செவ்வாய், 16 ஜனவரி, 2018

வாழ்வின் வசந்தம் விஷால்


வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நம்மை மகிழ்ச்சியில் திளைக்க வைப்பதுடன் வாழ்வின் மற்றொரு கட்டத்துக்கு நகர்த்திச் செல்லும். அப்படியான நிகழ்வுகளின் பின்னே நாம் வாழ்வில் சாதித்து விட்டோம் என்ற எண்ணத்தைப் பெருமையுடன் எழச் செய்து சாதித்த மகிழ்வை புன்னகையாய் பூக்க வைக்கும்.

படிக்கும் காலத்தில் எந்தக் கவலையும் இன்றி வாழ்க்கை நகரும். என்ன நடந்தா என்ன... அது நல்லதா...கெட்டதா... என்பதெல்லாம் குறித்து ஆராய்வதில்லை... திருவிழாக்கள் எல்லாம் ஒரே ஆட்டம்... ஏதாவது ஒரு இறப்பு என்றால் சோகம் சுமந்து பதறி வரும் முகங்களை வேடிக்கை பார்ப்பதற்காகவே இழவு வீட்டின் முன்னே காத்திருக்கச் சொல்லும் அவ்வளவே... மற்றபடி எந்த மகிழ்வையும் எந்தக் கவலையையும் அதிக நேரம் சுமப்பதில்லை... அடுத்தடுத்து கடந்து போய்க் கொண்டே இருப்பதிலேயே மனசு குறியாக இருக்கும். 

வெட்கமா அப்படின்னா என்ன என்று கேட்ட வைத்த வயதில் எதை நோக்கி நாம் பயணிக்கப் போகிறோம் என்பதைக் குறித்தெல்லாம் சிந்தனை வருவதில்லை. பள்ளியில் மழை வருவது போல் இருந்தால் கிராமத்துப் பிள்ளைகள் போகலாம் என்றதும் புத்தகப் பையை தலைமை ஆசிரியரின் அறையில் வைத்து விட்டு மறக்காமல் சத்துணவுத் தட்டை எடுத்து தலையில் கவிழ்த்துக் கொண்டு நடந்த நாட்களில் இந்தப் பத்தியின் ஆரம்பத்தில் சொன்ன வெட்கம் என்பது இல்லவே இல்லை.

வெட்கம், வேதனை, வருத்தம், மகிழ்ச்சி, வாழ்வு குறித்தான அடுத்த கட்ட நகர்வுகள், பயம் என எல்லாமே குடும்பஸ்தனாய் மாறிய பின்னர்தான் அதிகமாகின்றன இல்லையா...? தனிக்காட்டு ராஜாவாகத் திரிந்தவனை மனைவி என்ற ஒருத்தி வந்த பின் தன்னை நம்பி ஒரு ஜீவன் வந்திருக்கு... இதுவரை எப்படியோ நகர்ந்த வாழ்வில்... அப்பாவின் சம்பாத்தியத்தில் நகர்ந்த வாழ்வில்... செலவுக்கு அப்பாவிடமோ அம்மாவிடமோ நைச்சியமாகப் பேசி வாங்கி செலவு செய்த நிலையில் மனைவிக்குப் பூ வாங்க அம்மாவிடமா பணம் கேட்க முடியும் என்ற யோசனை தோன்ற வாழ்வில் முதல் முதலாய் தன்னை நம்பி வந்தவள் மனம் கோணாது நடக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்க ஆரம்பிக்கும் இல்லையா... அதுதான் வாழ்வின் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கான ஆரம்பம்.

இப்ப எதுக்கு வேதாந்தம் அப்படின்னு நினைக்கிறீங்களா...? வேதாந்தம் இல்லைங்க... எல்லாம் காரணமாத்தான்... எப்படி ஆரம்பிப்பது என்பதாய் எழுந்த எண்ணத்தின் முடிவில் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் என இப்படியாய் ஆரம்பித்தேன் அவ்வளவே.

வெளிநாட்டு வாழ்க்கையில் ஊருக்குப் பேசும் அந்த சில மணித்துளிகளே சந்தோஷத்தைத் தரும் என்பதை அனுபவித்தவர்கள் கண்டிப்பாக உணர்ந்திருப்பார்கள். இன்றைய நிலையில் வீடியோவாய் பார்த்துப் பேசுவது என்பது வரப்பிரசாதமே. ஸ்கைப்பில் மணிக்கணக்கில் பேசி... மகிழ்வாய்... கோபமாய்... என எல்லா அவதாரமும் எடுத்து பேசி.. மனைவி, குழந்தைகளுடன் அளவளாவி முடித்து வைத்து சாப்பிட்டுப் படுக்கும் போது மனசுக்கு ஒரு நிம்மதி.

அப்படியான நிம்மதிக்கும் இங்கு ஆப்பு வைத்து விட்டார்கள். ஸ்கைப்பையும் முடக்கி விட்டார்கள். இவர்கள் ஒரு ஆப் தருகிறார்கள். மாதம் 50 திர்ஹாமுக்கு ரீசார்ஜ் பண்ணிக் கொள்ள வேண்டும். இந்த ஆப்பை ஊரிலும் தரவிறக்கிக் கொள்ள வேண்டுமாம். சிலர் அது நல்லாயிருக்கு என்கிறார்கள்... பலர் சரியில்லை என்கிறார்கள். 2018 பிறந்த உடனே வரியும் இது போன்ற முடக்கமும் மொத்தமாய் எல்லாரையும் முடக்கி வைத்து விட்டது. 

தினமும் விஷாலுடன் எதாவது பேசுவது மனசுக்கு நிம்மதியாய் இருக்கும். அவனைப் பொறுத்தவரை அடுத்தடுத்து வார்த்தைகளில் விளையாடுவதில் கில்லாடி. அது எங்க குடும்பத்துக்கே உரியது. எங்கம்மா சிரிக்காமல் படக்கென பதில் சொல்வார். அதேபோல்தான் இவனும்... தரித்திரமில்லாமல் பேசுது பாருங்க என்று சொல்லும் மனைவி,  உங்க வாரிசு எப்படியிருக்கும் என்று சேர்த்தும் சொல்வார்.

பாப்பா வயிற்றில் இருக்கும் போது நாங்கள் ஒரு சிறு வீட்டில் வாடகைக்கு இருந்தோம். தேவகோட்டை கல்லூரியில் வேலை. மற்றவர்கள் வந்து பார்த்துச் சென்றாலும் ஒன்பதாவது மாதம் வரை நான்தான் பார்த்துக் கொண்டேன். பாப்பா பிறந்தது மதுரையில்... மனைவிக்கு ஆபரேசன் என்ற போது ஏற்பட்ட படபடப்பின் பின்னே கண்ணீர் பெருக்கெடுத்தது.

விஷாலைப் பொறுத்தவரை, அவன் வயிற்றில் இருக்கும் போது என்னை அபுதாபிக்கு விரட்டி விட்டுட்டான். காரைக்குடியில் வாடகை வீட்டில் வாழ்க்கை. பாப்பாவும் மனைவியுமாய் தனியாய்... பக்கத்தில் மனைவியின் சித்தி வீடு என்பதால் அவர்கள் பார்த்துக் கொண்டார்கள். மனைவியின் ஆயாதான் அதிகம் எங்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொண்டவர்கள். 

காரைக்குடியில்தான் பிறந்தான் விஷால்... என்ன நேரத்துல பிறந்தியோ என்று திட்டினால் ஜனவரி-17 என்று சொல்லுவான். ஆம் இன்று அவனின் பிறந்தநாள். அவன் பிறந்த அன்று  செய்தி போன் வழியாக வந்த போது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அருகிருக்க முடியவில்லையே என்ற வலியும் கூடவே இருந்தது. மனைவிக்கு இரண்டாவதாய் ஆபரேஷன்... ரொம்பக் கஷ்டமாக இருந்தது.

ஆச்சு 9 வருடங்கள்... வெளிநாட்டு வாழ்க்கை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. எப்போது ஊரில் போய் செட்டிலாவது என்ற எண்ணத்தைச் சில நாட்களாக மனசுக்குள் இன்னும் தீவிரமாக்கி  நகர்கிறது. இன்று கூட உங்களைப் பொங்கலுக்கு வரச் சொன்னேனுல்ல ஏன் வரலை என்று சண்டை போட்டான்.

சில நாட்கள் முன்னர் விழுந்ததில் காலில் சின்னதாய் ஒரு கிராக் என்றாலும் மிகப்பெரிய கட்டிட்டு நடக்காமல் இருந்தவன், பொங்கலுக்காக கட்டை சிறியதாகப் போட்டதால் கொஞ்சம் நடந்து திரிந்திருக்கிறான். நடக்காதடா என்று சொல்லும் போது அலோ... அலோ.... கேக்கலையே... என்று சொல்லி போனை அவங்க அம்மாவிடம் கொடுத்துவிட்டு எஸ்கேப் ஆனான். இது இன்றும் நேற்றும் பல முறை நிகழ்ந்தது.

சுறுசுறுப்பானவன்... துறுதுறுப்பானவன்... வேகமானவன்... எல்லா வேலைகளையும் நான் செய்கிறேன் என முன் நின்று செய்ய நினைப்பவன்... ஒன்பது வயது கடந்து பத்தாவது வயதில் அடியெடுத்து வைக்கிறான். ஆண் பிள்ளைகள் அம்மா பிள்ளை என்பார்கள்... இவனோ அப்பா பிள்ளை... தினமும் அவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேசாவிட்டால் அந்த நாள் வெறுமையாய் நகரும்.

எம்.ஜி.ஆர். பிறந்தநாளில் பிறந்தவன் என்பதால் தகதன்னு இருப்பான்னுல்லாம் சொல்லலை ஆனால் எங்களை விட அவன் கலர் சற்று தூக்கல்தான்... அடிக்கிற சிவப்பில்லை என்றாலும் அழகான சிவப்புத்தான் அவன். எல்லாருக்கும் பிடித்தவனாய் இருப்பது கடினம்... இப்போது அவன் எல்லாருக்கும் பிடித்தவனாய் இருக்கிறான். இப்போது போல் எப்போதும் இருக்க வேண்டும்... அதற்கு இறையருள் வேண்டும்.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் செல்லம்...

எங்க அன்பு மகனுக்கு உங்களின் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் வேண்டி...
-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

  1. விஷாலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்வில் எல்லா நலனும் பெற்று சிறந்து விளங்க வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. தங்களின் அன்பு மகனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. மகிழ்ச்சி..
    அன்பின் நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. விஷாலுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகளும்...

    பதிலளிநீக்கு
  5. விஷாலுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  6. விஷால் குட்டிக்கு எனது அன்பு வாழ்த்துக்களும்...

    என்றும் மகிழ்வோடும், அன்போடும், சிறப்போடும் அவர் மலர்ந்து மணம் வீசட்டும்....

    பதிலளிநீக்கு
  7. ஒரு பாசக்கார தந்தையின் பரிதவிப்பு மனதை நெகிழ்த்தியது. தைரியமாக இருங்கள் குமார்! உங்களின் குடும்பத்தின் நல்வாழ்க்கைக்காகத்தானே இங்கே வந்து தனித்திருக்கிறீர்கள்! கவலைப்படாதீர்கள்! காலம் எல்லாவற்றையும் நல்ல விதமாக மாற்றும்!

    அன்பு மகனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  8. குழந்தைகளின் சின்ன சின்ன விஷமங்கள் நினைத்துப் பார்க்கும்போது மனம் மகிழவைக்கும்

    பதிலளிநீக்கு
  9. எல்லாவேலைகளையும் நான் பார்த்துகிறேன் சொல்லுகிற உங்கள் அழகு மகன் விஷாலுக்கு என்றென்றும் எல்லோருக்கும் இனியவனாய் இருக்க பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. உங்கள் அன்பு மகனுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள். குடும்பத்தைவிட்டு விலகி தூரத்தில் வாழ்வதில் உள்ள மனச்சுமையை உங்கள் எழுத்துகள் உணர்த்துகின்றன.

    பதிலளிநீக்கு
  11. தவறவிட்டுவிட்டோம் குமார். விஷாலுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்! வாழ்த்துகள் சொல்லுவதற்கு நாளென்ன கிழமை என்ன!! இப்பவே பொறுப்பாக இருப்பார் போல!! தாமதமான பிறந்த நாள் வாழ்த்துகள்!!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி