பாரதி நட்புக்காக பட்டிமன்றத்தின் முதல் இரண்டு பகிர்வுகளை வாசிக்க கீழே இருக்கும் இணைப்பில் செல்லுங்கள்.
முனைவர் விஜயசுந்தரி பேசி முடித்ததும் அவர் சொன்ன வரலாற்றுக் கருத்துக்கள் குறித்து சிறிது விளக்கம் சொன்ன நடுவர் அவர்கள், வழக்கறிஞர் சுமதி அவர்களைப் பேச அழைத்தார். இவர் மேடையேறும் போது திரு. கனவுப் பிரியன் என்னை அழைத்தார். இணையத்தின் மூலமே அறிந்தவரை நேரில் சந்திக்கும் பொருட்டு நான் எழுந்து பின்பக்கம் செல்ல, அங்கே அவரும் ஆரஞ்சுக்கலர் டீசர்டில் நின்று கொண்டிருந்தார். முதல் சந்திப்பில் இருவரும் ஒரே கலர் டீசர்ட்டில் இருந்தது சிறப்புத்தானே... சிறிது நேர பேச்சுக்குப் பிறகு கில்லர்ஜி அண்ணாவையும் போனில் அழைக்க அவரும் வந்து சேர மூவரும் பேசி, போட்டோ எடுத்து மைத்துனரையும் அழைத்து டீ சாப்பிட போய்விட்டோம். மேடையில் வழக்கறிஞர் சுமதி பேசிக் கொண்டிருந்தார்.
வழக்கறிஞர் சுமதி : என்னோட அப்பாவுக்கு உடம்புக்கு முடியாம ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கிறோம்... பக்கத்து இருக்கையில் ஒரு இளைஞர் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அருகில் அவரது இளம் மனைவி அழுதபடி இருக்கிறாள். அவளைப் பார்த்து ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறாய்? என்று கேட்டேன். அவள் அவருக்கான வியாதியைச் சொல்லி, இன்னொரு மருத்துவமனை பெயரைச் சொல்லி இவரை அங்கு கொண்டு சென்றால் கண்டிப்பாக காப்பாற்றிவிடலாம் என்றாள். பின்னே என்ன அங்கு கொண்டு செல்ல வேண்டியதுதானே என்றேன். பணம் அதிகம் சிலவாகும் என்றாள். உன்னால் பணம் ரெடி பண்ண முடியுமா என்றேன். என்னால் முடியும் என்றாள்... பின்னே என்ன அதற்கான வேலையைப் பாரு என்றதும் என் மாமியார் விடமாட்டார் என்றாள். இங்கபாரு கண்டிப்பாக பிழைக்க வைக்க முடியும்ன்னு உனக்கு நம்பிக்கை இருக்குல்ல என்றதும் இருக்கு என்றாள். அப்ப எதுக்கு அடுத்தவங்களைப் பற்றி யோசிக்கிறே.. முதல்ல பணத்தை ஏற்பாடு பண்ணு... மற்ற வேலைகளை நான் பார்க்கிறேன் என்றேன். அப்படி அந்தப் பெண்ணுக்குச் செய்த உதவி சிறியதாகினும் மன நிம்மதி, ஒரு சந்தோஷம் கிடைத்தது என்றார்.
மேலும் சின்ன வயதில் சினிமாவுக்குச் செல்லும் போது வேலைக்காரரின் பெண்ணையும் அழைத்துச் சென்று தாங்கள் இடைவேளையில் வாங்கித் தின்ன வைத்திருந்த காசில் டிக்கெட் எடுத்ததையும், அந்தப் பெண் சந்தோஷமாய் படம் பார்த்ததையும் மகிழ்வோடு சொன்னார். இன்னா, இஸ்துக்கின்னு என சென்னைத் தமிழ் குறித்தும் பேசினார்.
இவரது பேச்சும் மற்றும் இவருக்கு பின்னே வந்த திரு.மோகனசுந்தரம் அவர்களின் பேச்சையும் உட்கார்ந்து கவனிக்கவில்லை என்பதால் மேலோட்டமாகத்தான் எழுத முடியும். இங்கு எழுதும் எந்த வார்த்தையும் குறிப்பெடுத்து எல்லாம் எழுதவில்லை என்பதால் வழக்கறிஞர் சுமதியின் பேச்சு குறித்த எழுத்தில் தவறும் இருக்கலாம் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.
நடுவர் திரு.சுகி சிவம் அவர்கள் இறுதிப் பேச்சாளராக திரு. மோகன சுந்தரம் அவர்களை அழைத்தார். இவர் இதற்கு முன்னர் பாரதி நடத்திய திரு.லியோனி அவர்களின் பட்டிமன்றத்தில் பேசியவராக இருக்குமோ என்று ஒரு சிறு சந்தேகம். சரி விடுங்க... பேசி சிரிக்க வைத்தாரான்னு பார்ப்போம்.
திரு. மோகனசுந்தரம் : இவரின் பேச்சும் பின்னால் அமர்ந்திருந்த எங்களுக்கு சரியாக கேட்கவில்லை.... இருப்பினும் விமானத்தில் வரும்போது விமானப் பணிப்பெண் இவரைக் கேட்டதாகச் சொன்ன செய்தியில் நடுவரை நீங்க பிஸினஸ் வகுப்பில் இருந்ததால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார். என்ன விஷயம் என்பதை சரியாக கவனிக்கவில்லை... ஆனால் விவரம் தெரிந்த அரங்கம் சிரித்தது.
தன் நண்பனுக்கு பைக் ஓசியாக கொடுத்த கதையைச் சொன்னார். வண்டியைக் குடுடா இப்பக் கொண்டாந்து தாறேன்னு சொல்லி வாங்கிட்டுப் போனவன் வரவேயில்லை என்னடா இப்ப வாறேன்னு சொன்னான்... இன்னும் வரலையின்னு பார்த்தா... ராத்திரி நடந்து வர்றான்... எங்கடா வண்டியின்னு கேட்டா போலீஸ் ஸ்டேசன்ல இருக்கு போயி எடுத்துக்கன்னு சொன்னான்... என்னடா நீ போலீஸ் ஸ்டேசன்லயா என்றதும் ஆமா போலீஸ்காரன் பிடிச்சிட்டான்... குடிச்சிட்டு வண்டி ஓட்டுனேன்... குடிச்சிருந்தியா...? ஆமா லைசென்ஸ் கேட்டான்... கொடுக்க வேண்டியதுதானே... அதுதான் இல்லையே.. என்னது இல்லையா... ஆமா வண்டியே இல்லாத எனக்கு எதுக்கு லைசென்ஸ்ன்னு நான் எடுக்கலை... அது சரி... ஆர்.சி.புக் கேட்டான்... அதெல்லாம் தெரியாது வண்டியை வச்சிக்க... வண்டிக்காரனை வந்து வாங்கிக்கச் சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் என்றானே பார்க்கலாம் உதவி செய்யப் போயி நான் போலீஸ் ஸ்டேசன்ல போயி நிக்க வேண்டியிருந்துச்சு என்று வேடிக்கையாகச் சொன்னார்.
இந்த மழை வந்தது ரொம்பப் பாதிப்புத்தான் என்றாலும் எனக்கு ஒருவகையில நல்ல சாப்பாடு கிடைக்க வழி செஞ்சிட்டுப் போயிருச்சு.. ஆமா மழையில எங்க வீட்டு பிரிட்ஜ், ஓவன் எல்லாம் போயிருச்சு... இப்ப மூணு நேரமும் சூடா சாப்பாடு பண்ணிப் போடுறா... முன்னால எல்லாம் பிரிட்ஜ்ல வச்சு வச்சு... ஓவன்ல சூடு பண்ணிப் போடுவா.... ஆனா இப்ப அதெல்லாம் இல்லை... போனவாரம் மெதுவா ஏங்க பிரிட்ஜ் என்றாள். அதெல்லாம் நிவாரணத்துல கொடுப்பாங்க... அப்படியும் இல்லையின்னா ஆறு மாசத்துல தேர்தல் வருதுல்ல... அப்ப ரெண்டு கட்சியில ஏதாச்சும் ஒரு கட்சி விலையில்லாத பிரிட்ஜ், விலையில்லாத ஓவன் எல்லம் கொடுப்பாங்கன்னு சொல்லி வச்சிருக்கேன் என்று சொன்னபோது அரங்கமே கைதட்டலிலும் சிரிப்பொலியிலும் அதிர்ந்தது.
சந்தோஷமே... சங்கடமே... என இரு அணிகளும் தங்கள் வாதத்தை முன் வைக்க, நடுவர் திரு. சுகிசிவம் அவர்கள் தீர்ப்புச் சொல்லும் பொருட்டு தனது இருக்கையில் இருந்து எழுந்து 'சங்கடமே' என்ற அணியினர் பேச வைத்திருந்த மைக்கின் முன் வந்தார்.
இரண்டு பக்கமும் தங்களது வாதத்தை அருமையாக எடுத்து வச்சிருக்காங்க... அப்துல்கலாம் அவர்கள் 380 கிராமில் செய்த செயற்கைக்கால்தான் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது என்பதையும்... அன்னை தெரசா ஒரு கையில் பணக்காரன் துப்பிய எச்சிலை வாங்கிக் கொண்டு மறு கையை நீட்டி எனக்கு கொடுத்துவிட்டாய் என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடு என்று சொன்னதையும் சொல்லி இதுதானே சந்தோஷம் என அழகாக அவர்களின் கருத்தைச் சொல்லியிருக்காங்க... அதேபோல் மக்களுக்காக போராடிய வ.உ.சி. வேதனையோடு எழுதிய கடிதம், தில்லையாடி வள்ளியம்மை பூட்ஸ்காலால் மிதிபட்டது, சென்னைப் பெரும் வெள்ளத்தில் என் வீட்டில் வந்து தங்குங்கள் என்று சொன்ன வீடுகளில் போய் அவர்களை கட்டிப் போட்டுவிட்டு மூன்று இடத்தில் கொள்ளை அடித்த சம்பவம் எனச் சொல்லி இதெல்லாம் உதவி செய்யப்போய் பெற்ற சங்கடங்கள்தானேன்னு இவங்க சொல்லியிருக்காங்க.
இரண்டு பக்கமும் தங்களது வாதத்தை அருமையாக எடுத்து வச்சிருக்காங்க... அப்துல்கலாம் அவர்கள் 380 கிராமில் செய்த செயற்கைக்கால்தான் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது என்பதையும்... அன்னை தெரசா ஒரு கையில் பணக்காரன் துப்பிய எச்சிலை வாங்கிக் கொண்டு மறு கையை நீட்டி எனக்கு கொடுத்துவிட்டாய் என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடு என்று சொன்னதையும் சொல்லி இதுதானே சந்தோஷம் என அழகாக அவர்களின் கருத்தைச் சொல்லியிருக்காங்க... அதேபோல் மக்களுக்காக போராடிய வ.உ.சி. வேதனையோடு எழுதிய கடிதம், தில்லையாடி வள்ளியம்மை பூட்ஸ்காலால் மிதிபட்டது, சென்னைப் பெரும் வெள்ளத்தில் என் வீட்டில் வந்து தங்குங்கள் என்று சொன்ன வீடுகளில் போய் அவர்களை கட்டிப் போட்டுவிட்டு மூன்று இடத்தில் கொள்ளை அடித்த சம்பவம் எனச் சொல்லி இதெல்லாம் உதவி செய்யப்போய் பெற்ற சங்கடங்கள்தானேன்னு இவங்க சொல்லியிருக்காங்க.
என்னோட மனைவிக்கிட்ட ஒரு பழக்கம் தலைவலி வந்தா தலையில தலைப்பாக் கட்டிருவா... (இந்தப் பழக்கம் எனக்கும் இருக்கு... துண்டை எடுத்து இறுக்கமாக கட்டிக் கொண்டு படுத்துவிடுவேன்... நான் மட்டும்தான் அப்படின்னு நினைச்சேன்... திருமதி சுகிசிவமும் அப்படித்தானாம்) அன்னைக்கும் அப்படித்தான் காபி கேக்கலாம்ன்னு போனா, தலையில தலைப்பாக் கட்டிட்டா... சரி இனி கேக்க கூடாதுன்னு என்னம்மா தலைவலியா... என்றேன்... ம் என்று பதில் வந்தது. சரி நான் வெளியில போறேன் ஏதாவது வாங்கிக்கிட்டு வாறேன்... நீ சமைக்க வேண்டாம் எனச் சொல்லிவிட்டு கிளம்பிப் போனேன். என் வேலைகளை முடித்து விட்டு சாப்பாட்டுக்கு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வர்றேன் என்னை பஜ்ஜி வாசம் வரவேற்குது. என்னடா இது முடியலைன்னு சொன்னாளே... என்று எட்டிப்பார்த்தால் அடுப்படியில் தலைப்பாக் கட்டோடு பஜ்ஜி சுட்டுக்கிட்டு இருக்கா... ஏய் முடியலைன்னு சொன்னே.... இப்ப பஜ்ஜி சுடுறே... இல்ல அந்தப் பய (என் பேரன்) வந்திருக்கான்... எப்பவும் கேக்கமாட்டான்... இன்னைக்கு பாட்டி பஜ்ஜி சுட்டுத்தாயேன்னு கேட்டான்... அதான்... என்றாள். பாருங்க பேரன் என்றதும் தலைவலி போச்சு... நாம காபி கேட்டா... ம்ன்னு பதில் வரும். இருந்தாலும் எனக்கு கோபம் வரலை... காரணம் என்னன்னா தனக்கு முடியாட்டியும் பேரன் கேட்டதுக்காக செஞ்சா பாருங்க அதுலதான் சந்தோஷம் இருக்கு.
ஒரு தடவை பெர்னாட்ஷாவுக்கு உடம்பு முடியலை... உடனே டாக்டருக்கு போன் பண்ணினார். அதுக்கு டாக்டர் சரி கிளம்பி வாங்க என்றார். இவருக்கு கோபம் வந்தாச்சு... என்னால எந்திரிக்க முடியலை... எனக்கான டீக்கூட போட்டுக் குடிக்க முடியலை என்னைப் போயி அங்க வரச்சொல்றீங்களே என்றதும் அப்படியா சரி நான் வர்றேன் என வந்த டாக்டருக்கு அவரை விட வயது அதிகம்... வயதானவர்... மேலே மாடியில் இருந்தவரை பார்க்க படியேறியவருக்கு பாதிப்படி ஏறும் போது மயக்கம் வந்து விழுந்திட்டார். சப்தம் கேட்டு மெல்ல எழுந்து வந்த பெர்னாட்ஷா, டாக்டர் மயங்கியிருப்பதைப் பார்த்து டீப் போட்டுக் கொண்டு வந்து கொடுக்க, குடித்து விட்டு எழுந்தவரிடம் இப்பப் பரவாயில்லையா என்றதும் ம் சரியாயிருச்சு எனச் சொல்லி தன்னோட பில்புக்கை எடுத்து 30 பவுண்டு எழுதி பெர்னாட்ஷாக்கிட்ட கொடுக்க என்ன விளையாடுறீங்களா... என்னை எப்போது செக்கப் பண்ணினீர்கள்... உங்களுக்குத்தானே நான் பணிவிடை செய்தேன் என்றதும் நீங்க என்ன சொன்னீங்க படுக்கையை விட்டு எழ முடியலை.... என்னால நடக்க முடியலை... ஒரு டீக்கூட போட முடியலைன்னுதானே... இப்ப எழுந்தீங்க... நடந்தீங்க... டீப்போட்டு எனக்கு கொடுத்தீங்க... உங்க வியாதி போச்சா.... அதுக்குத்தான் பில் என்றதும் ஒன்று பேசாமல் கொடுத்தாராம். வியாதி மனதில் இல்லை என்றும் சொன்னார்.
அப்பொதெல்லாம் 16 முழ வேஷ்டி, அதாவது 10 முழம் வேஷ்டியாகவும் 6 முழம் துண்டாகவும் உடுத்துவார்கள். பாரதியின் நண்பர் ஒருவர் அவருக்கு 16 முழ வேஷ்டி கொடுத்து கட்டிக்கொள்ளச் சொல்ல, இவரும் கட்டிக் கொண்டு வெளியே போயிருக்கிறார். அப்போது குளிரில் நடுங்கியபடி ஒருவன் படுத்திருக்க, அதைப் பார்த்த பாரதி ஆறு முழ துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு 10 முழ வேஷ்டியை அவனிடம் கொடுத்திருக்கிறார். இடுப்பில் இருந்த வேஷ்டியைக் கொடுக்காமல் துண்டை அவனிடம் கொடுத்திருக்கலாம் ஆனால் பாரதி அப்படிச் செய்யவில்லை. இடுப்பில் கட்டிய துண்டோடு வீட்டுக்குப் போக, அவரின் நண்பர் வேஷ்டி எங்கே என்றதும் ஒருவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான் அதான் அவனுக்கு கொடுத்திட்டேன் என்று சொன்னாராம். துண்டைக் கொடுத்திருக்கலாமே ஏன் வேஷ்டியைக் கொடுத்தே என்றதும் துண்டைவிட அந்த வேஷ்டிதான் அவனுக்கு சரியாக இருக்கும் என்பதாலேயே கொடுத்தேன் என்றாராம். நீ உதவி செய்வேன்னு தெரியும் அதுக்காக இப்படியா என்றபடி இன்னொரு வேஷ்டியை எடுத்துக் கொடுத்து கட்டிக் கொள்ளச் சொல்ல, பார் ஒன்றை கொடுத்தால் ஒன்றைப் பெற முடியும் என்று சொல்லி சிரித்தவர் வேஷ்டியைக் கொடுத்தேன் வேறு வேஷ்டி கிடைத்துவிட்டது பார் என்று சொன்னாராம். எனவே நாம் பிறருக்கு ஒன்றைச் செய்தால்தான் நமக்கு மற்றது கிடைக்கும். தானம் செய்வோமா என யோசித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக நமக்கு எதுவும் கிடைக்காது. காற்று வீட்டுக்குள் வந்தால் வெளியே போவதற்காகத்தான் வீடுகள் கட்டும் போது முன்பக்கமும் பின்பக்கமும் கதவு நேராய் வருவது போல் கட்டுவார்கள்... இல்லையேல் சன்னலாவது வைப்பார்கள். அப்படி இல்லை என்றால் காற்று உள்ளே வராது. அதேபோல்தான் செல்வமும்.... சேர்த்து வைத்தால் பயனில்லை என்றார்.
கர்ணனிடம் கண்ணன் போர்க்களத்தில் தர்மம் கேட்க, அவனோ தனது குருதியைப் பிடித்துக் கொடுத்தான் என்ற கதையையும், ரத்தக் கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதாவை உதைப்பது போல் நடிக்க மறுத்த ராஜம் அவர்களை வாங்கிற காசுக்கு நீ மிதிக்கணும் நான் வாங்கணும் என்று எம்.ஆர்.ராதா அவர்கள் சொன்னதையும், சென்னை வெள்ளத்தில் கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றி பிரசவத்திற்கு மருத்துவமனையில் சேர்த்த முஸ்லீம் இளைஞர் குறித்தும்... இன்னும் பல கதைகளை கருத்தாய்ச் சொல்லி உதவுவதில் சங்கடம் இருந்தாலும்... சங்கடம் ஏற்படாமல் எந்த சந்தோஷமும் இல்லை என்பதால் சந்தோஷமே கிடைக்கிறது என்று சொல்லி முடித்தார். அவர் சந்தோஷமே என்று சொன்னது சங்கடமே அணியினரின் பக்கம் இருந்த மைக்கில்தான் என்றாலும் அருமையான நிறைவான தீர்ப்புத்தான். உண்மையில் உதவி செய்வதில் சங்கடம் இருக்கிறது என்பதற்காக உதவாமல் இருந்தால் அது சரியில்லை... எப்படி சங்கடம் வந்தாலும் உதவிய திருப்தியில் சந்தோஷமே விஞ்சி நிற்கும் என்பதை நாம் அறிவோம் அல்லவா..? எனவே இதுவும் அதுவும் என்று நடுநிலையில் நிற்காமல் நல்லதீர்ப்பை நல்ல கருத்துக்களுடன் சொன்ன நடுவர் திரு. சுகிசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அதன் பின் நன்றி நவிலலுடன் விழா இனிதே முடிவடைய, நாங்கள் மெல்ல நடையைக் கட்டினோம். கனவுப் பிரியன் அவர்கள் டாக்ஸியில் செல்வதாகச் சொல்ல, நாங்களோ மீண்டும் அரசியல் பேசியபடி அறைக்கு வந்து சேரும் போது இரவு 11 மணிக்கு மேலாகியிருந்தது.
சந்தோஷமே அணியினர் அவ்வளவு நகைச்சுவையாக பேசவில்லை... சங்கடமே அணியினர் நகைச்சுவையில் தல தோணியின் சிக்ஸர் அடித்து ஆடினர். இரண்டு குழுவையும் கலவையாய் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ஏனென்றால் சந்தோஷமாக பேச வேண்டிய அணியினர் மூவருமே பொறுமையாகப் பேச, அரங்கில் கொஞ்சம் சலிப்பு மழை பெய்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது.
இருப்பினும் அருமையான பேச்சு... அழமான கருத்துக்கள்... அழகான பட்டிமன்றம்... ஏற்பாடு செய்து மிகச் சிறப்பாக நடத்திய பாரதி நட்புக்காக நண்பர்களுக்கு எல்லாருடைய சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கொசுறு : இன்னும் சில நகைச்சுவைகள் இருக்கு, பதிவின் நீளம் கருதி இங்கு பகிரவில்லை என்றாலும் என்னோட மனசின் பக்கத்தில் அப்பப்ப வரும்... நமக்கு சிரிப்புக்கு சிரிப்பும் ஆச்சு.. பதிவுக்கு செய்தியும் ஆச்சுல்ல...
பொறுமையாக மூன்று நீளப் பகிர்வுகளையும் வாசித்து கருத்தும் அளித்த நட்புக்களுக்கு நன்றி.
வருடா வருடம் அமீரகம் வாழும் எங்களுக்கு தமிழ் அமுது பருகிடக் கொடுக்கும் பாரதி நட்புக்காக அமைப்புக்கும் எனக்கு அழகிய போட்டோக்களை உடனே கொடுக்கும் அண்ணன் புகைப்படக் கலைஞர் திரு. சுபஹான் அவர்களுக்குமாய் ஒரு பூங்கொத்து...
பாரதி நட்புக்காக குழுமத்தின் முகநூல் பக்கம் செல்ல இங்கு கிளிக்குங்கள்.
சுபம்.
-'பரிவை' சே,குமார்.
ஒன்று எழுத வேண்டுமா என யோசித்து மூன்று பகுதியாக்கி எதிலும் சில நகைச்சுவைகளை விட்டு... அமமாடியோவ்! குமார் ரெம்ப வேலை, தலைவலி என சொல்லியே இவ்வளவு எழுதுகின்றீர்களே . முழு நேர எழுத்தாளராகி விட்டால் சிந்தனை ராக்கட் வேகத்தில் பறக்கும் போலவே!
பதிலளிநீக்குநிகழ்வுகளை அபப்டியே கண் முன் கொண்டு வரும் படியான விமர்சனம், பாராட்டுகள் குமார்!
பெரும்பாலும் உதவி உபத்திரமாவது தான் எனினும் அதற்காக உதவி செய்யாமல் இருக்கவும் முடியாது, நம் நிலை திரிசங்கு சொர்க்கம் தான்.
/////நாம் பிறருக்கு ஒன்றைச் செய்தால்தான் நமக்கு மற்றது கிடைக்கும். தானம் செய்வோமா என யோசித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக நமக்கு எதுவும் கிடைக்காது. காற்று வீட்டுக்குள் வந்தால் வெளியே போவதற்காகத்தான் வீடுகள் கட்டும் போது முன்பக்கமும் பின்பக்கமும் கதவு நேராய் வருவது போல் கட்டுவார்கள்... இல்லையேல் சன்னலாவது வைப்பார்கள். அப்படி இல்லை என்றால் காற்று உள்ளே வராது. அதேபோல்தான் செல்வமும்.... சேர்த்து வைத்தால் பயனில்லை என்றார்./////
நிஜமான கருத்து!
உதாரணங்கள் அருமை... உதவும் போது சங்கடங்கள் வரும் என்கிற நினைவே வராது...
பதிலளிநீக்குநேரில் கலந்து கொண்ட உணர்வு
பதிலளிநீக்குநன்றி நண்பரே
நிகழ்விடத்திற்குக் கொண்டு சென்றுவிட்டீர்கள். தொகுத்த விதம் எங்கள் மனதில் ஆழப்பதிந்தது. நன்றி.
பதிலளிநீக்குவிழா இனிதாய் இருந்தது.
பதிலளிநீக்குவிழாவின் நேர்முக வர்ணனை அருமை..
பதிலளிநீக்குநல்வாழ்த்துகள்..
எதுவும் விடுபடவில்லை எடுத்த புகைப்படத்தைத் தவிற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குசுவாரஸ்யம்தான்.
பதிலளிநீக்குமூன்று பதிவுகளில் சொன்ன அனைத்தும் சுவாரஸ்யம். நன்றி குமார்.
பதிலளிநீக்குபெர்னாட்ஷா பற்றி சொன்னது ரசிக்கும் படி இருந்தது! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅருமையாக உள்ளது.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நல்ல சுவாரஸ்யமான தகவல்கள், நகைச்சுவைகள்....பகிர்வுக்கு மிக்க நன்றி குமார்...
பதிலளிநீக்கு