சனி, 28 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : வீடு கூட்ட வந்த ஐஸ்வர்யா

'பிக்பாஸ்... நான் ஒண்ணு கேட்கட்டுமா..?' - லாஸ்லியா.

'என்ன கேளுங்க..?' - பிக்பாஸ்.

'நான் ஒண்ணு உங்ககிட்ட கேட்கணும்...?'

'என்ன கவின் பத்திரமா வீட்டுக்குப் போயிட்டானான்னா... அதெல்லாம் போயிட்டான்...'

'இல்ல பிக்பாஸ்... அவன் கெடக்கான்... இப்ப நான் கேக்க நினைச்சது வேற...'

'சொல்லுங்க லோஸ்லியா...'

'என்னை உங்களுக்குப் பிடிக்குமா..?'.

மயான அமைதி... 

மறுமொழியில்லா அமைதி... 

தவளை கூட கத்தாத மழை இரவு போல அமைதி...

'என்ன பிக்பாஸ்.... பினாயில் குடிச்ச மாதிரி ஆயிட்டீங்க...'.

'ம்... என்னத்தைச் சொல்ல...'.

'பிடிக்குமா... பிடிக்காதா... அதைச் சொல்லுய்யா போதும்...'.

'எனக்குப் பிடிக்கும் லோஸ்லியா...'.

'ஆஹா... லவ் யூ பிக்பாஸ்...'.

'அய்யோ... எனக்குமா... கவின் கட்டையை எடுத்துக்கிட்டு வருவான் தாயீ...'.

'அவன் கெடக்கான் லூசுப்பய... நீ சொன்னேன்னு அஞ்சு லெட்டத்தை எடுத்துக்கிட்டு என்னைய அம்போன்னு விட்டுட்டுப் போன பயதானே...'.

'ம்... இருந்தாலும் என்னால அவன் அஸ்க்கீ வாய்ஸ்ல பேசுறதைக் கேட்க முடியாது தாயீ... உன்னைய எனக்குப் பிடிக்கும் தாயீ... எந்திரிச்சிப் போ தாயீ...'.

'ஆஹா... ஆத்தா நான் பாஸாயிட்டேன்... என்னைய பிக்பாஸ் கட்டிக்கிறேன்னு சொல்லிட்டார்...'.

Related image

கவின் சென்றதை நினைத்து அழுது கொண்டேயிருந்தார் லாஸ்லியா... விஜய் டிவி தன்னை வெளியேறச் சொன்னதை பொண்டாட்டிக்கிட்டயும் சொல்லலை போல... அதுவும் கதறி அழுத போதும் 'போகாதே... போகாதே... என் கனவா...' அப்படின்னு பாடவில்லை என்றாலும் பிரிவின் வலியில் புலம்பித் தீர்க்கிறார்.

எல்லாரும் ஆறுதல் சொல்கிறார்கள்... அப்பாவுக்காக விளையாடு... அம்மாவுக்காக விளையாடு.... தங்கச்சிக்காக விளையாடுன்னு ஆனா கவினுக்காக நான் விளையாடாமல் போறேன்னு நிக்கிது லாஸ்லியா. அப்புறம் ஒவ்வொருத்தராச் சொல்லிச் சொல்லி சமாதானப் படுத்தினார்கள். கொஞ்சம் இயல்பு நிலைக்குத் திரும்பியது போல் காட்டிக் கொண்டார்.

இரவு வீடு கூட்டுறதுக்காக ஐஸ்வர்யா தத்தாவை அனுப்பினார்கள். இதெல்லாம் ஒரு உடையின்னு மக்கள் பார்க்கும் நிகழ்ச்சிக்கு அனுப்பி வைக்கும் பிக்பாஸை என்னவென்று சொல்வது..? டிஸ்கோ சாந்தி டவுசரைப் போட்டு மிச்சமிருந்த துணியை இடுப்பில் கட்டி தெருக்கூட்ட வைத்துக் கொண்டே வந்தார். இவர் வந்ததும் தன்னோட 'அலேகா' என்ற படத்தின் போஸ்டரை வெளியிடவே வந்தார். 

'பிக்பாஸ் நான் உங்களை லவ் பண்ணுது... இந்த பிக்பாஸ் வீட்டுல வந்ததுல எனக்கு 5 படம் வந்திருக்கு... இது முதல் படம்... இது இப்ப உள்ள காதலர்களுக்கான படம்... ' அப்படின்னு நிறையப் பேசினார். அவர் இருக்கும் போது நம்ம ஊரு மளிகைக் கடையில  சாமான் மடிக்கிற மாதிரி கூம்பு வடிவில் பேப்பரை கொடிக்கயிறு மாதிரி ஒன்றில் கட்டி வாயால் ஊதி ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்குக் கொண்டு போகணும்... தர்ஷன் வெற்றி பெற்றான்.

'ஐஸூ நீ அப்படியே பொயிட்டு கிச்சன் பக்கமா வா... நிறையக் குப்பை கிடக்குன்னு சாண்டி சொன்னது செம. நீ போகும் போது உன்னைய விட உன்னோட துணியை பாதுகாப்பா அனுப்பி வைக்கிறோம் என்றும் சொன்னார். பாட்டுப் போடும் போதே வரப்போறாது ஐஸ்வர்யான்னு தர்ஷன் சரியாகச் சொன்னான். 

ஐஸ்வர்யா வந்த போது லாஸ்லியாவின் பார்வையில் ஒரு வித்தியாசம் தெரிந்தது. பிக்பாஸ்க்கு என்னை ரொம்பப் பிடிக்கும் என்றதிலும் படத்தின் போஸ்டர் வெளியிட்டு ஐந்து படம் கையில் இருக்குன்னு சொன்ன போதிலும், போட்டிருந்த அரைகுறை உடையைப் பார்த்த போதிலும் லாஸ்லியாவின் முகத்தில் ஐஸ்வர்யா இடத்தில் தான் நிற்க வேண்டும் என்ற எண்ணம் ஓடியதைக் காட்டியது. இது மறுநாளே வெளிப்பட்டது.

96ம் நாள் காலையில் 'எம்பேரு மீனாகுமாரி' பாடல் ஒலிக்க, எல்லாருமே ஆடினார்கள். சாண்டி சில நேரங்களில் ஆடும் ஆட்டம் மிகவும் ரசிக்க வைக்கும். நேற்றைய ஆட்டமும் அருமை.

அப்புறம் தோசை போட்டு அதில் நிலாவைக் காட்டிக் கொண்டிருந்தார். அதன் பின் எல்லாரும் ஜாலியாப் பாட்டுப்பாடிக்கிட்டு இருக்க, 'சைலன்ஸ்' எனச் சொன்ன பிக்பாஸ், லாஸ்லியாவை உள்ளே கூப்பிட்டு அடுத்த போட்டிக்கான அறிவுப்பைக் கொடுக்க, மனசுக்குள் வாசித்தார். 'ஏய் லூசு... மனப்பாடம் பண்ணிட்டியா...' அப்படின்னு கேக்கவும் தன்னோட டிரேட் மார்க் 'ஈஈஈ'யை காட்டினார். பின்னர் வாசித்துவிட்டு நான் ஒண்ணு கேட்கவான்னு சொல்லிட்டு என்னைப் பிடிக்குமான்னு கேட்க, எங்கே கவினுக்குப் போட்டியா என்னை நிப்பாட்டிருவாளோன்னு நினைச்சு ரொம்ப யோசிச்சி பிடிக்கும் என்றார்.

உடனே மகிழ்ச்சியில் குதித்து வெளியில் வந்து எல்லாரிடமும் சொன்னார். என்னடா நேத்து என்னையச் சொன்னே... இப்ப இவளைச் சொல்றேன்னு ஷெரின் கோபமாய் கத்த, அடுத்து ஒரு பாட்டும் பாடி உனக்குத்தான் ஐயான்னு சொன்னதும் ஷெரின் முதல்ல கதவைத் திறங்க... நான் போகணும்ன்னு ஜாலியாச் சொல்லிக்கிட்டு இருந்தார். லாஸ்லியாவின் இந்த வெளிப்பாடு ஜஸ்வர்யாவின் வருகையை ஒட்டியதுதானே ஒழிய, ஷெரினைச் சொன்னவன் என்னையும் சொல்லணும்ன்னு எல்லாம் இல்லை...

பிக்பாஸ் 'சத்தம் போடாதீங்கடா'ன்னு எட்டாப்புச் சார் மாதிரி கத்தினதை வைத்துக் கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். அந்த சமையத்தில் சாண்டி 'சைலன்ஸ்... பிக்பாஸ் பேசும் நேரமிது'ன்னு பாடியது சிறப்பு. 

அடுத்து ஒரு போட்டி கார்டன் ஏரியாவில் ஒரு கண்ணாடி தொட்டிக்குள் கிடக்கும் சின்னச் சின்ன தெர்மாக்கோல் பந்துகளை பாக்சிங் கிளவுஸ் மாட்டிய கையால் அள்ளியெடுத்து அடுத்த பக்கம் இருக்கும் பவுலை நிரப்ப வேண்டும். இங்கும் தர்ஷனே வெற்றியாளன்.

அடுத்த போட்டி ஆக்டிவிட்டி ஏரியாவில் ஒரு கோல் போஸ்ட் எதிரே ஒரு பந்தை வைத்து கண்ணைக் கட்டிக் கொண்டு கோல் போட வேண்டும். அதுவும் என்னென்ன வேண்டும் என்பதை முன்னரே எடுத்தபடி கோல் விழுந்தால் கிடைக்கும் என்று சொல்ல ப்ரைடு சிக்கன், ஸ்பா, பிக்பாஸ் போட்டோ, புரோட்டா சிக்கன், ஹெட் மஜாஸ் என ஒவ்வொருவரும் எடுத்து கோல் போட, முகன் தவிர்த்து மற்றவர்கள் கோல் போட்டார்கள்.

முகனை எல்லாரும் கேலி பண்ண ஷெரின் இருக்கதாலதான் நான் முணு முறையும் தப்பாவே போட்டேன்னு சொன்னது சூப்பர். 

இறுதி நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கடினமான போட்டிகள் எதுவுமின்றி , திங்கிறதுக்கு நல்ல அயிட்டங்களைக் கொடுத்து, இவர்களுடன் ஜாலியாக பிக்பாஸ் விளையாடிக் கொண்டிருக்க பார்க்கும் நமக்குத்தான் போரடிக்கிறது.

இண்டியாகேட் பாசுமதி அரியை நீங்க படாதபாடு படுத்திட்டீங்க... அதனால இன்னைக்கு நாங்களே உங்களுக்கு பிரியாணி தர்றோம்ன்னு சொல்லிக் கொடுக்க,  அய்... பிரியாணி... எங்கே புரோட்டா சிக்கன் என தர்ஷன் கேட்டுக் கொண்டே இருந்தான்.

இங்கிருந்து போனவர்களில் யாரை மிஸ் பண்ணுறீங்கன்னு   அடுத்த டாஸ்க், சேரனை ரொம்ப மிஸ் பண்ணுவதாகச் சொன்ன தர்ஷன், மறக்காமல் சாப்பாடு பற்றியும் சொன்னான்.... என்னடா இவன் தின்னிப் பண்டாரமான்னு எல்லாம் யோசிக்காதீங்க... எனக்கு திங்கப் பிடிக்கும் என்றால் சபை நாகரீகம் கருதி அதை மறைத்து மறைத்துப் பேச வேண்டியதில்லை... அதைத்தான் தர்ஷன் சொன்னான்.

ஷெரின் சாக்சியையும் கூடவே அபியையும்... சாண்டி கவினையும் முகன் அபியையும் லாஸ்லியா கவினைச் சொல்ல சேரன் மற்றும் அபியையும் சொன்னார். அருமையான ஒரு நிகழ்வு. நெகிழ்ச்சியான விஷயத்தைக் கையில் எடுத்து அழுது தீர்ப்பார்கள் என்று நினைத்த பிக்பாஸ்க்கு மனதில் உள்ளதை மட்டும் பேசி உணர்ச்சி வசப்படாமல் அழாமல் தங்கள் மனதில் இருப்பதைச் சொன்னார்கள்.

லாஸ்லியா எனக்குப் பிடிக்காதவன் மெல்ல மெல்ல பிடித்துப் போனவன் ஆனான் என்று சொன்னதும் தமிழ்ச் சினிமாவில் மருத்துவக் கல்லூரி படிக்கும் பெண், மத்திய பேருந்து நிலையத்தில் வைத்து ஒருவனை வெட்டிக் கொள்ளுபவனைப் பார்த்து முகம் சுளித்துப் பின் அவன் பின் சுற்றி காதலிப்பது போல்தான் தன்னுடைய கருத்தைச் சொன்னார். அவன் எனக்கு நல்ல நண்பன்...  இதை எல்லாரும் கொச்சைப்படுத்துறாங்க என்பதாய்ச் சொன்னதுதான் நகைக்க வைத்தது.

இருவரும் காதலித்ததும் வெளியில் போய் பேசிக்கலாம் என்ற போது நாலே எழுத்து வார்த்தைதான் அதை இங்கயே சொல்லுன்னு கவின் நின்றதும் எல்லாரும் பார்த்ததுதான்... நட்பு என்பதைவிட அது காதலாய் மாறி நின்றது என்பதைச் சொல்ல நினைத்து மனசுக்குள் புதைத்து வைத்துவிட்டு சிரித்து மழுப்பி நட்பென்றார். சரித்தான் இன்னும் ஒரு வாரத்துக்கு லாஸ்லியா ஆரம்பத்தில் இருந்த லாஸ்லியாவாக இருக்க வேண்டும் என்பதே நம் எண்ணமாய் இருந்து.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி