திங்கள், 1 ஜூலை, 2019

பிக்பாஸ் - சண்டை வந்தாச்சு

 பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் 4வது போட்டியாளராக நடிகை மதுமிதா பங்கேற்றுள்ளார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் ஜாங்கிரி என்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை மதுமிதா. அந்தப் படத்தை அடுத்து மிரட்டல், அட்டக்கத்தி, கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர் விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்திருந்தார். சினிமா மட்டுமின்றி சீரியல்களிலும் நடித்துவரும் மதுமிதாவுக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். சமீபத்தில் இவருக்கு திருமணம் நடைபெற்றது.
(மதுமிதா)
நாலு நாளா பதினாறு பேர் ஒரு வீட்டுக்குள்ள இருக்கீங்க... பாத்திமா, வனிதா போக பாண்டவர் பெண்கள் அணிக்குள்ள அபிராமிக்கும் சாக்சிக்கும் பிடிக்காத மீராவை அனுப்பியும் சண்டை போடாம இருக்கீங்களே... விடுவோமா.. மாத்துடா திரைக்கதையை... வீட்டோட இந்தவாரத் தலைவரை வைத்து ஆட்டத்தை ஆரம்பி என பிக்பாஸ் முடிவெடுத்துவிட்டார். கைப்புள்ளை தயாராயாச்சு... இனி ஆட்டம் களைகட்டும் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ..?

சாப்பிட்டுக் கொண்டிருந்த மீரா, மோகன் வைத்யாவிடம் தனது சட்டையின் ஊக்கை (ஹூக் என்கிறார்கள் ஸ்டைலான ஆங்கிலத்தில்) மாட்டிவிடச் சொல்ல, இந்தா கை கழுவிட்டு வர்றேன்னு சொல்லிட்டுப் போனவர் வனிதாவிடம் போய் ஊக்கை மாட்டச் சொல்கிறார்... எனக்கு விருப்பம் இல்லை... சுற்றி கேமரா இருக்கு... மாட்டிவிட்டால் நல்லாவா இருக்கும் என்பதாய்ச் சொல்லி நீங்க நாசூக்கா எடுத்துச் சொல்லுங்க என்றும் சொல்கிறார்.

இந்த இடத்தில் கவனிக்க : ஊக்கை மாட்ட முடியாதென்றால் என்னால் முடியாதென மீராவின் முகத்திலடிப்பது போல் சொல்லியிருக்கலாம். முதல் நாள் வளைவு நடையில் (RAMP WALK  அப்படித்தான் சொல்லுது டிக்ஷ்னரி -:) ) இடுப்பில் பிடிக்க, அணைக்க என எல்லாம் செய்யும் போது கேமரா இருப்பதை மறந்து விட்டார் போல. 

வனிதா உடனே கேட்கப் போக, அவர் எனக்கு அப்பா மாதிரி என்றபடி கடந்த மீராவை விடுவதா என மிகப்பெரிய பிரச்சினையாக்கி, அழவைத்து இங்கிட்டுப் பாதிப்பேர் அங்கிட்டுப் பாதிப்பேர் என சமாதானப்படலம் என களைகட்டியது பிக்பாஸ் இல்லச் சண்டை. இதன் நீட்சியாய் உங்களைப் பாதித்த விஷயத்தைச் சொல்லும் சீட்டெடுத்து கதை சொல்லுக்கு காத்திருக்கும் போது மீரா வராததால் வனிதாவுக்கும் பாத்திமாவுக்கும் சின்ன உரசல். அதன் பின் லாஸ்லியாவின் அக்கா இறந்தகதை, அம்மா அப்பா சண்டையால் மனநலம் பாதித்த முகனின் கதை என சோகமழை தொடர, சாண்டி ஜாலியாய் தன் கதையைச் சொன்னார். மீராவின் அப்பா இல்லாததை அறிந்த வனிதா தான் சண்டையிட்ட போது அம்மா, அப்பா குறித்துக் கூறியதற்கு மன்னிப்புக் கேட்டார்.

மோகனை அப்பா என்று மீரா சொன்னாலும் அப்பாவிடம் ஊக்கை மாட்டச் சொல்லுதல் என்பது கொஞ்சம் ஓவர்தான்.

அண்ணா என்று சொன்ன லாஸ்வியாவின் தண்ணீர்ப் பாட்டிலை எடுத்து வைத்துக் கொண்டு இரவுக்குள் நீ எடுத்துவிட்டால் நான் உனக்கு அண்ணன்... மறுநாள் காலைவரை எடுக்கவில்லை என்றால் நான் அண்ணனோ தம்பியோ இல்லை எனக் கவின் கலாய்த்துக் கொண்டிருக்க, அபிராமி நீ இதைத்தானேடா நினைக்கிறே என கவினின் மனசைப் படிக்க, சந்துல சாக்சி நான் ஒருத்தி இருக்கேன்டா என சிந்து பாடினார்.

லாஸ்வியா பேசும் போது தனது அப்பா சேரனைப் போல் இருப்பார் என்று சொல்லி சேரன் அப்பா என்று அழைக்க, சேரனுக்குள்ள இருக்கிற அந்த பாச உணர்வு உடனே பொங்கி மகளாய் அணைத்துக் கொண்டது.

என்னை அப்பான்னு சொல்லாதே... அங்கிள்ன்னு சொல்லு என்று தர்ஷனைக் கடிந்து கொண்ட மோகன், தன்னை இளைஞர் கூட்டம் சீண்டுவதாய்ச் சொல்லி, தியானிப்பது போல் ஏதேதோ செய்தார். பாத்திமாபாபு சம்பந்தமின்றி அவன் எப்படிபட்ட சூழலில் இருந்து வந்திருக்கிறான்னு தெரிஞ்சும் இப்படிப் பேசிட்டீங்களே என தேவையில்லாமல் இலங்கைப் பிரச்சினையை இழுத்தார். விஜய் டிவியின் இலங்கைப் பாசம் வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறது. அதன்பின் மோகன் தர்ஷனை அழைத்து அணைத்துக் கொண்டார். இந்தப் பிரச்சினையின் போது அவரு வயசான ஆளுடா... ஒரு இடத்துல ஆறுநாள் இருக்கிறதெல்லாம் முடியாத காரியம்... அந்த ஆற்றாமைதான் விட்டுட்டு வேலையைப் பாருங்கடா என்ற சித்தப்பு சரவணன் அன்றைய நாளில் கிடைத்த இடத்தில் எல்லாம் கிடாய் வெட்டினார்.

வீட்டிலிருப்பவர்களிடம் கமல் பேச இருக்கும் முதல்வாரம் எப்படியிருக்கும் என்ற ஆவல் எல்லாருக்கும் இருந்தது. சனிக்கிழமை இரவு கமலிடம் வீட்டிலிருப்பவர்கள் கேள்விகள் கேட்டார்கள். எல்லாக் கேள்விகளுமே முன் தயாரிப்புத்தான் என்பது அப்பட்டமாகத் தெரிந்தது. கமலின் பதிலும் அரசியல் கலந்தே இருந்தது. எம்ஜியாரின் நாளைநமதேயில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தும் முடியாமல் போய்விட்டது. அப்படி நடித்து அவருடன் நாளைநமதே எனப்பாடியிருந்தால் இப்போது தனக்கு பயன்பட்டிருக்கும் என்றார். பெரும்பாலும் பதிலில் விறுவிறுப்பு இல்லாமல் மொக்கையாத்தான் நகர்ந்தது.

முதல் நாளும் மறுநாளும் கமலின் உடைகள் அழகாய் இருந்தன.

மறுநாள் பாத்திமாபாவுவை செய்தி வாசிக்கச் சொல்ல, அபிராமி தண்ணீர் பாட்டிலை பிள்ளைபோல் பாவித்தது அதற்கு அப்பா என முகனைச் சொன்னதை செய்தியாக்கி அடிதடிக்கு நூல் எடுத்துக் கொடுத்துவிட்டார். லாஸ்லியாவைச் செய்தி வாசிக்கச் சொன்னால் நிகழ்ச்சித் தொகுப்பாளரைப் போல கைகால்களை ஆட்டி செய்தி வாசித்தார். இலங்கைத் தமிழ் அழகு...  

அபிராமி குழந்தையில் 'தமிழ்ப்பொண்ணை' கையில் எடுத்தார் மதுமிதா... ஆட்டம் சூடானது... அபிராமி அழுது ஆர்ப்பாட்டம் பண்ண, ஷெரின் 'தமிழ்ப்பொண்ணுன்னா அப்ப நாங்கள்ல்லாம்.... நான் கார்நாடகாவுல இருந்து வந்திருக்கேன்... எங்களுக்கு கலாச்சாரம் இல்லையா... ' என ஆட்டம் போட, ஆளாளுக்குக் கத்த, மீராவின் சண்டைக்குப் பின் மதுமிதாவின் தமிழ்ப்பொண்ணு அடித்து ஆட ஆரம்பித்தது.

கமல் வந்து மீண்டும் அகம் டிவி வழியாக உள் நுழைந்து அழுகைக் கதையைக் கேட்டு இருவரிடமும் பேசினாலும் இது தொடர்ந்தால்தான் பிக்பாஸ் வீடு களை கட்டும் விஜய் டிவி கல்லாக்கட்டும் என்பதால் அதை முழுவதும் தீர்க்காமல் மெல்லக் கடந்து போனார். கமலும் சண்டையைத்தானே விரும்புவார்.

எல்லாருக்கும் இதய வடிவிலான தலையணை கொடுத்து விருப்பப்பட்டவர்களுக்கு கொடுங்கள் என்றார். அதில் சித்தப்புத்தான் அதிகம் பெற்றார். கமுக்கமா உக்காந்துக்கிட்டு... அப்ப அப்ப கவுண்டர் அடிச்சிக்கிட்டு... சித்தப்பு செவ்வாழையா இருந்திருக்காருன்னு அப்பத்தான் புரிஞ்சது.

மீரா தலைவர் வனிதா மீது எல்லாரும் சொல்வது போல் எனக்கும் அவருக்கும் நல்ல உறவெல்லாம் இல்லை என்பதை உதாரணங்களுடன் விளக்கினார். அபிராமிக்கும் மீராவுக்கும் வெளியிலேயே பிரச்சினை என்ற சேரனின் கருத்தை வலுவாக எதிர்த்தார். அதன் பின்னர் சேரனிடம் அவர் பேசப்போனபோது சேரன் உனக்கும் எனக்கும் ஒத்து வராதும்மா... தயவு செய்து பேசாதே எனக் கையெடுத்துக் கும்பிட்டார்.

அடுத்த வாரத் தலைவர் தேர்ந்தெடுப்புக்காக கமல் யாருக்கெல்லாம் விருப்பம் என்றபோது மோகன், முகன், மீரா, ரேஷ்மா முன் வந்தார்கள். அவரவர் தலைவரானால் என்ன செய்வோம் எனச் சொன்னார்கள். வாக்கெடுப்பு நிகழ்த்தும் போது அவர்கள் எதற்காக அவருக்கு வாக்களிக்கிறார்கள் என்பதைச் சொன்னால் தேவையில்லாத பிரச்சினைகளைத் தவிர்க்கலாம் என சேரன் கமலிடம் சொல்ல, அதான் கை தூக்கியாச்சுல்ல என சரவணன் பொங்க, சேரன் சொல்வதை ஆதரிப்பது போல் கமல் பேசி, மோகனை சேரன் ஆதரிக்க காரணமென்ன என்று கேட்டதுடன் மற்றவர்களைக் கேட்காமல் கடந்து போனார். மோகன் ஒன்பது வாக்குகள் பெற்றதால் அடுத்தவார தலைவரானார்.

சேரன் மீது சித்தப்புக்கு துளியும் பாசமில்லை... இருவரும் மோதிக் கொள்ளும் நாள் விரைவில் வரும்... திரைக்கதையில் டுவிஸ்ட் இல்லாமலா போகும்.

மீராவைப் பொறுத்தவரை ரொம்பப் பாதுகாப்பாக விளையாடுவதாய் நினைத்து முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார். இப்படித்தான் வாழ்க்கையிலும் இருப்பார் என்பதால் அபிராமியுடனான பிரச்சினை மட்டுமின்றி, இணையத்தில் பலர் கொடுக்கும் பேட்டியும் உண்மை என்றே தோன்றுகிறது.

கமல் ஒரு இடைவேளை என நடையைக் கட்டியதும் மீண்டும் தமிழ்ப்பொண்ணு பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க, மதுமிதாவை எல்லாரும் கட்டி ஏற ஆரம்பித்தார்கள். நான் அஞ்சு பொண்ணுங்களையும்தான் காதலிப்பதா நடிக்கிறேன். அப்ப நான் தப்பா... இல்லை என்னைக் காதலிக்கிற மாதிரி கலாய்க்கிற அந்தப் பொண்ணுங்க தப்பா எனக் கேட்க, மதுமிதா நான் பிடித்த முயலுக்கு அஞ்சு காலென நின்றார். பின் முகனைப் பாதிக்காதா அது என்றெல்லாம் கேட்டார். முகனைப் பாதித்த அவன் சொல்லட்டும் உனக்கென்ன வந்துச்சு என்று கவின் கேட்டார். பிரச்சினை தீராமல் நீண்டு கொண்டே போனது.

அதென்ன தமிழ்ப்பொண்ணுன்னு செக்சியா டான்ஸ் வைச்சிருக்கிற படத்துல நடிக்க மாட்டியா என வனிதா கேட்க, அது தொழில் நான் நடிப்பேன் என்றார். அப்ப இவ ஜாலிக்குப் பண்ணினதுல உனக்கென்ன பிரச்சினை என வனிதா கேட்க, சினிமாவுல எல்லாரும் ஒண்ணாத்தான் வேலை செய்யிறோம்... இதிலென்ன தமிழ் அது இதுன்னுக்கிட்டு என சேரனும் சேர்ந்து கொண்டார். மதுமிதா தனியேப் போய் சாமியிடம் பேசினார்... கேமராவிடம் பேசினார்... தனியாக தனக்குத்தானே பேசினார்... இவர்கள் எல்லாம் நடிக்கிறார்கள்... நான் நடிக்கமாட்டேன் என புலம்பினார்.

கமல் திரும்பி வந்த போது என்ன மதுமிதா கண் கலங்கியிருக்கு என்றதும் மற்றவர்கள் இப்பக் கேட்காதீங்க சார் என அதைக் கடத்திவிட்டார்கள். என்ன நடந்தது என்பதை நாங்கள் பார்க்கவில்லை எனச் சிரித்த கமல் கதையின் விறுவிறுப்புக்காக அதைக் கடந்து போய்விட்டார்.

மதுமிதா நகைச்சுவை நடிகை அல்ல... மிகச் சிறப்பாக நடிக்கத் தெரிந்த வில்லி... கேமரா தன்னைப் பார்க்கும்... தான் தனியே புலம்புவதை மக்களிடம் கொண்டு சேர்க்கும்... நம்மீது எல்லாருக்கும் ஒரு இரக்கம் ஏற்படும் என அழகாய் நடிக்கிறார்... தமிழ்பொண்ணு வசனம் தேவையில்லாதது... ரித்விகா ஆக மதுமிதாவுக்கு ஆசை... மேலும் கோபமோ, தாபமோ வாய்விட்டு கேமரா பார்த்துப் பேசுவதெல்லாம் நடிப்பின் உச்சம்.

மதுமிதாவுடன் என்னால் சேர்ந்து படுக்கையை பகிர முடியாது (இருவர் படுக்கும் கட்டில்) என அபிராமி தனது படுக்கையை மாற்றிக் கொள்கிறார். அவருக்கு லாஸ்லியா உதவுகிறார். ஷெரினிடம் மன்னிப்பு கேட்க வைக்கப்படுகிறார் மதுமிதா. பிரச்சினை அப்படியேதான் இருக்கிறது. மீண்டும் வெடிக்கலாம்.

சினிமாவில் அவ்வளவு கேவலமாக காட்டுவார்கள்... நடிப்பார்கள் அதெல்லாம் தமிழ்க்கலாச்சாரத்தை ஒன்றும் செய்யாது. ஒரு நிகழ்ச்சியில் செய்த 'குழந்தை'த்தனமான செய்கையால் நம் கலாச்சாரத்துக்கு இழுக்கு என சினிமா நடிகை மதுமிதா கலாச்சாரத்துக்கு காவல் நிற்பதெல்லாம் ரொம்ப அதிகம்.

சேரனை அப்பா என்கிறார் வனிதா... அப்பக கண்டிப்பாக சேரனுக்கு ஆப்பு இருக்கு.

சேரனின் பேச்சும் செயலும் பலருக்கு எரிச்சலைக் கொடுக்கும் என்பதால் இந்த வார நாமினேசனில் அவர் கண்டிப்பாக இடம் பிடிப்பார். இயக்குநர் சேரனாய் இருப்பதை தவிர்த்தல் நலம்.

மீரா, அபிராமியும் நாமினேசனில் கண்டிப்பாக இடம் பெறுவார்கள்.

கவின், சாண்டி, அபிராமி வீட்டைக் கலகலப்பாக வைத்திருக்கிறார்கள்.

வனிதா, மீரா, ஷெரின் மற்றும் மோகன் வீட்டில் அடிக்கடி சண்டைக்கு வழி வகுக்கிறார்கள்.

சேரன், பாத்திமா தேவையில்லாமல் பேசுகிறார்கள்.

சரவணன் சின்னச் சின்ன சரவெடி விட்டு இளைஞர் பட்டாளத்தை தன் வசம் ஈர்க்கிறார்.

சாக்சி ஏனோ மெல்ல தன் செயல்களால் மேலே பயணிக்கிறார்... விரைவில் பார்வையாளர்களை ஈர்ப்பார்.

லாஸ்லியா இன்னும் கொஞ்சம் வேகமெடுத்தல் நலம்.

மற்றவர்கள் இருப்பதும் தெரியலை.... நடப்பதும் தெரியலை..

கமல் அரசியலுக்கான களமாக பிக்பாஸ் மேடையைப் பயன்படுத்துகிறார் என்றாலும் இந்த வாரம் கமலின் பேச்சு மரண மொக்கை.

மோகன் தலைமையில் இந்த வாரம் பிரச்சினைகளுக்குப் பஞ்சம் இருக்காது...

பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.

1 கருத்து:

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி