சனி, 19 டிசம்பர், 2015

மனசு பேசுகிறது : ஜகம் நீ... அகம் நீ...



டகங்கள் எல்லாமே மக்களிடம் நல்ல செய்திகளை கொண்டு போய் சேர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டே தங்களால் முடிந்தளவுக்கு தரங்கெட்ட நிகழ்வுகளையே அதிகம் கொண்டு போய் சேர்க்கின்றன. அதிலும் ஒரு நிகழ்வால் சமூகத்திற்கு எந்த வித பலனும் இல்லை என்று தெரிந்தாலும் அதன் மூலமாக தங்களின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை கூட்டிக் கொள்ளமுடியும் என்றால் அதற்காகவே மைக்கை எடுத்துக் கொண்டு ஓடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். அப்படி ஒரு நிகழ்வுதான் ராசா சாரின் 'அறிவு இருக்கா?' என்ற கேள்வியின் வெளிப்பாடாய் அமைய இப்போ வெள்ளம் போய், தறுதலைகளின் பாட்டும் போய், இளையராசாவைத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சென்னையும் கடலூரும் சந்தித்த வெள்ள சோகத்தில் அரசின் நிலை என்ன என்பதை இந்த ஊடகங்கள் அறியவில்லையா...? இல்லை மக்கள் அறிய வேண்டாம் என்று நினைத்து மறைத்துவிட்டு அல்லது மறந்துவிட்டு அந்தப் பாட்டின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறார்களா..? எவனோ பாடிய பாட்டைப் பற்றி வெள்ள நிவாரண உதவி செய்தவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தன் கைப்பட கையெழுத்து இட்டுக் கொடுத்துவிட்டு அந்த நிகழ்வின் நிறைவோடு மனசெல்லாம் மக்கள் துயர் சுமந்து வந்தவரிடம் கேட்க வேண்டிய அவசியமென்ன... அவர் கலந்து கொண்ட நிகழ்வு குறித்துக் கேட்டிருந்தால் அவரும் பதில் சொல்லியிருப்பார். அதை விடுத்து இது குறித்து கேட்டது எந்த விதத்தில் நியாயம்... அதுக்கு அவர் இசை அமைத்தாரா...? அல்லது எழுதிக் கொடுத்தாரா...?

இளையராசா என்னும் இசைராசா எப்பவுமே படக்கென்று பேசக்கூடியவர் என்பதை நாம் அறிவோம். அந்தச் சூழலில் 'இந்தக் கேள்வியை எங்கிட்ட கேக்குறியே உனக்கு அறிவு இருக்கா? போய்யா போய் கேக்க வேண்டியவங்ககிட்ட கேளு'ன்னு சொல்லியிருக்கலாம். ஆனா இளையராஜா சற்றே வித்தியாசமான சிந்தனையோடு கேள்வி கேட்பவர் அதனால் 'உனக்கு அறிவு இருக்கா' அப்படின்னு கேட்டார். கேள்விக்கு பதில் சொல்லாமல் போயிருந்தாலும் சரி... பதில் சொல்லியிருந்தாலும் சரி... அவர்களுக்கு அது தீனிதான். அறிவு இருக்கான்னு கேட்டார் என்று குதிக்கிறார்களே... இந்த கேள்வியை இப்போ கேட்கலாமா என்ற அறிவு அந்த இளைஞனுக்கு இல்லாமல் போனது ஏன்..? அவரை யார் இந்தக் கேள்வியை கேட்கச் சொன்னார்கள்...? சத்யம் பேசும் தொலைக்காட்சிக்கு இதுதான் முக்கியமான் வேலையா..? யாருடைய அடிவருடியாய் செயல்பட இந்தக் கேள்வி. 

ராசாவின் இசைக்கு மயங்காதவர் யார் இருக்கிறார்கள்...? எந்த இசையமைப்பாளரின் ரசிகராக இருந்தாலும் ராசாவின் இசையை ரசிக்காமல் இருந்திருப்பார்களா? எத்தனை விதமான பாடல்கள்.... எப்படிப்பட்ட இசை.... இரவு நேரப் பயணங்களில் எல்லாம் வழித்துணை ராசாவின் ராஜ கீதங்கள்தானே.... 'ஜனனி ஜனனி... ஜகம் நீ... அகம் நீ...' என கேட்க ஆரம்பிக்கும் போதே நமக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷமும்... வலிகள் விலகிய வசந்தமும் நிறைவதை நிறைவாய் உணர முடிகிறது அல்லவா?  ஐயாயிரம் பாடல்களில் கிட்டத்தட்ட 90% பாடல்கள் எல்லோருடைய மனங்களிலும் திரும்பத் திரும்ப பாடிக் கொண்டேதானே இருக்கிறது. 

அவருக்கு கோபம் வருகிறது... உண்மைதான். தலைக்கனம்... திமிர்... ஆமா தலைக்கனம்தான்... திமிர்தான்... அதுக்கு என்ன இப்போ..? தன்னோட திறமை மீது அதிக நம்பிக்கை ஒருக்கும் ஒருவனுக்கு தலைக்கனமும் திமிரும் இருப்பது தவறில்லையே... திமிர் இருப்பவனிடமே திறமை இருக்கும்... அவன் அதை எப்படி பயன்படுத்துறானோ அப்படியே வாழ்க்கை... மனதில் பட்டதை பட்டென்று பேசுவது தவறென்றால் அப்புறம் எப்படிப் பேச வேண்டும்...? உங்களுக்கு தோதான பதிலைத் தந்தால் என்ன செய்திருப்பீர்கள்..? அதை எப்படி எப்படித் திரிக்க முடியுமோ அப்படித் திரித்துத்தானே செய்தி ஆக்கியிருப்பீர்கள். நீங்கள் மக்களுக்காகவே செய்திகள் கொடுக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு எதைக் கொடுக்கிறீர்கள்...? உங்களது இது போன்ற கேவலமான கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று கட்டாயமா என்ன...? எவனா இருந்தாலும் கோபப்படத்தான் செய்வான்...? அதில் ராசா மட்டும் என்ன விதிவிலக்கா...?

ஏரியைத் திறந்து விட்டு மக்களை வெள்ளத்தில் நீந்த வைத்த அரசிடம் நீங்கள் என்ன கேள்வி கேட்டீர்கள்...? சொந்தமாக காசு போட்டு பொருட்களை வாங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வந்தவர்களிடம் அரசியல் அல்லக்கைகள் நடந்து கொண்ட விதத்தை எத்தனை மீடியாக்கள் மக்களிடம் கொண்டு சென்றீர்கள்...?  அப்படி நடந்து கொண்ட அரசியல் வியாதிகளிடம் கேள்வி கேட்டீர்களா..? இந்த அம்மா என்ன செய்தார்...? சுயநலம் இல்லை என்றாரே... எனக்கெதுக்கு சொத்து என்றாரே... எனக்கு உறவுகள் இல்லை என்றாரே... அம்மா என என்னை நீங்கள் அழைப்பதால் எனது உண்மையான பெயர் மறந்து போச்சு என்றாரே... இது குறித்து எல்லாம் அம்மாவிடம் யாராவது கேள்வி கேட்டீர்களா..?. அம்மாவை விடுங்க... ஒரு எம்.பி அல்லது எம்.எல்.ஏ இல்லையில்லை சாதாரண வார்டு கவுன்சிலரிடம் மக்களுக்காக கேள்விகளை முன் வைத்தீர்களா...? எத்தனை இடங்களில் கவுன்சிலர்கள் மிரட்டினார்கள்... அதையெல்லாம் பெரிதாக்கி நடவடிக்கை எடுக்க வைத்தீர்களா?

நான் செய்தேன்... நான் சொன்னேன்... நான் மகிழ்கிறேன்... என்று தற்பெருமை பேசும் அம்மாவிடமும் நாட்டை ஆளும் போது மீத்தேனுக்கும், ஜல்லிக்கட்டுக்கும் ஆதரவளித்தவர்கள் இப்போ மாற்றிப் பேசுவதும் இவர்கள் ஆட்சியிருந்தால் வெள்ளம் வந்திருக்காது என்றும் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து நினைக்கும் போது எனக்கு ரத்தக்கண்ணீர் வருது என்றும் சொல்லும் அய்யாவிடமும் இதை வைத்து அரசியல் பண்ணும் ஜாதிக்கட்சிகளிடமும் நமக்கு நாமே என்று சொல்லி மீத்தேன் திட்டத்துக்கு தவறுதலாக கையெழுத்துப் போட்டுட்டேன் என்றும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி இல்லை என்றால் நான் போராடுவேன் என்று சொல்பவரிடமும் இது குறித்தான கேள்விகளை முன்வைத்தீர்களா..? ராணுவக் காமாண்டர் போல பணியாற்றினார் என்றும் மக்கள் பணிகளை முடக்கி விட்டிருக்கிறார் என்றும் எப்படி உங்களால் மக்களை முட்டாளாக்கும் செய்திகளை போட முடிகிறது...? அந்தப் பாடல், இளையராஜாவின் கோபம் என எல்லாவற்றையும் எதற்காக ஊதுகிறீர்கள்..? வெள்ளப் பிரச்சினையின் அம்மா மீதான கோபத்தை மக்களிடம் இருந்து மறைக்கத்தானே இத்தனை பகீரத முயற்சிகள்... பின்னே ஏன் மக்களுக்காக, மக்களின் பிரச்சினைகளுக்காக பேசுகிறோம் என்று சொல்கிறீர்கள். அரசு முத்திரை என்ன... அது இந்த திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் பயன்படுத்தப்படாமல் குப்பையில் கிடப்பது குறித்து யாராவது பேசுகிறீர்களா..?

இதையெல்லாம் பேசாத நீங்கள் தயவு செய்து ராஜா விசயத்தை பெரிதாக்கி அம்மாவை காப்பாற்ற நினைக்காதீர்கள்... இந்தப் பாடலை எதற்காக தூக்கிச் சுமக்கிறீர்கள்.. முதலில் அதை கிடப்பில் இல்லையில்லை குப்பையில் போடுங்கள்... மக்கள் பிரச்சினைகளைப் பேசுங்கள்... ஆளும் அரசின் ஆணவத்தை மக்கள் முன் எடுத்து வையுங்கள்... இதற்கெல்லாம் உங்களுக்கு திராணியும் இல்லை திறமையும் இல்லை என்பதை எல்லாரும் அறிவோம். உங்களுக்கு நயன்தாராவுக்கு இந்த இயக்குநர் எத்தனாவது காதலன்...? சரத்குமார் மகளுடன் விஷாலின் உறவு என்ன..? கபாலியில் ரஜினி என்ன சொல்ல வர்றார்..? அஜீத்துக்கு ஆடத் தெரியுமா..? கமல் வீட்டுக்கு கரண்ட் வரலையாமே..? திரிஷா வீட்டு நாய்க்கு உடல்நிலை சரியில்லையாமே..? என நடிகர்கள் பின்னாலதானே ஓட முடியும்... குடும்பங்களில் குழப்பதை உண்டு பண்ணும் வீணாப்போன மெகா சீரியல்களை போட்டு இரவு நேரத்தில் விளக்கேற்றிய பிறகு வீடுகளில் அழுகையை அரங்கேற்ற முடியும். இல்லையேல் அழுகிய முட்டையின் வாசத்தை வீசும் இது போன்ற கேவலங்களின் பின்னே ஓடி அந்த வாசத்தை மக்கள் மத்தியில் பரப்பி அவர்களை முட்டாள்களாக்கி டி.ஆர்.பியில் முந்திச் சிரிக்கத் தெரியும்... அவ்வளவுதானே உங்களின் மீடியா தர்மமும் சுதந்திரமும்.

இது ராசாவுக்கான பதிவுதான்... ஏனென்றால் எனது பெரும்பாலான பொழுதுகளை ஆக்கிரமித்திருப்பது ராசாவின் இசையே.... அவர் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்... அந்த இசை என்னை பல சமயங்களில் மீட்டு எடுத்திருக்கிறது... எடுத்துக் கொண்டிருக்கிறது... கவலைகளை மறக்கவும் கற்பனைகளை எழுத்தாக்கவும் என்னோடு இந்த இசை சேர்ந்தே பயணிக்கிறது. கோப தாபங்களில் எல்லாம் என்னை ஈர்த்து அணைத்துக் கொள்கிறது. நான் மற்ற இசையமைப்பாளர்களின் பாடலைக் கேட்பதில்லை என்று சொல்ல வரவில்லை. இன்னும் ரஹ்மானின் சின்ன சின்ன ஆசை சிறகடிக்கத்தான் செய்கிறது. தேவாவின் கானாவெல்லாம் எனக்குள்ளே ஊற்றெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. எல்லாரையும் முந்திக் கொண்டு ராசாவின் எண்பது தொன்னூறுகள் என்னை தினம்தினம் தின்று கொண்டிருக்கின்றன. அந்த கட்டைக் குரலுக்குள்தான் எத்தனை ராகங்கள்... ஆர்ப்பரிக்கும் இசையாய் ஆராவரமற்ற இசையாய் நம்மைத் தாலாட்டும் அந்த இசை நம் வாழ்வின் ஒரு அங்கமாய்த்தானே நம்மோடு இசைந்து பயணிக்கிறது.

ராசா என்றும் ராசாதான்... இந்த வெள்ள சமயத்தில் அந்த மனிதர் தனிப்பட்ட முறையில் செய்த செயல்கள் குறித்து கேள்வி கேட்க உங்களுக்கு நேரமும் இல்லை... எண்ணமும் இல்லை...  ஏன் மயில்சாமி செய்த செயலை எத்தனை பேர் சொன்னீர்கள்... 40 கோடி சாப்பாட்டுக்குச் செலவு செய்தது அரசு என கூசாமல் சொல்வதை நீங்களும் பரபரப்பாய்ச் சொல்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் டி.ஆர்.பிக்கான தீனிக்காக மாறி மாறி அலைவதை மட்டும் முறையாகச் செய்கிறீர்கள். இப்போதைய உங்கள் எண்ணமெல்லாம் டி.ஆர்.பிக்காக டி.ஆர். மகன் போட்ட பாடல் மீதே... தாங்கள் ஒன்று செய்யலாம்... தினமும் அந்தப் பாடலை பலமுறை ஒளிபரப்பலாம்... உங்கள் டி.ஆர்.பி. இன்னும் கூடுமல்லவா..?

இது யார் மீதும் உள்ள கோபத்தினால் விளைந்த பகிர்வு அல்ல.... ராசா மீதான காதலால் எழுந்த பகிர்வே... நானும் சில வருடம் பத்திரிக்கையில் குப்பை கொட்டியவன்தான்... இப்பவும் பத்திரிக்கை, தொலைக்காட்சி நண்பர்களை நிறையப் பெற்றிருப்பவன்தான். கத்துக்குட்டித்தனமான கேள்விகளைக் கேட்க சொல்வதை நிறுத்துங்கள்... முதலில் நல்ல தமிழ் பேசச் சொல்லுங்கள்... ஆங்கில வாத்தியாரின் கேள்விக்கு தயங்கித் தயங்கி பேசுவது போல் வார்த்தைக்கு வார்த்தை வந்து... வந்து என்று பேசும் செய்தி சேகரிப்பாளர்களை நல்ல தமிழ் பேச வையுங்கள். மக்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு சேருங்கள். ஆளும் அரசின் செயல்கள் நல்லவை என்றால் பாராட்டுங்கள்... அதுவே மக்களுக்கு எதிரானவை என்றால் தட்டிக் கேளுங்கள்... சுட்டிக் காட்டுங்கள்... மக்களுக்கு தெரிய வேண்டிய செய்திகளை தயங்காமல் கொண்டு செல்லுங்கள்... மீடியா தர்மம் என்ன என்பதை யோசித்து அதை  செயல்படுத்துங்கள். அதைவிடுத்து இது போன்ற பாடல்களின் பின்னால் ஓடி கேட்கவேண்டியதை விட்டு விட்டு கேவலமான கேள்விகள் கேட்பதை நிறுத்துங்கள். அறிவு இருக்கா என்று கேட்டவரை சந்திக்கு இழுக்க நினைக்காமல் உங்களுக்கு இருக்கும் அறிவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துங்கள். மாற்றங்கள் கொண்டு வர உங்களால் முடியும்... ஆனால் அதற்காக உங்களது இன்றைய நிலையில் இருந்து நீங்கள் மாற வேண்டும். மாறுவீர்களா..? மாற்றுவீர்களா..??

(ஜனனி.. ஜனனி... ஜகம் நீ...)

-'பரிவை' சே.குமார். 

27 கருத்துகள்:

  1. உண்மையை எடுத்துச் சொன்ன விதம்
    உங்களுக்கு ஒரு
    சபாஷ். !!

    தேவையில்லாத விஷயங்களை
    தேவையில்லாத நேரத்திலே எழுதி

    துயர் உறும் மக்களின் திசை திருப்பும் வண்ணம்
    இருக்கும் நிலை இன்று இருப்பது கண்டு
    கொதித்து எழும் உங்கள் எழுத்துக்களை நான்
    சிலாகிக்கிறேன்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க தாத்தா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. தங்களின் கருத்தில் இருந்து சற்று மாறுபடுகிறேன் நண்பரே
    திரைத் துறையினைச் சார்ந்த ஒருவரிடம்
    திரைத் துறையினைச் சார்ந்தவர் பாடிய பாடலைப் பற்றிக்
    கேட்பதில் என்ன தவறு இருக்க முடியும்
    இசை ஞானியிடும் பாடலைப் பற்றிக் கேட்டதில் என்ன தவறு
    என்றே புரியவில்லை
    அவர்
    கருத்து கூற முடியாது என்று மறுத்திருக்கலாமே
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் கருத்துக்கு நன்றி.
      கேள்வி கேட்பதும் பதில் சொல்வதும் சரிதான்... ஆனால் எந்தக் கேள்வியை எப்போது கேட்க வேண்டும் என்பது இருக்கிறதல்லவா...?

      அறிவு இருக்கான்னு கேக்குறதை பார்த்துட்டு நாம் பேசுகிறோம்... முழு வீடியோ பார்த்தீர்கள் என்றால் உண்மை புரியும்...

      அந்தச் சூழல் குறித்தும் மாணவர்கள் குறித்தும் சிலாகித்துப் பேசும் ஒருவரிடம் ஒரு இளைஞன் மீடியாவில் பணி செய்கிறோம் என்ற மதப்பில் யாரோ கேட்கச் சொல்லியிருக்கிறார்கள் என்பதை முகத்தில் பிரதிபலித்து கேள்வியை எழுப்புகிறார்.

      எங்கே வந்து என்ன கேள்வி கேக்குறே என்றதும் அவன் சொல்வான் பாருங்கள் 'சமூகத்துக்கு உங்க கருத்தைச் சொல்லத்தான்...' அப்படின்னும் இதுல சமூகத்துக்கு சொல்ல என்ன இருக்கு... அதனால்தான் அவரிடமிருந்து அப்படி ஒருவார்த்தை... யாரா இருந்தாலும் அப்படித்தான் பேசுவார்கள்... நானா இருந்த எட்டி அறைந்திருப்பேன்.

      அவர் கருத்துச் சொல்லவில்லை என்றாலும் அது பெரிய செய்தியாக ஆகியிருக்கும் ஐயா...

      அதுதான் மீடியா தர்மம்.

      கருத்துக்கு நன்றி ஐய...

      நீக்கு
  3. இளையராஜாவின் கோபம் நியாயமே..

    இவர்களுக்கு வேண்டியதெல்லாம் ஏதோ ஒரு ஊர்வம்பு..

    அகமும் புறமும் அறிவு ஜீவிகளாகக் காட்டிக் கொள்பவர்கள் கூட -
    இசைஞானியை இந்த விஷயத்தில் சாடுவதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

      நீக்கு
  4. சுளீர்... சவுக்கடி
    இனியாவது
    உறைக்குமா?.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

      நீக்கு
  5. குமார் உங்கள் பதிவு நச்! வெள்ளத்தின் ஆக்கப்பணிகள் நீண்டு கிடக்க நம் ஊடகங்கள் அதை எல்லாம் புறக்கணித்து பீப்பையும், ராஜா செய்தியையும் தாங்கி வருவ்து உண்மையாகவே வருத்தமாக இருக்கிறது குமார். இதற்கெல்லாம் போராட்டம்..பாருங்கள் அவலத்தை. அரசு தண்ணி தொறந்து எத்தனை உயிர்கள் போயின..மக்கள் இதற்கெல்லாம் கொடி பிடித்தார்களா? தங்களது அடிப்படை உரிமைகளுக்கு ஒரு நாளும் குரல் எழுப்பாமல் இது போன்ற அற்ப விஷயங்களுக்குக் கொடி பிடித்து ச்சே என்றாகிவிட்டது குமார். மனம் ரொம்ப வெதும்பிப் போய்த்தான் இதுவும் கடந்து போகும் பதிவு எங்களிடமிருந்து...அப்படி நினைத்து கடந்து போய்விடுவார்களோ என்ற பயம்தான். ஒரு நிரூபர் சொன்னதாக அறிந்தது..வெள்ளம் எல்லாம் மக்கள் மறந்துவிடுவார்கள் அவர்களுக்கு 5000 கிடைப்பதால் அதான் உண்மை நிலை...மனம் நொந்துவிட்டது.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதைத்தானே நானும் கேட்கின்றேன் கீதாமா!
      பொது நலன் என வரும் போது அதன் பாதிப்புக்களுக்காக ஏன் எவருமே ஒன்று பட்டு எதிர்ப்பு குரல் எழுப்புவதில்லை. வெள்ளம் நிவாரணம் நீதி கேட்டு எவரேனும் போராடினார்களா?

      நீக்கு
    2. வாங்க கீதா மேடம்...
      உண்மைதான்... நாமெல்லாம் காசுக்கு அடிமைகள்...
      இதுவும் கடந்து போகுமென அரசியல்வாதிகளுக்குத் தெரியும்...
      கருத்துக்கு நன்றி.

      நீக்கு
    3. வாங்க நிஷா அக்கா...
      வெள்ள நிவாரணமா...? அப்படின்னா..?

      நீக்கு
  6. மக்களுக்கு நல்ல செய்திகளைக் கொண்டு சேருங்கள். ஆளும் அரசின் செயல்கள் நல்லவை என்றால் பாராட்டுங்கள்... அதுவே மக்களுக்கு எதிரானவை என்றால் தட்டிக் கேளுங்கள்... சுட்டிக் காட்டுங்கள்... மக்களுக்கு தெரிய வேண்டிய செய்திகளை தயங்காமல் கொண்டு செல்லுங்கள்... மீடியா தர்மம் என்ன என்பதை யோசித்து அதை செயல்படுத்துங்கள்.//
    இதை இதை இதைத்தான் நாங்களும் சொல்ல விழைந்தது...எங்கள் பதிவில்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி சார்....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. கேள்வி கேட்பது தவறல்ல ஆனால் அதற்கான சூழல் என்னவென்று பார்க்கவேண்டும் சூழல் நிலைப்பாடு அறிய இதோ..

    http://cinema.dinamalar.com/tamil-news/41012/cinema/Kollywood/Beep-song-issue-:-Ilayaraja-family-in-upset.htm

    மனிதனுக்கு பொறுமை அவசியம் இதை எல்லோரும் எல்லா நேரங்களில் கடைப்பிடிக்க முடியாததே,,
    கேள்வி அவசியம் தவிர்க்கப் படவேண்டியது பதிலும் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்
    அதைவிட முக்கியம் இவைகள் மக்களுக்கு பயனற்ற விடயங்களே...
    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களுக்கு மட்டுமலல் நமக்கு பயன் இல்லாத விடயம் என தெரிந்தும் நாம் இதை பத்தி எழுதுவதும் பேசுவதும் ஏன்?

      தெரிந்தே தான் நாமும் அதை செய்கின்றோமே. நீ என்ன செய்தாய் என கேட்க முன் நான் என்ன செய்தேன் என என்னை நான் கேட்க வேண்டும். தவறு தான் என சொல்லிக்கொண்டே அதே தவறை நாமும் செய்யலாமா கில்லர்ஜி சார்?

      நீக்கு
    2. வாங்க அண்ணா...
      பொறுமை அவசியம்தான்... ஆனால் என்ன கேட்க வேண்டும் எப்போது கேட்க வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.

      நீக்கு
  8. ஊர்வம்பு பேச ஊடகங்களுக்கு சொல்லித்தர வேண்டுமா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

      நீக்கு
  9. சிறப்பாக சொல்லியிருக்கிறீர்கள்! மீடியாக்காரர்கள் இடமறியாமல் கேள்வி கேட்டு இப்படி வாங்கிக் கட்டிக்கொண்டு அதை பெரிது படுத்தி வருகின்றார்கள் என்று தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

      நீக்கு
  10. ஊடகங்கள் எல்லாமே மக்களிடம் நல்ல செய்திகளை கொண்டு போய் சேர்ப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றோம் என்று சொல்லிக் கொண்டே தங்களால் முடிந்தளவுக்கு தரங்கெட்ட நிகழ்வுகளையே அதிகம் கொண்டு போய் சேர்க்கின்றன. அதிலும் ஒரு நிகழ்வால் சமூகத்திற்கு எந்த வித பலனும் இல்லை என்று தெரிந்தாலும் அதன் மூலமாக தங்களின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை கூட்டிக் கொள்ளமுடியும் என்றால் அதற்காகவே மைக்கை எடுத்துக் கொண்டு ஓடுவதை வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள்.

    இது தான் டாபிக் குமார். எனக்கு நிஜமாகவே ரெம்ப கோபம் வரும் விடயம் இது. நாம் நம் நேரத்தினை செலவு செய்து குரல் கொடுக்க மட்டுமல்ல எழுத்தின் மூலமும் செய்ய ஆயிரம் காரியங்களிருக்க. தனிமனிதர்களை நோக்கி இகழ்ந்தும், புகழ்ந்தும் பேசி, எழுதி சீறிப்பாய்ந்து கொண்டிருக்கின்றோம். பொதுக்காரியங்கள் அப்படியே கிடப்பில் கிடக்கின்றது.

    படிக்காத பாமரர் செய்தாலும் பரவாயில்லை. அறியாமையினால் செய்கின்றார்கள் என சொல்லலாம். படித்து பலதும் அறிந்த நாமே இம்மாதிரி நம் சிந்தனையை திசை திருப்புவதும் இல்லாமல் மற்றவர்களையும் திசை திருப்புகின்றோம் என அறியாமலா இருக்கின்றோம்.

    ஒரு பாடலில் இருக்கும் ஆபாசத்தை நீக்கி விட்டால் ஆபாசம் ஒளிந்து ஓடி விடுமா? சேலைக்குள்ளே என்ன ரவுக்கைக்குள்ளே என்ன இருக்கு என கேட்டபோதும், சமைஞ்சது எப்படி என கேட்டபோதும்,நேத்து ராத்திரி யம்மா பாடியபோதும் எங்கே போயிருந்தோம் நாம். அதை விட நாம்வாழும் நாட்டிலும் சொந்த நாட்டிலும் இவ்வார்த்தையை பேசாத சமுகத்திலா வாழ்ந்திட்டிருக்கோம்.

    வீட்டை விட்டு கிளம்பினால் நூற்றுக்கு பத்து பேர் வாயில் சரளமாக புறப்படும் வார்த்தையை ஒரு பாடலில் பத்தோ பதிதொன்றோ தடவை வந்ததென சொல்லி பல்லாயிரம் முறை தம்பட்டம் அடிச்சி பட்டி தொட்டியெல்லாம் பேச வைத்து விட்டோம்.

    நம் சமூகத்தில் இருக்கும் ரெம்ப நல்ல பழக்கம் வேண்டாம் செய்யாதே என்றால் தான் அது என்ன ஏதுன்னு அக்கு வேறு ஆணிவேறாய் ஆராயும். அவ்வ்ரிய ஆராய்ச்சியை டாக்ட்ரேட் செய்யும் அளவுக்கு நாமே செய்யாதே என சொல்லியே ஆர்வம் ஊட்டியும் விட்டோம்.

    என் பக்கத்தில் எதையும் எழுதுவதில்லை என்பதால் எழுதுபவர்கள் பதிவுகளில் என் பின்னூட்டம் மூலம் என் எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துகின்றேன். இதனால் பலருக்கு பிடிக்காமல் போகலாம். போகட்டுமே..

    நம்ம காயத்ரிவைத்திய நாதன் போல் பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் தம் பணியை தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். வெள்ளப்பதிப்பினால் பாதிக்கப்பட்ட கணனிகளை திருத்தலாம் என சொல்லி இருக்கின்றார்கள்.

    சேனைத்தமிழ் உலாவின் நண்பன் தன் ஊரில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைக்குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி விட்டார்.

    இவைகள் குறித்தெல்லாம் பதிவுகள் இட வேண்டும் குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட கருத்து அக்கா...
      கண்டிப்பாக பதிவுகள் இடுவோம் அக்கா...

      நீக்கு
  11. நறுக்.நறுக். ஆமோதிக்கிறேன்.ஆமோதிக்கிறேன்
    karthik amma
    kalakarthik

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா..
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.

      நீக்கு
  12. வணக்கம் நல்ல பதிவு
    தற்போது முகநூலில் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க மது சார்...
      தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி.
      //தற்போது முகநூலில்//

      என்ன.... எனக்குப் புரியலையே...?

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி