வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

அந்தி மந்தாரை (முத்துக்கமலம் இணைய இதழ்)

'அந்தி மந்தாரை'

2016-ல் எழுதி முடிவெழுதாமல் வைத்திருந்த கதையின் முடிவை எழுதி இப்படியானதொரு பெயரை வைத்து முதன் முதலாக முத்துக்கமலம் இதழுக்கு அனுப்பியிருந்தேன். அவர்களும் பாவம் பொயிட்டுப் போறான்னு அவங்க தளத்துல போட்டிருக்காங்க.

முத்துக்கமலம் இணைய இதழுக்கு நன்றி. முத்துக்கமலத்தில் வாசிக்க 'அந்தி மந்தாரை'

இந்தக் கதை ஆரம்பித்து ஒரே மூச்சில் முடித்திருந்தால் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். கிடப்பில் போட்ட பின் எழுதிய  முடிவில் எனக்கு அவ்வளவாக திருப்தி இல்லை என்றாலும் பரவாயில்லை என்பதாய்த்தான் தோன்றுகிறது.

எப்போ வேண்டுமானாலும் கதையின் முடிவை மாற்றலாம் இல்லையா...?

கதையை வாசித்து பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கருத்தில் சொல்லுங்க... 

நன்றி.
-*-
Related image

திக கூட்டமில்லாத அந்த காபிக் கடையில் எதிர் எதிரே அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தனர் ராகவனும் அனுப்பிரியாவும்... 

இருவரும் ஒரே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். அந்த அலுவலகத்துக்கு அனு வந்து ஒரு வருடம்தான் இருக்கும். ராகவ் ரொம்ப வருடமாக வேலை செய்கிறான். கம்பெனியில் அவனுக்கு நல்ல பெயர்... மேனேஜரின் செல்லப்பிள்ளை வேறு. அனு வந்தது முதல் அவளுடன் ஒரு ஒட்டுதல். இருவருக்குமான நட்பு நிறைய விஷயங்களை பற்றி அலசி ஆராயும் வகையில் இருந்தது. ரெண்டு பேரும் பேச ஆரம்பித்தால் நமக்கு வேலையில்லை என மற்ற நண்பர்கள் ஓடி விடுவார்கள்.

உதட்டில் பட்டும் படாமலும் காபியை உறிஞ்சிய அனு, "என்ன ராகவ் ஏதோ சொல்லணும்ன்னு சொன்னீங்க... அதுவும் ஆபீஸ்ல பேச வேண்டான்னு சொல்லி இங்க கூட்டியாந்தீங்க... இப்ப பேசாம காபி குடிக்கிறீங்க..." என்றாள்.

"எப்பவும் போல அரட்டை அடிச்சிப் பேச வேண்டிய விஷயம் அல்ல இது... வாழ்க்கை குறித்துப் பேசணும்... அதான்..." ரொம்ப யோசித்துப் பேசினான்.

"என்ன ராகவ்... எப்பவும் தல தோணி போல சும்மா அடிச்சி ஆடுவே... இன்னைக்கு என்னடான்னா டிராவிட் போல ரொம்ப யோசிக்கிறே...?" கிரிக்கெட் பைத்தியமான அனு, கிரிக்கெட்டை வைத்தே அவனைச் சீண்டினாள்.

"ஏய் அப்படியில்ல... கொஞ்சம் யோசித்துப் பேச வேண்டிய விஷயம்... அதான்..." ராகவ் வெளியில் பார்த்தபடி சொன்னான்.

"என்ன ராகவ்... என்னைய லவ் பண்றியா..?" என்று நேரடியாக அவள் கேட்க, வாயில் வைத்த காபிக் கோப்பையை படக்கென்று எடுத்தான். அவன் இதை எதிர்பார்க்கவில்லை. என்ன பதில் சொல்வதெனத் தெரியாமல் விழித்தான்.

"ஏய்... என்னாச்சு... என்னைய லவ் பண்றியான்னுதானே கேட்டேன்..."

"ஆமா அனு.... உன்னைய கல்யாணம் பண்ணிக்கணும்ன்னு ஆசைப்படுறேன்..."

காபியை வைத்து விட்டு "ஜோக்கெல்லாம் அடிக்காதே ராகவ்... நீ ரகுவரன் மாதிரி... ஜோக்கடிச்சா நல்லா இருக்காது..." என்று சொல்லி சத்தமாய்ச் சிரித்தாள்.

"ஏய் சத்தியமா... நான் உன்னை விரும்புறேன்..."

அவள் கோபப்படவில்லை என்பது அவனுக்கு ஆறுதலாய் இருந்தது.

"என்னைப் பற்றி என்ன தெரியும் உனக்கு?" என்றாள்.

"நீ ரொம்ப நல்ல பொண்ணு... அறிவாளி... வேறென்ன தெரியணும்.... பேசிப் பழகுனதுல உன்னோட குணமும் தெரிஞ்சாச்சு..."

"ம்... ரொம்ப அழகின்னு வழியலை... குணம் தெரிஞ்சாப் போதுமா... குலம்..?"

"ஏய் என்ன நீ சாதியெல்லாம் பார்த்து வந்தா அது காதலா..."

"அப்ப அழகி, அறிவாளியின்னு பார்த்து வந்தாப் போதுமாக்கும்... சரி... அலுவலகத்துல நான் இப்படி... அது உனக்குத் தெரியும்... ஓகே... அந்த எட்டு மணி நேரம் போக மற்ற நேரத்தில்... அதாவது என் குடும்பம்... உனக்கு அதைப் பற்றி என்ன தெரியும்..."

"அது... அது எதுக்கு... இவ்வளவு சந்தோஷமா இருக்க உனக்கு கண்டிப்பாக ரொம்ப சந்தோஷமான ஒரு குடும்பம் இருக்கணும்... அவங்க எல்லாரும் திருமணத்துக்குப் பின்னே நம்ம கூட இருக்கணும்..."

"அது சரி... அப்ப உன் குடும்பம்...?"

"என் குடும்பம்... நான் பாட்டி வீட்லதான் இருக்கேன்னு உனக்குத் தெரியுமே... அப்புறம் என்ன... எனக்கென்ன அப்பாவா... அம்மாவா... சொல்லு...."

"ஏய் ராகவ்... சாரிடா... உன் பாட்டியின்னு கேக்க வந்து அப்படிச் சொல்லிட்டேன்... ஆனா என்னைப் பற்றி என்னோட அலுவலகம் தவிர்த்த வாழ்க்கை பற்றி யாருக்கும் தெரியாது... நானும் யாருக்கும் சொல்ல விரும்புறதில்லை... இப்ப நீ சொன்னே பாரு... சந்தோஷமான குடும்பம்ன்னு அப்படி இருக்கத்தான் ஆசை.... சரி... என்னைப் பற்றி  தெரியணுமின்னா... என்னைக் கல்யாணம் பண்ணனும்ன்னா கண்டிப்பா நீ எங்க வீட்டுக்கு வந்து எல்லோரையும் பார்க்கணும்... அப்புறம் ஒரு முடிவுக்கு வரலாம்... ஓகேயா...?"

"சரி... வா இப்பவே போலாம்..."

"ஏய்  இரு... எங்கப்பாக்கிட்ட பர்மிஷன் வாங்கணுமில்லையா... எனக்கு நீ பிரண்ட்... ஆனா வீட்ல உன்னைத் தெரியாதுல்ல... சோ நாளைக்குப் போவோம்... ஓகேவா... சரி வா... கிளம்பலாம்..." என எழுந்தாள்.
மறுநாள்....

"வாங்க தம்பி... அனு சொன்னா..." என்றபடி வரவேற்றார் அவளின் அப்பா.

"வணக்கங்க..." என்றவன் அனுவின் அம்மாவைத் தேடினான்.

"அப்பா.... சுந்தரராஜன்... ரிட்டையர்டு ஹெச் எம்..." என்ற அனு, "உக்காருங்க" என்றாள்.

"அம்மா எங்கே அனு?"

"அம்மா... உள்ள இருக்காங்க... வாங்க...."

அறைக்குள் செல்ல கட்டிலில் படுத்துக் கிடந்த அனுவின் அம்மாவைப் பார்த்ததும் "என்னாச்சு அனு...?" என்றான்.

"நல்லாயிருந்தாங்க... திடீர்ன்னு ஒரு பக்கம் இழுத்துக்கிச்சு... ரெண்டு வருசமாப் பாக்குறோம்... அப்பாதான் பகலெல்லாம் பார்த்துப்பார்... ஈவினிங் நான் வர்றதுக்கு முன்னால தங்கையும் தம்பியும் வந்திருவாங்க... அவ எல்லாம் பார்த்து நான் வர்றதுக்குள்ள சமைச்சும் வச்சிடுவா..."

"சாரி... அனு..."

"ஏய் எதுக்கு சாரியெல்லாம்... இதெல்லாம் நாங்க ரெண்டு வருசமா பாத்துக்கிட்டுத்தான் இருக்கோம்... விடுங்க..." என்றவள் "ராகவ் நான் போட்ட காபி சாப்பிட்டதில்லையில்ல... இருங்க சூடா ஒரு காபி கொண்டு வர்றேன்..." என்று நகர்ந்தவள் "சொல்ல மறந்துட்டேன்... இவ என் தங்கை கல்பனா... எம்.சி.ஏ. பண்றா...." என்றவள் "எங்கடி விக்கி..?" என்று தங்கையிடம் கேட்டாள்.

"ரெண்டு வாலும் பின்னால விளையாடுதுக..." என்று சொல்லியவள் ராகவனைப் பார்த்து மெல்லச் சிரித்தாள்... அவனும் பதிலுக்குச் சிரித்தான்.

"தம்பி.. உங்களைப் பற்றி அனு எல்லாம் சொன்னா... நான் வாத்தியாரா இருந்தேன்... அவங்க அம்மாவும் டீச்சர்தான்... எங்க ரெண்டு பேருக்கும் லவ் மேரேஜ்தான்... அதனால எங்களுக்கு சாதியெல்லாம் இல்லை... ஏன் மதங்கூட இல்லை... அவ கிறிஸ்டியன்... அவ இப்படி ஆனதும் எங்க குடும்பத்துல நடந்த சில நிகழ்வுகளாலும் நாங்க இருந்த சிவகங்கைப் பக்கம் இருந்து இங்கிட்டு வந்துட்டோம்..." என்றபோது அனு காபியோடு வந்தாள்.

காபியை மெதுவாக உறிஞ்சியவன், "வாவ்... என்ன சூப்பரான காபி அனு... நீ காபியெல்லாம் நல்லாப் போடுவியா?" என்றான்.

"ஆஹா... ரொம்பத்தான்... நாங்க எல்லாமே நல்லாச் செய்வோம்... வேணுமின்னா எங்கப்பாக்கிட்ட கேளுங்க..." என்றபடி சோபாவின் கைப்பிடியில் அமர்ந்து அவரின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள்.

"அவளுக்கு எங்கம்மாவோட கைப்பக்குவம்..."

"சரி... வாங்க காபி சாப்பிட்டுக்கிட்டே மாடிக்குப் போய் கொஞ்ச நேரம் பேசலாம்... அப்பா... மேல போயிட்டு வர்றோம்..." என்றாள்.

"சரிம்மா..."
"என்ன அனு... அம்மா இப்படியிருக்காங்க... சொல்லவே இல்லை..." மாடியேறும் போது மெதுவாகக் கேட்டான்.

"இதெல்லாம் பழகிருச்சு... இதைச் சொல்லி அனுதாபம் தேடணுங்கிறீங்களா...? அப்பன்னா நான் இன்னொன்னையும் சொல்லியிருக்கணுமே..." என்று சிரித்தவள் "அப்பாவோட பிரண்ட் பக்கத்துலதான் இருக்காங்க... அவங்கதான் இந்த வீட்டை வாங்கிக் கொடுத்தாங்க... நல்ல வீடு... காற்றோட்டமான வீடு.. என்ன ஊரை விட்டு ஒதுக்குப்புறமாத்தான் இருக்கு... இருந்தாலும் இங்கிட்டும் நிறைய வீடு வந்திருச்சில்ல... பின்னால சின்னதா ஒரு தோட்டம்... எங்களுக்குப் பிடிச்சிப் போச்சு... இன்னொரு தெரியுமா... இந்த வீட்டோட ராசி வந்து ஒரு வருசத்துக்குள்ள அம்மாவோட நிலமையிலயும் கொஞ்சம் மாற்றம் இருக்கு... எங்களுக்கும் மனக்கஷ்டமெல்லாம் நீங்கி கொஞ்சம் சந்தோஷமா இருக்கோம்..." என்றாள்.

மேலிருந்து பின்பக்கமாக பார்த்து 'விக்கி அவனைக் கூட்டிக்கிட்டு மேல வா..." என்றவளிடம் "அது யார் அந்தப் பொடியன்...?" என்றான்.

"இருங்க வரட்டும் சொல்றேன்..." என்றவள் "எங்க அம்மாவோட நிலமைக்கு காரணமே நாந்தான்னா நம்ப முடியுதா?" விரக்தியாய்ச் சிரித்தாள்.

"என்ன சொல்றே...?"

"ம்.." என்றவளின் கண்கள் முதல் முறையாக கலங்குவதைப் பார்த்தான். அலுவலகத்தில் பார்த்த அனுவுக்குப் பின்னே ஒரு வாழ்க்கை... அதுவும் சோகமான வாழ்க்கை இருப்பதும்... அவள் கண் கலங்குவதும் அவனுக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது.

ஏதோ சொல்ல வாயெடுத்தவன் "அம்மா" என அவளை அணைத்துக் கொண்ட பொடியனைப் பார்த்ததும் வாயடைத்து நின்றான்.

"ராகவ்.. இது என் தம்பி... விக்கி... காலேஸ்ல படிக்கிறான்... இது என்னோட பையன் சந்தோஷ்..." என்றபடி கண்களைத் துடைத்துக் கொண்டு மகனுக்கு முத்தம் கொடுத்தாள்.

"அனு....?"

"அதிர்ச்சியா இருக்குல்ல... பட்டாம்பூச்சி மாதிரி ஆபீஸ்ல திரியிற அனுவுக்கு குழந்தையா... அப்படின்னு ஆச்சர்யமாவும் இருக்குல்ல... ம்... என்னோட பையன்... எனக்கும் கார்த்திக்குக்கும் பிறந்த பையன்... எங்களோட நாலாண்டு திருமண பந்தத்துக்கு கடவுள் கொடுத்த பரிசு இவன்..."

"கார்த்திக்.!?."

"அவனுக்கு என்னைப் பிடிக்கலை... ரொம்ப ஜென்டிலா நாம பிரிஞ்சிடலாம்ன்னு சொன்னான்... அவனுக்கு அவனோட ஆபீஸ்ல ஒருத்தி செட்டாயிட்டா... சரியின்னு சொல்லி... அப்பா அம்மாவோட எதிர்ப்புக்கு இடையில விவாகரத்துக்கு கையெழுத்துப் போட்டுட்டேன்... போடலைன்னா அவன் அவ கூட போவான்... அவன் கட்டுன தாலியை சுமந்துக்கிட்டு நான் வீட்டுக்குள்ள கிடக்கணும்... எனக்கு அது பிடிக்கலை... இப்ப நீ கேட்ட மாதிரி யாராவது ஒருத்தன் அப்ப என்னைக் கேட்டிருந்தா... அவனை விவாகரத்து பண்ணிக்கலாமான்னு நான் கேட்டிருக்க முடியுமா..? இல்ல அவனை வேணான்னு உதறிட்டு போயிருந்தா இந்த சமூகம் சும்மா விட்டுடுமா...? ஓடுகாலின்னு சொல்லும்... இன்னும் கேவலாமா.... அ.... வேண்டாம் விடு.... சமூகத்துல ஆண்களுக்கு ஒரு சட்ட திட்டம்... பெண்களுக்கு ஒரு சட்ட திட்டம்... என் முடிவு என் தங்கை, தம்பியோட வாழ்க்கையை பாழாக்கக்கூடாதுன்னுதான் ரொம்ப யோசிப்பேன்... பட்... அம்மாதான் என்னோட வாழ்க்கை முடிஞ்சிபோன அதிர்ச்சியில விழுந்துட்டாங்க... அப்பா எனக்கு ரொம்ப ஆதரவு... இப்பவும் நாங்க எல்லாரும் சந்தோஷமாத்தான் இருக்கோம்..."

"சாரி அனு... சந்தோஷமா வலம் வர்ற உனக்குள்ள இப்படி ஒரு சோகம் இருக்கும்ன்னு எதிர்பார்க்கலை... எல்லாத்துக்கும் சாரி..."

"எல்லாத்துக்கும்ன்னா... நேத்து சொன்னதுக்குமா?"

அவன் பதில் பேசலை.

"பாரு என்னைப் பற்றி தெரிந்ததும் நீ யோசிக்க ஆரம்பிச்சிட்டே...  என்னோட தங்கை... ரொம்ப நல்லவ... அவளைக் கட்டிக்க உனக்கு வாழ்க்கை நல்லாயிருக்கும்... நான் இப்படியே அம்மா, அப்பா, தம்பி, என்னோட பையன்னு வாழ்ந்துடுறேன்..."

"உகக்கென்ன வயாசா  ஆயிருச்சு.... இப்படியே இருக்கேன்னு சொல்றே...?"
அனு சிரித்தாள்.

"பாருங்க ராகவ்.... நான் என்ன இருந்தாலும் செகண்ட் ஹேண்ட் வண்டிதானே... கூடவே ஒரு ஸ்டெப்னியையும் வச்சிருக்கேன்... எவன் கட்டிப்பான்... பாருங்க... அறிவாளி அப்படி இப்படின்னு சொன்ன நீங்களே இப்ப யோசிக்கிறீங்கதானே..."

"ஏய் அப்படியெல்லாம் இல்லை... நாளை முடிவு சொல்றேன்.... நேரமாச்சு... நான் இப்ப கிளம்புறேன்..." என்றவன் வேறெதுவும் பேசவில்லை. அவளும் ஒன்றும் சொல்லவில்லை.

அடுத்த நாள் அலுவலகம் போனவள் ராகவைத் தேடினாள். அவன் அலுவலகத்துக்கு விடுமுறை சொல்லியிருப்பதாகத் தெரிந்த போது அவன் அவளைத் தவிர்ப்பதை உணர்ந்து இதுதான் நடக்கும் என்று நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.

மதியம் அவனுக்குப் போன் பண்ணலாம் என முயற்சித்தாள். எதிர்முனையில் ரிங்க் போய்க் கொண்டே இருந்தது.  சே... எல்லா ஆண்களும் போல்தான் இவரும்... நான் கட்டிக்கன்னு நிக்கலையே... வேண்டான்னுதானே சொன்னேன்... எதுக்கு இப்படி... அவன் மேல் அவளுக்கு கோபத்துடன் வெறுப்பும் வந்தது.

அப்போது அவளுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.  அதில் ரிலேட்டிவ் ஒருத்தவங்க திடீர்ன்னு இறந்துட்டாங்க... பாட்டியக் கூட்டிக்கிட்டு கிராமத்துக்கு வந்திருக்கேன்... போன்ல சார்ஜ் இல்லாததால சார்ஜ் போட்டிருந்தேன்... அதான் போன் எடுக்கலை... தப்பா நினைச்சிருப்பே இல்ல... இப்பவும் கால் பண்ணினா சரியாக் கேக்காது... அதான்... அப்புறம் நல்ல செய்தி இங்கிருந்து சொல்ல முடியாது. நாளைக்கு நம்ம பையனைக் கூட்டிக்கிட்டு ரெண்டு பேரும் பெருமாள் கோவில் போறோம்... சரியா... என்றிருக்க, அவளுக்குள் முதல் முதலாய் பட்டாம்பூச்சி பறந்தது.

-‘பரிவை’ சே.குமார்.

ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

இட்லி (சிறுகதை - கொலுசு மின்னிதழ்)

கொலுசு பிப்ரவரி மாத மின்னிதழில் வெளியான சிறுகதை. இப்போதேனும் இட்லி சாப்பிடுகிறேன். படிக்கும் காலத்தில் எல்லாம் இட்லி என்றால் எட்டி நிற்பேன்... இட்லி மீது அவ்வளவு காதல்... இந்தக் கதையில் இட்லி மீது பிரியமானவன் தான் நாயகன் என்றாலும் இட்லியே பிரதான நாயகன்.

கதையை வாசித்து கருத்துச் சொல்லுங்க... கதைக்கு மதிப்பெண் அளிக்க விருப்பமிருந்தால் அப்படியே கொலுசு தளத்துக்கு 'இந்த' வாசல் வழியாகப் போய் உங்க பொன்னான வாக்குக்களை சிந்தாமல் சிதறாமல் இட்லிக்கே அளியுங்கள்.

சிறுகதையைத் தேர்வு செய்து வெளியிட்ட கொலுசு ஆசிரியர் குழுவுக்கு நன்றி.
****
Image result for இட்லி

ட்லியை நன்றாக உடைத்து விட்டு அதன் மீது பெருங்காயம் மணக்கும் சாம்பாரை ஊற்றி பிசைந்து சாப்பிடுவதில்தான் அதன் சுவையே இருக்கிறது என்பது செந்திலின் எண்ணம். 

அவன் பிறந்த மண்ணும் அப்படித்தான் அவனுக்கு சாப்பிடக் கற்றுக் கொடுத்திருந்தது.  அவன் அம்மா ஆட்டுக்கல்லில் ஆட்டும் மாவு இட்லியாகும் போது அவ்வளவு மென்மையாக இருக்கும். இட்லிக்கு சட்னி என்பதைவிட அவனுக்கு முருங்கைக் காயும் கத்திரிக்காயும் உருளைக்கிழங்கும் போட்டு வைக்கும் இட்லி சாம்பாரின் மீதே அதீத விருப்பம். சாம்பார் என்றால் இரண்டு மூன்று இட்லிகள் சேர்ந்தே போகும்.

திருமணம், திருவிழாக்களுக்குச் சென்றால் இட்லி வைத்தவுடன் சாம்பார் வாளியுடன் வருபவர் நல்லா உடச்சு விடுங்க தம்பி அப்படின்னு சொல்லித்தான் சாம்பாரே ஊற்றுவார். அவனும் உடைத்து விட்டு சாம்பார் ஓடாமல் பாத்தி கட்டி பக்காவாக சாப்பிட்டு வருவான்.

நண்பர்கள் எல்லாம் ‘அய்யே இட்லியா அதுல அப்படி என்னடா இருக்கு’ன்னு கேலி பண்ணினாலும் அவனுக்கு இட்லிதான் குலதெய்வம். ஒரு தடவ பொன்னையா சார் வீட்டுல சாப்பிடும் போது 'இட்லிக்கி தயிர் வச்சி சாப்பிட்டிருக்கீங்களா தம்பி.?' அப்படின்னு கேட்டுட்டு 'சாப்பிட்டுப் பாருங்க... அப்புறம் அப்படிச் சாப்பிடத்தான் பிடிக்கும்' எனச் சொல்லி கெட்டித் தயிரை கொஞ்சம் எடுத்து வைத்தார். ஒரு வில்லை எடுத்து தயிரில் வைத்துச் சாப்பிட்டான்... ஆஹா என்ன சுவை... அதன் பின் வீட்டில் அம்மா சாம்பார் வைக்கவில்லை என்றாலும் எருமைத் தயிர் அவனுக்கு சுவை கூட்டியது.

சிலம்பணி வளைவுக்குள் இருக்கும் சிறிய கடையான வேல் முருகனில்தான்  இட்லி சாம்பார் நல்லாயிருக்கும் என்பதால் அடிக்கடி அங்கு சென்று விடுவான். அதன் காரணமாக கடை ஓனரும் அவனுடன் நெருக்கமாகி விட்டார். ‘இருங்க தம்பி சூடா இட்லி எடுத்துத் தாரேன்’னு சொல்லி சுடச்சுட தட்டில் வைத்து பெருங்காயம் மணக்கும் சாம்பாரை ஊற்றிக் கொடுப்பார். சாம்பார் வாளியையும் அருகில் வைத்து ‘வேணுங்கிறத ஊத்திக்கங்க’ என்றும் சொல்வார்.

பெரிய ஹோட்டல்களுக்கு செல்வதில் அவனுக்கு எப்பவும் விருப்பம் இருப்பதில்லை... ரெண்டு இட்லியை வைத்து அரை இட்லிக்குக் கூட பத்தாத சாம்பாரை ஒரு சிறிய கிண்ணத்தில் கொண்டு வந்து வைப்பார்கள் என்பதால் அவன் விருப்பமெல்லாம் வேல் முருகன் போல சின்னக் கடைகள்தான்.

சமையல்காரரான அவனின் தாத்தா, இ’ட்லிய நல்லா ஒடச்சி விட்டு அதுல சாம்பாரை ஊத்தி பெசஞ்சு சாப்புடுறதுலதாண்டா சொகம்... தோசயின்னாலும் மேல சாம்பார ஊத்தி ஊறவச்சி சாப்புட்டா ரெண்டு தோச கூடப் போவும் தெரியுமா’ன்னு சொல்வாரு.

இப்பல்லாம் கல்யாணம் திருவிழாவுல கூட இட்லிக்கு சிக்கன் குருமா, மட்டன் குருமான்னு போட ஆரம்பிச்சிட்டாங்க... அதென்னவோ இட்லியோ சுவையை கெடுக்குற மாதிரி அவனுக்குத் தோணும்... இட்லிக்கு சாம்பார் இல்லைன்னா இட்லி வேண்டான்னு சொல்லிட்டு வைக்கிற ரெண்டு புரோட்டாவ பிச்சிப் போட்டுட்டு கிளம்பி வந்திருவான். வயிறு  நெறைஞ்ச மாதிரியே இருக்காது. அப்புறம் எதாவது ஒரு ஓட்டலுக்குள்ள நுழைஞ்சி ரெண்டு இட்லி தின்னாத்தான் அவனுக்கு திருப்தியாகும்.

திருமணத்துக்கு அப்புறம் மனைவியுடன் தனிக்குடித்தன வாசம்... சும்மா சொல்லக்கூடாது... அவளும் சூப்பராச் சமைப்பா. அம்மா கைப் பக்குவம் மனைவியிடம் எதிர்பார்க்க முடியாது என்றாலும் மனைவி கைப்பக்கும் அம்மாவிடம் இல்லை என்பதையும் மனசுக்குள் சொல்லிக் கொள்வான்.

மனைவி கிரைண்டரில் மாவாட்டினாலும் அதுவும் மென்மையாக தும்பைப்பூப் போல இருக்கும். இட்லிக்கு காரச்சட்னியோ மல்லிச் சட்னியோ வைத்துக் கொடுப்பாள். அதுவும் நல்லாத்தான் இருக்கும்  என்றாலும் சாம்பார்தான் அவனின் பிரதானம்.  அவனுக்காகவே சாம்பார் வைத்து அதை ப்ரிட்ஜில் வைத்து மூணு நாளைக்கு ஊற்றுவாள். அதில் அவ்வளவு சுவை இருப்பதில்லை என்றாலும் அம்மாவிடம் பண்ணிய அதிகாரத்தை அம்மணியிடம் பண்ண முடியாமல் சத்தமில்லாமல் உள்ளே தள்ளி விடுவான்.

வாழ்க்கைப் போராட்டம் அவனையும் வெளிநாட்டு வேலைக்குத் தள்ளியது. அதுவும் துபாய்க்கு அவன் வந்து ரெண்டு வருசமாச்சு... காலையில பெரும்பாலும் சாப்பிட நினைப்பதில்லை. அதுக்கு காரணம் பெரும்பாலும் மலையாளி ஹோட்டல்கள்... செட்டிநாட்டுக்காரனுக்கு அவனுக சாம்பார், சட்னியெல்லாம் மொரப்பாட்டுக்காரன் மாதிரி தள்ளியே நிற்க வைத்தது.

அதற்கும் காரணம் இருந்தது. 

வந்த புதிதில் ஒருநாள் சாப்பிடலாம்ன்னு ஒரு மலையாளி ஹோட்டலுக்குள்ள போய் இட்லி ஆர்டர் பண்ணிட்டு உக்காந்திருந்தான். ஒரு தட்டில் மூணு இட்லி, சாம்பார், காரச் சட்னி, தேங்காய் சட்னி வைத்துக் கொண்டு வந்து வைத்தவன் வடை வேணுமா சேட்டான்னு கேட்க, வேண்டாம் என்று சொல்லி இட்லியை பிய்ப்பதற்குள் போதும் போதுமென ஆகிவிட்டது.

அப்பா... என்ன கனம்... கோபத்துல ஒருத்தன் நெத்திப் பொட்டுல எறிஞ்சா ஆள் அவுட்டாயிருவான்னு நெனச்சிக்கிட்டு கொஞ்சமா உடைத்து எடுத்து சாம்பாரில் போட்டு எடுத்து சாப்பிட்டவனுக்கு அந்த சுவையும் வாசனையும் இட்லி சாம்பார் மீது இருந்த காதலை கசக்க வைத்துவிட்டது.

மிளகாய்ப்பொடி வாசத்துடன் ஏதோ ஒரு வாசனை கலக்க, துவரம் பருப்பு போட்டதா போடாததா என்ற சந்தேகம் எழ, சாம்பார் ஆசை போய்விட, காரச்சட்னி கொஞ்சம் காப்பாற்றியது. இரண்டு இட்லியை மெல்ல உள்ளே தள்ளிவிட்டான்.  இந்தச் சாம்பார் அவனுக்கு பழனிக்கு நடந்து போகும்போது சிங்கப்புணரி தாண்டி திடீரென முளைத்திருக்கும் ஹோட்டல்களில் சாம்பாரின் கொழகொழப்புக்காக பரங்கிப்பழம் சேர்த்து வைத்த சாம்பாரை வேண்டா வெறுப்பாக சாப்பிட்ட ஞாபகத்தை கிளறி விட்டது.

தேங்காய் சட்னி அவனுக்கு எப்பவுமே எட்டிக்காய் என்பதால் அதன் பக்கமே திரும்பவில்லை. நல்லவேளை அதன் சுவை பார்க்காதது என்பதை அறை நண்பர்கள் இங்கு வைக்கும் தேங்காய் சட்னி சாப்பிட்டால் ஊரில் தேங்காய் சட்னி பக்கமே தலை வைத்துப் படுக்க முடியாது என்று பேசுவதை வைத்து அறிந்து கொண்டான்.

எறி கல்லான இட்லியும் சாம்பார் என்ற பெயர் கொண்ட வஸ்துவும் அவனை காலையில் சாத்தரையும் பிஸ்கட்டையும் உணவாக்கிவிட, ஊருக்குப் போனால்தான் இட்லியில் சாம்பாரை ஊற்றிப் பிசைந்ததடிக்க முடிந்தது.

சென்ற முறை ஊரில் இருந்து வரும் போது இட்லி சட்டி வாங்கி வந்தான். கூடவே மனைவியிடம் எப்படி சாம்பார் வைப்பது என்பதையும் படித்துக் கொண்டு வந்து விட்டான்.

ஒரு சுபயோக சுபதினத்தில் இட்லி மாவு பாக்கெட் வாங்கி இட்லி ஊற்றினார்கள்... சாம்பார் இவன் கைவண்ணமே... மலையாளி கடை இட்லி போல் அவ்வளவு கல்லாக இல்லை... அப்புறம் மாவு மாற்றி மாற்றி வாங்கி கடைசியில் கொஞ்சம் மென்மையாக இட்லி வரும் மாவை கண்டு கொண்டான். வாரத்தில் இரண்டு நாள் அதுவே அவன் அறையில் இட்லியாக... அவனின் சாம்பாருக்கும் நண்பர்கள் ரசிகர்களாகிவிட அம்மா, மனைவி கைப்பக்குவம் வரவில்லை என்றாலும் அவனும் பக்குவமாக சமைப்பதாகவே தோன்றியது.

ஷார்ஜாவில் இருக்கும் நண்பனைக் காண வார விடுமுறையில் சென்ற போது அங்கிருக்கும் தமிழ்க்  கடைக்கு சாப்பிடக் கூட்டிப் போனான். ‘டேய் அங்க இட்லி நல்லாயிருக்குமா... இல்ல மலையாளி கடை மாதிரித்தான் இருக்குமா..?’ என்று  அவனிடம் திரும்பத் திரும்பக் கேட்டதும் 'டேய் இட்லி பைத்தியம்... சும்மா வாடா... வேற எதுவுமே சாப்பிட இருக்காத மாதிரி இட்லி நல்லாயிருக்குமான்னு... என்னென்னமோ வெரைட்டி இருக்குடா... நீ இன்னும் இட்லியிலயே நிக்கிறே...' என்று கேலி செய்தான்.

கடையில் சரியான கூட்டம்... இடம் பிடித்து அமர்ந்ததும் எனக்கு இட்லி என்றான்.

இட்லி வந்தது.... ஆஹா... தும்பைப்பூ இட்லி.... பெருங்காயம் மணக்கும் சாம்பார்... அவனுக்குச் சந்தோஷம்.

ஆனியன் தோசை வாங்கிய நண்பன், கிண்ணத்தில் இருந்த சாம்பாரை பெருமாள் கோவில் ஐயர் கரண்டியில் தீர்த்தம் எடுத்து கையில் ஊற்றுவது போல் தோசை மேல் ஊற்றி முள் கரண்டியால் அதை மெல்லப் பிய்த்து மற்றொரு கரண்டியில் எடுத்து வாயில் வைத்தான். என்னடா இவன் தோசையை கையில பிச்சித் தின்னா என்ன... இதென்ன பந்தா என மெல்ல அடுத்த டேபிளைப் பார்த்தான்.

அதில் ஒருவன் இட்லியை கரண்டியால் வெட்டி எடுத்து முள் கரண்டியில் குத்தி சாம்பாரின் நனைத்து வாயில் வைத்துக் கொண்டான். ஒவ்வொருவராய் பார்க்க எல்லாருமே கரண்டியில் கவி பாடிக் கொண்டிருந்தார்கள். என்ன மனிதர்கள். இதிலென்ன ருசி கிடைத்து விடும் என்ற சிந்தனையோடு தன் தட்டில் இருந்த இட்லியையும் அதனருகில் இருந்த கரண்டிகளையும் சிறிய கிண்ணத்தில் இருந்த சாம்பாரையும் சட்னியையும் பார்த்தான்.

'என்னடா... சாப்பிடுடா... வேறென்ன வேணும்... இப்பவே சொன்னாத்தான்...' என்றான் நண்பன்.

'ஏன்டா... நீ இங்கே பொறந்தா வளந்தே... நம்மூருல தோசைய கரண்டியில கட் பண்ணியா சாப்பிட்டே... இதென்ன... புதுசா... இதுல ருசியிருக்குமா...?' என்றான் மெல்ல.

'இங்கல்லாம் இப்படித்தான் சாப்பிடணும்... பாரு யாராச்சும் கை வச்சி சாப்பிடுறாங்களா...? டீசென்ஸி மெயிண்டைன் பண்ணனும்...' என்றான்.

'நீ டீசன்ஸி மெயிண்டைன் பண்ணிக்க... எனக்கு இட்லியில சாம்பார ஊத்தி பெசஞ்சி சாப்பிட்டாத்தான் ருசிக்கும்' என்றபடி இட்லியை நல்லா உடைச்சி விட்டு சாம்பாரை அதன் மீது ஊற்றி, சர்வரிடம் மீண்டும் சாம்பார் வாங்கி அதையும் ஊற்றி நல்லாப் பிசைஞ்சி எடுத்து வாயில் வைத்தான்.

'டேய்... என்னடா...' என்ற நண்பனை 'நான் இன்னமும் பூங்குளத்துக்காரன்தான்... எனக்கு இப்படிச் சாப்பிட்டுத்தான் பழக்கம்... ரொம்ப நாளக்கி அப்புறம் எனக்கு வீட்டுச் சாப்பாட்டை ஞாபகப்படுத்துற இட்லியும் சாம்பாரும் கிடைச்சிருக்கு... இதை அனுபவிச்சி சாப்பிடாம... எவனுக்காகவோ எதுக்காகவோ நம்ம இட்லியை தொடாம என்னால சாப்பிட முடியாது...'

'பட்டிக்காட்டான்னு நினைப்பானுங்கடா...'

'நினைக்கட்டும்... அடுத்தவன் நினைப்பாங்கிறதுக்காக என்னோட சாப்பாட்டை நான் மாத்திக்க முடியாது... பாத்ரூம்ல அவனுக தொடச்சிப் போட்டுட்டு வர்ற மாதிரி நீயும் பண்ண வேண்டியதுதானே... அங்க மட்டும் ஏன் தண்ணி யூஸ் பண்ணுறே... நீ பாரின் காரனா சாப்பிடு... நான் பட்டிக்காட்டானாவே சாப்பிடுறேன்...' என்று சிரித்தபடி 'அண்ணே... இன்னம் ரெண்டு இட்லியும் கூடுதலாச் சாம்பாரும்' எனச் சத்தமாகச் சொன்னான்.

*****

முத்துக்கமலம் இணைய இதழில் எனது 'அந்தி மந்தாரை' என்ற சிறுகதை வெளியாகி இருக்கிறது. முடிந்தால் அங்கு சென்று வாசியுங்கள்.... இல்லையேல் இன்னும் சில நாளில் இங்கு பகிரும்போது மறக்காமல் வாசியுங்கள்.

ப்பாவின் 80-வது பிறந்தநாள் சில நாட்கள் முன்னர் அதிக ஆர்ப்பாட்டம் இல்லாமல் மருமக்கள், மகள்கள், பேரன் பேத்திகள் சூழ, எங்கள் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. அப்பா குறித்து ஒரு பதிவெழுத ஆசை... இன்னும் மனசு முழுச் சந்தோஷத்துக்குள் வரவில்லை... தினம் தினம் பிரச்சினைகளைச் சுமந்து அலைவதால் எதிலும் ஒட்டுதல் இல்லை. பார்க்கலாம் முடிந்தால் எழுதலாம்.
-'பரிவை' சே.குமார்.

செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

முடிவுகள் திருத்தப்படலாம் (அகல் மின்னிதழ் சிறுகதை)

கல் மின்னிதழ் மாசி மாத மகா சிவராத்திரி சிறப்பிதழில் வெளியான எனது சிறுகதை இது.  வெளியிட்ட அகல் ஆசிரியர் குழுவுக்கும் நண்பர் சத்யாவுக்கும் இதையும் வாசித்து கருத்துச் சொல்ல இருக்கும் உங்களுக்கும் நன்றி.

அனைவருக்கும் மகா சிவராத்திரி வாழ்த்துக்கள். ஊர்ல இருந்தா காவடியோட கோவில் கோவிலா சுத்தலாம்... ம்.... இங்க என்னத்தைச் செய்யிறது. 

சரி கதையை வாசிங்க... அதுக்கு முன்னாடி... 

அனைவருக்கும் இனிய மகா சிவராத்திரி வாழ்த்துக்கள். 

எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நோய் நொடி இல்லா வளமான, நலமான வாழ்வை அருளட்டும்.

Related image

*******

னைவியின் மூலமாக சாமிநாதன் காதுக்கு அந்தச் செய்தி வந்தபோது 'ஏய் அதெல்லாம் இருக்காது' என்று மறுத்தாலும் கொஞ்ச நாளாவே ஊருக்குள்ளே அரசல்புரசலாக பேசுறதை அவர் அறிவார்.

"அட ஏ நீங்க வேற... ஊரே பேசுது... ஒங்களுக்கு தெரிஞ்சாலும் நொள்ளைன்னுதான் சொல்லுவியா... நெருப்பில்லாம பொகயாதுங்க..." அரிவாள்மனையில் கத்திரிக்காயை வெட்டியபடி பேசினாள் சவுந்தரம்.

"அட இவ ஒருத்தி... நெருப்பில்லாம பொகயாது... சட்டியில்லாம வேகாதுன்னு... நாலு பேரு நாலுவிதமாப் பேசுனா உண்மையாயிருமா என்ன..?"

"உண்மையிருக்கக்கண்டிதானே பேசுறாக... வடக்கித் தெருப்பக்கமெல்லாம் நாலஞ்சி நாளா கூகூன்னு கெடக்கு... நம்ம பக்கந்தேன் வெசயந் தெரியாம இருந்திருக்கு..."

"இங்கேரு... தப்புச் சொல்றது சொலபம்... ஆனா அது உண்மையா பொய்யான்னு ஆராயாமச் சொல்லப்படாது... இஞ்சரு... சம்முவம் கம்மாயில குளிச்சிக்கிட்டு இருக்கான்னு நீ கம்மாக்கரையில நின்னு சொன்னியன்னா... ஒவ்வொரு ஆளு காதுக்கும் மாறி மாறிப் போயி கடைசியில அவன் வீட்டு வாசல்ல நிக்கிற அவனோட ஆத்தாவுக்கு சம்முவம் கம்மாயில குடிச்சிக்கிட்டு இருக்கான்னு போயிச் சேரும்... இதுல எது உண்ம... குளிக்கிறதா... குடிக்கிறதா... அப்புடித்தான் இதுவும்... உண்ம தெரியாம ஊரு பேசுதுன்னு நாமளும் பேசப்படாது... அது தப்பு... நமக்கும் புள்ளகுட்டிக இருக்கு"

"ம்க்கும்... பெரிய்ய அரிச்சந்திர மவராசா பரம்பர... ஒங்களையும் போயி ஊருக்கு அம்பலம்ன்னு வச்சி, நீங்க சொல்றது செரியின்னு போறானுவளே அவனுகளச் சொல்லோணும்..." என்று சவுந்தரம் சொன்னதும் சிரித்துக் கொண்டார்.

சாமிநாதன் அந்த சிறிய கிராமத்தின் அம்பலம்... ஊரில் நல்லது கெட்டது எது என்றாலும் அவருக்குத்தான் முன்னுரிமை... விவசாயக் கூட்டமா... திருவிழாக் கூட்டமா... சொத்துப் பிரச்சினையா... அடிதடி தகராறா எதாயிருந்தாலும் அவர் சொல்றதுதான் முடிவு... அதுக்காக நாட்டாமை மாதிரி சொம்பெடுத்துக்கிட்டு வேப்பமரத்து நிழல்ல உக்காந்துக்கிட்டு 'ம்... சொல்லுவே' அப்படின்னு எல்லாம் இருக்கமாட்டாரு... இருக்கவும் முடியாது... எல்லாரும் உக்காந்து பேசுவாக... எல்லோருடைய கருத்தையும் கேப்பாரு... அப்புறம் எல்லாத்தையும் யோசிச்சு ஒரு முடிவு சொல்வாரு... அதை ஊர் ஏத்துக்கும்... எப்பவுமே ஊருக்கு சாதகமான முடிவைத்தான் எடுப்பார். நான் சொல்றதுதான் என்று நிற்கமாட்டார். போன பஞ்சாயத்து எலெக்சன்ல  ஊரே சேர்ந்து அவரை நிக்கச் சொன்னப்போ அதெல்லாம் சரிவராதுன்னு மறுத்து மேலக்கட்டிவயல் பரமானந்தத்தை ஆதரிச்சி ஜெயிக்க வச்சு ஊருக்கு தேவையான வசதிகளை செய்ய வச்சிக்கிட்டு இருக்கார். அவர் மேல எப்பவும் ஊருக்குள்ள ஒரு நல்ல பேர் உண்டு.

"ன்ன சாமிநாதா... சேதி தெரியுமா..?" கம்மாய்க்கு குளிக்கப் போனவரிடம் குளித்துக் கொண்டிருந்த கருப்பையா இப்படிக் கேட்கவும் "என்ன சேதி கருப்பையாண்ணே... திடீர்ன்னு சேதி தெரியுமான்னு கேக்குறே?" என்றபடி கரையில் நின்ற வேப்பமரத்தில் குச்சி ஒடித்து பல் விளக்க ஆரம்பித்தார்.

"ஊரே பேசுது... தெரியாத மாதிரி கேக்குறே... நீ எப்பவும் இப்படித்தாம்பா... போட்டு வாங்குறதுல கில்லாடி..." என்று சிரித்தவர் லைப்பாய் சோப்பை போட்டு முதுகில் வரட்டு வரட்டுன்னு தேய்த்தார்.

"ம்... அதுவா... நேத்து ஏ வீட்டுக்காரி சொன்னா... அது உண்மையா இருக்கும்ன்னு எனக்குத் தோணல... விசாரிப்பம்..."

"அட அம்புட்டுப் பேரும் சொல்றானுவ.. முருகேசன் மவன் சிவாப்பய நேர்லயே பாத்திருக்கான்..."

"சிவா பாத்தானாமா..?"

"அட ஆமாங்கிறேன்... அவ ஆத்தா வெளிய சொல்ல முடியாம தவிக்கிறா... இந்தப்புள்ள இப்படிப் பண்ணலாமா...? யாருக்குள்ள யாரு... அசிங்கமா இல்ல..."

"அண்ணே டப்புன்னு பொட்டப்புள்ள மேல தப்புச் சொல்லப்படாது... ஊரு பேசுறது உண்மதானான்னு முதல்ல விசாரிப்பம்... அது உண்மயின்னா ஊர்க்கூட்டத்தைப் போட்டு என்ன பண்ணலாம் ஏது பண்ணலாம்ன்னு யோசிப்போம்... எது எப்புடியோ ரெண்டு பேருக்கும் கட்டிக்கிற மொறதான..."

"ஏப்பா... கட்டிக்கிற மொறயின்னாலும் இப்ப இருக்க நெலம என்னன்னு அந்தப்புள்ள யோசிக்கலயே... செரி... செரி... நீ சொல்றே... இதுவும் சரியின்னுதான் படுது... இருந்தாலும் ஒவ்வொரு நாளும் புதுப்புது செய்தியா வருதுப்பா.." என்றவர் முகம் முழுவதும் சோப்பை தடவிக் கொண்டு தண்ணிக்குள் இறங்கினார். சாமிநாதனும் துண்டைக் கட்டிக் கொண்டு குளிக்கத் தயாரானார்.


Image result for காதலர்கள் ஓவியம்

"வா... வாங்க மாமா... என்ன திடீர்ன்னு... ஆபீசுக்கு வந்திருக்கீக... இங்க எதுனாச்சும் வேலையா..?" சாமிநாதனை அங்கு எதிர்பார்க்காத ராமமூர்த்தி பயத்தோடு கேட்டான்.

"அட எதுக்கு மாப்ள பயப்படுறே...?  ஏ மச்சின மவளப் பிஎல் சேக்கிறதுக்கு வந்தாக...  என்னயும் கூப்பிட்டான்... இப்ப என்ன வெவசாய வேலயா என்ன... ஆடு மாட அவுத்து விட்டா மேஞ்சிட்டு வந்துரும்... சரியின்னு கெளம்பி வந்தேன்... ஓ ஆபீசுக்கு முன்னால ஒரு தடவ வந்திருக்கேனா... இங்ஙன பக்கத்துலதான் பிஎல் காலேசு... சேத்தாச்சு... அவனோட கொழுந்தியா வீட்டுக்கு பொயிட்டுப் போவோம்ன்னு சொன்னான்... நீங்க பொயிட்டு வாங்க... எங்க ஊரு மாரியப்பன் மவனோட ஆபீசு இங்கதானிருக்கு... பாத்துட்டு இங்ஙன நிக்கிறேன்னு சொல்லிட்டு வந்துட்டேன்.."

"ம்... சரி வாங்க மாமா ஜில்லுன்னு ஜிகர்தண்டா சாப்பிடலாம்..." என்றதும் இருவரும் மாடியில் இருந்து கிழிறங்கி ரோட்டின் எதிர்ப்பக்கமிருந்த கடையில் ஜிகர்தண்டா ஆர்டர் பண்ணிவிட்டு சேரில் அமர்ந்தனர்.

பொதுவாக பேசிக்கொண்டே வந்தவர் "ஏம்மாப்ள... நம்ம காவேரி மவ எமுனா இங்கதான் வேல பாக்குதாமே... அப்புடியா..?" மெல்ல ஆரம்பித்தார்.

"யா...யாரு மாமா..?"

"என்ன மாப்ள தெரியாத மாதிரி கேக்குறிய... அட நம்மூரு காவேரி மவ, ஒங்க சின்னையா பேத்தி எமுனா..."

"ஓ... நம்ம யமுனாவா.... இங்கதான் இருக்கு..."

"இங்கனா... பக்கத்துலதானா...?"

"இ...இல்ல மாமா... சிட்டிய விட்டு வெளியில அவங்க கம்பெனி..."

"ஓ... எங்க தங்கியிருக்கு...?"

"கம்பெனிக்கிட்ட ஒரு அபார்ட்மெண்டுல நாளஞ்சு பொண்ணுகளோட பிளாட் எடுத்து தங்கியிருக்கு..."

"ம்... நல்லபுள்ள அது... அதோட வாழ்க்கை இப்படியாகிப்போச்சு... பரவாயில்ல... தைரியமா அதுல இருந்து மீண்டு வந்ததே பெரிய வெசயமில்லையா..."

"ம்..." என்றவனின் போன் அடிக்க, கட் பண்ணி விட்டான்.

"நீ அந்தப்புள்ளய பாப்பியா...?"

"இ...இல்ல.... நம்மூருக்கு வரும்போது பாத்தாத்தான்... எனக்கு ஆபீசு முடிய ஒம்போது மணிக்கு மேலாகும் மாமா... சண்டே மட்டுந்தான் லீவு... தொவைக்க குளிக்கன்னு எங்கிட்டும் போ முடியாது மாமா... எப்பவாச்சும் போன் பண்ணிப் பேசும்... எனக்கிருக்க வேலயில நா இதுவரைக்கும அதுக்கு போன் பண்ணினதில்ல... அதுதான் கூப்பிடும்" என்றவனின் போன் மறுபடியும் அடிக்க, கட் பண்ணினான்.

"யாரு மாப்ள... எதுக்கு கட் பண்றே...? பேசு... அவுகளுக்கு என்ன அவசரமோ..."

"இல்ல மாமா பிரண்டுதான்... ஆபீஸ் போயி பேசிக்கலாம்..."

"மாப்ள நாங்கேக்கிறேன்னு தப்பா நெனக்காதே... நீயும் எமுனாவும் இங்க ஒண்ணாச் சுத்துறதா..." மெல்ல இழுத்தார்.

"மாமா..." சத்தமாகச் சொன்னவன் சுற்றிலும் ஒரு முறை பார்த்துவிட்டு தலை குனிந்தபடி "அப்படியெல்லாம் இல்ல மாமா... பெரிய மனுச நீங்க... நீங்க மத்தவங்க சொல்றதைக் கேட்டுப் பேசலாமா..?" என்றான்.

"இங்க பாரு மாப்ள... ஒலவாய மூடலாம் ஊர்வாய மூட முடியாது... ஊருல விடிஞ்சா எந்திரிச்சா ஒங்க பேச்சுதான்... நாங்கூட ஒங்க அத்த சொன்னப்ப நம்பலை... ஆனா சிவாப்பய நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வண்டியில போறதை பாத்திருக்கான்... அவன் கூட அவனோட தொழில் வெசயமா அடிக்கடி இங்க வருவாங்கிறத்தான் ஒங்களுக்குத் தெரியுமே... அவன் சொன்னான்னு கருப்பையா அண்ணன் சொன்னப்போ நம்பாம இருக்க முடியல... ஏன்னா அவன் கதகட்டி விடுற பய இல்லை..."

"...."

"இங்கேரு மாப்ள... இது உண்மையா பொய்யான்னு தெரிஞ்சிக்கத்தான் மச்சினன் கூப்பிட்டப்ப நா இங்க வந்தேன்... சொல்லு... எதாயிருந்தாலும் சொல்லு... நா இருக்கேன்... உங்க அப்பனாத்தா பத்தி கவலயில்ல... ஆனா காவேரி, புருசனில்லமா பொட்டப்புள்ளய வளத்து படிக்க வச்சி உங்கப்பன் ரெண்டு பொட்டப்புள்ள இருக்கு அப்படின்னு சொல்லி உனக்கு கட்டிக்கமாட்டேன்னு சொன்னதும் ஒரு இடத்துல புடிச்சிக் கொடுத்தா... ஆனா அவ வாழ்க்க மாதிரி புள்ள வாழ்க்கயும் ஆயிப் போச்சு... அத்துக்கிட்டு வந்து மூலையில முடங்கிக் கெடக்காம படிச்ச படிப்ப வச்சி இன்னைக்கு நல்ல வேலயில இருக்கா... கை நெறய சம்பாதிக்கிறா... சந்தோசந்தே...  ஊரு அசிங்கமாப் பேசுறதக் கேட்டு அவ அம்மா காவேரி உக்கிப் போயித் திரியிறா... அது உனக்குத் தெரியுமா...?"

"ம்...தெரியும்... யமுனா சொன்னுச்சு..." என்றவனின் போன் அடிக்க, இந்தமுறை எடுத்து "முக்கியமான ஒருத்தவங்களோட வெளியில இருக்கேன்... ஆபீஸ் வந்துட்டு கூப்பிடுறேன்" என்று சொல்லி வைத்தவன் "உங்ககிட்ட சொல்றதுக்கு என்ன மாமா... எல்லாம் சொல்றேன்..." என ஆரம்பித்தான்.

"இப்ப சாட்டர்டே, சண்டே யமுனா எங்கூடத்தான் என்னோட வீட்ல இருக்கா மாமா... அவள நான் லவ் பண்றேன்... உங்களுக்கெல்லாம் தெரியாது... படிக்கிற காலத்துல இருந்து அவ மேல எனக்கு லவ்... அத்த அப்பாக்கிட்ட எனக்கு கட்டணும்ன்னு கேட்டப்போ, அப்ப ஒத்துகலை... என்னால அவங்ககிட்ட சண்டை போட்டு யமுனா கட்டிக்க முடியல... ஏன்னா எங்கம்மா மருந்தக் குடிச்சிருவேன்னு சொல்லி மிரட்டினாங்க... எனக்குப் பின்னால ரெண்டு தங்கச்சிங்க இருந்தாங்க... அப்படியிருந்தும் ஓடிப்போயிடலாம்ன்னு அவகிட்ட சொன்னேன்... ஆனா அதுக்கு அம்மா செத்துருமுன்னு அவ ஒத்துக்கலை... நல்ல இடம்ன்னு பாத்துத்தான் அத்த கட்டுச்சு... ஆனா அவங்க... அதான் உங்களுக்கே தெரியுமே... பஞ்சாயத்துக்கு எல்லாம் போனியதானே... உங்களுக்குத் தெரியுமா... நாங்க லவ் பண்ணுனது ஊருக்கு மட்டுமில்ல எங்க வீட்டுக்கும் தெரியாது... தெரியாத வரைக்கும் நல்லதுதான்னு விட்டுட்டு  அவங்க அவங்க வாழ்க்கைப் பாதையில பயணிச்சோம். எங்கிட்ட கல்யாணம் ஆனதுக்கு அப்புறமும் போன்ல பேசுவா... நானும் பேசுவேன்... சத்தியமா அதுல காதல் இல்ல மாமா... அத்த பொண்ணு... மாமா மகன்கிற உறவு மட்டுமே இருந்துச்சு... ஆனா விதி வலியது மாமா... " பேச்சை நிறுத்தி ஜிகர்தண்டாவை கொஞ்சம் குடித்து குளிர்ச்சியாகிக் கொண்டு மீண்டும் பேச ஆரம்பித்தான்.

"ஆமா விதி வலியதுதான் மாமா... இல்லேன்னா அவ ஏன் இங்க வேலைக்கு வரணும்... எங்கிட்ட போன் பண்ணி மணிக்கணக்குல மனசுல உள்ள பாரத்தை எல்லாம் சொல்லி அழணும்... அவளுக்கு ஆறுதலா பேசினேன்... அவளைப் பார்க்கப் போனேன்... தோள்ல சாஞ்சி ஓன்னு அழுதா... கல்யாணமாகி ஆறு மாசத்துல அத்துக்கிட்டு வந்தவ... அவளோட மனபாரத்தை சுமக்க ஒரு தோள் தேவைப்பட்டுச்சு... சத்தியமாச் சொல்றேன் மாமா... அவளைக் காதலிச்ச மனசு... அவ பட்ட கஷ்டத்தைக் கேட்டப்போ...” பேச்சை நிறுத்தி கண்ணைத் துடைத்துக் கொண்டான்.

அவர் பேசாமல் ஜிகர்தண்டாவை கையில் வைத்தபடி அமர்ந்திருக்க, அவனே தொடர்ந்தான்.

“ம்... உங்களுக்கெல்லாம் என்ன தெரியும்... புருஷன் பொண்டாட்டிக்கு ஒத்துவரலை.... அதனால பிரிவு... இதுதானே.... இதேதான் அவ அம்மாவுக்கும் எங்க வீட்டுக்கும் தெரியும்... ஆனா அவபட்ட வேதனைகள்... வலிகள்... ரணங்கள்... யாருக்கும் தெரியாது மாமா... அது எனக்கு மட்டுந்தான் தெரியும்... என்னோட தோள் சாஞ்சவ சொல்லச் சொல்ல எனக்கு ரத்தக் கண்ணீர் வந்திருச்சு மாமா.... நீங்க பெரியவுக... உங்ககிட்ட எப்படிச் சொல்றது...? கேவலமா நடந்துக்கிட்டு இருக்கான்னு மட்டும் சொல்லிட்டு கடக்க முடியாது மாமா... நீங்க உலகம் புரிஞ்சவங்க.... நாலு நல்லது கெட்டதுக்கு பஞ்சாயத்து பண்ணுறவங்க... அடுத்தவங்க நல்லாயிருக்கணும்ன்னு நினைக்கிறவங்க... உங்ககிட்ட சொல்றது தப்பில்ல மாமா... என்னைத் தப்பா நினைக்காதீங்க..." பேச்சை நிறுத்தி மீண்டும் கண்ணீரை துடைத்துக் கொண்டான். ஒரு நீண்ட பெருமூச்சை வெளியேற்றிவிட்டு தொடர்ந்தான்.

"யமுனா சாதாரண வேதனையை அனுபவிக்கலை... அவ... அவ... தொடையில... மார்பகத்துல எல்லாம் சூடு வச்சிருக்காங்க மாமா... வயித்தைச் சுற்றிலும் சிகரெட் சூடு... இவ்வளவு ஏன் அவ அழகான கால்ல கத்தியால கீறிக்கிறி வச்சிருக்கான்... சாடிஸ்ட்..." கத்தினான்.

சாமிநாதனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை... அவனைப் பார்த்தபோது அவரின் கண்களும் கலங்கியிருந்தன. "ஒரு பொம்பளப்புள்ளய இப்படியெல்லாமா கொடுமப் படுத்துவாங்க... மனுசங்களா... மிருகங்களா... இதை அன்னக்கி நமக்கிட்ட சொல்லியிருந்தா அவங்கள உண்டு இல்லன்னு பண்ணியிருக்கலாமே..."

"செஞ்சிருக்கலாம்... ஆனா எல்லாரோட பரிதாபப் பார்வையும் அவ மேல விழும்... அவளுக்கு அது பிடிக்கலை... அவனுக்கிட்ட இருந்து விடுதலை வேணும்... அம்புட்டுத்தான்.... அவ உடம்புல எத்தனை ரணமிருந்தாலும் சிறகை விரிச்சிப் பறந்தாப் போதும்... கூண்டுக்கிளியா சிறகு ஒடிக்கப்பட்டு அடைபட்டுக்கிடக்க விரும்பலை... அவ உடம்புல இருக்க வடுக்களெல்லாம் இவனுக்கு எப்படித் தெரியும்ன்னு நினைப்பீங்க... இந்த ஆறு மாசமா நாங்க கணவன் மனைவியாத்தான் வாழுறோம்... இது தப்புன்னு நீங்க சொல்லலாம்... தப்புத்தான்... அவபட்ட வேதனைகளை தீர்க்கிற மருந்தா நான் இருக்கணுமின்னு ஆசைப்படுறேன்... என்னோட காதலி... இன்னொருத்தனுக்கு மனைவியானப்போ ஒதுங்கியிருந்தவன், அவ வலிகளோட வந்தப்போ ஆறுதல் மட்டும் சொல்லிட்டு விலக விரும்பலை... அவளை அணைச்சிக்க... வாழ்நாள் பூராம் சந்தோஷமா வச்சிக்க... ஆசைப்பட்டேன். எங்கப்பா சத்தியமா ஒத்துக்கமாட்டாரு... காவேரி அத்த கூட ரொம்ப யோசிக்கும்... அதான் இப்படி ஒரு முடிவு... ரெண்டு நாள் முன்னாடிதான் செக்கப் பண்ணுனோம்... அவ கன்சீவ் ஆயிருக்கா..."

"என்ன மாப்ள இது.... முழுகாம இருக்கான்னு சர்வ சாதாரணமாச் சொல்றே...?  ஒங்க எளமப்பசிக்காக... தப்பு பண்ணிட்டிங்களே... " பதறினார். 

"நீங்க சொல்ற மாதிரி  நான் பண்ணுனது தப்புத்தான் மாமா... ஆனா இது இளமைப்பசி இல்ல மாமா... எங்க வீட்ல ஒத்துக்க வைக்க இதைவிட சரியான வழி வேற எதுவும் இல்லைன்னு எங்களுக்குத் தோணுச்சு... இதுல ரெண்டு பேருக்கும் முழுச் சம்மதம் மாமா..."

"ம்ம்ம்ம்ம்... எது மாப்ள சரி...  என்ன சொல்றதுன்னு தெரியல... பாதிக்கப்பட்டவளுக்கு வாழ்க்க கொடுக்க நெனக்கிற... நெனக்கிற என்ன... கொடுத்த உன்னய நெனச்சா சந்தோசமாத்தானிருக்கு... இருந்தாலும் வேற வேற சாதி, மதம்ன்னாக்கக்கூட இது சரியின்னு சொல்லமாட்டேன்... அப்படியிருக்க ஒறவு மொறக்குள்ள இது ரொம்பத் தப்பு... நீங்க பழகுறீங்கன்னு ஊருக்குத் தெரியும்... ஆனா அவ வயித்துல கொழந்த இருக்குன்னு ஒங்களப் பெத்தவுகளுக்குத் தெரிஞ்சா... நெனச்சிப்பாரு... அதுவும் காவேரி... அவ சின்ன வயசுல இருந்து கஷ்டப்பட்டவ... ஒத்தப் பொட்டப்புள்ளய எப்படி வளத்தா தெரியுமா..? கட்டிக்கொடுத்து அது பட்டுப்போயி வந்தப்போ அவ பட்ட வேதன... சொல்லிமாளாது... இன்னிக்கும் ஒதட்டளவு சிரிச்சாலும் மனசுக்குள்ள தெனம் தெனம் வெந்து செத்துக்கிட்டிருக்கா... அவகிட்ட நீ நேர போயி நாங்கட்டிக்கிறேத்தேன்னு சொல்லி, உன் வீட்டுல சம்மதிக்கலன்னாக் கூட ஊரே நின்னு செஞ்சி வச்சிருக்கும்... இப்ப வயித்துல புள்ளயக் கொடுத்துட்டேன்னு தெரிஞ்சா அவ செத்துருவாளே மாமே... அவ அப்புடிப் புள்ளய வளக்கலையே... அவ வயித்துல பொறந்தது இப்படின்னா... அவள நெனச்சிப்பாத்தியளா..."

"சாரி மாமா... எங்களுக்கு இது சரியான வழியின்னு தெரிஞ்சிச்சு...."

"எது செரியான வழி... இதுவா... படிச்சும் முட்டாளாயிருக்கீங்க... அன்னக்கி உங்காத்தா செத்திருவேன்னு சொன்னதும் காதல விட்ட... இப்ப அதையே மறுபடியும் உங்காத்தா சொன்னா வயித்துல பிள்ளையோட அவள விட்டுட்டுப் போயிடமாட்டேன்னு என்ன நிச்சயம்...? சின்னப்புள்ளய வெள்ளாம வீடு வந்து சேராதுன்னு சொல்வாக... நீங்க பண்ணியிருக்கதும் அப்படித்தான் இருக்கு" சற்றே கோபமாகக் கேட்டார்.

"மாமா... சத்தியமா இனி அப்படி ஒரு காரியம் செய்யமாட்டேன்... யமுனாவுக்காக எதையும் இழக்கத் தயார்..."

"ம்... செரி... இனி உன்னப் பேசி என்னாகப் போகுது... அவ உண்டாகியிருக்கது நமக்குள்ள இருக்கட்டும்... அவ உண்டாகியிருக்கான்னு ஊருக்குத் தெரியுறதுக்கு முன்னால நாம ஒரு முடிவு பண்ணனும்... இந்த வாரம் ரெண்டு பேரும் வாங்க... ரெண்டு வீட்லயும் பேசி ஒரு முடிவு பண்ணி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுவோம்... என்ன உங்கப்பன் குதிப்பான்... கலியாணம் பண்ணுனவளைக் கட்டுறதான்னு கத்துவான்... நானாயிருந்தாலும் கத்தத்தான் செய்வேன்... என்ன செய்ய... காவேரியோட வேதனை போகணும்... அவ பிள்ள தப்பாப் பொயிட்டான்னு ஊரு பேசக்கூடாது... எதாயிருந்தாலும் நா பேசுறேன்... எப்படியும் ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்னி வக்கிறேன்... எம் பேச்சுக்கு ஊருக்குள ஒரு மரியாத இருக்குல்ல... ம்.. பேசுவோம்... எல்லாஞ் செரியாகும்... செரியாக்குவோம்." என்றபடி எழுந்தார் சாமிநாதன். 

******

கொலுசு பிப்ரவரி இதழில் எனது இட்லி என்ற சிறுகதை வெளியாகியிருக்கிறது. படித்து... உங்க கருத்தைச் சொல்லுங்க... 

கதை படிக்க இங்கு சொடுக்குங்க...

படங்களுக்கு நன்றி இணையம்...
-'பரிவை' சே.குமார்.