வியாழன், 26 செப்டம்பர், 2019

பிக்பாஸ் : கவின் எடுத்த அதிர்ச்சி முடிவு

Image result for biggboss-3 day 94 images kavin

'தல நான் ரெடி தல' என்றான் கவின்.

எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்கள்.

'உனக்கு என்னடா இப்போ ஆச்சி...' அப்படின்னு சாண்டி கேட்டாப்ல.

'கவின்...  யோசி கவின்...' அப்படின்னு திருமதி.கவின் கண் கலங்கினாங்க.

மற்றவர்கள் பேச்சில்லாது உறைந்து போய் அமர்ந்திருக்க. 

'எதாயிருந்தாலும் உங்ககிட்ட சொல்லமயா இருப்பேன்' என எழுந்து நின்றான் கவின்.

அவர்கள் எதிரே திறந்து வைக்கப்பட்டிருந்த பெட்டியில் 5 லட்சம் என எழுதப்பட்டிருந்தது.

94ஆம் நாள் காலை பள்ளியெழுச்சியாக 'வெறித்தனம்... வெறித்தனம்' அப்படிங்கிற பிகிலு படப் பாடல் போட்டானுங்க... இப்பல்லாம் விஜய்யும் படம் வரும் முன் ரஜினி மாதிரி அரசியல் பேசுகிறார்... செமல்ல... என்ன மக்கள் பாசம்... அட இவனல்லவோ தலைவன்... தங்களோட படம் வரும்போது மட்டும்தான் இந்தக் கூத்தாடிகளுக்கு பாவப்பட்ட மக்கள் கண்ணுக்குத் தெரியிறாங்க... நாம திருந்தாத வரைக்கும் இவனுக இப்படித்தான் சம்பாதிப்பானுங்க... 

முந்தைய சீசன்களிலெல்லாம் இறுதிக்கட்டத்தில் கொடுக்கப்பட்ட போட்டிகள் மிகக் கடுமையாக இருந்தன. போட்டியாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு விளையாடினார்கள். பார்க்க விறுவிறுப்பாகவும், ஆண்களுடன் பெண்கள் சரிசமமாகப் போட்டி போட்டது வியப்பாகவும் இருந்தது. அதுவே அந்த சீசன்களை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

இந்த முறை அதற்கு நேர்மாறாகத்தான் இருக்கிறது.... சிறப்பாக விளையாண்டவர்களை எல்லாம் 'வீ ஆர் த பாய்ஸ்' எனக் கட்டம் கட்டி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்... இவர்களுக்குத் துணையாக மக்கள் வாக்கில் இரண்டாமிடத்தில் இருந்த சேரன் போன்றோரை பிக்பாஸே வெளியேற்றினார். மேலும் இறுதிக் கட்டங்களில் திருவிழாவுக்கு வந்தவனுங்க போல சிரிச்சி விளையாட விட்டுட்டு பிக்பாஸூம் சேர்ந்து கொட்டமடித்துக் கொண்டிருக்கிறார். போட்டிகளே இல்லாமல் பொழுது போக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்பச் சுற்றுலா வந்தது போல இருக்கிறீர்களே எனக் கமல் ஒருமுறை கேட்டார்... இப்ப இன்பச் சுற்றுலாவுக்கு பிக்பாஸே அழைத்து வந்தது போல்தான் இருக்கிறது. ஆளாளுக்கு ஜாலியா இருக்கானுங்க... வேளாவேளைக்குச் சமையல் என ஏதோ ஒன்றைச் செய்து காமிக்கிறார்கள். சத்தியமாக அதை எவனும் சாப்பிடப் போவதில்லை... கண்டிப்பாக வேறு உணவுதான் கொடுக்கப்படும். எல்லாரும் தூங்கும் போது எவன் சப்பாத்தி போட்டு குருமா வச்சான்னே தெரியலை ஆனா எல்லாரும் சாப்பிட்டுக்கிட்டு இருந்தானுங்க.

பிக்பாஸ் என்பது எழுதப்பட்ட ஒரு திரைக்கதைதான் என்றாலும் முழுக்க முழுக்க திரைக்கதையில்ல... சில விஷயங்கள் அதுவாகவே நிகழ்வதுதான்... கவின்-லாஸ்லியா காதல்... மது கையறுப்பு... ஷெரின்-தர்ஷனின் நட்பை மையமாக்கி நகரும் காதல்... சேரன்-லாஸ்லியா பாசம்... அவென்சர்ஜ் குரூப்... கவின்-சாக்சி காதலும் முறிவும்... மீரா-சேரன் விஷகாரம், சேரன்-சரவணன் சண்டை, அபி-முகன் காதலும் பிரச்சினையும் என சில நிகழ்வுகள் எதிர்பாராத எதிர்பார்ப்பைக் கொடுத்தவைதான்.

பிக்பாஸ் எங்கு சறுக்கியது என்றால் அஞ்சு பேர் குழுவாய் ஒருவரை வெளியேற்ற முன்னிறுத்தும் போது வாய் மூடி பார்த்ததும், கமலை வைத்தே அது விளையாட்டின் ஒரு போக்கு எனச் சொல்லியதும், மக்கள் வாக்கின்படியே வெளியேற்றம் நிகழ்கிறதென்ற பொய்யை பல முறை சொல்லி உண்மையாக்க முயற்சிப்பதும், வாக்கின் அடிப்படையில் இவர் போவார் என்று நினைக்கும் போது இவரிருந்தால்தான் கல்லாக் கட்ட முடியும் என்று மற்றொருவரை அனுப்பியதும், லாஸ்லியா அப்பாவுக்கு கமல் மூலமாகவே காதலிக்கிறது தப்பில்லை பச்சைக் கொடி காட்டுய்யா எனச் சொல்ல வைத்ததும், குறிப்பாக டாஸ்க்குகள் கொடுக்க முடியாமல் திணறுவதுமே இந்த சீசனின் சறுக்கலுக்கு முக்கியக் காரணம்.

பிக்பாஸ் குரலுக்கு என்று ஒரு சிறப்பு... ஒரு மரியாதை... ஒரு பயம் இருந்தது. இது மூன்றையும் இந்த முறை பிக்பாஸே கேலி, கிண்டல் என்ற பெயரில் கெடுத்துக் கொண்டு விட்டார். மேலும் சென்ற சீசன்களில் கமல் வரும் நாட்களில் எல்லாரிடமும் பயமும் பதட்டமும் இருக்கும். அதை அந்த எபிசோட் முழுவதும் காண முடியும்... அத்தனை மரியாதை கொடுத்தார்கள். இந்த முறை கமல் முன்னே செருப்புக்காலை ஆட்டியபடி அமர்வதுடன்... சரி சரி இப்ப என்ன... சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டுப் போ அப்படிங்கிற தெனாவெட்டு மட்டுமே இருக்கிறது. இந்த முறை கமல் போட்டியாளார்களுக்குப் பயந்து சொல்ல வேண்டியதை நேரடியாகச் சொல்ல முடியாமல் திக்கித் திணறி... சுற்றி வளைத்துப் பேசிக் கொண்டிருக்கிறார். சுரத்தில்லாத வார இறுதியாய் நகர்கிறது என்பதே உண்மை.

இண்டியாகேட் பாசுமதி அரியின் மூன்றாம் நாள் டாஸ்க்... எதோ புலாவ் என்றதும் சாண்டி களமிறங்க, போதும் ராசா... நீ அன்னைக்குச் சமைத்தது... ஆளைவிட்டுட்டு அங்கிட்டுப் போய் நில்லுன்னு சொல்லி ஷெரினும் முகனும் சமைத்தார்கள். அதை யார் சாப்பிட்டா என்றெல்லாம் தெரியாது. நல்ல பிரியாணி அரிசியும் அதற்கான எல்லாப் பொருட்களும் கொடுக்கப்படும் போது சமையல் தூள் பறக்க வேண்டாமா... கெடுத்து எடுத்து வைத்து மூடிக் கொண்டிருக்கிறார்கள்... 

இதைப் பார்த்த சீமான் இன்னும் இங்கே என் அப்பத்தா சாப்பாடின்றி தவிக்கிறாள்... அங்கே பிக்பாஸ் வீட்டில் பாசுமதியை பாகுபலியாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என தொண்டை கிழிய அரசியல் பேசாததும், ஆக பிக்பாஸ் இல்லத்திலே கரீனா சமைக்கிறேன் என உப்பில் பாதத்தைப் போடுகிறார் என ஸ்டாலின் சரியாகப் பேசாததும்,  பிக்பாஸ் வீட்டில் மையலே சரியில்லை... அதையே தட்டிக் கேட்க முடியாத கமல் எங்களைத் தட்டுறாராம் என செந்தில்பாலாஜி சொல்லாததும், சாண்டியின் சமையல் சரியில்லாமல் போனது திட்டமிட்டதல்ல... எதேச்சையானது என பிரேமலதா அறிக்கை விடாததும், பிக்பாஸ் சமையலைவிட நாங்க எந்த விதத்தில் கேவலமாய்ப் போனோம் என மருத்துவர் கேட்காததும் வருத்தமான விஷயம்.

சமையலின் போது முகன் ஒரு பாடலைப் பாடினான்... இது புதுசு... கிராமத்து நாட்டுப்புறப் பாடலை ஒத்த பாடல்... கேட்க நன்றாக இருந்தது. இசையுடன் கேட்டால் இன்னும் பிடித்துப் போகும். பல திறமைகள் நிறைந்த திறமையாளன் முகன்... இந்த 90 நாட்களில் தன்னைப் பட்டை தீட்டிக் கொண்டே இருக்கிறான். பாரதியின் காதலன் போலும்... முண்டாசுக் கட்டிக் கொள்வதில் முரட்டு ஆசை போலும் எப்போதும்... முண்டாசுடனே திரிந்தான்.

ஒருவன் அல்லது ஒருத்தி எழுதிய கடிதம் தனக்கானதுதான் என்றபோதிலும் அதிலென்ன எழுதியிருப்பார் என்பதை அறியாத மனநிலையில் அவர்கள் கிழித்துப் போட்டதைக் கண்டெடுத்து வாசிப்பதில் ஒரு குறுகுறுப்பும் மகிழ்வும் இருக்கும். அதை அனுபவித்திருந்தால் மட்டுமே அதன் சுவையை உணரமுடியும். அப்படி ஒரு ஆனந்தத்தை, குறுகுறுப்பை அனுபவிக்க நினைத்து ஷெரின் கிழித்துக் குப்பைக் கூடையில் போட்ட கடிதத்தைத் தேடி எடுத்து முகன் உதவியுடன் ஓட்டி வாசிக்கிறான் தர்ஷன்.

எல்லாருக்கும் கேட்கும்படி வாசிக்க நினைப்பவனை இது உனக்கானது... அவள் ஏதோ காரணத்தால் காட்ட விரும்பவில்லை என்னும்போது உன்னைத் தவிர மற்றவர்கள் யாரும் அதிலென்ன இருக்கிறது என்பதை அறியக்கூடாதென அறிவுரை சொல்கிறான் முகன்... கிரேட். தர்ஷன் ஆர்வக்கோளாறு நிறைந்தவன்... மனசில் உள்ளதை எழுத்தில் வடித்ததை எல்லாரும் தெரிந்து கொள்ளட்டுமே என்பதில் இல்லை காதல் என்பதை உணராதவனுக்கு உணர்த்திய முகன்... பல விஷயங்களில் ரொம்பத் தெளிவாய் இருக்கிறான். 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் முதல்நாள் யாஷிகா சொல்லி எழுதிய லெட்டரைக் கிழித்து குப்பைக் கூடையில் போட்டால் எடுப்பார்களென பேண்ட் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டு அலைந்த ஷெரின், மீண்டும் இரவு 1.30 மணிக்கு எழுதியதை மறுநாள் கிழித்து மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பிருந்தும் குப்பைக் கூடையில் போட்டதுடன், அதைத் தர்ஷன் எடுத்து ஒவ்வொன்றாக ஒட்டி முடித்து வாசிக்கும் வரை பாத்ரூமில் இருந்து வரவில்லை. இது எதேச்சையாக நடந்தது போல் தெரியவில்லை... திட்டமிட்ட நிகழ்வாய்த்தான் தெரிகிறது. நிகழ்ச்சியின் சுவராஸ்யத்துக்காக முன் முடிவு செய்யப்பட்டிருக்கலாம்.

நீ படிச்சேன்னு அவளுக்கிட்ட காட்டிக்காதேன்னு சாண்டி சொன்னாலும் தர்ஷன் ஆர்வக்கோளாறு அதிகமிருக்கும் பையன் என்பதால் வாசித்த வரிகளில் ஒன்றை யோசிக்காமல் ஷெரினிடம் சொல்ல, அதன் பிறகு ஷெரின் ரொம்பக் கோபமானார்... தன்னோட தனியுரிமை பறிக்கப்பட்டதாய் புலம்பினார். யாரும் வாசிக்கலை எனத் தர்ஷன் சொல்லியும் ரொம்ப நேரம் வருந்தியவர் முகன், சாண்டி பார்த்தால் தப்பில்லை... மற்றவர்கள் பார்க்ககூடாது என ஒருவழியாக சமாதானம் ஆனார். அந்தக் கண்ணே ஆயிரம் காதலை அள்ளி வீசுதே... தர்ஷெனெல்லாம் தரிசுதான் போங்க.

தர்ஷனுக்கு ஆர்வமிருக்க வேண்டியதுதான்... அதுக்காக சாப்பிட்ட சப்பாத்தியை வைத்து விட்டு ஓடி எடுத்து, ஒட்டி வாசித்து, அதை மனசுக்குள் வைத்துக் கொள்ளாமல் வெளிச் சொல்லி, காதலுடன் சிரித்து, ஷெரினை சமாதானப்படுத்தி எல்லாமுமாய் நகர்ந்ததில் அவனுள் சனமின் காதல் சடுதியில் காணாமல் போனது. சனம் சாக்சிகளாகும் போது ஷெரின் லாஸ்லியாக்களாகத்தானே மாறுவார்கள்.

ராஜாவுக்கு எல்லாரும் நல்லா பணிவிடை செஞ்சிட்டீங்க... இனி ராஜா உங்களுக்குப் பணிவிடை செய்வார் என்றதும் ஆளாளுக்குத் தர்ஷனை வச்சிச் செஞ்சார்கள்... ரொம்பவும் ஜாலியாய் நகர்ந்தது. 

அப்புறம் வட்டத்தில் இருக்கும் பந்தை கையில் இருக்கும் வளையத்தால் இழுத்து தங்கள் வட்டத்துக்குள் வைக்க வேண்டும் என்ற மட்டமான டாஸ்க் (நாள் 94 என்பதை நினைவில் கொள்க) கொடுக்கப்பட்டது. வென்றது லாஸ்லியா... வட்டம் போட்டு தூக்குறதுல இவரை அடிச்சிக்க ஆள் யாரிருக்கா..?

தங்களோட படத்தைப் பிக்பாஸ் வீட்டுல வந்துதான் சொல்வோம்ன்னு ரித்விகாவும் ஜனனியும் வந்தாங்க. இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு என்ற தான் நடித்த படத்தின் போஸ்டரையும் டிரைலரையும் வெளியிட்டார் ரித்விகா. அதில் இன்னொரு நாயகியாக ஆனந்தியைப் பார்த்ததும் கவினுக்கு மகிழ்ச்சியோ இல்லையோ நமக்குப் பேரானந்தம்... ஆனந்தியைப் பிடிக்கும்ன்னு சொன்னா தப்பாங்க.

ஜனனி தான் நடித்த வேழம் திரைப்படத்தின் போஸ்டரை அறிமுகம் செய்து வைத்தார். படத்தின் பெயர் கூட யாருக்கும் வெளியில் தெரியாது. இங்குதான் முதல்முதலில் சொல்கிறோம் என்றார். 

இருவரின் படங்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அப்புறம் ஒருத்தர்தான் 50 லட்சம் வெல்ல முடியும்.... இருக்க ஆறு பேர்ல அஞ்சு பேர் நாமினேசன்ல இருக்கீங்க... அதுல யார் வெளியாவீங்கன்னு தெரியாது... எனவே விருப்பமிருந்தால் இந்த அஞ்சு லெட்சத்தை எடுத்துக்கிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க... என பிக்பாஸ் சொன்னார்.

சென்ற சீசன்களில் 5, 15 லட்சங்கள் சலுகையாகக் கொடுத்தபோதும் யாரும் போட்டியை விட்டு விலகிப் போகவில்லை... இறுதிவரைப் போராடிப் பார்ப்போம்... பணத்துக்காக விளையாடவில்லை என நின்று விளையாண்டார்கள். இம்முறை அது மாற்றப்படும் போல் தெரிகிறது,

ஆம் கவின் எழுந்து 'தல நான் ரெடி தல' என்றார். மற்றவர்களுக்கு அதிர்ச்சி.

வினைப் பொறுத்தவரை தன் கடனை அடைக்கக் கூடிய அளவுக்குப் பணமிருந்தால் போதும் போயிருவேன் என்று ஆரம்பத்தில் சொல்லியிருந்தான். தன் தேவைக்கான பணத்தை எட்டிவிட்டோம் என அவன் நினைத்து இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்...  

ரெண்டாவதாக எல்லாரையும் அடித்துத்தான் இந்த இடத்தில் நிற்கிறான்... அது விளையாட்டு உக்தி என்றாலும் மனசுக்குள் வருத்தம் வரத்தான் செய்யும். அதனால் கூட இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்... 

மூன்றாவதாக நட்பு... நட்புன்னு சொல்லி, அதுக்காக விட்டுக் கொடுப்பேன் எனச் சொல்லிவிட்டு எல்லாரையும் தள்ளிவிட்டு மேடையில் ஏறுவதை விரும்பமால், அதைக் குற்றமென உணர்ந்து, அதற்காகக் கூட இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்... 

நாலாவதாக, இதையெல்லாம் விட இப்படி நட்புக்காக விட்டுக் கொடுத்து, செய்த செயலுக்கு வருந்தி வெளியில் போவதால் லாஸ்லியா குடும்பத்தில் தன் மதிப்பு உயரலாம் என்று கூட நினைத்து இந்த முடிவுக்கு வந்திருக்கலாம்.

இது எழுதப்பட்ட திரைக்கதை என்பதால் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக கவின் வெளியேற வேண்டிய சூழலைத் தங்களின் டிஆர்பிக்காக விஜய் டிவி இப்படிப் பயன்படுத்த நினைக்கலாம்... 

ஒண்ணுமே விளையாடாத கவினை இறுதிக்குக் கொண்டு செல்வதில் இருக்கும் பிரச்சினைகளை மனதில் வைத்து, பிக்பாஸே கவினை முன்னரே போகச் சொல்லியிருக்கலாம்... 

நட்புக்காக விட்டுக் கொடுத்தான் என மக்களை நம்ப வைத்து கல்லாக் கட்டுவதுடன் கவினை மக்கள் மனதில் உயர்ந்தவனாகக் காட்ட நினைத்திருக்கலாம்... 

லாஸ்லியாவை வெற்றியாளராக்க கவினை இப்போது வெளியேற்றியிருக்கலாம்... 

இப்படி தொலைக்காட்சியின் பக்கம் இன்னும் நிறைய 'கலாம்'கள் இருக்'கலாம்'.

எது எப்படியோ கவினின் முடிவு என்ன..? 

என்ன நிகழ்ந்தது..? 

உண்மையில் கவின் வெளியானானா...?

என்பதெல்லாம் இன்றே தெரிய வரும்.

இந்த வாரம்தான் ஆரம்பத்தில் எல்லாரையும் சிரிக்க வைத்த கவினைப் பார்க்க முடிந்தது. காதலில் விழுந்தவன் மனநிலை சில நேரங்களில் எந்த முடிவும் எடுக்க முடியாத நிலையில்தான் இருக்கும்... லாஸ்லியா கிடைப்பாளா... மாட்டாளா... என்ற சிந்தனையிலேயே சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் இழந்து விட்டான். இப்பவும் நட்புக்காக என்று சொன்னதில் உண்மையே இருந்தாலும் இனி எனக்காக விளையாண்டு பார்ப்பேன் என இறங்கி, நின்று விளையாடியிருக்கலாம். லாஸ்லியாவுக்காக விளையாட்டிலும் கவனம் செலுத்த முடியாத நிலையே அவனை வெற்றிப்பாதையில் இருந்து விலகி வரச் செய்திருக்கிறது.

1,2,3 வரிசையில் மூன்றாவதாய் ஷெரின்...

யாருடைய மனசும் புண்படக்கூடாதென நினைக்கும் மனப்பாங்கு...

மனதில்பட்டதை தெளிவாய் எடுத்து வைக்கும் குணம்...

சேரன் சொன்னதைப் போல யாரிடமும் முகமூடி மாட்டிக் கொண்டு பேசாத பாங்கு...

எப்பவும் குடிகொண்டிருக்கும் குழந்தைத்தனம்...

பாதிக்கப்பட்டதும் பொலபொலவென வழியும் கண்ணீர்...

தர்ஷன் மீது ஒரு கணத்தில் வந்த காதலை, நட்பென மெல்ல நகர்த்தும் அழகு...

இப்படி நிறைய இருக்கு ஷெரினிடம்...

கவினுக்கே இறுதியில் பட்டம் கொடுப்பாங்க விஜய் டிவி என எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும் வேளையில் கவினின் முடிவு கொடுக்கும் மாற்றத்தில் ஷெரின் வெற்றியைப் பறிக்கும் வாய்ப்பைப் பெற்றால் மகிழ்ச்சியே.

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி