புதன், 21 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : வாத்து வனிதா

'அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்...
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்...
அது ஒரு அழகிய நிலாக் காலம்...
கனவினில் தினம் தினம் உலாப் போகும்...
அது ஒரு அழகிய நிலா காலம்...
கனவினில் தினம் தினம் உலாப் போகும்...
நிலவுகள் சேர்ந்து....பூமியில் வாழ்ந்ததே...
அது ஒரு பொற்காலம்...'

பாண்டவர் பூமி படத்தில் சிநேகன் எழுதிய பாடல் பள்ளியெழுச்சிப் பாடலாய்...

Image result for bigg boss kasthuri

நம் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கும் பாடல் இது. இப்படி ஒரு பாடலுக்கு எவன் ஆடுவான்...? அதுவும் சேரன் படப்பாடல்... ஒரு பய எந்திரிக்கலை... சேரன் மட்டும் தனியாக சில அசைவுகள் செய்து பார்த்தார். அந்த வீட்டுக்குள் தான் படும் பாட்டில் தன் படப்பாடல் ஓலிபரப்பப்பட்டதில் ஒளிர்ந்தது அவரின் முகம். பிக்பாஸ்க்கு நன்றி சொன்னார்.

கஸ்தூரி கேமரா முன் நின்று அருமையான பாடல்... நினைவுகளை மீட்டியெடுத்து விட்டது... என்று சொல்லிக் கொண்டிருந்தார். சேரன் சற்று தள்ளித்தான் இருந்தார் என்றாலும் அவரிடம் சொல்லவில்லை.

இந்தப் பாடல் காலையில் ஒலிக்க விட்டதன் பின்னணி என்னவாய் இருக்கும்..? பின்னால சொல்றேன்.

ப்ரூட்டி குளிர் சாதனப் பெட்டிக்கான சாவியை அனுப்பினார் பிக்பாஸ்... தலைவர் ஷெரின் ஏன் சாவியை இவ்வளவு தாமதமாக அனுப்புனீங்க... அதுக்குப் பதில் சொல்லுங்க என்றபடி திறக்க, சாண்டி எனக்கு ரெண்டு... என் தம்பிக்கு ரெண்டு... தம்பி பொண்டாட்டிக்கு ரெண்டு... தம்பி மச்சினனுக்கு ரெண்டு... எங்க வீட்டு வேலைக்காரனுக்கு ரெண்டு என தன் குழுவுக்கு எடுக்க ஆரம்பித்தார். 

ஷெரின் : இங்க நாந்தானே தலைவர்...?

சாண்டி : அதில்லென்ன சந்தேகம்... ஆனா எங்களுக்குத் தேவையானதை நாங்க எடுத்துப்போம்... மற்றவங்களுக்குத் தேவையானதை நீ எடுத்துக் கொடுக்காதே.

ஷெரின் : நல்ல எண்ணம்... என் எண்ணம் எல்லாரும் குடிச்சி இன்புறட்டும்.

சாண்டி : ஆமா... நான் காலி பண்ணுன மாதிரி நீயும் இந்த வாரம் காலி பண்ணிரு... யார் கேட்டாலும் கொடு... எனக்கிட்ட சாவியையே கொடு.

பிக்பாஸ் முந்தைய சீசனெல்லாம் மொக்கையாப் போனாலும் சனி ஞாயிறுல ஆண்டவர் வந்து தூக்கி நிறுத்துவார். இப்ப அந்த ஆண்டவர் என்ன ஆனார்ன்னு போன வாரமெல்லாம் தேட வேண்டியதாப் போச்சு. கவின், சாண்டிக்கு சாமரம் வீசுனாத்தான் சம்பளம்ன்னு சொல்லிட்டாங்க போல... ஆண்டவரும் அப்படியே அருள் பாலிக்கிறார்... 

இனி வரும் வாரங்களில் விளையாட்டு ரொம்பத் தீவிரமா இருக்கும்ன்னு போன வாரம் போற போக்குல சொல்லிட்டுப் போனார். சரி இனி அடிச்சி ஆடுற மாதிரி விளையாட்டு இருக்கும்ன்னு பார்த்தா எதிர்பார்ப்போட பார்க்கிற போட்டியியல இந்திய அணி சொதப்புற மாதிரி, நீ என்ன சொல்றது... நான் கொடுக்கிறேன் பாரு விளையாட்டுன்னு பிக்பாஸ் தேடிப்பிடிச்ச மொக்கை விளையாட்டுத்தான் 'அம்மா நான் பொயிட்டு வாரேன்'. இந்த டாஸ்க் சிறுவர் பள்ளியாம்... இதுல டீச்சரும் பசங்களும்.. ஆமா அம்மா எங்கே..? அதெல்லாம் அப்படித்தான்... மொக்கை டாஸ்க்லயும் வனிதா இருக்காங்கள்ல எதுக்கு பணம் கொடுக்கிறோம்... அவங்க வச்சிச் செய்வாங்கன்னு நம்பிக்கை வச்சி ஒரு இத்துப் போன டாஸ்க்.

ஷெரின் துள்ளுவதோ இளமை படத்தை மீண்டும் பார்க்கணும்ன்னு தோண வைக்கிற மாதிரி இருந்தாங்க பள்ளிச் சீருடையில்... லாஸ்லியாவும் அழகு... வனிதாஆஆ... ஏன் பிக்பாஸ் இந்தக் கொலைவெறி... வனிதாவுக்கெல்லாம் ஸ்கூல் டிரஸ் போட்டுவிட்டு... வதையுங்கொலையும் வாங்குறீங்க... 

சாண்டி மூளை வளர்ச்சியில்லாத பிள்ளை போல... கவின் சீக்குக் கோழி மாதிரி... முகன் கொஞ்சம் எடுபட்டான்... தர்சன்... முடியலை... நாங்க ஏழாவது, எட்டாவதுபடிக்கும் போது எங்க கூட முருகேசன்னு ஒரு பையன் படிச்சான்... அப்பவே அவன் தர்ஷன் உயரம்... மீசையெல்லாம் வச்சிருப்பான்... டவுசர் போட்டுக்கிட்டு வருவான்... கர்ம கண்றாவியா இருக்கும்... டீச்சர் பேண்ட் போடு... இல்லேன்னா வேஷ்டி கட்டிக்கிட்டு வா... இப்படி வராதேன்னு திட்டுவாங்க... அப்படித்தான் இருந்தான் தர்ஷன்... இதுல சாண்டியை வேறு அவ்வப்போது காப்பி அடித்தான். சேரனைத் தலைமையாசிரியன்னு சொல்லி பிரின்ஸ்பால் ஆக்கிட்டானுங்க... கஸ்தூரி டீச்சர் சேலையில அழகா இருந்தாங்க... குணத்துல அழகான்னு கேட்டு வைக்காதீங்க... அது எப்பவும் குத்துற விளக்குத்தான்.

சேரன் : எல்லாரும் வரிசையில வாங்க...

சாண்டி : டீ..டீ..ஈச்சர் வ...வ...வல்லை சார்....

சேரன் : வருவாங்க... வருவாங்க... நீங்க முதல்ல வரிசையில வாங்க..

கவின் : எல்லா டாஸ்க்லயும் உன்னைய பிள்ளையார் ஆக்கிடுறானுங்க...

சேரன் : கவின் சார்... என்ன சொன்னீங்க...

கவின் : நல்லாப் பிள்ளைய மேக்கிறீங்கன்னு சொன்னேன் சார்..

தர்ஷன் : கவுனு...கவுனு... உன்னைய சாரு.... சாருன்னு சொல்றாரு பாரு.

கவின் : இப்ப நாம சின்னப் பசங்க... டாஸ்க் முடியட்டும் சார மோராக்கலாம்...

லாஸ்லியா : கவினு நீ எங்கூட இருடா... நாம கட்டிப் பிடிச்சி விளையாடலாம்.

ஷெரின்: நோ லாஸ்லியா... நாம லேடீஸ் எல்லாம் பாட்டுப் பாடி ஆடலாம்...

வனிதா : ங்கா... ங்கா... ரோஸ் பாடுவோமா...

முகன் : அய் ரீச்சர் கடலோரக்கவிதை ரேகா மாதிரி குடை பிடிச்சி பாடிக்கிட்டே வாராங்க...

சாண்டி : டேய்ய்ய்... அது... டீ...ஈச்சர் இ... இல்ல்ல்லடா.... சத்துணவு ஆஆஆயா...

மாணவர்கள் : ஹே....

அப்புறம் ரிங்கா ரிங்கா ரோஸ் ஆடி... பென்சில் திருடிட்டான் சீனெல்லாம் போட்டு வகுப்புக்குப் போனாங்க... கோவில்ல கழட்டிப் போட்ட செருப்பு மாதிரி சேரனை ஒரு ஓரமா உக்கார வச்சிட்டானுங்க... கஸ்தூரி டீச்சர் வருகைப் பதிவேடு எடுத்து ஒவ்வொருவராய் அறிமுகம் பண்ணிக்கச் சொன்னாங்க... பாட்டுப்பாடி கிளாஸ் எடுத்தா... எண்களை வைத்து மேஜிக் செய்தார்கள்.

ஆஹா... வகுப்பறை ரொம்ப ஜாலியாப் போகுதே... டீச்சர் இன்னைக்குப் பொறுப்போட இருக்காங்க... மாணவர்களும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க... என்னடா இது பிக்பாஸிற்கு வந்த சோதனை.. மொக்கையிலும் மொக்கை மரண மொக்கையாயிருமோன்னு நினைக்கும் போதுதான் அந்தச் சம்பவம் வரப்போகும் பிரச்சினைகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது.

கஸ்தூரி : வாத்து... வாத்து பற்றி வனிதா பாட்டுச் சொல்லுவாங்க... வாங்க... வாத்து... சொல்லுங்க...

வனிதா : வரமாட்டேன்... போ...

கஸ்தூரி : ஏம்மா வாத்து... வாத்து உனக்குப் பிடிக்காதா...?

வனிதா : சார்... இவங்க என்னை வாத்துன்னு சொல்றாங்க...

கஸ்தூரி : இல்ல சார்... நான் வாத்து... பாடுங்கன்னுதான் சார் சொன்னேன்.

வனிதா : இல்ல சார்... ஏய் எல்லாரும் கேட்டிங்கதானே.. சொல்லுங்க...

மாணவர்கள் : ஆமா சார்ர்ர்ர்... சொன்னாங்க சார்ர்ர்ர்.

சேரன் : ஓகேம்மா... இப்ப பாடத்தைக் கவனிங்க... அப்பறம் நாம பேசலாம்.

வனிதா : ம்.

கஸ்தூரி : நாம அடுத்த பாடத்துக்குப் போவோமா...?

மாணவர்கள் : போவோம் டீச்சர்...

கஸ்தூரி : வாத்துன்னு சொன்னது வலிச்சிச்சா வனிதா...?

சேரன் : டீச்சர் அடுத்த பாடம் போங்க ப்ளீஸ்...

தீடீரென வனிதா எழுந்து மாணவர்கள் தப்புப் பண்ணினா மன்னிப்புக் கேக்குற மாதிரி டீச்சர் பண்ணுன தப்புக்கு மன்னிப்புக் கேட்கணும்... அதுவரைக்கும் ஸ்டிரைக்.

சாண்டி : அய்ய்ய்ய்...ஸ்ஸ்...டிரைக்கு...ஊஊஊ

கவின் : டீச்சர் மட்டுமில்ல சேரனும் மன்னிப்புக் கேட்கணும்.

லாஸ்லியா : அவரென்ன பண்ணினார்...

கவின் : இருடி... அந்தாளை எதுல இழுக்கலாம்ன்னு பார்க்கிறேன்.

சேரன் : வனிதா... இது காலேஜ் இல்லம்மா.. எல்.கே.ஜிக்கு முன்னால வீட்டுல சீரியல் பார்க்க விடமாட்டேங்கிறாங்கன்னு கொண்டாந்து விடுற ப்ரிகேஜிம்மா... 

கவின் : அதெல்லாமில்லை ரெண்டு பேரும் மன்னிப்புக் கேட்கணும்...

வனிதா : எனக்கு டீச்சர் மன்னிப்புக் கேட்கணும்... சார் நல்லவரு...

ஷெரின் : நான் தலைவராப் பேசுறேன்... கஸ்தூரி சொன்னது தவறு.

கஸ்தூரி : அப்படின்னா மன்னிச்சிக்கங்க... வாத்து. 

மணியடித்ததும் பள்ளி விட்டாங்க... 

வனிதா சைக்கிளில் ஏற, இது சைக்கிளோட சைக்கிள்ன்னு கவின் அங்கயும் சேரனை இழுத்தான். டீச்சர் தூங்க, பிக்பாஸ் சுட ஆரம்பித்தார். டீச்சர் தூங்குதுடான்னு எல்லாரும் கத்த, சேரன் வெளியில் வந்து பார்க்க, கஸ்தூரி தூங்கி வழிந்தார்.

சேரன் : என்ன டீச்சர் தூக்கமா..?

கஸ்தூரி : இல்ல சார்... பசங்களுக்கு என்ன நடத்தலாம், எப்படி நடத்தலாம்ன்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.

சேரன் : அப்ப தூங்கலை...

கஸ்தூரி : இல்ல சார்... கண் மூடி யோசிச்சேன்...

சேரன் : சன்னமா ஒலி மூக்குல இருந்து வந்துச்சாம்மா...

கஸ்தூரி : இருக்கலாம்...

சேரன் : யோசிக்கும் போது சுற்றி இருக்க சத்தம் கேட்டிருக்காதே...

கஸ்தூரி : ஆமா சார்... ஆமா... நீங்களும் இப்படி அடிக்கடி யோசிப்பீங்களா..?

சேரன் : மூதேவி... அதுதான் தூக்கம்... அதான் சுட்டிருக்கார்.... ஏன் சும்மா சீனைப் போடுறே...?

மறுபடியும் பள்ளி... எல்லாரும் விளையாடப் போயாச்சு... சின்னச் சின்ன விளையாட்டுக்கள்... லாஸ்லியா 'டுவிங்கிள் டுவிங்கிள் லிட்டில் ஸ்டாரை' அழகிய தமிழில் 'மினுக்கும் மினுக்கும் மின்மினிகள்' அப்படின்னு அழகாப் பாடுனாங்க... கவின் மினுக்கிக்கிட்டே இருந்தான்... எல்லாருக்கும் ப்ரூட்டி கொடுத்தாங்க கஸ்தூரி டீச்சர்... அப்புறம் டிரைன் எல்லாம் ஓட்டுனாங்க... சாண்டியும் கவினும் டீச்சரை ஓட்டினாங்க...

கஸ்தூரியும் வனிதாவும் மறுபடியும் பிரச்சினையை ஓட்டினாங்க...

கஸ்தூரி : நான் சொன்ன வார்த்தை உங்களைப் பாதிச்சதா..?

வனிதா : எது..?

கஸ்தூரி : அதான்டி வாத்து...

வனிதா : மன்னிப்புக் கேட்டுட்டீங்க... பின்ன எதுக்கு இப்ப...

கஸ்துரி : நான் வாத்துன்னு சொன்னது உங்க உருவத்தையா.. இல்லை உங்க புத்திசாலித்தனத்தையா... எதுன்னு நினைச்சீங்க...

வனிதா : எதுவாயிருந்தா என்ன கேலி கேலிதானே...

கஸ்தூரி : அதான் கேட்கிறேன்.... என்னைப் பொறுத்தவரை உங்க உருவத்தைச் சொல்லலை...

வனிதா : மறுபடியும் மறுபடியும் பாருங்க சேரன் அண்ணா...

சேரன் : விடும்மா... முடிஞ்சதை ஏன் கிளறுறே...

கஸ்தூரி : ஒரு தெளிவு வேணும்... அதான்.

வனிதா : நான் தெளிய வச்சி அடிப்பேன்னு உனக்குத் தெரியலை.

கஸ்தூரி : இல்ல உன்னை வாத்து மடச்சின்னு சொல்லலையே...

வனிதா : கஸ்தூரி விட்டுட்டுப் போயிடுங்க... கொலைகாரி ஆயிருவேன்...

கஸ்தூரி : இல்ல வாத்து மடச்சின்னு சொன்னாத்தானே வருத்தப்படணும்.

சேரன் : ஏம்மா விடும்மா... ஈரைப் பேனாக்கி... பேனைப் பெருமாளாக்காமா...

கஸ்தூரி : வாத்து அழகாயிருக்கும்தானே... அதுக்கு எதுக்கு கோபப்படணும்... வாத்து மடச்சின்னு சொல்லலையே...

சேரன் : எங்கிட்டோ கட்டிச் சேருங்க... உனக்கு நாக்குல சனி... நாறப்போறே இனி...

இந்தப் பிரச்சினையை டாஸ்க் முடிந்த பின் சேரனும் வனிதாவும் தவிர மற்றவர்கள் அமர்ந்திருக்கும் இடத்தில் மீண்டும் கிளறுகிறார் கஸ்தூரி. வனிதா அப்போதுதான் காளியானார்.... மூணு பிள்ளைக்குத் தாய் நான்.. பதினெட்டு வயசுல பையன் இருக்கான்... என் உருவத்தைக் கேலி பண்ணுறியே... நீ மட்டும் என்ன 'துள்ளாத மனமும் துள்ளும்' சிம்ரன் மாதிரியா இருக்கே... பாத்துப் பேசும்மா... பல்லை உடைச்சிருவேன்... என்றபடி பறந்து வந்தார்.

உடனே ஷெரின் முடிஞ்சதைப் பேசாதீங்க கஸ்தூரி... விட்டுட்டு வேலையைப் பாருங்க என்றதும் இல்லை வாத்துன்னுதானே சொன்னேன் வாத்து மடச்சின்னு சொல்லலையே... என்று அதை மீண்டும் தொடர்ந்தார் கஸ்தூரி. ஊரில் சில கிழவிகள் கிடந்துக்கிட்டு ஒரே பிரச்சினையை திரும்பத் திரும்பப் பேசி பிரச்சினையை முடிக்க விடாம வச்சிருக்குங்க... அதுமாதிரி கஸ்தூரி... என்ன பொம்பளையப்பா இந்த அம்மா... வனிதாவுக்கே டக்கா... இனிதான் இருக்கு வனிதாவோட ஆட்டம்...

இந்தப் பிரச்சினை முடிந்ததும் ஷெரினிடம் சேரன் வனிதா, கஸ்தூரி ரெண்டு பேருமே தவறு செய்கிறார்கள். இது சின்னப்புள்ளைங்க ஸ்கூல் டாஸ்க்... கஸ்தூரி பேசினதும் தப்பு.... வனிதா ஸ்டிரைக்குன்னு எழுந்ததெல்லாம் பெரிய தப்பு என்றார். ஷெரினும் ஆமாம் சார்.. சரிதான்... என்றதும் இதெல்லாம் வார இறுதி மோசமான நடிப்புக்கு கொண்டு வரணும்... மனசுல வச்சிக்க என்றார். அவரின் பயம் அவருக்கு... எப்படிச் செஞ்சாலும் நம்மளை மட்டும்தான் நல்லாச் செய்யலைன்னு சொல்லுவானுங்க என்பதை உணர்ந்திருப்பதாலும், ஷெரின் மட்டுமே இப்போது வரை மனசுக்குள் எதுவும் வைத்துக் கொள்ளாமல் தன்னுடன் பேசுவதாலும் சேரனின் பேச்சு கொஞ்சம் மகிழ்வாய் இருந்தது... மகள் செய்ததால் மனசொடிந்து இருக்கிறாரா... அல்லது உடல் நலமில்லையான்னு தெரியலை... ரொம்பவே டல்லடித்திருந்தார்.

இந்த மொக்கை முடிஞ்சதும் அடுத்த மொக்கை ஆரம்பம்.... காலையில் போட்ட பாட்டுக்கு காரணமான பள்ளிக்கூட நினைவுகளின் கனாக்காலம்.

எல்லாப்பயலும் மொக்கை போட்டானுங்க... கவின் அஞ்சாப்புலயே லவ் லெட்டர் எழுதினேன்னு சொல்லி,  சந்தானம் ஜோக்குக்கு சந்தானம் மட்டும் சிரிக்கிற மாதிரி சிரிச்சிக்கின்னான்... நாம சிரிக்கலைன்னா மறுபடியும் தேவாங்காயிருவான்னு லாஸ்லியா தலையணையால் தலையில் அடிச்சிக்கிட்டே சிரிச்சிச்சி. முகன் ஒரு கதை... தர்ஷன் ஒரு கதையின்னு சொன்னானுங்க... நம்ம காதுலதான் ரத்தம் வந்துச்சு.

ஷெரின் சொன்ன கதையை விட சொன்ன விதம் அழகு... சூப்பர்.... அது மட்டுமே ரசிக்க முடிந்தது. சேரன், லாஸ்லியா, கஸ்தூரி, வனிதாவெல்லாம் சொன்னதை காட்டலை... தப்பித்தோம்.

விளக்கணைத்த பின் தர்ஷனிடம் சேரன் லாஸ்லியாவும் ஷெரினும் சரியாப் பண்ணுனாங்க என்றதும் சாண்டியண்ணா சூப்பரு என்றான் தர்ஷன்.... அதெல்லாம் ஓவர் ஆக்டிங் என்றபடி கடந்தார் சேரன்.

சேரன் தர்ஷனிடம் லாஸ்லியா செய்தது சரியே என்றாலும் மனசு வலிக்கத்தான் செய்கிறது... இதை அவளிடம் சொல்லாதே... உன்னை நான் நாமினேட் செய்ததற்கு காரணம் நீ உனக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கை உணரவும் இங்கிருப்போர் உன்னை வைத்திருக்கும் நிலை அறியவும்தான்... சாண்டிக்கிட்ட யாரைக் காப்பாற்றுவேன்னு கேட்டப்போ கவினைன்னு சொன்னதை பார்த்தேல்ல... இதுதான் நிதர்சனம்... புரிஞ்சிக்க... நீயும் லாஸ்லியாம் இறுதிவரை விளையாடி வெற்றி பெறணும் என்பதே என் ஆசை எனச் சொன்னதை விஜய் டிவி காட்டாமல் மறைத்து விட்டதாகவும்...

அதேபோல் சேரனிடமிருந்து ஒவ்வொருவராய் பிரித்தாளும் சூழ்ச்சி செய்யும் சகுனி கவின் ஷெரினிடம் சேரனைப் பற்றி அவதூறு சொல்வதையும்... அதை ஷெரின் ஏற்க மறுத்த போதும் விடாது அவரின் மனசுக்குள் சேரனைப் பற்றி சேறை வாரி இறைத்ததையும் விஜய் டிவி ஒளிபரப்பாமல் மறைத்து விட்டதாகவும்... 

இணையத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மொக்கைகளை மட்டுமே ஓளிபரப்பி இது போன்ற விஷயங்களை ஏன் மறைக்கிறார்கள்..? காரணம் என்ன...?

எல்லாம் விஜய் டிவியின் கவினும் சாண்டியும் நல்லவர்கள் என்பதாய் காட்டி இறுதிவரை கொண்டு செல்லவே என்பதை சின்னக் குழந்தை கூட சொல்லும்.

இனி வரும் நாட்களில் ஆண்டவர் அவதாரம் சரியாக நிகழாதவரை பிக்பாஸ் மொக்கை மொக்கைதான். இந்த வாரமாச்சும் நிகழ்த்துவாரா.... இல்லை சாண்டி, கவின்னு சொல்லி மத்தவங்களை நக்கலடித்து விட்டுச் செல்வாரா...

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.   

2 கருத்துகள்:

  1. // அவரவர் வாழ்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்... //

    பாண்டவர் பூமி - இரு நாட்களுக்கு முன்பு தான் K tv-ல் படம் பார்த்த ஞாபகம்...

    சில பாடல்களை கேட்டாலே, கண்ணீரை கட்டுப்படுத்த முடிவதில்லை... "முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக" பாடலும் இதே போல்...

    முடிவில் உள்ள பாரா உண்மை ஆகிவிடும் போல...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு ரொம்ப பிடிச்ச படம் பாண்டவர் பூமி... வீட்டுல CD வாங்கி வச்சுக்கிட்டு கிட்டத்தட்ட 50 தடவைக்கு மேல பார்த்திருப்பேன்... எனக்கும் சில பாடல்கள் கண்ணீரை வரவைத்து விடும்..

      இறுதி பாராதான் உண்மையாகும்.

      கருத்துக்கு நன்றி அண்ணா.

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி