செவ்வாய், 5 டிசம்பர், 2017

திருமண ஒத்திகைக்கு என் அணிந்துரை

பாக்யாவில் வெளிவந்த குடந்தை ஆர்.வி.சரவணன் அண்ணன் அவர்களின் தொடர்கதையான 'திருமண ஒத்திகை', அவரின் இரண்டாவது நாவலாக சமீபத்தில் இயக்குநர் கே.பாக்யராஜ் அவர்களால் வெளியீட்டு விழாக் கண்டது. அந்த நாவலுக்கு நான் எழுதிய அணிந்துரையை இங்கு பகிர்ந்திருக்கிறேன். வாசித்து தங்கள் கருத்தைச் சொல்லுங்க.

****

ர் பெயரை தன் பெயரோடு இணைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களோடு நட்பு கொள்வதில் எனக்கு எப்போதுமே அலாதி பிரியமுண்டு. நான் இங்குதான் பிறந்தேன்... இப்படித்தான் வளர்ந்தேன் என்று சொல்பவர்கள் மீது தானாகவே அன்பு ஒட்டி கொள்கிறது. அப்படித்தான் குடந்தையூர் தளத்தில் எழுதி வரும் ஆர்.வி.சரவணன் அண்ணனும் எனக்குள் ஒட்டிக் கொண்டார். 

உன்னோட எழுத்தை ஆயிரம் பேர் வாசிக்கலைன்னு நினைக்காதே... வாசிக்கிற பத்துப் பேரை அது தனக்குள்ள இழுக்குதா... அதுதான் எழுத்து... அப்படியான எழுத்து  உங்கிட்ட இருக்கு... அந்த எழுத்து எப்பவும் வாழும்... அதனால புகழுக்காக எழுதாமல் ஆத்ம திருப்திக்காக எழுது' அப்படின்னு என் நண்பன் சொல்லுவான். அப்படியான எழுத்துக்கு சொந்தக்கார்ர் இவர். ஒரு சிறுகதையையோ அல்லது நாவலையோ எழுதும் போது அதன் காட்சிகளை திரைக்கதையாக விரிக்கும் தனித்தன்மையை இவரின் எழுத்தில் பார்க்க முடியும்.

கதைக்குத் தேவையான சில கதாபாத்திரங்களை மட்டும் வைத்து எழுதப்படும் கதைகளே சிறப்பாய் அமையும். கதாபாத்திரங்கள் பேசுவதாய் அமைவதைவிட முக்கிய கதாபாத்திரத்தைச் சுற்றி கதையை நகர்த்தி, நிறைய இடங்களில் காட்சிப்படுத்தினால் கதை சிறப்பாக அமைந்து படிப்பவர்களையும் ரசிக்க வைக்கும்' என்று எனது கல்வித் தந்தையான பேராசான் மு.பழனி இராகுலதாசன் அடிக்கடி சொல்வதுண்டு. அப்படியான கதைகளை வாசிக்கும் போதெல்லாம் அதனுள் பயணிக்கும் கதாபாத்திரங்களோடு நானும் பயணித்த அனுபவத்தை உணர்ந்திருக்கிறேன்.

அப்படியான கதை நகர்த்தலோடு கதாபாத்திரங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தியிருக்கும் ஆசிரியர், அவர்களை அழகாக வெளியேற்றி சில இடங்களில் மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தி வாசிக்கும் நம்மை மெல்ல மெல்ல வசீகரித்து கதையோடு ஆழ்ந்து பயணிக்க வைத்து விடுகிறார். இன்று நிச்சயம் செய்த உடனேயே பெண்ணும் மாப்பிள்ளையும்  செல்போனில் மணிக்கணக்கில்  பேச ஆரம்பித்து விடுகிறார்கள். மேலும் வாட்ஸ்அப்முகநூல் என ஏகப்பட்ட வசதிகள் வேறு. இன்றைய இளம் தலைமுறைக்கு சொல்லவா வேண்டும்..? அவையெல்லாம் இந்த நாவலில் இடம் பிடித்திருக்கிறது.

திருமண ஒத்திகைஎன்னும் இந்த நாவலை முக்கோணப் பார்வையில் எழுதியிருக்கிறார். முதல் ஐந்து அத்தியாயங்கள் நாயகன் வருணின் பார்வையில், ஜாலியான குடும்பம்... இளமைத் துள்ளல்... நட்பு... நிச்சயித்த பெண்ணுடன் சந்தோஷமாக நகரும் நாட்கள்... முகநூல் அரட்டை என பிரச்சினைகள் இல்லாமல் ஜாலியாகப்  பயணிக்கிறது. அடுத்த ஐந்து அத்தியாயங்கள் நாயகி சஞ்சனாவின் பார்வையில், சந்தோஷம் மற்றும்  பெண் குழந்தையைக் காரணம் காட்டி மச்சினியை அடையத் துடிக்கும் அக்கா கணவரினால் ஏற்படும் இன்னல்கள் என நகர்கிறது. பதினோராவது அத்தியாயத்திலிருந்து ஆசிரியரின் பார்வையில், சஞ்சனாவின் அக்கா கணவன் விஜயனை வருண் பார்த்துப் பேசிய பின் வரும் நிகழ்வுகள்நம்மை இப்படியா... அப்படியா... என்று யோசிக்க வைத்துபரபரப்பான  இறுதிக்கு நகர்த்தி  கதையோடு ஒன்றி நம்மை உட்கார வைக்கிறது.  குறிப்பாகசம்பந்திகளின் சூடான போன் உரையாடலும் அதே நேரத்தில், காதலர்களின்  கோபம் தீர்ந்த சந்தோஷங்களும் என மாற்றி மாற்றி பயணிக்கும் அந்த இறுதிக் கட்ட பரபரப்பைஅவரது முதல் நாவலான 'இளமை எழுதும் கவிதை நீ' யின்  இறுதிக்காட்சிகளை போன்றே மிக அருமையாக கையாண்டிருக்கிறார்.

மிக நல்ல கதை, திரைக்கதையாய் விரியும் காட்சிகள் என பயணித்து இறுதிக் காட்சியில் வருண் கோபித்துக் கொண்டு சென்ற பின் வந்தனா அவனைத் தேடி எப்படி சரியான இடத்திற்கு வந்தாள் என்பது மட்டுமே சற்று இடறல்... அந்த இடத்தில் தமிழ் திரைப்பட இறுதிக் காட்சி போல கதை அமைந்து விட்டது என்பதைத் தவிர மற்றபடி குறை சொல்ல முடியாத நிறைவான கதை. 

தொடர்கதையாக பாக்யா வார இதழில் வந்த 'திருமண ஒத்திகைஇப்போது புத்தகமாக வெளி வந்திருக்கிறது. நிச்சயமாக இது படிப்பவர்களின் மனதைக் கவரும். எனது முதல் அணிந்துரையை நான் நேசிக்கும் ஒருவரின் நாவலுக்கு எழுதியதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அணிந்துரை எழுதச் சொன்ன குடந்தையூர் ஆர்.வி.சரவணன் அண்ணனுக்கு என் நன்றி.

தொடரும் எழுத்துப் பயணம் பல வெற்றிகளை அவருக்கு விருதாக்க வாழ்த்துகிறேன். 
***
தங்களின் படைப்புக்களை படித்து விடுகிறேன் நட்புக்களே... கருத்து இடுவதில் என் கணிப்பொறியில் இருக்கும் பிரச்சினை தீரவில்லை. அலுவலகத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள்... வேலைப் பளூவும் கூடுதல்... அங்கு வலைப்பூ திறக்கவும் வாய்ப்பு இல்லை... இல்லையென்றால் அங்கிருந்து கருத்து இடலாம்... கருத்து இடவில்லை என்று நினைக்க வேண்டாம். மீண்டு வருவேன் என்ற நம்பிக்கையோடு....

நன்றி.
-'பரிவைசே.குமார்.

14 கருத்துகள்:

  1. நல்லதொரு அறிமுகம். நண்பருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. எளிமையான வரிகள்...நன்று


    பதிலளிநீக்கு
  3. விழாவிலும் கலந்து கொண்டேன். உங்கள் அணிந்துரையை வாசித்தும் விட்டேன். நன்றாகச் சொல்லியிருக்கீங்க குமார்.

    வாழ்த்துகள்

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பக்குவமான,ஆழமான,அருமையான அணிந்துரை. பாராட்டுகள். உங்களுக்கும் நூலாசிரியருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் சகோ

    பதிலளிநீக்கு
  6. என் வாழ்வின் விளிம்பில் சிறுகதைத்தொகுப்புக்கு விமர்சனமெழுதியது நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  7. அருமை. நண்பர் ஆர் வி சரவணனுக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. குமார் , உங்கள் வழியே உங்கள் நண்பருக்கு வாழ்த்துகள் சொல்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அர்த்தப்பூர்வ விமர்சனம்,,,.
    குடந்தை சரவணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. அருமையாக அணிந்துரை எழுதி இருக்கிறீர்கள்.
    ஆர்.வி சரவணனுக்கும், உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. அருமையான அணிந்துரை. ஆசிரியருக்கும் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  12. வாழ்த்திய அனைவருக்கும் நண்பர் குமார் அவர்களுக்கும் நன்றி. புத்தகம் தேவைப்படுவோர் எனது மின்னஞ்சலில் தெரிவிக்கலாம். அனுப்பி வைக்கிறேன்.
    kmrvsaravanan@gmail.com

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி