புதன், 10 மே, 2017

17. என்னைப் பற்றி நான் - தேவா சுப்பையா

ந்த வாரம் என்னைப் பற்றி நான் பகுதியில் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் எங்கள் மண்ணின் மைந்தர் அன்பு அண்ணன் 'WARRIOR' என்னும் தளத்தில் எழுதும் தேவா சுப்பையா அவர்கள்.

வலை நட்பு அபுதாபியில் கொடுத்த சில உறவுகளில் அண்ணனாய் அறிமுகமாகி, இன்று என் அண்ணனாகவே ஆகிப் போனவர். சிறந்த எழுத்தாளர்... வாசிப்பவர்களை தனது எழுத்துக்குள் இழுத்துச் செல்லும் வித்தகர். வாசிக்க வாசிக்க சுவராஸ்யமாய் கொண்டு செல்லும் எழுத்துக்காரர்.

தனது சிறுகதைகள் மற்றும் 'காதலே சுவாசமாக' என்ற கட்டுரையை புத்தகமாகக் கொண்டு வந்தவர். இன்னும் சில புத்தகங்களைக் கொண்டு வரும் பணியில் தற்போது மிகத் தீவிரமாக எழுதி வருபவர்.

துபாயில் இருந்து அபுதாபி வரும்போதெல்லாம் 'நான் வருகிறேன்... உன்னைப் பார்க்கிறேன்ப்பா' என்ற செய்தி வந்துவிடும். இருவரும் நிறைய கதைகள் பேசி... குறைவாய் சாப்பிட்டு... சின்னதாய் ஒரு செல்பி எடுத்து... சரி விடுங்க... அது ரொம்ப சந்தோஷமான நிமிடங்களைக் கொடுக்கும் நாள்.

அன்பின் தேவா அண்ணன் அவரைப் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம் வாருங்கள்.


ன்னைப் பற்றி நானென்ற கட்டுரையை என்  சகமண்ணின் மைந்தன் தம்பி குமார் கேட்டிருக்கும் இந்த நேரத்தில் மிகப்பெரிய ட்ரான்ஸ்மிஷன் எனக்குள் நிகழ்ந்து முடிந்திருக்கிறது. கடந்த வருடத்தில் இதே தலைப்பில் என்னை எழுதச் சொல்லியிருந்தால் இந்தக் கட்டுரை வந்திருக்காது.

இன்னமும் பேருந்து வசதிகளில்லாத, கடைகளில்லாத, பழமையின் கதகதப்பினை உணர முடிந்த வானம் பார்த்த பூமியிலிருந்து ஒலிக்கும் ஒரு பிரதிநிதியின் குரலாய்க்கூட இதை நீங்கள் கருதிக்கொள்ளலாம். இரண்டு மூன்று தூறல்கள் விழுந்ததும் சந்தோசமாய் சென்று உழுது விதைத்து, கண்மாய்க் கரைகளை உயர்த்தி வானம் பார்த்தபடி வாழ்க்கையைத் தேடிக் கொண்டிருந்த ஒரு சமூகத்திற்கு மழைதான் எல்லாமுமாயிருந்தது. மழைக்காய் பொங்கல் வைத்து மழைக்காய் நேர்த்திக்கடன் வைத்து மழைக்காய் அழுது, மழைகண்டு சிரித்து மழையில் நனைந்து ஆடுமாடுகளோடு வாழ்ந்து மரித்தவன் என் தாத்தன். இரண்டு மூன்று ஆட்களைச் சேர்த்துக் கொண்டு தன் புன்செய்க்காட்டில் பெருங்கிணறு தோண்டி தன் புன்செய்க்கு கொஞ்சமும் ஊர்குடிநீருக்கு நிறையவும் கொடுக்க அவர்தான் ஏற்பாடு செய்திருந்தார்.

காலில் குத்திய கருவேலம்முள்ளை எடுத்துப் போடாமல் ஊராரோடு சேர்ந்து தன் நிலத்தில் நடவு நட்டவள், களை  பறித்தவள் கதிரறுத்தவள், கதிரடித்தவள், தூற்றியவள், பொனை ஓட்டிய வைக்கோலை எடுத்து வீட்டுக் கொல்லையில் போர்மேடாக்கியவள் என் அப்பத்தா. உலையில் அரிசியை போட்டு விட்டு இடுப்புப் பிள்ளைக்கு சோறூட்டி தொட்டில் பிள்ளைக்கு பாலூட்டி வளர்ந்த பிள்ளைகளுக்கு வகை சொல்லியபடி இடுப்பெலும்பு ஒடிய வயலுக்கும் வீட்டுக்கும் ஓடிக்களைத்த சம்சாரி அவள். சாமான் வாங்க கொடுத்த இரண்டணாவைத் தொலைத்து விட்டு சந்தையிலிருந்து வீட்டுக்கு வந்தால் அடிவிழுமென்று ஊர் எல்லையிலிருக்கும் காட்டுமுனி கோயில் மரத்தடியில் அழுது ஒப்பாரி வைத்த என் அப்பாவிற்கு அப்போது வயது பனிரெண்டென்று பெரிய அத்தை சொல்லுவாள். காசைத் தொலைத்த கதையறிந்து புளியவிளாரால் விளாசிய தாத்தாவை  அவ்வளவு கோபமாய் அதுவரை பார்த்ததில்லை என்று சொல்லும் அத்தைக்கு அப்போது வயது பதினாறாம். காணி காசுக்கு காணியைக் கட்டிப் பிடித்துக் கிடந்து காசாக்கிக் கொடுத்தால் அதைத் தொலைத்து விட்டேனென்று சொன்னால் எப்படித் தாங்கியிருப்பான் என் தாத்தன்.

இந்த வானம் பார்த்த வழி வந்த என்னைத்தான் எழுதச் சொல்லியிருக்கிறான் என் தம்பி என்னை பற்றி. காலம் உருண்டோட என் தந்தையின் பியூசிக்கு கிடைத்த உத்தியோகம் இடம் மாற்றி, வாழ்க்கையை மாற்றி  வேறொரு சமூகச் சூழலுக்குள் வெள்ளைச் சட்டையும் பேண்ட்டுமாய் என் அப்பாவை அரசாங்க அலுவலர் ஆக்கிப் பார்க்க, அங்கிருந்து ஆரம்பிக்கிறது இந்த கட்டுரையாளனின் கதை. அப்பாவைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கையில் அப்பாவின் பிற்பகுதி வாழ்க்கையில் எல்லாமுமாயிருந்த அம்மாதான் எங்களுக்கும் இன்று வரை எல்லாமே. கனவுகள்  நிறைய காண்பவனாய் இன்னமும் நானிருப்பதற்கும் இப்படி ஏதாவதை எழுத முடியும் என் பிரயத்தனத்திற்கும் அம்மாவே ஆதாரம்.

அம்மாவின் தாத்தன் ஒரு புத்தக ப்ரியன். பட்டு அட்டை போட்டு ஐம்பெருங்காப்பியங்களோடு சங்ககால நூல்களை எல்லாம் எடைக்குப் போட்டுக் கொண்டிருந்த மூன்றாவது தலைமுறையின் சிறு கொடுக்கு நான். விபரமறியாமல் வீட்டார்கள் தூக்கிப் போட்ட என் பாட்டனின்  சொத்து ஊரறிந்தது என்ற வகையில் அறுபது ஏக்கர்கள் நானறிந்தது வரை நாலடுக்கு அலமாரிகள் நான்கு நிறைய புத்தகங்கள். 1800களில் பிறந்திருந்த அம்மாவின் தாத்தா என் பாட்டன் விட்டுச் சென்ற சொத்து என் ஜீனுக்குள் புத்தகம் வாசிக்கும் பழக்கமாய் வந்து உட்கார்ந்து கொள்ள ராணி காமிக்ஸ், பூந்தளிர், அம்புலிமாமாவில் ஆரம்பித்து டால்ஸ்டாயின் வார்& பீஸ் (போரும் அமைதியும்) வரை நீண்டு வந்திருக்கிறது.

வாசித்ததெல்லாம் என்ன வாங்கி வந்த மளிகைச்சாமான் போல அஞ்சரைப் பெட்டிக்குள்ளிருந்து அடுப்படிக்கு சென்று தன் வேலையை முடித்துக் கொள்ளுமா என்ன? வாசித்தது அத்தனையும் யோசிக்க வைக்க அந்த யோசனையை எல்லாம் ஒரு நாள் எழுதிப்பார்க்க வந்தானே நாகரீகக் கோமாளி என்பதைப் போல இந்த தேவா சுப்பையாவிற்கும் கொஞ்சம் எழுதவரும் என்ற எண்ணம் புது மாப்பிள்ளையைக் கண்டால் நாணும் பெண்ணைப் போல வெட்கி வெட்கி என் வெள்ளைத் தாள்களை நிறைக்க தொடங்கியதுதான் இந்த கிறுக்கலகள். என்னைப் பற்றி சொல்ல வேண்டுமானால் என் சமகால துபாய் வாழ்க்கையைச் சொல்ல முடியாது. அது என்னை யாரோவாகவோ விரும்பி மாற்றிக் கொண்டு களமாடும் ஒரு யுத்த வாழ்வு. பொருளீட்டல் என்பது எளிதாய் சிலருக்கு கைகூடும் ஆனால் என்ன ஒன்று எளிதாய் கைகூடும் எல்லாமே எளிதாய் சென்று விடவும் செய்கிறது. அடிப்படையில் தேடிச் சேர்ப்பதிலொரு தர்மம் இருக்கவேண்டும் அந்த தர்மத்தின் பெயர்தான் உழைப்பு.  வாழ்க்கை வேறு திசையில் அழைத்துச் சென்ற பாதையாய் என் பொருள் ஈட்டும் சமகால வாழ்வு இருந்தாலும் கனவு என்னவோ வானத்தில் பறப்பதாயத்தானிருக்கிறது இன்னமும்.

வாழ்ந்து தீர்க்க முடியாத பக்கங்களை ஒரு எழுத்தாளன் எழுதிப் பார்க்கிறான், ஓவியன் வரைந்து பார்க்கிறான், ஒரு இயக்குனர் படமாய் எடுக்கிறான் ஆகமொத்தம பெரும்பாலும் எல்லா படைப்பாளிகளுக்கும் வாழும் உலகம் ஒன்றாயும் வாழ விரும்பும் உலகம் வேறொன்றாயும்தான் இருக்கிறது. இந்தச் சமன்பாட்டு முரண்தான் படைப்பவனின் அதிரகசியமான வாழ்வாய் இருக்கிறது. இந்த கணம் வரை அறுதியிட்டுச் சொல்ல முடியாத வாழ்வின் நிதர்சனத்தில் என்னை ஒரு எழுத்தாளனாய் அடையாளப்படுத்திக் கொள்வதாகவே எனது தினமும் நான் நினைக்கிறேன். எல்லா நேரமும் எழுத விரும்புபவனாகவும், சுற்றி நிகழும் விசயங்களுக்குள் இருக்கும் ஜீவனை ரசிக்க முடிந்தவனாகவும், கொடுமையான வெயிலென்று ஊர் நிராகரிக்கும் உச்சி வெயிலின் உஷ்ணத்தை ரசிக்கத் தெரிந்தவனாகவும், இதற்கு மேல் நின்றால் ஜன்னி கொண்டு விடும் என்று ஊரார் விலக்கி வைக்கும் குளிரை ஸ்வெட்டர் அணியாமல் கைகளால் கட்டிக் கொண்டு அனுபவிக்க விரும்புவனாகவும்...

யாருமற்ற வீதிகளில் இரவு நேரங்களில் விழித்துக் கொண்டிருக்கும் பூமியின் பிரக்ஞைச் சூட்டினை, அந்த கதகதப்பினை அனுபவிக்க ஆசைப்படுபவனாகவும்,  ஆல் இந்திய ரேடியோ திருச்சிராப்பள்ளி வானொலி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணஸ்வாமி என்று நினைவுகளை மீண்டும் பால்யத்துக்குள் போக விரும்புபவனாகவும் அப்போது தம்பிகளுடன் ஒரு மேரி பிஸ்கெட்டுக்கு சண்டை போடுபவனாகவும், பக்கத்து வீட்டுப் பையனை நங்கென்று அடித்து விட்டு ஓடி வந்து வீட்டிலிருக்கும் பெரிய மரபீரோவுக்கு பின் ஒளிந்து கொள்ள விரும்புபவனாகவும், அப்பாவின் மடியிலமர்ந்து அம்மா சொல்லும் கதைகளைக் கேட்கவிரும்புபவனாகவும் இருக்கும் நான் யாரென்பதுதான் இப்போதெழும் அந்த ஞானக் கேள்வி.

என் கடவுள் தேடல்தான் காதலென்று உணர்ந்த பொழுது கடவுள் தேடல் நின்று போனது. ஆழ்மனதில் விதைக்கும் விசயங்கள், அதற்குப் பின்னான உழைப்பு, முயற்சி, ஒழுக்கம் எல்லாம் சேர்ந்துதான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றுணர்ந்த போது மூடநம்பிக்கைகள் அறுந்து போனது. நெருங்கிய உறவினர்களின் மரணங்களில் என்னை துரத்தி வந்த நிலையாமை ஒரு விபத்தில் என் அப்பாவை பறிகொடுத்த போது என் தோளில் ஏறி அமர்ந்து செவிகடித்து எங்கே செல்கிறாய் நீ என்ற கேள்வியை உச்சி மண்டையிலடித்துக் கேட்டது. எல்லாம் ஒரு நாள் சட்டென்று தீர்ந்து போகும் நீ வெறுமனே நாளை யாரோ ஒரு சிலரின் ஞாபகத்தில் தேங்கிக் கிடக்கப்போகும்  நினைவுதான் என்று சொல்லிக் கொண்டேயிருக்கும் காலத்தின் கை பிடித்துக்கொண்டுதான் இந்த நாட்கள் எனக்கு நகர்ந்து கொண்டிருக்கின்றன.

இப்படியாய் வாழ்வின் ரகசியங்கள் எல்லாம் நீர்க்குமிழிகளாய் உடைந்து உடைந்து நிதர்சனத்தை போதித்துக் கொண்டேயிருக்க,  இந்த மாலை வேளையில்  தட்டச்சு செய்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரை என்னைப் பற்றி உங்களுக்கு சொல்ல முயன்று தோற்றது போலவே நீங்களும் புரிந்து கொள்ள முடியாத ஒரு குழப்பச் சூழலோடே இந்த வார்த்தைகளைக் கடந்து கொண்டிருக்கலாம்தான். அதிலொரு பிழையுமில்லை.

புரிந்து கொள்ள முடியாத இவ்வாழ்வை புரியாமலேயே அணுகுவது எவ்வளவு உன்னதமானதோ அப்படியாய் சிவகங்கை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்திலிருந்து நீண்ட இந்தக் கிளை  தன்னை தன் மூதாதையர்களின் பிரதிநிதி என்று அறிவித்து கொள்ள விரும்புவதாய் ஒரு உத்தேசமாய் கருதிக் கொள்ளுங்கள். எழுத்து நோக்கி நீண்டு கொண்டே இருக்கும் கரங்களுக்குச் சொந்தக்காரன், ஒரு சில புத்தகங்களை எழுதியவன், இன்னும் சில புத்தகங்களை எழுதித் தீர்க்க ஆவல் கொண்டவன் என்பதாயும் எனது அடையாளம் வரையறுக்கப்படலாமென்றாலும்...

காலத்தின் கைகளில் தன்னை முழுமையாய் கொடுத்தவன் நான் என்றுதான் என் பிரக்ஞை என்னை எனக்கு அறிமுகம் செய்கிறது.

ப்ரியத்தோடு என்னை எழுத அழைத்த தம்பி குமாருக்கு எனது நன்றிகள். கட்டுரை அபஸ்வரத்திலிருந்து வெடித்திருக்கிறது ஆனால் சுபஸ்வரம்தான் அது என்பதை உணர்வீர்களாக;

தேவா சுப்பையா.
**********

ன்னைப் பற்றி நான் என்னும் தொடர் ஆரம்பித்த போது பலருக்கு கட்டுரை கேட்டு மின்னஞ்சல் அனுப்பினேன். சிலர் மட்டுமே அனுப்பிக் கொடுக்க பதிவைத் தொடர முடியுமா என்ற யோசனையில் முகநூல் வழியாக வாட்ஸ் அப் வழியாக சிலரைப் பிடித்து கட்டுரை வாங்கி போட்டு வந்த எனக்கு இந்த வாரம் போட எந்தக் கட்டுரையும் இல்லாத நிலையில் மனசுக்குள் வந்தவர் தேவா அண்ணன். 

அவரிடம் முன்பே சொல்லியிருந்தாலும் அவரின் தற்போதைய கம்பெனி சூழலால் விரட்டிக் கேட்கவில்லை. இந்த வாரத்துக்கு அவரை விட்டால் வேறு வழி இல்லை என்பதால் கண்டிப்பாக வேண்டும் என்று வாட்ஸ் அப்பில் செய்தி அனுப்பி... சொல்லப் போனால் நச்சரித்து... அவர் சூழலில் எனக்காய் எழுதி இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்கும் போதுதான் அனுப்பிக் கொடுத்தார். எனக்காய்... தன் வேலைகளுக்கு இடையில் எழுதிக் கொடுத்த தேவா அண்ணனுக்கு நன்றி.

தொடர்ந்து வாசித்து கருத்துக்களைப் பகிர்ந்து வரும் உறவுகளுக்கும் நன்றி.

விருப்பம் இருப்பவர்கள்... இதுவரை என்னைப் பற்றி நான் எழுதாதவர்கள் எழுத விரும்பினால் 'kumar006@gmail.com'-ல் தொடர்பு கொள்ளுங்கள்.

நன்றி.
-'பரிவை' சே.குமார்.

14 கருத்துகள்:

  1. மண்ணின் மணம் வீசுகின்றது..

    அருமையாக பதிவு செய்திருக்கின்றீர்கள்.. எழுத்தை நோக்கி நீண்டு கொண்டேயிருக்கும் கரங்கள் மேலும் மேலும் ஏற்றம் பெறுவதாக!..

    வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  2. என்னை பற்றி நான்' என்பது தலைப்பு , இங்கே 'நான்' ஐ தவிர்த்து முன்னோர்கள், பெற்றோர்,உறவுகள் , வாழ்ந்த வாழும் மண்ணையும் பேசி அப்படியே போறப்போக்கில் நிலையாமையையும் நம் புத்திக்குள் ஏற்றி பதித்து விடுகிறார் அதுதான் நண்பர் தேவா. இவரது எழுத்துகள் எல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல நம் எல்லோரின் வாழ்க்கை !!

    வாழ்த்துக்கள் ப்ரிய நண்பா!!!
    ...

    அன்பு குமார்,
    இவரிடம் இந்த கட்டுரையை எப்படி
    எழுதி வாங்கினீர்கள் என ஆச்சர்யபடுகிறேன் தம்பி. :-) இரண்டு வரி எழுதி வாங்க நான் என்ன கஷ்டப்பட்டேன் என இப்போது நினைத்து பார்க்கிறேன் :-)) மிக்க மகிழ்ச்சி + வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அக்கா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
      என் மேல் கொஞ்சம் பிரியம் அதிகம்... ஊர்ப்பாசம் போலும்...
      அதைப் பயன்படுத்தி கேட்டு வாங்கிவிட்டேன்....

      நீக்கு
  3. நண்பரைப் பற்றி அறிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு
  4. அருமையான எழுத்து நடை. புதியதாய் நண்பர் ஒருவரை அறிந்து கொண்டோம். மிக்க நன்றி குமார். வாழ்த்துகள் இருவருக்கும்

    பதிலளிநீக்கு
  5. எழுத்துக்களோடு நம்மையும் கடத்திவிடுவார்.. அதுதான் தேவா அண்ணன். :)

    பதிலளிநீக்கு
  6. தேவா பக்கம் முன்பு சென்று வாசிப்பேன் .கொஞ்ச நாளா எழுதல இல்ல ?
    அழகான வசீகரிக்கும் எழுத்துக்களுக்கு சொந்தக்காரர் ..
    வாழ்த்துக்கள் தேவாவுக்கும் அவரைப்பற்றி எழுத வைத்த குமாருக்கும்

    பதிலளிநீக்கு
  7. நண்பர் தேவா சுப்பையா அவரகளைப் பற்றித் தெரிந்துகொண்டேன். தன்னை எழுத்தாளனாக்கியது எது என்பதை அருமையாக விவரித்துள்ளார். ஒரு தலைமுறையின் கல்வியும் படிப்பறிவும், அடுத்த மூன்று தலைமுறைகளில் ஒன்றிலாவது ஓர் எழுத்தாளனை உருவாக்கத் தவறு வதில்லை என்ற அறிவியல் உண்மையை அவர் வாழ்வு எடுத்துக்காட்டுகிறது. மத்தியக் கிழக்கு நாடுகளில் நம்மவர்களின் வாழ்க்கைமுறை சற்றே விசித்திரமானது. அதை எதிர்கொண்டு, எழுத்தாளனாகவும் பரிணமிப்பது எளிதான காரியமல்ல. நண்பருக்கு வாழ்த்துக்கள். அவருடைய வலைப்பக்கத்தின் இணைப்பைக் கொடுத்திருக்கலாமே!

    -இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் ஐயாவுக்கு...
      கருத்துக்கு நன்றி.
      warrior என்ற வார்த்தையிலும் வலைத்தள முகப்புப்படத்திலும் அதற்கான இணைப்பு கொடுக்கப் பட்டிருக்கிறது ஐயா....

      இதுவரை எழுதிய எல்லாருக்கும் கொடுத்திருக்கிறேன் ஐயா....

      நீக்கு
  8. இங்கு கருத்துச் சொல்லியிருக்கும் துரை செல்வராஜூ ஐயா, ஸ்ரீராம் அண்ணா, துளசி அண்ணா, சகோதரி ஏஞ்சலின், நண்பர் கூர்மதியான், சகோ. நாகேந்திர பாரதி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  9. அருமை
    நண்பருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. முன்பு தேவா சுப்பையா அவர்களின் பதிவுகளை படித்து இருக்கிறேன்.
    நிறைய புத்தகங்கள் எழுத வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. புதிய நட்பினையும் வலைப்பூவையும் அறிந்திட முடிந்ததில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி