சனி, 2 நவம்பர், 2019

கதை சொல்லிக்கு கானல் விருது

நேற்றைய மாலைய அழகாக்கியது அமீரக எழுத்தாளர்கள் மற்றும் வாசிப்பாளர்கள் குழும 'கானல் விருது விழா-2019'. அரங்கு நிறைந்த நிகழ்வாய், எப்பவும் போல் மிகச் சிறப்பான விழாவாக அமைந்தது. 


இரண்டாண்டு காலமாக பல நிகழ்வுகளை நடத்தி நகர்ந்து கொண்டிருக்கும் எங்கள் குழுமத்தின் முதல் விருது வழங்கும் நிகழ்ச்சி... அதுவும் முதல் விருது மிகச் சிறப்பான மனிதருக்கே வழங்கப்பட்டதில் ஒரு திருப்தியும் மகிழ்ச்சியும் எல்லோர் முகத்திலும் காணப்பட்டது. ஆம் விருதினைப் பெற்றவர் எழுத்தாளர், நடிகர், பதிப்பாசியர், சமூக சேவகர், விவசாயி என பன்முகத்தன்மை கொண்டவராக அறியப்பட்டிருந்தாலும்  பல கதைகளைச் சொல்லி அந்த மாந்தர்களை நம் மனசுக்குள் நிறுத்தி 'கதை சொல்லி'யாய் நம் உள்ளம் கவர்ந்த  திரு. பவா செல்லத்துரை அவர்கள்.

நிகழ்ச்சிக்கான அரங்கு சிறியதாக இருந்ததால் கூட்டம் அதிகமே என்பதால் நின்று கொண்டு நிகழ்ச்சியைக் காண வேண்டிய சூழல் என்றாலும் பவா அவர்களின் பேச்சு எல்லோரையும் கட்டிப் போட்டது... நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பதைவிட அவர் அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம் என்பதே நினைவில் நின்றது.

விழா எப்பவும் போலில்லாமல் மிகத் தாமதமாகவே தொடங்கியது. ஆசிப் அண்ணன் ஆரம்பித்து வைத்து ஜெஸிலாவை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குமாறு அழைத்தார்... அதன் பின் தமிழ்த்தாய் வாழ்த்து... அரங்கில் அனைவரும் பாடினார்கள். பின்னர் பவா குறித்தும் விருது வழங்க வந்திருந்த இந்தியத் தூதரக அதிகாரி ராஜா முருகன் அவர்களையும் பற்றிப் பேசி எங்கள் குழுமத்தின் தொடக்க ஆட்டக்காரரான சசி அண்ணனை வாழ்த்துரை வழங்க அழைத்தார் ஜெஸிலா.

இந்த முறை சசி அண்ணன் இறங்கியது கவிதையுடன்... அவரது நாவில் கவி வரி நர்த்தனமாடியது... பவா உண்மையில் ரொம்பவே சங்கோஜப்பட்டிருப்பார்.  அருமையான கவிதை வரிகள்... இறுதியில் எத்தனை பிறவி எடுத்தாலும் நீ கதை சொல்லியாகப் பிறக்க வேண்டும்... உனைப் பற்றி நான் அப்போதும் கவி பாட வேண்டும் என்பதாய் முடித்து, கவிதையை போட்டோவாக்கி நினைவுப் பரிசாய் பவாவுக்குக் கொடுத்து மகிழ்ந்தார்.

அடுத்து ஜெஸிலா பவாவைப் பற்றிப் பேச, ஊரிலிருந்து இவ்விழாவுக்காகவே வந்திருக்கும் ஹேமாவை அழைத்தார்... பவாவைப் பற்றி ஐந்து விஷயங்கள் சொல்கிறேன் என நான்கைச் சொல்லி ஒன்றை டுவிஸ்டாக வைக்கிறேன் என்றார். பவா நல்ல எழுத்தாளர், கதைசொல்லி, மனித நேயமிக்கவர் என்றெல்லாம் பேசி டுவிஸ்ட்டாக அவர் ஒரு விவசாயி என்றார். அவருக்கும் தனக்குமான நட்பு எப்படி ஆரம்பித்து இப்போது குடும்ப உறவாய் எப்படி மலர்ந்திருக்கிறது என்பதைச் சொன்னார். டொமினிக் என்னும் கதையை வாசித்துவிட்டு பவாவை அழைத்துப் பேசிய போது அந்தக் கதை குறித்து அப்போது விரிவாய்... மகிழ்வோடு பேசியதைப் பற்றி பகிர்ந்து கொண்டார். அருமையாகப் பேசினார்... பெரும் உணர்ச்சிப் பெருக்குடன் பேசி முடித்தார்.

கானல் விருது ஏன் வழங்கப்படுகிறது அது பவாவுக்கு வழங்கப்பட என்ன காரணம் என்பதை ஆசிப் அண்ணன் எப்பவும் போல் சிறப்பாக எடுத்துரைத்து விருந்தினருக்குப் பூங்கொத்துக் கொடுக்கச் சொல்லி நிவேதிதாவை அழைத்தார். அவரும் கொடுத்து, கேட்டுக் கேட்டு... வளைத்து வளைத்துப் போட்டோவும் எடுத்துக் கொண்டார். வரலாறு முக்கியம் என நினைத்திருப்பார் போல... ரேடியோ ஆர்.ஜே அல்லவா...

பவா குறித்த குறும்படம் ஒன்று போடப்பட்டது... சப்தம் சதி செய்ய ஆசிப் அண்ணனே குரல் கொடுத்தார். நல்லதொரு குறும்படம்... ஆனால் அந்த புரஜெக்டரை ஓர் நிலையில் நிறுத்த ஆரம்பத்தில் பலரும்... படம் போட்ட பின் பலரும் என ஆளாளுக்கு வைத்தியரான போதும் சப்தம் மட்டும் வரவேயில்லை... இதெல்லாம் சின்னச் சின்ன தடங்கல்கள்தான்... விழாவை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அடுத்து ராஜா முருகன் அவர்களிடமிருந்து கானல் விருது-2019யைப் பெற்றுக் கொண்டார் பவா செல்லத்துரை. பின்னர் இருவருக்கும் பொன்னாடையும் போர்த்தப்பட்டது.

ராஜா முருகன் அவர்கள் பேசும் போது முருகனுக்கும்  ஔவைக்கும் நடந்த சுட்டபழம் சுடாத பழம் விவாதம் குறித்துப் பேசி, இனிது இனிது பாடலை முழுவதுமாகச் சொல்லி, நம் மொழியை அடுத்த தலைமுறைக்கு கொடுத்துவிட்டுப் போக வேண்டும். மொழியை அழித்து விடக்கூடாது என்றும் எல்லா மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும்... நமது தாய்மொழி எதுவோ அதன் மீது கூடுதல் கவனம் கொள்ள வேண்டும் என்றார். மேலும் பவாவுக்கான விழாவுக்கு தான் வந்ததில் தனக்குப் பெருமை என்றும் சொன்னார். மிக விரிவாகப் பேசியது சிறப்பு... மேலும் இத்தனை விபரமாய் பேசியது வியப்பு... தமிழ் மீதான... மொழி மீதான அவரின் பற்று ஆச்சர்யப்படுத்தியது.

அடுத்துப் பேச வந்தார் பவா செல்லத்துரை... நான் மேலே சொன்னது போல் தன்னைப் பற்றி எல்லாரும் புகழ்ந்து பேசும் போது கூச்சத்தில் நெளிந்ததாகவே சொன்னார். மேலும் இத்தனை புகழ்ச்சி ஒருவனின் கண்ணைக் கூட குருடாக்கிவிடும் என்றார். இந்த விருதைப் பெற்றுக் கொண்டதில் மிக்க மகிழ்ச்சி என்றார். அதன் பிறகு அரங்கம் அவர் கையில்... அவர் பெருங்கதையாடல் ஒன்றும் நடத்தவில்லை ஆனால் பல கதைகளைக் கொண்டு சுவையான பெருங்கதையைப் படைத்தார். சில சிரிக்க, சில சிந்திக்க வைத்த நிலையில் பெரும்பாலானவை அழ வைத்தன.

முதல் நாள் நாங்கள் அபுதாபியில் சந்தித்தபோது நான் கதை சொல்லும் போது எந்த ஒரு சத்தமும் எனக்கு இடைஞ்சலாக இருக்கக் கூடாது... அப்படியிருந்தால் கதை சொல்லமாட்டேன் என்றார். ஒரு முறை ஒரு பெரிய ஹாலில் பேசும் போது ஏசியின் சப்தம் இடைஞ்சலாக இருந்ததால் அதை நிறுத்தி விடுங்களேன் என்று சொல்வதை அவரின் வீடியோவில் பார்த்த ஞாபகம் எனக்குள் இருக்கிறது. 

நேற்றைய நிகழ்வில் பின் வரிசையில் அதாவது நின்று கொண்டு நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் சப்தம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். பலர் செல்போன்களில் ஊசிக் குழாய் ரேடியோக்களை இணைத்து வந்திருந்தார்கள் போலும்... ஏன் இத்தனை சப்தமாய் ரிங்க்டோன்... புரியவில்லை எனக்கு. சிலரோ போனில் பேசிச் சிரித்தார்கள்... பலரோ அப்போதுதான் சந்திப்பது போலக் கட்டியணைத்துக் குசலம் விசாரித்தார்கள். இத்தனை இடையூறுகளுகளையும் பொறுத்துக் கொண்டு பவா பேசியது சிறப்பு. மிகச் சுருக்கமான இடத்தில் நடக்கும் நிகழ்வில் சில விஷயங்களை நாம் பின்பற்ற வேண்டும் என்ற பொதுவான எண்ணம் கூட இல்லாமல் நாம் இருப்பது ஏனோ..? 

இது போன்ற இடையூறுகளைத் தொடர்ந்து செய்யும் நாம் தான் சிந்திக்க வேண்டும். செல்போனை சப்தம் குறைத்து வைப்பதால் குறைந்து விடமாட்டோம்... அவசியமெனில் வெளியில் போய் பேசலாம்... நண்பரைத் தினமும்தான் பார்ப்போம்... குசலத்தை புன்னகையால் கூட விசாரிக்க முடியும்... ஒரு மனிதன் அங்கு பேச வந்திருப்பது யாருக்காக என்பதை உணர வேண்டும்... இப்படிப் பேசிக் கொண்டிருக்க வேண்டுமெனில் எதற்காக அந்த அரங்கத்துக்கு வரவேண்டும்... எதைப்பற்றியும் யாரைப் பற்றியும் நமக்கென்ன கவலை... நாம் பெரியவர்கள் என்ற மமதை கூடவே கூடாது... அதுதான் பலருக்கு இருந்தது. பவாவின் கதை கேட்டுத்தான் சாப்பிடுவேன், உறங்குவேன் என்று சொன்ன நண்பர் ஒருவர் இந்தச் சத்தங்களால் நொந்து போய் இடமிருந்து வலமாகி ஒரு ஓரத்தில் நின்று ரசிக்கலானார். வலமே அவருக்கு வாகாக இருந்திருக்கும். இடம் சந்தைக்கடையாகவே இருந்தது. இதை இனியேனும் தவிர்க்க முயற்சிக்கலாம் நண்பர்களே.

நான் இந்த மாதிரி ஏசி, ஹால், சுற்றிலும் நிற்கும் மனிதர்கள் என எப்போதும் கதை சொன்னதில்லை... சொல்வதில்லை... வெட்ட வெளியில்தான் சொல்வேன்... அதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும்... ஜெயமோகன், ஜெயகாந்தன் என யாராக இருந்தாலும் அப்படித்தான் கதை சொல்வோம்... கேட்போம். இப்படி நின்று கொண்டு கேட்கப் பிடிக்காது... அவர்கள் முன் அமர்ந்து கேட்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்... காலடியில் மிக நெருக்கமாய் அமர்ந்து கேட்டிருக்கிறேன் என்றார். உடனே சசி அண்ணன், பாலா என சிலர் கொஞ்ச நேரம் தரையில் அமர்ந்தார்கள். கால் வலியுடன் சென்றவன் என்பதால் நிற்பதே கடினம் என்ற நிலையில் அமர முடியாத சூழல். பாலாஜி அண்ணன் உடல் நலமில்லாத நிலையில்தான் நேற்று இருந்தார் என்றாலும் கால்வலியோட நிக்கிறே... யாரையாவது எழுப்பவா உக்கார்றியான்னு கேட்டுக் கொண்டே அவரும் நின்றார்... அவரின் அன்புக்கு நன்றி. நின்று கேட்பதிலும் ஒரு சுகம் இருந்தது... சப்தங்கள்தான் கொன்று தின்றது.

எனக்கு திருடர்களை ரொம்பப் பிடிக்கும் என்றார். அதுவும் கோட் சூட் போட்டுத் திருடும் பெரிய திருடர்களை அல்ல... கைலி கட்டிக் கொண்டு தங்கள் தேவைக்குத் திருடுபவர்களை என்று சொன்னவர், திருடன் திருடப் போய் மாட்டிக் கொள்ள, வீட்டார் அடித்து மறுநாள் போலீசில் கொண்டு போய் ஒப்படைக்க வேண்டும் எனச் சொல்லி, ஒரு அறையில் அடைத்து வைக்க, அந்த வீட்டுக்கு வந்த புதுப்பெண்ணுக்கு ஒரு மனிதனை இப்படி அடிப்பார்களா என்று தோன்ற, அவனுக்கு யாரும் அறியாமல் சாப்பாடு கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றிவிட்ட கதையைச் சொல்லி எனக்கு திருடனை ரொம்பப் பிடிக்கும் சார்... ஓட்டு வீட்டைப் பிரித்து இறங்கிய திருடர்களைப் பற்றியும் பேசினார்.

நான் மட்டும் அரசியலில் நுழைந்திருந்தால் மந்திரியாகியிருப்பேன் அதுக்குள்ள போலீஸ்காரன் மோப்பப் பிடிச்சிட்டான்ய்யா எனச் சிரித்துக் கொண்டே ஒரு எழுத்தாளர் (பெயரைக் கவனிக்கவில்லை) சொன்னதாகவும் அவர் ஆரம்பத்தில் திருடனாய் இருந்து பின் எழுத்தாளராய் ஆனார் என்ற கதையைச் சொன்னார். மேலும் அவரே அவரது சுயசரிதையில் இதை எல்லாம் எழுதியிருப்பதாகவும் சொன்னார். அவர் திருடனாய் இருந்தபோது ஒரு வீட்டில் திருடிவிட்டு வர, மறுநாள் காலை வீட்டுக்காரன் தனது காரில் நேராக அவர் வீடு வந்து நீ திருடியதையெல்லாம் நீயே வச்சிக்க... அதை என்னால் மீண்டும் சம்பாரிக்க முடியும்... ஆனா என்னுடைய பெரிய நாயை எப்படி நீ ஏமாற்றினாய் என்பதை மட்டும் சொல்லிவிடு எனக் கேட்டானாம் அதை அவர் பவாவிடம் சொன்ன போது ஆமாண்ணே... எப்படிண்ணே அந்த நாயை ஏமாற்றினேன்னு கேட்டதும் கேரளா நாய்களுக்கு மத்தி மீன் ரொம்பப் பிடிக்கும்... வீட்டுக்குள்ள போய் ப்ரிட்ஜ்ல இருந்த மத்தி மீனை எடுத்துச் சமைத்து உள்ளிருந்து போட்டேன்... தின்னுட்டுப் படுத்துருச்சு என்றாராம். இதைச் சொல்லி, ஒரு மனுசன் வீட்டுக்குள்ள திருட வந்தவன் சமையல் பண்ணுற வரைக்கும் தூங்கியிருக்கான் பாருங்க என்றதும் சிரிப்பலை அடங்க அதிக நேரமானது.

தங்கள் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கல்லூரியில் சிறந்த எழுத்தாளர்கள் பத்துப் பேருக்கு விழா எடுக்க முடிவு செய்து பத்துப் பேரை தேர்ந்தெடுக்கச் சொல்லி பவாவிடம் சொன்னார்களாம். அவரும் தான், இமையம் உள்பட பத்துப்பேரைத் தேர்ந்தெடுத்ததாகவும் விழாவில் முதலில் பேச அழைக்கப்பட்ட இமையம் முன்னால் இருந்த கல்லூரி நிர்வாகிகளைப் பார்த்து நீங்கள்லாம் பின்னால உட்காருங்க நாங்கதான் முன்னால உட்காரணும் என்றாராம்... பவா ஆடிப் பொயிட்டாராம். சும்மா பொன்னாடையும் இந்த விருதையும் வாங்கவா வந்திருக்கோம். எங்களைப் படித்துத்தானே நீங்க டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறீர்கள் எனவே எங்களுக்கு ஆளுக்கு ஒரு லட்சம் கொடுங்க என்றாராம்... உடனே முதல்வர் பரிதாபமாய்ப் பார்க்க, எங்களை என்றால் எங்க புத்தகங்களை அல்ல பாரதி, வள்ளுவன் அவங்களை... அவங்கள்லாம் எங்க ஆளுங்கதானே என ஒரே போடாய்ப் போட்டாராம்... பவாவுக்கு என்னடா இந்தாளு இப்படிப் பேசுறாருன்னு பயமே வந்துவிட்டதாம்... ஆனாலும் அவரும் அவர் பங்குக்கு நாங்களே பல்கலைக்கழகங்கள் எனப் பேசினாராம்.. அதன்பின் அந்த முதல்வர் அவர் கையாலே எல்லாருக்கும் பிரியாணி பரிமாறியதையும் பத்தாயிரம் கவரில் வைத்துக் கொடுத்ததையும் அடுத்த முறை ஒரு லட்சம் கொடுக்கலாம் என்றதையும் சிரிக்கச் சிரிக்கச் சொல்லி முடித்தார்.

விளிம்பு நிலை மனிதர்களின் கதைகளையே தான் அதிகம் சொல்வதாகச் சொன்னார். அவர்களாலேயே மழை பொழிகிறது என்றார். தங்கள் ஊரில் மல்லாட்டை (கடலை) பறிக்கும் பெண்களில் கொஞ்சம் திங்கக் கேட்டால் அவர்கள் கைநிறைய அள்ளிக் கொடுப்பார்கள் என்றும் அதை இப்போது கார்ப்பரேட் கம்பெனிகள் எப்படி தங்கள் வசமாக்கப் பார்க்கிறார்கள் என்பதையும் அந்த விளிம்பு நிலை மக்கள் அதை ஏற்காமல் தங்கள் போக்கில் இப்பவும் இருக்கிறார்கள் என்பதையும் சொல்லி, ஊரில் மழை பெய்து கிணறு நிரம்பியிருப்பதாய் மனைவி சைலஜா சொன்னபோது ஏன் மழை பேயாதுங்கிறேன்... அதான் அவங்க அங்கதானே இருக்காங்க... என்று சொன்னதாகவும் சொன்னார்.

இங்கு இருந்து ஊருக்குச் செல்ல வேண்டும் என்று தோன்றினால் கிளம்பி வந்துவிடுங்கள். சுபான் பாயைக் கேட்டபோது இங்கு எனக்கு எல்லாமே கிடைக்கிறது... இங்கே வாழ்ந்து இங்கே முடிந்தால் சந்தோஷம் என்றார் அது ஒரு மனநிலை... உங்களை ஊருக்கு வாருங்கள் என்று கூப்பிட நான் வரவில்லை... வரணும் எனத் தோன்றினால் வந்து விடுங்கள்... நம்ம ஊரில் இங்கிருப்பது போல் எதுவும் இருக்காது. பக்கத்து வீட்டுக்காரன் நாம இங்கு கஷ்டப்படுறதைப் பற்றி நினைக்காமல் துபாய் காசு என்பான்... இங்கு நாம் படும் கஷ்டம் நமக்குத்தானே தெரியும் என்றார். சாதி குறித்தும் மதம் குறித்தும் நாமதான் பேசுவோம்... இங்கிருக்கும் ஷேக் நம்மை என்ன சாதி என்று பார்த்துப் பேசுவதில்லை என்றும் சொன்னார்.


லிவி என்னும் இளைஞன் பவாவின் கதையைக் கேட்டு அப்பா எனக் கட்டிக் கொண்டான் என்றும் அவனது அப்பாவின் இறப்புக்குப் பின் பத்துக்குப் பத்து வீட்டில் அம்மாவுடன் தனியே இருக்கும் போது அப்பாவின் இழப்பை அதிகம் உணர்வதாகவும் பவாவின் கதைகளே அந்த இழப்பை மறக்கச் செய்வதாகவும் சொன்னதாகவும் அவரைத் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று மூன்று நாள் வைத்திருந்ததும் தான் செருப்புப் போட்டுத்தான் கூட்டங்களுக்குப் போவேன் என்பதால் இனி கூட்டங்களுக்கு ஷூ போட்டுத்தான் போக வேண்டுமென லிவி தன்னோட பைக்கை வித்துவிட்டு தனக்கும் வம்சிக்கும் ஷூ வாங்கிக்கிட்டு வந்ததாகவும், லிவியின் பாசத்தை நினைத்து தான் அதை அணிவதாகவும் வண்டியை வித்து லிவி அண்ணன் வாங்கிக் கொடுத்த ஷூவை நான் எப்படி அணிவதென வம்சி அதை இன்னும் அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருப்பதாகவும் சொன்னார். லிவியின் உண்மைக் கதை கண் கலங்க வைத்தது.

இன்னொரு கதை ஐஸ் விற்கும் ஒருத்தனுக்கு எட்டும் பொண்ணாய் பிறக்க, எட்டாவது பிள்ளைக்கு வேண்டாம் என பேர் வைத்தானாம். தன் வேதனையைச் சொல்லி அழ கோயிலுக்குப் போனவன், பேருந்தில் இடம் பிடிக்க வேட்டி, சட்டை, துண்டு என எல்லாத்தையும் போடுவது போல் ஒரு அம்மா பெண் குழந்தையைத் தூக்கிப் போட்டுவிட்டு பஸ் கிளம்பும் வரை வரவில்லை என்பதால் இவன் கண்டக்டரிடம் விபரத்தைச் சொல்ல, அவரோ தன்னால் நிற்க முடியாது என்பதால் அவனை இறக்கிவிட்டு விட்டுச் செல்ல, என்ன செய்வதென்று தெரியாமல் விழித்து ஒரு இடத்தில் குழந்தையைப் போட்டுவிட்டுச் செல்ல நினைத்தபோது நாய் குழந்தையைத் தூக்க வர, மனசில்லாமல் தானே வீட்டுக்குக் கொண்டு வருகிறான். ஐம்பது ரூபாய் வருமானத்தில் எட்டுப் பிள்ளை இருக்கும் போது இதை என்ன செய்வது..? மனைவி ஏத்துப்பாளா...? என்ற பயத்துடன் கதவைத் தட்ட, அவளோ பிள்ளையைப் பார்த்து பொம்பளப்புள்ள என மகிழ்ந்து எட்டோட ஒண்ணா நா வளக்குறேய்யா என்றாளாம். இதுதான் சாதாரண மனிதர்கள்... இதுவே மேட்டுக்குடி என்றால் என்ன ஆகியிருக்கும் என்பதையும் சொன்னார்.

கணவன் சரியில்லை என போலீஸ்காரனுடன் வந்தவள் அவனும் துன்புறுத்த, வெளிநாட்டில் இருந்து வரும் இருவருடன் ஒரு இரவு தங்கச் செல்கிறாள்... அதில் ஒருவன் தமிழ்நாட்டுக்காரன்... வெள்ளைக்காரக் குழந்தைக்கு முத்தமிட்ட போது அது அவனை கேவலப்படுத்தியதால் கறுப்பின் மீது தீராத காதல் கொண்டவன்...  ஆனால் அவள் விபச்சாரி அல்ல... சூழலால் விபச்சாரி ஆனவள். அவளுக்கு வந்திருப்பதில் வெள்ளைக்காரனைவிட அந்தத் தமிழன் மீதே காதல்... அவனுடன் சாப்பிட்ட பாத்திரத்தைக் கழுவும் போது அவன் அவளது அழகில் மயங்குகிறான். அவள் அவனுடன் அவன் வீட்டுக்குப் போய் வேலைக்காரி போல, எப்போதேனும் அவன் விரும்பினால் சுகம் கொடுப்பதாகவும் சொல்ல, கடற்கரையில் அடுத்த மாதம் இதே தேதியில் வந்து காத்திரு என்று சொல்லிச் செல்கிறான்... அன்று இரவு வெள்ளைக்காரன் அவளுடன் உறவு வைத்துக் கொள்கிறான். அடுத்த மாதங்களில் அவள் வந்து காத்திருக்கிறாள் ஆனால் அவன் வரவில்லை... ஆறு மாதத்துக்குப் பிறகு ஒருநாள் அவள் சிவப்புச் சேலை கட்டிக் கொண்டு வந்து காத்திருந்த அதே கடற்கரையில் தான் போய் நின்று வருவேன் என அவன் சொல்வதாய் ஜெயகாந்தன் முடித்திருப்பார் என கதையை ரசித்துச் சொன்னார். தண்ணி அடிக்கிறியா என்னும் இடத்தில் சாப்பிட்டு ரெண்டு நாளாச்சு சார்... பசிக்குது சாப்பாடு வாங்கிக் கொடு சார் என்று சொல்வதை எல்லாம் சிலாகித்துச் சொன்னார்.

மின்சார வாரியத்தில் பணி புரிவதாகவும் இன்சினியர் முடித்த ஒரு இளம்பெண் வேலைக்குச் சேர்ந்த போது அப்புறம் பவா சார்... மொத்தமா நீங்க கலெக்ட் பண்ணி எல்லாருக்கும் பிரிச்சிக் கொடுப்பீங்களா..? இல்லை அவங்க அவங்க வாங்கிக் கொள்வார்களா என்று கேட்டபோது அந்தப் பெண் என்ன கேட்கிறாள் என யோசிக்கும் போது அவள் வசூல் பணத்தைத்தான் சொல்கிறேன் என்றாளாம். பங்கு பிரிப்பதைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கும் இந்தப் படிப்பு பிள்ளைகளுக்கு எதற்கு..? இப்படிப்பட்ட படிப்பை ஏன் படிக்க வேண்டும் என்றார்.

பிரபஞ்சன் குறித்து நிறையப் பேசினார்... அவருக்கு பனிரெண்டு லட்ச ரூபாய் வசூலித்துக் கொடுத்தபோது பணமாக மாற்றி அப்படியே கையில் அள்ளிக் கொள்ளுங்கள் சார்... இதை வங்கியில் போட்டு வட்டி வாங்கிச் சாப்பிடாதீர்கள்... கையில் வைத்துச் செலவு செய்யுங்கள் என்றேன். உடனே ஒருவர் வங்கியில் போட வேண்டாம் என்கிறீர்களே... கையில் வைத்துச் செலவு செய்தால் தீர்ந்ததும் வயித்துப் பாட்டுக்கு என்ன செய்வார் என்று கேட்டபோது மறுபடியும் வசூலித்துக் கொடுப்போம் என்று சொன்னேன் என்ற போது கைதட்டலால் அரங்கம் அதிர்ந்தது.

எழுத்தாளர்களுக்கான ராஜராஜன் விருதை கலைஞர்தான் கொண்டு வந்தார். அதற்கென ஒரு கமிட்டி அமைத்தார். முதல் விருது கலைஞருக்கே கொடுக்கப்பட்டது. அது பற்றி பிரபஞ்சன் கலைஞரிடம் கேட்கும் போது விருதை அறிவிச்சி நீங்களே வாங்கிக்கிட்டீங்க போலன்னு கேட்டதும் கலைஞரின் முகம் சிவந்து போனதாகவும் அதை கமிட்டிதான் எனக்குக் கொடுத்தது நான் வாங்கிக் கொள்ளவில்லை எனக் கோபமாய்ச் சொன்னதாகவும் இதே ஜெயலலிதா ஆட்சியாக இருந்தால் கமிட்டி அவருக்கல்லவா கொடுத்திருக்கும் என்று சொன்னதாகவும் பிரபஞ்சன் தன்னிடம் சொல்லிச் சிரித்ததாய்ச் சொன்னவர் கமிட்டிகள் பெயர் வாங்க இப்படிச் செய்வதுண்டு என்றும் சொன்னார். மேலும் விருதுகள் அதற்கான தகுந்த நபர்களிடம் செல்வதில்லை என்றவர் ஞானபீட விருது கேரளாவில் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட போது அவருக்கே அது தெரியவில்லை... வாசலுக்கு வந்தால் ரேடியோவில் செய்தி கேட்ட மக்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். அதில் 80வது ஆளாய் முதல்வரும் நிற்கிறார். இவர் அவரிடம் போக வரிசைப்படி வருகிறேன் என்றாராம் முதல்வர். அவர்களுக்கு எழுத்தாளனின் மதிப்புத் தெரிகிறது என்றார். நம் ஊரில்தான் சாமரம் வீசினால் வருடம் ஒரு விருது கிடைக்குமே...? இதை பவா சொல்லவில்லை... கேட்டுக் கொண்டிருந்த பலரின் மனசுக்குள் தோன்றியிருக்கலாம்.

இதேபோல் சாகித்ய அகாதெமி விருதை நேரு அறிவித்து அதற்கென நூறு விதிமுறைகளையும் அறிவித்திருந்ததாகவும், அதற்கென நிறுவப்பட்ட கமிட்டி அந்த விதிகளின்படி அலசி ஆராய்ந்து நேருவுக்கே முதல் விருதைக் கொடுத்ததாகவும் என்னய்யா இப்படிப் பண்ணிட்டீங்களேன்னு நேரு அழுததாகவும் இதுதான் நம்ம ஊரில் விருது கொடுக்கும் நிலை என்றும் சொல்லிச் சிரித்தார். இந்தப் பேச்சு இந்தியத் தூதரக அதிகாரி ராஜா முருகனை கொஞ்சம் நெளியவே வைத்தது. இந்தக் கமிட்டிகள் முதலில் யார் இதை அறிமுகப் படுத்துகிறார்களோ அவர்களுக்குக் கொடுத்துவிட்டால் அடுத்தடுத்த வருடங்களில் மாமன், மச்சான், சித்தப்பன்னு தன்னோட உறவுகளுக்குக் கொடுக்கும் போது கேள்வி கேட்கமாட்டார்கள் என்பதாலே இப்படிச் செய்யும் என்பதை பவா சொல்லவில்லை என்றாலும் நாம் அறியாமலில்லை அல்லவா..?


ஜோக்கர் படத்தில் பத்து நாள் நடித்தபோது தினமும் காலையில் காரில் போய் மாலை வரை இருந்து நடித்துக் கொடுத்ததும் டிரைவர் லட்சம் லட்சமாய்ச் சம்பாரிக்கப் போறீங்க சார் எனச் சொன்னதும் இறுதி நாளில் கிளம்புகிறேன் என்றதும் ஓகே சார்... நன்றி சார் என இயக்குநரும் தயாரிப்பாளரும் போது எப்படிப் பணம் கேட்பது என யோசித்ததாகவும் பின்னர் மெல்லக் கேட்டபோது என்ன சார் நீங்க... உங்க மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருக்கோம்... நீங்கள்லாம் வேற லெவல் சார்... நடிக்க பணம் கேக்குறதுன்னா ஒப்பந்தத்துல கையெழுத்துப் போட்டிருக்கணும்...  அதன்படி வந்து நடிக்கணும்... அப்படியிப்படின்னு என்னென்னவோ சொன்னார்கள். பின்னர் என் வண்டிக்குப் போட்ட பெட்ரோலுக்காச்சும் காசு கொடுங்கடான்னு வாங்கி வந்தேன் என்று தனக்கு நேர்ந்த வருத்தமான நிகழ்வை நகைச்சுவையாய் சொன்னார்.

குவைத்தில் பேசும் போது ஒரு சிறுமி தன்னை வளைத்துக் கொண்டு கேள்வி மேல் கேள்வி கேட்டதைப் பற்றிச் சொல்லி, பிள்ளைகளை அவர்கள் போக்கில் வளருங்கள்... அவர்களே எல்லாம் அறிந்து கொள்வார்கள். நாம் சொல்லித்தான் எதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்றில்லை என்பதையும் சொன்னார். அபுதாபியில் பேசும் போது அவர் மகள் குறித்துப் பேசியதும் தன் மகளிடம் தான் ஒரு அப்பாவாக என்ன படிக்கிறாய் என்று இதுவரை கேட்டதில்லை என்றும் தன் மகள் சிறப்பு விருந்தினாராய் பேசியது குறித்தும் சொன்னார். அதை அங்கு சொல்லவில்லை என்றாலும் பிள்ளைகளை பிள்ளைகளாய் வளருங்கள் எனச் சொன்னார். தன் மகன் வம்சி, மகள் மானசி குறித்துப் பேசும் போது ஒரு தகப்பனாய் அவருக்குள் எவ்வளவு சந்தோஷம் நிறைந்து கிடக்கிறது என்பதை கண்ணிலும் முகத்திலும் அபுதாபியில் பேசும் போது பார்க்க நேர்ந்தது. ஈன்ற பொழுதில் என வள்ளுவன் சும்மாவா சொன்னான்.

பிள்ளைகள் வளர்ப்புக் குறித்து பேசும் போது தனது நண்பனின் அக்காவுக்கு பல வருடம் பிள்ளை இல்லாமல் இருந்ததும் அதன் பின் இரட்டைக் குழந்தை பிறந்த போது பெரிய விருந்து வைத்து மகிழ்ந்ததும், பத்து நாளுக்குப் பிறகு ஒரு குழந்தை இறக்க, ஒரு குழந்தையின் மீது ஒட்டுமொத்தக் குடும்பத்தின் பாசமும் விழ, அந்தக் குழந்தையை பாசத்தால் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார்கள். மேல்மலையனூர் அம்மன் கோவிலுக்குப் போய் பிள்ளைக்கு மொட்டை போட்டு காது குத்தி விருந்து உபச்சாரம் என இருந்த போது பிள்ளையைக் காணாமல் போக, தேடி அழுது திரிந்த போது கழைக்கூத்தாடி உடம்பில் சவுக்கால் அடித்துக் கொண்டு தன் மகளை கயிற்றில் நடக்க வைத்து வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கும் இடத்தில் அமர்ந்து வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும், அதன் மாமாவும் தன் நண்பனுமானவன் குழந்தையைத் தூக்க, என்ன சார்... ஒங்குழந்தையா... அழுதுக்கிட்டு நின்னுச்சு... அதான் வாழப்பழத்தக் கொடுத்து ஒக்கார வச்சேன்... எனச் சொல்லியிருக்கிறான் அந்தக் கழைக்கூத்தாடி. நண்பன் உடனே தன்பர்ஸில் இருந்த பெரும் தொகையை எடுத்துக் கொடுக்க, அய்யே... இன்ன சார்... காசு கொடுக்கிறியா... அட போ சார்.... புள்ளயில எங்கொழந்த ஒங்கொழந்த எல்லாம் ஒண்ணுதான் சார் எனத் தள்ளிவிட, எனக்குப் போன் செய்து பவா நீ சொல்லும் விளிம்பு நிலை மனிதனின் குணத்தை இப்ப நேரில் பார்த்தேன் என்றாராம்.

இன்னும் இன்னுமாய் நிறையக் கதைகள் சொன்னார்... நாட்டு நாய் வளர்த்த கதையைச் சொன்னபோது சிரிப்பலை அடங்க நேரமானது.  பிரட்டில் ஜாம் வைத்துச் சாப்பிடக் கிடைக்காத கதையையும் சொல்லிச் சிரிக்க வைத்தார். இமையம் சொன்ன ஒரு லட்சம் குறித்துச் சொல்லும் போது நான் அதற்காக இங்கு வரவில்லை என்றார் சிரித்தபடி. பூசணிப்பூ பூக்கும் 'பட்' என்னும் சப்தத்தை திருடர்களே கேட்க முடியும். நாம் அந்த நேரத்தில் தூங்குவோம் என்றார். தெருக்கூத்துக் கலைஞர்கள் பற்றியும் தெருக்கூத்து நிகழ்வு பற்றியும் விரிவாகப் பேசினார்.

விளிம்பு நிலை மனிதர்களின் கதையையே அதிகமாய் சொன்னார்... அவர்களின் வாழ்க்கையைப் பேசிக் கொண்டே இருந்தார். கதைகளும் வார்த்தைகளும் வசமாய் வந்து வீழ்ந்து அந்த அரங்கமெங்கும் நிரம்பி நின்றன.

பவா பேச ஆரம்பித்த மணித்துளிகள் மிகவும் சுவராஸ்யமாக் கரைந்து சென்றன... அற்புதமான பேச்சு... இந்தப் பேச்சின் சுவை இன்னும் சில காலத்துக்கு மனசுக்குள் நின்று கொண்டே இருக்கும்... 

விளிம்புநிலை மனிதர்கள்... சாதாரண வாழ்க்கைக் கதைகள் என பவா எடுத்துக் கொள்ளும் கதைகள்தான் அவரின் பலம்... அவர் திடீரென முளைத்த கதை சொல்லி அல்ல... பிறவிக் கதை சொல்லி... ஒரு கதைக்குள் கூட்டத்தை அடைக்காமல் பல கதைகளை விரித்து... அதனூடே நிகழ்வுகளைச் சொல்லி, கதை மாந்தர்களோடு ஒரு நீண்ட பாதையில் பயணித்த பின் நான் இதற்காக ஆரம்பித்தேன் என மீண்டும் ஆரம்பித்த இடம் வந்து...  மீண்டும் அதில் தொடங்கி... பின் நகர்ந்து... முன்னே போய்... பல கதைகளைச் சொல்லிச் சிறப்பான மாலையாக ஆக்கினார். 

கதை சொல்லுதலில் பெரிய ஏற்றம் இறக்கம் எல்லாம் அவர் காட்டவில்லை... ஆனாலும் அந்தக் குரல் எல்லா வித்தையையும் காட்டிவிடுகிறது. கண்கள் கதையைக் காட்சிப் படுத்திக் கொண்டே போகின்றன. சப்தங்கள் இம்சித்தாலும் கட்டுண்டு போக வைத்த மணித்துளிகள் அவை... ஒரு சாதாரண மனிதனுக்குள் கதையால் கட்டிப்போடும் சக்தி நிறைந்திருக்கிறது... நன்றி பவா. வலைப்பூவில் எழுத ஆரம்பித்த காலத்தில் வம்சி நடத்திய போட்டியில் தேர்வான கதைகள் 'காக்கைகள் துரத்திக் கொத்தும் தலைக்குரியவன்' என்னும் தலைப்பில் புத்தகமானபோது அதில் எனது கருத்தப்பசுவுக்கும் இடமிருந்தது. வாழ்க்கைகதையாய் பவாவை என் கதையும் கவர்ந்து புத்தகத்திலும் இடம்பெற்றது என்பது மகிழ்வே... பவா சொன்ன கதைகளால் நாம் எழுதும் கதைக்களத்தை அழுகாச்சிக் கதைகள் எனச் சிலர் சொன்னாலும் இப்படியே நகர்த்துவோமே எனத்தான் தோன்றியது.  


பவாவின் பேச்சுக்குப் பின் ஜெஸிலாவால் பேச முடியாமல் அழுதார். என்ன சொல்வதெனத் தெரியாமல் திணறினார். இதுவே பவாவின் வெற்றி. அங்கே பலரின் நிலை அப்படித்தான் இருந்தது. ஆசிப் அண்ணன் நகைச்சுவையாகச் சொன்னாலும் பவா பல உள்ளங்களை உலுக்கித்தான் விட்டார். 

நன்றியுரை சொல்ல வந்த சுடர்விழி, பவாவின் பேச்சைச் சிலாகித்து, லா.சா.ரா. போன்றோரின் கதைகளை என்னால் சொல்ல முடியாது. அவரின் கதைகளில் நிறைய இடங்களில் வார்த்தை விளையாடும்... அவள் இடுப்பில் இருந்த குடம் செருக்கில் ஆடியது என எழுதியிருப்பார். அதைச் சொல்லும் போது செருக்கு என்ற வார்த்தையை விட்டுவிட்டால் அது கதைக்கும் கதை ஆசிரியருக்கும் நான் செய்யும் துரோகம் என்பதால் அப்படியான கதைகளைச் சொல்லமாட்டேன் என அபுதாபியில் எங்களிடம் சொன்னதை நினைவில் நிறுத்திப் பேசி நன்றி கூறினார். பவாவின் பேச்சு இவரையும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே வைத்திருந்தது என்பது பேச்சில் தெரிந்தது.

அவர் நூலகம் கட்டிக் கொண்டிருக்கிறார் அதற்கு உதவ வேண்டும் என்று குவைத்தில் சொன்னபோது தான் கட்டி முடித்துவிட்டேன் இனி  பண உதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் தனது நூலகத்தை விரைவில் திறப்பு விழா நடத்தப்பட இருப்பதாகவும் அது தனது மாவட்டத்தில் கடந்த இருபது ஆண்டுகளாக ஐ.ஏ.எஸ் தேர்வில் ஒருவரும் தேர்ச்சி அடையாத நிலையில் இனியேனும் வெற்றி பெற வேண்டும் என்பதற்கான புத்தகங்களே அங்கு வைக்க இருப்பதாகவும் அதனால் புத்தகங்களை மட்டுமே கொடுப்பவர்களிடம் வாங்க இருப்பதாகவும் சொன்னார். அவரின் புத்தகங்களை விற்பனைக்கு வைத்து அதில் கிடைக்கும் பணத்தை நூலகத்துக்குப் பயன்படுத்த இருப்பதாகச் சொன்ன போது பெரும்பாலான புத்தகங்கள் விற்றுத் தீர்ந்து போயின.

அதன் பின் சமோசா, வடை, டீயுடன் போட்டோ எடுக்கும் நிகழ்வும் நடக்க, விழா இனிதே முடிவடைந்தது. மிகச் சிறப்பான நிகழ்வு... ஒருங்கிணைத்த நட்புக்கள் அனைவருக்கும் நன்றி.

எப்பவும் போல் சுபான் அண்ணாச்சி வளைத்து வளைத்துப் போட்டோ எடுத்தார். அதில் இருந்து சிலவற்றைச் சுட்டு பதிவில் இணைத்திருக்கிறேன். நன்றி சுபான் அண்ணா.

விழாவைச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.
-'பரிவை' சே.குமார்.

13 கருத்துகள்:

  1. மிக மிக அற்புதமான பதிவு. பவாவின் கதைகளை நேரில் கேட்ட உணர்வை என்னால் அனுபவிக்க முடிந்தது.

    பதிலளிநீக்கு
  2. ஒரு நிகழ்வை இவ்வளவு அழகாக விவரிக்க முடியுமா ! மிகவும் அருமை குமார்...

    திரு. பவா செல்லத்துரை அவர்களுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. ஆஹா.... நிகழ்வை நேரில் பார்த்த உணர்வு.... அருமை.

    பதிலளிநீக்கு
  4. கிரிக்கெட் வர்ணனை போல ஒவ்வொரு நிகழ்வையும் விவரித்த விதம் அருமை.

    பதிலளிநீக்கு
  5. சுடச் சுட விளக்கமாய் பகிர்ந்ததற்கு உங்களுக்கு நன்றி குமார்!

    பதிலளிநீக்கு
  6. முதலில் பார்க்கும் போது பெரிய பதிவாய் தோன்றி முடியும் போது அதுக்குள்ள முடிஞ்சிடுச்சா ன்னு தோண வச்சிடுச்சு.
    காணொளி இருந்தா வலையேத்துங்க

    பதிலளிநீக்கு
  7. மிக சுவாரஸ்யமான பகிர்வு.  ஹேமா என்றால் சிங்கை ஹேமாவா?  ஹேமா (HVL)

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி