என்னைப் பற்றி நான் என்னும் பகுதியை தொடர்ந்து பகிரும் விதமாக உறவுகள் கொடுக்கும் ஊக்கத்தின் தொடர்ச்சியாய் இந்த வாரம் இந்தப் பகுதியை அலங்கரிப்பவர் அன்பின் அண்ணன் கில்லர்ஜி.
கில்லர்ஜி...
பெரிய மீசைக்குச் சொந்தக்காரர்... அந்த மீசை கொடுக்கும் பயத்தைத் தாண்டி பாசத்தை... நேசத்தை... கொட்டிக் கொடுக்கும் மனிதர். அபுதாபியில் எழுத்தின் மூலமாகத்தான் இணைந்தோம். அடிக்கடி என்னைத் தேடி வந்த ஜீவன் அவர். இப்போது அவரும் ஊரில் செட்டிலாகிவிட, நம்மைத் தேடி வரும் உறவு இல்லாத நிலை என்றாலும் இத்தனை வருட கஷ்டங்களுக்குப் பிறகு குடும்பத்துடன் சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும் வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இதுதான் எழுதுவேன் என்றில்லாமல் எல்லாமும் கலந்து கட்டி எழுதுவதில் கில்லாடி கில்லர்ஜி... இவர் வைக்கும் தலைப்புக்கள்தான் மிகப் பிரபலம். இவர் எழுதிய முதல் புத்தகத்தின் பெயர் கூட வித்தியாசமாய்... ஆம் அதன் தலைப்பு 'தேவகோட்டை தேவதை தேவகி'.
ரசிக்க... சிரிக்க... சிந்திக்க... வைக்கும் பதிவுகளுக்குச் சொந்தக்காரர்... இவரின் தளத்தின் பெயர் ஆங்கிலத்தில் 'KILLERGEE' என்றிருந்தாலும் அதன் கீழே 'பூவைப் பறிக்கக் கோடாரி எதற்கு?' அப்படின்னு நம்மைப் பார்த்துக் கேட்டிருப்பார். அவரைப் பற்றிய அறிமுகத்தில் கூட 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து... வாழ்ந்து... என்று ஆரம்பித்து எழுதியிருப்பார். இவரின் தேவகோட்டை தேவதையை வாசித்தும் இன்னும் நூல் அறிமுகம் எழுதவில்லை என்ற மனக்குறை எனக்கு உண்டு. அவர் புத்தகம் வெளிவந்துவிட்டாலும் இன்னும் அதற்கான விழாவினை வைக்காமல் இருப்பதால் விழா வையுங்கள் எழுதுவேன் என்று அவரிடம் சொன்னபடி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.
என்னைப் பற்றி நானில் அவர் என்ன சொல்றார்ன்னு பார்க்கலாம் வாங்க... கில்லர்ஜியின் எழுத்து மனசு தளத்தில் உங்கள் வாசிப்புக்காக...
தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
வணக்கம் நட்பூக்களே... நலமா ?
‘’நாந்தாங்கோ கில்லர்ஜி‘’ எல்லோருக்கும் தெரியும் என்று நினைக்கிறேன் (எல்லோருக்கும் தெரிய நீயென்ன அப்பா டக்கரா ? என்று கேட்காதீர்கள்) என்னைப்பற்றி எழுத நண்பர் ‘’மனசு ‘’ சே. குமார் அவர்கள் கேட்டு மாதங்களாகி விட்டது நான் என்னத்தை எழுதுவது ? ச்சே இவரு ‘’மனசு‘’ல ஏன் நாம் நினைவுக்கு வந்தோம் ? என்றே தோன்றுகிறது காரணம் என்னை நானே இந்த ராச்சியம் முழுவதும் தேடுகின்றேன் விடையோ பூச்சியம்.
பிறவிப்பயனற்ற இவ்வுலக வாழ்வைக் கடத்திச்செல்லும் ஜந்து நான் இருப்பினும் இந்த ஜடத்திற்கும் சில கடமைகள் இருக்கின்றது எனது செல்வங்களை ஒரு நிலைப்பாட்டில் கொண்டு சென்று நிறுத்த வேண்டுமே... காரணம் இது மனிதம் தொலைத்து விட்ட மனிதர்கல் நிறைந்த கான்கிரீட் காடு.
உலக மக்கள் அனைவரும் மனித நேயத்துடன் வாழ வேண்டும் என்ற பேராசைக்காரன் நான் இது தவறென்றே... பல நேரங்களில் தோன்றுகிறது காரணம் குடும்ப உறுப்பினர்களையே இந்த வட்டத்துக்குள் கொண்டு வர முடியாத நான், வீட்டை விட்டு, தெருவை விட்டு, ஊரை விட்டு, மாவட்டத்தை விட்டு, மாநிலத்தை விட்டு, நாட்டை விட்டு, உலகத்தையே அடக்கி ஆள நினைக்கின்றேனே... இது பேராசை இல்லையா ? எனக்கும், ஜார்ஜ் புஷ்ஸுக்கு என்ன வித்தியாசம் ?
ஒரேயொரு வித்தியாசம்தான் நான் நினைப்பது பொதுநலமான நன்மையை வேண்டி... அவர் நினைத்தது..... ? ? ?
உலகிலேயே மிகக் கொடுமையான விடயம் என்ன தெரியுமா ?
செய்யாத தவறுக்கு பழி ஏற்பது இது நான் உலகை அறிந்தநாள் முதல் இறைவன் எனக்கு அளித்த பெருங்கொடை.
நான் ஒரு இடத்திற்கு நடந்து செல்லும்போது... எனது கிரகம் எனக்கு முன் ஹெலிகாப்டரில் போய் கயிறு கட்டி இறங்கி நின்று என்னை வரவேற்கிறது.
நான் யாருக்கும் கெடுதல் நினைப்பதையே மிகப்பெரிய பாவச்செயலாக கருதுபவன் என்னால் பலனை அடைந்தோர் எனக்கு செய்த கைமாறு தீமைகளே... இதில் அதிகப்படியான வாக்குகள் எடுத்து முன்னணியில் வந்து கொண்டு இருப்பவர்கள் எனது உடன் பிறந்தோர்.
நான் சுயநலவாதியாக மட்டும் வாழ்ந்திருந்தால் ? நிச்சயம் நான் இன்று கோடீஸ்வரன் காரணம் அவ்வளவு செல்வம் ஈட்டி இருக்கின்றேன் மன்னிக்கவும் அவ்வளவு செல்வம் ஈட்டி இருந்தேன் என்பதே சரி. என்னைத்தான் உயர விடவில்லை என்னை சதித்தவர்களும் உயர வில்லை. என்பது மற்றொரு வேதனை. பாசம் என்னை வழுக்கி விட்டது வேறென்ன சொல்வது ?
நான் இன்றைய தேதிவரை இந்த சமூகத்தில் பழகியவரை அரேபியர்கள் முதற்கொண்டு நான் பொய்யே சொன்னாலும், இவன் சொல்வது உண்மையாகத்தான் இருக்கும் என்று ஆணித்தரமாக நம்புவார்கள் அந்நிலையிலேயே என் வாழ்க்கை இன்றுவரை கடந்திருக்கின்றது இந்த நம்பிக்கையை நான் எனது இறுதி யாத்திரை வரை கொண்டு செல்வேன். அதேநேரம் எனது குடும்பத்தார் நான் சத்தியம் செய்து உண்மையை சொன்னாலும் பொய் என்னும்போது எனது மனநிலை எப்படியிருக்கும் ? என்னைக் கோபக்காரனாகவும் மாற்றுவது இந்த சூழலே...
இருப்பினும் நான் வாழ்வில் கடைசிவரை மறக்க முடியாத நண்பரும் உண்டு நட்பை நம்புவதற்கு ஓர் எடுத்துக்காட்டு ஒரு மனிதன், மற்றொரு மனிதனை எவ்வளவு பணம்வரை நம்பலாம் ? இதில் ஒவ்வொருவருக்கும் ஒரு எல்லை இருக்குமல்லவா ? இந்த நண்பர் நான் இந்தியா வரும் பொழுதெல்லாம் அவருடைய வங்கி அட்டையையும், கடவுச் சொல்லையும் எவ்வளவோ மறுத்தாலும் தேவைப்படும் வைத்துக் கொள்ளுங்கள் என்று திணிப்பார் இந்தியா வந்ததும் முதல்வேலையாக வங்கி இயந்திரத்தில் பரிசோதிப்பேன் அவரது தொகை கோடியை நெருங்கியே இருக்கும், அவரின் இந்த நம்பிக்கையை நான் காப்பாற்ற வேண்டுமல்லவா... அவரைவிட நான் சிறந்தவன் என்று பெயர் எடுக்க வேண்டுமே... வழி ? ? ? கடைசிவரை ஒருமுறைகூட நான் பணம் எடுத்துக்கொண்டதே இல்லை மீண்டும் திரும்பக்கொண்டு போய் கொடுப்பேன் நான் ஜெர்மன் நாட்டுக்கு செல்லும் போதும் கொடுத்தார் ஃப்ரான்ஸ் நாட்டில் இந்திய ரூபாய்க்கு ஆயிரம் ரூபாயில் அங்காடியில் பொருள் வாங்கினேன். அதுவும் அவர் பரிசோதிக்க சொல்லியிருந்ததால் நட்பூக்களே நான் இதைக் குறிப்பிட காரணம் தெரியுமா ? உறவுகளைவிட நான் நட்பை நேசிக்கின்றேன் அவையே எனக்கு நிம்மதியை தருகின்றன... அபுதாபியில் ஒரு அமைப்பே என்னை நம்பி பணத்தை கொடுத்து இருந்ததே... நாளைய எனது இறுதிநாளில் உறவுகளை விட நட்புகளின் கூட்டம் எனக்கு அதிகம் வரும் என்பது எனது திண்ணமான எண்ணம் அந்த நட்புக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ? அபுதாபியில் இருக்கும் பரமக்குடி இனிய நண்பர் திரு. M. சோலைராஜ் அவர்கள்.
படிக்காத நான் அரபு நாட்டுக்கு சென்றதும் நான் படித்துக்கொண்ட முதல் பாடம் இனி இந்த சமூகத்தில் வாழ்வதற்கு, உயர்வதற்கு வேண்டியது மொழியறிவு என்பதே... மொழிகள் படிப்பதை ஆரம்ப காலங்களில் ஒரு வேலையாகவே கருதினேன் இன்றைய வலைப்பூ சிந்தனை போன்று அன்று மொழிச்சிந்தனை. எனது கூற்றுப்படி மொழியே என்னை வாழ வைத்தது என்றால் அது மிகையில்லை. இதிலும் ஒரு குறையுண்டு அது சைனா மொழி பழக வேண்டும் என்பது அதற்கான சாத்தியம் குறைந்தே இருந்தது இருப்பினும் இனியெனும் கணினி மூலம் முயன்று வருவேன்,
மொழி பழகுவதில் வேடிக்கையான நிகழ்வுகளும் நிகழ்திருக்கின்றது ஆரம்ப காலத்தில் கம்பெனியில் வேலை செய்யும் பொழுது பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்களிடம் தகாலன் மொழியும் பழகினேன் ஓரளவு சமாளித்து பேசி விடுவேன் பழகத்தொடங்கும் பொழுதே... திடீரென எனக்கு ஞானோதயம் வந்து இந்த பெண்கள் அனைவரும் நம்மிடம் அன்பாக பழகுகின்றார்களே... இவர்களை நம்மை அத்தான் என்ற தமிழ் வார்த்தையில் அழைக்க வைத்தால் என்ன ? நம்மால் தமிழ் பிலிப்பைன்ஸ் சென்றும் வாழட்டுமே என்று தோன்ற... எனது கில்லர்ஜி என்ற இனிமையான பெயரை அத்தான் என்று மாற்றி சொன்னேன் அதன்படி ஒரு சில பெண்களைத் தவிர அனைத்து பெண்களும் என்னை அத்தான் என்றே அன்புடன் அழைத்தார்கள் இப்படி அழைத்தது ஒருவர், இருவர் அல்ல சுமார் 120 பெண்கள் சில பெண்கள் என்னை கூயா என்று அழைப்பார்கள் கூயா என்றால் அண்ணன் என்று பொருள் அந்த ஒரு சிலரை ஏன் கூயா என்று அழைக்க வைத்தேன் ? எவ்வளவு காலம் ? சுமார் ஒன்றரை வருடமாகி விட்டது ///பலநாள் திருடன் ஒருநாள் மாட்டுவான்/// என்ற தில்லாலங்கடி சுவாமிகளின் வாக்கு பொய்யாகுமா ? மேலாளர் (தமிழர்) வரும்பொழுது அத்தான் என்று அழைக்க மாட்டினேன். எப்படி ? எல்லாவற்றையும் இதில் சொல்ல முடியுமா ? வேறுவழி பதிவுதான் பிறகு வாங்கோ,,, எனது தளம்,
சாதனை
என்றால் எமது வாழ்வில் ஒன்றே ஒன்றுதான் இதை ஆசை நிறைவேறியது என்றும் சொல்லலாம் ஆம் மீசை அரபு நாட்டில் பெரிய மீசை வைக்ககூடாது அதுவும் இவ்வளவு பெரிய மீசை அதுவும் அரசு அலுவலகத்தில் தினம் அரேபியர்களோடு பழகிக்கொண்டு.... ? கடைசிவரை நான் உறுதியாக இருந்தேன் எனக்கு பிடித்தபடி எல்லாம் மீசை வைத்தேன் ஹிட்லர் மீசைதான் இன்னும் வைக்கவில்லை. பல நண்பர்களும் சொல்வார்கள் இந்தியாவில் போய் வைத்துக்கொண்டால் என்ன.... எதற்கு வம்பு ? அவர்களிடம் நான் எப்போது ? இங்கு இருபது வருடம் வாழ்ந்து விட்டேன் இந்தியாவில் கிழவன் ஆன பிறகு வைத்து என்ன பயன் ? கிழவன் ஆன பிறகு மகனுக்கு கொடுத்து விடுவேன் இதுதானே தொன்று தொட்டு நமது மரபு, ஆம் இந்த மீசையை வைத்துக்கொண்டு நான் எவ்வளவு போராடி இருப்பேன் என்பது அன்பின் ஜி குவைத் மன்னர் திரு. துரை செல்வராஜூ அவர்களுக்கும், அபுதாபி திரு. ‘மனசு‘ சே. குமார் அவர்களுக்கும் தெரியும். மீசை என்ற கலையை பராமரிப்பதைவிட மீசை எதிர்ப்பாளர்களை மீசையால் குத்தி கிழிப்பதே பெரிய வேலையாக இருந்தது,
மற்றபடி தற்போது முன்பு போல மொழிகளை படிக்க காலச்சூழலும், மனமும், மூளையும் தயங்குகிறது மறதியும் அவ்வப்போடு எட்டிப்பார்த்து நகைக்கின்றது காரணம் நான் வலைச்சர ஆசிரியராக இருந்தபோதே.... வயது பதினாறை தாண்டி விட்டதே..
நல்லது நண்பர்களே எமது எழுத்தையும் ஆர்வமுடன் படித்து கருத்திடும் அனைத்து நட்பூக்களுக்கும் எனது நன்றிகளை உரித்தாக்குகிறேன் உங்களால், உங்களின் உண்மையான கருத்துகளால் எனது எழுத்து வளர்கிறது அது இன்னும் எழுச்சி பெற்று புரட்சி செய்யும்.
நண்பர் ‘’மனசு‘’ சே. குமார் அவர்களுக்கு...
இதற்கு மேல் எழுத இந்த வெறும்பயலிடம் ஒன்றும் இல்லை ஆகவே தாங்களாகவே... கில்லர்ஜி நல்லவரு, வல்லவரு, பெண்டு எடுக்கிறதுல என்று விளம்பரம் கொடுத்தாலும் நான் தவறாக நினைக்க மாட்டேன் காரணம் கடலை மிட்டாய்க்குகூட தொலைக்காட்சியில் பெண்களை வைத்து விளம்பரம் செய்யும் காலமிது இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி கடைசிவரை விடையே தெரியாமல் விடை பெறுவது.
உங்கள் கில்லர்ஜி தேவகோட்டை. 15.02.2017
தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
******************
நான் கேட்டதும் எனக்கு அனுப்பிக் கொடுத்த உறவுகளுக்கும் இந்த வாரம் தன் கருத்தைப் பகிரக் கொடுத்து உதவிய கில்லர்ஜி அண்ணனுக்கும் நன்றி. இன்னும் பலரிடம் கேட்க வேண்டும். இதுவரை கேட்டவர்களில் விருப்பமுள்ளவர்கள் அனுப்பித்தந்தால் அடுத்தடுத்து மற்றவர்களிடம் கேட்க முடியும்... முடிந்தவர்கள் அனுப்புங்கள்.
அடுத்த புதன் மற்றொரு வலை ஆசிரியரின் எழுத்தோடு சந்திப்போம்.
-'பரிவை' சே.குமார்.
நண்பரே...
பதிலளிநீக்குநமது கில்லர்ஜி அவர்களின் இளைய சகோதரி நேற்று காலமடைந்தார்...
தங்கையின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
வணக்கம் அண்ணா...
நீக்குஅவரின் சகோதரி மறைவு குறித்து தங்கள் கருத்துப் பார்த்ததுமே மிகுந்த மனவேதனை அண்ணா... அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
அவரின் சகோதரி மறைவு தெரியாததால் இன்று பகிர்ந்துவிட்டேன்... இல்லையென்றால் அடுத்த வாரத்துக்கு மாற்றியிருப்பேன்...
ரொம்ப கஷ்டமாயிருச்சு அண்ணா....
ஆகா... என்னவொரு பந்தம்.. பாசத்தின் இருப்பிடம்.. அன்பின் சிறப்பிடம்!..
பதிலளிநீக்குதங்களையும் அன்பின் குமார் அவர்களையும் கடந்த 2015ல் அபுதாபியில் சந்தித்த நிகழ்வு நெஞ்சிலாடுகின்றது... மீண்டும் ஒரு சந்திப்பை விழைவதற்குள் மீசைக்காரப் பறவை தாயகம் நோக்கி!..
ஆனாலும் மனசு கேட்கின்றதா?..
பதிவினில் என்னையும் குறித்தமைக்கு நிறைஅன்பு!..
நிகழ்காலம் எப்படியிருப்பினும் எதிர்காலம் இனிமையாக இருக்கட்டும்..
எல்லாருக்கும் அதுதான் வேண்டியது.. நானும் அதைத்தான் வேண்டுவது!..
நலம் வாழ்க.. நலமே வாழ்க!..
வணக்கம் ஐயா...
நீக்குதங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
அருமை
பதிலளிநீக்குவணக்கம் சகோ...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வழியாக திரு. கில்லர் ஜி அவர்களின் சோகம் அறிந்து வருந்துகின்றேன்..
பதிலளிநீக்குகாலம் ஆறுதலையும் தேறுதலையும் தரட்டும்..
சகோதரியாரின் ஆன்மா இறைநிழலில் சாந்தியடைவதாக..
வணக்கம் ஐயா...
நீக்குஅவரின் சகோதரி இறந்த அன்று பதிவு வந்துவிட்டதே என்ற வருத்தம் ஐயா...
தனபாலன் அண்ணா மூலம் அறியும் போது பதிவெழுதி பகிர்ந்து சிலமணி நேரமாயிருச்சு...
அவரைப்பற்றிய உங்கள் அறிமுகமும், தன்னைப் பற்றிய அவர் எழுத்துகளும் நன்று. சோதனைகளையே அதிகம் சந்தித்திருப்பார் போல.. இதோ இப்போதும் அடுத்த சோதனை என்பதை DD பின்னூட்டம் சொல்கிறது. அவர் சகோதரி ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற என் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்குவணக்கம் அண்ணா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ஆமாம் அவரின் சகோதரி ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
கில்லர்ஜியைப் பற்றி அனைவரும் அறிவோம். நீங்கள் பகிர்ந்தவிதம் அருமை.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நண்பர் கில்லர்ஜி, முரட்டு மீசை வைத்திருக்கும் வெள்ளந்தியான மனிதர். வாழ்க்கையில் மனதுக்கு நிம்மதியான ஏதோ ஒன்றைத் தேடும் முயற்சியில் அவரது பதிவுகள் இருப்பதாகவே நினைக்கின்றேன். இங்கும் அப்படியே சொல்லி விட்டு சென்று இருக்கிறார்.
பதிலளிநீக்குவணக்கம் ஐயா...
நீக்குஉண்மைதான்... பல வலிகளை சுகமாக்கும் கருவியாய் அவரின் எழுத்து அவருக்கு...
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கில்லர்ஜியைப் பற்றிய அறிமுகம் அருமை குமார்! அவரது சோகத்தில் மீண்டும் ஒரு பெரிய சோகம்! குழந்தை போன்ற அவரது அன்புத் தங்கை விண்ணிற்குச் சென்றுவிட்டார். அவள் அங்கு ஒளிர்ந்திட எங்கள் பிரார்த்தனைகள்!
பதிலளிநீக்குவணக்கம் துளசி சார்...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அவரின் சகோதரி ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்
@killerjee தங்களது இளைய சகோதரியின் ஆன்ம சாந்திக்கு பிரார்த்திக்கிறேன் ..இறைவன் இந்த கடினமான சூழலில் உங்கள் குடும்பத்தாருக்கு துணையிருப்பாராக
பதிலளிநீக்குவணக்கம் சகோ...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அவரின் சகோதரி ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்போம்.
தங்களைப்பற்றி அருமையான பதிவு சகோ ..ஒன்று மட்டும் நன்கு புரிந்துகொள்ளுங்க..பிரச்சினைகள் மலை போல் வந்தாலும் தூக்கி நிறுத்த இறைவன் துணையுண்டு ..நம்பாத உறவுகளை விட்டுத்தள்ளுங்க எப்படிப்பட்ட மிக அருமையான நட்பு உங்களுக்கு கிடைத்திருக்கிறார் வாழ்த்துக்கள் ..
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி குமார் சகோ
வணக்கம் சகோ...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பதிலளிநீக்குதேவகோட்டை ஜி அவர்கள் தன் குடும்பத்தினரைப் பற்றி ஒவ்வொரு முறையும் வருத்தப்படுகிறார். அன்பை கொடுத்து அன்பை பெறலாம் அவர் குடும்பத்தினர்.
ஏஞ்சல் சொல்வது போல் நட்புகள் என்றும் கை கொடுப்பார்கள்.
சகோதரியின் இழப்பு வருத்தம் தருவதாய் உள்ளது, அவர் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
வணக்கம் அம்மா...
நீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
அவரின் சகோதரி ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
வலைப்பக்கம் வழி அறிந்திருந்த கில்லர்ஜி அவர்களை புதுக்கோட்டையில் நடைபெற்ற வலைப்பதிவர் நிகழ்வில் முதன் முதலில் சந்தித்தேன். என்னை அவர் அங்கிருந்த சில நண்பர்களுக்கு அறிமுகம் செய்த போது 1999 ல் வெளிவந்த என் முதல் கவிதை நூலில் இடம் பெற்றிருந்த சில வரிகளைச் சொல்லி இந்த வரிகள் மூலம் இவரை நான் முன்பே அறிவேன் என அறிமுகப்படுத்தி ஆச்சர்யத்தை அளித்தார். அந்தக் கவிதைத் தொகுப்பின் பிரதி என்னிடம் இல்லை என்றேன். அவரோ என் புத்தக சேகரிப்பில் அந்த பிரதி இன்றும் இருக்கிறது என்று இன்னொரு ஆச்சர்யத்தை அளித்தார். அவரிடம் சுய விபரம் சார்ந்து அப்போது கலந்துரையாட நேரம் அமையவில்லை. இப்பொழுது ”மனசு” மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.
பதிலளிநீக்குவலைப்பதிவரின் சுய விபரங்களை பலரும் அறியத் தரும் உங்களின் முயற்சி தொடர வாழ்த்துகள் குமார்.
சோதனைகளை மட்டுமே வாழ்வில் சந்தித்து வந்திருக்கும்
பதிலளிநீக்குமீசைக்கார நண்பரின் அன்புத் தங்கையின் மறைவு மனதை கணக்கச் செய்கிறது
அருமையான மனிதர் பற்றிய சிறப்பான பகிர்வு...
பதிலளிநீக்குமீண்டும் ஒரு கடினமான நேரம்...சகோதரியின் ஆன்ம சாந்திக்கு எனது பிரார்த்தனைகளும்...
அண்ணாவிற்கும், அவரது குடும்பத்திற்கும் இறைவன் துணை இருப்பார்...
கில்லர் சகோவின் சகோதரி இழப்பு மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அவரின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்.
பதிலளிநீக்குகில்லர்ஜி ரைட் அப் அருமை
பதிலளிநீக்குஅவரின் இழப்பில் இருந்து வெளியில் வரபிரார்த்திப்போம்
கில்லர்ஜியின் மன வேதனைகள் குறையப் பிரார்த்தனைகள். அவரின் இழப்பில் இருந்து அவர் மீண்டு வரவும் பிரார்த்தனைகள்.
பதிலளிநீக்கு