சனி, 28 மார்ச், 2020

மனசு பேசுகிறது : எழுதும் மனநிலையா இருக்கிறது..?

ரண்டு நாட்கள் இரவு நேர ஊரடங்கு என்றாலும் பகலிலும் வெளியில் செல்ல மனமில்லை... அறையில்தான்... பழனி ஐயா கொடுத்த வண்ணதாசனின் ஒரு சிறு இசை வாசித்து முடித்தாச்சு, ட்ரைவிங் லைசென்ஸ் என்னும் மலையாளப் படம், ஒரு சிறுகதை,  ஆரம்பித்திருக்கும் புதிய நாவலில் அடுத்த பாகம் என ஏதாவது ஒன்றை எழுதலாம் என்ற எண்ணம் மனதளவிலேயே நிற்கிறது. நிகழ்வுகளின் தீவிரம் இன்னும் கூடுமோ என்ற அச்சமே மனமெல்லாம் நிறைந்து நிற்கிறது.

சரி ஏதாவது எழுதலாமென உட்கார்ந்தால் கொரோனா விபரங்களைப் பார்க்கத் தூண்டுகிறது... அந்தத் தளத்துக்குள் போனால் பாதிப்பும் இறப்பும் நொடிக்கு நொடி ஏறிக் கொண்டே போகிறது. மனமெல்லாம் ஊரைச் சுற்றியே வருகிறது... பயணங்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் என்ன செய்ய முடியும்... ஒரு நண்பர் தாயார் இறந்ததுக்குப் போக முடியாத சூழலில் அழுது கொண்டே இருக்கிறார் என நண்பர் ஒருவர் வேதனையைப் பகிர்ந்திருந்தார். இதுதான் இன்றைய நிலை... இது எப்போது மாறும் என்பது யாருக்கும் தெரியாது. வெளிநாட்டு வாழ்க்கை இந்த நேரத்தில் வேதனையை மட்டுமே கொடுக்கிறது... இது வரமல்ல.... சாபம்.

என்ன..? ஏது...? ஏன்..? எப்படி..? எதற்கு...? எனக்கேட்டு வீதியில் திரியும் பக்கிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்து சிகிச்சைக்கும் தனிமைப்படுத்துதலுக்கும் உடன்பட மாட்டோம் என்று சொல்லும் படித்த அறிவிலிகளுக்கும், கொரோனா எல்லாம் இல்லை... தேவையில்லாத ஊரடங்கு உத்தரவு என அரசியல் பண்ணும் மனிதர்களுக்கும் மத்தியில் இந்தியாவில் எப்படி மூன்றாம் கட்டத்தைக் கடக்கப் போகிறார்கள் என்ற பயம் நெஞ்சை அழுத்துகிறது. காவல்துறைக்கு ஒத்துப் போகமாட்டோம் என நிற்பவர்களை எந்த வகையில் சேர்ப்பது..?

மத்திய, மாநில அரசுகளைப் பிடிக்கவில்லை என்றாலும் இது உயிர், அதுவும் உங்கள் உயிருடன் மற்றவர்கள் உயிரும் சம்பந்தப்பட்டது என்பதை உணர்ந்து அரசு சொல்வதைக் கேட்டு அதன்படி நடத்தலே சிறந்தது.  வரும் நாட்களில் ஆளும் அரசுக்கு எதிராக உங்கள் எதிர்ப்பைக் காட்டவேணும் உயிருடன் இருக்க வேண்டும் என்பதை உணருங்கள். கொஞ்சநாள் வீட்டிலிருந்து விட்டு உயிருடன் வீதியில் இறங்குங்கள்... போராடுங்கள்... கொடி பிடியுங்கள். யாரை வேண்டுமானாலும் கூட்டி வந்து ஆட்டம் போடுங்கள்... யாரும் கேட்கப் போவதில்லை... உங்களின் உரிமைக்குரல் உண்மைக்காக ஒலிக்கும் பட்சத்தில் பலர் உங்களுக்குத் தோள் கொடுப்பார்கள் என்பதை மறக்காதீர்கள்.

இந்த இருபத்தி ஒரு நாள் நம் உயிருக்காக, மற்றவர் உயிருக்காக நீங்களே உங்களுக்கு வீட்டுக்குள் சிறை அமைத்துக் கொள்ளுங்கள். அமெரிக்காவில் அடித்து ஆடும் கொரோனாவைப் பார்க்கும் போது நம் இந்தியாவில் அதன் தாக்குதல் இன்னும் தீவிரமானால் நம் நிலமை என்னாகும் என்பதை யோசித்துப் பாருங்கள். வசதிகள் உள்ள நாடுகளே வயதானவர்களுக்கு மருத்துவம் பார்க்கமாட்டோம் என்று சொல்லி. சாக விட்டு அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள்... நம் நாட்டிலும் கொத்துக் கொத்தாய் அள்ளிக் கொட்ட வேண்டுமா..? உயிர் என்பது போகப் போகிறது என்று தெரிந்த சாக வேண்டிய நிலை எவ்வளவு கொடுமையானது... அது நமக்கும் வர வேண்டுமா..? பாதுகாப்பாய் இருப்போம்... கொரோனாவை பறந்து ஓடச் செய்வோம்.

வீட்டில் இருப்பவர்களிடம் பார்த்து இருங்கள் என்று சொல்லிக் கொண்டே இருந்தாலும் மனசுக்குள் இனம் புரியாத பயம் ஏனோ இருந்து கொண்டே இருக்கிறது. எதையும் சுலபமாக எடுத்துக் கொண்டு மீன் வாங்கிக் கொண்டு நிற்கிறார்கள் ஊரில்... அதை விடக் கொடுமை இடைவெளி விட்டு நில்லுங்கள் என கட்டம் போட்டுக் கொடுத்தால் அதில் பைகளை வைத்து விட்டு நிழலில் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா பைகளுக்கு வருவதில்லை என்பதை இந்த மனுசப் பதர்கள் உணர்வது எப்போது..?

இந்தியாவில் டாக்டர்களுக்கும் நர்சுகளுக்கும் நன்றி சொல்லக் கைதட்டுங்கள் என்று சொன்னபோது சில மூடர்கள் மேள தாளத்துடன் ரோட்டில் சென்றார்கள். அதை வைத்து நாம் பிரதமரைக் கேலி செய்து மீம்ஸ் போட்டுத் தள்ளினோம்... இங்கும் பலர் கேலி செய்தார்கள்... எங்கள் அலுவலகத்தில் ஒரு நண்பர் பிரதமரைக் கேவலமாகப் பேசினார்... நேற்று இரவு இங்கு கை தட்டினார்கள்... அனைத்து வீட்டுப் பால்கனியிலும் நின்று கைதட்டியவனில் பெரும்பாலோர் நம்மவர்கள்... குறிப்பாக நம் ஊரில் செய்ததைக் கேலி செய்தவர்கள்... இங்கு செய்வோம்... நம்ம ஊரில் செய்தால் அது கேலிக்கூத்து. என்ன மாதிரியான மனநிலையில் இவர்கள் வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

இங்கு கடைகளுக்குள் எல்லாரையும் விடுவதில்லை... ஒரு நேரத்தில் சூப்பர் மார்க்கெட் என்றால் முப்பது பேர் மட்டுமே உள்ளே விடுகிறார்கள்... அதன் பின் வரிசையில் அதுவும் தள்ளித்தள்ளி நிற்க வேண்டும்... ஒருவர் வெளியேறினால்தான் அடுத்தவருக்கு உள்ளே அழைப்பு... வரிசையில்தான் நிற்கிறோம்... எதிர்த்து எதுவும் சொல்ல முடிவதில்லை... என் உரிமை... நான் அப்படித்தான் செய்வேன் எனக் கொடி பிடிக்க முடிவதில்லை... சத்தம் போட்டால் தூக்கி உள்ளே போட்டுருவான் என்பது தெரியும்... நாம் தான் ஊரில் வெளியில் விடமாட்டேங்கிறார்கள்... என்ன செய்கிறார்கள் என கேள்விகளுடன் கேலி செய்கிறோம்... இங்கு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டு.

சூழலைப் புரிந்து சூட்சமமாய் பிழைத்துக் கொள்வோம்... உயிர்ப் பயத்துடன் வீட்டுக்கு உள்ளிருப்போம்... அடிக்கடி கைகளைக் கழுவுவோம்... இந்த வாழ்க்கை ஒரு முறைதான்... வீம்புக்கு விஷம் குடிப்பேன்னு சொல்லலாம்... வீம்புக்கு வைரஸைப் பிடித்து உடம்பில் விட்டுக் கொண்டு சாவேன்னு எல்லாம் சொல்லாதீர்கள்... நீங்கள் மட்டும் போகப்போவதில்லை... உங்கள் குடும்பம்... அக்கம் பக்கமென எல்லாரையும் சாகடித்து விடும். நம் அரசின் செயல்பாடுகள் சிறப்பாகத்தான் இருக்கின்றன... அதைப் பின்பற்றி வாழுங்கள்... நாளை எதிர்க்கலாம் பிடிக்காத அரசை... ஊரில் நடப்பவற்றைப் பார்க்கும் போது கஷ்டமாக இருப்பதுடன் மன வேதனைதான் இன்னும் அதிகரிக்கிறது.

பெற்றவர்கள், உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள், உறவுகள் என எல்லாரையும் அங்கு விட்டுவிட்டு இங்கு அறைக்குள் அடைந்து கிடக்கிறோம் வெளியில் சொல்ல முடியாத வேதனையுடன்... இந்த நேரத்தில் இங்கு ஏதாவது ஒன்று என்றாலும் அல்லது ஊரில் ஏதாவது ஒன்று என்றாலும் ஒன்றுமே செய்ய முடியாது... இருந்த இடத்தில் இருந்துதான் கதற வேண்டும்.

மற்ற நாடுகள் எடுக்கும் முயற்சிகளை நம் நாடு எடுக்கவில்லை என்று ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்... மிகப்பெரிய பாரத தேசத்தில் எடுக்கப்படும் முடிவுகள் எல்லாம் சிறப்பானவையாகத்தான் இருக்கின்றன... அரசோடு நாமும் கைகோர்த்தால் மிகப்பெரிய இழப்பைத் தகர்த்து எறியலாம்... பாதிப்பும் சாவும் அதிகமில்லாத ஒரு நாடு இந்தியா என்பதை உலக்குக்குக் காட்டலாம்... எல்லாமே நம் கையில்தான் இருக்கிறது.

என்ன நடக்கும் என்பதை யோசித்துக் கூடப் பார்க்க முடியவில்லை... உலகையே ஆட்டிப் படைத்த நாடுகள் எல்லாம் கையறுநிலையில் நிற்கின்றன... அடித்து ஆடும் கொரோனா முன் பெரியவன் சிறியவன் என்பதெல்லாம் இல்லை.

இந்தச் சூழலை கம்பெனிகள் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. எங்கள் கம்பெனியில் ஆட்குறைப்பு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். முதல் பலியாக ஒரு டிரைவர் மற்றும் ஆபீஸ்பாய்.... இருவரும் மலையாளிகள்... வீட்டில் இருங்க என்று சொல்ல, வேலை இல்லாமல்... சம்பளமில்லாமல்... ஊருக்குப் போகவும் வலியில்லாமல் இங்கு அறைக்குள் படுத்திருக்க வேண்டுமா..? என வேதனையோடு ஹச்.ஆரிடம் பேச, ஏப்ரல் மாதம் வேலைக்கு வாங்க... மே ஒன்றாம் தேதியில் இருந்து வரக்கூடாது எனச் சொல்லியிருக்கிறார்கள். அதன் பின் அவர்கள் அழைக்கப்படுவார்களா...? இல்லையா...? யாருக்கும் தெரியாது...

பல புராஜெக்ட்டுகள் தள்ளி வைக்கப்பட, இன்னும் பலரின் பெயர்கள் இருக்கிறதாம்... அடுத்த வாரத்தில் சொல்வார்களாம்... யார் என்பது தெரியாது... ஒவ்வொருவனும் என்ன நடக்குமோ என்ற கவலையில்... எங்க புராஜெக்ட் இன்னும் போய்க்கொண்டுதான் இருக்கிறது என்பது கொஞ்சம் ஆறுதல்.. இதுதான் வெளிநாட்டு நிலமை இப்போது... இந்தச் சூழலில் குடும்ப நினைப்புகள்... வேலை நீடிக்குமா என்ற சிந்தனையோடு தினமும் உறக்கமின்றித் தவிக்கும் வாழ்க்கைதான் இது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு எதிரான முழக்கத்தை சமூக வலைத்தளங்களில் அள்ளி வீசாதீர்கள்... எப்படியிருந்தாலும்... அரசைப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நாம் இந்தியர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்... உங்கள் எதிர்ப்பை கொரோனாவை விரட்டியபின் காட்டுங்கள்.

இப்படியான மனநிலையில்... இப்படியான சூழலில் எப்படி எழுதுவது..?

-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

  1. இப்போதைய வேலை - வீட்டோடு இருப்பது மட்டுமே... அரசாங்கம் என்ன செய்தாலும் இப்போது குறை சொல்லி பயனில்லை. அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த பேரிடரை எதிர்கொள்ள வேண்டிய சமயமிது. இங்கே மக்கள் புரிந்து கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள் - தில்லியிலிருந்து சொந்த ஊருக்குச் செல்கிறேன் என ஆயிரக்கணக்கில் பேருந்து நிலையத்தில் குழுமியிருக்கும் பீஹார், உத்திரப்பிரதேச, மத்தியபிரதேச மாநிலங்களைச் சேர்ந்திருக்கும் மனிதர்களை பார்க்கும்போது நெஞ்சு பதறுகிறது. இவர்கள் அனைவருக்கும் தொற்று வந்தால் பல கிராமங்களே அழிந்து போகும் நிலை என்பதை புரிந்து கொள்ளவே மாட்டேன் என்று இருப்பவர்களை என்ன செய்ய...

    இந்த நிலையிலும் எங்கள் அலுவலகத்திலும் குழப்பங்கள் - இரண்டு நாட்கள் அலுவலகத்திற்குச் சென்று வந்தேன். எப்போது எங்களையும் அழைப்பார்களோ என்ற பயத்திலேயே நாட்கள் ஓடுகின்றன.

    நலமே விளையும் என நம்பிக்கையோடு இருப்போம். அரசாங்கம் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருப்பது மட்டுமே இப்போதைக்கு ஒரே வழி.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்லி விட்டீர்கள் குமார்... என்னதான் மனதை மாற்ற முயற்சித்தாலும் வரும் தகவல்கள் அனைத்தும் சரியில்லை என்பதே உண்மை...

    பதிலளிநீக்கு
  3. உண்மை ....மனம் பதறும் நிலை ...

    ஊரில் இருக்கும் அப்பா அம்மா வை மாமா அத்தை யை பார்த்து இருங்கள் என்று சொன்னாலும் ....

    எப்பொழுதும் மனதில் இவ்வெண்களே ....


    சூழல் மாறும் என்னும் நம்பிக்கையில் இருப்போம்

    பதிலளிநீக்கு
  4. எல்லோருமே இதே மனநிலையில்தான் இருக்கிறோம்.  அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு மக்கள் ஊரடங்களை மக்கள் ஒழுங்காகக் கடைப்பிடித்தால் பெருமளவு வெற்றி பெறலாம்.  ஆனால் இவர்கள் மிகவும் அலட்சியமாக இருக்கிறார்கள்.  இத்தனைக்கும் மற்ற நாடுகளுக்கு வந்துவிட்டுதான் நமக்கு வந்திருக்கிறது.  அவர்கள் அனுபவங்கள் நமக்குத் பாடமாக வேண்டும்.  ஆனால் இங்கோ...   வேதனைதான் மிஞ்சுகிறது.  இதில் கம்பெனி, ஆட்குறைப்பு தகவல்கள் வேறு வேதனையை அதிகமாக்குகின்றன.

    பதிலளிநீக்கு
  5. அனைவர் மனதிலும் உள்ளதை அப்படியே பதிந்துவிட்டீர்கள். நம் நலனுக்கு நம் அனைவரின் ஒத்துழைப்பு அவசியம். சூழலை உணராமல் அலட்சியமாக உள்ள சில அறிவிலிகளைப் பார்க்கும்போது மனம் வேதனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  6. நல்லா சொல்லிர்யிருக்கீங்க குமார். இதே மன நிலைதான் இங்கும். மக்கள் கொஞ்சம் அரசுடன் ஒத்துழைப்பது மிக மிக மிக அவசியம். ஊரடங்குச் சட்டம் இப்போது நாடு முழுவதும் என்றாலும் இது இன்னும் நீட்டிக்கப்பட வேண்டி வந்துவிடுமோ என்ற அச்சம் இருக்கிறது ஏனென்றால் நம் மக்களின் செயல்பாடுகள் அப்படி இருப்பதால். இப்போது வெளியில் செல்பவர்கள் ஒரு வேளை தொற்று வந்தால் அடுத்து அவர்கள் பரப்பியது எல்லாம் வெளியாகும். எப்படி இது முறியடிக்கப்படும் உலகம் முழுவதும் என்ற பதற்றம் இருக்கத்தான் செய்கிறது. ஒரே வழி வாக்சின் தான். எப்படி அம்மை ஒழிக்கப்பட்டதோ அது போல என்றே தோன்றினாலும் அதிலும் சில சிக்கல்கள் இருப்பதாகச் சொல்லும் போது இதற்கு முழுமையான தீர்வு கிடையாதா என்ற கேள்வி எழுகிறது.

    மற்ற நாடுகள் படும் அவதி நம் மக்களுக்குத் தெரிந்தும் இப்படி அலைகிறார்களே என்று தோன்றுகிறது.

    ஆட்குறைப்பு எல்லாம் வேதனையை அளிக்கிறது அது போல ஏழை மக்கள் அன்றாடங்காய்ச்சிகளின் நிலைமையும் மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

    கீதா

    பதிலளிநீக்கு
  7. பலருடைய உணர்வுகளையும், எண்ணங்களையும் மிக சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள். என்னதான், புத்தகம் படித்தாலும், பிரார்த்தனை செய்தாலும், தினசரி வேளைகளில் ஈடுபட்டலும், அடிமனதில் ஒரு பயம் இருப்பதை மறுக்க முடியாது. எல்லாம் மாறும் என்று நம்புவோம். 

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி