'ஆமா உங்க மக பேர் என்ன சார்..?'
'ஹெலன்...' சொல்லும் போதே தந்தையின் முகத்தில் பெருமிதம் பொங்கும்.
ஆம்... படத்தின் பெயரே ஹெலன்தான்.
சமீபத்தில் பார்த்த மலையாளப் படங்களான டிரைவிங் லைசென்ஸ், ட்ரான்ஸ், அஞ்சாம் பாதிரா, கெட்டியோலான்னு என்டே மலாஹா, சோல, பிரணய மீனுக்களுட காதல் போன்ற படங்களைப் பற்றி எழுதும் எண்ணம் அதிகமிருக்கு... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் கவந்த படங்கள்... இவற்றை எல்லாம் முந்திக் கொண்டது நேற்று பார்த்த ஹெலன்.
இந்தப் படம் வந்த போதே பார்க்கச் சொன்னார்கள்... இணையப் பிரச்சினையால் அப்போது பார்க்க முடியவில்லை... நேற்று இரவும் கூட இணையம் இழு.. இழு... என இழுத்த போதும் பார்த்து முடித்தேன்.
ஹெலன்... அம்மா இல்லாமல் எல்.ஜ.சி. ஏஜெண்டான அப்பாவின் அரவணைப்பில் அவரின் அன்பில் வாழ்கிறாள். அப்பா மீது அவ்வளவு பாசம்... சிகரெட் பிடிக்கக் கூடாதென தடுப்பது முதல் அவருடன் சின்னச் சின்னதாய்ச் செய்யும் சேட்டைகள் என அப்பாவும் பெண்ணுமாய் நகரும் வாழ்க்கை.
B.Sc நர்சிங் முடித்துவிட்டு கனடா சென்று சம்பாதித்து கடனையெல்லாம் அடைக்க வேண்டும் என IELTS-ன் ஆங்கிலப் பயிற்சிக்குச் செல்லும் ஹெலன், மாலை நேரத்தில் பகுதி நேர வேலையாக THE CHICKEN HUB என்னும் பொறித்த கோழி விற்கும் கடைக்குச் செல்கிறாள். அவள் வெளிநாடு செல்வது அப்பாவான லால்க்கு பிடிக்கவில்லை.
வீட்டுக்குத் தெரியாமல் காதல் என்பது இன்று எட்டாம் ஒன்பதாம் வகுப்பிலேயே ஆரம்பித்து விடுகிறது... நாயகியோ நர்ஸிங் முடித்தவள், காதல் இல்லாமல் எப்படி..? அவளுக்கும் வீட்டுக்குத் தெரியாமல் காதல் ஒன்று உண்டு. அவனுக்கு வேலை கிடைத்த இரவில் அவனுடன் வண்டியில் பயணம்... போலீஸ் பிடித்தல்... அவளுக்குத் தெரியாமல் அவன் குடித்திருத்தல்... காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லுதல்... அப்பாவுக்குப் போன்... காவல் நிலையம் வந்து மகளை மீட்டுச் செல்லும் அப்பா, அதன் பின்னான இரு நாட்கள் மகளுடன் பேசாதிருத்தல்... அப்பா பேசாததால் வீட்டுக்குப் போக யோசிக்கும் மகள் என நகரும் கதை மெல்ல நம்மை ஈர்த்துக் கொள்கிறது.
மகளைக் காணோம் என்றதும் காதலித்தவனுடன் ஓடிவிட்டாள் என்று நினைக்கும் தந்தை, பக்கத்து வீட்டு நண்பருடன் தேடி அலைந்து, ஒன்றும் புரியாத நிலையில் காவல் நிலையம் செல்கிறார். அங்கு இருக்கும் எஸ்.ஐ.தான் இரு நாட்களுக்கு முன் இரவில் தண்ணி அடித்திருக்கும் காதலனுடன் பைக்கில் வந்த போது பிடித்தவர் என்பதால் அவள் அவனுடன் போயிருப்பாள்... முதலில் அவனை விசாரித்து விட்டு வாருங்கள் என்று சொல்கிறார். பையனின் வீட்டுக்குச் சென்று விசாரித்தால் அன்றிரவு அவன் சென்னை போன விபரம் தெரிய வர, மகள் அவனுடன் ஓடிவிட்டாள் என்று உறுதி செய்து விடுகிறார். தன்னை ஏமாற்றி விட்டாளே என வேதனைப்படுகிறார்.
அந்தப் பையனோ அவளைத் தேடி அவள் வீட்டுக்கே வருகிறான்... மகளை மறைத்து வைத்து விட்டு இங்கே வந்து நாடகம் ஆடுகிறான் என அவனை அடிக்க, அவன் அவளைப் பார்க்கவேயில்லை... அவள் அப்படி ஓடிவரும் பெண்ணும் அல்ல என்கிறான்... அப்படியானால் அவள் எங்கே..? யார் என்ன செய்தார்...? என்ற பயத்துடன் தேடுதல் வேட்டை நடக்க, மீண்டும் காவல் நிலையம்... இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் காதலனை அடித்துத் துன்புறுத்தும், தங்களை அலைய விட்டு வேடிக்கை பார்க்கும் எஸ்.ஐ.யுடன் சிறிய கைகலப்பு, அதன் பின் பெரிய அதிகாரி உதவிக்கு வருகிறார். அவருடன் சேர்ந்து மீண்டும் தேடுதல் வேட்டை.
கடையில் நடக்கும் ஒரு சிறிய தவறினால் சிக்கன்களைச் சேமித்து வைக்கும் குளிரூட்டப்பட்ட அறைக்குள் அவள் இருப்பது தெரியாமல் முதலாளி கடையைப் பூட்டிச் செல்ல -18 டிகிரி குளிர் நிறைந்த அறைக்குள் மாட்டிக் கொள்ளும் ஹெலன், அந்த அறைக்குள் சந்திக்கும் பிரச்சினைகள் ஒருபுறம்... மகளைத் தேடும் அப்பனும் காதலனும் என மறுபுறமும் என இரண்டு மணி நேரப்படம் விறுவிறுப்பாய் நகர்கிறது.
குளிர் பொறுக்க முடியாமல் கை கால்களுக்கு கவரிட்டு மூடுவது, உள்ளே சிக்கனைத் தின்ன வரும் எலிக்குட்டி மீது பாச மழை பொழிவது, குளிர் பொறுக்காமல் மின்விசிறியை அடித்து உடைக்க எடுக்கும் முயற்சிகள்... அதனால் காலில் அடிபடுதல், குளிரின் காரணமாக ஐஸ்சில் ஒட்டிக் கொள்ளும் கையை எடுக்கும் போது தோல் பிய்த்துக் கொள்ளுதல், முகமெல்லாம் சிவந்து போக அந்த இரவைத் திக், திக்கென நகர்த்துகிறாள் ஹெலன்.
படத்தின் ஆரம்பத்தில் எறும்பொன்று ப்ரிட்ஜின் ப்ரீசர் உள்ளே மாட்டிக் கொள்வதாய்க் காட்டுவார்கள்... அதுதான் படத்தின் கதை... சிக்கனைத் திங்க வரும் எலிக்குட்டி, அந்தக் குளிரைத் தாங்குவது... தின்று விட்டு ஓடாமல் அவளுடன் ஒட்டிக் கொள்வதாலேயே உயிரை விடுவது... என சின்னதாய் ஒரு வலி நிறைந்த கதையும் அந்த அறைக்குள் நிறைந்திருக்கிறது.
அவளைக் கண்டுபிடித்தார்களா..? எப்படி அவள் இருக்கும் இடத்தை அடைந்தார்கள்..? உயிருடன் மீட்டார்களா..? என்பதை விறுவிறுப்பாகச் சொல்லியிருக்கிறார் புதுமுக இயக்குநரான மதுக்குட்டி சேவியர்.
ஹெலனாக நடித்திருக்கும் அன்னா பென், ஆரம்பத்தில் துறுதுறுவென வருகிறார்...ஆர்ப்பாட்டமில்லாத அழகியாய்த் தெரிகிறார். அறைக்குள் மாட்டிக் கொண்டபின் ஒரு பெண் படும் பாட்டை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார். அபாரமான நடிப்பு. இவர் கும்பளங்கி நைட்ஸ் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான விருதை சிபிசி சினி அவார்ட்ஸூம் சிறந்த புது முக நடிக்கக்கான விருதை ஆசியாநெட் பிலிம் அவார்ஸூம் இவருக்கு வழங்கியிருக்கின்றன. அந்த விருதுகள் கிடைக்க வேண்டிய பெண்தான் இவர் என்பதி இதில் நிரூபித்திருக்கிறார். தானே சுமக்க வேண்டிய கதை என்பதால் அடித்து ஆடியிருக்கிறார்.
ஹலனின் அப்பா மதத்தில் ஊறிய ஒரு கிறிஸ்துவன், மகளுக்குப் பிற மதத்தில் நட்புகள் இருப்பதைக் கூட விரும்பமாட்டார்... ஆனால் மகள் காதலிப்பது அஸார் என்ற முஸ்லீம் இளைஞனை. மகளைத் தேடி அலையும் இரவில் எங்குமே அவள் இல்லை என்ற நிலையில், அவள் அடிக்கடி பேசும் தோழியின் நம்பரில் முயற்சித்துப் பார்க்கலாம் என நண்பரிடம் சொல்லும் போது பின்னிருக்கையில் அமர்ந்திருக்கும் அஸார் அந்த நம்பரில் முயற்சிக்க வேண்டாம்... அது நாந்தான் என்று சொல்வார். பெரும்பாலும் விடலைக் காதல்களில் செல்போன் நம்பர்கள் எல்லாம் இப்படித்தான் சேமித்து வைக்கப்படுகின்றன இல்லையா..?
காதலன் அஸாராக வரும் நோபுல் பாபு தாமஸ் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தை வினீத் ஸ்ரீனிவாசன் தாயாரித்து உள்ளார். படத்திலும் இரண்டு காட்சியில் வருகிறார். படத்துக்கான இசை ஷான் ரகுமான். பின்னணியே நம்மையும் ஹெலனுக்கு என்னாகுமோ என ஏங்க வைக்கிறது.
வாட்ச்மேனைக் கவர்ந்தது போல் ஹெலன் உங்களையும் கவர்வாள்.
கண்டிப்பாக ஒரு நல்ல படத்தைப் பார்த்த திருப்தி கிடைக்கும்.
-'பரிவை' சே.குமார்.
அவர்களின் அனைத்து படங்களும் சிறப்பு தான்...
பதிலளிநீக்குநல்லதொரு அறிமுகம். இணையத்தில் கிடைத்தால், நேரமும் கிடைத்தால் பார்க்கிறேன் குமார்.
பதிலளிநீக்குஆமாம் குமார் இந்தப் படமும் நல்லாருக்குனு கேள்விப்பட்டேன்.
பதிலளிநீக்குமலையாளத்துல நல்லா எடுக்கறாங்க..
கீதா