செவ்வாய், 27 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : வெற்றி பெற என்னிடம் என்ன தகுதியிருக்கு..?

Image result for bigg boss 3 tamil 26th august episode images
நீங்கள் சுற்றுலாவுக்கு வரவில்லை விளையாடவே வந்திருக்கிறீர்கள்... வெற்றி என்னும் இலக்கை அடைய சுறுசுறுப்பாய் விளையாடுங்கள்... உறவு முறைகளை எல்லாம் தூக்கிக் கொண்டு அலையாதீர்கள் என கமல் சொல்லிவிட்டு, யாரிடமும் பகிர்ந்து கொள்ளும் விஷயமல்ல.... இதை மனசுக்குள் வைத்து வெற்றியை நோக்கி விளையாட வேண்டும்... இவர்கள் அதைச் செய்வார்களா..? என பார்வையாளர்களிடம் புலம்பிச் சென்றதன் அர்த்தம் எல்லாருக்கும் புரியாமலில்லை... பிக்பாஸ் இல்லத்துக்குள் நாமினேசனே குழு முடிவாய்த்தான் இருக்கிறது... அப்படியானால் இதுவும் மனசுக்குப் பிடித்தவர்களிடம் கண்டிப்பாகப் பகிரப்படும் என்பதை அவரும் உணர்ந்திருக்கிறார்... அதுவும் சிலரிடம் பகிரப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

காலையில் 'ஜிகிரு... ஜிகிரு...' பாடல்தான் திருப்பள்ளி எழுச்சியாய்... ஷெரின் மற்றும் சேரன் இருவரும் கையால் நடனமாடினார்கள்... முகனும் லாஸ்லியாவும் மட்டுமே ஆடினார்கள்... மற்றவர்கள் சோர்வாய்...

எப்பவும்  துறுதுறுன்னு இருக்க தர்ஷன் சோகமாய் உட்கார்ந்திருக்க, ஷெரின் 'என்னாச்சு தர்ஷன்... ஏன் இப்படியிருக்கே..?' என்று விசாரிக்க, வனிதா திரும்பவும் உள்ள வந்ததில் இருந்து தர்ஷனை மட்டுமே கட்டும் கட்டுவதைச் சொல்லிப் புலம்பினார். அதைவிடு... அதெல்லாம் அப்படித்தான்... என்பதாய் ஷெரின் சொன்னதும், சேரன் அண்ணா கூட லாஸ்லியாவுக்கு இறுதிப் போட்டியில் விட்டுக்கொடு என்று சொல்கிறார் என்றும் சொன்னார். 

தர்ஷன் தனக்கு இருக்கும்  மனக் குழப்பத்திலும்... மனச் சோர்விலும் சேரன் டாஸ்க்கில் அவளுக்கு விட்டுக் கொடு என்றும்... அவள் பின்னிருந்து உந்தித்தள்ளி உற்சாகப்படுத்து என்றும் சொன்னதாய் லாஸ்லியாவிடம் ஒருமுறை சொன்னதை இங்கு மாற்றிச் சொன்னார். உடனே ஷெரின், 'அவர் விட்டுக் கொடுப்பாரா... மாட்டாருல்ல... அப்ப நீ ஏன் விட்டுக் கொடுக்கணும்... நீ எதையும் மனசுல ஏத்திக்காதே... உன்னோட பார்வைக்கு எது சரியோ அதுவழி போ' என அறிவுரை சொன்னார். உண்மையில் சரியான அறிவுரை என்றாலும் சேரன் குறித்தான செய்தி தர்ஷனிடமிருந்து தவறாகவே வந்திருக்கிறது. ஏன் இந்தாளுக்கு இந்த வேலை என்று சேரனைப் பற்றி பார்வையாளர்கள் தவறாக நினைக்கக் கூடும்.

இன்னைக்கு ஒண்ணும் தேறாதுன்னு தோணுச்சுன்னா பிக்பாஸ் காலைக்கடன் என அதைச் சொல்லிக் கொடு இதைச் சொல்லிக் கொடுன்னு யாரையாச்சும் கூப்பிட்டுக் கொடுக்கும் டாஸ்கையும் பார்வைக்கு வைத்து வருகிறார். அதிகம் இதைக் காட்டுவதில்லை என்றாலும் மேலே சொன்னது போல் தேறாத சில நாட்களில் நம்மைக் கொல்லத் தவறுவதில்லை. 

நேற்றும் குளிப்பதன் அவசியம் குறித்து குளிக்காத சாண்டி விளக்க வேண்டுமாம்... குளிக்காமல் முகத்துக்கு சோப்பைப் போட்டு... ஜிப்பா போட்டு... யோகா செய்து... செண்ட் அடித்து... எல்லாருக்கும் விளக்கம் கொடுத்தார்... சேரன் கொஞ்சம் நல்ல கேள்வியாய்க் கேட்டார். மற்றோர் கேள்வியெல்லாம் மொக்கை... கைக்குட்டை என்றதும் அதென்ன கைக்குட்டி என ஷெரின் கேட்டது செம... மற்றபடி எப்பவும் போல் இந்த டாஸ்க் காலையில் வெளக்கெண்ணைதான்.

கமல் என்னடா சிவப்புக் கேட்டைச் சொல்றது நாம இன்னும் சிறப்பாய் காதல் ஊர்வலம் போவோம் என முடிவு செய்துட்டாங்க போல... முன்பு தள்ளியமர்ந்து (நமக்குக் காட்டிய காட்சிகளின்படி) காதல் செய்தவர்கள் இப்போது நெருங்கியிருக்கிறார்கள். இப்ப அம்மணி கவின் தலை கலைத்து காதல் செய்ய ஆரம்பிச்சாச்சு... ஆண்டவா... இது தேவையா ஆண்டவா...?

இப்பக் குளிக்கப் போறதைக் கூட சொல்லிட்டுப் போறாங்க...  'ஷாம்பு போடும் போது கண்ணை மூடிக்கிங்க... கண்ணுல பட்டுட்டா எரியும்' என பார்த்துக் குளிக்கச் சொல்லிட்டு பார்க்க முடியாத காரணத்தால் கக்கூஸ்க்கு காவல் இருக்க முடியாத சூழலில் வெளியில் உட்கார்ந்திருக்கிறார் கவினார். மற்றவர்களை மறைந்திருந்து பார்த்துக் கேலி செய்யும் அவரின் வேலையை மற்ற மூவரும் எடுத்துக் கொண்டு இவர்களைக் கேலி செய்கிறார்கள். அதைப் பார்த்து அம்மணியும் கவினாரும் சிரிக்கிறார்கள்... லாஸ்லியா மீண்டும் தலை கலைக்கிறார்.

நாமினேசன் பண்ணுங்கடான்னா சேரன் தலைவர்ன்னு அவரைப் பண்ண முடியாத காரணத்தால் மைக்கை அமத்திவிட்டு மையல் கொண்ட கவினை கண்டிப்பாக நாமினேட் பண்ணுவானுங்க... அதேபோல் வனிதாவும் வருவார்... வேறு யாருக்கும் வாய்ப்பிருக்காது என்பதால் இதில் ஒருவர் வெளியில் போகவேண்டியிருக்கும் கவின் போனால் காதல் கதை இருக்காது... வனிதா போனால் வம்பு வழக்கு இருக்காது... அப்புறம் பிக்பாஸ்ல இப்ப இருக்க கொஞ்ச நஞ்ச விறுவிறுப்பும் இருக்காது... அதனால நாமினேசன் பண்ணுங்கடா... ஆனா நாங்க இந்த வாரம் வாக்கெடுப்பை நிறுத்தி வைக்கிறோம் என பிக்பாஸ் செய்திருக்கும் பித்தலாட்டம் முன்முடிவுடன் தீர்மானிக்கப்பட்டது... அப்ப இங்க கூமுட்டை யாரு..?  ஓட்டுப் போடுறவனுங்களான நாமதானே...

அவெஞ்சர்ஸ் அணியில தர்ஷன் மற்றும் முகன் தலா ஒரு ஆளை மாற்றி வனிதாவைச் சொன்னார்கள், மற்ற மூவரும் பேசி வைத்தபடி வனிதா, ஷெரின்னு சொன்னாங்க... சேரன் இல்லை என்பதால் ஷெரின் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மற்றவர்கள் கவின், முகனில் நின்றார்கள். இறுதியில் கவின், முகன், ஷெரின், வனிதா களத்தில்... டம்மியாய். கவின் உடனே நாலு ஓகே... இன்னொன்னு யாரு சொல்லியிருப்பான்னு கணக்குப் போட ஆரம்பித்தார்... லாஸ்லியா முகம் இஞ்சி தின்ன குரங்கு மாதிரி ஆயிருச்சு... கூட்டிக் கழிச்சிப் பார்த்தா கவின் போயிருவாரோன்னு கலக்கம் அவருக்குள்... என்னோட கணக்கு உனக்குத் தெரியாது... சில நாள் இந்த நாமினேசனை வச்சி ரெண்டு பேரும் சீரியஸாப் பேசுவாங்கன்னு பிக்பாஸ் சிரிச்சிக்கிட்டாரு.

சிகப்புக் கேட்டை விட படுக்கை அறையில் காதல் செய்வது உடம்புக்கும் நல்லதுன்னும்.... சூட்டுல கெடக்க வேண்டியதில்லைன்னும் கவினார் காதல் அந்தாதியில் எழுதிக்கிட்டார்.. ஆமா ஏசியெல்லாம் இருக்குல்ல... அதன்படி கவினும் லாஸ்லியாவும் வீட்டுக்குள் லவ்வ ஆரம்பிச்சிட்டாங்க... 

'உங்களை நாமினேட் பண்றதுக்கு நான்தான் காரணம்' அப்படின்னு அம்மணி பிட்டைப் போட, 'நீங்க அப்படி நினைக்காதீங்க... எங்ககிட்டயிருந்து உங்களைப் பிரிக்க நினைக்கிறவங்க இதைத்தான் செய்வாங்க... நான் எல்லாரையும்தான் சொல்றேன்'னு கவின் காலாட்ட... நமக்கு ஆமா இது அம்பிகாவதி-அமராவதியின் அமரக்காதல் இதைப் பிரிக்க எல்லாரும் கத்தியெடுத்துக்கிட்டுத் திரியிறாங்கன்னு தோணுச்சு... வெளிய போனபின் கவின் யாருன்னு தெரியப் போகுது.... அம்மணி சொல்லாமக் கொள்ளாம இலங்கைக்கு வண்டி ஏறப்போகுது.... பேச்சைப் பாருங்க.

'நீங்க நல்லா விளையாடுங்க... உங்களுக்காக நானே பேசும் போது மத்தவங்க பேசாம இருப்பாங்களா'ன்னு அவரு... 'என்னைய திட்டுங்க... அடிங்க... பேசாதீங்க... விளையாடுங்க'ன்னு இவரு... 'உங்களைத் திட்டாமயா இருக்கிறேன்... வெளியில காட்டமாட்டாங்க... வாங்க வெளிய போனதும் நான் காட்டுறேன்'னு அவரு... 'நண்பர்களுக்காக நான்னு நீங்க நிக்கிறதை மட்டும் யாரு சொன்னாலும் விடாதீங்க... அதுதான் உங்க பவரு'ன்னு இவரு... இப்படியே அவரும் இவரும் பேசிக்கிட்டே இருந்தாங்க. 

நண்பர்களுக்காக நிற்பவர்ன்னு லாஸ்லியா சொன்னது ஓட்டுப் போடுறவனுங்க சசிகுமார் மாதிரி துரோகின்னாலும் நண்பேன்டான்னு நினைச்சி கவினைக் காப்பாத்துங்க... எங்க காதல் ஆறு பிக்பாஸ் இல்லத்துக்குள் ஓடி அப்படியே சென்னையோட தண்ணிப் பிரச்சினையைத் தீர்த்து கூவத்துல... ச்சை... மெரினாவுல கலைஞர் சமாதிக்கும் அம்மா சமாதிக்கும் அப்பால போயிக் கலக்கணும் அப்படிங்கிற மாதிரித்தான் இருந்தது.

கவின் 'GAME ON'ன்னு ஒரு பனியனைப் போட்டிருக்காராமாம்... இனிமேப் பாருங்க என்னோட ஆட்டத்தைன்னு கபாலியில ரஜினி சொல்ற மாதிரி இல்லாள்க்கிட்ட அள்ளி விட்டுக்கிட்டு இருந்தார். இல்லாலும் புன்னகை அள்ளி வீசிக்கிட்டு இருந்தாங்க... இவங்க கமலுக்கு வச்சிருக்கிறது செக்... சின்னப் பயக சகவாசம் வேணான்னு ஏன் சேரன் ஒதுங்கியிருக்கிறாருன்னு கமல் இப்ப யோசிச்சிருப்பாப்ல. மறுபடியும் மனசுக்குள் தோணியது தேவையா ஆண்டவரேதான்.

'வசந்த் அன் கோ' டாஸ்க் சிவப்பு நீளம்ன்னு ரெண்டு அணி... வெளியில் இருக்கும் சுழலும் நாற்காலிகளில் உள்ள படங்களைப் பார்த்து எது இரண்டு ஒன்றாக இருக்கோ அவற்றைச் சேர்க்க வேண்டும்... வனிதா, சாண்டி, லாஸ்லியா, தர்ஷன் ஒரு அணி; சேரன், ஷெரின், கவின், முகன் மற்றொரு அணி... முடிவில் சேரன் அணி வெற்றி... எப்பவும் போல பிக்பாஸ் கேக் அனுப்பினார்... எட்டுப் பேருக்கு இவ்வளவு பெரிய கேக்கா... அடப்பாவிங்களா... முப்பது பேருக்கு எங்க ஆபீசில அதுல மூணுல ஒரு பங்குதான் வெட்டுறானுங்க... வனிதா அதெப்படி அவங்க ஜெயிச்சாங்கன்னு ஆரம்பிச்சாங்க... ஷெரின் எதிரணி என்பதால் அடக்கி வாசிச்சிட்டாங்க.... ஆமா அதானே அக்கா சொல்றது சரின்னு ஒத்து ஊத கவினும் அவர் அணியில் இல்லை... சோ... வாயை கேக்கால் மூடிக்கிட்டாங்க.

'பிக்பாஸ் போட்டியில் நான் ஏன் வெற்றி பெறணும்..? அதற்கான தனித்துவ தகுதி என்னிடம் என்ன இருக்கிறது..?' என ஒவ்வொரு போட்டியாளரும் மற்ற போட்டியாளர் முன் எடுத்துச் சொல்ல வேண்டும்... 'உன்னிடம் அதற்கான தகுதியே இல்லையே பின்னே நீ எப்படி வெல்ல முடியும்..?' என எதிர்க்கேள்விகள் கேட்டு நான் அதற்குத் தகுதியில்லாத ஆள்தான் எனச் சொல்ல வைக்க வேண்டும்... அப்படிச் சொல்ல வைப்பவர் ஒருவருக்கு அடுத்த வாரம் நாமினேசனில் விடுமுறை என பிக்பாஸ் ஒரு கண்றாவி டாஸ்க்கைக் கொடுத்தார். ஊரில் மழை பஞ்சம் மாதிரி பிக்பாஸ்க்கு இந்த முறை டாஸ்க் பஞ்சம்.... பாவத்த அவரும் என்னதான் பண்ணுவார்.

இந்த டாஸ்க்கைச் சொன்னதும் சரி இனி அரைமணி நேரம் சீரியல்தான்னு முடிவாயிருச்சு... சும்மாவே கொட்டாவி வரும்... இதைப் பார்த்தால் தூக்கம்தான் வரும் என்றாலும் எழுதணுமே... பதிவு ஒண்ணு கூடும்ல்லன்னு கொட்டாவியோட பார்க்க வேண்டியதாயிருச்சு... பார்த்து முடிச்சதும் தூக்கமும் வந்தாச்சு.

முதலில் கவின் நான் எல்லாரோடவும் சண்டை போட்டாலும் எங்கிட்ட மோதினவங்கதான் வெளியில போயிருக்காங்க.... நான் இப்ப இந்த இடத்தில் நிக்கிறேன்னா எங்கிட்ட ஏதோ இருக்குன்னு சொன்னார். சேரன் மட்டுமே 'இதுவரை நீங்க தனித்துவமாய் உங்களை நிலை நிறுத்த என்ன செஞ்சிருக்கீங்க..?'ன்னு அருமையான கேள்வியை முன் வைத்தார்... கவினால் அதற்கு சரியான பதிலைக் கொடுக்க முடியவில்லை... ஏன்னா காதலைத்தவிர வேறொன்றும் செய்துவிடவில்லை. 

வனிதாவோ கேள்விங்கிற பேர்ல சாக்சி, லாஸ்லியான்னு புளிச்சிப்போன மாவுல மறுபடியும் தோசை ஊத்துனாங்க... எப்படியும் கவினைக் கருக வச்சிடலாம்ன்னு கீரல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி திரும்பத் திரும்ப அதையே பேசினாங்க... கவினும் பதில் கொடுத்தார்... திடீரென லாஸ்லியா அவர் வெல்லத் தகுதியானவராங்கிறதுதான் கேள்வி... என்னைக் காதலிக்கத் தகுதியானவரான்னு பிக்பாஸ் கேக்கலையில்ல... பின்ன ஏன் நான் இதுக்குள்ள எனக் கத்தவும் வனிதா வாயை மூடிக் கொண்டார்.

'நீங்க எப்ப உங்க விளையாட்டை விளையாடுவீங்க..?'ன்னு தர்ஷனும் சாண்டியும் கேக்க, லாஸ்லியாக்கிட்ட சொன்ன மாதிரி அதான் ''GAME ON' பனியன் போட்டிருக்கேனே... எதுக்குத் தெரியுமா... இனி உங்களை எல்லாம் அடித்துத் தள்ளிவிட்டு முன்னுக்குப் போகப்போறேன் பாருங்க அதுக்குத்தான்... அதுதான் முதல் ஆளா இங்க நான் வந்திருக்கிறேங்கிறதைப் புரிஞ்சிக்கங்க..?' என்றார் கவின். முதல்ல லாஸ்லியாக்கிட்ட 'COME ON'ன்னு சொல்றதை நிறுத்துறியான்னு பார்ப்போம் என்பதாய் இருந்தது சாண்டியின் பார்வை.

அடுத்தாய் வந்த சாண்டி இதுவரை என்னோட விளையாட்டை நான் சரியாகவே விளையாடி வருகிறேன் என்றார். இவரிடம் 'நீங்க நட்புக்கு மரியாதை கொடுக்குறீங்க... நகைச்சுவையால் இங்க இருப்பவர்களை மகிழ்விக்கிறீர்கள்... ஆனாலும் அடுத்தவரைக் கேலி பண்ணி நீங்கள் செய்யும் நகைச்சுவை மற்றவர்களைப் பாதிக்கும் என்பதை ஏன் உணர மாட்டேன் என்கிறீர்கள்..?' என சரியான கேள்வியை முன் வைத்தார் சேரன். நான் அப்படித்தான் எங்க அப்பாவை... அம்மாவை... மனைவியை... மாமியாரை என எல்லாரையும் கலாய்ப்பேன்... அதனால மனசு வருந்துறாங்கன்னு தெரிஞ்சா உடனே மன்னிப்புக் கேட்டுட்டு அவங்களை மறுபடியும் கேலி பண்ண மாட்டேன் என்றார். இவர் சேரனிடம் மன்னிப்புக் கேட்டதைப் பார்த்திருக்கிறோம் என்பதால் உண்மை எனப்பட்டது. 

இவரிடமும்  வனிதா தேவையில்லாத ஆணியையே புடுங்கினார்... 'வளர்ந்தவன்... ஜிம்பாடி... அழகானவன் என ஒருவரிடம் பிக்பாஸ் கோப்பையைத் தூக்கிக் கொடுப்பேன்னு சொல்றீங்க... அதெப்படி முடியும்... பிக்பாஸ் என்ன கேனப்பயல... நீங்க இப்படிச் சொல்றதால மக்கள் மத்தியில் உயர்ந்தவன் உயர்ந்துக்கிட்டே போறானுல்ல... எனக்குப் பொறாமையா இருக்குல்ல'ன்னு தர்ஷனைப் பற்றி வனிதா கேட்டார். வனிதாவின் முக்கியமான டார்க்கெட்டே தர்ஷன்தான்... மிஷன் ஷெரின் தோல்வியில் முடிந்ததால் மிஷன் சாண்டியைக் கையில் எடுத்தார். என்னைவிட அவன் சிறப்பாக விளையாடுகிறான்... அதனால் அவனைச் சொன்னேன் என சாண்டி முடித்துக் கொண்டார். 

அடுத்து வந்த முகம் ரொம்பத் தெளிவாய்ப் பேசினார்... நான் நண்பர்களுடன் இருக்கிறேன் என்றால் எப்பவுமே அன்புக்காக ஏங்குபவன் நான்... அண்ணன் தம்பின்னு ஒரு உறவு வரும் போது என்னால அதைவிட்டு வெளியில் வரமுடியலை... நாங்க கூட்டமா இருக்கது மட்டுமே உங்களுக்குத் தெரியும்... ஆனா அங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்ன்னு தெரியாது... எனக்கு இந்தியா புதுசு... தமிழகம் புதுசு... வீதியில கூட இறங்கி நடக்கலை... பிக்பாஸ் வீட்டுல காலடி வச்சப்பவே எனக்கு மாற்றம் வரும்ன்னு தோண ஆரம்பிச்சிருச்சு... என்னோட வயதொத்தவங்களோட என்னால சுலபமா ஜெல் ஆக முடியுது... ஆனா சேரன் அண்ணா நிறைய எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்காங்க... அக்கறை காட்டுறாங்க... ஆனாலும் அவங்க கூட ஜெல் ஆக முடியலை.... காரணம் வயது வித்தியாசம்தான்... தன்னால் வெல்ல முடியும்ங்கிற மனதிடத்துடன் சேரன் அண்ணா இருப்பது எனக்குப் பிடிக்கும்... அவராலே வெல்ல முடியும் என்னும் போது என்னாலும் போட்டியின் இறுதிவரை செல்ல முடியும் என்றார்.

'உங்களுக்கு அதிகமாக கோபம் வருகிறது... அது உங்க விளையாட்டைப் பாதிக்கும்தானே..?' என இவரிடமும் சரியான கேள்வியை முன் வைத்தது சேரன் என்று சொல்லவும் வேண்டுமா..? 'கோபத்தைக் குறைத்து வருகிறேன்... இனி வரும் நாட்களில் உங்கள் அன்பில் என் கோபம் கரையும்' என்றார். வனிதா முகனிடம் கொஞ்சம் அடக்கியே வாசித்தார். பின்னே கட்டில் உடைந்ததை வெளியில் இருந்து பார்த்தவர்தானே.

தர்ஷன் பேசும் போது என்னால் மற்றவர்களை விட சிறப்பாக போட்டிகளில் விளையாட முடியும் என்பதை இதுவரை நிரூபித்திருக்கிறேன்... அதை யாராலும் மறக்க முடியாது... அநீதிக்கு எதிராக நான்தான் முதலில் குரல் கொடுத்திருக்கிறேன். வாரத் தலைவராய் இருக்கும்போது நான் கொண்டு வந்த அந்தந்த நாளிலேயே பிரச்சினைக்குத் தீர்வு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க திட்டம் இன்று வரை வாரத் தலைவர்களால் பின்பற்றப்படுகிறது என்றார்.

வனிதாவோ தர்ஷனின் மனதிடத்தை உடைத்து மக்கள் மத்தியில் அவரைப் பற்றி தவறான அபிப்பிராயத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதில் முனைப்பாய் இருந்தார். 'மத்தவங்க பிரச்சினையில் முன்னாடி மைக்கை நீட்டுன நீ... மது பிரச்சினையில் ஏன் நீட்டலை..?' எனக் கேட்டார். 'நான்தான் முதலில் நீட்டினேன்... நீதான் பாக்கலை' என்று விளக்கினார் தர்ஷன். 

வனிதாவுக்கும் தர்ஷனுக்குமான பேச்சு ரொம்ப நேரம் நீடித்தது... தர்ஷன் விளக்கம் கொடுத்தாலும் அவருக்குள் ஒரு பதட்டம் மெல்லப் படர ஆரம்பித்தது. வனிதாவுக்குள் 'வர்றே வா..' என்ற புன்னகை மெல்ல இழையோட ஆரம்பித்தது... வரும் நாட்களில் தர்ஷன் கவனம் தப்பினால் வனிதாவால் அடித்துத் துவைக்கப்படுவார் என்பது உறுதி... பெண்புத்தியை விட ஆண்புத்தி கொஞ்சம் கூடுதலாய் யோசிக்கும்... தர்ஷன் சிக்குவாரா... அல்லது தப்பிப்பாரான்னு பார்ப்போம்.

ஷெரின் பேசும் போது நான் நானாகத்தான் இருக்கிறேன்... இங்க வரும் போது வெற்றி பெறணும்ன்னுல்லாம் நினைச்சிக்கிட்டு வரலை... ஒரு புது அனுபவத்துக்காகத்தான் வந்தேன்.... நிறையக் கிடைத்திருக்கு... ஆனா இப்பக் கொஞ்ச நாளா வெற்றியை நோக்கி ஓடணும்ன்னு என் மனசுக்குத் தோணியிருக்கு... ஒன்பது வாரங்கள் நான் நாமினேசன்லயே வரலை... அது என்னோட தனித்தன்மைக்கு கிடைத்த பரிசு... இந்த வாரம் என் நண்பர்களுக்கு வேறு ஆளில்லை (சேரன் இல்லை என்பதைத்தான் மறைமுகமாக சொன்னார்) அதான் எனக்கு குத்திட்டாங்க என்றார்.

இவரிடமும் சேரன்தான் 'எல்லா விஷயங்களிலும் நீங்க தனித்தன்மைதான்.... எதிலும் மாட்டிக்க மாட்டீங்க... ஆனாலும் சில விஷயத்தில் ஷெரினோட தனித்தன்மை போய் சோகமாயிடுறீங்க... இது பற்றி நாம் பலமுறை பேசியிருக்கிறோம்... நீங்களும் நிறையச் சொல்லியிருக்கிங்க... ஆனாலும் இங்கு சொல்லப்பட வேண்டியதால் கேட்கிறேன்... சொல்லுங்க' என்றார் சிரித்தபடி. ஆமாம் சில விஷயங்களில் நான் என் முடிவை எடுக்க முடியாமல் தவிக்கிறேன் என்பது உண்மையே என ஒத்துக் கொண்டார்.

மற்றவர்கள் இன்று பேசலாம்... வனிதாவைப் பொறுத்தவரை தர்ஷன் முதல் டார்க்கெட்.... அவரின் பின்னே கவினும் சாண்டியும்... 

பார்க்கலாம் எப்படித் தன் மிஷன்களைக் கொண்டு போகிறார் வனிதா என...

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி