் பேசுங்க... அதெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு..."

"ம்... நா எங்கடாம்பி பெருசா எடுத்துக்கிறேன்... உனக்குத் தெரியாதா என்ன... சரி விடு... என்ன வருத்தம்ன்னா நேத்துப் பூராம் நடுவுலான் வீட்டுலதான் இருந்தான்... என்ன வாங்கணும் ஏது வாங்கணும்ன்னு ஒரு வார்த்த கேக்கல... இப்ப இங்க வந்து குதிக்கிறாரு மயிராண்டி..."

"விடுங்கப்பா... தேங்கா கூட கண்ணாடியார் வீட்டுல சொல்லி வாங்கியிருக்கலாம்... எல்லாரும் அங்கதானே இப்ப வாங்குறாக... சொந்தபந்தம்ன்னா பாதிக்குபாதி கொறச்சிக் குடுப்பாராமுல்ல..."

"வாங்கலாம்தான்... கொறச்சித்தான் கொடுப்பான்... மாயாவதாரனோட உண்டியல் காசுலதானே வாங்குறோம்... பாவப்பட்டவனுங்க சாப்பிட்டுப் போகட்டும்... மிஞ்சிமிஞ்சிப் போனா பத்து இருவது கூடுமா... போகட்டுமே... மிச்சமிருந்தா உண்டியல்லதான் போடணும்... எவனோ திங்கப் போறத இந்த அன்னாடங் காச்சிக  திங்கட்டும் போ..." என்றவர் பூவோடு தேங்காய் பழமும் விற்ற அந்த வயதான பெண்மணியின் கடையில் நின்றார்.

'வாங்கப்பு... என்ன வேணும்...?" என்றாள் சிரித்தபடி.

"ஏத்தா... தேங்கா எம்புட்டு..."

"முப்பது ரூபாய்ப்பு..."

"என்னாத்தா குதிரவெல சொல்லுறவ... எனக்கு ஏழெட்டுக்காயி வேணும்... வெலயப் பாத்துச் சொல்லு... வாங்கிக்கிறே..."

"காலயில உங்ககிட்ட கூடச் சொல்லுவேனாக்கும்... அப்புடிச் சொன்னா செட்டிநாட்டுக்காரவுக கூடக் குடுத்துட்டுப் போயிருவியளாக்கும்..." சிரித்தாள்.

"அட... செட்டிநாட்டுக்காரன்னு சரியாக் கண்டு பிடிச்சிட்டே... அனுபவசாலிதான் போ..."

"உங்க பேச்சுத் தெரியாதாக்கும்... இந்தப் பக்கம் வாரவுக வேற எங்கயிருந்து வரப்போறாவ... அழகரு கோயிலுக்குப் போறியளாக்கும்... மொத யாவாரம்... வந்துட்டு வாங்காமப் போனா நல்லதில்ல... அழகு மலயானுக்குத்தானே ஒரு அஞ்சுரூவா கொறச்சு காய்க்கு இருவத்தஞ்சி கொடுங்க..."

"சரி... சரி... நீயே நல்ல காயாப் பாத்து எடுத்தா..."

"எத்தனப்பு..?"

"ஒரு நாலு காயி அர்ச்சனைக்கு கொடு...."

"என்னப்பு ஏழெட்டுன்னு சொல்லிப் பேரம் பேசுனீங்க... இப்ப நாலு போதுங்கிறீங்க.."

"இருத்தா... அர்ச்சனை நாலு போதும்... அப்புறம் செதறுகாய் ஒரு ஆறு குடு.. அது இதுல வேணாம்... அந்த அந்தச் சின்னக்காயில கொடு... ஆமா அது எம்புட்டு..?"

"பாஞ்சிப்பு..."

"பதினஞ்சா... நல்லாத்தேன்... பத்துன்னு போடு..."

"கட்டாதுப்பு... ரெண்டு ரூவா சேத்து பன்னெண்டு கொடுங்க..."

"ம்... செரி எடு... அப்புடியே வாழப்பழம் காவெட்டா  ஒரு சீப்புக் கொடு..."

"இது சீப்பு எம்பது... அது நூறு... எது வேணுஞ் சொல்லுங்கப்பு..."

"அட அத எம்பதுன்னு போடு..." என நூறு ரூபாய் சீப்பைக் காட்டினார்.

"இல்லப்பு... கட்டாது..."

"நல்லாத்தேன் எதக்கேட்டாலும் கட்டாது கட்டாதுன்னு.. செரி உனக்கும் வேணாம் எனக்கும் வேணாம்... தொன்னூறுன்னு கொடு..."

"எல்லாத்தயும் அடி மாட்டு வெலக்கிக் கேக்குறிய... செரி... மொத யாவாரம்... வேறென்ன வேணும்...?"

"அப்புறம் அந்தா... அந்த மால எம்புட்டு...?"

"நூத்தம்பது விக்கணும்... நூத்தி நாப்பது கொடுங்க..."

"நூறுன்னு கொடுத்தா... எல்லாமும் மொத்தமா இங்க வாங்கலாம்ன்னு பாத்தா நீ கடக்கிம் சேத்துல்ல வெல சொல்றே..." சிரித்தார்.

"என்னப்பு ஒரேயடியா அம்பது கொறக்கிறீய... பத்து ரூவா கொறக்கலாம்... அதுக்கு மேல கொறச்சா எனக்கு என்ன லாபமிருக்கும் சொல்லுங்க... செரி... நூத்தி முப்பது கொடுங்க..."

"சரி... சரி... நூத்தி இருவது... சின்ன மாலயில ரெண்டு எடுத்தா..."

"அது ஒண்ணு நாப்பதுல கொறயாது... ஆமா சொல்லிப்புட்டேன்..."

"சரி... கதம்பம் மொழம் என்னன்னு..."

"பாஞ்சுரூவா... பன்னெண்டுன்னு தாறேன்..."

"ம்... அஞ்சு மொழம் வெட்டு... மல்லியப்பூ..?"

"நூறு நாப்பது..."

"ஆத்தாடி ஆத்தோ... எங்கூருல முப்பதுதானே..."

"நேத்துக் காலயில இங்க அறுவதுக்கு வித்துச்சு... இப்ப அம்பதுக்கு விக்கணும்... உங்களுக்கு நாங்கொறச்சித்தான் சொல்லியிருக்கேன்...."

"சரி... சரி... அளவு சரியா இருக்கணும்... நல்லா எண்ணி இரணூறு கொடு...."

"ம்... எண்ணிக்கை கொறயாதுப்பு..."

எல்லாவற்றையும் எடுத்துக் கொடுக்க, கையில் வைத்திருந்த கட்டைப் பையில் வாங்கி ஒண்ணை செல்வத்திடம் கொடுத்துவிட்டு மற்றதை தன் கையில் வைத்துக் கொண்டு, "எம்புட்டாச்சு..." என்றபடி இடைவாரில் இருந்து ஐநூறை எடுத்து நீட்டினார்.

அதை வாங்கிக் கையில் வைத்துக் கொண்டு மனக்கணக்காய் கூட்ட ஆரம்பித்தாள்.

"நூத்தியிருவத்தஞ்சும் ஒரு தொன்னூறும்... எரநூத்திப் பதினஞ்சி... ஒரு அறுவதக் கூட்டுனா எரநூத்தி எழுவத்தஞ்சி... மாலக்கி ஒரு நூத்தியிருவது... அப்புறம் சின்ன மாலக்கி எம்பது... அப்புறம் ஒரு அறுவது... அதுக்கொரு எம்பது ஆக மொத்தம் அறநூத்தி பதினஞ்சிப்பூ... நீங்கதான் நூத்தி பதினஞ்சி கொடுக்கணும்..."

"இந்தா ரவுண்டா அறநூறு வச்சிக்க...." என நூறுரூபாயைக் கொடுத்தார்.

"நல்லாத்தேம்ப்பு... எல்லாத்துலயும் வெலயக் கொறச்சி வாங்கிட்டு... இப்ப பாஞ்சு ரூவாயவும் கொறச்சா எப்படிப்பு... மத்த கடயில இந்த மால நூத்தம்பதுக்கு கொறச்சி இல்ல... காலயில வந்த மொத யாவாரம் விட்டுறக்கூடாதுன்னு கொறச்சிக் கொடுத்தேன்... ஒரு பத்து ரூவாயாச்சும் கொடுங்க..." என்றாள்.

"விடமாட்டே போல..." என்றபடி இடைவாரில் துழாவி பத்து ரூபாய்க் காயினை எடுத்துக் கொடுத்தார்.

"நோட்டாக் கொடுங்கப்பு... இது செல்லாது..."

"செல்லாதா... ஆரு சொன்னது... நம்மளா ஒரு முடிவெடுத்துடுறோம்... நேத்து செவசங்கயில ஒரு டீக்கடயிலதான் வாங்குனேன்...."

"யாரும் வாங்க மாட்டேங்கிறாங்கப்பு... நா என்ன செய்ய..." உதடு பிரியச் சிரித்தாள். வெற்றிலைக் கறை படியாத பல்வரிசை அழகாக இருந்தது.

"ம்... இந்தா..." என நோட்டைக் கொடுத்து காயினை வாங்கிக் கொண்டவர், "செரி வாரேந்தா..." என்றார்.

"செரி வாங்கப்பு..." மீண்டும் சிரித்தவள் மல்லிகைப்பூ எவ்வளவும்மா எனக் கேட்ட பெண்ணிடம் நூறு அம்பது என்றாள்.

"அந்தப் பையையும் கொடுங்கப்பா..." என்றான் செல்வம்.

"இருக்கட்டும் வா..."

"பாவம் தின்னுட்டுப் போறாங்கன்னு சொன்னீங்க... எப்பவும் போல பேரம் பேசுறீக..." சிரித்தான் செல்வம்.

"செட்டிநாட்டுக்காரனுங்கவும் பத்து அஞ்ச ஏத்தி வச்சித்தான் வெல சொல்லுவானுங்க... ஏன்னா ஆச்சிமாரு சொன்னதுல பாதி கேட்டு... அதுல இருந்து கொஞ்சங் கொஞ்சமா ஏத்தி எப்படியும் காவாசி கொறச்சித்தான் கொடுப்பாக... அதனால நமக்கிட்ட எங்கயும் வெல கூடத்தான் சொல்லுவாக... அதான் கொறச்சேன்... மத்தபடி தேங்காயெல்லாம் நல்லகாயிதான்... மாலயும் அம்சமா இருக்குல்ல... கொடுக்க வேண்டியதுக்கு கொடுத்தனா இல்லயா..."

"ம்... அதுவும் சரிதான்..." என்ற செல்வம் அதற்கு மேல் ஒன்றும் சொல்லவில்லை. 

"போ ஒண்ணுக்குப் பொயிட்டு வாரேன்..." என கையிலிருந்த பைய செல்வத்திடம் கொடுத்துவிட்டு அசுத்தம் செய்யாதீர்கள் என எழுதியிருந்த சுவரோரமாய் பலர் ஒதுங்கியிருந்த ஈரத்தை மெல்லக் கடந்து வேஷ்டி தூக்கி அமர்ந்து சுவரின் பக்கவாட்டில் பார்த்தார்.

அங்கே ராஜகண்ணப்பன் திமுகவில் இணையும் விழாவுக்கான போஸ்டரில் மாடு தின்றது போக மீதமிருக்க அதனருகே எடப்பாடியார் அழைக்கிறார் என்ற போஸ்டர் புதிதாய் ஒட்டப்பட்டிருந்தது. 'ஆரை அழைக்கிறார்... மக்களையா... இல்ல கண்ணப்பரையா...?' என மனசுக்குள் நினைத்தவர் சிரித்துக் கொண்டார்.

சின்ன மருமகள் சுந்தரியிடம் "மாலய யாரும் மிதிச்சிறாம வச்சிங்களாத்தா..?" எனக்  கேட்டவர் பதிலை எதிர்பார்க்காமல், "செல்வம் எங்கே..?" என்றார்.

"அங்கிட்டுத்தான் போச்சு... வரட்டும்..." என்றாள் சுந்தரி.

அவரின் குரல் கேட்டு வேகவேகமாக வந்தான் செல்வம்... சிகரெட் வாடையும் கூடவே வந்தது.

"போலாமா..?" என்றவர் இடைவாரில் இருந்த பொடி மட்டையை எடுத்துப் பிரித்து அதிலிருந்து கொஞ்சம் பொடியைக் கிள்ளி எடுத்து மூக்கில் வைத்துச் சர்ரென உறிஞ்சிவிட்டு, 'ம்க்க்கும்..' என்றபடி துண்டால் மூக்கைத் துடைத்துக் கொண்டு வேனில் ஏறி அமர்ந்தார்.

செல்வம் வண்டியை எடுக்க, "சித்தப்பா சாமிப்பாட்டுப் போதும் புதுப் பாட்டாப் போடுங்க" என்றான் சின்னவன் கருப்புசாமியின் மகன் பிரதீப்.

செல்வம் சிரித்தபடி சீடியை மாற்றினான்.

'மனமெங்கும் மாய ஊஞ்சல்...' என்ற பாடல் வேனுக்குள் நிரம்பி வழிய, 'அய்யே விஜய் பாட்டுப் போடுங்கன்னா இதெல்லாம் ஒரு பாட்டுன்னு... போங்க சித்தப்பா..." சிணுங்கினான் பிரதீப்.

"இருடா அடுத்து வரும்..." என்றபடி வண்டியைச் செலுத்தினான் செல்வம்.

பசுமையான வயல்களும் கல்வி நிறுவனங்களும் நிறைந்திருக்க அவற்றின் ஊடே வளைந்து வளைந்து செல்லும் பாதையில் வேன் கருதுக்கட்டு தூக்கிக் கொண்டு நடக்கும் பெண்ணென மெல்ல வளைந்து வளைந்து பயணித்துக் கொண்டிருந்தது.

"சின்ன வயசுல நாங்க வண்டிகட்டிப் போறப்ப இந்தப் பக்கமெல்லாம் ஒரே வயக்காடுதான்... இன்னக்கி பெரிய பெரிய கட்டடங்களாகிப் போச்சு பாரு... அதுவும் பணம் காக்கிற பள்ளிக்கொடங்களும் கல்லூரியிந்தான் அதிகமிருக்கு... ம்... அங்க பாரு... அந்தப் பள்ளிக்கொடத்துச் சொவரு பாக்க ஜெயிலு மாரியே இருக்கு பாரு..." எனச் செல்வத்திடம் சொன்னார் அழகர்சாமி.

"ம்..." என்றவன் வண்டியை ஓட்டுவதில் கவனம் செலுத்தினான்.

வேன் அழகர் கோவிலை நோக்கி விரைந்து கொண்டிருந்தது.

-------------

கதையின் ஆரம்பம் நன்றாக இருக்கிறதா..? மூன்று அத்தியாயங்கள் வரை எழுதியிருக்கிறேன்... விரித்து எழுதும் போது நிறைய எழுத வேண்டியிருக்கும் என்றே தோன்றுகிறது... எழுத ஆரம்பித்ததை தொடர்ந்து எழுதி முடிக்கும் போது ஒரு நிறைவான நாவலாக வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்க்கலாம்... நம்பிக்கைதானே வாழ்க்கை... இல்லையா...?
-'பரிவை' சே.குமார்.

9 கருத்துகள்:

  1. காட்சிகள் கண்ணில் தெரிவது போன்று - ஆரம்பமே அருமையாக உள்ளது குமார்... தொடருங்கள்...

    அப்புறம் உங்களின் கோரிக்கையை (முகநூல்) செயல்படுத்த முடியவில்லை...கோபிக்க வேண்டாம்...

    பதிலளிநீக்கு
  2. நன்றாய் வந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான ஆரம்பம் குமார்.

    உடல் நலம் - கவனித்துக் கொள்ளுங்கள் குமார்.

    பதிலளிநீக்கு
  4. அழகர் கோவிலை நோக்கிய பயணம் பெரியவரின் பார்வையில் விரிந்து செல்கிறது.

    தொடர்ந்து இனிதாக பயணிப்போம்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல ஆரம்பம். தொடருங்கள். உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. மிக அருமையா சுவாரசியமா இருக்கு குமார். காட்சிகள் கண்முன்னே விரியுது. இது திருப்பத்தூரா, இல்ல மேலூரான்னு யோசிச்சிட்டு இருக்கேன் :)

    பதிலளிநீக்கு
  7. நன்றாக ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  8. குமார் உடம்பு பார்த்துக்கோங்க.

    ரொம்ப நல்லா வந்திருக்கு. அப்படியே தொடர்ந்து எழுதி முடிச்சுடுங்க. வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  9. சிறப்பான முயற்சி
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி