நேற்று எழுதிய 'உதிராத நேசம்' சிறுகதை குறித்து எனக்கும் நண்பன் தமிழ்க்காதலனுக்கும் நடந்த உரையாடலின் போது 'எருமை... (எப்பவும் ரொம்ப அன்பாய்த்தான் திட்டுவான்) ஆரம்பிக்கும் போது ஆஹா ரெண்டு பேரும் சந்தித்தால்... எப்பவும் போல் கலக்கலாய் எழுதியிருப்பான்னு நினைச்சிப் படிச்சா... அழுத்தமில்லாம முடிச்சிட்டியே... எப்பவும் போல் ஏன் நீ எழுதலை... இப்படி ஏன் எழுதுறே... சந்தித்துப் பேசினால் எப்படியிருக்கும்ன்னு ஏன் நீ யோசிக்கலை என்று சரமாரித் திட்டினான். சரி அவன் சொன்னது போல் அந்தப் பக்கமாப் பயணிக்கலாமேன்னு இன்று மதியம் எழுத ஆரம்பித்து முடித்து ஜட்ஸ்மெண்ட்டுக்கு அனுப்பினால் இதைத்தாண்டா எதிர்பார்த்தேன் என்று தீபாவளி மத்தாப்பாய் பாராட்டு மழைதான் போங்க... தலைப்பும் நண்பன் கொடுத்ததே... கதை பதிவதில்லை என்ற முடிவிருந்தாலும் அந்தக் கதையின் மாற்றுப் பாதை என்பதால் இதையும் இங்கு பகிர்கிறேன். நீங்களும் வாசிங்க... பிடிச்சாலும் பிடிக்காட்டியும் கருத்தைச் சொல்லுங்க...
நேற்றைய கதையை வாசிக்காதவங்க வாசிங்க மேலே இருக்கும் இணைப்பில் போய் வாசிங்க....
**************
'அவளைப் போய் பார்க்கலாமா..?' என்ற எண்ணம் நேற்று மகேஷ் சொல்லிச் சென்றதிலிருந்து மனசுக்குள் சாரலாய் ஆரம்பித்து பெரும் தூறலாய் ஆக்கிரமித்திருந்தது. 'அவளைப் போய் பார்த்தால் என்ன சொல்வாள்..? ', 'பேசுவாளா... இல்லை பேசாமல் நகர்ந்து விடுவாளா...?', 'இன்னும் ஞாபகத்தில் வைத்திருப்பாளா..?' என்ற கேள்விகள் வரிசையாக நெஞ்சுக்குள் எழுந்து ஆழிப் பேரலையாய் உயர்ந்து உயர்ந்து தணிந்தது. 'இந்த வயசில் அவளைத் தேடிப் போவது சரிதானா...?' என்ற எண்ணம் வேறு மழைக்கால காளானாய் இடையிடையே பூத்துச் சிரித்தது.
'அவளைப் போய் பார்த்தால் பேசுவாளா..? இல்லை முகத்தில் அடித்தாற்போல் செய்து விடுவாளா..?' எத்தனை நேசத்துடன் அவளைக் காதலித்து கோழையாய் தூரதேசம் போனவன்தானே நான். படித்த டிகிரிக்கான வேலை கிடைக்காது என்று தெரிந்தும் டிகிரி படிக்க வேண்டும் என்பதற்காகவே படித்தவன்தானே நான்... மேலே படிக்க வேண்டும் என்றால் வானம் பார்த்த பூமியில் விவசாயத்தை நம்பி வாழும் குடும்பத்தில் குதிரைக் கொம்பாய் இருந்த காலம்... வயதுக்கு வந்த இரண்டு தங்கைகளை கரையேற்ற வேண்டும் என்றால் கடல் கடக்க வேண்டும் என்ற அப்போதைய கோட்பாட்டின்படி செல்வண்ணனோட ஏற்பாட்டில் சிங்கப்பூர் சென்று கஷ்டப்பட்டு இந்த இருபது வருடத்தில் நல்ல நிலையை அடைத்திருக்கிறேன்... லிட்டில் இந்தியா பகுதியில் நானும் நண்பன் பரக்கத்தும் சேர்ந்து ஹோட்டல் நடத்துக்கிறோம். எங்க ஹோட்டல் செட்டிநாட்டுப் பலகாரங்கள் ரொம்ப பிரசித்தம். அதுவும் ஞாயிற்றுக்கிழமை நம்மாட்கள் வந்து கூடும் போது பாக்கெட் பாக்கெட்டாக முறுக்கு, அதிரசம், வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், மனோலம், ஓமப்பொடி எல்லாம் விற்றுத் தீர்க்கும். கடந்து சென்ற வருடங்களில் எத்தனையோ நல்லதையும் கெட்டதையும் பார்த்துவிட்டேன். தங்கைகளுக்கு நல்ல இடத்தில் திருமணம்... தம்பியை படிக்க வைத்து இன்று அவன் துபாயில் ஏதோ ஒரு கம்பெனியில் நெட்வொர்க் இஞ்சினியர்... குடும்பத்துடன் துபாயில் இருக்கிறான். அப்பா அம்மா இருவரையும் அடுத்தடுத்து இழந்தது எனது வாழ்வில் மறக்க முடியாத பெரிய இழப்பு. ம்ம்ம்.... ஏதோ ஒன்றை இழந்தால்தான் ஒன்றைப் பெற முடியும் என்பார்களே... அப்படித்தான் அவளை இழந்து என் மனைவியைப் பெற்றேன். எனக்கு காதலியாய்... தோழியாய்... தாயாய்... குருவாய்... மனைவியுமாய்...
என்னைக் காதலிப்பதாக நேரடியாக வந்து சொன்ன எங்கள் வகுப்புத் தோழி மல்லிகாவை ஏற்க முடியாமல் என் மனதுக்குள் இருந்தவள்தான் அவள்... வேறு வேறு துறையைச் சேர்ந்தவர்கள் என்றாலும் நானும் நண்பனும் இணைந்து நடத்தலாம் என்று ஆரம்பித்த கையெழுத்துப் பிரதியின் ஆசிரியர் குழுவில் இணைந்தாள். எழுத்தும்... இலக்கியம் சம்பந்தமான பேச்சுமே எங்களுக்குள் காதல் என்னும் தீபத்தை மெல்ல ஏற்றியது. இருவருக்குள்ளும் எரிந்த தீபத்தின் ஒளியை வெளியில் தெரியாமல்... சொல்லத் தைரியமில்லாமல் மறைத்தே நாட்களை நகர்த்தினோம்... ஒருநாள் பார்க்கவில்லை என்றாலும் அடுத்தநாள் நேற்று ஏன் வரலை என்ற கோபம் எங்களுக்குள் வெடித்த போது எங்கள் காதல் தீபத்தின் ஒளி மெல்ல வெளியே வெளிச்சத்தைப் பரவ ஆரம்பித்தது நண்பர்களின் செல்லத் சீண்டல்களுடன்.... மூன்றாண்டுகள் முடித்து எங்காவது வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற நிலையில் திருப்பூருக்குப் பயணித்தவனிடம் 'எங்க வீட்ல ரொம்ப நாள் வச்சிக்கமாட்டாங்க... மாமா ரெண்டு மாசத்துல சௌதியில இருந்து வர்றானாம்... அவருக்கு கட்ட பேச்சு நடக்குது... ப்ளீஸ்... அதுக்குள்ள எதாவது பண்ணு.... என்னையும் உங்கூட கூட்டிக்கிட்டுப் போகப்பாருன்னு சொன்னா.... பஸ் கிளம்பும் போது கண்ணீரோட நின்னா அன்னைக்குத்தான் அவளை கடைசியாப் பார்த்தேன்.... அப்புறம் அவ பிரண்ட் வீட்டுக்குப் போன் பண்ணி அவளை வரச்சொல்லி பேசினப்போ கல்யாணம் நிச்சயம் பண்ணப் போறாங்க... வா... வந்து கூட்டிக்கிட்டுப் போன்னு சொன்னா.... ஏதை வச்சிக் கூட்டிப் போவேன்... ஏதோ சம்பளத்தில் ஒரு வேலை.... விவசாயம் பொய்த்துப் போய் ரேசன் அரிசி சாப்பாட்டில் காலத்தை ஓட்டும் குடும்பம்... திருமண வயதில் தங்கைகள்... படிச்சி பெரியாளகணுங்கிற கனவோட தம்பி... இவற்றின் முன்னே என் காதல் முள் மீது போட்ட சேலையானது... மெல்ல எடுத்தாலும் இதயம் கிழிஞ்சிதான் போச்சு.
'ம்ம்ம்' என்ற பெருமூச்சோடு எழுந்தேன்... இருபது வருடங்களாக என் மனசுக்குள் வாழும் ஜீவன் இதோ ஒரு ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறாள். சௌதியில் செட்டிலாகிவிட்ட அவள் மாமியார் (ஆயா) செத்தபோது வந்திருந்தாளாம் என் மனைவி சொன்னாள். என்னவளுக்கு எங்கள் காதல் கதை அட்சர சுத்தமாகத் தெரியும். நான் அவளிடம் எல்லாம் சொல்லிவிட்டேன்.... வாழ்க்கையில் ஒளிவு மறைவு எதுக்குங்க... அவளும் அது பற்றி எதுவும் சொல்லவில்லை... ஒரு சிரிப்பில் அதைக் கடந்து சென்றாள். இன்று வரை அது குறித்தான குத்தலோ... குடைச்சலோ இல்லை... என் உள்ளம் புரிந்தவள் என்னவள். இவள் கிடைக்க வேண்டும் என்பதால்தான் இறைவன் எங்கள் காதலைப் பிரித்தான் போல... சிரித்துக் கொண்டேன்.
போகலாம்... பார்க்கலாம்... பேசினால் பேசலாம்... இல்லேன்னா திரும்பி வரலாம்... வேறு என்ன செய்ய... திரும்பக் கிடைக்காமல் தொலச்சாச்சுல்ல... வாழ்க்கையில் தொலைத்த எல்லாத்தையும் தேடிப் போவதில்லையே.... அவளைத் தேடிப் போகணும்ன்னு மனசு சொல்லுது... அம்மா வீட்டுக்கு வந்திருக்கிறாளாம்.... தீபாவளி முடிஞ்சிதான் போவாளாம்... எல்லாம் சொல்லிச் சென்றான் மகேஷ்.... மழையை ரசித்தபடி சன்னலோரம் அமர்ந்து காபி குடித்தபடியே கல்லூரியை முன்னிறுத்தி அவளைப் பற்றிப் பேசினோம்... எத்தனை முறை மழை எங்களை நனைத்திருக்கும்... எல்லா முறையும் துப்பட்டாதானே குடையானது.... நினைத்தபோது மனசு சிலிர்த்தது... மனசுக்குள் அவளும் சிலிர்த்து எழுந்தாள். அவளைப் பார்த்து விட்டு வரலாம்... இந்த இருபது வருடத்தில் எத்தனையோ மாற்றங்கள் அவள் வாழ்விலும் உடம்பிலும் நிகழ்ந்திருக்கலாம்... என்னை இளமையில் இருந்து முதுமையின் வாசலுக்குக் கொண்டு சென்றிருக்கும் காலம் இன்னும் அவளை மட்டும் அப்படியேவா வைத்திருக்கப் போகுது என்று நினைத்தபடி கண்ணாடி முன் நின்று மீசையைத் தடவினேன்.. வெள்ளையும் கருப்பும் கலந்து சிரித்தது.
வண்டியை எடுக்கும் போது 'எங்கே இவ்வளவு அவசரமா...?' என்பது போல் பார்த்தாள் என்னவள்... 'காளாப்பூர் வரைக்கும் பொயிட்டு வாறேன்' என்றேன் மெல்ல... 'ம்... மகேஷ் அண்ணன் நேத்து அவ வந்திருக்கான்னு சொன்னதில இருந்து உங்க மனசு ஒரு நிலையில இல்லையின்னு எனக்குத் தெரியும்... எதுவும் தப்பாயிடாம... பொறுமையா எதைப் பேசணுமோ அதை மட்டும் பேசுங்க... அவ பேசுவா... கண்டிப்பா பேசுவா... காதலிச்ச மனசு கல்நெஞ்சாவா இருக்கப் போகுது... சீக்கிரம் வந்திடுங்க... என்னமோ ஏதோன்னு எனக்குப் பயமா இருக்கும்...' என்றாள் கண் கலங்க... 'ம்...' என்றபடி வண்டியை எடுக்க, 'அப்பா நானும் வாறேன்' என ஓடி வந்து ஏறினாள் என் பதின்ம வயது மகள் ஸ்வாதிகா. 'நீ எதுக்குடி அங்கல்லாம்...' என்ற மனைவியிடம் 'அவ வரட்டுமே... என்ன இப்ப... எனக்கும் பேச்சுத்துணையா இருப்பாளே...' என்றபடி வண்டியை எடுக்க, 'போம்மா... நான் அப்பாவோட போன உனக்கென்ன...? அவரோட வண்டியில சுத்தமுடியலையேன்னு ஆதங்கம்' என்றவள் என் கன்னத்தில் முத்தம் பதித்து இடுப்பைச் சுற்றி இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். காற்றில் எங்கிருந்தோ கரைந்து வந்தது ஆனந்தயாழை மீட்டுகிறாள் பாடல். ஏனோ மகள்களைப் பெற்ற அப்பாக்களை எல்லாம் யாழ் மீட்ட வைத்த முத்துக்குமார் முறிந்த யாழோடு வந்து போனான்.
'எப்படிப் பேசலாம்..?' 'எதில் ஆரம்பிக்கலாம்..?' 'அந்த நாள் நினைவுகளை மெல்ல மீட்டிப் பார்க்கலாமா...?' என்ற கேள்விகளுடன் பயணித்த எனக்கு ஸ்வாதிகாவின் கேள்விகள் கேட்கவில்லை... பச்சைக் கலர் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியபோது வாசலில் நின்ற அவளின் அம்மா மெல்ல ஏறிட்டுப் பார்த்துவிட்டு "யாரு...? தெரியலையே...?' என்றார். 'நாந்தான் இளங்கோ... உங்க மகளோட பிரண்ட்... வந்திருக்காங்களாமே...?' என்றேன் மெல்ல. பெயரைக் கேட்டதும் அவங்க முகம் மெல்ல மாறியதில் அறிந்தேன்... எங்கள் காதலை அவர் எப்போதோ அறிந்திருக்கிறார் என்பதை... ஒன்றும் சொல்லாமல் வழிவிட்டவர்... வீட்டிற்குள் போனதும் 'உக்காருங்க... குளிச்சிக்கிட்டு இருக்கா... வரச்சொல்றேன்... என்றபடி மறைய, நான் மெல்ல வீட்டை கண்களால் படம்பிடித்தேன்... கணவன் குழந்தைகளுடன் அவள் சிரிக்கும் போட்டோவில் ஏனோ கண் நிலைகுத்தி நின்றது.
சிறிது நேரத்தில் குளித்த ஈரத்தை நன்றாக துடைக்காமல் தலையில் தண்ணீர் வடிய வடிய நைட்டியில் வந்தவள் 'வாங்க' என்ற ஒற்றை வார்த்தை சொல்லி நகர, அவ அம்மா காபியோடு வந்தார். அவர் முகத்தில் இவன் எதற்காக இப்போது வந்தான் என்ற எண்ணம் பரவிக்கிடப்பதை அறிந்ததும் 'இல்லம்மா... சும்மாதான்... இருபது வருசத்துக்கு மேலாச்சு... நானும் சிங்கப்பூர்ல இருக்கதால இங்க வர்றப்போ மற்றவங்களை பார்க்கிறது சிரமம்தான்.... அதான் வந்திருக்காங்கன்னு கேள்விப்பட்டதும் பாக்கணும்ன்னு தோணுச்சு... நாங்களெல்லாம் காலேசுல ஒண்ணா பத்திரிக்கை நடத்தினோம்...' என்றேன். அவர் ஒன்றும் சொல்லாமல் தலையாட்டியபடி நகர, 'யாருப்பா... இவங்க...?' என்றாள் ஸ்வாதிகா... எப்படிச் சொல்வேன்.. 'ப்ரண்ட்' என்றேன் ஒற்றை வார்த்தையில்.
நெற்றியில் அழகாய் குங்குமம் வைத்து அதன் மேலே சின்ன திருநீற்றுக் கீற்று வைத்து எதிரே வந்து அமர்ந்தாள். கல்லூரிக்கு அவள் சின்னச் சைக்கிளில் வரும் அந்த நாள் நினைவு மெல்ல எட்டிப் பார்த்தது. சிறு கீற்றாய் திருநீறும்.. ஸ்டிக்கர் பொட்டுமாய் அவள் மனதிற்குள் மலர்ந்து மறைந்தாள். என்னைப் பார்த்தாள்... பின் நிலம் பார்த்தாள்... நான் அவளைப் பார்த்தேன்... அவள் பார்க்கும் போது சுவரைப் பார்த்தேன்... 'இங்க வா... உம்பேரு என்ன...?' என ஸ்வாதிகாவை இழுத்து அருகே வைத்து அணைத்துக் கொண்டாள். பெயரைச் சொன்னதும் 'என்ன படிக்கிறே...?' என்றாள் கன்னத்தில் இதழ் பதித்தபடி. என் மனசுக்குள் என்னவோ செய்தது. என்னைப் பார்த்து நல்லாயிருக்கியான்னு கூட கேக்கலையே... அவ எப்படிக் கேப்பா... நாம கேக்கணுமின்னு அவ நினைக்கலாம்ல்ல... என்று நினைத்தபடி 'எப்படியிருக்....கே...கீங்க...' என்றேன் ஒருமையை பன்மையாக மாற்றி. 'ம்... நல்லாயிருக்கேன்.... நீ.... நீங்க...?' என்றாள் அவளும் பன்மைக்குள் நுழைந்து. 'ம்...' என்றேன் ஒற்றை எழுத்தில். பின்னர் மீண்டும் மௌனயுத்தம். விநாடிகள் மெல்லக் கரைந்து நொடிகளைத் தின்றது.
'இவ மட்டும்தானா...?' என்று அவள்தான் மௌனயுத்தத்தை நிறுத்தினாள். 'ம்... இவதான்... இவமட்டுந்தான் இப்ப என் உயிர்...' என்று சொல்லிவிட்டு என்னை நானே மனசுக்குள் கடிந்து கொண்டேன். 'ம்... ஒரு உயிர் போனா... அடுத்த உயிர்தானே வாழ வைக்குது' என்றவள் 'நீ அப்பா செல்லமோ..?' என்றாள். 'ம்... ஆனா அப்பா என்னோட செல்லம்' என ஸ்வாதிகா சொன்னதும் மீண்டும் ஒரு முத்தம்... 'ம்... என்னோட பொண்ணு அப்பா செல்லந்தான்... பையனுக்கு நாந்தான் எல்லாம்... என்ன செல்லமா இருந்தாலும் பொண்ணுங்களுக்கு பிரிவுங்கிறது தவிர்க்க முடியாததுதான்... நினைவுகளோட பிரிவுகளைச் சுமக்க வேண்டிய பிறவி பெண்தானே...' என்று அவளாக சொல்லிக் கொண்டாள். அப்போதுதான் உள்ளே நுழைந்த அவளின் அப்பா 'யாரும்மா..? என்று கேட்க, 'ப்ரண்ட்ப்பா... காலேஜ்ல ஒண்ணாப் படிச்சோம்... நான் வந்திருக்கேன்னு நம்ம மகேஷ் சொல்லியிருக்கும் போல அதான் வந்திருக்கார்...' என்னை ஏற இறங்கப் பார்த்தார்... என்ன நினைத்தாரோ சிரித்தபடி நகர்ந்தார். அவள் 'யாழினி' என்றழைக்க பக்கத்து அறைக் கதவு நீக்கி ஸ்வாதிகா வயதொத்த அழகான பெண் எட்டிப் பார்த்து 'எஸ் மம்மி' என்றாள். 'இவ ஸ்வாதிகா... பின்னால தோப்புப் பக்கம் கூட்டிக்கிட்டுப் பொயிட்டு வா...' என்றதும் 'ஓகே மம்மி' என அவள் ஸ்வாதிகா கரம் பிடிக்க, என்னைப் பார்த்தவளிடம் போ என்று கண் ஜாடைகாட்ட அவளோடு நடந்தாள். ஸ்வாதிகா உருவத்திலும் உயரத்திலும் அவளைவிட சற்று கம்மி... கலரிலும்தான்.
'ம்... என்னைப் பாக்கணும்ன்னு இத்தனை வருசத்துக்கு அப்புறம் தோணியிருக்கே... நன்றி...' என்று அவள் சொன்னபோது அவள் முகத்தில் எழுந்த உணர்ச்சிகள் அவள் உடையாமல் கட்டுப்படுத்த முனைவதை காட்டியது. 'அப்படியில்ல... நான் இங்க வரும்போதெல்லாம் கேட்பேன்... நீ... நீங்க சௌதியில இருக்கதாச் சொல்வாங்க.... ஆமா அவரு வரலை..?' என்றேன் மெல்ல. என் குரல் உடைந்ததை அவளும் புரிந்துகொண்டாள். 'எப்பவோ உடைஞ்சிருந்தாலும் இன்னும் இருக்கே...?' என்று முணங்கியவள் 'இல்ல அவருக்கு லீவ் இல்லை.... நெக்ஸ்ட் மன்த் ஒன் வீக் வருவார்...' என்றாள். 'ம்...' என்றேன். 'ஏன் நீ... நீங்க இளைச்சிப் போயிருக்கீங்க..?' என்றாள் மெல்ல. 'ஹோட்டல் பிஸினஸ்... வேலை அதிகம்... இப்படி இருக்கிறதுதான் நல்லது.... இப்பத்தான் நாப்பதைத் தாண்டுறதுக்குள்ள அட்டாக் வருதே... நீ... நீங்க கூட ரொம்ப மாறிட்டீங்க....' என்றதும் அவள் சிரித்தாள். 'அப்படியேவா இருக்க முடியும்... மாற்றமில்லா வாழ்க்கை ருசிக்காதுல்ல... எத்தனை மாற்றங்களைக் கடந்து வந்தேன்... நான் நினைச்சி வச்சிருந்த வாழ்க்கை எனக்குக் கிடைக்கலை... கிடைச்ச வாழ்க்கை என்னை சந்தோஷமாத்தான் வச்சிருக்கு... ஆனாலும் நான் சுமந்த கனவுகள்... ஆசைகள்... எல்லாமே போச்சில்லையா...?' என்றவள் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். ஆதரவாய் அவள் கையைப் பிடிக்கணும் போல இருந்தது. வாழும் வாழ்க்கையும் வயதுக்கு வந்த மகளின் முகமும் தடுக்க, மனசுக்குள் தவித்தேன்.
'எதுக்கு நமக்குள்ள போலி மரியாதை... எங்கே நீன்னு சொன்னா வருத்தப்படு வோமோன்னு நானும் நீங்களும்....' சிரித்தாள் 'நீயும் பேசுறது நல்லாவாயிருக்கு...' என்றாள். 'இல்லை.. சுபா... அன்னைக்கு....' மெல்ல ஆரம்பித்தேன். 'முடிஞ்சதைப் பேசி இனி என்ன ஆகப்போகுது... ஆமா உன் மனைவிக்கிட்ட என்னைய பாக்கப் போறேன்னா சொல்லிட்டு வந்தே...?' விரக்தியாய் சிரித்தாள். 'ம்... அவளுக்கு எல்லாம் தெரியும்... உன்னோட போட்டோ அவகிட்ட பத்திரமா இருக்கு... அவ உன்னை மாதிரித்தான்...' என்றதும் சிரித்தவள் 'சந்தோஷமா இருக்கு.... ரொம்ப நல்லவங்க போல... என் கணவருக்கு எதுவும் தெரியாது... தெரிஞ்சிருந்தா உன் மனைவி மாதிரி இருந்திருக்கமாட்டார்... வாழ்க்கை நரகமாயிருக்கும்... எனக்குள்ள வச்சி எரிச்சிக்கிட்டு சிரிச்சிக்கிட்டு இருக்கேன்... சில நேரங்கள்ல அமைதியா இருக்கும்... சில நேரங்களில் ஆர்ப்பரிக்கும்... இன்னைக்கு நீ வந்து எண்ணெய் ஊத்தி அணையாம எரிய விட்டிருக்கே....? இனி அணையாது... நான் எரியும்வரை... 'என்றவள் மீண்டும் கண்களைத் துடைத்தாள். எனக்கு ஒன்றும் சொல்லத் தோணலை.
அப்புறம் கொஞ்சம் அமைதி... கொஞ்சம் பேச்சு என நகர, ஸ்வாதிகா யாழினியோடு வர மெல்ல எழுந்தேன் 'இன்னும் ரெண்டு மாசம் இருப்பேன்' என்றபடி. 'நெக்ஸ்ட் மன்த் டுவெண்டி பிப்த் போறோம்... அதுக்குள்ள உன் மனைவியோட வந்திட்டுப் போயேன்... இந்தக் குட்டி என்னை ரொம்ப கவர்ந்துட்டா... உன்னைய மாதிரியே இவளுக்கும் நாசி... அழகாய்...' என்றபோது கண்ணை நோக்காமல் திரும்பிக் கொண்டாள்... சிலதுளி கண்ணீர் வந்திருக்கலாம். 'ஏம்ப்பா... இந்த ஆண்டி வீட்டுக்கு இதுவரை வந்ததில்லையே... இவங்க யார்...?' என்றபடி என் கைபிடித்த ஸ்வாதிகாவிடம் என்ன சொல்வது என யோசிக்க, 'உங்க அப்பாவோட டியர்....ரஸ்ட் பிரண்ட் நான்.. ஒண்ணாப் படிச்சோம்... நிறைய எழுதினோம்... பேசினோம்... ஆமா உங்கப்பாவோட ஆட்டோகிராப் புக்கெல்லாம் வீட்டில் இல்லையா... இருந்தா அதில் நானிருப்பேன்.... நான் இன்னும் என்னோட ஆட்டோகிராப் புத்தகத்தை பத்திரமா இங்க வச்சிருக்கேன்...' என்றாள் அவளுக்கு எழுதிய 'வாழ்வின் கடைசிவரை இணைந்தே பயணிப்போம்' என்ற வார்த்தைகள் நெஞ்சில் குத்த, அவளை இறக்க முடியாமல் சுமந்து மெல்லப் படியிறங்கினேன்...
ஸ்வாதிகாவுக்கு முத்தமிட்டு விடை கொடுத்தவள் 'பை... என்னோட நம்பர் இது...?' என்று நம்பரைச் சொல்லி 'சேவ் பண்ணிக்க.... போன் பண்ணிட்டு எல்லாரும் ஒரு நாள் வாங்க...' என்றபடி கை நீட்டினாள்... பற்றலாமா வேண்டாமா என்ற யோசனையோடு நிற்க, 'ஏய் நீ இன்னும் மாறலை...' என்று சொல்லிச் சிரித்தவளின் கண் மட்டும் அழுதது.
(படம் இணையத்தில் இருந்து எடுத்தேன்... நம்ம முத்துச்சிதறல் மனோ அம்மா வரைந்தது. நன்றி அம்மா... உங்களது ஒப்புதல் இல்லாமல் போட்டதற்கு திட்டாதீங்க...)
-'பரிவை' சே.குமார்.