'அந்தி மந்தாரை'
2016-ல் எழுதி முடிவெழுதாமல் வைத்திருந்த கதையின் முடிவை எழுதி இப்படியானதொரு பெயரை வைத்து முதன் முதலாக முத்துக்கமலம் இதழுக்கு அனுப்பியிருந்தேன். அவர்களும் பாவம் பொயிட்டுப் போறான்னு அவங்க தளத்துல போட்டிருக்காங்க.
முத்துக்கமலம் இணைய இதழுக்கு நன்றி. முத்துக்கமலத்தில் வாசிக்க 'அந்தி மந்தாரை'
இந்தக் கதை ஆரம்பித்து ஒரே மூச்சில் முடித்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். கிடப்பில் போட்ட பின் எழுதிய முடிவில் எனக்கு அவ்வளவாக திருப்தி இல்லை என்றாலும் பரவாயில்லை என்பதாய்த்தான் தோன்றுகிறது.
எப்போ வேண்டுமானாலும் கதையின் முடிவை மாற்றலாம் இல்லையா...?
கதையை வாசித்து பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கருத்தில் சொல்லுங்க...
நன்றி.
-*-
அதிக கூட்டமில்லாத அந்த காபிக்
கடையில் எதிர் எதிரே அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தனர் ராகவனும்
அனுப்பிரியாவும்...
இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். அந்த
அலுவலகத்துக்கு அனு வந்து ஒரு வருடம்தான் இருக்கும். ராகவ் ரொம்ப வருடமாக வேலை
செய்கிறான். கம்பெனியில் அவனுக்கு நல்ல பெயர்... மேனேஜரின் செல்லப்பிள்ளை வேறு.
அனு வந்தது முதல் அவளுடன் ஒரு ஒட்டுதல். இருவருக்குமான நட்பு நிறைய விஷயங்களை
பற்றி அலசி ஆராயும் வகையில் இருந்தது. ரெண்டு பேரும் பேச ஆரம்பித்தால் நமக்கு
வேலையில்லை என மற்ற நண்பர்கள் ஓடி விடுவார்கள்.
உதட்டில் பட்டும் படாமலும்
காபியை உறிஞ்சிய அனு,
"என்ன ராகவ் ஏதோ சொல்லணும்ன்னு சொன்னீங்க... அதுவும் ஆபீஸ்ல
பேச வேண்டான்னு சொல்லி இங்க கூட்டியாந்தீங்க... இப்ப பேசாம காபி
குடிக்கிறீங்க..." என்றாள்.
"எப்பவும்
போல அரட்டை அடிச்சிப் பேச வேண்டிய விஷயம் அல்ல இது... வாழ்க்கை குறித்துப்
பேசணும்... அதான்..." ரொம்ப யோசித்துப் பேசினான்.
"என்ன
ராகவ்... எப்பவும் தல தோணி போல சும்மா அடிச்சி ஆடுவே... இன்னைக்கு என்னடான்னா
டிராவிட் போல ரொம்ப யோசிக்கிறே...?"
கிரிக்கெட் பைத்தியமான அனு,
கிரிக்கெட்டை வைத்தே அவனைச் சீண்டினாள்.
"ஏய்
அப்படியில்ல... கொஞ்சம் யோசித்துப் பேச வேண்டிய விஷயம்... அதான்..." ராகவ்
வெளியில் பார்த்தபடி சொன்னான்.
"என்ன
ராகவ்... என்னைய லவ் பண்றியா..?"
என்று நேரடியாக அவள் கேட்க,
வாயில் வைத்த காபிக் கோப்பையை படக்கென்று எடுத்தான். அவன் இதை
எதிர்பார்க்கவில்லை. என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் விழித்தான்.
"ஏய்...
என்னாச்சு... என்னைய லவ் பண்றியான்னுதானே கேட்டேன்..."
"ஆமா
அனு.... உன்னைய கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படுறேன்..."
காபியை வைத்து விட்டு
"ஜோக்கெல்லாம் அடிக்காதே ராகவ்... நீ ரகுவரன் மாதிரி... ஜோக்கடிச்சா நல்லா
இருக்காது..." என்று சொல்லி சத்தமாய்ச் சிரித்தாள்.
"ஏய்
சத்தியமா... நான் உன்னை விரும்புறேன்..."
அவள் கோபப்படவில்லை என்பது
அவனுக்கு ஆறுதலாய் இருந்தது.
"என்னைப்
பற்றி என்ன தெரியும் உனக்கு?"
என்றாள்.
"நீ
ரொம்ப நல்ல பொண்ணு... அறிவாளி... வேறென்ன தெரியணும்.... பேசிப் பழகுனதுல உன்னோட
குணமும் தெரிஞ்சாச்சு..."
"ம்...
ரொம்ப அழகின்னு வழியலை... குணம் தெரிஞ்சாப் போதுமா... குலம்..?"
"ஏய்
என்ன நீ சாதியெல்லாம் பார்த்து வந்தா அது காதலா..."
"அப்ப
அழகி, அறிவாளியின்னு
பார்த்து வந்தாப் போதுமாக்கும்... சரி... அலுவலகத்துல நான் இப்படி... அது உனக்குத்
தெரியும்... ஓகே... அந்த எட்டு மணி நேரம் போக மற்ற நேரத்தில்... அதாவது என்
குடும்பம்... உனக்கு அதைப் பற்றி என்ன தெரியும்..."
"அது...
அது எதுக்கு... இவ்வளவு சந்தோஷமா இருக்க உனக்கு கண்டிப்பாக ரொம்ப சந்தோஷமான ஒரு
குடும்பம் இருக்கணும்... அவங்க எல்லாரும் திருமணத்துக்குப் பின்னே நம்ம கூட
இருக்கணும்..."
"அது
சரி... அப்ப உன் குடும்பம்...?"
"என்
குடும்பம்... நான் பாட்டி வீட்லதான் இருக்கேன்னு உனக்குத் தெரியுமே... அப்புறம்
என்ன... எனக்கென்ன அப்பாவா... அம்மாவா... சொல்லு...."
"ஏய்
ராகவ்... சாரிடா... உன் பாட்டியின்னு கேக்க வந்து அப்படிச் சொல்லிட்டேன்... ஆனா
என்னைப் பற்றி என்னோட அலுவலகம் தவிர்த்த வாழ்க்கை பற்றி யாருக்கும் தெரியாது...
நானும் யாருக்கும் சொல்ல விரும்புறதில்லை... இப்ப நீ சொன்னே பாரு... சந்தோஷமான குடும்பம்ன்னு
அப்படி இருக்கத்தான் ஆசை.... சரி... என்னைப் பற்றி தெரியணுமின்னா... என்னைக் கல்யாணம்
பண்ணனும்ன்னா கண்டிப்பா நீ எங்க வீட்டுக்கு வந்து எல்லோரையும் பார்க்கணும்...
அப்புறம் ஒரு முடிவுக்கு வரலாம்... ஓகேயா...?"
"சரி...
வா இப்பவே போலாம்..."
"ஏய் இரு... எங்கப்பாக்கிட்ட பர்மிஷன்
வாங்கணுமில்லையா... எனக்கு நீ பிரண்ட்... ஆனா வீட்ல உன்னைத் தெரியாதுல்ல... சோ
நாளைக்குப் போவோம்... ஓகேவா... சரி வா... கிளம்பலாம்..." என எழுந்தாள்.
மறுநாள்....
"வாங்க
தம்பி... அனு சொன்னா..." என்றபடி வரவேற்றார் அவளின் அப்பா.
"வணக்கங்க..."
என்றவன் அனுவின் அம்மாவைத் தேடினான்.
"அப்பா....
சுந்தரராஜன்... ரிட்டையர்டு ஹெச் எம்..." என்ற அனு, "உக்காருங்க"
என்றாள்.
"அம்மா
எங்கே அனு?"
"அம்மா...
உள்ள இருக்காங்க... வாங்க...."
அறைக்குள் செல்ல கட்டிலில்
படுத்துக் கிடந்த அனுவின் அம்மாவைப் பார்த்ததும் "என்னாச்சு அனு...?" என்றான்.
"நல்லாயிருந்தாங்க...
திடீர்ன்னு ஒரு பக்கம் இழுத்துக்கிச்சு... ரெண்டு வருசமாப் பாக்குறோம்...
அப்பாதான் பகலெல்லாம் பார்த்துப்பார்... ஈவினிங் நான் வர்றதுக்கு முன்னால
தங்கையும் தம்பியும் வந்திருவாங்க... அவ எல்லாம் பார்த்து நான் வர்றதுக்குள்ள
சமைச்சும் வச்சிடுவா..."
"சாரி...
அனு..."
"ஏய்
எதுக்கு சாரியெல்லாம்... இதெல்லாம் நாங்க ரெண்டு வருசமா பாத்துக்கிட்டுத்தான்
இருக்கோம்... விடுங்க..." என்றவள் "ராகவ் நான் போட்ட காபி
சாப்பிட்டதில்லையில்ல... இருங்க சூடா ஒரு காபி கொண்டு வர்றேன்..." என்று
நகர்ந்தவள் "சொல்ல மறந்துட்டேன்... இவ என் தங்கை கல்பனா... எம்.சி.ஏ.
பண்றா...." என்றவள் "எங்கடி விக்கி..?" என்று தங்கையிடம் கேட்டாள்.
"ரெண்டு
வாலும் பின்னால விளையாடுதுக..." என்று சொல்லியவள் ராகவனைப் பார்த்து மெல்லச்
சிரித்தாள்... அவனும் பதிலுக்குச் சிரித்தான்.
"தம்பி..
உங்களைப் பற்றி அனு எல்லாம் சொன்னா... நான் வாத்தியாரா இருந்தேன்... அவங்க
அம்மாவும் டீச்சர்தான்... எங்க ரெண்டு பேருக்கும் லவ் மேரேஜ்தான்... அதனால
எங்களுக்கு சாதியெல்லாம் இல்லை... ஏன் மதங்கூட இல்லை... அவ கிறிஸ்டியன்... அவ
இப்படி ஆனதும் எங்க குடும்பத்துல நடந்த சில நிகழ்வுகளாலும் நாங்க இருந்த
சிவகங்கைப் பக்கம் இருந்து இங்கிட்டு வந்துட்டோம்..." என்றபோது அனு காபியோடு
வந்தாள்.
காபியை மெதுவாக உறிஞ்சியவன், "வாவ்... என்ன
சூப்பரான காபி அனு... நீ காபியெல்லாம் நல்லாப் போடுவியா?" என்றான்.
"ஆஹா...
ரொம்பத்தான்... நாங்க எல்லாமே நல்லாச் செய்வோம்... வேணுமின்னா எங்கப்பாக்கிட்ட
கேளுங்க..." என்றபடி சோபாவின் கைப்பிடியில் அமர்ந்து அவரின் கழுத்தைக்
கட்டிக் கொண்டாள்.
"அவளுக்கு
எங்கம்மாவோட கைப்பக்குவம்..."
"சரி...
வாங்க காபி சாப்பிட்டுக்கிட்டே மாடிக்குப் போய் கொஞ்ச நேரம் பேசலாம்... அப்பா...
மேல போயிட்டு வர்றோம்..." என்றாள்.
"சரிம்மா..."
"என்ன
அனு... அம்மா இப்படியிருக்காங்க... சொல்லவே இல்லை..." மாடியேறும் போது
மெதுவாகக் கேட்டான்.
"இதெல்லாம்
பழகிருச்சு... இதைச் சொல்லி அனுதாபம் தேடணுங்கிறீங்களா...? அப்பன்னா நான்
இன்னொன்னையும் சொல்லியிருக்கணுமே..." என்று சிரித்தவள் "அப்பாவோட
பிரண்ட் பக்கத்துலதான் இருக்காங்க... அவங்கதான் இந்த வீட்டை வாங்கிக்
கொடுத்தாங்க... நல்ல வீடு... காற்றோட்டமான வீடு.. என்ன ஊரை விட்டு
ஒதுக்குப்புறமாத்தான் இருக்கு... இருந்தாலும் இங்கிட்டும் நிறைய வீடு
வந்திருச்சில்ல... பின்னால சின்னதா ஒரு தோட்டம்... எங்களுக்குப் பிடிச்சிப்
போச்சு... இன்னொரு தெரியுமா... இந்த வீட்டோட ராசி வந்து ஒரு வருசத்துக்குள்ள
அம்மாவோட நிலமையிலயும் கொஞ்சம் மாற்றம் இருக்கு... எங்களுக்கும் மனக்கஷ்டமெல்லாம்
நீங்கி கொஞ்சம் சந்தோஷமா இருக்கோம்..." என்றாள்.
மேலிருந்து பின்பக்கமாக பார்த்து
'விக்கி
அவனைக் கூட்டிக்கிட்டு மேல வா..." என்றவளிடம் "அது யார் அந்தப்
பொடியன்...?" என்றான்.
"இருங்க
வரட்டும் சொல்றேன்..." என்றவள் "எங்க அம்மாவோட நிலமைக்கு காரணமே
நாந்தான்னா நம்ப முடியுதா?"
விரக்தியாய்ச் சிரித்தாள்.
"என்ன
சொல்றே...?"
"ம்.."
என்றவளின் கண்கள் முதல் முறையாக கலங்குவதைப் பார்த்தான். அலுவலகத்தில் பார்த்த
அனுவுக்குப் பின்னே ஒரு வாழ்க்கை... அதுவும் சோகமான வாழ்க்கை இருப்பதும்... அவள்
கண் கலங்குவதும் அவனுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.
ஏதோ சொல்ல வாயெடுத்தவன்
"அம்மா" என அவளை அணைத்துக் கொண்ட பொடியனைப் பார்த்ததும் வாயடைத்து
நின்றான்.
"ராகவ்..
இது என் தம்பி... விக்கி... காலேஸ்ல படிக்கிறான்... இது என்னோட பையன்
சந்தோஷ்..." என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டு மகனுக்கு முத்தம்
கொடுத்தாள்.
"அனு....?"
"அதிர்ச்சியா
இருக்குல்ல... பட்டாம்பூச்சி மாதிரி ஆபீஸ்ல திரியிற அனுவுக்கு குழந்தையா...
அப்படின்னு ஆச்சர்யமாவும் இருக்குல்ல... ம்... என்னோட பையன்... எனக்கும்
கார்த்திக்குக்கும் பிறந்த பையன்... எங்களோட நாலாண்டு திருமண பந்தத்துக்கு கடவுள்
கொடுத்த பரிசு இவன்..."
"கார்த்திக்.!?."
"அவனுக்கு
என்னைப் பிடிக்கலை... ரொம்ப ஜென்டிலா நாம பிரிஞ்சிடலாம்ன்னு சொன்னான்... அவனுக்கு
அவனோட ஆபீஸ்ல ஒருத்தி செட்டாயிட்டா... சரியின்னு சொல்லி... அப்பா அம்மாவோட
எதிர்ப்புக்கு இடையில விவாகரத்துக்கு கையெழுத்துப் போட்டுட்டேன்... போடலைன்னா அவன்
அவ கூட போவான்... அவன் கட்டுன தாலியை சுமந்துக்கிட்டு நான் வீட்டுக்குள்ள
கிடக்கணும்... எனக்கு அது பிடிக்கலை... இப்ப நீ கேட்ட மாதிரி யாராவது ஒருத்தன்
அப்ப என்னைக் கேட்டிருந்தா... அவனை விவாகரத்து பண்ணிக்கலாமான்னு நான் கேட்டிருக்க
முடியுமா..? இல்ல
அவனை வேணான்னு உதறிட்டு போயிருந்தா இந்த சமூகம் சும்மா விட்டுடுமா...? ஓடுகாலின்னு
சொல்லும்... இன்னும் கேவலாமா.... அ.... வேண்டாம் விடு.... சமூகத்துல ஆண்களுக்கு
ஒரு சட்ட திட்டம்... பெண்களுக்கு ஒரு சட்ட திட்டம்... என் முடிவு என் தங்கை, தம்பியோட
வாழ்க்கையை பாழாக்கக்கூடாதுன்னுதான் ரொம்ப யோசிப்பேன்... பட்... அம்மாதான் என்னோட
வாழ்க்கை முடிஞ்சிபோன அதிர்ச்சியில விழுந்துட்டாங்க... அப்பா எனக்கு ரொம்ப
ஆதரவு... இப்பவும் நாங்க எல்லாரும் சந்தோஷமாத்தான் இருக்கோம்..."
"சாரி
அனு... சந்தோஷமா வலம் வர்ற உனக்குள்ள இப்படி ஒரு சோகம் இருக்கும்ன்னு
எதிர்பார்க்கலை... எல்லாத்துக்கும் சாரி..."
"எல்லாத்துக்கும்ன்னா...
நேத்து சொன்னதுக்குமா?"
அவன் பதில் பேசலை.
"பாரு
என்னைப் பற்றி தெரிந்ததும் நீ யோசிக்க ஆரம்பிச்சிட்டே... என்னோட தங்கை... ரொம்ப நல்லவ... அவளைக்
கட்டிக்க உனக்கு வாழ்க்கை நல்லாயிருக்கும்... நான் இப்படியே அம்மா, அப்பா, தம்பி, என்னோட
பையன்னு வாழ்ந்துடுறேன்..."
"உகக்கென்ன
வயாசா ஆயிருச்சு.... இப்படியே இருக்கேன்னு
சொல்றே...?"
அனு சிரித்தாள்.
"பாருங்க
ராகவ்.... நான் என்ன இருந்தாலும் செகண்ட் ஹேண்ட் வண்டிதானே... கூடவே ஒரு
ஸ்டெப்னியையும் வச்சிருக்கேன்... எவன் கட்டிப்பான்... பாருங்க... அறிவாளி அப்படி
இப்படின்னு சொன்ன நீங்களே இப்ப யோசிக்கிறீங்கதானே..."
"ஏய்
அப்படியெல்லாம் இல்லை... நாளை முடிவு சொல்றேன்.... நேரமாச்சு... நான் இப்ப
கிளம்புறேன்..." என்றவன் வேறெதுவும் பேசவில்லை. அவளும் ஒன்றும் சொல்லவில்லை.
அடுத்த நாள் அலுவலகம் போனவள்
ராகவைத் தேடினாள். அவன் அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லியிருப்பதாகத் தெரிந்த போது
அவன் அவளைத் தவிர்ப்பதை உணர்ந்து இதுதான் நடக்கும் என்று நினைத்துச் சிரித்துக்
கொண்டாள்.
மதியம் அவனுக்குப் போன் பண்ணலாம்
என முயற்சித்தாள். எதிர்முனையில் ரிங்க் போய்க் கொண்டே இருந்தது. சே... எல்லா ஆண்களும் போல்தான் இவரும்... நான்
கட்டிக்கன்னு நிக்கலையே... வேண்டான்னுதானே சொன்னேன்... எதுக்கு இப்படி... அவன்
மேல் அவளுக்கு கோபத்துடன் வெறுப்பும் வந்தது.
அப்போது அவளுக்கு ஒரு
குறுஞ்செய்தி வந்தது. அதில் ரிலேட்டிவ்
ஒருத்தவங்க திடீர்ன்னு இறந்துட்டாங்க... பாட்டியக் கூட்டிக்கிட்டு கிராமத்துக்கு
வந்திருக்கேன்... போன்ல சார்ஜ் இல்லாததால சார்ஜ் போட்டிருந்தேன்... அதான் போன்
எடுக்கலை... தப்பா நினைச்சிருப்பே இல்ல... இப்பவும் கால் பண்ணினா சரியாக்
கேக்காது... அதான்... அப்புறம் நல்ல செய்தி இங்கிருந்து சொல்ல முடியாது. நாளைக்கு
நம்ம பையனைக் கூட்டிக்கிட்டு ரெண்டு பேரும் பெருமாள் கோவில் போறோம்... சரியா...
என்றிருக்க, அவளுக்குள் முதல் முதலாய் பட்டாம்பூச்சி பறந்தது.
-‘பரிவை’
சே.குமார்.
அழகு.. அருமை...
பதிலளிநீக்குதங்களுடைய கைவண்ணம் என்றால் சொல்லவா வேண்டும்!..
பாவம் என்று அவர்கள் பதிப்பிக்கவில்லை. அருமை என்று தெரிவு செய்தே பதிப்பித்துள்ளார்கள். பாராட்டுகள்.
பதிலளிநீக்குசுபம்.
பதிலளிநீக்குArumai,Excellent story
பதிலளிநீக்குரொம்ப அழகாய் வ
பதிலளிநீக்குநல்லாத்தானே இருக்கு குமார்...கதை முடிவும்...
பதிலளிநீக்குகீதா