வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

பிக்பாஸ் : சாக்சியை விளாசிய ஷெரின்

Image result for bigg boss-3 august 1 images
'கையைப் புடிச்சி இழுத்தான்' பஞ்சாயத்து அவ்வளவு சீக்கிரமாவெல்லாம் முடிஞ்சிடாது... இது பிக்பாஸ் வீட்டுக்குள்ள மூவரை மட்டுமல்ல நவக்கிரகங்களையும் பாடாப்படுத்தி எடுக்க ஆரம்பிச்சிருச்சு.

சாக்சிக்கு ரெண்டு பயம்... ஒண்ணு இந்த வார நாமினேசன்ல நாமதான் போவோம் அப்படிங்கிற எண்ணம்... மற்றொன்று கவினை லாஸ்லியா கவ்விக்கிட்டுப் போயிருவாளோன்னு. இதற்கான ஆட்டமாகத்தான் இந்தப் பிரச்சினையை மென்று விழங்காமல் வாயிலே வைத்துக் கொண்டு நிற்கிறார்.  இப்படியாச்சும் பச்சாதாபத்தில் தமிழர்கள் பல்லக்கில் தூக்கி வைப்பார்கள் என்ற நப்பாசை. இந்த வாரம் சாக்சி வெளியேற்றப் பட்டாலும் வீட்டுக்குப் போகமாட்டார். சீக்ரெட் ரூமில்தான் தங்க வைக்கப்படுவார்.

லாஸ்லியாவைப் பொறுத்தவரை கவினை 'லவ்'லியாதான். நானில்லை... நட்புத்தான் என்பதெல்லாம் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லை கதைதான்.. இந்தச் சூழலில் தன் பக்க நியாயத்தைச் சொல்ல வேண்டிய நிலமைதான் என்றாலும் பேசிய விதத்தில் நடிக்கவில்லை என்றாலும் கவின் நண்பன் என்று சொல்வது முழுக்க முழுக்க முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்க நினைக்கும் கதைதான்.

கவினைப் பொறுத்தவரை சாக்சியோட குடும்பம் நடத்த முடியாது என்பதை உணர்ந்து ஒதுங்கிய தருணத்தில் விலகிப் போன லாஸ்லியா வந்து ஒட்டியதும் இது நம்ம குடும்ப நிலமை தெரிந்து வாழப் பழகிக் கொள்ளும் என நினைத்தே மீண்டும் காதலில் விழுந்தான். ஒரு இடத்தில் கூட லாஸ்லியாவைத் தோழி என்றெல்லாம் அவன் சொல்லவில்லை. மச்சான் போடுறானுங்க... அதெல்லாம் பந்தாவுக்கான ஒரு வித்து... எவன் ஊருக்குள்ள பொட்டப்புள்ளையள மச்சான்னு கூப்பிட்டுக்கிட்டுத் திரியிறான். எங்க ஊருல புள்ளையள மச்சான் போட்டோமுன்னா வெளக்குமாத்தாலே அடிப்பானுங்க.

இது ஞானப்பழத்துக்கு பிள்ளையாரும் முருகனும் அடிச்சிக்கிட்ட கதைதான்... இதில் வீட்டிலிருக்கும் நவக்கிரகங்கள் வேடிக்கைதான் பார்க்க முடியுமோ தவிர, யாருக்காகவும் வக்காலத்து வாங்க முடியாது. யாருக்கு இறங்கிப் பேசினாலும் மற்றவரின் மனது மிகவும் பாதிக்கும். பெண்கள் விஷயத்தில் அவ்வளவு சீக்கிரத்தில் மற்றொரு பெண் கூட பேசிவிட முடியாது.

சாக்சி பேசியதற்கு லாஸ்லியா பதில் சொல்லியிருக்கத் தேவையில்லை என்பதே நேற்று நான் சொல்லியிருந்தது. அடுத்த கேள்விக்குச் லாஸ்லியா பேசும் போது கூட நானும் சாக்சியும் ரொம்ப நட்பாயிருந்தோம்... கவினும்தான்... ஆனா அவங்களுக்குள்ள பிரச்சினை வந்தப்போ எதுக்காக பிரச்சினை வந்துச்சுன்னு எனக்குத் தெரியாது... அவங்க எங்கிட்ட சொல்லியிருக்கலாம் அப்படின்னு என்னென்னவோ பேசி, சாக்சி குறுக்கிட்டுப் பேச கோபத்தில் மைக்கைக் கழற்றி எறிந்து விட்டு கக்கூஸூக்குப் போயிருச்சு கூவுறதுக்கு... அபிக்கு சாக்சி தவிப்பதில் சின்னதொரு மகிழ்ச்சி, அதனாலயே லாஸ்லியா பின்னால ஓடினார்.

கவினைப் பொறுத்தவரை சாக்சி கெட்டவள் என்பதாய் மனசுக்குள் எழுதி வச்சிட்டான்... இனி உடைந்த மண் சட்டியை ஒட்ட வைத்தல் என்பது இயலாத காரியம்தான்... வீட்டிலிருப்பவர்கள் பேசும் போது சேரனைப் பார்த்து என்னையப் பேசவிடுங்க என்று கத்தியதில் அவன் ஏதோ ஒரு விஷயத்தில் (வெளியில் பேசப்படும் முத்த விஷயம் / லாஸ்லியாவை கவினுடன் பழகக் கூடாது என்று சொல்லியிருக்கலாம்) கட்டம் கட்டுகிறான். சரவணனோ சாண்டியோ பேசினால் சும்மாதான் இருக்கிறான். 

தர்ஷன் ராத்திரி ரெண்டு மணிக்கு என்ன பிரண்ட்ஷிப் வேண்டிக்கிடக்கு உனக்கும் லாஸ்லியாவுக்கும் என மிக முக்கியமான வாதத்தை வைத்த போது அதை அப்படியிப்படின்னு பேசி நீடிக்க விடாமல் செய்ததில் கவினுக்கும் சரவணனுக்கும் நிறையப் பங்கிருந்தது என்றாலும் சரவணன் கவினின் செயலை சில நாட்களுக்கு முன்னரே கண்டித்தேன் என்று சொன்னது உண்மை. கவின் எனக்கு நல்ல நட்பு ஆனா நாந்தான் இங்க அவனை எதிர்த்துப் பேசுறேன் என்றார் சரவணன். இதில்தான் காய் நகர்த்தல் இருக்கிறது. பிரச்சினை கவின் பக்கம் திரும்பாமல் தான் குரலை உயர்த்திப் பேசும் பாங்குதான் இது. இதுதான் மீரா விஷயத்திலும் சரவணனின் செயலாக இருந்தது.

சாக்சி பேச விரும்பும் போது கவின் நல்லாயிருன்னு சொல்றான்... சாக்சியால் லாஸ்லியா கோபப்பட்டுப் போனதுக்கு வருத்தப்படுறான்... எல்லாத்துக்கும் காரணம் சாக்சிதான் என்பதில் தீவிரமாய் இருக்கிறான்... தான் நல்லவன் என்பதாய் நிலை நிறுத்த முயற்சிக்கிறான். சாக்சி தன்னைக் கட்டம் கட்டுறான்னு சொல்கிறான். உடனே சாக்சி ஒப்பாரி வைக்க, சரவணன்தான் தேற்றுகிறார். அப்போது நான் லாஸ்லியா மேல அம்புட்டு அன்பு வச்சிருக்கேன் தெரியுமா... அவளை நாமினேட் கூட பண்ணலை என்றதும் அடுத்த வாரம் பண்ணிக்கலாம் விடுன்னு சரவணன் அசால்டாய்க் கடக்கிறார்.

சேரனைப் பொறுத்தவரை கவின் தன்னை டார்க்கெட் செய்வதை விரும்பவில்லை. சாக்சிக்காகவும் பேச முடியாத நிலை... லாஸ்லியாவுக்கும் எடுத்துச் சொல்ல முடியாத நிலை... இருதலைக் கொள்ளி. சாக்சி, லாஸ்லியா விஷயத்தில் இருவரையும் வைத்து ஒருமுறை பேசியிருக்கிறார். அதுவும் பஞ்சாயத்துக்கு வந்த போதும் அப்பவே எல்லாமே பேசியாச்சேம்மான்னு சொன்னார். இந்த விஷயத்தில் யாருமே பேச யோசிக்கத்தான் செய்வார்கள். சாக்சியைப் பொறுத்தவரை மீண்டும் மீண்டும் டீச்சர் அவன் கிள்ளிட்டான்னு சொல்லிக்கிட்டே இருப்பது பார்க்கும் நமக்கே கடுப்பாக இருக்கும் போது ஒரு வீட்டுக்குள் நாள் முழுவதும் இதையே கேட்டுக் கொண்டிருப்பவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

லாஸ்லியா அழுது முடித்து வந்து மீண்டும் பேசினார்... இதுவும் தேவையில்லாத ஆணிதான்... அபியைத் தவிர என்னிடம் யாரும் கதைக்க வேண்டாம் எனக் கை எடுத்துக் கும்பிட்டார். குறிப்பாக சேரன் தனக்காக வாதிடவில்லை என்பதே காரணமாக இருந்தது. மீண்டும் கக்கூஸ் கூவல், அபியின் ஆறுதல்... சேரன் அங்கு வர, லாஸ்லியா சேரனின் அன்பிற்கு ஒரளவு சமாதானம் ஆவாள்... அந்தச் சூழலில் சேரனிடம் பேசுவது நல்லது என்பது அபிக்குத் தெரிகிறது. சேரனையும் உள்ளே அழைத்துப் பேசி, அவர் வெளியாகிறார்.

சேரனிடம் நான் உங்களிடம் கதைக்க விரும்பலை... நீங்க என் பக்கம் நிக்கலைன்னு  அழும் லாஸ்லியாவை ஒரு தகப்பனாய் சேரன் சமாதானம் செய்கிறார். லாஸ்லியா பேசியது சரியென்றாலும் அங்கிருந்து எழுந்து வருவது தவறென்பதைச் சுட்டிக் காட்டுகிறார். அதன் பின் லாஸ்லியா சமாதானம் ஆகிறார்.

சாக்சியின் நடவடிக்கைகளால் ஷெரினும் ரேஷ்மாவும் கடுப்படைகிறார்கள். மூணு பேரும் மூணு விதமாப் பேசுறீங்க... அவன்தான் தெளிவாச் சொல்லிட்டானே பின்ன எதுக்கு அவன் பின்னால சுத்தணும்ன்னு நினைக்கிறே.  உன்னோட விஷயம் லாஸ்லியாவுக்குத் தெரியும்... அவ ஒண்ணும் சின்னப்பொண்ணு இல்லை... இங்க குழந்தைகளை அனுப்புவதில்லை... புரிஞ்சிக்க.... திரும்பத் திரும்ப தேஞ்சுபோன ரெக்கார்டா பேசிக்கிட்டு இருக்கே... அதை முதல்ல மாத்து என ஷெரின் பேசியது மாஸ்... ஷெரினின் பார்வை மிகத் தெளிவானது. தன் நட்பாக இருந்தாலும் சரவணன் சாண்டி போல ஒன்சைடு கோல் போடாமல் இது தவறு... இதிலிருந்து வெளியில் வா... நைநைன்னு சின்னக் குழந்தையாட்டம் பேசாதேன்னு தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தது சிறப்பு. ரேஷ்மாவும் நல்லாவே பேசினார்.

மதுவைப் பொறுத்தவரை எதாவது பேசினால் நம்மிடம் ஏறுவார்களோ என்ற எண்ணத்திலேயே இருந்தார். முகனுக்கு அபி அழுததுல வருத்தமே தவிர நீங்கள்லாம் என்னமோ கட்டிச் சேருங்கடான்னு ஓரமா உக்காந்துட்டான். 

முன்னதாக ரேஷ்மாவுக்கு வந்த கேள்விக்கு நான் நியூட்ரல் இல்லை என்று சொல்ல ஏதோ சொல்லி அமர்ந்தார்.

காலையில் பாடல்கள் எல்லாம் சிச்சுவேஷனுக்குத் தகுந்ததாய்த்தான் இருக்கின்றது. 'இரு மனம் கொண்ட திருமண வாழ்வில் இடையினில் நீ ஏன் மயங்குகிறாய்' என்ற பாடல்தான் நேற்றைய பள்ளி எழுச்சி... யாருக்கும் எழுந்து ஆட மூடில்லை... ஆனா பாடலுக்கான எடிட்டிங் செம. கவின், சாக்சி, லாஸ்லியான்னு சரியான எடிட்டிங்.

சாண்டிக்கான கேள்விக்கு செமையாச் சீனைப் போட்டார். மத்த நேரங்களில் குறிப்பாக சண்டைகளில் எதிலும் ஒட்டாமல் இருப்பவர் தனித்த கேமராவின் முன் மட்டும் தன் நடிப்பை இன்னும் தீவிரமாக்கி விடுகிறார். 

கவினுக்கு லாஸ்லியா லாஸாகிக் கொண்டிருப்பதில் கூடுதல் கவலை... சாக்சியைக் கழுத்தறுக்க கவனமாய் காய் நகர்த்துகிறான். சாண்டியும் சரவணனும் சாம்பிராணியைச் சரியாகப் போடுகிறார்கள். சேரன் நிலை பரிதாபமானது. லாஸ்லியாவை மொத்தக் குடும்பமே எதிர்த்து சாக்சிக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது சேரன் யாருக்காகப் பேசுவது..? நியாயத்தின் பக்கம் என்றால் இருவரின்... இல்லையில்லை மூவரின் பக்கமுமே அதற்கான சாத்தியக்கூறே இல்லை. 

மொத்தத்தில் இந்தச் சக்களத்தி சண்டையின் முக்கியப் புள்ளி லாஸ்லியாதான்... கவினுடன் இரவு முழுவதும் சிரித்துச் சிரித்துப் பேசியது... கையைப் பிடித்துக் கொண்டு நின்றது... பிரச்சினை தெரிந்தபோது அவனிடம் நீ கெட்டவன் என்றவள் அடுத்த நாளே மன்னிப்புக் கேட்டு சாக்சிக்கான இடைவெளியை தன்னோட காதலைப் புதுப்பித்துக் கொள்ளப் பயன்படுத்தியது... கவின் என்ன உடை அணிகிறானோ அதே மாதிரியான உடை அணிவது... சாக்சியின் நிலமையை நன்கு அறிந்தும் எனக்குத் தெரியவே தெரியாது என்று சொன்னது... என இன்னும் இன்னுமாய் எல்லாத்துக்கும் மையப்புள்ளியே லாஸ்லியாதான்... இனிமேலேனும் திருந்தினால் நல்லது.

கவின் சாக்சியுடன் பேசவே விரும்பவில்லை... சாக்சி தன் காதலை உயிர்ப்பிக்க பெரும்பாடு பட்டபோதும் கவின் அதை உதாசீனப்படுத்தி லாஸ்லியா தன்னை விட்டு விலகுவதற்காகவே வருந்தி நிற்கிறான். ஓவியாவுக்கு ஆரவ் கொடுத்த மருத்துவ முத்தம் குறும்படமாய் வந்தது போல் கவின்-சாக்சி முத்தலாக்... (முத்தாலக் இல்லை) குறும்படமாய் வந்தால் மட்டுமே இந்தப் பிரச்சினைக்கான தீர்வு கிடைக்குமே தவிர மூவரும் அமர்ந்து பேசி முடிவுக்கு வருதல் என்பது காவிரிப் பிரச்சினை, காஷ்மீர் பிரச்சினை மாதிரி தீர்க்க முடியாமல்தான் நகரும்.

மொத்தத்தில் சாக்சி போனாலும் கவினின் ஆட்டம் தொடரத்தான் செய்யும். அதுக்கு கவினே பொயிட்டா...?

பிக்பாஸ் கவின்-சாக்சி-லாஸ்லியாவையும் அனுப்பிட்டா மொத்தமாக் கடையை மூடிட வேண்டியதுதான் என்பதை உணர்ந்தே இருப்பார். கமலின் நாளைய வருகை இதற்கெல்லாம் விடை தரும் என்று நம்பலாம்.

இன்னைக்கு சேரனும் சரவணனும் மல்லுக் கட்டிட்டாங்க போல... இந்தப் பஞ்சாயத்து காதல் பஞ்சாயத்தை அமுக்கிரும் போல... 

சேரன் தொடரணுமான்னு ஒரு கட்டுரை இணைய தளம் ஒன்றுக்காக எழுதியது. அப்புறம் அதை அப்படியே வச்சிருந்தேன். இன்னைக்கு எபிசோட் பார்த்த பின்னர் அதை பட்டி டிங்கரிங் பார்த்துப் பதியலாம் போல... :)

பிக்பாஸ் தொடரும்... 
-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

  1. தவறு என்று தெரிந்தால் கண்டிப்பது தான் நல்ல நட்பிற்கு அடையாளம்...

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி