ஞாயிறு, 14 ஜனவரி, 2018

நினைவிலே கரும்பு - அகல் பொங்கல் சிறப்பிதழ் கட்டுரை

என் உறவுகளுக்கும் நட்புக்களுக்கும் இனிய 
பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
(எங்க முனியய்யா கோவிலில் பொங்கல் வைக்கும் போது மனைவி எடுத்து அனுப்பிய போட்டோ)

நினைவிலே கரும்பு
 ரும்பு...

இதில்தான் எத்தனை வகைகள் செங்கரும்பு... ராமக்கரும்பு... ஆலைக்கரும்பு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவையாய்

சிறுவயதில் கரும்பு என்ற வார்த்தையே இனிக்கத்தானே செய்தது நமக்கு.

பொங்கல் என்பது இனிப்பின் சுவையுடன் கரும்பின் சுவை உணர்த்தும் ஒரு பண்டிகைதான் இல்லையா...

கிராமங்களில் தீபாவளியை விட பொங்கலுக்கே மிகுந்த முக்கியத்துவம் உண்டு. காரணம் விவசாயியின் மகிழ்வின் விளைச்சல்தானே பொங்கல். புத்தரிசி... கலப்பை... மண்வெட்டி... உலக்கை... மாடுகள்... பொங்கலின் சுவையில் எல்லாமே விவசாயம் சார்ந்தவையாய் இருக்கும். 

சந்தோஷத்தின் மொத்தக் குத்தகையில் தீபாவளிக்கு பட்டாசு... மாரியம்மன் திருவிழாவுக்கு கரகம், கரகாட்டம்... சிவராத்திரிக்கு காவடி, பொரி உருண்டை... தேரோட்டத்துக்கு மாம்பழம்... என பகுக்கப்பட்டிருப்பதின் தொடர்ச்சியாய் பொங்கலுக்கு மஞ்சுவிரட்டு, செங்கரும்பு என்பதாய் எப்போதும்.

பொங்கல் வருவதற்கு முன்னர் கார்த்திகை, மார்கழியிலேயே வாரச் சந்தைக்கு வந்து விடும் கரும்பு... பொங்கல் முடிந்த பின்னரும் சில வாரங்கள் சந்தையில் களமாடும். பள்ளிக்கூட வாசலில் மிட்டாய் கடை விரித்து வைக்கும் ராஜாத்தி அக்காவின் கடையில் ஒரு சாக்கில் புதிதாய் படுத்திருக்கும் சிறிது சிறிதாக வெட்டப்பட்ட கரும்பு.

சந்தைக்குச் செல்லும் அம்மா காய்கறிகள், மீன் எனப் பிடித்து வரும் சந்தைச் சாமான் கூடையில் நாலைந்து துண்டுகள் கரும்பு சிரித்துக் கொண்டிருக்கும். தூரத்தில் வரும்போதே தலைகாட்டும் கரும்பின் சுவை நாக்கில் தெரிய கண்கள் சிரிக்கும்.

ஆளுக்கொன்றாய் அம்மா கொடுக்க, அடிக்கரும்புக்குத்தான் சுவை அதிகம் என்பதால் தம்பிக்கும் எனக்கும் மல்யுத்தம் நடப்பதுண்டு. அக்கா கொடுப்பதைச் சுவைக்கும். சட்டையில் வடியாம தின்னுங்கடா... கறை புடிக்கும் என்ற அம்மாவின் கத்தல் சட்டை செய்யப்படாது. சட்டையில் முத்து முத்தாய் சிதறியிருக்கும் கடித்த கரும்பின் நீர் கறையானால் என்ன என்பதாய் நக்கல் செய்யும்.

மேல்நிலைப் பள்ளி காலத்தில் நான், அக்கா, தம்பி என நாங்கள் மூவருமே ராஜ்ஜியத்தில்... மற்றவர்களில் ரெண்டு அக்கா திருமணம் முடிந்து... அண்ணன்களோ சம்பாத்தியத்தின் பின்னே... பெரியண்ணனின் வரவு கரும்புடனும் எங்களுக்கான உடைகளுடனும் இருக்கும் என்றாலும் மாட்டுப் பொங்கல் முடிந்த பின் வருவதே அவருக்கு வாடிக்கையாய்.

பள்ளி நாட்களில் பொங்கலுக்குச் சாமான் வாங்க ஆரம்பிக்கும் அப்பா எப்போது கரும்பு வாங்கி வருவார் என்ற காத்திருப்பு மனசுக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கும்.  பெரும்பாலும் பொங்கல் சிறப்புச் சந்தை தினமே வீட்டுக்கு கரும்பின் வரவு தினமாய் இருக்கும்.

அடுத்தடுத்த வீடுகளில் கரும்புக் கட்டு வந்து இறங்கும் போதெல்லாம் 'அவுக வீட்டுல கரும்பு வாங்கிட்டாங்க...’ ‘இவுக வீட்டுல கரும்பு வாங்கிட்டாங்க' என்ற வார்த்தைகள் வாய்க்குள்ளயே வண்டியோட்டும். சத்தமாகக் கேட்டு அம்மாவிடம் திட்டோடு அடியும் வாங்க வேண்டியிருக்குமே என்பதால் வார்த்தைகள் வலுவிழந்த புயலாய்த்தான் வரும்.

ஒரு கட்டுக் கரும்பு... பள்ளிக்காலத்தில் பனிரெண்டு கரும்பு கட்டுக்கு என்றிருந்தது பின்னாளில் பத்தாகிப் போனது... எல்லாம் முதலாளித்துவம் என்பதுடன் லாப நோக்கமே பிரதானமாய்.

ஒரு கட்டுக் கரும்பை சைக்கிள் ஹாண்ட்பாரில் கட்டி, பின்னால் ஹேரியரோடு கட்டப்பட்ட அதன் தோகை ரோட்டில் இழுபட, அப்பா சைக்கிளை ஓட்டிக் கொண்டு வரும்போது கொல்லைக் காட்டில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் மனசுக்குள் செங்கரும்பு இனிக்க 'டேய்... எங்கப்பா கரும்பு வாங்கிட்டுப் போறாங்கடா...' என்று குதூகலமாய்ச் சத்தமிடச் சொல்லும்.

அப்படி நாம் பார்க்கத் தவறிய நாட்களில் எவனாவது ஒருத்தன் 'டேய் உங்கப்பா ஒரு கட்டுக் கரும்பு வாங்கிட்டுப் போறாருடா' என்று கத்துவான். அவன் குரலில் ஒரு கட்டு என்பது ஆச்சர்யத்துடனும் மிகுந்த அழுத்தத்துடனும் வரும். அதன் பின்னான நாட்களில் மாடு மேய்க்கப் போகும் போது எப்பவும் போல் துண்டும் சிறிய மூங்கில் கம்பும் கையிருக்க  புதிதாய் நீளமாய் வெட்டிய கரும்பும் சேர்ந்து கொள்ளும். அதில் யாருக்கேனும் மரத்தில் அடித்து ஒடித்துக் கொடுக்கப்படும். பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் படிச்சிருக்கோமே... நடைமுறைப் படுத்தலைன்னா எப்படி.

மாடு மேய்த்து வீட்டுக்குப் போகும் போது தோகையெல்லாம் வெட்டி விட்டு திண்ணையில் இரண்டு உத்தரங்களுக்கு இடையே வரிசையாக போட்டு வைத்திருப்பார். டேய் கரும்பெடுத்து வெட்டிச் சாப்பிடுங்கடா என்று சொன்னதும் ஆமா வந்ததும் வராததுமாய் உடனே திங்கணுமாக்கும்... அப்புறம் திங்கலாம் என அம்மா சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஒரு கரும்பு ஆளுக்கு ரெண்டு மொளி என வெட்டப்பட்டு கடித்து இழுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்... நடுநாயகமாய் குப்பைத் தகரமும் சக்கைகளைச் சுமக்க... எனக்கு ரெண்டு மொளி வெட்டுங்கடா என அப்பாவும் இணைந்து கொள்வார்.

கரும்பு தனியே தின்பதில் என்ன சுகம் வந்து விடப் போகிறது. எல்லாருமாய் கோவிலில் கூடி தின்பதில்தான் மொத்த சுகமும் அடங்கியிருக்கும். நாம் ரெண்டு மொளி வெட்டிக் கொண்டு போனால் மற்றவர்கள் நாலு மொளி வெட்டி பெரிய தடிபோல் கொண்டு வந்து தின்ன ஆரம்பிப்பார்கள். நாம சீனி வெடி போடும் போது சிலர் சாணிக்குள் அணுகுண்டு வைப்பது போல. மாரியம்மன் கோவிலைச் சுற்றி கரும்புச் சக்கைகள் மல்லிகைப் பூவை இரைத்ததுபோல் கிடக்கும்... என்னை விடுடா என்று அது கதறும் வரை மெல்லப்படும் சக்கைகள் சற்றே மஞ்சள் கலந்த பூவாய்.

Image result for கரும்பு

பெரும்பாலான வருடங்களில் தை மாதத்தில் வயல்களில் அறுவடைக்குத் தயாராய் வயலில் தண்ணீர் காய வேண்டிய நிலையில் கதிர் தன் தலை சாய்த்து ஆடிக் கொண்டிருக்கும். ஒரு சில வருடங்களில் மட்டுமே பொங்கலுக்கு முன்னர் கதிர் அறுப்பு முடிந்திருக்கும். கதிர் அறுக்காத காலத்தில் வீட்டுப் பொங்கலன்று பிள்ளையார் பிடிக்க அருகம்புல்லும் பொங்கப்பானையில் கட்ட நெல் கருதும் வயலில் போய் பறித்து வருவோம்.

தொலைக்காட்சிகள் பொங்கலை நடிகர் நடிகையோடு கொண்டாட ஆரம்பித்த போது அருகம்புல்லும் நெல் கருதும் பறிக்கச் செல்ல முக்கலும் முணங்கலும் கூடியதையும் நீ போ மாட்டியா நாந்தான் போகணுமாவென சண்டைகள் முளைத்ததையும் சொல்லித்தான் ஆகவேண்டும். சாணியில் பிடித்து அருகம்புல் தலை சூடிய பிள்ளையாருக்கு முன்னே கரும்பும், கிழங்கும் இடம் பிடித்துக் கொள்ளும். பொங்கல் வைத்து இறக்கியதும் அந்தக் கரும்புக்கு ஒரு நாய்ச் சண்டையே நடக்கும்.

வீடு வாசலில் அதிகாலை எழுந்து அக்கா போட்ட சிரிக்கும் பொங்கல் கோலத்தில் கரும்பும் கலராய்த் தெரியும். அதற்கு கலர் கொடுத்தவன் நாந்தான் என்பதில் சந்தோஷம் மிளிரும். மறுநாள் மாடு போட்டு கலர் கொடுப்பதுண்டு. மாடு வரைவதில் என்னைவிட தம்பி கில்லாடி. அவனின் மாட்டுக்கே மவுசு அதிகம்.

வீட்டுப் பொங்கல் சாதாரணமாகக் கழிய மாட்டுப் பொங்கலே விஷேச தினமாய் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும்...

மாட்டுப் பொங்கலன்று மாட்டுக்கு புது மூக்கணாங்கயிறு போட்டு, தண்ணீர் நிறைந்து கிடக்கும் கண்மாயில் மாடுகளை நீச்சி... அதுவும் வாலைப் பிடித்து தண்ணீருக்குள் நீஞ்ச வைப்பதில் நமக்கும் மாட்டுக்கும் சந்தோஷமும் சுகமும் கூடுதலாய்...

மாட்டைக் குளிப்பாட்டியதும் கண்மாய்க்குள் வின்னி மரமும் பூவரச மரமும் பிண்ணிப் பிணைந்து கிடக்க, அருகே நின்ற முனியய்யாவின் குங்குமத்தை எடுத்து மாட்டுக்கு பொட்டிட்டு... அதுவும் அழகழகாய் வைத்து வீட்டுக்குக் கொண்டு வந்து புதுக்கயிறு போட்டு... கழுத்தில் துண்டு கட்டி தயாராக கட்டி வைத்திருப்போம்.

பலர் சிறு துண்டுக் கரும்பை ரெண்டாய் வெட்டி கயிற்றில் கட்டி, அதனிடையே பனங்கிழங்கும் இணைத்து மாட்டின் கழுத்தில் கட்டி வைத்திருப்பார்கள். காவியைக் கலந்து கையை அதில் நனைத்து மாட்டின் மீது கைக்கோலம் போட்டு வைப்பார்கள். கொம்புக்கு காவி அடிப்பார்கள். எங்களுக்கு காவி அடிப்பதும் கரும்பு கட்டுவதும் எப்போதும் பிடிப்பதில்லை. அதனால் கொம்புக்கு எண்ணெய் தேய்த்து வழவழப்பாக வைப்பதுடன் சரி.

ஊர் கூடி பொங்கல் வைக்கும் இடத்தில் பொங்கக் குழி தாண்டவும் திட்டிக்குழி சோறு தீட்டவும் மாடுகளைக் கொண்டு வந்து மரத்துக்கு மரம் கட்டி வைத்திருப்போம்... இந்தச் சோறு கேலிக்கார உறவு முறைக்குள்ளும் தீட்டிக் கொள்ளப் படுவதும் உண்டு. அதுவும் வரமிளமாய் மட்டுமே கையில் எடுத்து முகமெல்லாம் தீட்டப்படுவதும் உண்டு. 

கட்டப்பட்டிருக்கும் மாட்டின் கழுத்தில் இருக்கும் கரும்புகளும் கிழங்குகளும் களவு போகாமல் பார்த்துக் கொள்வதற்கென சிலர் மாட்டிடமே நிற்பார்கள். அப்படியும் அவர்கள் அசந்த நேரத்தில் அது களவாடப்படும். யார் கையில் கிடைக்கிறதோ அவர் அதை மற்றவர் முன்னிலையில் வைத்துச் சுவைத்துச் சாப்பிடும் போது பார்த்துக் கொண்டிருப்பவரின் தொண்டைக்குள் கரும்பின் சுவை மெல்ல இறங்கும் உமிழ் நீராய்.

பொங்கல் முடிந்த பின்னரும் இரண்டு மூன்று நாட்களுக்கு கரும்பு தின்னும் நாட்களாய்த்தான் இருக்கும்... கரும்பை மென்று... மென்று... வயிறெல்லாம் தண்ணீராய் நிறைந்து நிற்கும்... சாப்பாடு வேண்டாமெனச் சொல்லி திட்டு வாங்க வைக்கும்.

தெரியாத வயதில் அறியாமல் கரும்பைத் தின்றதும் தண்ணீரைக் குடித்து வாயெல்லாம் வெந்து போய்க் கிடந்ததும் உண்டு. அதே போல் தோகையை கையில் எடுத்து இழுத்து அதிலிருக்கும் சொணையானது கையெல்லாம் முள்ளு முள்ளாய் ஓட்டிக்கொள்ள அவஸ்தைப் பட்டதும் உண்டு.

கரும்பெல்லாம் முடிந்த பின்னர் கரும்பைத் தேடும் வாய்க்கு வேண்டாமென ஒதுக்கிப் போட்ட தூர்க்கரும்பும் தோகைப் பக்கம் இனிக்காதென வெட்டிப் போட்டவையும் தேடிப் பிடித்து சுவைப்பவையாய் அமையும்.

பள்ளி நாட்களில் ஒரு கட்டுக் கரும்பு பத்துவதில்லை... இன்னும் வேண்டும்... இன்னும் வேண்டுமென மனசு சொல்லும். அதுவே காலங்கள் மாற, ஆறு கரும்பு போதுமா என்பதில் ஆரம்பித்து நாலு போதுமுல்ல... யார் இங்க திங்கிறா என்றாகி ஒரு கட்டத்தில் கரும்பு விக்கிற விலையில ஒரு கட்டு வாங்க முடியுமா..? என்ற சொல்லோடு இரண்டில் வந்து நின்றது.

அக்காக்கள் அண்ணன்களின் குழந்தைகளுக்கு கரும்பை வெட்டிக் கொடுக்கும் போது அதை நாலாக வெட்டித் தோலை உறித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொடுப்பதுண்டு. அப்படித் தின்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி... அதில் சில துண்டுகளை நம் வாய் விரும்புவதில் நமக்கும் மகிழ்ச்சி.

கரும்பைக் கடித்து இழுத்த இழுப்பில் ஆடிக் கொண்டிருந்த பல் விழுந்த அனுபவமெல்லாம் உண்டு. அளவுக்கதிகமாகத் தின்று புளிச்ச ஏப்பம் வர வயிறு சரியில்லை என படுத்திருந்த நாட்களும் உண்டு.

மாடு மேய்க்கச் செல்லும்போது செட்டியார் தோட்டத்தில் ஆலைக் கரும்பை களவாண்டு தின்ற களவாடிய பொழுதுகளும் ஞாபகச் சுவற்றில் இன்னும் அழியாமல்.  கரும்பு மட்டுமா... எவ்வளவு இளநீர்... ஓடி ஓடி வந்து குடித்த நாட்கள் எளிதில் மறந்துவிடுமா..?

அப்பா வெளியூரில் இருந்த காலத்தில் அம்மா சந்தைக்கு நடந்து போக சலிப்படைந்த தினங்களில் பழகும் போது முழங்காலில் பெற்ற காயம் தழும்பாக இருந்தாலும் சைக்கிளை தலை கீழாக ஓட்ட அறிந்து வைத்திருந்த நாமே சந்தையில் காய்கறி வாங்கும் பாக்கியவானாய்... அன்று பழகியதுதான் இன்று கை கொடுக்கிறது.

கரும்பு வாங்குவதும் நாம்தான் என்றான நாட்களில் ஒரு கட்டுக் கரும்பை அப்பாவைப் போல் ஹேண்ட்பாரில் கட்டி, சைக்கிளை ஓட்டிக் கொண்டு வந்த போது இருந்த மகிழ்ச்சியை என்னவென்று சொல்வது. கரும்புக் கட்டோடு சரளை ரோட்டில் சைக்கிள் சரச்சரவென பயணிக்கையில் சைக்கிளை மிதிக்கும் காலில் ஒரு மிதப்பு இருக்கும். அதை அனுபவித்தவர்களுக்கு அதன் சுவை அறியும்.

கல்லூரியில் படிக்கும் போது நண்பனுடன் சேர்ந்து கரும்புக் கடை போடலாம் என முயற்சி செய்து பின் நமக்கு சரி வராது என ஒதுங்கிய நிலையில் தன் சொந்தங்களுடன் நண்பன் ஒரு லாரி கரும்பை இறக்கினான் விற்பனைக்காக... 

மூங்கில் கம்புகள் கட்டப்பட்டு அதில் சாய்ந்து கரும்புகள் தோகை விரித்து ஆடிய அந்த கரும்புக் கடையில் கேஷியராய் அமர்ந்து பணத்தை வாங்கி சாக்கிற்குள் போட்டு சில்லரை கொடுத்து... அது ஒரு கானாக்காலம்... வீட்டுக்குச் செல்லும் போது நாப்பது ரூபாய் மட்டும் கொடுத்து நல்ல கரும்பாய் பத்தையெடுத்துக் கட்டிக் கொண்டு போக வாய்த்த தருணம் நினைவில் என்றும் அழியாதது.

தீபாவளிக்கு எப்படி வெடித்த வெடியின் பேப்பர்கள் இறைந்து கிடக்குமோ அப்படித்தான் கடித்துத் துப்பிய கரும்புச் சக்கைகள் ஊரெங்கும் நிறைந்து கிடக்கும். இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்காக்கள் கோவிலைச் சுற்றிக் கூட்டி அள்ளி தீவைத்து சுத்தம் செய்வார்கள்.

கரும்பின் அடிப்பாகத்தை ஊன்றி வைத்து தண்ணீர் ஊற்றி கரும்பு வளர்த்ததும் உண்டு... அது கொஞ்ச நாள் பச்சை காட்டி பின் நம் ஆசையில் மண்ணள்ளிப் போட்டு  காய்ந்து போனதும் உண்டு.

கரும்பென்றால் எத்தனையோ நினைவுகளை நம்முள்ளே சுவையாய் இறக்கிச் செல்லும். இப்போது பொங்கலுக்கு ஊருக்குப் போவதில்லை என்பதால் கரும்பின் சுவை கைவிட்டுப் போய்விட்டது.  கரும்பின் மீதான காதலால் ஊருக்குப் போகும் போது கரும்பு ஜூஸ் விற்கும் வண்டியைப் பார்த்தால் நம் வண்டி மெல்ல அதனை நோக்கி நகரும். ஒரு கிளாஸ் குடிக்கலாம் என்ற ஆசை இரண்டு கிளாசிலோ மூன்று கிளாசிலோ தழும்பி நிற்கும்.

இங்கும் கரும்புத் துண்டுகள் விற்பனைக்கு வருகின்றன. ஒரு கட்டுக் கரும்பு சாப்பிட்டவனுக்கு ஒரு மொளிக் கரும்பு என்பது பெரியதாய்த் தெரியும் என்றாலும் யானைப்பசிக்கு சோளப்பொறி என்பதாய்தான் தோன்றும். அதைவிட அதன் விலை நம்மை மெல்ல விலகிப் போகச் சொல்லும். செங்கரும்பின் சுவை தந்த சந்தோஷ நாட்களை மனசுக்குள் சுமந்தபடி கரும்பைக் கடந்து நடந்து விடுவேன்... கரும்பு அந்த இடத்திலே இருக்கும் யாரேனும் தன்னை கூட்டிப் போவார்கள் என்ற ஆவலுடன்.

இங்கு எல்லாம் கிடைக்கும் என்றாலும் விலைதான் நம்மை வியக்க வைக்கும்... ஊரில் நொங்கு வெட்டி கூடைக் கணக்காய் குடித்து மகிழ்ந்திருப்போம்... இங்கு ஒரு நொங்கின் விலை ஊரில் ஆயிரம் ரூபாயாய்.... எல்லாமே இப்படித்தான் என்பதால் நாம் பார்வையாளனாய் கடப்பதும் ஒரு சுகமே.

செங்கரும்பின் சுவை அறியாத நாவுண்டோ...?

செங்கரும்பின் பின்னே எத்தனை நினைவுகள் இனிப்பாய்... சுவையாய்... பேசினால் இன்னும் சுவைக்கலாம் செங்கரும்பாய்... 
-'பரிவை' சே.குமார்.


3 கருத்துகள்:

  1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. பொங்கலோ பொங்கல்..
    பொங்கலோ பொங்கல்!..

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரர் குமார்!

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், சுற்றம், நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய தைத்திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி