பழி -
கிழக்குப் பதிப்பக வெளியீடாய் வந்திருக்கும் எழுத்தாளர் அய்யனார் விஸ்வநாத்தின் நாவல்.
வாசிப்பின் போது காமமும் கொலைகளும் மட்டுமே கதை சார்ந்த களம் என்பதாய்த் தோன்றும்... நாவலை முடிக்கும் போதுதான் காசுக்காக கொலை செய்பவர்களின் வாழ்க்கையையும் ஒரு பெண்ணின் வாழ்க்கையும் பேசியிருக்கிறது என்பதை உணர முடியும்.
சில புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்து சில பக்கங்களைக் கடக்கும் போதே இதைத் தொடர்ந்து வாசிக்கத்தான் வேண்டுமா..? என்ற எண்ணம் ஒருவித அயற்சியை ஏற்படுத்தும்... பழியைப் பொறுத்தவரை அந்த எண்ணத்தை, அயற்சியைக் கொடுக்கவேயில்லை... இடைநில்லாமல் இறுதிவரை ஒரு த்ரில்லர் சினிமாவைப் போல் விறுவிறுப்பாகப் பயணிக்கிறது.
அய்யனார் விஸ்வநாத் முடிவை முதலியே சொல்லி, முன்னும் பின்னுமாய் கதையை நகர்த்தும் வித்தைக்காரர்... ஆச்சர்யங்களையும் அதிர்ச்சியையும் அள்ளி நிறைப்பதில் கில்லாடி... இதிலும் அப்படித்தான் கதை நகர்கிறது... ஆரம்பத்தில் ஒரு கொலை... பின்னர் தொழில்முறைத் தோழர்களுடனான வாழ்க்கைக் கதை ஒருபுறமும், தனித்த வாழ்க்கையும் விஜியுடனான உறவுமாய் மறுபுறமும் கதை பயணப்படுகிறது.
தன் கையால் ஒருவனை அடித்தே கொல்கிறானே... அவ்வளவு வன்மம் ஏன்..? கொல்லப்பட்டவன் யார்..? அவனுக்கும் இவனுக்கும் என்ன பகை...? அவன் எதனால் இவ்வளவு கொடூரமாகக் கொல்லப்படுகிறான் என்பதைப் பழியை வாசித்து முடிக்கும் போதுதான் அறிந்து கொள்ள முடியும். அதுவரை கதை பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும், கொல்லப்பட்டவன் யாரென்பதைச் சொல்லாமல்... இறுதி அத்தியாயத்துக்குப் பிறகு மீண்டும் முதல் அத்தியாயத்தை வாசித்தால் என்ன என்று தோன்ற வைக்கும்.
பணத்துக்காக கொலை செய்பவர்களின் வாழ்க்கை இப்படித்தான்... காமமும் போதையுமாக கடந்து சென்று கொண்டிருக்கும்... பணம் கொடுத்தால் போதும் யார்..? எவர்...? என்பதெல்லாம் ரெண்டாம்பட்சம்தான். உயிருக்கு உயிராய் பழகியிருந்தாலும் பணம் என்னும் போதை ஆயுதத்தைக் கையில் எடுக்க வைக்கும்... அப்படியானவர்களின் வாழ்க்கையை கண் முன் நிறுத்துகிறது பழி.
எவனுக்கோ ஒருவனுக்குத் தொழில் செய்வதில் அதிக பணம் கிடைக்காது... நாம சேர்ந்து தொழில் பண்ணலாம் என இணையும் நால்வரில் ஒருவன்தான் கதையின் நாயகன்... அவனே கதை சொல்லியும் கூட.
குறிப்பிட்ட கட்டத்துக்கு மேல் கொலை செய்வதில் நால்வருக்குமே ஒரு சலிப்பு... திருந்திய வாழ்க்கை வாழ நினைக்கிறார்கள்.... அதற்காக இடம் விட்டு இடம் பயணிக்கிறார்கள்... அப்படியான வாழ்வை அவர்கள் வாழ்ந்தார்களா...? அவர்களை வாழ விட்டார்களா..? என்பதை மட்டுமல்லாது மனத்திருப்திக்காக நாயகன் ஒரு கொலை செய்கிறான்... அதை ஏன்... ஏதற்காக... யாருக்காகச் செய்கிறான் என்பதையும் கலந்து பேசுகிறது பழி.
விஜயலெட்சுமி - அழகி என்பதாய் சொல்லப்பட்டிருக்கலாம்... அவள் அங்கங்களின் வர்ணிப்புக்கள் அக்குவேர் ஆணி வேராய் பல பக்கங்களில்... தகதகவென மின்னினால்தான் நாம் அவளை அழகி என்போமா... விஜி கருப்பு அழகி என்றிருந்தாலே ஓரிதழ்ப்பூ துர்க்காவைக் கொண்டாடியது போல் கொண்டாட பல பிரபுக்கள் இங்கே உண்டு.
கட்டியவன் தனக்காகத்தான் கொலை செய்துவிட்டு தலைமறைவாய் இருக்கிறான் என்ற நிலையில்... மருத்துவமனையில் கவனிக்க ஆளின்றி அம்மா கிடக்கிறாள் என்ற நிலையில்... கடற்கரையில் அவனுடன் சல்லாபித்துக் கொண்டிருக்கிறாள்... குடிக்கிறாள்... ஆடை துறந்து அலைகிறாள்... அதிகம் பேசாத, பழகாத ஒருவனுடன் உடலைப் பகிர்கிறாள்... ஏன் இந்தப் பெண் இப்படி..? அவளுக்குக் கூட காமம்தான் வாழ்க்கையா...?
தனக்காக கொலை செய்தவன்... காமத்துக்காக மட்டுமே தன்னை நேசித்தவன்... என இருவருக்கும் மத்தியில் அவளை விபச்சாரியாக காலம் மாற்றி வைத்திருக்க... சுகம் கொடுத்தவனைக் காக்க, எவன் தனக்காக கொலை செய்தானோ அவன் அரிவாளுக்குத் தானே பரிதாபமாகப் பழியாகிறாள் விஜி.
விஜியின் வாழ்க்கை கெடுகெட்டுப் போக யார் காரணம்...?
'ரெண்டு பொண்டாட்டி இருப்பது போல் ரெண்டு புருஷன் இருக்கக்கூடாதா..?', 'என்னை அம்மணமாத்தானே அலையவிட்டே... தாலி கட்டணும்ன்னு தோணலையே...?' என அவள் ஆயிரம் கேள்விகள் அவனிடம் கேட்கலாம்... ஆனால் கேள்வி கேட்காமல் அவனின் அணைப்புக்குள் ஆடை துறந்து இணக்கமாய் நுழைந்தவள்தான் இந்தக் கேடு கெட்ட வாழ்க்கைக்கும் காரணமாக இருக்க முடியும். அப்படியானால் விஜிதானே காரணம்.
ஜிகினாஸ்ரீ, ரஷ்யப் பெண், ஓனரம்மா, அவளுடன் வரும் பெண் என எல்லாப் பெண்களின் அங்கங்களும் விலாவாரியாக வர்ணிக்கப்படுகிறது. இவர்கள் எல்லாருமே காமத்துக்காக மட்டுமே படைக்கப்பட்டவர்கள் போல் கதையில் வருகிறார்கள்.
ஜிகினாஸ்ரீக்காக மட்டும் நாயகன் வருந்துகிறான்... அவளின் குழந்தை மனசுக்காக காக்க நினைக்கிறான். அவளைக் கொல்லும் முன் அவன் உள்பட மூவருடன் அவளே விரும்பி உறவு வைத்துக் கொள்கிறாள். அனுபவித்து முடிந்ததும் பணப்போதை அவளைக் கூறு போடுகிறது.
ஆந்திராவில் சென்னாரெட்டி உதவி செய்யும் இடங்கள் சினிமாப் பாணி... கொலை, பெண்கள் எனப் பயணிக்கும் கதையில் நாயகன் அய்யனாராய் ஆனபின் ஒரு தொய்வு... அய்யனார் என்றானபின் வேகமெடுக்காமல் ஆந்திராவில் ஒரு காட்டுக்குள் போய் கதை முடங்கிப் போகிறது... அதன் பின்னான கதை ஏனோ விறுவிறுப்பை இழந்து தவிக்கிறது அவனின் மனதைப் போல.
தனித்துத் தொழில் செய்ய நினைப்பவர்கள் தலைமைக்குத் தெரியாமல் மதுரையில் கடை வைத்துக் கொண்டு இரண்டு வருடங்கள் வாழ்வதென்பது ஒட்டவில்லை... சினிமாவில் மட்டுமே இது சாத்தியம்... நிஜத்தில் தலைமைக்கு விரோதமாய் விலகி எங்கு சென்றாலும் வெட்டப்படுவார்கள் என்பதே நிதர்சனம்.
அய்யனாரின் ஓரிதழ்ப்பூ போல் இதிலும் பெண்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல், எதிர்பார்ப்பும் இல்லாமல் தானகவே கள்ளக்கலவிக்கு உடன்படுகிறார்கள்... பெண்கள் எல்லாரும் அப்படியே என்பதாய் எல்லா பெண் கதாபாத்திரங்களும் படைக்கப்பட்டிருக்கிறார்கள். யாரும் விதிவிலக்கல்ல.
அவன் எப்படிப்பட்டவன் என்றாலும் அவன் கேட்காது ஆடை துறந்து அணைத்துக் கொள்வார்கள் என்பது என்ன மாதிரியான மனநிலை என்பது தெரியவில்லை. ஆசிரியரின் பார்வை ஏன் இப்படியே அவரின் எல்லாக் கதைகளிலும் பயணிக்கிறது என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.
ஆற்று நீருக்குள் இருக்கும் மணல் கூட ஒரு பெண்ணின் அங்கமாய்த் தெரிகிறது ஆசிரியருக்கு... பார்க்கும் பார்வையில் எல்லாமே பெண்ணின் உறுப்புக்கள் தெரிவதென்பது பெண் உடல் மீதான அதீதக் காதலா... அல்லது அதீதக் காமமா.... என்பது தெரியவில்லை.
என் கதையில் காமம்தான் நாயகி என்பது எழுத்தாளரின் எண்ணம் எனில் ஏன் அப்படி ஒரு எண்ணம் என் மனதுக்குள் இருக்கு என்பதையும் அவர் சொன்னால்தான் உண்டு.
'உன்னாலதான் நான் இந்த இடத்துக்கு வந்தேன்..?', 'ரெண்டு புருஷன் கூடாதா..?' என ஒரு பெண் கேள்வி கேட்பதால் மட்டும் இதைப் பெண்ணீயம் பேசும் நாவல் என்று சொல்வதை எல்லாம் ஏற்கமுடியாது... இது முழுக்க முழுக்க காசுக்காக கொலை செய்பவர்களின் வாழ்க்கையையும் அவர்கள் பெண்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்தையும் மட்டுமே பேசுகிறது. ஆம் ஆணாதிக்கம்தான் நிறைந்திருக்கிறது. இதில் பெண் போகப்பொருளாய் மட்டுமே.
கதை நாயகனின் பெயரை கதை முழுவதும் சொல்லாமல் இறுதியில் சொல்லும் போது ஏன் அந்த இடத்தில் கொண்டு வந்தார் என்று தெரியவில்லை... செயற்கையாய் நுழைக்கப்பட்டது போல் இருக்கு... அதையே அவன் ஏமாத்திட்டான்.... நம்மள்ல ஒருத்தனைக் கொன்றதில் அவனுக்கும் தொடர்பு இருக்கு... அவனைப் போடணும் என நண்பர்கள் பேசுமிடத்தில்... அந்த அத்தியாயத்தின் இறுதியில் பெயரைக் கொண்டு வந்திருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும் எனத் தோன்றியது என்றாலும் அய்யனார் என்பது இல்லாமல் இருந்திருந்தாலும் சிறப்பாய் இருந்திருக்கும்.
சினிமாவாக எடுக்கலாம் என நாவல் குறித்து எழுதும் எல்லாரும் தவறாமல் எழுதுகிறார்கள். சினிமாவாக எடுக்கலாம் என்றால் அய்யனார் ஆங்கிலத்தில்தான் எடுக்க வேண்டும்... இத்தனை கலவியும் இவ்வளவு வர்ணிப்பும் தமிழ் சினிமாவில் கண்டிப்பாக வெட்டப்படும். அப்படி வெட்டப்பட்டு விட்டால் கொலைகள் மட்டுமே மிஞ்சும்... அப்படியானதொரு படத்துக்கு வரவேற்பு கிடைப்பது சந்தேகமே. அதனால் அய்யனார் ஹாலிவுட் பக்கம் போய்விடுங்கள்... உள்ளதை உள்ளபடி எடுக்கலாம்.
பரபரப்பாய் கதை சொல்வதில்... விறுவிறுப்பைக் கூட்டுவதில்... பெண் உடல் வர்ணிப்பில்... காமத்தைப் பக்கம் பக்கமாக எழுதுவதில் அய்யனார் கில்லாடி. அதை பழியில் பக்காவாய் கையாண்டிருக்கிறார். பரபரவென எழுத்தில் பறந்திருக்கிறார்.
வாசிப்பவர்களுக்கு பிடித்ததா... பிடிக்கலையா... என்பதை வாசித்து முடிக்கும் வரை யாரும் பேசவே மாட்டார்கள். அப்படி ஒரு அசரடிக்கும் எழுத்து. இந்த எழுத்துக்காகவே வாழ்த்துக்கள் அய்யனார்.
காமம் மட்டுமே இலக்கியம் ஆகாது... எல்லோராலும் காமம் கலந்து எழுத முடியாது. சிலரே அப்படி எழுதுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றாலும் சோற்றுக்குத் தகுந்த உப்பிட்டுச் சாப்பிடலாம்... ஆனால் ஒரு தட்டு உப்புக்கு சிறிதளவு சோறிட்டுச் சாப்பிடுவது என்பது முடியாத செயல்தானே.
தம்பி ஒருவர் சொன்னார் பெண்கள் எல்லாம் பழியைப் புகழ்கிறார்கள்... அதே போல் நாமும் எழுத வேண்டுமென... யார் யாருக்கு எப்படி எழுத வருமோ அப்படியே பயணித்தல்தான் நலம் பயக்கும் என்றேன் நான்... இது கத்திமேல் நடக்கும் முயற்சி... தவறினால் அவ்வளவுதான்... இந்த முயற்சியில் அய்யனார் வெற்றி பெறலாம்... எல்லாராலும் முடியாது என்பதே உண்மை.
அய்யனார் விஸ்வநாத்தைப் பொறுத்தவரை எழுத்தை ரசித்து எழுதும் எழுத்தாளன் என்பதை அவருடன் பழகுவதன் மூலம் அறிய முடிந்தது. அது தொடரட்டும்... ரசித்து எழுதும் எழுத்தே நீண்ட ஆயுளைப் பெறும்.
காமத்தைக் கொண்டாடலாம்... ஆனால் காமமே கொண்டாட்டம் ஆகாது என்பதையும் ஆசிரியர் நினைவில் வைத்து வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுக்கலாம். செய்வாரா... அல்லது இதேதான் தொடருமா என்பதை அடுத்த நாவல்தான் சொல்ல வேண்டும்.
காமமோ... கொலையோ.... அய்யே... எனத் தள்ளி வைக்க வேண்டிய நாவல் இல்லை இது, அய்யனார் என்னும் எழுத்து அரக்கனுக்காக, அவரின் கதை சொல்லும் பாங்குக்காக பழியைக் கொண்டாடலாம்... கொண்டாடனும்... கொண்டாடுவோம்.
வாழ்த்துக்கள் அய்யனார் விஸ்வநாத்.
பழி-
அய்யனார் விஸ்வநாத்
கிழக்குப் பதிப்பகம்
பக்கம் : 168
விலை : 200 ரூபாய்.
-'பரிவை' சே.குமார்.
குமார் உங்கள் விமர்சனமே ஏதோ ஆங்கில சினிமா பார்த்தது போலத்தான் இருக்கிறது. பணத்துக்காகக் கொலை, பெண்கள் என்பதெல்லாம் ஒரு அண்டர்க்ரௌன்ட் உலகக் கதை போல...தமிழ்ப்படங்களில் கூட மறைமுகமாக வந்ததுண்டே...இப்படியான சில காட்சிகள் என்றுதான் நினைக்கிறேன்..
பதிலளிநீக்குவிமர்சனம் வழக்கம் போல் நன்றாக இருக்கிறது குமார்.
கீதா
நல்லதொரு அறிமுகம்.
பதிலளிநீக்குஉங்கள் பாணியில் சிறப்பான விமர்சனம்.
பதிலளிநீக்குநூல் என்னால் படிக்க இயலும் என்று தோன்றவில்லை.
குமார் அண்ணனின் விமர்சனமே அப்புத்தகத்தை படித்த நிறைவு தந்து விடும்! விமர்சனத்தை சொல்கிறேன் பழி நிறைவை தருமா என்றால் நான் வாசிக்காமல் விமர்சிக்க கூடாது!
பதிலளிநீக்குஅருமையான கண்ணோட்டம்
பதிலளிநீக்குதொடருங்கள்