திங்கள், 23 செப்டம்பர், 2019

அப்பாவின் நாற்காலிக்கு மகுடம்

பிதீன் அண்ணன்...

அமீரகத்தின் இலக்கிய ஆளுமை...

எங்கள் குழும நிகழ்வுகளில் இரண்டொரு முறை இவரைப் பார்த்திருக்கிறேன்... அருகில் சென்று பேசியதில்லை... மனதில்பட்டதைத் தயங்காமல் சொல்லும் மனிதர் என்று மற்றவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். மேலும் நகைச்சுவையாய் கிண்டலடிப்பதில் கில்லாடி என்பதையும் அறிந்திருக்கிறேன்.

யூசுப் அண்ணன் தனது நாவலை அச்சேறும் முன் இவரிடம் வாசிக்கக் கொடுத்து, அருமையாக வந்திருக்கிறது என்ற வார்த்தையைப் பெற்றதை மிகப்பெரிய பாக்கியம் என்பதாய் எழுதியிருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

தம்பி நௌஷத்கானின் சிறுகதையை இவர் பகிர்ந்திருந்தபோது நகைச்சுவைக்காய் பல நாவல்கள், ஆயிரக்கணக்கில் கதைகள் எழுதியிருப்பதாய் எழுதியிருந்தார். நானும் உண்மையென நம்பி இவ்வளவாடா எழுதியிருக்கே எனக் கண்கள் விரிய ஆச்சர்யக்குறிகளை அடுக்கிக் கேட்டேன். அவரு ஜாலிக்காக எழுதியிருக்கார்ண்ணே என்றான் சிரித்தபடி. உடனே ஜாலிக்காக இதையெல்லாம் எழுதுவாங்களா..? உன்னைக் கேலி பண்ற மாதிரியிருக்குன்னும் கேட்டு வச்சேன். நான் அவருடன் பழகியதில்லை... குறிப்பாக அவரை அதிகம் அறிந்தவனும் இல்லை என்பதாலேயே இக்கேள்வி எழுந்தது.

அவர் இப்படித்தான் என்பதை பின்னாளில் அறிந்து கொண்டேன்... 

அப்படிப்பட்ட இலக்கிய ஆளுமை....

இருங்க இன்னொன்னு சொல்ல மறந்துட்டேன்... 

இலக்கிய ஆளுமைகள்ன்னாலே எனக்குப் பயம் அதிகம். விலகியே இருப்பேன்... இப்போது புதிதாய் எழும் பல ஆளுமைகளிடம் இருந்தும் விலகி வந்து கொண்டிருக்கிறேன்... ஒட்டுமொத்த இலக்கிய ஆளுமைகளிடம் பயம் என்றாலும் ஒரே ஒரு ஆளுமைக்கிட்ட மட்டும் தம்பியாய் ஓட்டிக் கொள்வேன்... அது ஆசிப் அண்ணன்.... போனில் எல்லாம் பேச மாட்டேன்... நேரிலும் அவர் அணைத்துக் கொண்டாலும் நான் அளவோடுதான் பேசுவேன்... இருப்பினும் அவர் மீது ஏதோ ஒரு அன்பு எப்போதும் இணக்கமாய் இருக்கும்.

நான் எழுதும் கதைகள் எல்லாமே கிராமத்துப் பின்னணி, எங்களின் வட்டார வழக்கு, வாழ்க்கை வலியைப் பேசும் கதைகளாகவே இருக்கும் என்பதால் புதுமை விரும்பிகளுக்கு அவ்வளவாகப் பிடிக்காது.... அழுகாச்சிக் கதை என அன்பாய்க் கடந்து போவார்கள். அந்த அழுகாச்சிக் கதையை லயித்துப்படித்து அது பிடித்துப் போனதில் காரைக்குடி மஜீத் அண்ணனுக்குப் போன் பண்ணி உங்க ஊர்க்காரந்தாய்யா... நல்லா எழுதுறான்னு சொல்லியிருக்கிறார்... அவர் வயதுக்கும் அனுபவத்துக்கும் என் கதையைப் புகழ்தல் என்பது கிடைத்தற்கரிய பெயரன்றி வேறேது.

அப்படிப்பட்ட இலக்கிய ஆளுமையான ஆபிதீன் அண்ணாவிடம் என் கதைகளை ஆசிப் அண்ணன் கொடுத்து வாசிக்கச் சொல்ல, என் கதைக்கு அவர் தளத்தில் இடமளித்திருக்கிறார். நல்லாயெழுதுறேய்யான்னு சொல்லி, கதையைப் பகிர்தல் என்பது அவ்வளவு எளிதாக கிடைக்கக் கூடிய வரமல்ல... ஆம் இது எதிர்பாராமல் கிடைத்த வரம். 

மோதிரக்கையால் குட்டுப்படுதல் என்பது வெற்றிக்கான அடையாளம்... இங்கே நான் இரண்டு மோதிரக் கைகளால் 'குட்'டுப் பட்டிருக்கிறேன்... ரொம்ப மகிழ்வாய் இருக்கிறது.

அவரின் தளத்தில் என் கதையைப் பகிர்ந்திருந்தார். நன்றி தெரிவித்துக் கருத்திட்டதும் அவர் போட்ட கருத்து கீழே...

நன்றாக எழுதுகிறீர்கள் குமார். அகல் மின்னிதழில் வந்த தங்களின் ஆன்மீகக் கட்டுரையை (‘கூத்தாட வந்தவள் தெய்வமான கதை) இப்போதுதான் ரசித்துப் படித்தேன். தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.

இதைவிட வேறென்ன வேண்டும்... தொடர்ந்து எழுதுவதற்கு....

மஜீத் அண்ணன் போனில் கூப்பிட்டு எந்த ஊரென விசாரித்து 'இஞ்சரு' வார்த்தையில்தான் உன்னைப் பற்றி என்னிடம் பேசினார் எனச் சொல்லி, நீண்ட நேரம் பேசினார். மிகவும் மகிழ்வாய் இருந்தது. 

நான் ஆளுமைகளிடம் எட்டியே நிற்பேன் என்பதால் இராஜாராம், பால்கரசை எல்லாம் தெரிந்த மஜீத் அண்ணனுக்கு நானும் உங்களுடன் உணவருந்தியிருக்கிறேன்... உங்களை எனக்கு நல்லாத் தெரியும்ன்னு அறிமுகம் செய்து கொள்ள வேண்டியிருந்தது. எப்பவும் ஒதுங்கியே இருப்பதால் யாருக்கும் தெரிவதில்லை. 

ஆம் நான் ஆளுமைகளிடம் ஒதுங்கியே இருப்பேன்.. :)

ஆபிதீன் அண்ணனின் தளத்தில் என் கதைப் பதிவில் நாகூர் ரூமி என்னும் எழுத்தாளர் இப்படிக் கருத்திட்டிருந்தார்.

கதை மனதை தொட்டது. அப்பாவின் நாற்காலி போல ஒவ்வெnரு வீட்டிலும் ஒரு பொருள் நிச்சயம் உண்டு. பாராட்டுக்கள் ரொம்ப நாள் கழித்து நல்ல சிறுகதை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

உண்மையிலேயே மிகவும் மகிழ்வாய் இருந்தது. 2011-ல் இதே வலைப்பூவில் பகிர்ந்த கதைதான் இது. இப்படியான கதைகளுக்கென எப்போதும் சிலர் இருப்பார்கள் என்பதை ரியாத் தமிழ்ச்சங்கப் போட்டியில் வென்ற வீராப்பு எனக்குக் காட்டியது. இப்போது 'அப்பாவின் நாற்காலி'யும் காட்டியிருகிறது.

அவர் குறிப்பிட்டிருக்கும் பந்தயம் கதை குறித்து சகோதரன் பிரபு கங்காதரன் பேசியபோது, அவர் சொன்னதும் ஆபிதீன் அண்ணன் சொல்லியிருப்பதும் ஒன்றே... பிரபு பேசிய பின்னர் முடிவை சற்றே மாற்றியிருக்கிறேன் என்பதையும் சொல்ல வேண்டும். வெற்றி என்பது சாதாரணமான முடிவுதான்.... தோல்வியிலும் வெற்றி என்பதாய் மாற்றியிருக்கிறேன். 

ஆபிதீன் அண்ணன் சொல்லியிருக்கும் சி.சு. செல்லப்பா ஐயா எனது எழுத்தை நல்லாயிருந்தாக் கொண்டாடவும் சரியில்லை என்றால் உரிமையுடன் திட்டவும் செய்யும் அன்பான மனிதர். பிக்பாஸ் எழுதுவதைத் திட்டியவர்களில் இவரும் ஒருவர் என்றாலும் தொடர்ந்து எழுதிக்கிட்டுத்தான் இருக்கேன்.

ஆபிதீன் அண்ணன் கதைக்கு முன்னோட்டமாய் எழுதியது கீழே...
  
ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்திய உலகளாவிய சிறுகதைப் போட்டியில் (2019) இரண்டாம் பரிசு பெற்றவரான சகோதரர் பரிவை.சே.குமாரிடம் எப்படி இவ்வளவு நன்றாக ‘வீராப்பு’ கதையை எழுதினீர்கள் என்று கேட்டார்களாம். அமீரக வாசிப்பாளர் குழுமத்தைச் சேர்ந்தவர்களைப் போல எழுதுவதில்லை என்று முதலிலேயே முடிவெடுத்தேன், வெற்றி பெற்றேன் என்று சரியாகச் சொல்லியிருக்கிறார். அதானே, எதற்கு சிறுகதை உருவம் பற்றி சி.சு.செல்லப்பா (இவரா? அண்டார்ட்டிகாவில் வசிக்கும் ஆங்கில எழுத்தாளர்) சொல்வதைப் படித்துவிட்டு பிறகு எழுத உட்கார வேண்டும்? அவரவருக்கு வாய்த்தது அவரவருக்கு. எல்லோரும் எழுதுவோம்! வாழ்த்துகள் குமார்.

அன்புத் தம்பியும் வாட்ஸப் கம்பியுமான ஆசிப்மீரான் கொடுத்த குமாரின் கதைகளிலிருந்து ஒன்றை இங்கே பகிர்கிறேன். சுவாரஸ்யத்திற்காக ‘பந்தயம்’ கதையைப் போடலாம் என்று நினைத்தேன், அதில் வரும் ‘எனக்கு பந்தயத்தப் பத்தி தெரியாதா… அடியே நாங்கெல்லாம் வீம்புக்கு வெசங்குடிக்கிறவனுங்க பரம்பர… யாரப்பாத்து என்ன பேசுறே…? ’ என்ற வடிவேல் பாணி வசனத்தை அப்படி ரசித்தேன். ஆனால் முடிவு ’ச்சொப்’ என்றிருந்தது. எனவே மனம் கனக்கச் செய்யும் ’அப்பாவின் நாற்காலி’யைத் தேர்ந்தெடுத்தேன். சிறந்த நூறு கதைகளை என்னிடம் தந்தால் சீதேவி வாப்பா வரும் கதையை மட்டும் தேர்ந்தெடுக்கும் ’வாப்பா பைத்தியம்’ நான். ஆபிதீனை விடுங்கள், எளிமையான சம்பவங்களை மெல்ல மெல்ல விரிவாக்கம் செய்து, அதைச் சிறப்பாகக் கோர்த்து தனக்கே உரிய பாணியில் சிறுகதைகளாகத் தருவதில் தனக்கென ஒருபாணியை உருவாக்கி இருக்கிறார் குமார் என்று கடுமையாகப் பாராட்டும் ஆசிபை நம்புங்கள்.

ஏற்கனவே 2011-ல் இந்தக் கதையை தன் வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் குமார். இருந்தாலும் இங்கேயும் இருக்கட்டும். நன்றி.

எவ்வளவு நகைச்சுவையான எழுத்து பாருங்கள்...

நன்றி ஆபிதீன் அண்ணா... 
நன்றி ஆசிப் அண்ணா...

இந்தத் தளத்தில் பல வருடங்களுக்கு முன் வாசித்த 'அப்பாவின் நாற்காலி'யை வாசிக்க இங்கே  சொடுக்குங்கள்... 

கருத்தை மறக்காமல் அங்கே சொல்லுங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

3 கருத்துகள்:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி