புதன், 25 அக்டோபர், 2017

மனசு பேசுகிறது : பாதித்த பாடல்

சில பாடல்களைக் கேட்கும் போது அது தொடர்பான நினைவுகளை நம்முள்ளே மீட்டெடுக்கும். இந்தப் பாட்டைக் கேட்டா எனக்கு இந்த நிகழ்ச்சி மனதில் வந்து போகும் என்றும் இந்தப் பாட்டென்றால் எனக்கு அவள் முகம் ஞாபகத்தில் வரும் என்றும் பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். இப்படியான பாடல்களும் அது தொடர்பான நிகழ்வுகளும் எல்லாருக்குள்ளும் இருக்கத்தான் செய்யும்... யாரும் விதிவிலக்கல்ல அப்படியான பாடல்கள் பல சமயங்களில் மீட்டெடுக்கும் நிகழ்வுகள் ஒரு நாள் முழுவதும் நம் மனதைச ஆக்கிரமிக்கும். சந்தோஷமான நிகழ்வுகள் என்றால் நம் மனதைச் சந்தோஷமாகவும், சோகமான நிகழ்வுகள் என்றால் நம் மனதைச் சஞ்சலமாகவும் ஆக்கும் தன்மைகள் கொண்டவை இந்தப் பாடல்கள்.

கடந்த வாரத்தில் ஒருநாள் அலுவலகத்தில் இருக்கும் போது எனது மொபைலில் வள்ளி திருமண நாடகம் கேட்டபடி வேலை செய்து கொண்டிருந்தேன்... கவனிக்க பார்த்தபடி இல்லை... கேட்டபடி... அது வீடியோவாக இருந்தாலும் ஆடியோ மட்டும் ஓடிக்கொண்டிருக்கும்... போன் ஸ்கிரீனை 'ஆப்' செய்து வைத்துவிட்டு வேலையில் தீவிரமாக இருந்தேன் என்பதையும் இங்கு கவனித்தில் கொள்ள வேண்டும். என்னடா இவன் வள்ளி திருமணம் நாடகத்தைப் பார்க்கிறானே... அம்புட்டு வயசானவனா என்று கூட நீங்கள் நினைக்கலாம். வயசெல்லாம் ஆகல... நிறைய வரலாறுகளை அறிய முடிகிறது என்பதால் மட்டுமே.

படிக்கும் காலத்தில் பக்கத்து ஊரில் கூத்து (நாடகம்) நடந்தால் கூட போக விரும்புவதில்லை. கண்டதேவி தேரோட்டத்தின் போதோ, கூத்தாடி முத்துப் பெரியநாயகி அம்மன் சிவராத்திரியின் போதோ இரவு கோவிலுக்குச் சென்றால் நாடகம் பார்ப்பதுண்டு. அதிலும் வள்ளி திருமணம் என்றால் நம்பிராஜன் வந்ததும் கூட்டம் கலைய ஆரம்பிக்கும்... நாங்களும் நகர்ந்து விடுவோம். அப்படித்தான் நாடகம் பார்த்திருக்கிறோம்.. சில நாடகங்களை மட்டுமே முழுவதும் பார்த்த அனுபவம் உண்டு. அப்போதெல்லாம் நாரதர்-வள்ளி தர்க்கம் என்பது சில நடிகர்கள் நடித்தால்தான் மட்டுமே நல்லாயிருக்கும் என்பார்கள். எல்லாரும் சிறப்பாக தர்க்கம் பண்ணுவதில்லை என்று தீவிர நாடக விசிறிகள் சொல்லக் கேட்டதுண்டு. நாம தீவிர விசிறியில்ல... அப்பல்லாம் ராஜேஸ்குமாரின் க்ரைம் நாவலின் விசிறி நான்.

சரி நாம நாடகம் கேட்ட விஷயத்துக்கு வருவோம்... இப்ப எல்லா நாடகங்களும் இணையத்தில் சில நண்பர்களால் பதிவேற்றப்படுகின்றன. இது மிகவும் நல்ல விஷயம்... நம் கிராமியக் கலைகள் அழிந்து விடக்கூடாது என்ற எண்ணம் போற்றுதலுக்குரியது. நாடகங்களைப் பொறுத்தவரை தமிழகத்தின் தெற்குப் பகுதியில் அதாவது எங்கள் பக்கத்தில்தான் அதிகமாக நடத்தப்படுகின்றன என்பதில் தெற்கத்திக்காரனாய் பெருமை உண்டு. எப்பவுமே கிராமியக் கலைகளைப் போற்றுவதில் தென் மாவட்டங்களே முன்னணியில் இருக்கும். அப்படி நடக்கும் நாடகங்களை இணையத்தில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பது மகிழ்வான விஷயம்.

இன்று நாடகங்களில் நடிக்கும் பபூன்கள் நாரதருடன் விவாதிப்பது நல்ல வரலாற்று விஷயங்களை என்பது பாராட்டுக்குரியது.... சும்மா வந்தோமா... டான்ஸாக நடிப்பவருடன் இரட்டை அர்த்த வசனம் பேசினோமா... வள்ளியையும் கேலி பேசினோமா என்றில்லாமல் நிறைய விஷயங்களைப் பேசுகிறார்கள்... வள்ளி - நாரதர், வள்ளி -முருகன் என தர்க்கங்களில் எல்லாம் வரலாறுகளையும் ஆன்மீகச் செய்திகளையும் மட்டுமே முக்கியானதாக எடுத்துக் கொள்கிறார்கள். வள்ளியும் பபூன் டான்சுடன் ஆட்டம் போடுவதைப் பார்த்து இணையத்தில் எந்த வள்ளி டான்ஸ் ஆடியிருக்கு என்று வந்த கருத்துக்களைப் பார்த்து இனி வள்ளியாக நடிப்பவர்கள் மேடையில் ஆடக்கூடாதென சங்கத்தில் முடிவெடுத்திருப்பதாக சமீபத்தில் பார்த்த ஒரு நாடகத்தில் சொன்னார்கள். நல்ல முடிவு.

மறைந்த நாரதர் முத்தப்பாவிடம் யாராலும் வரலாறு குறித்தோ கடவுள்கள் குறித்தோ தர்க்கம் பண்ணமுடியாது என்று சொல்வார்கள்... நானும் வீடியோக்களில் பார்த்திருக்கிறே. எதை எடுத்தாலும் அதை விளக்கமாய்ச் சொல்வார்... ஆனாலும் கொஞ்சமல்ல நிறையவே முன்கோபி... பல மேடைகளில் அவரின் தர்க்கம் சண்டையில் முடிந்திருக்கின்றன. அவரின் வீடியோக்களும் இணையத்தில் இருக்கின்றன. தற்போது பெருமாள்ராஜ், முத்துச்சிற்பி, வெங்கடேஷ் என பலர் தர்க்கத்தில் கலக்குகிறார்கள். வரலாற்று விஷயங்களைக் கேட்டபடி வேலை பார்த்துக் கொண்டிருப்பது இப்போது வாடிக்கையாகி இருக்கிறது.

அப்படித்தான் சென்ற வியாழன் கலைமகள் - முத்துச்சிற்பி விவாதத்தைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவர்களின் விவாதம் ஆரம்பிக்கும் முன்னர் ஆர்மோனியம் வாசிப்பவர் பாடிய பாடல் எனக்குள் பழைய நினைவுகளை மெல்ல வருடி விட, என்னையறியாமல் கண்ணீர் எட்டிப் பார்த்தது. பாடலை மீண்டும் ஓடவிட்டேன். என் நினைவுகள் எங்களை எல்லாம் சுமந்து... தற்போது தம்பி வீடு கட்டுவதின் காரணமாக இடிக்கப்பட்ட ஐம்பதாண்டு கால ஓட்டு வீட்டிற்குள் நுழைந்தது.

அந்தச் சிறிய ஓட்டு வீட்டில்... ஒரு திண்ணை... ஆல்வீடு... சாமி அறை மட்டுமே... சின்னப் பிள்ளைகளாக இருந்த போது அடுப்படி பனைஓலையில் கட்டப்பட்டிருக்கும்... பின்னர் அடுப்படி ஓடு அணிய திண்ணை, அடுப்படி டாணா வடிவில் இருக்கும். இரண்டுக்கும் முன்னே கல்கால் ஊன்றி ஒரு கீத்துக் (கிடுகு-பின்னிய தென்னை ஓலை) கொட்டகை போட்டு சுவரெடுத்தார் அப்பா. வீட்டின் பின்னே ஒரு மாட்டுக் கசாலை... அது எருமை, பசு என எத்தனை மாடுகளைப் பார்த்த இடம் தெரியுமா..? இப்ப கசாலையும் இல்லை... மாடும் இல்லை... பக்கத்து வீட்டுக்காரன் பாதைகேட்டு போட்ட கேஸ் மட்டும் இன்னும் பிரச்சினையாய் ஓடிக்கிட்டு இருக்கு.

நாங்கள் எல்லாரும் எவ்வளவு சந்தோஷமாக பண்டிகைகளைக் கொண்டாடினோம் தெரியுமா... எத்தனை சந்தோஷங்களைச் சுமந்தது அந்த வீடு... நாங்க படிக்கும் போது எங்க பெரியண்ணன் வெளியூரில் வேலை பார்த்தார்... இப்பவும் அதே ஊரில்தான் வேலை பார்க்கிறார். நானும் என் தம்பியும் படித்ததே அவரால்தான்... தீபாவளி, பொங்கலுக்கு ஊருக்கு வரும்போது தவறாது துணியெடுத்து எங்களுக்கு டிரஸ் தைத்துக் கொண்டு வருவார். அப்போதெல்லாம் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் இரண்டு டிரஸ் என்பது மிகப் பெரிய விஷயம். அது எங்களுக்கு பள்ளியில் படித்த நாட்களில் இரண்டாகவோ மூன்றாகவோ கிடைக்கும்.

பின்னர் கல்லூரி சென்ற போது லூஸ் பிட்டிங் சட்டை என தொம்பாத் தொம்பா சட்டைதான் பேமஸ்... அப்போ நாங்க தைக்கும் சட்டைகள் எங்க அண்ணன்களும் போடலாம்... அவங்க தைக்கிற சட்டை நமக்கும் சரியா இருக்கும். யார் கழட்டிப் போட்ட சட்டை என்றாலும் நல்லாயிருந்தால் அது அடுத்தாளு உடம்பில் இருக்கும். இப்படி சட்டைகளை மாற்றி மாற்றிப் போடுவதும்... ஊருக்கு கிளம்பும்போது இந்தச் சட்டை நல்லாயிருக்கு நான் எடுத்துக்கிறேன் என பெரியண்ணன் எங்க சட்டைகளை எடுத்துச் செல்வதும்... சின்ன அண்ணன் கழட்டிப் போட்ட சட்டையை காலேசுக்குப் போட்டுச் செல்வதும் எப்போதும் வாடிக்கை.

எங்க அம்மா படுத்திருக்க, நால்வரும் (சில வேளைகளில் சின்ன அக்காவும்) நாலு பக்கமும் தலைவைத்துப் படுத்திருந்த நாட்கள் எல்லாம் எப்போதும் மறக்க முடியாதவை. அக்காக்கள், அண்ணன்கள், தம்பி என சந்தோஷமாய் கும்மாளமிட்ட வீடு அந்த சிறிய ஒட்டு வீடு.... அன்னைக்கு ஒண்ணுக்கு ரெண்டு என்றிருந்தபோது பாசமும் நேசமும் நிறைந்திருந்தது. இப்போது ஒத்தையாய் பெத்து வைத்து அதற்கு அண்ணன் தம்பி பாசம் எப்படிப்பட்டது என்பது கூட தெரியாமல் வளர்ப்பதில் உறவுகளின் உன்னதத்தை இழக்க ஆரம்பித்து விட்டோம்... பெண் குழந்தைகளுக்கு கூட ஒரு கட்டத்துக்கு மேல் அதோட முக்கியமான பிரச்சினைகளைச் சொல்லி, விவரம் அறியவும் ஆறுதல் தேடவும் முடியாத நிலைதான் இருக்கிறது.

திருமணம் முடிந்து அவரவர் குடும்பம் எனப் பிரிந்தாலும் அந்தப் பாசக்கயிறு மட்டும் பல வீடுகளில் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. அப்படியான பாக்கியம் எங்கள் வீட்டிலும் உண்டு என்றாலும் வெளிநாட்டு வாழ்க்கையில் நால்வரும் ஒருமித்து சந்தித்தல் என்பது நடவாத காரியமாகிவிட்டது. பெரியண்ணனுடனாவது வாரம் ஒரு முறை பேச முடிகிறது. சின்ன அண்ணன் மற்றும் தம்பி சிங்கப்பூரில் என்பதால் பேசுவதும் குறைவு... பார்ப்பதும் அரிது.

நான் ஊருக்கு இதுவரை திருவிழா நேரத்தில் வரும்படியாக மே மாதத்தைத் தேர்வு செய்து வைத்திருக்கிறேன். இந்த முறை மே மாதம் என்பது சாத்தியமாக வாய்ப்பில்லை என்பது தற்போதைய புராஜெக்ட்டின் போக்கில் தெரிகிறது. வருடாவருடம் செல்ல முடியும் சூழல் என்றாலும் சிங்கப்பூர்வாசிகளான அண்ணனும் தம்பி இரண்டு வருடத்துக்கு ஒருமுறை வருவார்கள். இந்த முறை தம்பியைச் சந்தித்தால் அடுத்த முறை அண்ணன்.... இரண்டு வருடம் ஒரு முறைதான்... குடும்பங்கள் எல்லாம் சில விஷயங்களில் அன்னியப்பட்டு நிற்கும் நிலைகளும் மெல்ல மேலோங்க ஆரம்பித்திருந்தாலும்... பலரின் வீரியமான விஷ வித்துக்கள் உறவுக்குள் விரிசலை உண்டாக்கி மன வேதனைகளைக் கொடுத்தாலும்... பாசம் என்பது இன்னும் அழகாய்த்தான் முளைவிட்டு வளர்ந்து கொண்டிருக்கிறது.

அந்தப் பாடலைக் கேட்டதும் கண்ணீர் எட்டிப் பார்த்து கன்னத்தில் இறங்கியது... எல்லாரும் ஒன்றாக கட்டிப்பிடித்துக் கிடந்த அந்த நாட்கள் இனி வருமா...? அந்த அன்பு இனி கிடைக்குமா...? அம்மாவின் மடியில் அந்த கோபுரக்கரைச் சேலை வாசத்தை நுகர்ந்தபடி படுத்திருக்க, நிகழ்ந்த சண்டைகளை இனி மீட்டெடுக்க முடியுமா...? வானம் பார்த்து வாசலில் படுத்தபடி அம்மா சொன்ன கதைகளை இனி அதுபோல் கேட்க முடியுமா..?எங்களை எல்லாம் சுமந்த அந்தச் சிறிய ஓட்டுவீடு  கொடுத்த மகிழ்வையும் சந்தோஷத்தையும் மறக்க முடியுமா...? இப்படி கேள்விகள் பல எழுந்தாலும் காலங்களும் வாழ்க்கையும் பல விஷயங்களை மெல்லக் கொன்று தின்று விட்டு இடைவெளியை மெல்ல மெல்ல எட்டிப் பார்க்க வைத்து விடுகிறது என்பதே உண்மை... இனி அப்படி ஒரு காலம் வருமா என்ற நினைப்பே கண்ணீராய் கரைந்து ஓடியது.

அந்தப் பாடல் 'முத்துக்கு முத்தாக... சொத்துக்குச் சொத்தாக...' எவ்வளவு அருமையான பாடல். ஆர்மோனியக்காரர்கள் பலர் ஏதேதோ பாடி பாட்டைக் கொன்று எடுத்துவிடுவார்கள். ஆனால் இவரோ அவ்வளவு அருமையாக... அழகாகப் பாடி மக்களிடம் கைதட்டு வாங்கியதுடன் அவர்களிடம் பண அன்பளிப்பும் பெற்றார். அந்தப் பாடலில் வரும் வரிகளான 

'ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல் நாங்கள் கொண்ட சொந்தமடா
ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா
நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா'

இதைக் கேட்டதும் நினைவுகள் மெல்லத் தாலாட்டி அண்ணன் தம்பிகளின் பாச நாட்களை அசை போட வைத்து கண்ணீரை வெளிக் கொணர்ந்தது.

-'பரிவை' சே.குமார்.

12 கருத்துகள்:

  1. கால வெள்ளம் சில சமயத்தில் கரைகளை உடைத்து விடுகின்றது..

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் கண்ணீரை வரவழைத்தது.

    பதிலளிநீக்கு
  3. சிலிர்க்க வைத்து விட்டது நான் சின்ன வயதில் அடிக்கடி கேட்பேன் கண்டசாலா பாடிய பாடல் இனிவரும் தலைமுறையினருக்கு கிடைக்காது காரணம் வீட்டுக்கு ஒரு குழந்தை அதை படிக்க வைக்க பெற்றோர் இருவரும் இயந்திரமாய் உழைத்து கரை சேர்த்த பிறகு இவர்களுக்கு முதியோர் இல்லம்.

    அஞ்சு வயசுல அண்ணன் தம்பி, பத்து வயசுல பங்காளி.
    திருமணத்துக்குப் பிறகே மாற்றம்.

    பதிலளிநீக்கு
  4. கட்டுரையை எங்கோ தொடங்கி கடைசியில் நெஞ்சம் கனக்கச் செய்யும் பாடலில் முடித்து விட்டீர்கள். அப்போதெல்லாம் கூரை வீடு அல்லது ஓட்டு வீடுதான். இருந்தாலும் இல்லா விட்டாலும் அப்போது இருந்த சந்தோஷம், இப்போது பங்களா டைப் வீடுகளில் வசித்தாலும் கிடைப்பதில்லை. ‘முத்து முத்தாக’ – நானும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பாடல் என்று கேட்டாலும் மனது பாரமாகி விடும்... முக்கியமாக கீழ் உள்ள வரிகள் :-

    /// சின்னத்தம்பி கடைசித்தம்பி செல்லமாய் வளர்ந்த பிள்ளை
    ஒன்றுபட்ட இதயத்திலே ஒரு நாளும் பிரிவு இல்லை... ///

    அந்த தம்பி அடியேன் தான்...!

    பதிலளிநீக்கு
  6. எனக்கும் மனம் கனத்தது :( அதுவும் ஒரு பிள்ளை வரி என்னென்னமோ பயத்தை கிளப்புது .நம்மைப்போன்ற வெளிநாட்டு வாழ் மக்களின் மன ஆதங்கத்தை வெளிப்படுத்தியது பதிவு .

    பதிலளிநீக்கு
  7. அந்த பாடலை இப்போதான் பார்த்தேன் ..கண்ணில் நீர் வழிந்தது உறவின் அருமைகளை சொல்லும் எத்தனை அற்புதமான பாட்டு !!

    பதிலளிநீக்கு
  8. படித்து முடித்தவுடன் கண்ணீர் வந்து விட்டது குமார்.
    எனக்கும் மிக பிடித்த பாடல்.
    எங்கள் சிறுவயது நினைவு வந்தது.
    விஷவித்துக்களை களைந்து உறவை பலபடுத்துக்கள்.வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் அந்த நாட்கள் திரும்பி வருமா ஏக்கத்தின் சாயலை பூசி கொண்டு இருக்கும் நினைவுகள் இன்று அந்த பசுமையையும் துலைத்துவிட்டோம் படிக்கும் போது நானும் பசுமை நிறைந்த நினைவுகளில் சஞ்சரிக்க தொடங்கிவிட்டேன்

    பதிலளிநீக்கு
  10. நினைவுகளைப் பகிரும்போது ஒருவரதுகுணாதிசயங்களும் அறியப்படுகின்றன மனசுகுமார் பற்றியும் அறிய முடிகிறது நன்றி

    பதிலளிநீக்கு
  11. நெகிழ்ச்சி.

    என்ன ஒரு பாடல்.. எனக்கும் மிகவும் பிடித்த பாடல். தஞ்சாவூர் ராஜா கலையரங்கம் தியேட்டரில் பார்த்த படம்.

    பதிலளிநீக்கு
  12. மனதை நெகிழ்த்திய பசுமையான நினைவலைகள். பாடல் அருமையான பாடல் பிடித்த பாடலும்..

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி