(ரேஷ்மா) |
முதல் வாரமென்பதால் அடிச்சிக்கவும் மாட்டானுங்க... நாமினேசனும் இல்லை... மீராவை இறக்கிவிட்டும் குளம் கலங்காமலேயே இருக்கு... சரி சோகத்தைச் சொல்லி மக்களை அழ வைத்து மக்கள் மத்தியில் பிக்பாஸ்க்கு ஒரு பேரை வாங்கிவிடலாமென, ஒருவர் மூணு சீட்டெடுத்து அதில் இருக்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொல்லணும்ன்னு சொல்லி, ஆட்டையை ஆரம்பிச்சி வச்சாரு... ஆனா குடுவைக்குள்ள இருக்க பேப்பர்ல நாலே நாலு கேள்வி அதுவும் சோகக் கேள்வி என்பதாய் சீட்டெழுதி பார்வையாளர்களை சீட்டிங் பண்ணியிருந்தார் பிக்பாஸ்... இதெல்லாம் எப்பவும் நடப்பதுதானே.
எல்லாருக்கும் வந்த கேள்வி உங்களால் மறக்க முடியாத நாள், உங்களுக்குத் துரோகம் செய்தவர்கள் இப்படியான கேள்விகள்தான். எல்லாருமே மேடையேறி அழுதபடியே கதைகளைச் சொன்னார்கள். மோகன் வைத்யா காது கேளாத, ஊமைப்பெண்ணான தன் மனைவியின் கதையை, அவர் இரயில் விபத்தில் பலியான சோகத்தைச் சொல்லி அழுதார். இந்த சோகக்கதையை கொஞ்சம் கொஞ்சமாக அடிக்கடி சொல்லியிருக்கிறார் என்றாலும் மனைவியின் மறைவு குறித்துச் சொல்லும் போது அவருக்கு எதிரே இருந்தவர்களுக்கு மட்டுமின்றி பார்த்துக் கொண்டிருந்த நமக்கும் அழுகை வந்தது.
ரேஷ்மாவின் சோகக்கதையில் முதல் மகன் பிறக்குமுன்னே முதல் கணவனுக்கும் தனக்கும் ஒத்துவரவில்லை என்பதால் விவாகரத்துப் பெற்றதாகவும், உடன் பிறப்புக்கள் ஒதுக்கிய நிலையில் அம்மா, அப்பாவின் ஆதரவோடு வாழ்ந்ததாகவும், அதன் பின் ஒரு ஆங்கிலேயனைக் காதலித்து பெற்றோர் எதிர்ப்புடன் திருமணம் செய்து கொண்டு அவனிடம் அடி வாங்கிப் பெற்ற அவஸ்தை, பிரசவ வேதனையுடன் கார் ஓட்டி மருத்துவமனை சென்றது... அப்போது பிள்ளை வெளியில் வர ஆரம்பித்தது... எட்டு வயதான மூத்தமகனின் உதவி மட்டுமே தனக்கு அந்த நேரத்தில் துணையாய் இருந்தது... இப்போது மகன்களுக்காக வாழ்வது என போராட்ட வாழ்க்கையைச் சொல்லி அழுதார். என்ன பெண் இவள்... எத்தனை போராட்டங்கள்... என எல்லாரையும் அழ வைத்தார்.
தர்ஷன் போர் மேகம் சூழ்ந்த இலங்கையில் வாழ்ந்த கதை சொல்லி அழுதார். சேரன் முதல் மகள் பிறப்பின் போது பணமில்லாத நிலையில் பட்ட கஷ்டத்தைச் சொன்னார். அபிராமி ஐம்பது லட்சம் சம்பாதிக்கும் மாப்பிள்ளை வேண்டுமென்றார்... அதுவும் கவினைப் பார்த்தே எல்லாம் சொன்னார்... எல்லாம் கவினுக்குத்தானா என யாரோ கேட்க, அவனைத்தான் அப்பவே ஒதுக்கிட்டேனே என்றார். ஓவராய் உடலை அலட்டி அலட்டிப் பேசினார். 'என்ன உடம்பு ரொம்ப ஆடுது' எனக் கேட்ட மதுமிதாவிடம் 'உனக்கு வாயாடுதுல்ல' என்றார். இவரின் அலட்டல்... ரொம்ப அதிகமாகத் தெரிந்தது.
மதுமிதா அப்பா இல்லாத கதையைச் சொல்லி, அதனால் பட்ட கஷ்டங்களைக் கேவிக்கேவி அழுதபடி சொன்னார். எல்லாரும் பெண் குழந்தைகள் என்ற நிலையில் அம்மா வளர்க்கப்பட்ட பாட்டைச் சொன்னார். நம்மைச் சிரிக்க வைப்பவர்கள் வாழ்க்கையில் ரொம்ப கஷ்டப்பட்டவர்களாய்த்தான் இருப்பார்கள் என்பார்கள். சாப்ளினின் வாழ்க்கையில் அவர் அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறார். ஆச்சி மனோரமாவின் வாழ்க்கை சந்தோஷமானதாக அமையவில்லை. நாகேஷ் கூட கடைசி காலத்தில் மகன் ஆனந்தபாபுவால் ரொம்ப அல்லல்பட்டார்.
மதுமிதாவின் கதையின் தொடர்ச்சியாய் அப்பா இல்லாத வலி எப்படிப்பட்டதென அபிராமி படுக்கை அறையில் தோழிகளுடன் பேசிக் கொண்டிருந்தார். படிப்புக்கான கட்டணம் கட்ட, அம்மாவைப் பிரிந்திருக்கும் அப்பாவுக்கு போன் பண்ணின போது ஆத்தாளும் மகளும் மறுபடியும் எங்கிட்டயே வந்துட்டீங்களான்னு சிரித்ததால் அதன் பின் கட்டணத்துக்குப் பணம் கேட்காமல் தானே உழைத்து அதன் மூலம் படித்த கதையைச் சொன்னார். பெரிய கண்கள் விரிய, கண்ணீர் சிந்த அபிராமி உண்மையாகவே வலியைச் சொல்லிக் கொண்டிருந்தது... பார்க்க வருத்தமாக இருந்தது.
சரவணன் ரெண்டு கல்யாணம் பண்ணுன கதையைச் சொன்னார்... பங்காளிகள் பகையாளிகள் ஆனதையும் சொன்னார். பொட்டச்சி காசுல சாப்பிட்டு குடிச்சிக்கிட்டு இருந்தேன்னு சொன்னார். இப்ப பொட்டச்சிங்க சம்பாதிக்கிறாங்க சித்தப்பு... அவங்க காசுல உக்காந்து சாப்பிட்டா தப்பில்லை... காலங்காலமா அவங்க வீட்டுக்குள்ளயே கிடக்கணுமா என்ன... அப்புறம் என்னை பொட்டையின்னு சொன்னானுங்க டேய் எனக்கு ஒரு பையன் இருக்கான்டா... நான் பொட்டையில்லைடான்னு செவ்வாழை காலரைத் தூக்கிவிட்டுச் சொன்னார். இவர் கதைக்கும் ஒரே அழுகாச்சிதான். பிள்ளை இல்லை என்பதால் ரெண்டாம் கலியாணம் என்ற பத்தாம்பசலித்தனத்தை யாரும் கேள்வி கேட்கவில்லை. ஆண்டவருக்கே மூன்றல்லவா... அப்புறம் எப்படி கேள்வி கேட்பது..?
வனிதா தன் மகன் பிறந்தகதை, அவன் இப்ப பிரிஞ்சிருக்கிற கதை சொல்லி அழுதார்... கவின் தன் குடும்பம் பட்ட அவமானத்தை, வேதனையை, ஊர் ஊராக அம்மாவைக் கூட்டிக்கொண்டு அலைந்ததைச் சொல்லி அழுதார். இப்படி ஆளாளுக்கு அழுகாச்சிக் கதைகளே சொன்னார்கள்... அழுதார்கள்... குடும்ப உறுப்பினர்கள் எல்லாம் அழுதார்கள்...
பாத்திமா பாபு, சாக்சி எல்லாம் கதை சொன்னார்களாம்... என்னமோ தெரியலை இணையத்துல அதெல்லாம் காணோம்... நல்லவேளை ரொம்ப அழுகுறதைப் பார்க்க வேண்டியதில்லைதானே.
இடையில் மோகன் - சாண்டி மோதல்... ஏதோ மிகத்தவறான வார்த்தைப் பிரயோகம் சாண்டியிடமிருந்து வந்திருக்கிறது... அது சாதீய தாக்குதல் போலானது என்பதை உணர முடிகிறது. பிக்பாஸூம் அதை காட்டவில்லை... காட்டினால் பிரச்சினைகள் பெரிதாகலாம். மோகன் - சாண்டி சமாதானத்தின் போது என்ன பண்றது... என்னை 'குடுமி, அங்கவஸ்திரம், தர்ப்பைப்புல்லுன்னு வளர்த்துட்டா' என்றார். சமாதானம் கழிவறைக்குள் நிகழ்ந்தது. சுபமாய் முடிந்தது.
அழுகைகள் எப்போதும் மனதைப் பாதிக்கும் என்பதால்தான் பிக்பாஸ் அழுகுற மாதிரி கேள்விகளைக் கேட்டிருக்கிறார் என்றாலும் நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணிட்டியா அப்ப நானும் அழுவேன் என்பதாய்த்தான் இருந்தது ஒருவரை மிஞ்சிய ஒருவரின் நடிப்பு. இதற்கிடையே மீரா, அபிராமிக்கு ஏதோ உரசல்... சண்டை... அழுகை... பாத்திமா பாபுவின் தேற்றுதல்... அபிராமி தண்ணி கொடுத்தல் என அது ஒரு பக்கம்.
சண்டையே போடமா இருந்தா எப்படி... வனிதா இருக்கும் போது வசமா மாட்டினா விடுவாரா... ஊக்கைப் போட சொன்ன கதையை ஊதிப் பெரிசாக்கி அடித்து ஆடியிருக்கிறார்... ஆமா வீட்டுக்குள்ள செம சண்டை... ஆனா யாருக்கும் உடையலை மண்டை.
பதிவின் நீளம் கருதி அடுத்த பதிவாய்....'வீட்டுக்குள் சண்டை' வரும்.
பிக்பாஸ் தொடரும்.
-'பரிவை' சே.குமார்.
பிக்பாஸ்-ஐ
பதிலளிநீக்குநான் பார்க்கிறது
இல்லை;
ஆனாலும்
உங்கள்
பதிவைப் படித்தேன்.
வர்ணனை நன்று!!
ரொம்ப நன்றி
நீக்கு