சனி, 11 பிப்ரவரி, 2017

மனசு பேசுகிறது : கூத்து

ற்பொழுது தமிழகத்தில் நடக்கும் கூத்துக்களை உலகமே பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறது. ஒரு பெண்ணின் ஆசைகள் அதிகமாகும் போது என்ன நிலைக்கு அவர் செல்வார் என்பதையும், எப்படியும் சம்பாதிக்க வேண்டும் என்பதால் மக்களால் மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவ்வளவு கேவலமான செயல்களைச் செய்கிறார்கள் என்பதையும், இன்றைக்கு இணைய வசதி சிறிய கிராமம் வரைக்கும் சென்ற பிறகும் கூட இன்னும் மக்கள் 1990 ஆம் ஆண்டிற்கு முன்னான காலத்தில் இருக்கிறார்கள்... இருப்பார்கள் என்ற நினைப்பில் கொடுக்கும் பேட்டிகளையும், சிறை வைக்கப்பட்டதை அறிந்த காவல்துறையும், நீதிபதிகளும் ஏன் கவர்னரும் கூட அதை விசாரிக்கிறோம் என்று சொல்வதையும் பார்க்கும் போது தமிழகம் ஏதோ ஒரு சுழலுக்குள் சிக்கி நிற்கிறது என்பது மட்டும் தெள்ளத் தெளிவாகிறது. தற்போதைய முதல்வர் நல்லவர் என்பதாய் தெரிவது காட்சிப் பிம்பம்தானே ஒழிய சுத்தத் தங்கம் என்பதெல்லாம் இல்லை. இன்றைய நிலையில் மக்கள் மனதில் தானே பொதுச்செயலாளர், தானே முதல்வர், நான் நினைத்தால் எதையும் செய்வேன், பணம் கொடுத்தால் எதையும் தனதாக்க முடியும் என்ற மமதை மறைந்த முன்னாள் முதல்வரைப் போலே அவரின் பின்னால் நின்றவருக்கும் வந்திருப்பதை, அவரின் அரசியல் ரவுடியிஸத்தை மக்கள் விரும்பவில்லை என்பது மட்டும் தற்போதைய முதல்வருக்கான ஆதரவாய் மலர்ந்து கொண்டிருக்கிறது. எது எப்படியோ இவரா, அவரா என்ற நிலையில் மத்திய அரசு தனது நிலையை தற்போதைய சூழலில் தமிழகத்தில் பலமானதாக ஆக்கிக் கொள்ள முயல்கிறது. அதற்காக பின்வாசல் வழி நுழைய பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கி அப்படி ஆகும் பட்சத்தில் தமிழகம் தன் சுயம் இழக்கும் என்பது உண்மை. இந்தக் கூத்து என்ற தலைப்பு அரசியல் பேச இல்லை என்பதால் தலைப்புக்குள் போயிடலாம்.

Image result for கரகாட்டம்

தமிழர்களின் பாரம்பரியக் கலைகள் எல்லாம் மெல்ல மெல்ல கவர்ச்சி என்னும் காலனிடம் அகப்பட்டு அழிந்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் அறிவோம். இதைப் பற்றி மனசு தளத்தில் சில வருடங்களுக்கு முன்னர் கட்டுரை ஒன்று எழுதியிருந்தேன். கரகாட்டம் என்பது காம ஆட்டமாகி ரொம்ப வருடமாகிவிட்டது. கரகம் என்னும் புனிதம் ஆபாசப் பேச்சுக்களாலும் ஆபாச நடனங்களாலும் தன் சுயத்தை இழந்து நிற்கிறது. முன்னெல்லாம் கரகம் வைத்து ஆடும் பெண்கள் விரசமில்லாத ஆட்டம் ஆட, குறவன் குறத்தி ஆட்டத்தில் கூட ஆபாசம் என்பது ஊறுகாயாக இருந்து வந்தது. அது அப்படியே மாறி கரகம் ஆடும் பெண்களில் ஆரம்பித்து குறவன், குறத்தி, பபூன் என எல்லாருமே ஆபாசத்துக்குள்ளும் அருவெறுப்பான பேச்சு மற்றும் ஆட்டத்துக்குள்ளும் இறங்கிவிட கரகாட்டம் காம ஆட்டமாகிவிட்டது.

கரகாட்டம் மட்டுமின்றி ஆடல் பாடல் என்று ஒரு நிகழ்ச்சி, அதைக் கேட்கவே வேண்டாம்... சினிமாவில் இருக்கும் குத்து பாட்டுக்களை எல்லாம் தொகுத்து. ஆபாசத்துடன் நேரடியாக அரங்கேற்றுவதே இந்த ஆடல்பாடல்கள்... கேவலத்தின் உச்சம்... பல இடங்களில் பொறுக்க முடியாத போலீசார் பாதியிலேயே நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்ளச் சொன்ன நிகழ்வுகளும் உண்டு. தேவகோட்டைப் பகுதியில் ஆடல் பாடல் நடத்த தடை விதித்திருந்தார்கள். இப்போதும் அந்த தடை இருக்கா என்று தெரியவில்லை. ஆடல்பாடல் தடை வந்தபோது முளைத்ததுதான் கிராமிய தெம்மாங்கு, கிராமிய ஆடல்பாடல் என்ற போர்வையில் இடையிடையே குறவன் ஆட்டம் அது இது என ஆபாசப் பேச்சுக்களையும் ஆட்டத்தையும் திணித்து வைத்துவிட்டு மண்ணின் மனம் மாறாமல் ஆபாசம் இன்றி நடக்கும் கிராமிய இசை நிகழ்ச்சி, எங்களுக்கு பாதுகாப்பளிக்கும் காவல்துறைக்கு நன்றி என்று பேசியபடியே ஆடல்பாடலின் பாதியை அழகாய் கிராமிய என்னும் சொல்லுக்குள் அடக்கிவிடுகிறார்கள். 

இவற்றில் எல்லாம் இருந்து சற்றே விலகி வள்ளி திருமணம், அரிச்சந்திர மயானகண்டம், சத்தியவான் சாவித்திரி, அர்ச்சுணன் தவசு, பவளக்கொடி, முத்தாளம்மன், வீரபாண்டிய கட்டப்பொம்மன் என புராணங்களும் வரலாறுகளும் மேடை நாடகமாக (எங்க பக்கமெல்லாம் கூத்துன்னுதான் சொல்வோம்) நடத்தப்பட்டு வருகிறது. திருவிழாக்களில் சந்தோஷமான நாடகம் என்றால் அது வள்ளி திருமணமாகத்தான் இருக்கும் மற்றதெல்லாம் ஏதோ ஒரு சோகம் கலந்திருக்கும் என்பதால் மகிழ்ச்சியான திருநாளில் லோகிதாஸன் இறந்ததையும் சத்தியவான் இறந்ததையும் வச்சி சரி வராதுப்பா... வள்ளி திருமணம் வச்சிடலாம்... அதுலதான் முருகன் மானைத் தேடிப்போயி வள்ளியை கல்யாணம் பண்றதோட மங்களமா முடிப்பாங்கன்னு சொல்லி அதிகமாக நடத்தப்படும் நாடகம் வள்ளி திருமணம்தான். பிரார்த்தனை நாடகம் என்றால் வள்ளி திருமணத்துக்கே முதலிடம்.

இந்த நாடகங்களும் கரகாட்டம், ஆடல்பாடல்களுடன் போட்டி போட முடியாத ஒரு நிலை வந்தபோது பபூன், டான்ஸின் பேச்சும் ஆட்டமும் கரகாட்டத்துக்கு இணையாக மாறிப்போனதுதான் வேதனை... நாடகமும் அழியும் சூழல் வரும்போது ராஜபார்ட் என்று சொல்லக்கூடிய முக்கிய கதாபாத்திரங்கள் கூட ஆபாசமாக பேச வேண்டிய சூழல், இதிலும் சிலர் விதிவிலக்காய் இருந்திருக்கிறார்கள்  குறிப்பாக வள்ளி திருமணம் என்றால் முருகன், வள்ளி, நாரதர் மூவருமே முக்கியம். அதிலும் வள்ளியும் நாரதரும் நடத்தும் தர்க்கத்துக்காகவே நாடகம் பார்ப்பவர்கள் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். இன்னார் வள்ளி, இன்னார் முருகன் என்றால் தர்க்கம் சூப்பரா இருக்கும்ப்பா கண்டிப்பா போகணும் என்று நாலைந்து மைல்களுக்கு அந்தப்பக்கம் நாடகம் நடந்தாலும் போய்விட்டு வருவார்கள். அடுத்தநாள் அதைக் குறித்து சிலாகித்துப் பேசுவார்கள். நாரதரும் வள்ளியுமே ஆபாசமாக பேசும் நாடகங்கள் இப்போது அதிகம். அதுவும் பபூன் இப்போ எல்லாருடனும் நடிக்கும் காட்சிகள் இருப்பதால் ஆபாச பேச்சுக்கு பஞ்சமிருப்பதில்லை.

நாடகங்களில் உண்மையான சண்டைகளும் அரங்கேறுவதுண்டு... தர்க்கம் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடக்கும் போது ஒருவருக்கு ஒருவர் சரமாரி கேவலமாக பேச ஆரம்பித்து வாடா... போடா... வாடி... போடியில் எல்லாம் முடிந்ததுண்டு. அரிச்சந்திர மயானகண்டம் நடக்கத்தில் காமராசு என்ற பேராசிரியர் நடிக்கிறார் என்றால் அவ்வளவு கூட்டம் கூடும் அவருடன் நடிக்க பெரும்பாலும் சிவகாமி என்பவர்தான் வருவார். இருவருக்குமான சுடுகாட்டு தர்க்கம் அவ்வளவு அருமையாக இருக்கும். அதேபோல் வள்ளி என்றால் கரூர் இந்திராவுடன் நடிக்க அவருக்கு இணையான நாரதர் போட வேண்டும். அவர் சிலருடன் நடிக்கவும் மாட்டார். இவர்கள் கூட ஒரு சில நாடகங்களில் தர்க்கத்தின் முடிவில் கோபப்பட்டு வெளியேறிய நிகழ்வுகளையும் கேள்விப்பட்டதுண்டு.  நாடகங்களில் பபூன்-டான்ஸின் நடனங்கள் தற்போது ஆபாசத்தின் உச்சமாகிவிட்டன. எல்லாம் காலத்தின் கோலம் என்றாலும் நமது கலைகள் எல்லாம் அழிந்து வருவது வருத்தத்துகுறியது.

இரண்டு நாள் முன்னர் இணையத்தில் உலாவியபோது வள்ளி திருமணம் நாடகம் நாரதர் முத்து சிப்பியின் தர்க்கம் அப்படின்னு ஒண்ணு கண்ணில் பட கொஞ்ச நேரம் பார்க்கலாமே என்று பார்த்தால் உடம்பு குண்டுதான்... ஆனால் குரல் ஆஹா... எல்லாப் பாடல்களையும் மிக அழகாகப் பாடுகிறார். நாடக நடிகர்கள் இப்படி பாடுவது அபூர்வம்... அவரின் தர்க்கம் உண்மையிலேயே பாராட்டணும்.. புராணக்கதைகளை எல்லாம் சொல்லி... அட யார்ரா இந்த குண்டு நாரதர் என்று தேட,  காரைக்குடிக்காரர்... பெரும்பாலும் நாடக நடிகர்கள் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிகம் இருப்பார்கள். அவரின் தர்க்கங்களாக தேடிப் பார்த்ததில் பெரும்பாலும் அவருடன் தர்க்கம் பண்ணியவர் வள்ளி கலைமகள்... கரூர் இந்திராவைப் போல் இவரும் கலக்கலாக தர்க்கம் பண்ணுகிறார். நாரதருக்கு இணையாக கேள்வியும் பதிலும் என ரொம்ப அருமையாக இருந்தது. இவர்களின் தர்க்கத்துக்காகவும், நாரதரின் பாடல்களுக்காகவும் ஒரு ரசிகர் கூட்டம் வரும் என்பதையும் அறிய முடிந்தது. அழிந்து வரும் கலைகளை இவர்களைப் போன்றோர் இன்னும் முட்டுக் கொடுத்து தூக்கி நிறுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

முத்துச் சிற்பி - கலைமகள் தர்க்கம் காண...


ஆபாசத்தின் பிடியில் கலைகள் சிக்கி ரொம்ப நாளாகிவிட்டது... நாம ஆபாசம், அருவெறுப்பு என்று கூச்சலிட்டாலும் சின்னக்குழந்தைகளை 'நேத்து ராத்திரி யம்மா'ன்னு பாட வச்சி தமிழகத்தின் தங்கக் குரலைத் தேடும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ரசித்து என்னம்மாப் பாடுது பாருன்ன்னு சொல்ற உலகத்துலதான் இருக்கோம். இனி ஆபாசமில்லாத கிராமிய கலைநிகழ்ச்சிகளை நடத்துவது என்பது கடினம் என்றாலும் இவர்களைப் போன்ற நல்ல கலைஞர்களைக் கொண்டு நம் கிராமங்களில் நிகழ்ச்சியை நடத்தலாமே.

'டேய் கூத்துப் பாக்க வாறீயா... நாரதர் முத்துச் சிப்பியாம்... வள்ளி கலைமகளாம்... பபூன் டான்ஸ் ராதாகிருஷ்ணநும் மணிமேகலையுமாம்' என்று எங்க ஏரியாவில் யாராவது ஒருவர் சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆமா ராதாகிருஷ்ணன் - மணிமேகலை யாருன்னுதானே கேக்குறீங்க... இணையத்தில் தேடுங்க...
-'பரிவை' சே.குமார்.

9 கருத்துகள்:

  1. தமிழர் கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும்

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான தர்க்கம். சுவாரஸ்யமாய் இருந்தது. அந்தப் பெண் பேச்சும் பாவனையும் சற்று ஊர்வசிஜாடையில் இருக்கிறாரோ..!

    பதிலளிநீக்கு
  3. நல்ல கட்டுரை நண்பரே

    பதிலளிநீக்கு
  4. மீண்டும் பல நிலைமை திரும்பும் என்று நினைக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  5. இன்று ஆதரிப்போரெல்லாம் (நாணத்துடன் நானும்தான்) வேறு வழியின்றி தான் ஆ.. தரிக்கிறோம். ஆம். உள்ள "தில்' நல்ல "தை' தேர்வு செய் வதற்கு பேர் தானே தேருதல் அது வரை காத்திருப்போம்... வே று வழி?.

    பதிலளிநீக்கு
  6. முதலில் சொல்லியிருக்கும் கூத்து அசிங்கமான கூத்து.

    காணொளி தர்க்கம் வித்தியாசமாக சுவாரஸ்யமாக இருந்தது. அந்தப் பெண் கொஞ்சம் நடிகை ஊர்வசி போல இருப்பது போல் தோன்றியது. கை அசைவுகள், பேசும் விதம்...நமது பழங்கலைகள் பாதுகாக்கப்பட வேண்டும்...

    பதிலளிநீக்கு
  7. அருமையான விழிப்புணர்வுப் பதிவு. பெருமை பேசுகின்ற நம் பல கலைகளை நாம் சிறிது சிறிதாக மறந்துவருகிறோம் என்பது உண்மையே.

    பதிலளிநீக்கு
  8. நல்லவற்றை எல்லாம் அல்லவை ஆக்கிட ஒரு கூட்டம். ஆனாலும் நல்லவை நிலைபெற்றே ஆகவேண்டும்.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி