ஞாயிறு, 12 மே, 2019

காதலே... காதலே... (பிரதிலிபிக்கு எழுதிய கதை)

Image result for காதல்

"நீ அவளைக் காதலிக்கிறியா...?" அப்பாவிடமிருந்து இப்படி ஒரு கேள்வி என்னை நோக்கி வரும் என்பதை நான் எதிர் பார்க்கவில்லை.

பதில் சொல்லாது தரையைப் பார்த்தபடி நின்றேன்.

"உங்கிட்டதான் கேக்குறேன்... காது கேக்குமில்ல... கேட்டதுக்கு எனக்குப் பதில் இப்ப வரணும்..? இல்லைன்னா..." கோபத்தோடு பேசினார் என்பதைவிட கத்தினார் என்பதே பொருந்தும்.

அம்மா ஒரு பக்கம் பேசாமல் வாய் பொத்தி நின்றாள். எதாவது பேசினாள் என்றால் நீ வளர்த்த லட்சணம்தானே இதுன்னு தன் மீது பாய்ந்து விடுவார் என்பதை உணர்ந்தே ஒதுங்கி நின்றாள்.

அண்ணனோ தனக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதைப் போல ஹெட்செட் மாட்டி பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அங்கு இருந்ததே அபூர்வம்... எப்பவும் அறைக்குள்ளயே அடைந்து கிடப்பதுதான் அவனுக்குப் பிடிக்கும். வீட்டில் இருந்தால் மொபைல்தான் அவனின் உலகம்.

அக்கா என்னை முறைத்துக் கொண்டு கதவோரத்தில் நின்றாள். அவள் அப்பா செல்லம் என்பதால் அவரிடம் திட்டே வாங்காதவள் என்ற பெருமை எங்கள் மூவரில் அவளுக்கு உண்டு.

எல்லாரையும் தலை தூக்கி ஒரு முறை பார்த்துவிட்டு நானும் அப்பா யாரையோ விசாரிக்கிறார் என்பதைப் போல அருகில் கிடந்த குமுதத்தின் அட்டைப் பட அஞ்சலியை ரசித்துக் கொண்டிருந்தேன்.

"என்னடா... தெனாவெட்டா உக்காந்திருக்கே... உன்னைத்தானே கேட்கிறேன்... என்னவோ எருமை மாட்டு மேல மழை பேய்ஞ்ச மாதிரி உக்காந்திருக்கே.... அவளை நீ விரும்புறியான்னு கேட்டேன்...? எனக்கு இப்ப பதில் தெரியணும்...பதில் சொல்லாம நீ இங்க இருந்து எந்திரிச்சிப் போகமுடியாது... சொல்லிப்புட்டேன்..." கர்ஜித்தார்.

'முதல்ல காதலிக்கிறியான்னு கேட்டீங்க... இப்ப விரும்புறியான்னு கேட்கிறீங்க.. உங்க வார்த்தையில் பிழை உள்ளது தந்தையே'ன்னு சொல்ல நினைத்தேன்... சொன்னா அவர் உட்கார்ந்திருக்கிற நாற்காலி எகிறி விழும்... எனக்கு அடி விழும் என்பதை அறிந்தவன் என்பதால் அதை எனக்குள்ளே சொல்லிக் கொண்டேன்.

இப்ப அவருக்கு ஏதாவது பதில் சொல்லியே ஆகவேண்டும்... தோளுக்கு மேல வளர்ந்துட்டேன்னோ என்னவோ இதுவரை கை ஓங்காமல் உட்கார்ந்த இடத்திலிருந்து கேட்கிறார்... எத்தனையோ தடவை பெல்ட் பிய்ந்து போற அளவுக்கு அடிச்சிருக்கார்...

சின்ன வயசுல ஒரு தடவை கோவிலுக்குப் பின்னால லதாவோட விளையாண்டுக்கிட்டு இருந்தப்போ அறியாத வயசுலங்கிறதைவிட ஆர்வக் கோளாறுல அவ மார்பை பிடிச்சதைப் பார்த்துட்டு இழுத்துக்கிட்டு வந்து கட்டி வச்சி உதைச்சவருதான் இவரு... எதையாச்சும் சொல்லித் தொலைக்கணுமே... இல்லைன்னு சொன்னா... நீ அவளை லவ் பண்றது எனக்குத் தெரியும்ன்னு ஆரம்பிப்பாரு... ஆமான்னு சொன்னா அவ என்ன ஆளுகன்னு தெரியுமான்னு கத்திக்கிட்டு இழுத்துப் போட்டு மிதிப்பாரு... இப்ப என்ன சொல்லுறது... சொல்லலைன்னா இங்க இருந்து போகவிடமாட்டாரு... ம்....' என்று யோசித்தபடி அஞ்சலியை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தேன்.

"பாருடி... எம்புட்டு நேரமாக் கத்துறேன்... பதில் சொல்றானா பாத்தியா... இப்பத்தான் அந்த நடிகையை அளவெடுக்குறான்... சொல்லுவானா... மாட்டானான்னு கேளுடி... செல்லங் கொடுத்து வளர்த்து கெடுத்து வச்சிருக்கேல்ல... மூத்தவனைப் பாரு... படிச்சி முடிச்சிட்டு வேலைக்குப் போறான்... இது மாதிரி எவ கூடவாச்சும் சுத்துனான்னு யாராச்சும் சொல்ல முடியுமா..?" என்றபடி அம்மா ஏன் ஒதுங்கி நிற்கிறாள் என அவளையும் சீனுக்குள் இழுத்துப் போட்டார்.

அப்பா சொன்னதும் காதில் மாட்டியிருந்த ஹெட்போனையும் மீறி மந்தகாசப் புன்னகையை என்னைப் பார்த்து வீசிவிட்டு மீண்டும் ராசாவுக்குள்ளோ ரஹ்மானுக்குள்ளோ ஐக்கியமானான் அண்ணன்.

"மூனையும் நாந்தானே வளர்த்தேன்... என்னமோ சனியன் இதுதான் இப்புடி வந்து பொறந்திருக்கு..." என்று ஆரம்பித்த அம்மா "அடேய் மூதேவி... அவரு கேட்டுக்கிட்டே இருக்காரு... நீ பேசாம உக்காந்திருக்கே.... அப்ப அவருக்கு என்ன மரியாதை இருக்கு... ஆமா இல்லைன்னு சொல்லித் தொலைய வேண்டியதுதானே..."

"என்ன சொன்னாலும் திட்டப் போறாரு... என்னத்தைச் சொல்லச் சொல்றே..?" சிரிக்காமல் கேட்டேன்.

சிரித்தால் அப்பா கையில் வைத்திருக்கும் காபி டம்ளர் குல்தீப் யாதவின் பந்து போல் என் முகத்தைப் பதம் பார்க்கலாம் என்பதை அறிந்தே வைத்திருந்தேன். சற்றே ஒதுங்கியும் அமர்ந்து கொண்டேன். அவர் வீசினால் வைடு பாலாகவும் வாய்ப்புண்டு இப்போது என்பதில் கொஞ்சம் நிம்மதி.

"எனக்கு அவளை இவன் விரும்புறானான்னு தெரிஞ்சாகணும்... அம்புட்டுத்தான்..." தீர்மானமாய்ச் சொல்லியவர் அக்காவிடம் "அந்த பெல்டை எடுத்துக்கிட்டு வா இங்க... இனி விசாரிக்கிற விதமா விசாரிச்சாத்தான் சரி வரும்" என்ற போது அவர் உக்கிரத்துக்குச் செல்கிறார் என்பதை உணர்ந்தேன்.

'ஆஹா... பதினெட்டாம் படிக்கருப்பன் தயாராயிட்டான்... எந்த நேரமும் இங்கு இடி முழங்கலாம்... ஆட ஆரம்பிச்சிட்டா அப்புறம் சிக்ஸும் போரும்தான்... கிரவுண்ட்டை ரணகளமாக்கிடுவாரு... மனுசன் அவ்வளவு சீக்கிரம் போல்ட் ஆகமாட்டாரு... ஆமா... இவரு இம்புட்டு உக்கிரமாகிற அளவுக்கு எவன் போட்டுக் கொடுத்திருப்பான்... அவன் மட்டும் கையில சிக்கினா மவனே தொலைஞ்சான்..' என்று மனசுக்குள் நினைத்தவன் "ஆமா..." என்றேன் சத்தமாக.

"ஆமான்னா.... என்ன அர்த்தம்..? பண்றேன்னு சொல்றியா பண்ணலைன்னு சொல்றியா...?" கர்ஜித்தார்.

'காதலிக்கிறியான்னு ஆரம்பிச்சீங்க... விரும்புறியான்னு கேட்டீங்க... நான் ஆமாங்கிறேன்... இப்ப பண்ணுறியாங்கிறீங்க... சீக்கிரம் முடிச்சி விடுங்க.. வேலை இருக்குல்ல...' இதெல்லாம் மைண்ட் வாய்ஸ்ங்க... சத்தமாச் சொல்லியிருந்தா சங்குதான்னு தெரியாமயா இருப்போம்.

அப்பாவின் கையில் பெல்ட் அமைதியாய் அமர்ந்திருந்தது... சில நாட்களுக்கு முன்னாலதான் புதுசு வாங்கியிருந்தார். எப்பவுமே சுத்தமான தோல் பெல்ட்த்தான் வாங்குவார். அடிச்சாருன்னா பிச்சிக்கும்ன்னு தெரியும். அவரோட யார்க்கர் பாலை எப்படித் தவிர்ப்பதுன்னு யோசிக்க ஆரம்பித்தேன்.

'பெல்ட்டையா எடுத்தாந்து கொடுக்கிறே... இரு... நம்ம செல்வி அத்தை மகன் வீட்டுக்கு அடிக்கடி வர்றதும் நீ குலையுறதும் எனக்குத் தெரியாதுன்னா நினைச்சே... இரு ஒரு நாளைக்கு ஆதாரத்தோட போட்டுக் கொடுக்கிறேன்...' என மனசுக்குள் திட்டியபடி அக்காவை முறைத்தான். அவள் நான் அடி வாங்குவதைப் பார்க்கும் ஆவலில் இருப்பதாய்க் காட்டிக் கொண்டாள்.

"அவரை வெறி ஏத்திப் பாக்காதே... அவரு வெறியானாருன்னா என்ன ஆகும்ன்னு உனக்கே தெரியும்ல்ல... கேட்டதுக்குப் பதில் சொல்லு.... அவளோட பேச மாட்டேன்னு சத்தியம் பண்ணிக் கொடு..." கோவில்ல சாமி ஆடுறவரைப் பார்த்து பக்கத்துல இருக்கவரு ஆத்தா உக்கிரமாயிருக்கான்னு ஏத்தி விடுற மாதிரி அம்மா அவ பங்குக்கு சாம்பிராணி போட்டாள்.

அப்பாவின் கண்கள் சிவப்பாக மாறியிருந்தது. எப்பவும் பந்து வீசலாம்... களத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

"அதான் சொன்னேன்ல ஆமான்னு..." கொஞ்சம் சத்தமாகச் சொன்னேன்... எனக்குப் பயமில்லை என்பதாய்க் காட்டிக் கொள்ள... ஆனால் உள்ளுக்குள் சோயிப் அக்தர் பாலை எதிர் கொள்ள இருக்கும் கும்ளேயின் மனநிலையில்தான் இருந்தேன்.

"என்னது ஆமாவா... உனக்கு முன்னாடி ரெண்டு பேரு இருக்குதுக... ரெண்டும் ரெண்டு டிகிரி படிச்சிருக்குக.. உங்கண்ணன் நல்ல வேலையில இருக்கான்... அக்கா வேலை தேடிக்கிட்டு இருக்கா... அதுகளே லவ்வுகிவ்வு சுத்தாம இருக்குதுக... உனக்கு இந்த வயசுல லவ்வு கேக்குதோ... லவ்வு..." எனக் கத்தியபடி எழுந்தார்.

'இப்பல்லாம் பள்ளிக்கூடம் படிக்கையிலையே லவ் பண்ணுதுக.. பப்ளிக்ல லிப் டு லிப் கிஸ் கொடுத்துக்கிட்டு நிக்கிதுக.. காலேசு படிக்கிற எனக்கு லவ்வு கேக்குற வயசில்லையாமே..' என நினைத்துக் கொண்டேன்.

பெல்டைக் கையில் பிடித்தபடி "படிக்க அனுப்புனா... காதல்... அதுவும் எவ கூட....ம்...." என்றவர் அதை கையில் லாவகமாச் சுற்றிக் கொண்டார்.

"கொக்கா மக்கா... குமுறப் போறாரு...' அடிபட்டுப் பிய்யிற இடம் வெளிய தெரியக்கூடாது என்பதில் கவனமாய் முதுகைக் காட்டியபடி, 'ஸ்டார்ட் மியூசிக்...' என மனசுக்குள் சொல்லிக் கொண்டேன்.

"இருங்க... வயசு வந்த புள்ளையை அடிக்க கை ஓங்காம... உக்காருங்க... அட உக்காருங்கன்னா...." எனக்கு விவரம் தெரிந்து அப்பாவை முதல் முறையாக அம்மா அடக்கி உட்கார வைத்தாள்.

யாருக்குமே அடங்காத அப்பாவும் முதல்முறையாக அடங்கிப் போனார். சை இத்தனை வருசமா இப்படிச் சொல்லாம வேஸ்ட் பண்ணிட்டோமேன்னு அம்மா நினைத்திருக்கக் கூடும்.

"டேய்... என்ன நெஞ்சழுத்தம் உனக்கு அவருக்கிட்டயே அவளை விரும்புறேன்னு தெனாவெட்டாச் சொல்லுறே.." அம்மா கோபமாகக் கேட்டாள்.

"அம்மா அவருதானே லவ் பண்ணுறியான்னு கேட்டார்... நான் பண்றேன்னு உண்மையைச் சொன்னேன்... இதிலென்ன தப்பு இருக்கு..."

"என்ன தப்பிருக்கா.... உனக்கு முன்னாடி ரெண்டு பேர் இருக்குதுகளே.... அதுக இப்புடியா தெருப் பொறக்குச்சுக... லவ் பண்றாராம் லவ்வு..." அம்மாதான் கத்தினாள்.

அப்பா பேசாமல் என்னை முறைத்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். அவருக்குள் பெல்ட்டுக்கு வேலை கொடுக்கும் ஆவல் அதிகமிருப்பது கண்ணில் தெரிந்தது.

"நானா அவங்க ரெண்டு பேரையும் லவ் பண்ணாதீங்கன்னு சொன்னேன்.... இந்த உம்முனா மூஞ்சிகளை யாருக்குப் பிடிக்கும்... அதுக்கெல்லாம் முகக்கலை வேணும்... எனக்கு அவளைப் பிடிச்சிச்சு... அவளுக்கும் என்னைப் பிடிச்சிச்சு... லவ் பண்றோம்... இதுல என்ன தப்பிருக்கு..." அப்பா அடங்கியிருக்கவும் பேச்சில் வேகத்தைக் கூட்டியதின் பலனை அடுத்த நொடியே உணர்ந்தேன்.

"அடங்க்......" என எழுந்தவர் அம்மாவும் அக்காவும் மறித்தாலும் அதையும் மீறி பெல்ட்டால் முதுகில் நாலைந்து அடி அடித்துவிட்டார்.

அடிபட்ட பின் எனக்கு வலியைவிட கௌரவமும் கோபமும்தான் அதிகமாகக் கல்லாக் கட்டியது.

"ஆமா... அவளைத்தான் லவ் பண்றேன்... அவளைத்தான் கட்டிப்பேன்... இப்ப அதுக்கு என்ன..." கத்தினேன். வயசின் வீரியம் முதல் முறை அப்பாவுக்கு முன் பொங்கியது.

என் சத்ததைக் கேட்டு காதிலிருந்த ஹெட்போனைக் கழட்டி வைத்துவிட்டு "அப்பா இதெல்லாம் திருந்தாது... நீங்க ஏன் வீணாவுல எனர்ஜியைப் போக்குறீங்க... அதுவா பட்டுத் திருந்தி வரும்... விட்டுட்டு வேலையைப் பாருங்க..." என அப்பாவை அடக்கினான் அண்ணன்.

என்னைத் திட்டினால் என்ன நடக்கும் என்பதை அறிவான் அவன். இரண்டு முறை அலுவலகத் தோழி ரம்யாவுடன் வண்டியில் போகும்போது பார்த்திருக்கிறேன். போட்டோவும் எடுத்து வைத்திருக்கிறேன். அது நட்பென்பதை அறிந்தவன்தான் என்றாலும் இங்கு ஆதாரத்துடன் வேறு விதமாகப் போட்டுக் கொடுக்கவும் தயங்கமாட்டேன் என்பதை அவன் உணர்ந்தே இருந்தான்.

அப்பாவை அடக்கியதில் தன் கடமை முடிந்ததென அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டான்.

"வாயை மூடிக்கிட்டு இருக்க மாட்டியாடா... அப்பாக்கிட்ட எதுத்துக்கிட்டு நிக்கிறே.... அப்பா.. நீங்க உக்காருங்கப்பா... அவன் என்ன சின்னப் பிள்ளையா.... பெல்ட்டெல்லாம் வச்சி அடிச்சிக்கிட்டு..." இருவரையும் சேர்த்துத் திட்டினாள் அக்கா.

'நீந்தானே பெல்ட்டை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்தே... இப்ப எங்கே அத்தை மகன் கதையை சொல்லிடுவேனோன்னு சப்பைக் கட்டு கட்டுறே...' என்று நினைத்தபடி அவளைப் பார்த்து அந்தச் சூழலிலும் சிரித்தேன். அவளுக்கு என் சிரிப்பின் பின்னணி புரிய வாயை மூடிக் கொண்டு வேறு பக்கம் பார்த்தாள்.

அதான் எல்லாம் முடிஞ்சிருச்சே.... எஸ்கேப் ஆவோம் என மெல்ல அங்கிருந்து எழுந்தேன்.

"அவளை இனிப் பார்க்க மாட்டேன்னு சொல்லி சத்தியம் பண்ணிட்டுப் போகச் சொல்லுடி அவனை..." அப்பா விடுவதாய் இல்லை.

"எதுக்கு சத்தியம் பண்ணனும்..? எதுக்கு அவளைப் பார்க்காம இருக்கணும்...? எனக்கு அவ முக்கியம்... என்னோட காதலை எல்லாம் உங்களுக்காக முறிக்க முடியாது... அடிச்சா பயந்திருவோமாக்கும்... அது அப்போ... இப்ப என்ன அவளைக் கூட்டிக்கிட்டா ஓடப் போறேன்... இந்த ரெண்டு முண்டங்களுக்கும் காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வையுங்க... என்னோட மனசுக்குப் புடிச்சவளை உங்க கௌரவம் கெடாம இவுக கல்யாணத்துக்கு அப்புறம்... என்னோட படிப்பு முடிஞ்சி... வேலைக்கும் சேர்ந்துட்டுத்தான் கட்டிப்பேன்...அப்ப சம்மதிக்கிறதும் சம்மதிக்காததும் உங்க விருப்பம்... சத்தியமெல்லம் பண்ண முடியாது..." சொல்லிக் கொண்டே வாசலுக்குப் போனேன்.

"இதெல்லாம் புள்ளையே இல்லை... இதெல்லாம் வாழ்க்கையில முன்னேறவா போவுது... அவ பின்னாடி சுத்தி கடைசியில தெருவுலதான் திரியப் போகுது"ன்னு அப்பா கத்திக் கொண்டிருந்தது வாசலுக்குக் கேட்டது.

"விடுங்க அவன் அப்படித்தான் பேசுவான்... நாளைக்கே இனி நான் அவளைப் பார்க்கமாட்டேன்னு சொல்லுவான் பாருங்க... அவன் நம்ம புள்ளைங்க..." அம்மா அப்பாவின் கோவத்தைக் குறைக்க முயற்சித்தாள்.

"அவன் எவளை விரும்புறான்னு தெரியுமாடி உனக்கு.... இதை நம்ம சாதி சனம் ஏத்துக்குங்கிறியா.. காறித் துப்பும் தெரியுமா... நாம இந்த ஊருக்குள்ளயே இருக்க முடியாது..." அப்பாவுக்கு கௌரவம் என்னும் கிரீடம் கீழே விழுந்து விடுமென இப்பவே பயம் வந்துவிட்டதை நினைத்து அந்தச் சூழலிலும் எனக்குச் சிரிப்பு வந்தது.

"அவ எவளாவோ இருக்கட்டும்.. நம்ம புள்ள அந்த இடையங்காளி புண்ணியத்துல நாளைக்கே அவகூட பேசுறதை நிறுத்திருவான் பாருங்க..." அம்மா அப்போதைய சூழலை மாற்ற அம்மனையும் துணைக்கு அழைத்தாள்.

அவர்களின் பேச்சுக்களைக் கேட்டபடி கொஞ்ச நேரம் வாசலருகே நின்றேன்.

வானம் இருட்டிக் கொண்டு எப்போதும் மழை வரலாம் என்பதாய் இருந்தது.

எங்கோ மழை பெய்கிறது போலும் மழை நேரத்து மண் வாசம் காற்றில் கலந்திருந்தது. அதைச் சுவாசித்தல் ஒரு சுகம்தான்... மூச்சை இழுத்து காற்றை நிரப்பிக் கொண்டேன். மனசுக்குள் ஏதோ விடை பெற்றது போலொரு விடுதலை.

வீட்டை ஒட்டி நிற்கும் மரங்களுக்குள் நுழைந்தேன். தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்க, மழைக்காற்று உடலைத் தழுவியதில் குளுமை இருந்தது.

அப்பா விளாசியதில் முதுகில் லேசாக பிய்ந்திருந்த இடத்தில் காற்றுப் பட்டதும் எரிந்தது.

'ஏய் லூசு ஏன் இப்படி அடி வாங்குறே...என்னைக் காதலிக்கலைன்னு பொய் சத்தியம் பண்ணியிருக்கலாமே...' என அவள் முன் உச்சி முடி களைத்துக் கேட்பது போல் மனக்கனவு எனக்குள்...

காற்று முடியைக் கலைத்திருந்தது... ரசித்துக் கொண்டேன்... இந்தக் காதல்தான் எத்தனை சுகமானது இந்த மண் மணக்கும் காற்றைப் போல.

ஏனோ அவளை அழைக்க வேண்டும் போல் தோன்ற...

அழைத்தேன்.

"என்ன இந்த நேரத்துல... அதுவும் லீவு நாள்ல ..." எதிர்முனையில் சிரித்தபடிக் கேட்டாள் அவள்.

"என்னமோ உனக்குப் போன் பண்ணனும்ன்னு தோணுச்சு.... அதான்... ஆமா... என்ன பண்ணுறே....?" .

"ம்... வீட்லதான் இருக்கேன்... சொல்லு..." என்றாள்.

"ஒண்ணுமில்லை... சும்மாதான்... அடிச்சேன்..." என்றேன்.

வீட்டு நிகழ்வுகளை அவளிடம் சொல்ல ஏனோ மனம் வரவில்லை... அவளை வருத்தப்பட வைப்பதில் மனசுக்கு விருப்பம் இல்லை.

"ம்... என் நினைப்பு உனக்கு வந்திருக்கு பாரு... அதான் ட்ரூ லவ்... இப்பத்தான் உனக்குப் போன் பண்ணனும்ன்னு நினைச்சேன்...."

"பாத்தியா மனசு ரெண்டும் ஒரே மாதிரி நினைக்கிது..." சிரிப்பை வரவழைத்துக் கொண்டு பேசினேன்.

"ம்..."

"என்ன ம்...?"

"நாம பழகுறது வீட்டுக்குத் தெரிஞ்சாச்சு..." என நான் மறைக்க நினைத்ததை விசும்பலுடன் மெல்லச் சொல்ல ஆரம்பித்தாள் மெஹருன்னிசா.

-'பரிவை' சே.குமார்.

8 கருத்துகள்:

  1. அங்கு மேட்ச் நடந்து முடிந்து விட்டது போல...!

    பதிலளிநீக்கு
  2. அன்பின் குமார்...
    வணக்கம்... நலம் வாழ்க...

    நான் இங்கு வந்து சில நாட்கள் ஆகின்றன.. மின்னஞ்சல் வழி என்னைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்..

    அன்புடன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வார இறுதியில் சந்திக்கிறேன் அய்யா...

      நீக்கு
  3. காதல்(கதை)கள் தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதல்கள் தொடரட்டும் அண்ணா...
      ஆனால் காதல் கதைகள்... அங்கயும் சோகத்துல முடியுதே... அதான் அதிகம் எழுதுவதில்லை... :)

      நீக்கு
  4. குமார் இந்தக் க்தையை வாசித்தேன் ப்ரதிலிபியில் நீங்க அப்போவே லிங்க் கொடுத்திருந்தீங்க இல்லையா? அங்கு கருத்தும் பதிந்த நினைவு...ஆனா போச்சானு தெரியலை.

    கதை அருமை.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்... நீங்க வாசித்த கதைதான் அக்கா...
      கிளைமேக்ஸ் மாற்றியிருப்பேன்... நீங்க வாசிக்கும் போது வேறுமாதிரி... அதாவது துவா செய்வது போல் இருந்திருக்கும்... அவ பக்கம் பிரச்சினை இருந்திருக்காது.

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி