ரொம்ப நாளைக்குப் பிறகு 'மனசு'க்குள் வருகிறேன். என்ன எழுதுவது என்பதே மிகப்பெரிய கேள்விக்குறியாய்... சிலவற்றைக் கிறுக்கலாம் எண்ணத்தில் தோன்றும் வண்ணமாய்...
முதலில் எங்கள் பிளாக்குக்கு நன்றி... தொடர்ந்து கேட்டு வாங்கிப் போடும் கதையில் எனக்கும் இடமளிப்பதற்காக... இரண்டு வாரம் முன்னர் பகிரப்பட்ட 'கோபம்' கதையின் முடிவு குறித்தான கருத்துப் பரிமாற்றங்கள் மிகச் சிறப்பாக இருந்தது. நானும் கூட இப்படியான முடிவு இருந்தால் நல்லாயிருக்கும் என வேறொரு முடிவையும் சுடச்சுட (!) கருத்துப் பகுதியில் நீண்ட கதையாகப் பகிர்ந்திருந்தேன் என்றாலும் முந்தைய முடிவில் எனக்கு மாற்றமில்லை.
வீட்டில் கூட குழந்தைகள் சேட்டை பண்ணும் போது அடித்து விட்டாலோ திட்டி விட்டாலோ சமாதானம் என்று வரும் போது சாக்லெட்டோ, பணமோதான் கொடுக்கப்படும். அதற்கு லஞ்சம் என்ற அர்த்தம் வருவதில்லை. இந்தாளு லஞ்சமே வாங்க மாட்டாரு... ஆனா வீட்டில் கொடுக்கிறார் என்றெல்லாம் யாரும் பேசுவதில்லை... இது தொட்டுத் தொடரும் ஒரு சமாதான முறைதான். அப்படியாகத்தான் அது எனக்குத் தோன்றியது. இருப்பினும் நட்புக்களின் கருத்துக்கான மரியாதையாக இப்படியிருந்தால் என மாற்றமும் செய்தேன்.. அது பலருக்குப் பிடித்ததில் மகிழ்ச்சியே. மேலும் மனதில் உள்ளதைச் சொல்லும் மிக நீண்ட கருத்துக்கள் அங்கு கிடைப்பதில் உள்ளார்ந்த மகிழ்ச்சி.
கதையின் நீளம் குறித்து ஜீவி ஐயா அவர்கள் சொல்லியிருந்தார்கள். கதை நாயகனின் கோபத்தைக் காட்டவே கொஞ்சம் நீட்டி எழுத வேண்டியிருந்தது என்றாலும் எனது கதைகள் பெரும்பாலும் நீளமானவையாகவே அமைகின்றன. இனி எழுதும் கதைகளை ஐயா சொன்னது போல் எழுத முயற்சிக்கணும்... நன்றி ஐயா.
எனக்கு வாய்ப்புக் கொடுக்கும் ஸ்ரீராம் அண்ணாவுக்கு நன்றி.
தேன்சிட்டு மின்னிதழில் எனது கவிதை வெளியாகியிருந்தது. அதன் ஆசிரியர் குழுவுக்கும் நண்பர் தளிர் சுரேஷ்க்கும் நன்றி. கவிதை ரொம்ப நல்லாயிருக்கு என அவரின் நண்பர் கணேசகுமாரன் என்பவர் சொன்னதாய் சொன்னார். அந்த நண்பருக்கும் நன்றி.
முத்துக்கமலத்தில் இரண்டு கவிதைகள் வெளியானது... அதில் விவசாயியின் வேதனை என்ற கவிதை, சிறந்த கவிதையாக தேர்ந்தெடுக்கப்பட்டு கவிநேசன் அவர்கள் வழங்கும் புத்தகப் பரிசைப் பெற்றிருக்கிறது. முத்துக்கமலம் ஆசிரியர் குழு, திரு. கவிநேசன் ஆகியோருக்கு நன்றி.
(கதை எழுதுறதை விட்டுட்டு கவிதைப் பக்கம் போயிடலாமோ😊)
முனைவர் நௌஷாத்கானின் 'தடீச்சா பிரதா' என்ற சிறுகதைத் தொகுப்புக்கு அணிந்துரை எழுதியிருக்கிறேன் என்பதை முந்தைய பதிவில் சொல்லியிருக்கிறேன். புத்தகம் வந்துவிட்டது. அன்பின் காரணமாக புத்தகமெல்லாம் வெளியிடாமலே இருவருக்கு (குடந்தை சரவணன் அண்ணனின் திருமண ஒத்திகைக்கு முதல் அணிந்துரை) அணிந்துரை எழுதியது உண்மையிலேயே மகிழ்வாய் இருக்கிறது. என் மீது நம்பிக்கை வைத்திருக்கும் நட்புக்களுக்கு நன்றி.
(அணிந்துரையில் உள்ளதை உள்ளபடி எழுதியிருந்தாலும் அதை அப்படியே பிரசுரித்து, தனியாக நாலு நல்ல வார்த்தை எழுதி வாங்கி அட்டையில் போட்டுக் கொண்டார் நௌஷாத், அந்தக் குணம் பாராட்டுக்குறியது.)
இரண்டு சிறுகதைகளை நாவலாக்கும் முயற்சியில் இறங்கி ஒன்றை (கறுப்பி) முடித்து விட்டேன். முழுக்க முழுக்க அபுதாபியில் நடக்கும் கதை... 50% உண்மையும் 50% கற்பனையும் கலந்து எழுதிய குறுநாவல் என்று சொல்லலாம். அமீரகத்தில் பெண்களின் வாழ்க்கையை, வலியைப் பேசும் நாவலாய் இது அமைந்திருக்கிறது. எப்பவும் நான் எழுதும் கதைகள் முதலில் எனக்குப் பிடிக்க வேண்டும் என்று நினைப்பவன்... கலையாத கனவுகள், வேரும் விழுதுகளும், குறிஞ்சியும் நெருஞ்சியும் வரிசையில் கறுப்பி மனசுக்கு மிக நெருக்கமாய் வந்திருக்கிறது.
கறுப்பி
"அவளின் அழுகை சிவாவிற்கு உறக்க வராமல் புரண்டு புரண்டு
படுக்க வைத்தது... ஒரு பெண்ணின் கண்ணீர்தான் எத்தனை வீரியமானது..?
அது ஒரு மிகப்பெரிய ஆயுதம்... அந்த ஆயுதம்
எப்படிப்பட்டவனையும் சாய்த்து விடக்கூடியதே என்பதை அவன் அறிவான்... அம்மா,
அக்கா, தங்கை, அண்ணி, தோழி என எத்தனை பேரின் கண்ணீரை அவன்
பார்த்திருக்கிறான். அந்தக் கண்ணீர்கள் எல்லாமே வலியை மட்டுமே பிரதிபலிக்கவில்லை.
பல நேரங்களில் நினைத்ததைச் சாதித்துக் கொண்ட கண்ணீராய்த்தான் இருந்திருக்கின்றன...
இருக்கின்றன... ஆனால் இவளின் கண்ணீர் வலியை மட்டும்தான் கொட்டியது.
எத்தனை வலி இருந்தால் அப்படி அழுதிருப்பாள்..? "
இப்படியாக ஆரம்பித்து....
“ச்சிவ்வா...” என கத்திக் கொண்டே இன்னும் வேகம் கூட்டினாள்
அந்த அரபிப் பெண் லீமா..
அவள் முஸ்லீமோ இவன் இந்துவோ அல்ல....
அவர்கள் நட்பை... மனிதர்களை... நேசிக்கும் நல்ல
நண்பர்கள்...
ஹசனைப் போல்... அன்பைப் போல் மனிதர்கள் இந்த நட்பைக் கொச்சைப்
படுத்தலாம்.
பாலை மண்ணுக்குத் தெரியும் இந்த நட்பின் வீரியம்...
அது இவர்களை ரசிக்க ஆரம்பித்தது....
காரின் வேகம் இருநூறைத் தொட்டிருந்தது...
காற்றும் மணலும் காதலுடன் குழாவ ஆரம்பித்திருந்தன...
சூரியனைப் பாலை மெல்ல விழுங்கிக் கொண்டிருந்தது.
அவர்களின் பயணம் எங்கே என்பது தெரியாது... ஆனால் பறந்து
கொண்டிருக்கிறார்கள்... வாழ்வை ரசித்தபடி.
இப்படியாக முடிகிறது.
இடையில் மலாமா, லீமா, யமுனா என்ற மூன்று பெண்களின் வாழ்க்கையை வலியோடு பேசுகிறது. புத்தகமாக்கும் எண்ணம் இருக்கிறது. காலம் கனிகிறதா என்று பார்க்கலாம்.
ஷார்ஜா புத்தக கண்காட்சி- 2019க்கு முதல் சிறுகதைத் தொகுப்பு நண்பர்களின் முயற்சியால் வருகிறது. அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது. கதைகள் எல்லாம் எங்கள் பிளாக், அகல், தேன்சிட்டு, கொலுசு, முத்துக்கமலம், காற்றுவெளி போன்றவற்றில் வெளியானவைதான். மனசு தளத்தில் பகிரப்பட்ட கதைகள்தான் என்றாலும் கொஞ்சம் பட்டி, டிங்கரிங் எல்லாம் பார்த்துக் கொடுத்திருக்கிறேன். நட்புக்காகவெல்லாம் அணிந்துரை தரமாட்டேன் வாசித்து எனக்குப் பிடித்தால் மட்டுமே அணிந்துரை தருவேன் என திரு. முத்துநிலவன் ஐயா சொல்லியிருக்கிறார். அவரைக் கவரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அவரைக் கவர்ந்து அணிந்துரை கிடைத்துவிட்டால் கண்டிப்பாக வாசிப்பவரையும் கவரும் என்ற நம்பிக்கை இருக்கு. பார்க்கலாம்.
நன்றி.
-'பரிவை' சே.குமார்.
உங்கள் எண்ணம் கண்டிப்பாக நிறைவேறும்...
பதிலளிநீக்குவாழ்த்துகள்...
நன்றி அண்ணா
நீக்குவாழ்த்துக்கள் தங்களின் அனைத்து படைப்புகளுக்கும் ....
பதிலளிநீக்குதங்களின் அனைத்து எண்ணங்களும் நிறைவேறட்டும் ...
தேன்சிட்டு மின்னிதழுக்கு தங்களின் கதை, கட்டுரை, கவிதைகளை அனுப்பிவையுங்கள் மின்னஞ்சல் thalir.ssb@gmail.com மிக்க நன்றி!
நீக்குஅனுபிரேம் - நன்றி சகோ
நீக்குசுரேஷ் - நண்பர்களிடம் எல்லாம் சொல்லியிருக்கிறேன். நம் நண்பர்களும் அனுப்பினால் நல்லது... அனுப்புவார்கள் என்று நினைக்கிறேன்.
நீக்குநன்றி.
சின்ன சின்ன சந்தோஷங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி! கதையின் நீளம் குறித்து கூறியிருந்தீர்கள். எனக்கும் அதில் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. தேன்சிட்டுக்கு நீங்கள் அனுப்பும் கதைகள் ஆறுபக்கம் அளவில் இருந்தால் போதுமானது. மின்னிதழ் என்பதாலும் பெரும்பாலும் மொபைலில் வாசிப்பதாலும் நீண்ட கதைகளை வாசகர்கள் விரும்புவது இல்லை. இதை இந்த பத்துமாதத்தில் மின்னிதழ் வெளியீட்டு அனுபவத்தில் சொல்கிறேன்! தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். தொடர்ந்து உங்கள் படைப்புக்களை வெளியிடுவதில் எனக்கும் பெருமைதான். நன்றி!
பதிலளிநீக்குரொம்ப நன்றிங்க.
நீக்குபெரும்பாலும் 6 பக்கத்துக்குள்தான் இருக்கும். சில கதைகள் சற்றே பெரிதாகும். நான் வேர்ட்டில்தான் சேமித்து வைப்பேன். ஆறு பக்கங்களுக்கு மேல் இருப்பதில்லை. தங்கள் இதழில் அதிக பக்கங்களை அவை எடுத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். இத்தனை பக்கம் ஒதுக்குகிறாரே என யோசிப்பேன்... அதான் இப்போது கதைகள் அனுப்பினாலும் பக்கங்கள் குறைவாக வரவேண்டும் என்று நினைப்பேன்... இனி பெரும்பாலும் கவிதைகள்தான் அனுப்ப நினைக்கிறேன்... அதுவே தங்களுக்கும் பக்க சேமிப்பிற்கு உதவும்.
தங்கள் கருத்துக்கு நன்றி... தொடர் வாய்ப்புக்கும் நன்றி.
வாழ்த்துகள் குமார்.
பதிலளிநீக்குஉங்களின் நூலாக்க முயற்சி சிறப்பாக அமைய மனம் நிறைந்த வாழ்த்துகள்.
பதிலளிநீக்கு