வெள்ளி, 20 ஜனவரி, 2017

வாடிவாசலுக்கு வாறீகளா...?

Image result for வாடிவாசல்
வாடி வாசலை முதல்வர் திறக்க வேண்டும் என்பதே தவறு... நானே திறப்பேன் என்பது அரசியல்...

இந்த போராட்டத்துக்கு அரசு என்ன செய்தது..?

என்ன செய்து கொண்டிருக்கிறது...?

இதே அவசர சட்டத்தை பொங்கலுக்கு முன்னர் கொண்டு வந்திருந்தால் நீங்கள் வாடிவாசலை திறப்பேன் என்று சொல்லும் முன்னர் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா?

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது ஆங்காங்கே உங்கள் ஆதரவு தந்தி டிவி சொல்வது போல் லேசான தடியடி (அதைக்கூட நீங்கள் சொல்லலைங்கிறது வேற விஷயம்) நடத்தி விட்டு நாங்களும் ஆதரவு என்றீர்களே... உண்மையான ஆதரவு கொடுத்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா?

மெரினாவில் போராடியவர்களை அடித்து விரட்ட விளக்கை அணைத்து கேவல அரசு செய்தீர்களே... அங்கு விளக்கு வசதி செய்து கொடுத்திருந்தால் உங்களை நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா...?

அருகிலிருக்கும் கழிவறைகளை எல்லாம் பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என அவற்றை எல்லாம் மூடச் சொன்னீர்களே... மெரினாவில் கழிவறைகள் கட்டிக் கொடுத்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா..?

மெரினாவுக்கு வாருங்கள் என்ற போது பதில் சொல்லாமல் தில்லிக்கு ஓடினீர்களே... மெரினா வந்து மக்களோடு மக்களாக இருந்து பேசிச் சென்றிருந்தால் உங்களை நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா..?

அலங்காநல்லூரில் போராடியவர்களுக்கு சாப்பாடு கொடுக்க விடாமல் தடுத்தீர்களே... அறப்போட்டத்துக்கு நாங்கள் ஆதரவு என சாப்பாடு கொடுக்காவிட்டாலும் கொடுக்க நினைத்தவரகளை தடுக்காமல் இருந்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா...?

இவ்வளவு போராட்டம் நடக்கும் போது ஏதோ ஒரு தேசத்தில்... எங்கோ ஒரு மூலையில் நடப்பது போல் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தீர்களே... என் இனத்துக்கான போராட்டம் இது... இதில் வென்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம் என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் நாங்களே அழைத்திருப்போம்...

எங்களில் ஒருவராக கோடிகளை என்ன என் சொத்தையே தருகிறேன்... போராடுங்கள் என தனது கேரவான் வண்டிகளை மெரினா கொண்டு வந்து கழிவறைக்காக நிறுத்தி, போராட்டக் களத்தில் இதுவரை துணை நிற்கும் லாரன்ஸ் அவர்கள்...

உங்கள் அரசியலை கிழி கிழி என்று கிழித்து மக்களோடு மக்களாக இருந்து மெரினாவில் விளக்குமாறு பிடித்துக் கூட்டிய மன்சூர் அலிகான் அவர்கள்...

போராட்டக் களங்களில் பகல் இரவு பாராது கைக்குழந்தைகளுடன் கிடக்கும் எம் தாய்மார்கள்...

அரசியலோ என்னவோ சென்ற ஆண்டு ஒருவனாக போராடி இந்தாண்டு மக்களோடு நிற்கும் சீமான் அவர்கள்....

தன் சொத்தை விற்று சல்லிக்கட்டுக்காக போராடிய ஐயா ராஜசேகர் அவர்கள்...

சல்லிக்கட்டு என்பது தென்னகத்துக்கானது மட்டுமல்ல.. நம் பாரம்பரியம் அதன் அழிவு நாட்டு மாடுகளை அழித்து.. கார்ப்பரேட் களவாணிகளைக் உள்ளே கொண்டு வரும் என்பதை நகரங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சென்று இன்று தன் அரசுப் பதவியை ராஜினாமா செய்திருக்கும் சேனாதிபதி அவர்கள்...

அலங்காநல்லூரில் விதைத்த சிறு விதையை விருட்சமாக்கி, இது சல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல... எங்கள் விவசாயிகளின் இறப்பு, காவிரி, முல்லைப் பெரியாறு என எங்களை வஞ்சிக்கும் எல்லாவற்றுக்குமான போராட்டம் என்று சொல்லி போராட்டக் களத்தில் கிடக்கும் லட்சோப லட்சம் இளைஞர்கள், இளைஞிகள், பெரியவர்கள், பெண்கள், மாணவர்கள், மாணவிகள், குழந்தைகள் இவர்களை எல்லாம் விடுத்து மானங்கெட்ட நாங்கள்... உங்களை வாடி வாசலுக்கு அழைப்போம் என்று நினைத்தீர்களா...?

உயிரைக் கொடுத்து போராட்டம் நடத்தும் இந்த லட்சோப லட்சத்தில் மதம், சாதி பாராது... பனியில் பூத்துக் கிடந்த, கிடக்கின்ற எம் ரத்தங்களில் எவரேனும் சிலருக்கே இந்த வருட வாடி வாசல் திறப்பு என்பது கொடுக்கப்பட வேண்டும்... கொடுக்கப்படும்...

உங்களுக்கு...
அவசர சட்டம் என்பதை விடுத்து சல்லிக்கட்டுக்கான நிரந்தர தடையை நீங்கி, நம் தமிழினத்தின் பெருமையை நிலைநாட்டும் பட்சத்தில் சின்னம்மாவின் முதல்வர் ஆசையில் இருந்து தப்பித்து முதல்வராகத் தொடர்ந்தால் நிரந்த முதல்வராக மட்டுமல்ல அடுத்தாண்டு வாடிவாசல் திறக்க உங்களை மலர்தூவி அழைப்போம்...

செய்வீர்களா...? செய்வீர்களா...?

மக்களே தில்லி போய் 9 நிமிடம் பேசி ஒருநாள் உக்காந்து அவசரசட்டம் ஒரிரூ நாளில் கொண்டு வரப்படும் எனச் சொல்லும் நம் முதல்வரை வாடி வாசல் திறக்க அழைப்போம் என்பதை தயவு செய்து மனதிலிருந்து அகற்றுங்கள்... முதல்வர் வரவேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் அவர் பின்னே நாங்கள்தான் சல்லிக்கட்டு அவசரசட்டம் போட்டோம் என பொன்னாரும் தமிழிசையும் மரியாதை வேண்டி மல்லுக்கு நிற்பார்கள்... வேண்டாம் இந்த அரசியல்... மக்கள் எழுச்சி நாயகர்களை முன்னிறுத்துங்கள்...

நம் போராட்டக்களத்தில் இருக்கும் இனமான உறவுகளுக்கு உங்கள் அழைப்பைக் கொண்டு செல்லுங்கள்...

இதையெல்லாம் விட நாளைய இளைய சமுதாயம்... சல்லிக்கட்டு வேண்டும் என்று தங்கள் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு பேசிய மழலைச் செல்வங்களுக்கு உங்கள் முன்னுரிமை இருக்கட்டும்....

நன்றி.
-'பரிவை' சே.குமார்

11 கருத்துகள்:

  1. ஒவ்வொரு கேள்வியும் சாட்டையடி நண்பா...

    பதிலளிநீக்கு
  2. முகநூலில் பகிர்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான பதிவு. உண்மையானவர்களையே முன்னிலைப்படுத்த வேண்டு.

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்
    ஒவ்வொரு வினாக்களும் மனதை கீறுகிறது அருமையாக சொல்லியுள்ளீர்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. அரசியலில் இறங்காது
    தமிழனின் முதலீடான
    கல்வியை மேம்படுத்தியவாறு
    ஒழுக்கம், பண்பாடு பேணி
    எவருக்கும் இழப்புகளை ஏற்படுத்தாது
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கான
    எழுச்சி நுட்பங்களைக் கையாண்டு
    மாணவர்களே தமிழ்நாட்டை மேம்படுத்தலாம்!
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றி
    எதிர்கால வெற்றிகளுக்கு ஓர் முன்மாதிரி!

    பதிலளிநீக்கு
  6. ராகவா லோரன்ஸ் அவர்களைப் பாராட்டுவோம் - அவரது உதவியும்
    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவியதே!

    ஏறு தழுவல் (ஜல்லிக்கட்டு) வெற்றிக்கு உதவிய
    தமிழரின் அடையாளத்தையும் பண்பாட்டையும் ஒழுக்கமுடன் உலகிற்கு உறைக்கச் சொன்னவர்களை நாமும் பாராட்டுவோம்.

    பதிலளிநீக்கு
  7. தம்பி.. நீ அவல் கொண்டு வா.. நான் உமி கொண்டு வர்றேன்.. இரண்டும் கலந்து ஊதி ஊதி தின்னலாம்..

    பதிலளிநீக்கு
  8. கேள்விகள்.... பதில் இல்லா கேள்விகள்.....

    நல்ல முடிவு வரட்டும்....

    பதிலளிநீக்கு
  9. தமிழர்கள் எல்லோரையும் ஒன்றிணைத்த அந்த புண்ணியவான்களுக்கு நன்றி சொல்லுங்கள் அண்ணா

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி