முதல் இரண்டு பதிவுகளுக்கும் நல்ல வரவேற்புக் கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி... சிறப்பாக எழுதியிருக்கிறேனா என்றால் இல்லை என்றுதான் சொல்வேன்... மிகச் சிறப்பாக எழுதணும் என்ற எண்ணத்துடன்தான் இந்தப் பதிவை ஆரம்பித்தேன்... தற்போதைய மனநிலை கொடுக்கும் அழுத்தத்தால் எண்ணிய எண்ணப்படி எழுத முடியவில்லை என்றுதான் தோன்றுகிறது. வரும் பதிவுகளில் கொஞ்சம் மெனக்கெடல் செய்ய முயல்கிறேன்.
இந்தப் பதிவு நாட்டுப்புறப் பாடல்கள் குறித்தான நினைவுகள் என்பதாய் போன பதிவிலேயே சொல்லியிருந்தேன். சென்ற பதிவு பக்திப்பாடல்கள் என்றதால் பிரதிலிபியில் சகோதரி கண்மணி மற்ற மதப் பாடல்கள் குறித்தும் எழுதுங்கள் என்று கேட்டிருந்தார். அதற்காக இதிலும் சில பாடல்கள்கள் குறித்தான் நினைவுகள் பக்தி மயமாய்...
நமக்கு எப்பவுமே இந்த சாதி, மதச் சனியன்கள் மீது பெரும் ஈடுபாடெல்லாம் இல்லை... தற்போதைய நாட்டு நடப்புகள் சற்றே ஈடுபாட்டைக் கொடுத்து விடுமோ என்றுதான் தோன்றுகிறது. ஏனென்றால் முகநூலில் மற்ற மதத்தைக் கேலி செய்வதைக் காணும் போதெல்லாம் மனசுக்குள் வருத்தமே மேலிடுகிறது. நான் என் மதம் சார்ந்தவைகளுக்கு முழு உரிமை கொடுப்பேன் என்பவர்கள் மற்ற மதத்தின் தெய்வங்களை எள்ளி நகையாடுதல்... மற்ற மத கோட்பாடுகளைக் கேலி செய்தல் என்பது வருத்தமான விஷயமே. திருந்தாத ஜென்மங்களுக்காக வருந்தி என்ன செய்வது எனக் கடக்க நினைத்தாலும்... நம் மத உணர்வு மெல்ல மேலெழத்தான் செய்கிறது... தடுக்க முடியவில்லை.
நான் எப்பவுமே நல்ல சாப்பாடு கிடைக்குதுன்னா எங்க வேணுமின்னாலும் போகும் ரகம்தான்... சாதியாவது... மதமாவது... மண்ணாங்கட்டியாவது... வயிறு நிறைய வாய்க்கு ருசியா செஞ்சு போடுறியா... 'அது போதும் எனக்கு... அது போதுமே'ன்னு பாடிக்கிட்டு கிளம்பும் நண்பர்கள் எனக்கு வாய்த்தது சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில்.
நாங்க பத்துப்பேர் வகுப்பில் இருந்த ரகுவரன் குழுவிலும் இணையாமல்... நாசர் குழுவிலும் இணையாமல் இரண்டு குழுவுடனும் மய்யமாய் மூன்றாண்டுகள் பயணித்தவர்கள். பத்துப் பேரின் வீட்டுக்கும் திருவிழா, விஷேசங்களுக்குப் போய் மூன்று நான்கு நாட்கள் இருந்து மூக்கு முட்டத் தின்னு தீர்த்தவனுங்க நாங்க.... இராமேஸ்வரம் போக திருவாடானையில் நண்பன் ஆதியின் வீட்டில் தங்கி ஐயர் வீட்டுச் சாப்பாட்டை தினமும் மதியம் சாப்பிட்டிருந்தாலும் என்ன செய்ய எனக் கேட்டு அம்மா செய்து கொடுத்ததை ஒரு பிடிபிடித்தவர்கள் நாங்கள்.
எங்களுக்கு வகுப்பில் மட்டுமின்றி மற்ற துறை நட்புக்களும் உண்டு... மிகப்பெரிய கூட்டமாய்த்தான் கல்லூரிக்குப் போவோம்... வருவோம்... நிறைய வம்பிழுப்போம் என்றாலும் எங்கள் ஆசிரியர்களின் செல்லப் பிள்ளைகள் நாங்கள்... அந்தப் பாசம்தான் இப்போது வரைக்கும் ஆசிரியர்கள் மனதில் நாங்கள் இருக்கக் காரணம்... அடிதடி நடந்தால் இங்க என்ன வேடிக்கை... ஒண்ணு வகுப்புக்குள்ள போங்க... இல்லேன்னா வீட்டுக்குப் போங்க... இங்க எதுக்கு நிக்கிறீங்கன்னு எங்க கே.வி.எஸ். சார் வந்து சொல்லிட்டுப் போவார். ஆமா ஆசிரியர்கள் விரும்பிய மாணவர்கள் நாங்க.
ஆமா இப்ப எதுக்கு இதெல்லாம்...?
பாட்டுப் பகிர்வுதானே போடணும்... பக்கம் பக்கமா என்னைப் பற்றி எழுதக் கூடாதுதானே...
எனக்கு கிறிஸ்தவ நண்பர்கள் அதிகம்... இப்பவும் எப்பவும்.... என் மனைவியிடம் கேட்டால் சொல்வார் பல விஷயங்களை... ஏன்னா அவருக்கு எல்லா விபரமும் தெரியும்... நானெல்லாம் எப்பவும் முருகனை அழைப்பவன்... என் மனைவி தும்மினால் அழைப்பது ஏசப்பாவை... ஏன்னா அவங்க படிச்சதும் கிறிஸ்தவப் பள்ளியான ஓசிபிஎம். நாமளும் படிச்சது தே பிரித்தோவுல... பசங்க வீட்டுக்கு அருகே இன்பேண்ட் ஜீசஸ்ல...
நானும் முருகனும்.... இப்ப இவர் நாங்கள் படித்த சேவுகன் அண்ணாமலைக் கல்லூரியில் தமிழ்த்துறைப் பேராசிரியர்... படிக்கும் போது கல்லூரியில் வேறு வேறு துறை என்றாலும் ஏதோ ஒரு புள்ளியில் இணைந்தோம்... மனசு கையெழுத்துப் பிரதி நடத்தினோம்... இருவரும் உணர்வில் வேறாக எப்போதும் நின்றதில்லை... இருவரும் ஒன்றே....
என் கல்லூரி நாட்கள் பெரும்பாலும் இவனுடைய (மரியாதை நட்புக்குத் தேவையில்லை) வீட்டில்தான்... ஆரம்பத்தில் இங்கயெல்லாம் சாப்பிடுவியாய்யான்னு கேட்ட முருகனின் அம்மா அப்புறம் விதவிதமாச் சமைச்சிப் போட்டாங்க... எங்க போனாலும் ஒண்ணாத்தான் சுத்துவோம். அது ஐயா வீடா இருந்தாலும் சரி... அரசியல் கூட்டமா இருந்தாலும் சரி...
அப்ப முருகன் சுபமங்களா, தாமரை, செம்மல்ர் மூன்றுக்கும் ஏஜெண்ட்... புத்தகம் வந்ததும் சைக்கிளில் எடுத்துக் கொண்டு தேவகோட்டையில் வீதி வீதியாய்ச் சென்று புத்தகம் வாங்கும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் வீடுகளில் கொடுத்து வருவோம். அப்போது அருள்சாமி ஐயா, சவரிமுத்து ஐயா வீட்டிலெல்லாம் எங்களுக்கு அம்மாக்கள் தீனி போடாமல் விடுவதில்லை. உங்களுக்காக அம்மா இந்தப் பழத்தைப் பறிக்காமல் மரத்திலே போட்டு வைக்கச் சொன்னாங்க என்றபடி அருவாக் கம்பெடுத்துப் பறித்துக் கொடுப்பார் சவரிமுத்து ஐயா.
ரெண்டு பேருக்கும் மனசு சரியில்லை என்றால் நாங்கள் தேர்ந்தெடுக்கும் இடம் எங்கள் தேவகோட்டை சரஸ்வதி வாசகசாலை சர்ச்தான்... மெழுகுவர்த்தியுடன் போவோம்... ஏற்றி வைத்துவிட்டு நீண்ட நேரம் அமைதியாய் அமர்ந்திருப்போம்... மனக்கவலை தீர்ந்தது போல் ஒரு எண்ணம் எழும் போது கிளம்பிவிடுவோம். இது அடிக்கடி நிகழும் நிகழ்வுதான் கல்லூரிக் காலத்தில்.
நிறையப் பாடல்கள் பிடிக்கும்... எப்பவும் மறக்க முடியாத பாடல் என்றால் அது
'மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாயென்று உன்னைத்தான்
பிள்ளைக்கு காட்டினேன் மாதா
மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே
மேரி உன் ஜோதி கண்டால் விதி மாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்றவா - மாதா...'
இது அச்சாணி என்ற படத்தில் இளையராஜா இசையில் எஸ்.ஜானகி பாடிய பாடல். இதே பாடலை நான் கடவுள் படத்திலும் இளையராஜா பயன்படுத்தியிருப்பார். அதில் அம்மா உன் பிள்ளை நான் என்றொரு பாடலும் இதே மெட்டில் வரும். எனக்கு அந்தப் பாடல் ரொம்பப் பிடிக்கும். பாடல் வந்த சமயத்தில் திரும்பத் திரும்பக் கேட்டிருக்கிறேன்.... வலி நிறைந்த வரிகள் ராஜாவின் இசையோடு கலந்து வரும் போது நம்மையும் கலங்க வைக்கும். முழுப் பாடலையும் பகிர ஆசைதான்... வீடியோவாய்ப் பார்த்தல் சிறப்பு என்பதால் பாடலில் இருந்து சில வரிகள் இங்கே.
'காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே
கரை கண்டிடாத ஓடம் தண்ணீரிலே
தரையிலா துயருக்கோர் கரைபோட்டுக் காட்டவா நீயே...'
பழனி, திருச்செந்தூர் போன்ற கோவில்களுக்குப் பாதயாத்திரை செல்வது போல் வேளாங்கண்ணிக்கும் பாதயாத்திரை செல்வார்கள். அப்போதெல்லாம் தேவகோட்டையில் இருந்து எங்கள் ஊர் வழிதான் பயணிப்பார்கள்... பயண தூரத்தைக் குறைக்க வயல்களினூடே நடந்து போவார்கள். சில நேரம் ஊரில் தங்கிச் செல்வார்கள். இப்போதெல்லாம் வயல்கள் கருவைகளின் ராஜ்ஜியத்தில் இருப்பதால் ரோடு வழியேதான் பயணப்படுகிறார்கள்.
ஒரு மேடையில் லியோனி எல்லாப்பயலும் பழனிக்கு நடக்குறானுங்கன்னு எங்காளுங்க வேளாங்கண்ணி நடக்க ஆரம்பிச்சிருக்கான்னு கிண்டல் பண்ணுவார். அதுக்கும் நாம் சிரித்திருப்போம். அவரவர் நம்பிக்கை அவரவருக்கு... அதைக் கேலி செய்வதில் என்ன கிடைத்து விடப்போகிறது. நான் பழனிக்கு ஆறாண்டுகள் பாதயாத்திரை சென்றிருக்கிறேன்.... சபரிமலை நான்கு ஆண்டுகள்... திருப்பரங்குன்றம் ஒரு ஆண்டு.... நடப்பது எனக்குப் பிடிக்கும்... முருகனையும் அதிகம் பிடிக்கும்.
நாங்கள் குடும்பமாய் வேளாங்கண்ணிக்கு செல்வோம்... மாதாவைக் கும்பிடுவோம்... என் மகள் குட்டியாய் இருக்கும் போது... இப்பவும் குட்டிதான்... பதினோராவது படிக்கும் குட்டி... எல்லாருக்கும் பாப்பாதான் அவர்... ஐயா, ஆயா, அப்பா, அம்மா, ஏன் தம்பிக்கு கூட இப்பவும் பாப்பாதான். மண்ணில் முட்டி போட்டே நடந்து போய் வழிபாடு செய்தார்.... இறுதி வரை எழவேயில்லை.
எனக்குப் பிடித்த இன்னொரு பாடல்...
'நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்
நீலக் கடலின் ஓரத்தில்
நீங்கா இன்ப காவியமாம்
காலத் திரையில் எழில் பொங்கும்
கனக கருணை ஓவியமாம்'
'கேளுங்கள் தரப்படும்... தட்டுங்கள் திறக்கப்படும்... இயேசு கேளுங்கள் கிடைக்கும் என்றார்' என்ற பாடல் உள்ளிட்ட நிறையப் பாடல்கள் எனக்குப் பிடித்தமானவை... பேசினால் இன்னும் நிறையப் பேசலாம் என்றாலும் இஸ்லாமியக் கீதங்கள் பற்றியும் பேச வேண்டும் என்பதால் இங்கிருந்து மதம் மாறி அங்கே போகலாம்.
இப்ப நமக்குச் சோறு போடுறதே ஒரு இஸ்லாமிய நாடுதான்... இங்கிருக்கும் உறவுகள் எல்லாம் பெரும்பாலும் இஸ்லாமியர்களே... அது தமிழனாக, மலையாளியாக, லெபனானியாக, எகிப்தியனாக, பாலஸ்தீனியனாக, சிரியனாக, பெங்காலியாக, பாகிஸ்தானியாக... யாராகவோ இருந்தாலும் எல்லாருமே மனிதர்களாய் இருப்பதுதான் முக்கியம். இங்கே எல்லாரும் அன்போடும் நட்போடும் இருக்கிறார்கள்... பேதங்கள் பெரும்பாலும் இல்லை... பிழைக்க வந்த இடம் என்பதால் கூட இருக்கலாம்... தமிழனுக்குள்தான் பேதங்கள் இருக்கு இங்கும்.
இஸ்லாமியப் பாடல்கள் என்றால் அந்தக் கம்பீரக் குரல், வசீகரிக்கும் குரல், மைக் இல்லாமலேயே தூரத்தில் இருப்பவனும் கேட்கும் விதமாகப் பாடக் கூடிய நாகூர் ஹனிபாவை மறக்க முடியுமா..? என்ன குரல் அது...? சினிமாவிலும் இவரின் பாடல்கள் தனி முத்திரை பதித்தன... இளையராஜா இவரை ஓரளவுக்குச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
எத்தனை பாடல்கள் இருந்தாலும் இந்தப் பாடலைக் கேட்கும் போது இது எல்லா மதத்துக்கும் பொறுத்தமான பாடல்தானே என்று தோன்றும்... அதில் வரும் 'அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்' என்ற வரியில் அல்லாவுக்குப் பதில் சிவனை, முருகனை, பெருமாளை, கிருஷ்ணனை, கருப்பனை, மாரியைக் , காளியை, மாதாவை, இயேசுவை என யாரை வேண்டுமானாலும் பொருத்திப் பாடிப்பாருங்கள்.... எல்லாத் தெய்வத்துக்கும் உகந்த பாடலாய்த்தான் இருக்கும். முன்பு அடிக்கடி கேட்க்கும் பாடலாகவும் இது இருந்தது.
'இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை'
இங்கே நாகூர் ஹனிபா பாடிய பாடலுக்குப் பதில் அதே பாடலின் வித்தியாசமான வேறொரு வீடியோவைப் பகிர்ந்திருக்கிறேன்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியனும் நாகூர் ஹனிபாவும் இணைந்து பிரபு - குஷ்பு... குஷ்பு சார்... ராணி அட்டைப் படத்தில் வரும் குஷ்பு போட்டோவை பைத்தியமாய் கட் பண்ணி வைத்திருந்தவங்க நாங்கள்லாம்... வருஷம்-16 எத்தனை தடவை பார்த்திருப்போம்... ஏன் சின்னத்தம்பி, பாண்டித்துரை... அம்புட்டுப் போட்டோவையும் சமீபத்தில்தான் பீரோவில் இருந்து எங்கப்பா, வெறும் பேப்பரா வச்சிருக்கான் பாருத்தான்னு அள்ளி மனைவியிடம் கொடுக்க, அவர் அதைப் பார்த்து நமக்குப் போன் போட்டு ரொம்பச் சந்தோசமாய்ப் (?) பேசிட்டு, த்தூன்னு ஒரு சத்தம் மட்டும் கொடுத்துட்டு கிழித்து ஊரணிக்குள் அள்ளிப் போட்டுட்டார்... ஏங்க குஷ்பு வெறும் பேப்பராங்க... ம்... பொங்கலப் பொங்கல வைக்க மஞ்சள மஞ்சள் எடு தங்கச்சி தங்கச்சி தங்கச்சி....
சரி விஷயத்துக்கு வருவோம்... இளையராஜா இசையில் தர்மசீலன் படத்தில் பாடிய பாடல் வரிகள் சில...
'எங்குமுள்ள அல்லா
பேரைச் சொல்லு நல்லா
நன்மைகள் மாத்திரம் கிடைக்கும்....
மேடு பள்ளம் இல்லா
பாதை தரும் அல்லா
பார்வையில் நிம்மதி பிறக்கும்...'
பாலு மகேந்திராவின் ராமன் அப்துல்லான்னு ஒரு படம்... அருமையான படம் அது... அதிலும் நாகூர் ஹனிபாவைப் பயன்படுத்தியிருப்பார் இளையராஜா, உன் மதமா என் மதமாங்கிற பாட்டு அது. அருமையான பாடலும் கூட. மதம் பிடித்து அலைபவர்கள் கேட்க வேண்டிய பாடல்... இப்பத்தான் சாதியும் மதமும் இணைய வெளிகளில் எல்லாம் தலை விரித்து ஆடுகிறதே... இணையம் வளர்ச்சிக்கு வித்திட்டதைவிட சாதீய வீழ்ச்சிக்குத் தண்ணீர் வார்த்துக் கொண்டுதான் இருக்கிறது.
'உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்
அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறேன் கேளடா
அந்த ஆண்டவன் தான் கிறிஸ்துவனா...
முஸ்லிம்மா... இல்ல ஹிந்துவா...'
முஸ்லிம்மா... இல்ல ஹிந்துவா...'
ஊரில் இருக்கும் போது பள்ளி வாசலுக்கும் நமக்குமான தொடர்பு பிள்ளைங்களுக்கு உடல் நலமில்லை என்றால் மிளகு மந்திரித்து கயிறு கட்டி வருவதற்காகச் செல்லுதல், படிக்கும் காலத்தில் நண்பர் கொண்டு வந்து கொடுக்கும் நோன்புக் கஞ்சி குடிப்பது என்ற வகையில்தான் இருந்தது. இங்கு வந்தபின் நிறைந்திருக்கும் பள்ளிகள், தொழுகைக்காய் போடப்படும் 'அல்லாஹூ அக்பர் அல்லா' பாடல் எனத் தினம் தினம் ஒரு நெருக்கத்தோடு நகர்கிறது. நோன்பு நேரத்தில் நோன்புக் கஞ்சி தினமும் பிரியாணி எப்போதேனும் கிடைக்கிறது.
அமீரகத்தில் அபுதாபியில் இருக்கும் பெரிய பள்ளிக்கு உள்ளே சென்று சுற்றிப் பார்த்து வர முடிகிறது. அதன் அழகை ரசிக்க முடிகிறது. எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தபோது அவருடன் பெரிய பள்ளிக்குள் அவர் பேசிக் கொண்டே நடக்க, நாங்கள் கேட்டுக்கொண்டே நடந்தோம்.
அப்படியே நம்ம ஹனிபா செம்பருத்தி படத்தில் பாடிய 'கடலிலே தனிமையில் போனாலும்' பாடலையும் கேளுங்க.... எனக்கு ரொம்பப் பிடித்த பாடல் இது.
பாடல் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
பிக் பாஸ் முடிஞ்சு போச்சா? இல்லைன்னா இம்மாதிரி நல்ல பதிவுகள் எல்லாம் வாராதே
பதிலளிநீக்குஹா... ஹா... பிக்பாஸ் பதிவுகளே நல்ல பதிவுகள்தான். எல்லாமும் எழுதுவோம் அண்ணா. கருத்துக்கு நன்றி.
நீக்குதிரைப்பாடல்களுக்கு மதமில்லை! "வானுக்கு தந்தை எவனோ, மண்ணுக்கு மூலம் எவனோ என்று பாடும்பாடலையும் ரசிக்கலாம். சொன்னா இனிக்காது, சுகமா இருக்குது என்றும் பொய்யின்றி நெய்கொண்டு போனால் என்ற பாடலையும் ரசிக்கலாம். நினைவுகள் இனிமை.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி அண்ணா. உண்மைதான் ஆனாலும் நல்ல பாடல்கள் உண்டு. நீங்க சொன்ன நெய் கொண்டு போனால் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
நீக்குநீலக்கடலின் ஓரத்தில் பாடல் நான் அதிகம் ரசித்த பாடல்களில் ஒன்று. அதனையும் இப்பதிவில் கண்டு மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஅனைத்துப் பாடல்களும் நல்ல பாடல்கள். ரசித்தோம் குமார். இசைக்கு மதம் ஏது மொழி ஏது?
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா