புதன், 9 மார்ச், 2016

சேதுபதி Vs மிருதன்

சேதுபதி - மிருதன் இரண்டும் போலீஸ் கதைதான்.... சேதுபதி கொஞ்சம் வித்தியாசமாய் ஒரு போலீஸ்காரனின் குடும்பத்தோடு பயணிக்கும் கதை... மிருதன் டிராபிக் போலீஸ், வெறி பிடித்த மனிதர்கள் என  அம்புலி மாமா காலத்துக் கதை... இரண்டுமே வெவ்வெறு கதைக்களம். இந்த இரண்டு படங்கள் குறித்து ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கிறது என்பதை படங்கள் குறித்தான விமர்சனங்களில் பார்த்தாச்சு... இப்போ எல்லாரும் கணிதனையும் ஆறாது சினத்தையும் கடந்து போக்கிரிராஜா போனதைப் பற்றி வருந்தி,  வர இருக்கும் காதலும் கடந்து போகும் படத்தின் டீசர் கொடுத்த உற்சாகத்தில் திளைத்திருக்கிறார்கள். இனி நாம் விமர்சனம் செய்து யாரும் படம் பார்க்கப் போவதில்லை... இரண்டையும் பற்றி நமக்கு ஒரு பதிவுக்கான பார்வைதான் இது.


சேதுபதி, தமிழ் சினிமா இலக்கணமான வில்லனுடன் மோதும் போலீஸ்... அந்தப் போலீசின் வேலையைப் பறிக்கும் வில்லன்... போலீசுக்குள்ளேயே இருக்கும் கருப்பு ஆடுகள்... அடிபட்ட போலீஸ் மீண்டும் எழுந்து வருவது... என வழிவழி வரும் இலக்கணத்தை மீறாத கதைக்குள்... காதல் மனைவி, அழகான குழந்தைகள் என சந்தோஷமான குடும்பப் போலீஸ் படம்.

மிருதன், ஆபத்தான திரவம் தவறுதலாக கொட்டிவிட, அதைக் குடிக்கும் நாய் வெறிகொண்டு மனிதனைக் கடிக்க, அவன் மற்றவரைக் கடிக்க... கடிக்க... கடிக்க... ஊட்டி எங்கும் பரவும் நோயின் தீவிரத்தை கட்டுக்குள் கொண்டு வர காவல்துறை நடவடிக்கை எடுக்க ஒருபுற ஆயத்தமாக, மறுபுறம் மருந்து கண்டுபிடிக்க டாக்டர்களை கோயம்பத்தூர் கொண்டு செல்ல டிராபிக் போலீசிடம் உதவி கேட்கும் டாக்டரான நாயகி, அவளுக்கு உதவ படம் முழுவதும் தீபாவளி ரோல்கேப் மாட்டிய துப்பாக்கியால் 'டொப்பு... டொப்பு'ன்னு  சுட்டுக்கிட்டே இருக்கும் நாயகன் என ஷோம்பிக் கதையை நொந்து நூடுல்ஸ் ஆகும் அளவுக்கு கொடுத்திருக்கும் படம்.

ஒரு விசாரணை, தவறுதலாய் நடக்கும் துப்பாக்கி சூடு... ஒரே ஒரு 'டொப்'... சஸ்பெண்ட் செய்யப்பட்டு, விசாரணைக் கழிஷன் அமைக்கப்பட்டு, அலைக்கழிக்கப்படுகிறான் சேதுபதி.. இவர்களால் நோய் தீவிரமாகப் பரவும், உறவாக இருந்தாலும் சுட்டுக் கொள்ள வேண்டும் என்ற உயரதிகாரியின் பேச்சு கொடுக்கும் தைரியத்தில் படம் முழுவதும் 'டொப்பு... டொப்பு...', மக்களைக் காக்க பல உயிரை எடுத்தாலும் தவறில்லை என்பதால் போலீஸ் எல்லாம் தூங்கப் போயாச்சு போல... தனி ஒருவனாய் சுட்டுத் தள்ளுகிறான் மிருதன்.

செத்தது ஒரு போலீஸ்காரன் சார், அவனுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு சார்... அவங்களுக்கு யார் இருக்கா..? எனக் கேட்கிறான் சேதுபதி, நோயால் பாதிக்கப்பட்டவனும் மனிதன்தான், இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கலாம் என்றாலும் அவனுக்கு குடும்பம் இருக்கா இல்லையான்னு எல்லாம் கவலையில்லை போட்டுத் தள்ளனும் என்கிறான் மிருதன்.

காதல் மனைவியை அடித்தாலும் அன்பாய் அணைத்துக் கொள்ளும் சேதுபதி 'கொஞ்சிப் பேசிட வேண்டாம்... உன் கண்ணே பேசுதடி..' என்கிறான். ரோட்டில் பார்த்து காதலிக்கிறேன் பேர்வழியின்னு திருமணம் நிச்சயித்து பத்திரிக்கை கொடுத்துக் கொண்டிருக்கும் பெண்ணைப் பார்த்து, தன்னைக் காதலிக்காத போதும் மிருதன் 'முன்னாள் காதலி...' யின்னு பாடுறான்.


மனைவி, குழந்தைகள் என சந்தோஷமாக சேதுபதி இருக்க, வில்லனால் குடும்பத்துக்கு ஏதாவது பிரச்சினை வரணுமே, ரெண்டு அழகான வாண்டுகள் இருக்குதேங்கிற நம்ம நினைப்பை, தொடர்ந்து தக்க வைக்கும் விதமாக தள்ளிப் போட்டுக் கொண்டே போய், அந்தக் காட்சி வரும்போது ஆஹா மொத்தக் குடும்பமும் காலியின்னு நினைக்கும் போது, நம்மை ஆட்கொள்ளும் விதமாக சிறுவனை வைத்து அதை முறியடித்து இருக்கிறார்கள். இதேபோல் தங்கை மீது பாசத்தைப் பொழியும் மிருதனுக்கோ அல்லது தங்கைக்கோ வெறி பிடித்தவர்களால் பிரச்சினை வரணுமேன்னு நாம் நினைச்ச மாதிரியே தங்கையை வெறி பிடித்த டாக்டர் கடித்து வைக்க, அதை எதிர்க்கும் சக்தி அவளிடம் இருப்பதை அறிந்து அவளை வைத்து மருந்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறார்கள்.

மனைவி, குழந்தைகள் என வாழும் சேதுபதி, போலீஸ் கொலைக்கேசு விசாரணைக்காக மதுரைக்கு வருகிறார். அவருக்கு மாமனார் மாமியார் இருப்பதாகச் சொல்லி, மாமியாரும் இவர் வீட்டிற்கு வருவதாய் காட்டியிருக்கிறார்கள். அம்மா, அப்பா இருப்பதாகக் காட்டவில்லை. மனைவிக்கு செல்பி எடுத்து அனுப்பவும், போனில் கொஞ்சவும் செய்பவர் அம்மா, அப்பாவிடம் போனில் கூட பேசவில்லை இருந்தும் அது குறையாகத் தெரியவில்லை. தங்கையுடன் வாழும் மிருதனுக்கு தாய், தந்தை என்ன ஆனார்கள்... ஏன் வேறு எந்த உறவும் அவருக்கு இல்லை என்பது உறுத்தலாக இருந்தாலும் இப்படியான கதையை நகர்த்த அம்மா அப்பா தேவையில்லை என்று நினைத்துவிட்டார்கள் போல என மனசைத் தேற்றிக் கொள்ள முடிகிறது.

போலீஸ் என்றால் மிடுக்காக இருக்கணும் என்ற தமிழ் சினிமா கொள்கையை உடைத்து, ஓங்கி அடித்தால் ஒன்றை டன் வெயிட்டுன்னு எல்லாம் பேசாமல் சாதாரணமாக வந்து போகும் விஜய் சேதுபதி ரொம்ப நல்லாப் பண்ணியிருக்கிறார். டிராபிக் போலீஸாக வந்து சீனியர் ஆபிசர் போல சுட்டுத் தள்ளும் ஜெயம் ரவி, பேசுவது ஷோம்பியாக இருந்தாலும் நன்றாக நடித்திருக்கிறார்.

சேதுபதியின் மனைவியாக வரும் ரம்யா நம்பீசன், சாதாரண மனைவியாக வாழ்ந்திருக்கிறார். அதிலும் விஜய் சேதுபதியுடனான காட்சிகளில் கலக்கியிருக்கிறார். என் கண்ணு முன்னாலயே உன்னை இந்த அடி அடிக்கிறான்.. நீ அவனோட இருந்தது போதும் எங்கூட கிளம்பு என்று சொல்லும் அம்மாவிடம், அந்தாளு இப்ப அடிச்சிட்டுப் போவான்... அப்புறம் வந்து கொஞ்சுவான்... அதுக்காகவாவது நான் இங்க இருக்கணும்... உனக்கு இருக்கப் பிடிக்காட்டி கிளம்பு என்று சொல்லும் போது கணவன் மீதான அன்பை அழகாய் வெளிப்படுத்தியிருக்கிறார். காதலிக்கவே இல்லை என்றாலும் இறுதிக் காட்சியில் 'அப்பா என்னைக் காப்பாற்ற வரலை... கட்டிக்கப் போறவன் காப்பாற்ற வரலை... நீ யாரடா என்னைக் காப்பாற்ற..?' என்று மிருதா... மிருதான்னு பாடல் ஒலிக்க கேட்குமிடத்தில் நன்றாக நடித்திருக்கும் லஷ்மிமேனன் மற்றபடி ஒன்றும் பெரிதாக செய்யவில்லை.

சேதுபதியில் ரெண்டு குழந்தைகளுக்கு தாயாக நடித்திருந்தாலும் ரம்யாவிடம் இருக்கும் இளமைத் துள்ளல், சின்னச் சின்ன எக்ஸ்பிரசன்ஸ் எல்லாம் மிருதனில் டாக்டராக வரும் லஷ்மியிடம் இல்லை. முதல் மூன்று படங்களில் இருந்த லெஷ்மி இப்போது இல்லை... ஏனோதானோவென்று வந்து போகிறார்... வளர்த்திக்கு ஏற்றார்போல் உடம்பும் வளர்கிறது... நமீதா போல் ஆகாமல் இருந்தால் சரி.


சேதுபதியில் அசிஸ்டெண்டாக வரும் போலீஸ்காரர் சொதப்பினாலும் கொஞ்சமேனும் சிரிக்க வைத்தார், நடிக்கவும் செய்தார். மிருதனில் நண்பனாக வருபவர், சுடத் தெரியாமல் சுட்டு டிராபிக் போலீஸ் மாப்ளே என்று சொல்லும் போது சிரிப்புக்குப் பதில் கடுப்பு வருது. ஆமா டிராபிக் போலீஸ்ன்னா சுடத்தெரியாதா...? டிரைனிங் கொடுக்க மாட்டானுங்களா..? சம்திங் மட்டும்தான் வாங்கச் சொல்லிக் கொடுப்பானுங்களா...?

வீரபாண்டிய கட்டப்பொம்மன் என்றால் நமக்கு சிவாஜி ஞாபகத்தில் வருவது போல், போலீஸ் என்றாலே விஜயகாந்த் ஞாபகத்தில் இருப்பார். போலீஸ் கெட்டப்புக்கே ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர் விஜயகாந்த். காக்க காக்க சூர்யா, வேட்டையாடு விளையாடு கமல், என்னை அறிந்தால் அஜீத் என இயக்குநர் கௌதம் மேனன் தனது போலீஸ் நாயகர்களை மற்ற படங்களில் இருந்து வேறுபடுத்திக் காட்டியிருப்பார். இயக்குநர் ஹரியோ போலீஸ்ன்னா பவர்ன்னு அடித்து ஆடியிருப்பார். சேதுபதியில் மிடுக்கெல்லாம் இல்லாமல் ரொம்ப ஜாலியான போலீசாக, எப்பவும் வில்லனுடன் மோதாமல் அவர்களுக்கும் குடும்பம் இருக்கு, அங்கு மிடுக்கெல்லாம் இல்லாமல் ஜாலியாக இருப்பார்கள் என்பதை சேதுபதியில் அழகாக காட்டியிருக்கிறார்கள். மிருதனில் போலீசாக வேலை பார்ப்பதைவிட மருந்து கண்டுபிடிக்க நினைக்கும் குழுவுக்கு உதவ, விதவிதமான துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டே இருக்கிறார். அவருக்கு இயக்குநர் எப்படி அத்தனை துப்பாக்கி கொடுத்தார்ன்னு தெரியலை.

சேதுபதியில் வேல ராமமூர்த்தி வில்லனாக நன்றாகவே செய்திருந்தாலும் இன்னும் நல்லதொரு வில்லனைப் போட்டிருக்கலாமோ என்று நினைக்க வைத்தார். மிருதனில் இவர்தான் வில்லனாக இருப்பார்ன்னு முதல் காட்சியில் நினைக்க வைத்த அரசியல்வாதியை படத்தின் போக்கில் காமெடியனாக்கிட்டாங்க... கடி பட்ட எல்லாருமே வில்லனாவதால் தனிப்பட்ட வில்லன் இல்லை.

சேதுபதியைவிட மிருதனில் லாஜிக் ஓட்டைகள் அதிகம். ஜெயம் ரவியைவிட விஜய் சேதுபதி நடிப்பில் கலக்கியிருப்பார். மிருதனைவிட சேதுபதியில் பாடல்கள் அருமை. மொத்தத்தில் மிருதனைவிட எல்லா விதத்திலு சேதுபதி முன்னிலையில் இருந்தாலும் நம் மக்களுக்கு ஒரு நல்ல போலீசை விட, வெறி நாய் மனிதர்களையே பிடித்து இருப்பதால் சாம்சனை தூக்கி ஓரங்கட்டிவிட்டு உதயகுமார் பெயரில் மீண்டும் பேனர் வைத்தது போல் சேதுபதியை பின்னுக்குத் தள்ளி மிருதன் வசூலில் முதலிடம் பிடித்திருக்கிறது. எனக்கு சேதுபதி ரொம்ப பிடித்திருந்தது.


எனக்கு மிருதன் பார்த்த பின் தூக்கத்தில் கூட என்னைச் சுற்றி சுடுவது போல இருந்தது. சேதுபதி குழந்தைகள், மனைவியின்னு ஒரு சந்தோஷச் சாரலை உள் செலுத்தி பிரிவின் துக்கத்துக்குள் குடும்ப சந்தோஷத்தை நுழைத்தது.

சிவகார்த்திகேயனைக் கொண்டாடும் நாம் நல்ல நடிகன் விஜய் சேதுபதியை கொண்டாடுவதில்லை என்பது வருத்தமே.

இப்போது அதிகம் விரும்பிக் கேட்கும் பாடல் 'முன்னாள் காதலி' அல்ல... ' கொஞ்சிப் பேசிட வேண்டாம்... உன் கண்ணே பேசுதடி...'


-'பரிவை' சே.குமார்.

11 கருத்துகள்:

  1. மிருதன் வைத்திருக்கிறேன். இன்னும் பார்க்கவில்லை. சேதுபதி இன்னும் கிடைக்கவில்லை.
    தம +1

    பதிலளிநீக்கு
  2. மிருதன் பார்த்து தலவலி வந்ததுதான் மிச்சம்...

    பதிலளிநீக்கு
  3. படம் பார்க்க வேண்டிய செலவு இல்லை எல்லாமே எழுதி விட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  4. மிருதன்-சேதுபதி ஒப்பீட்டுடன் கூடிய வித்தியாசமான விமர்சனம்.அருமை

    பதிலளிநீக்கு
  5. அருமையான அலசல் நண்பரே
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  6. இவ்வளவு ஆழ்ந்தா படங்களைப் பார்ப்பது...?

    பதிலளிநீக்கு
  7. இரண்டு படங்களையும் பார்க்கணும்னு நினைத்திருந்தேன். இப்போ அந்த இன்ரஷ்ட் இல்லை....நல்ல அலசல் சகோ

    பதிலளிநீக்கு
  8. நான் இன்னும் படம் பார்கவில்லை, விமர்சனங்கள் படித்தேன், இனிதான் பார்க்கணும்.

    பதிலளிநீக்கு
  9. இரண்டையும் ஒப்பிட்டு விமர்சித்தது வித்தியாசமாக இருக்கு குமார். பாலக்காட்டில் இரண்டும் வந்ததால் பார்த்துவிட்டேன். இரண்டும் ஓகே...ஸ்பெஷலாக எதுவும் இல்லை என்று தோன்றியது.

    பதிலளிநீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி