சாண்டில்யனின் ஜலதீபம் வாசிப்பு அனுபவம் கடல்புறாவைப் போல் சுகமாய் இருந்தது. இடையிடையே தொய்வு ஏற்பட்டாலும் நிறுத்தாமல் வாசிக்க வைத்தது. கடல்புறாவில் ரெண்டு நாயகிகளுடன் பயணித்த கப்பல் இங்கு நான்கு நாயகிகளுடன் பயணிப்பதால் வர்ணனைகளுக்குப் பஞ்சமில்லை. அரசிளங்குமாரியான பானுதேவி, கப்பல் தலைவனின் வளர்ப்பு மகளான மஞ்சு, கணவனை இழந்து மற்றொருவனுக்கு மனைவியாகி கடல் போரில் அவனை இழக்கும் கேதரின், நர்சாக வரும் எமிலி... இப்படி நான்கு பேருடன் பயணிக்கிறது ஜலதீபம்.
(ஜலதீபம் படம் உதவி : கூகிள்) |
மராட்டிய வீர சிவாஜியின் வழித்தோன்றல்களின் அரசாளும் உரிமையைப் பெறுவதற்கான போட்டிதான் கதைக்களம். ஷாஹூவுக்கும் தாராபாய்க்கும் அரசுரிமை தொடர்பான பிரச்சினை இருக்க, தஞ்சையில் பிறந்த மூன்றாவது வாரிசும் போட்டியில் இறங்கலாம் என கடத்தப்படுகிறான். அவன் எங்கிருக்கிறான்... என்ன ஆனான் எனக் கண்டுபிடிக்க வரும் தமிழனான இதயச்சந்திரன் வாழ்வில் குறுக்கிடும் நாலு பெண்கள்... அவன் சந்திக்கும் பிரச்சினைகள்... கடல்போர்... தரைப்போர்...வழக்கு... என ஒரு சின்ன ஒளியில் இருந்து மிகப்பெரிய வட்டத்தை ஆயிரம் பக்கங்களுக்கு மேல் சுவராஸ்யமாய் நகர்த்தியிருக்கிறார்.
மக்களால் 'ஸார்கோல்' என்றும் ஆங்கிலேயர் மற்றும் மராட்டியர்களால் 'கடற்கொள்ளையன்' என்றும் அழைக்கப்பட்ட மாவீரன் கனோஜி ஆங்க்ரே அரபிக் கடலில் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து முதலில் ஷாஹூவிற்கு எதிராய்... தாராபாய்க்கு ஆதரவாய் நின்று பின்னர் பாலாஜி விஸ்வநாத் என்ற பேஷ்வாவின் முயற்சியால் மனம் மாறி மன்னர் ஷாஹூவிற்கு ஆதரவாக செயல்பட்டார் என்பது வரலாறு. இந்த வரலாற்றுடன் கற்பனைக் கதாபாத்திரங்களை உலாவவிட்டு அழகாய் நகர்த்தியிருக்கிறார் சாண்டில்யன்.
அந்தக் காலத்தில் பெண்கள் பார்த்ததும் காதல் வயப்பட்டார்கள் என்பதெல்லாம் ஏற்க முடியாததுதான் என்றாலும் எல்லாப் புதினங்களுமே இப்படித்தான் கதை சொல்கின்றன. பார்த்ததும் அவனை விரும்பி... அடுத்த நொடியே அவன் அணைப்புக்குள் எப்படி ஒரு பெண்ணால் இருக்க முடியும் என்ற யோசனை எழுந்தால் அதை எல்லாம் மூட்டை கட்டி விட்டு... காட்டுக்குள் பானுதேவியுடன்... கப்பலில் கேதரினுடன்... கல்பாறையில் மஞ்சுவுடன்... போர்க்களத்துக்கு செல்லுமிடத்தில் எமிலியுடன்... என எல்லாம் கடந்து பயணித்தால் ஜலதீபம் ரசிக்க வைக்கும்.
(ஜன்ஜீராக் கோட்டை) |
கடல்புறாவில் காட்டப்பட்ட கடல் போர் போல் இதில் அவ்வளவு அற்புதமாக வர்ணித்து எல்லாம் எழுதவில்லை... கடல்புறா சிறகு விரித்து போருக்கு தயாராவதை அவ்வளவு அழகாகச் சொல்லியிருப்பார்... இதில் ஜலதீபத்தின் போர் வர்ணனைகள் அவ்வளவாக ஈர்க்கவில்லை என்றாலும் கடல்போரைக் காட்டிலும் இதயச்சந்திரனும் அவனின் உபதளபதி சுகாஜியும் கல்யாண்கோட்டை என்னுமிடத்தில் பாஜிராவ் பிங்க்லேயின் தலைமையிலான ஷாஹூவின் தரைப்படையை இருபுறமும் இருந்து தாக்கி எப்படி வெற்றி பெற்றார்கள் என்பதை மிக அழகாக எழுதியிருப்பார்... நாமும் அந்த போர்க்களத்தில் இதயச்சந்திரன் கூட நின்றது போல் தோன்ற வைத்துவிடுவார். கனோஜி ஆங்க்ரே கரகரப்பான குரலுடன் கம்பீரமானவராக இருந்தாலும்... எத்தனை பேர் வந்தாலும் எதிர்த்து நிற்கும் வீரம் கொண்டவராக இருந்தாலும்... எதையும் முன்கூட்டியே சொல்பவராக இருந்தாலும்... பிறர் மனதுக்குள் என்ன இருக்கு என்பதைச் சொல்பவராக இருந்தாலும் பெண்கள் பற்றி அவர் பேசும் பேச்சுக்கள் மிகவும் வக்ரமானவை. இருந்தாலும் இறுதிவரை மிகச் சிறந்த வீரனாக திகழ்ந்திருக்கிறார்.
கொள்ளையரால் தாக்கப்பட்ட கப்பல் உடைந்து அடிபட்டு கரை ஒதுங்கும் இதயச்சந்திரனை பிரமேந்திர சுவாமியும் பானுதேவியும் காப்பாற்ற, பானு தேவி மேல் காதல் பிறக்கிறது. பானுதேவிக்கும் ஆசையிருந்தாலும் தன் அரசியல் லாபத்துக்கு அவனை பயன்படுத்த எண்ணி ஆங்க்ரேயின் எதிரியான ஸித்திகளிடம் தூது அனுப்ப, அவர்களின் கோரிக்கையை இதயச் சந்திரன் ஏற்க மறுக்க, அங்கிருந்து தப்பும் சூழ்நிலையில் ஆங்க்ரேயின் வளர்ப்பு மகள் மஞ்சு காப்பாற்றுகிறாள். அப்போதே மஞ்சு மீது காதல் வருகிறது... என்னய்யா இது தமிழ் சினிமா மாதிரி அப்படின்னு யோசிச்சா... நல்லவேளை அங்க கட் பண்ணி அரபிக் கடல்ல டான்செல்லாம் வைக்கலை... அந்த விதத்தில் நாம் தப்பித்தோம்.
ஆங்க்ரேயுடன் ஜலதீபத்தில் பயணிக்க ஆரம்பிக்கும் போது மஞ்சு மீது காதல் இன்னும் தீவிரமாக அவள் பிடிகொடுக்காமல் இழுத்தடிக்கிறாள். ஒரு நேரம் அன்பாய் பேச... ஒரு நேரம் முகத்தில் அடித்தாற்போல் பேச... இந்தப் பெண் காதலிக்கிறாளா இல்லையா என்ற தவிப்புடன் இருக்கும் இதயச்சந்திரன் கடல் போரில் கணவனைக் கொன்று சிறை பிடிக்கும் கேதரினை ஆங்கிலேயரிடம் ஒப்படைக்க ஆங்க்ரே மற்றும் மஞ்சு இல்லாது உப தளபதிகளுடன் தனியே பயணிக்கிறான். ஆங்கிலப் பெண் இந்தியனை திருமணம் செய்ய முடியாது... அப்படிச் செய்தால் ஒதுக்கி வைத்து விடுவார்கள் என்று சொல்லும் கேதரின், கணவன் இழந்த வலி மறையும் முன் இதயச்சந்திரனை கட்டிலில் வீழ்த்தப் பார்க்கிறாள். சில நேரம் சபலத்தில் அணைக்கும் அவன் பல நேரம் மஞ்சு நினைவில் அவளை ஒதுக்கி வைக்கிறான்.
(கனோஜி ஆங்க்ரே . 1669 - 1729) |
ஆங்கிலேயரிடம் ஒப்படைக்கச் சென்ற இடத்தில் அவளைக் காதலித்தவனுடன் மோதல், பானுதேவி சந்திப்பு மற்றும் அவளால் சிறைபிடிப்பு என பயணித்து எதிர்பாராத விதமாக ஆங்கில அதிகாரியால் சிறைபட்டு... அதிலிருந்து தலையில் அடியுடன் அதே ஆங்கில அதிகாரி உதவியால் தப்பிவரும் இதயச்சந்திரனுக்கு காயத்துக்கு கட்டுப் போட உடன் வருகிறாள் நர்ஸான எமிலி என்ற ஆங்கிலப் பெண்... இவன் மீது அவளுக்கும் காதல்... மஞ்சுவுக்காக தன் காதலைத் துறந்து நர்ஸாகவே வாழ முடிவு செய்கிறாள் அவனிடம் இருந்து ஒதுங்கிக் கொள்கிறாள். மஞ்சு தனக்கு கிடைப்பாளா மாட்டாளா என்ற தவிப்பில் இருப்பவன் ஒரு முடிவோடு திருட்டுத்தனமாக கோவிலில் வைத்து தாலி கட்டி முதலிரவை பாறைகளில் முடித்து விடுகிறான்.
யாரைத் தேடி வந்தானோ அவனைக் கடத்திய நிம்கர், ஆங்க்ரேயிடம் தூதுவனாக இதயச்சந்திரனிடம் வர அவனை சிறைப்பிடித்தும் உண்மையை அறிய முடியாத நிலையில் யாருக்கும் தெரியாமல் அவனுடன் தமிழகம் செல்ல முயலும் போது பாலாஜி விஸ்வநாத்தின் திட்டத்தின்படி மஞ்சு மற்றும் பிரமேந்திர சுவாமிகளால் கைது செய்யப்படுகிறான். மஞ்சு கர்ப்பமாக இருப்பதால் இதயச்சந்திரனை எப்படி காப்பாற்றலாம் என ஆங்க்ரே தவிக்கிறார். இதயசந்திரன் எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் அந்த வாரிசை காப்பாற்ற முடியாமல் இப்படி மாட்டிக் கொண்டோமே என்ற தவிப்பில் இருக்கிறான்.
உண்மைக்கு புறம்பாக செயல்படாத பாலாஜி ஆங்க்ரே முன் நிறுத்தப்படும் இதயச் சந்திரனுக்கு என்ன தண்டனை கிடைத்தது..? தஞ்சையில் பிறந்த மூன்றாவது வாரிசை கண்டு பிடித்தானா..? அந்த வாரிசை யார் கடத்தி வைத்திருந்தார்கள்..? நிம்கர் என்ன ஆனான்...? அநாதையான மஞ்சுவுக்கு அப்பா - அம்மா யார்...? மஞ்சுவை தன் மகள் எனச் சொல்லிக் கொண்டு வருபவன் என்ன ஆனான்...? பிரமேந்திர சுவாமியின் அரசியல் பங்கீடு எதுவரை போகிறது...? என்பதை மிக அழகான கதை நகர்த்தலில் நம்மை கவரும் விதமான வர்ணனைகளுடன் சொல்லியிருக்கிறார் சாண்டில்யன்.
(கனோஜி ஆங்க்ரேயின் நினைவிடம், அலிபாக் - மகாராஷ்டிரா ) |
ஸ்வர்ண சதுக்கம், ஜன்ஜீரா, கொலாபா என கடலோரத் துறைமுகங்கள் சாண்டில்யனின் வர்ணனையில் நம்மை ஈர்க்கின்றன. நாலு பெண்கள் என்றாலும் கோபமும் தாபமுமாய் காதலனை எங்கே இழந்து விடுவோமோ என்று தவிக்கும் மஞ்சு மற்ற மூவரையும் பின்தள்ளி நம் மனசுக்குள் அமர்ந்து கொள்கிறாள். அதே சமயம் தன் காதலை தியாகம் செய்யும் எமிலியும் கவர்கிறாள்.
கடற்போர் சமயங்களில் இதயச் சந்திரன் கடல்புறாவின் கருணாகரப் பல்லவனைப் போல் செயல்படுகிறான். எப்படி கருணாகரப் பல்லவன் கவர்ந்தானோ அதே போல் இதயச்சந்திரனும் மனசுக்குள் நிற்கிறான்.
ஜலதீபம் ஒரு சுகமான வாசிப்பு அனுபவம்.
படங்கள் உதவி : விக்கிபீடியா
-'பரிவை' சே.குமார்.
அருமையாக வாசித்ததை
பதிலளிநீக்குமொழி பெயர்த்துள்ளீர்கள்
சாண்டில்களின் நாவல்கள் ஒவ்வொன்றாகப் படிக்கத் தொடங்கிவிட்டீர்களா
பதிலளிநீக்குநானும் ஜலதீபம் படித்து மயங்கியிருக்கிறேன்
ஆனால் சாண்டில்யனின் கதாநாயகர்கள் அனைவரும் கற்பனைப் பாத்திரங்கள் என்பதை உணர்ந்தபோதுசிறிது வருத்தம்தான் ஏற்பட்டது
தம +1
நானும் பலமுறை வாசித்திருக்கிறேன். வர்ணம் படம் இல்லாமல் லதாவே வழக்கம் போல வரைந்திருக்கலாம் !!
பதிலளிநீக்குஇளைமையில் மனதை கவிர்ந்த கதைகள் சாண்டில்யன் கதைகள் .. இப்போது அதையெல்லாம திரும்பவும் படித்தால்பிடிக்குமா என்பது தெரியவில்லை
பதிலளிநீக்குகும்பகோணம் சிவகுருநாதன் செந்தமிழ் நூல் நிலையத்தில் 1970களில் படித்தது நினைவிற்கு வந்தது. படிக்கவேண்டிய புதினங்களில் ஒன்று. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமையான மிக விரிவான விமர்சனம். பகிர்ந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குத ம 5
விமர்சனம் சிறப்பாக உள்ளது. ஆனால் யவனராணி, கடல்புறா போல ஜலதீபம் அத்தனை புகழடைந்ததில்லை. ஓவியம்கூட லதா தான் சாண்டில்யனுக்கு ஆஸ்தான ஓவியர். வர்ணத்தின் ஓவியங்களைப்பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது.
பதிலளிநீக்குஎப்போதோ படித்த நினைவு இருக்கிறது. மீண்டும் படிக்க தூண்டுகிறது விமர்சனம்
பதிலளிநீக்குஇராஜமுத்திரை படிக்கவில்லையா குமார்?
பதிலளிநீக்குபோர் வியூகம் வர்ணனை மிக நன்றாக இருக்கும். லதாவின் படங்கள் தான் சாண்டில்யன் அவர்களுக்கு. கண்கள் மிக அழகாய் வரைவார் லதா. சிறுவயதில் படித்த நினைவலைகள் வந்து சென்றது.
சமூகநாவல் ஒன்று எழுதி இருப்பார் சாண்டில்யன், அதற்கு லதா வரைந்த ஓவியங்கள் பொருந்தவில்லை, என்று அப்போது பேசினார்கள் . வரலாற்று கதைகளுக்கு லதா ஓவியம் மிக பொருத்தமாய் இருக்கும்.
பல வருடங்களுக்கு முன் வாசித்த நினைவு. ம்ம்ம் இப்படிப் பல வாசித்தவையும் நினைவில் நிழலாக இருக்க..மீண்டும் வாசிக்க வேண்டும் போல.நல்ல விமர்சனம் குமார்..
பதிலளிநீக்கு