வெள்ளி, 14 அக்டோபர், 2016

திரைக்கதை வடிவில் 'ஜீவநதி' - நிறைவுப் பகுதி

கதை                                                   :  சே.குமார்.


திரைக்கதை வசனம்                    :  ஆர்.வி.சரவணன்.

திரைக்கதை வடிவில் ஜீவநதி   :  1    2

சிறுகதை                                           :   ஜீவநதி

சரவணன் அண்ணன் தளம்       :   குடந்தையூர்

(ஜீவநதி சிறுகதைக்கு போட்ட படம்)
காட்சி-5 தொடர்ச்சி

காவேரி சமையலறையில் சென்று காபி எடுத்து வந்து கொடுக்கிறாள். குடித்து முடிக்கும் வரை இருவருக்கும் பேச்சில்லை. அவர்கள் இருவர் மனத்திலும் கவலைகள் இருப்பதை முகம் சொல்கிறது

பிள்ளைகள் தான் சந்தோசத்தில் பேசி கொண்டிருக்கின்றன

காவேரி : சின்ன வயசுல நாமும் இது போலெ தானேண்ணே பேசிட்டிருந்தோம் 

மகாலிங்கம்:  அது ஒரு காலம் சரி எனக்கு வேலை இருக்கு நான் கிளம்பறேன்

சுந்தரம்: மாமா  பட்டாசு இவ்வளவு தானா

மகாலிங்கம்: இது  தீபாவளி fund ல  வந்தது  டா செல்லம். நான் அம்மா கிட்டே பணம் கொடுத்திருக்கேன்  உங்களுக்கு புடிச்சதை வாங்கிக்கங்க

ராதா : ஹையா ஜாலி என்று டான்ஸ் ஆடுகிறாள்.

பிள்ளைகளின் சந்தோஷம் பார்த்து திருப்தியுடன் கிளம்புகிறான்.

காட்சி-6
வீட்டின் வாசல் 

வாசலுக்கு வருபவன் திரும்பி உங்க சந்தோசத்தை உங்க அம்மா முகத்துலையும் பூசி விடுங்க  பசங்களா என்கிறான்

தோழி : அண்ணே  அவ புருஷன் வந்தோன பாருங்க சந்தோசத்தை நம்ம முகத்துல எடுத்து பூசுவா அவ என்ற படி அங்கே வருகிறாள்  பக்கத்து வீட்டு பெண் 

மகாலிங்கம்:  அதான் எனக்கு வேணும் என்ற படி கிளம்புகிறான். கூடவே மச்சானை ஒண்ணும் திட்டாதே என்ன என்கிறான் தங்கையிடம் 

சிரித்த படி தலையாட்டுகிறாள் காவேரி.

தோழி : ஆமா உன் அண்ணன் வண்டி என்னாச்சு 

காவேரி : யாரோ பிரெண்டு எடுத்துட்டு போயிருக்கறாராம் 

எதிர் வீட்டு பெரியவர் : பிரெண்டு எல்லாம் எடுத்துட்டு போகலம்மா. உங்க அண்ணன்  டூ வீலரை அடகு வச்சிருக்கான்  திண்ணையில் அமர்ந்திருப்பவர்  சொல்கிறார் 

காவேரி : எதுக்கு னு கேட்டீங்களா அதிர்ச்சியாய் கேட்கிறாள்.

எதிர் வீட்டு பெரியவர் : கேட்காம இருப்பேனா . இந்த வருஷம் விவசாயமும் பண்ண முடியல. வளர்க்கிற ஆடுகளையே விக்க வேண்டியதா போச்சு. எப்படியோ பொண்டாட்டி புள்ளைங்களுக்கு டிரஸ் எடுத்துட்டேன். ஆனா பக்கத்துல இருக்கிற தங்கச்சிய  கஷ்டப்பட விட்டுட்டு நான்  தீபாவளி கொண்டாடறதுக்கு மனசு வர மாட்டேங்குது. அதான் டிவிஎஸ்  50 யை அடகு வச்சிட்டு பணம் கொண்டு போறேன்னு சொன்னான் 

காவேரி பெரியவர்  சொன்னதை கேட்டு விட்டு அதிர்ச்சியுடன் திரும்பி மகாலிங்கம் சென்ற திசையை பார்க்கிறாள்.  மகாலிங்கம்  தெருவில் வேட்டியை மடித்து கட்டிய படி நடந்து சென்று கொண்டிருக்கிறான். அவன் நடையில் ஒரு தளர்வு தெரிகிறது.
காவேரிக்கு கதறி அழ வேண்டும் போல் தோன்றுகிறது. சூழ்நிலை கருதி உள்ளுக்குள் மறைக்கிறாள்.

அவள் கையிலிருந்த அண்ணன் கொடுத்த பணத்தை பிரிக்கிறாள். அதற்குள் காவேரி கசக்கி எறிந்திருந்த தீபாவளி லிஸ்ட் பேப்பர் இருக்கிறது.

அண்ணன் சென்ற திசையையே பார்த்து கொண்டிருக்கிறாள்.

காட்சி 7

பிள்ளைகள் இரண்டும்  சண்டையிட்டு  கொள்கின்றன.

காவேரி: ஏன் இப்படி அடிச்சுக்கறீங்க 

கத்துகிறாள்.

ராதா : ஏய் இந்த பட்டாசு எனக்கு வேணும் கொடுடா

சுந்தரம்: ஏய்  தர முடியாது இது  எனக்கு வேணும்

ராதா ஓவென்று  அழ ஆரம்பிக்கிறாள்

அவள் அழுகையை பார்த்து பயந்து போன 

சுந்தரம் : சரி சரி அழாதே இந்தா வச்சிக்க என்ற படி கொடுக்கிறான்
ராதா கண்களை துடைத்து கொண்ட படி அண்ணன் கொடுத்த பட்டாசை ஆர்வத்துடன் ஆராய முற்படுகிறாள். 

சுந்தரம் அவளையே பார்க்கிறான்.

காவேரி : ஏண்டா நீ தானே ஆசையா கேட்டிட்டிருந்தே. உனக்கு வேணாமா 

சுந்தரம் :  வேணும் தான்.  தங்கச்சி தானே அவ எடுத்துக்கட்டும். அவ வெடிக்கிறப்ப பார்த்துக்கிறேன்.  என்கிறான் அவனுக்கு அவனே சமாதானம் செய்து கொள்வது போல்

காவேரி சுந்தரம் சொல்வதை கேட்டு நெகிழ்ச்சியுடன் அணைத்து கொள்கிறாள்.

(முற்றும்)

ஆக்கம் : ஆர்.வி.சரவணன்.

------------------

சங்க விளையாடுவதாய் வரும் முதல் காட்சியும் இறுதிக் காட்சியும் திரைக்கதைக்காக அண்ணன் சேர்த்த காட்சிகள்... அந்தக் காட்சிகள் திரைக்கதையில் ஜீவநதியை ஜீவனுள்ள நதியாக மாற்றியிருக்கின்றன. அதேபோல் சிறுகதையில் அண்ணன் எப்பவும் ஓட்டிவரும் டிவிஎஸ்-50யைக் காணோமே என்று தங்கை எண்ணுவதாய் முடியும்... இங்கே பெரியவர் அதற்கான காரணத்தை உடைக்கிறார். இதெல்லாம் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவியிருக்கின்றன.

நான் எழுதிய ஒரு கிராமத்துக் காதல் கதையினை திரைக்கதை வடிவில் எழுதக் கேட்டேன்... அவருக்கு இந்தக் கதை பிடித்திருந்ததால் அதை விடுத்து இதை எடுத்துக் கொண்டார். அதை சிறப்பாகவும் செய்து கொடுத்திருக்கிறார். என் கதையை திரைக்கதை வடிவில் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அந்த கிராமத்துக் காதல் கதையை திரைக்கதையாக எழுதிப் பார்க்கணும்... பார்க்கலாம்... 

நன்றி சரவணன் அண்ணா....  மிகுந்த சிரத்துடன் இதைச் செய்து கொடுத்தமைக்கு நன்றி.

முதல் இரண்டு பாகத்தையும் வாசித்து கருத்துச் சொன்ன நட்புக்களுக்கும் இந்த பகுதிக்கு கருத்துச் சொல்ல இருக்கும் நட்புக்களுக்கும் எங்கள் இருவரின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

-'பரிவை' சே.குமார். 

6 கருத்துகள்:

  1. அருமை நண்பர் இந்தக்கதை ஏற்கனவே தங்களது தளத்தில் படித்து இருக்கிறேன் சரிதானே ?

    பதிலளிநீக்கு
  2. குறும்படமாக எப்போது வெளிவரும்?

    பதிலளிநீக்கு
  3. படக்காட்சிகள் கண்முன்னே விரிந்தது. அழகான திரைக்கதை. கதை எழுதிய உங்களுக்கும், திரைக்கதையாக மாற்றிய ஆர்.வி.சரவணனுக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்!
    த ம 3

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு
    கதை திரைப்படமாக வரவேண்டும்

    பதிலளிநீக்கு
  5. அருமை..... கதையும் திரைக்கதையும் நன்று.

    இருவருக்கும் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. நன்றாக இருந்தது. நண்பர்கள் குமார் மற்றும் சரவணன் அவர்களுக்குப் பாராட்டுகள்! வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி