சித்திரை முதல் நாள்...
தமிழ் வருடப் பிறப்புன்னு சொன்னா ஒரு சாரார் 'தை'தான் வருடப் பிறப்பு என்றும் ஒரு சாரார் சித்திரையே வருடத்தின் நுழைவாயில் எனவும் கொடி பிடிப்பது கொஞ்சக் காலமாகவே இருக்கிறது. அதுவும் இந்த முகநூலில் சொல்லவே வேண்டாம்.... எந்த ஒரு நிகழ்வு என்றாலும் அது சமீபத்திய சல்லிக்கட்டு பிரச்சினையாகட்டும்.... நெடுவாசல் பிரச்சினையாகட்டும்... தில்லியில் அம்மணமாக நம்மை நிற்க வைத்த (இங்கு நம்மை என்பது ஒரு விவசாயி அம்மணமாக நின்றால் விவசாயக் குடும்பத்தில் பிறந்த நாமெல்லாம் அப்படி நிற்க வைக்கப்பட்டதாகத்தான் நான் நினைக்கிறேன்) நிகழ்விலாகட்டும்... திருப்பூர் சாராயக்கடைக்கு எதிரான பிரச்சினையாகட்டும் ஆதரித்தும் எதிர்த்தும் பேச இரண்டு குழுக்கள் உண்டு. எல்லாத்துக்கும் அடிச்சிக்கிட்டு நாறுவானுக... அதிலும் குறிப்பாக மத்திய அரசின் ஜால்ராக்கள் அடிக்கும் லூட்டி தாங்காது. இந்தப் பயகதான் சல்லிக்கட்டு போராட்டத்தில் காண்டம் கூடை கூடையாக அள்ளினார்கள் என்று சொன்னவர்கள்.... இவர்களின் குழந்தைகளோ... அக்கா தங்கச்சியோ... அம்மாவோ... பொண்டாட்டியோ கலந்து கொண்டிருந்தால் இப்படிப் பேசுவார்களா...?
சரி விடுங்க... சித்திரை ஒண்ணு நம்மள மாதிரி விவசாயக் குடும்பத்தானுக்கு ரொம்ப சிறப்பான நாளுங்க.... வயல்லாம் பசுமையா இருந்து... கதிர் அறுத்து... புது நெல்லில் பொங்கல் வைக்கும் நாள்தான் தமிழ் வருடப் பிறப்பு என்று சொல்வதை ஏற்றுக் கொள்ளவோ எதிர்க்கவோ விரும்பவில்லை... அவரவர் விருப்பம் எப்படியோ அப்படி இருப்போம்.... இப்ப சாமி கும்பிடுவதும் கும்பிடாததும் அவரவர் விருப்பம் என ஆத்திகமும் நாத்திகமும் பேசிக்கிட்டு அங்காளி பங்காளியா இருக்கலையா... அப்படி இருந்துட்டுப் போவோம்ன்னு சொல்றேன்... உனக்கு சித்திரை ஒண்ணு வருடப் பிறப்பு இல்லைன்னு தோணுனா பேசாம எப்பவும் போல வேலையைப் பாக்கலாமே.. அதை விட்டுட்டு வாழ்த்துச் சொல்லாதீக... கொண்டாடாதீக... ஆரியன் திராவிடன் என்றெல்லாம் எதற்காக பதிவுகள்... நமக்கு நல்லேரு கட்டுற இந்த நாள் இனிய நாள்தாங்க.
நல்லேருன்னா இன்னைக்கு யாருக்குமே தெரியாமப் போச்சு... அது என்னன்னு கேட்டா... என்ன நல்லாயிருவா... நாங்க நல்லாத்தான் இருக்கோம்ன்னு சொல்றாங்க,,, இப்ப எங்க விஷாலுக்கே பதில் சொல்ல முடியலை... ஆனா நம்மாளுக்கு ஆடு, மாடு, கோழி, செடிகள் வளர்க்கிறதுன்னு கிராமத்து வாழ்க்கையில ரொம்ப இஷடம் நம்மள மாதிரி... சரி நல்லேருக்கு வருவோம்.... பள்ளியில் படிக்கும் காலத்தில் வீட்டில் காளை மாடுகளும் கலப்பையும் இருக்கும் (ஏர்தான் எங்க பக்கம் கலப்பை) காலையில் மாட்டைக் குளிப்பாட்டி பொட்டு வைத்து கலப்பை நெகத்தடி (சுத்த தமிழ்ல சொன்னால் நுகத்தடி) எல்லாம் கழுவி, திருநீறு பட்டை இட்டு குங்குமம் வைத்து நல்ல நேரம் பார்த்து ஒரு சிறிய ஓலைப் பெட்டியில் நெல் எடுத்து கொஞ்சம் தண்ணீரும் எடுத்து பூஜைக்குரிய சாமன்களும் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு முன்னே இருக்கும் மாரியம்மனை வணங்கி இந்த வருடம் நல்லா விளையணும் தாயேன்னு வேண்டிக்கிட்டு வயலுக்குப் போயி... அதுவும் போகும் போதே அம்மான் (மாமா) நல்லேரு கட்ட வரலை... சித்தப்பா கிளம்பலையா... என ஒவ்வொருவரையும் அழைத்தபடி வயலுக்குச் செல்வார்கள்...
சனி மூலையில் மாட்டைக் கலப்பையில் பூட்டி... கோணச்சால் அடிக்காமல் நேராக இரண்டு சாலோ மூன்று சாலோ ஓட்டி... சனிமூலையில் விதையிட்டு தண்ணீர் ஊற்றி தீபம் பார்த்து சாமி கும்பிட்டுத் திரும்புவார்கள். இது எப்போ நான் பள்ளியில் படிக்கும் காலத்தில்... கல்லூரிக்குப் போகும் போது காளைகளும் ஊருக்குப் போயாச்சு... வீட்டுக்குப் பாலுக்கென ஒரு பசு நிற்பதே அரிதானது. வயலெல்லாம் டிராக்டர் உழவுதான்... ஏம்ப்பா.... சால் என்ன கோணலாப் போடுறே.... நேர பாத்து உழுப்பா... என்று சொன்ன காலம் போய் வரப்பாவது ஒண்ணாவது டிராக்டர்க்காரன் இழுக்கிறதுதான் கோடுன்னு ஆயிப்போக... நல்லேருக் கட்ட டிராக்டரை வச்சா உழ முடியும்.... ஒரு கலக்கொட்டோ மண்வெட்டியோ எடுத்து கழுவி திருநீறு பொட்டு வைத்து கொஞ்சம் நெல்லெடுத்துக்கிட்டு சொம்புல தண்ணி எடுத்துக்கிட்டு அதே மாதிரி மாரியத்தாக்கிட்ட வேண்டிக்கிட்டு வயல்ல போயி சனி மூலையில கொத்தி விதையிட்டு தீபம் பார்த்து வருவோம். இப்ப வயலெல்லாம் கருவை முளைத்து விவசாயம் அத்துப் போன பூமியில் அந்த நடைமுறை மட்டும் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. விவசாயம் தொலைந்தது வேதனையிலும் வேதனை.... மானத்தை விடுத்து போராடிக் கொண்டிருப்பவர்களைக் கண்டு கொள்ளாமல் மான் கீ பாத் என கவுதமியையும் ஐஸ்வர்யாவையும் பார்த்து குசலம் விசாரித்துக் கொண்டிருக்கிறது இந்தியா... டிஜிட்டல் இந்தியான்னு விவசாயிகளைத் தொலைச்சிட்டு ரப்பர் அரிசி சாப்பிட வைக்காமல் விடமாட்டானுக போல.
இடையில இடையில வேதனை வெடிச்சி எழுத்து வேற பக்கம் போயிருது... அப்ப சித்திரையில நல்லேரு கட்டுற நாள் சிறப்பான நாள்... வயல் விளைந்து நல்ல அறுபடை செய்ய வேண்டும்... பஞ்சம் பட்டினி இல்லாத வாழ்வு வேண்டும் என்று வேண்டிக் கொண்டு நல்லேரு கட்டி மகிழும் நாள்தான் வருடத்தின் தொடக்க நாள்... நன்றாக விளைந்து... பட்டி பெருகி, பால் பானை பொங்கி சந்தோஷித்து தங்களின் வெள்ளாமை நல்ல விளைச்சலைக் கொடுத்ததுக்கு சாமிக்கும் தங்களோடு வயலில் வேலை பார்த்த மாடுகளுக்கும் சிறப்பு செய்யும் தை ஒண்ணு... வருடத்தின் தொடக்க நாளாய் எனக்குத் தெரியவில்லை... எது எப்படியோ சித்திரை ஒண்ணு உழவனுக்கு உகந்த நாள்தான்.
அப்புறம் இன்னைக்கு ராத்திரி தேவகோட்டையில் கரகாட்டம், பாட்டுக் கச்சேரி, நாடகம் என களைகட்டும்... படிக்கும் போது சைக்கிளில் கூட்டமாய் வந்து ஒவ்வொன்றையும் கொஞ்சக் கொஞ்ச நேரம் பார்த்து ரசித்து இடையில் சினிமாவுக்கு வேறு போவதுண்டு.... ஆஹா... அதெல்லாம் ஒரு கனாக் காலம் இல்லை... இனி காணக் கிடைக்காத காலம்... என்ன ஒரு சந்தோஷமான நாட்கள்... இப்போ பண்டிகை தினங்கள் எல்லாம் சந்தோஷத்தைத் தின்று தொலைக்காட்சிக்கு முன்னர் தவம் கிடக்க வைத்து விட்டது கால மாற்றம்... அதில் கிடைத்த சந்தோஷத்தில் ஒரு துளி கூட இதில் இல்லை என்பதை பண்டிகை நாளில் சுற்றித் திரிந்து அனுபவித்து வாழ்ந்தவர்களால் மட்டுமே அறிய முடியும்.
எல்லாருக்கும் சித்திரை முதல் நாள் வாழ்த்துக்கள்...
இன்னைக்கு இங்க பாரதி நட்புக்காக அமைப்பினர் 'ஆர்க்கெஸ்ட்ரா' வச்சிருக்காங்க.. விஜய் டிவியில் 'தமிழகத்தின் தங்கக்குரல் தேடலில்' முதலிடம் பிடித்த கேரளத்து அல்கா அஜீத்துடன் இன்னும் மூவர் வருகிறார்கள். அண்ணன் கில்லர்ஜி இருந்தா ரெண்டு பேரும் ஜோடி போட்டுக்கிட்டு வேடிக்கை பார்க்கப் போவோம்... ம்... அவரும் ஊருல பாத்துக்கிறேன்னு பொயிட்டாரு... இப்ப எழுத்தாளர் கனவுப்பிரியன் அவர்கள் ஜோடி போட்டுக்கலாம் வாங்கன்னு சொல்லியிருக்கிறார். எனவே இரவு 'ஆர்க்கெஸ்ட்ரா' பார்க்கப் போறோம். வர்றவங்க வாங்க....
-'பரிவை' சே.குமார்.
இன்று ஆர்கெஸ்ட்ரா நான் தேவகோட்டையில் பார்க்கப் போறேன் (பழையபடி)
பதிலளிநீக்குஇனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்கு-இராய செல்லப்பா (மீண்டும்) நியூஜெர்சி
நல்லாயிருங்க என்று வாழ்த்த நாள் என்ன பொழுதென்ன!
பதிலளிநீக்குஇனிய சித்திரைத்திருநாள் வாழ்த்துகள்.
இன்று வாழ்த்து சொன்னால் சித்திரையை வருடப் பிறப்பு என்று கொள்ளலாமா இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குசித்திரையோ.. தையோ.. ஆனால் இன்று இரண்டுமே விவசாயியை கைவிட்டு விட்டதே அதை சரி செய்வதை விட்டு அவசியமற்ற விவாதங்கள் தேவையில்லை என்பது எனது கருத்து.
பதிலளிநீக்குதமிழனின் ஒற்றுமை தொடங்கும் பொழுதே சிதறடிக்கப்படுவது இப்படியான தருணங்களில்தான்.
இன்று எத்தனை கிராமங்களில் ஏர் பூட்டினார்கள் ?
எல்லா இடங்களுமே வறண்ட பூமிதான்.
இரண்டு மாதம முன்பு தை வந்ததே அன்றும் இதே நிலைதான்.
இப்படி வெட்டி விவாதம் செய்வதைவிட மரம் வளர்ய்து மழை பெறும் வழியை தேடுவோம்.
சித்திரை புத்தாண்டு வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குசித்திரை திருநாள் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஇந்த வருடத்திலாவது நன்மைகள் சேரட்டும்..
பதிலளிநீக்குபுத்தாண்டு நல்வாழ்த்துகள்..
இனியா புத்தாண்டு வாழ்துக்கள்
பதிலளிநீக்குதாமதமாகிவிட்டது.....புத்தாண்டு வாழ்த்துகள். இவ்வருடத்திலேனும் விவசாயத்திற்கு நன்மை விளையட்டும் என்று வேண்டுவோம்....
பதிலளிநீக்கு