திங்கள், 26 செப்டம்பர், 2016

சினிமா : தொடரி

து ரொம்ப நீளமான பகிர்வு... தொடரி... அதாங்க இரயில்... நம்ம கிராமங்கள்ல சொல்ற மாதிரி ரெயிலு... இன்னும் புரியிற மாதிரி சொன்னா புகைவண்டி... அது நீளமாத்தானே இருக்கும்... அதைப் பற்றி பேசினா நீண்டுக்கிட்டுத்தான் போகும்... பொறுமையா வாசிங்க...


Image result for தொடரி விமர்சனம்

பார்த்ததும் காதல்...

கிறுக்குத்தனமான மேனேஜர்... 

லூசுத்தனமாக பேசக்கூடிய நண்பர்கள்...

விரைந்து செல்லும் இரயிலின் மேல் டான்ஸ் ஆடும் நாயகன்...

லூசுப் பெண்ணான நாயகி...

இப்படியெல்லாம் இருந்தால் அது அழகான தமிழ்ப்படம்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காதுன்னு நினைக்கிறேன்... அப்படி ஒரு படம்தான் 'தொடரி'.

'காவிரியின் தண்ணீர் கேட்க நமக்கென்ன உரிமை இருக்கிறது' என்று மாமனார் மேல் உள்ள பாசத்தால் கேட்ட... நாளைய தமிழக முதல்வர் என்று நம் ரசிக சிகாமணிகளால் சொல்லப்படுகின்ற... பயிருக்கு நீர் இல்லை என்று போராடிய போது எட்டிப் பார்க்காமல் பத்தடி, பனிரெண்டு அடி கட் அவுட்டுக்கு ஆவின் பால் அபிஷேகம் செய்து கொண்டிருக்கும் இளைஞர் படையின் தலைவனான... தனுஷ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கத்தில் வந்திருக்கும் படம்தான் 'தொடரி'. 

லூசுப் பெண் கதாபாத்திரம் என்றால் நமக்கு நினைவுக்கு வருவது ஜெனிலியா, அந்தப் பெண் இல்லாத குறையை தனது முதல் படத்தில் சிறிதளவு போக்கி, இதில் முழுவதும் போக்கி... பாட்டுப் பாடுகிறேன் என்று தனுஷை மட்டுமல்லாது பார்க்கும் நம்மையும் வதைத்து... இரயில் கம்பியில் தஞ்சம் புகுந்து கிடக்கும் 'உன் மேல ஒரு கண்ணுதான்' கீர்த்தி சுரேஷ்... 

நகைச்சுவை என்று சொல்லி சொற்ப இடங்களில் சிரிக்க வைத்து நம்மை கொலையாய் கொல்லும் தம்பி இராமையா, கருணாகரன், 'தர்புகா' சிவா கூட்டணி... அரைத்த மாவையே அரைப்பது... சவச் சவ...

மத்திய அமைச்சர் ரங்கராஜன்... அவரது பி.ஏ., அவரைப் பாதுகாக்க இரண்டு மெய்க்காப்பாளர்கள்... டெல்லியில் இருந்து சென்னைக்கு இன்னைக்கு எந்த அமைச்சரய்யா இரயிலில் வர்றான்... அமைச்சர் பொண்டாட்டி... அவ்வளவு ஏன் அமைச்சரோட வேலைக்காரன் கூட விமானத்துலதான் வர்றான்னு எல்லாம் யோசிக்கக் கூடாது... அமைச்சர் இரயில் வர்றார்,,, அம்புட்டுத்தான்... எதுக்கு வர்றார்... அவர் சாண எரிவாயு அமைச்சர்... இப்பத்தான் விவசாயம் போச்சு... ஏறு தழுதல் மட்டுமில்ல... எருதுகளும் பசுக்களுமே குறைந்து போச்சு... சாணத்துல எரிவாயு எடுக்க சாணமே இல்லையேன்னு எல்லாம் ரொம்ப டீப்பா சிந்திக்கக் கூடாது... சாண எரிவாயு அமைச்சர் அம்மாவைப் பாக்க வரலாம்... கூட்டணி பத்திப் பேச அவர் சார்ந்த மத்திய அரசு அனுப்பியிருக்கலாம்... இல்ல ஐயாவைப் பார்த்து எந்த ஜியில எவ்வளவு கிடைக்கும்ன்னு பேச வரலாம்... அதுவும் இல்லேன்னா வாக்களித்து ஜெயிக்க வச்ச மக்களை... எதுக்கு இம்புட்டு யோசனை... படத்துக அந்த இரயில் மத்திய மந்திரி வர்றாருய்யா... அமைச்சரா 'டத்தோ' ராதாரவி.

ஸ்ரீஜான்னு ஒரு நடிகை... மலையாளி ஆனா தமிழ் நடிகை... இப்ப தமிழ்ல சேச்சிங்கதானே சேர் போட்டு உட்காந்திருக்காங்க... சாய் பல்லவின்னு ஒரு தமிழச்சி இங்கிட்டு வரவே மாட்டேன்னு மலையாளத்துல பாரா ஒலிம்பிக்ல தங்கம் வாங்கின மாரியப்பன் மாதிரி உயரத்துல நிக்கிதுன்னு வேணுமின்னா நாம பெருமைப் பட்டுக்கலாம்... சரி விடுங்க... மலர் டீச்சரைப் பற்றி பேசினா தெலுங்கில் நம்ம ஸ்ருதி டீச்சரோட நடிப்பு கண் முன்னால வந்து பெப்பே காட்டுது. எங்க ஆரம்பிச்சோம்... ஆங்... மலையாள நடிகை... அது எதுவும் பேசாம  எப்பவாச்சும் நாயை கொஞ்சுது... மத்த நேரமெல்லாம் அந்த நாயை கீர்த்தி சுரேஷ் கொஞ்சுது.. கீர்த்தி சுரேஷை நம்ம தனுஷ் கொஞ்சுது... நமக்கு கடுப்பு மிஞ்சுது... என்ன இது இரயில் ஒரே டிராக்ல போன நாம பல டிராக் மாறிக்கிட்டே இருக்கோமே.... அந்த நடிகைக்கு ஒரு அம்மா.... திண்ணிப் பண்டாரம்... கேன்டீன்ல செய்யிற எல்லாத்தையும் இது ஒரு ஆளே தின்னுக்கிட்டு வருது... தனுஷ் வரப்போக இருக்கார்... அட பதார்த்தங்கள் கொண்டு வந்து கொடுக்கவும் போகவுமா இருக்காரு... ஏன்னா பார்த்ததும் காதல் கொண்ட பாவை அங்கதானே இருக்கு...

மொத்த இரயிலுக்கும் நம்ம இமான் அண்ணாச்சி மட்டுமே டிடிஆர்... அதாங்க டிக்கெட் பரிசோதகர்... வேற ஒரு ஆளைக்கூட கண்ணுல காணோம்... ஒருவேளை சம்பளப் பிரச்சினையில அவங்க சார்ந்த சங்கம் வேலை நிறுத்தம் செஞ்சிருச்சோ என்னவோ... நம்ம இமான் அண்ணாச்சியும் அப்ப அப்ப நகைச்சுவையை அள்ளித் தெரிக்கிறார்... 700 பேர் இருக்காங்கன்னு சொல்லி 70 பேரைக்கூட கண்ணுல காட்டாத இரயிலில் அவனவனுக்கு ஆயிரம் வேலை சிரிக்கத்தான் ஆளில்லை... நம்மளையும் சேர்த்துத்தான்... படம் பேண்ட்ரி... நடிகை...மந்திரியின்னே சுத்துது... பயணிகள் கவனத்திற்கு அப்படின்னு ஆரம்பத்துல சொல்றாங்க... ஆனால் பயணிகள் கவனிக்கப்படலை.

மெல்ல நகர்ற இரயிலில் மனைவியையோ, குழந்தைகளையோ கை பிடித்து மேல ஏற்றவே சிரமப்பட வேண்டியிருக்கும்... ஆனா வேகமாகப் பயணிக்கிற இரயிலின் மீது நாயகனும் நாயகியும் அநாயசமாக ஏறிப் போறாங்க... இறங்கி வர்றாங்க... எப்படின்னு எல்லாம் யோசிக்கக் கூடாது... இரயில் தறிகெட்டு ஓடும் போது மொபைல்லயும் கணிப்பொறியிலயும் விடாம டிவியில வர்ற நேர்படப்பேசு பாக்குறாங்க... கண்ட்ரோல் ரூம்ல பேசுறதெல்லாம் கேக்குறாங்க... டவர் கிடைக்குமா... சார்ஜ் நிக்குமான்னு எல்லாம் யோசிக்காம தொடரியை தொடர்ந்து பார்த்தோமா இல்லையா... அப்படித்தான் இதையும் எடுத்துக்கணும்..  

என்னப்பா நீ இப்படிப் பேசிக்கிட்டுப் போறே... தொடரி என்னன்னு சொல்லாம நடிச்சவங்களைத் தொடர்றே.... கொஞ்சம் தூக்குறே... ரொம்ப வாறுறே... அப்படின்னு நீங்க யோசிக்கலாம்... இடைவேளை வரை இப்படித்தான்... நகைச்சுவையின்னு கொன்னும்... காதல் பண்றேன்னு கடுப்படித்தும்... நடிகையை காட்டியும் மத்திய அமைச்சரைக் காட்டியும்... ஒன்றுமில்லாமல் பயணிக்கிறது இரயில்... அதாங்க 'தொடரி'.

இடைவேளைக்கு பின்னர் கட்டுப்பாட்டை இழக்கும் இரயில் 120 கிமி வேகத்தில் பயணிக்க, பிரச்சினையில் சிக்கி இரயிலில் இருந்து வெளியாகி, தன்னைக் கொல்ல வரும் மந்திரியின் மெய்க்காப்பாளனிடமிருந்து தப்பிக்க இரயிலில் ஏறி எஞ்சின் பெட்டியின் வெளியே கம்பியைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் கீர்த்தியை தீவிரவாதிகளின் தலைவி ஆக்கி... இரயில் இருப்பவர்களிடம் கொள்ளை அடித்துக் கொண்டு மேல் தளத்தில் வந்து அமரும் ஆறு பேரை தீவிரவாதிகள் ஆக்கி... மத்திய அமைச்சரை கடத்துகிறார்கள் என தொலைகாட்சிகள் பரபரப்பாக்க... தொடரி... அதாங்க இரயில் கொஞ்சம் கொஞ்சமாக வேகம் எடுக்குது... 

ஆங்கிலப் படத்துக்கு நிகராக ஒரு பாலத்தின் மீது பயணிக்கும் காட்சி... இறுதிக் காட்சி என்று நாம் மார்தட்டிக் கொள்ளலாம்... அவ்வளவு சூப்பர் என்றாலும் தொடரிக்கு மூலமான 'அன்ஸ்டாப்பபுள்' போன்ற ஒரு தடக்... தடக்கை கொடுக்கத் தவறி விட்டதால் நமக்குள் ஏறிய பரபரப்பு... காவிரி பிரச்சினையில் தமிழகம் போல் சப்பென்று அடங்கிவிட்டது. இருந்தாலும் முற்பாதிக்கு பிற்பாதியில் 'தொடரி' வேகமாத்தான் போகுது. என்ன ரொம்ப நேரத்துக்கு தனுஷை அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு... கீர்த்தியை கம்பிக்குள் உட்கார வைத்து விட்டு கதையை தொலைக்காட்சி... இரயில்வே கண்ட்ரோல் அறை... போலீஸ் என பயணிக்க வைப்பதால் என்னய்யா தனுஷ்... இந்நேரம் கதவை உடைச்சிக்கிட்டு வந்து அந்தபுள்ளய காப்பாத்தியிருக்க வேணாமான்னு கேக்கத் தோணுது... ஆனா கேக்கலை.... ஏன்னா இவ்வளவு வேகமா எங்கும் நிக்காம ஓடுற ரயிலோட டிரைவர் (டிரைவர்தானே... இல்ல வேற எதுனாச்சும் பேரு இருக்கா...) என்ன ஆனார்ன்னு எவனும் கேக்கலையே... (கடைசியிலதான் கேக்குறானுங்க) ரயில் அம்புட்டு வேகமா தறிகெட்டு ஓடினாலும் பேண்டரியில வாங்கித் தின்னுக்கிட்டு ஹாயாத்தானே வர்றானுங்க... கொஞ்சம் கூட பயமில்லையே ராஸ்கல்ஸ்...

தனுஷ் வெளியானதும் ஆஹா... இனித்தானே ஆரம்பம்... நெருப்புக்கு மருமகன்டா... அழகிய தமிழ் மகன்டா... வேட்டி கட்டி விழாக்களுக்குப் போகும் தமிழன்டா... தண்ணி மட்டும் கேக்கக் கூடாதுன்னு பேசும் மாமனாருக்கு உகந்த மறத் தமிழன்டான்னு எழுந்து உட்க்கார்ந்தா... மேல ஏறிப் போயி கொள்ளையர்களுடன் சண்டை போட்டு.... லூசுப் பெண்ணோட பேசி அவளுக்கு காதலையும் சூழலையும் புரிய வச்சி... பெட்டி நெருப்புப் பிடிச்சி எரிய பாட்டுப்பாடி... அப்படியே சின்ன ஆட்டமும் போட்டு.... கட்டுப்பாட்டுறை அறையில் இருந்து ஒருவிதமாக தொடர்பில் வர... அவர்கள் சொல்படி... எஞ்சினுக்கும் அவர் இருக்கும் முதல் பெட்டிக்கும் இடையில் ஹெலிகாப்டர் மூலமாக இறங்கி... அவற்றை பிரித்து விட்டு... காதலி இருக்கும் பக்கம் தாவி... முடிஞ்சிருதே... தனுஷ் வீரதீரமெல்லாம் காட்டாமல் முடிஞ்சிருதே... நல்லவேளை 'குருவி'யாப் பறக்கலை... தனக்கு எது வருமோ அதை மட்டும் செஞ்சிருக்காரு...

தனுஷ்... தேசிய விருது பெற்ற நாயகன்... தனுஷோட நடிப்பைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை... எந்தக் கதாபாத்திரமோ... அதுவாகவே மாறும் நடிகன்... ரொம்ப ஓவர் பில்டப்பெல்லாம் இல்லாமல்... தனது வழக்கமான ஏற்ற இறக்க... கத்திப் பேசும் பாணியில் கலக்கியிருக்கிறார்... தனுஷ் மட்டுமே தொடரிக்கு எரிபொருள் என்று நினைத்து விட்டார்கள் போலும்... அந்தத் தவறுதான் படத்தின் வேகத்துக்கு தடை போட்டுவிட்டது. தம்பி இராமையாவிடம் பேசும் சின்னச் சின்ன வார்த்தைக் கிண்டல்கள்... கீர்த்தியிடம் இரயில் மீது நின்று கத்திப் பேசும் போதும்... கண்ட்ரோல் அறையில் அதிகாரிகளுடன் பேசும் போதும் இடையிடையே வெளிப்படுத்தும் கிண்டல்கள் என மனுசன் எப்பவும் போல் இதிலும்...

கீர்த்தி சுரேஷ்... மலையாளம் பேசுது சரி... எதுக்குய்யா ஒண்ணுமே தெரியாத புள்ள மாதிரி மலையாளத்தைக் கொன்னு துப்புது... லூசு மாதிரி நடித்தால் அப்புறம் அதற்கென முத்திரை குத்தி விடுவார்கள் என்பதை உணர்ந்தால் நல்லது... ஆனா பத்திரிக்கைகள் அந்தப்புள்ள நல்லா நடிச்சிருக்குன்னு எழுதியிருக்கு... சில இணைய விமர்சனமும் அப்படியே... ஆமா அது நடிச்சிருக்கா... கம்பியைப் பிடிச்சிக்கு லூசு மாதிரி பேசினா நடிப்புன்னா... சரி விடுங்க... பாவாடை... சட்டையில ஒரு கேரளப் பிகரு வந்தா 'ஜொள்'லத்தானே செய்வோம்.

ராதாரவி... அளவான நடிப்பு.... அரசியல்வாதிகளை நல்லாத் தாக்குறாரு... அவருக்கு சொல்லியா கொடுக்கணும்... சின்ன கோடு போட்டா ரோடு போடமாட்டாரா என்ன... ஆனா ஒரு மந்திரி... நடிகை ஒருத்தி அதே இரயிலில் பயணிக்கும் போது சந்திக்கவே இல்லைய்யா... அது ஏன்..? கேரளக்காரின்னதும் சசிகலா புஷ்பா,,, அடச்சீ.... திருச்சி சிவா சடை போட்டது கிராஸாகுது பாருங்க... இது தமிழ்நாட்டு சின்னம்மா ஆகப் போறதை இங்க பேசி நாளைக்கி நாலு பேரு கட்டைய தூக்குவானுங்களே... நடிகை மலையாளியின்னதும் சரிதா நாயர் மாதிரி சந்தி சிரிக்க வச்சிரும்ன்னு பயந்துட்டாரு போல... கடைசி வரை தன்னொட கூபேயை விட்டு வெளிய வரலை.

ரயிலின் வேகத்தின் ஊடே... பட்டிமன்ற ராசா, ஞானசம்பந்தன் என நாலு பேரை வைத்து தொலைக்காட்சியில் படவா கோபி நடத்தும் நேர்படப்பேசு.... இரயிலின் வேகத்துக்கு(120கீமி?) அதை ஒட்டியே பயணித்து லைவ்வாக செய்தி கொடுக்கும் தொலைக்காட்சி ஊழியர்கள் என செம தாக்கு தாக்கியிருக்கிறார்கள்... நேர்படப் பேசை சும்மா கிழிகிழியின்னு கிழிச்சதுக்காகவே... அந்த சூப்பர் வசனங்களுக்காகவே இயக்குநரை வாழ்த்தலாம்... ஆனா நீங்க என்னதான் கிழிச்சாலும் நாங்க அப்படித்தான்னு ராம்குமார் தற்கொலை(?) பற்றிப் பேச தேசியக் கொடியை எரித்த வீரன் திலீபனைக் கொண்டு வந்து உக்கார வச்சி பேசத்தானே செய்யிறானுங்க.... இவனுக திருந்த மாட்டானுங்க... ஆனா நம்ம மக்கள் கொடியை எரித்தால் கூப்பிட்டு பன்னும் டீயும் பக்கோடாவும் கொடுத்து பேச வைப்பானுங்கன்னு கண்டிப்பா கிளம்புவானுங்க... எரிக்க... இவனுகளை இல்லை... கொடியை... நம் தேசியக் கொடியை...

படத்தின் பின்னணி இசையும் பாட்டும் சூப்பர்... அது எப்படிப்பட்ட சூழலில் பாடினாலும் கேட்க இனிமைதான்... ஒளிப்பதிவு கலக்கல்... இரயில் கணிப்பொறி வரைகலை... அதாங்க கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் ஹி...ஹி... புரியலையா ரொம்பவே பல்லைக் காட்டுதுங்க... மேலே நிற்கும் தனுஷோ... கம்பியை பிடித்து அமர்ந்திருக்கும் கீர்த்தியோ.... 120 கீமி வேகத்தில் போயும் காற்றில் ஆடலைங்க... ஆடிக் காத்துல அம்மியே பறக்கும்ன்னு ஊர்ப்பக்கம் சொல்வாங்க... அப்படியிருக்க ஓல்லிக்குச்சி உடம்புக்காரன் தனுஷ் 120கீமி வேகத்தில் இரயில் விரைய... பறந்து... பறந்தே போயிருக்கணுமா இல்லையா... இல்லையே... காத்தே இல்லையே... தலை கலையாமல் பாட்டு.. ஆட்டம்... சண்டை... ஆமா காத்து எங்க போச்சுன்னு கேக்கக்கூடாது.... அடிக்கலை அம்புட்டுத்தான்... கதிரறுத்து நெல் தூற்றும் போது காத்து வரலைன்னா விசிலடிச்சி வர வைப்போம்... இங்கே விசிலடிச்சி... இல்லே ஒரு பெரிய மின்விசிறியை வச்சிருக்கலாம்... சரி... இனி பேசி என்னாகப் போகுது...

நாயகன் நாயகி எஞ்சின் பெட்டியில் போகும் போது 'என்ன ஜாக்... பெட்டியை பிரிச்சிவிட்டா எஞ்சின் நிக்கும்ன்னு சொன்னாரே... நிக்கலை ஏதாச்சும் டெக்னிக்கல் எரரா...?' என்று காவல் அதிகாரி கேட்க, 'இது டெக்னிக்கல் எர்ரர் இல்ல... ஹீமன் எர்ரர்' என்று சின்னி(ஜாக்) சொல்வார். ஏன்யா தனுஷை இரண்டு பெட்டிக்கும் இடையில் இறக்கிவிடப் பறந்த ஹெலிகாப்டர் அங்கினதான் பறக்குது.... அதில் இருந்து அந்த கயிறு ஏணியைப் போட்டா ஹீரோ நாயகியை காப்பாற்றி, ஏணியில் நின்று ஒரு பாட்டுப் பாடி இருப்பாரே... சுபமா முடிஞ்சிருக்குமே ஏன் செய்யலைன்னு கேட்கலாம்ன்னு நினைச்சா... அந்த கடைசி நிமிட பரபரப்பு கிட்டாம போயிருமேன்னு விட்டுட்டாரு போலன்னு மனசைத் தேத்திக்கிட்டு கேட்காமலேயே நிம்மதியா 'தொடரி'யில இருந்து இறங்கி நடந்தாச்சு.

நிறைய லாஜிக் சொதப்பல்கள்... மீறல்கள்.. அதெல்லாம் இருந்தாத்தானேய்யா தமிழ்ப்படம்... இதைவிட இன்னும் கூடுதலாய்.... ஏதேனும் இருந்தால்... அது தெலுங்குப் படமய்யா...  தொடரி... நல்ல தமிழில் பெயர் வைத்த தமிழ் படம்... தனுஷ் படம்... பிரபு சாலமன் படம்... இரண்டாம் பாதியில் 120 கிமி வேகத்தில் பயணிக்கவில்லை என்றாலும்... குறைகள் நிறைவாய் இருந்தாலும்.... பாலத்தின் மீது இரயில் போகும் போது அதிர்வில் பாலம் உடைவது... இறுதிக் காட்சியில் சென்ட்ரல் ஸ்டேசனுக்குள் இரயில் எஞ்சின் எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிச் செல்வது என கலக்கலாய் பயணித்திருக்கிறது... இரண்டாம் பாதி படத்தை வெற்றி பாதையில் பயணிக்க வைத்திருக்கிறது.

தொடரி.... ரொம்ப எதிர்பார்க்காமல் சென்றால் வைகையில் பயணித்த அனுபவத்தைப் பெறலாம். மைனா, கும்கி அளவுக்கு இல்லை என்றாலும் ஒரு தடவை பார்க்கலாம்தானுங்க...

இது போன்ற படங்களில் நடித்தாலும் காக்கா முட்டை, விசாரணை என வித்தியாசமான கதைக்களங்களில் பயணிக்கும் இயக்குநர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தயாரிப்பாளராய் தனுஷ் இருப்பதில் சந்தோஷமே. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியின் விசாரணை... ஆஸ்கார் ரேசில் இருக்கிறது... வெற்றி பெற வாழ்த்துவோம்.
-'பரிவை' சே.குமார்.

7 கருத்துகள்:

  1. கொஞ்சம் படித்தேன். எப்படியும் நான் இந்தப்படம் பார்க்கப் போவதில்லை! அதனால்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. ஒரு தடவை பார்க்கலாம் என்ற கருத்து சிந்திக்க வைத்துவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. எப்படியும் நான் பார்க்கப் போறதில்லை குமார்! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அண்ணா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. தொடரி இம்புட்டுத்தானா..தொடர்வண்டி என்றும் சொல்லுவதுண்டு இல்லையா அப்படி எடுத்திருப்பதால் இந்தப் பெயரோ...சரி விடுங்க எப்படியும் நல்லால்லனு தெரியுது...விமர்சனத்துக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி