வியாழன், 10 டிசம்பர், 2015

மனசு பேசுகிறது : அரசியல் 'வெள்ளக்' கைகள்


சென்னை மற்றும் கடலூரை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் மக்கள் மத்தியில் மதங்களைக் கடந்த மனிதத்தை மீண்டும் வெளிக்காட்டிச் சென்றிருக்கிறது. அதே நேரம் அரசியல் அசிங்களையும் உலகறியச் செய்து விட்டுத்தான் சென்றிருக்கிறது. மக்கள் கஷ்டப்படும் நேரத்திலும் அரசியல் செய்யும் அல்லக்கைகளைப் பார்த்து இவர்களும் மனிதர்களா என்று மனசு வெறுத்துப் போகிறது.

சென்னையை மட்டுமே பார்க்கிறார்கள் கடலூரைப் பார்க்கவில்லை என்ற குரல்கள் ஒலித்த வண்ணம் இருக்க, உதவி செய்ய மக்கள் கடலூரை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்த பின்னர்தான் எல்லாருடைய பார்வையும் அங்கு திரும்பியது. கடந்த ஒரு வார காலமாக தமிழ்க்குடில் அறக்கட்டளையின் சார்பாக எனது நண்பனும் மற்ற உறவுகளும் வெள்ளம் நிறைந்த கிராமங்களுக்குச் சென்று மக்களுக்கு உதவி வருகிறார்கள். இவர்களைப் போல் நிறையப் பேர் மக்களுக்குத் தேவையான பொருட்களுடன் சென்று உதவி வருகிறார்கள். அவர்களை எல்லாம் வாழ்த்துவோம்.

எவன் பெத்த பிள்ளைக்கோ நாந்தான் அப்பன் என்று சொல்வது போல கஷ்டப்பட்டு நிவாரணப் பொருட்களை கொண்டு வருபவர்களிடம் பறித்து அதில் ஸ்டிக்கர் ஓட்டுவது என்பது எவ்வளவு கேவலம் என்பதை ஏன் இவர்கள் அறியவில்லை. சில வருடங்களுக்கு முன்னர் இது போன்ற செயல்கள் எல்லாம் மக்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லாமல் இருந்தது. ஆனால் இப்போது என்ன செய்தாலும் உடனே முகநூலிலும் டுவிட்டரிலும் வந்துவிடும். உலகமே இவர்களின் செயல்களைப் பார்த்து சிரிக்கும் போது இவர்களுக்கு அது பற்றி எல்லாம் கவலையில்லை... கட்சியில் இன்னும் நல்ல பதவி வேணும். அம்மாவின் பார்வை தங்கள் மீது பட வேண்டும் என்ற குறிக்கோளோடுதான் இத்தனை கேவலங்களையும் அரங்கேற்றினார்கள்... அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். 

பெங்களூரில் இருந்து சென்னைக்கு நிவாரணப் பொருட்களுடன் வந்து சமையல் செய்து கொண்டிருப்பவர்களிடம் ஆளுங்கட்சி அல்லக்கைகள் சென்று சாப்பாட்டுப் பொட்டலங்களை தங்களிடம் தரவேண்டும் என்று கேட்டு சண்டையிடுவதும்.... தகாத வார்த்தைகளால் திட்டுவதும் எந்த விதமான மனநோய் அரசியல் என்பதை உலகமே அறிந்து கொண்டிருக்கும். அதைவிட அந்த மனிதர்கள் ரொம்ப பொறுமையாய் பேசினாலும் நாங்க என்ன எங்களுக்கா கேக்கிறோம்... பசியால வாடுற மக்களுக்குத்தானே கேக்கிறோம் என்று குதிக்கிறார்கள் ரத்தத்தின் ரத்தமான வெள்ளை வேஷ்டிகள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாப்பாடு கொடுக்கணுங்கிற உங்க எண்ணம் நல்லதுதான். அதுக்கு உங்க காசுல நீங்க வாங்கிக் கொடுக்கணும். அதைவிட்டுட்டு அடுததவனோட பொருளை பறிச்சி அதில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்திருக்கு.

இதேபோல் கடலூரில் ஒரு அம்மாவிடம் கொஞ்சம் பொருட்களைக் கொடுத்துவிட்டு எங்களுக்கு முதல்வர் அம்மாதான் உதவி செஞ்சாங்க... அவங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவோம்ன்னு சொல்லிக் கொடுத்து சொல்லச் சொல்கிறார்கள். உடமைகள் இழந்து மாற்றி உடுத்த ஒட்டுத்துணிகூட இல்லாமல் தவிக்கும் மக்களிடம் ஓட்டுக் கேட்கும் நேரமாய்யா இது. கடலூரில் களப்பணியில் இருக்கும் நண்பன் கிராமங்கள் வெள்ளத்தில் இருக்கு... மக்களைப் பார்க்கும் போது கண்ணீர் வருது... நான் பெத்து வைச்சிருக்கிறது ஒண்ணுதான்... அதோட பசியைப் போக்க ஏதாவது கொடுங்க தம்பின்னு கையேந்தி நிற்கும் அன்னை... வயிற்றுக்காக கையேந்தி நிற்கும் நிலை வந்திருச்சே என வெட்கித் தவிக்கும் மனிதர்கள்... என தினம் தினம் காணும் காட்சிகளால் என் இதயம் வெடிக்கிறது என்று சொல்கிறான். இவனுக என்னடான்னா இப்பத்தான் ஓட்டுக் கேட்கிறார்கள். என்ன மாதிரி நிலமையில் நம் தமிழகம் இருக்கு பார்த்தீர்களா..? உள்ளத்தால் அரசியல் செய்த உத்தமர்கள் இருந்த நாட்டில் வெள்ளத்திலும் அரசியல் செய்யும் ஆட்சியாளர்கள்தான் இப்போது இருக்கிறார்கள்.

வரிப்பணம் எங்கே போச்சுன்னு கேட்க முடிந்த கமலால் நான் கேட்டதில் என்ன தப்பு இருக்குன்னு திரும்பிக் கேட்க முடியலையேன்னு அவர் மீது கோபம் வந்தாலும் அவரோட வீட்டுக்கே ஒரு வாரம் கரண்ட் கட்டுன்னா ஒரு சாமானியன் கேட்டிருந்தால் இந்நேரம் வெள்ளத்தோடு போயிருக்க அல்லவா செய்திருப்பார்கள் என்று நினைக்கும் போது வந்த கோபமெல்லாம் போயிருச்சு. மக்கள் தவிக்கிறார்கள் என்று ஓடி ஓடி உதவிய சித்தார்த்தைக் கூட கடலூரில் பாதிப்பில்லை... அரசின் செயல்பாடுகள் ரொம்ப அருமையா இருக்குன்னு சொல்ல வைக்க முடிகிறது இந்த அரசாலும் அல்லக்கைகளாலும்... மேலிருந்து பார்த்தால் எங்க நிலமை உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேள்வி எழுப்பிய தினமலரை மறுநாளே ராணுவ காமாண்டர் போல் செயல்பட்டார் முதல்வர் என்று மாற்றிப் பிரசுரிக்க வைக்க முடிகிறது. அரசின் துரித நடவடிக்கை காரணமாக இயல்பு வாழ்க்கை திரும்பியது என்று சிரிக்காமல் பொய் சொல்ல முடிகிறது... கமல் பேசவில்லை என்று சொல்லிய கருத்துக்கு பக்கம் பக்கமாய் அநாகரீகமாய் வார்த்தைகள் உபயோகித்து கட்டுரை எழுத முடிகிறது. ஆனால் மக்கள் பிரச்சினைக்காய் இவர்கள் என்ன செய்தார்கள்..? ஒன்றுமே இல்லை மக்கள் செய்ததை தாங்கள் செய்ததாய் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள்.

கேரளாவில் இருக்கும் முஸ்லீம் கட்சிகளின் கூட்டமைப்பில் வார்டு உறுப்பினர் முதல் எம்.பி. வரைக்கும் தங்களின் இந்த மாத சம்பளத்தை தமிழக மழை நிவாரண நிதிக்கு கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். அதைச் சொன்ன என் நண்பன் உங்க எம்.பி. , எம்.எல்.ஏக்கள் எல்லாம் என்ன செய்தார்கள் என்று கேட்டான். நாம் ரஜினி பணம் தந்தது பத்தலை, கமல் தரவேயில்லை என்றெல்லாம் கூப்பாடு போடுவோம். நம்ம எம்.பி. எம்,எல்.ஏக்களையோ பிரசிடெண்ட்டையோ கேட்க மாட்டோம். இதை நான் அவனிடம் எப்படிச் சொல்வது. சிரித்து மழுப்பத்தான் முடிந்தது. ஆனால் அவன் ஒண்ணுமே செய்யாத அரசு எதுக்கு உங்களுக்கு..? என்று திருப்பிக் கேட்டான். உண்மைதானே மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் மக்கள் பிரதிநிதிகளும் எருமை மாட்டின் மீது மழை பொழிந்தது போலல்லவா இருந்தார்கள்... இன்னும் இருக்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்லாமல் கொஞ்சமே கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருக்கும் பகுதிகளுக்குச் சென்று நிவாரணம் வழங்குகிறேன் என்று சொல்லி போட்டோவுக்கும் வீடியோவுக்கும் போஸ் கொடுப்பதில் இருக்கும் அந்த வேகம் பாதிக்கப்பட்ட மக்களை காப்பதில் இருந்திருக்க வேண்டும். அது ஏன் இவர்களிடம் இல்லை. அரசியல்வாதிகள் முதல் அரசு அதிகாரி வரை 'அம்மாவின் ஆணைக்கிணங்க' என்று ஆரம்பித்துப் பேசுவது இந்த மாதிரியான சூழலில் ரொம்ப முக்கியமா? மக்களை அதட்டி உருட்டி பேச வைக்கும் செயல்கள் எல்லாம் எதற்காக...? எல்லாம் பணத்தின் பின்னே ஓடும் வாழ்க்கைக்காகத்தானே..? இப்படி பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை தங்களின் அரசியல் ஆதாயமாக்கிப் பாக்கத் துடிக்கும் அற்பப்பதர்களே உங்கள் வீட்டில் ஏதேனும் நிகழ்ந்தாலும் இப்படித்தான் இருப்பீர்களா..? பணம் பணம் என்று திரியும் நீங்கள் மனிதாபிமானத்தை தொலைத்தவர்கள்தான் என்பதை நாங்கள் அறிவோம்... மனிதாபிமானத்தோடு வருபவர்களை எதற்காக இப்படிப் படுத்துகிறீர்கள்..?

ஸ்டிக்கர் ஓட்ட நேரமானதால் கெட்டுப் போன உணவுப்பண்டங்களை கொட்டிய ஆளுங்கட்சியினர்... ஸ்டிக்கர் ஓட்டித்தான் சாப்பாட்டுப் பொட்டலம் தருவோம் என பசியோடு மழையில் மக்களை அடித்து விரட்டிய ஆளுங்கட்சியினர்... மக்களை சந்திக்காமல் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஆளுங்கட்சியினர்... அமைச்சர் வந்துதான் சாப்பாட்டு பொட்டலங்களைக் கொடுக்க வேண்டும் என தண்ணீரில் கொட்டிய ஆளுங்கட்சி ரவுடிகள்... மக்களால் விரட்டப்பட்ட ஆளுங்கட்சியினர் என்றெல்லாம் செய்திகள் வந்த போதெல்லாம் எதுவுமே பேசாமல் இருந்த முதல்வர் இந்த ஸ்டிக்கர் கலாச்சாரத்தை ஆதரிக்கிறார் என்றுதானே அர்த்தம். இப்போதுதான் பிரச்சினை செய்யும் ஆளுங்கட்சியினரை பற்றி தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருப்பதாக செய்திகள் வருகின்றன. எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. ஒட்டும் வரை ஸ்டிக்கர் எல்லாம் ஓட்டியாச்சு என்பதால் சொல்லியிருப்பாரோ என்னவோ..? மக்களின் முதல்வர் என சிறையில் இருந்த போது கண்ணீர் சிந்தி, வெளியில் வந்த போது கொட்டும் மழையில் நின்று கத்திய மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது ஒரு சொட்டு கண்ணீராவது சிந்தியிருப்பாரா நம் முதல்வர்...? சீவிச் சிங்காரிச்சு ஹெலிகாப்டருக்குள் இருந்து ரெண்டு விரலைக்காட்டியபடி பயணித்தபோது தண்ணீரில் தவித்த குப்பனையும் சுப்பனையும் கண்டாரா..? அந்தப் பயணம் எதற்கு...? நானும் இருக்கிறேன் என்பதைச் சொல்லவா...?

ஸ்டிக்கர் ஓட்டுறாங்க... ஒட்டுறாங்கன்னு கத்துற எதிர்க்கட்சியெல்லாம் என்ன செய்கிறார்கள். கொடுக்கும் பொருட்களில் எல்லாம் அவர்கள் கட்சிக்கான விளம்பரத்தோடுதானே கொடுக்கிறாரகள். இது வெள்ளச் சேதம்... இதில் பாதிக்கப்பட்டவனுக்கு தற்போதைய தேவை என்ன என்பதை அறிந்து தங்களுக்கான சுய விளம்பரம் இல்லாது கொடுத்தால் நீங்கள் மக்கள் மனதில் நிற்பீர்கள்... அதை விடுத்து இதுபோல் கொடுக்கும் போது உங்கள் மீது மரியாதை உண்டாவதற்குப் பதிலாக வெறுப்புத்தான் ஏற்படும். தமிழக அரசுக்கு என்று ஒரு பொதுவான முத்திரை இருக்கு அதை இந்த இரண்டு அரசுகளும் எப்போதாவது பயன்படுத்தியிருக்கின்றனவா...? வெள்ள நிவாரணப் பொருட்களைக் கொடுக்கும் போது  அந்த முத்திரை இட்டுக் கொடுக்கலாமே...? மத்திய அரசு கொடுத்த நிவாரணத் தொகை மக்களுக்கு வரும்போது அரசு முத்திரையா வரப்போகுது.. அதிலும் அம்மா முத்திரைதானே வரும். இங்கே எல்லாமே அரசியல் ஆகிப் போச்சு... இதனால் மக்கள் மனதில் வேதனைதான் மிஞ்சியிருக்கிறது.

அரசியல் அல்லக்கைகளே உதவி செய்பவர்களை தடுக்காதீர்கள்... மனிதன் மனிதனுக்கு உதவி செய்கிறான்... நீங்கள் கொஞ்சம் ஒதுங்கியே இருங்கள். இப்போதைய தேவைகளை விட மக்களுக்கு இனிமேலான தேவைகளே அதிகம். அதை நிறையப்பேர் செய்யக் காத்திருக்கிறார்கள்.. அவர்களைத் தடுத்து மக்கள் பெறும் உதவிகளை கெடுக்காதீர்கள்.  இன்னும் சில மாதத்தில் இந்த வேதனைகள் எல்லாம் மறைந்து மக்கள் எப்பவும் போல் வாழப்பழகியவுடன் 500, 1000த்துடன் வந்து உங்கள் ஓட்டுக்களைப் பொறுக்கிச் செல்லுங்கள். எங்கள் மக்கள் மறப்பார்கள்... மன்னிப்பார்கள். இதுவரை இப்படித்தான் இருந்தார்கள்... இனிமேலும் இப்படியே இருப்பார்களா என்பது கேள்விக்குறிதான். எது எப்படியோ காசுக்கும் மயங்கி ஓட்டுப்போடும் காலம் வரும்வரை தாங்கள் குடையாய் இருக்க வேண்டாம்... குடைச்சலாவது கொடுக்காமல் இருங்கள்.

தயவு செய்து உதவி செய்பவர்களை குறை கூறாதீர்கள். அவர்கள் பேருக்காக செய்கிறார்கள் என்று சொல்லாதீர்கள். பேருக்கோ தேருக்கோ செய்கிற மனப்பான்மை அவர்களிடம் இருக்கு. ஆனால் உங்களிடம் என்ன இருக்கு..? பேர் வாங்குவதற்காக மற்றவனின் பொருளை தான் கொடுப்பதுபோல் கொடுக்கும் கீழ்த்தரமான மனசு மட்டும்தானே இருக்கு. இனிமேல் தயவு செய்து சாதி, மதத்தை வைத்து பொழப்பு நடத்தப் பார்க்காதீர்கள். நாங்கள் சாதி மதங்களை வெள்ளத்தில் அனுப்பிவிட்டோம். இப்போது எங்களிடம் நிறைந்து இருப்பது மனிதம் மட்டுமே. யாரைத் தீவிரவாதிகள் என்று சொல்லிச் சொல்லி அரசியல் செய்தீர்களோ அவர்கள்தான் இன்று தீவிரமாய் உதவுகிறார்கள். அவர்களின் பணி ஒட்டுமொத்த உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பணி. உங்கள் அரசியலுக்கு வேட்டு வைத்த பணி. நாங்கள் எப்போதும் சகோதரர்களே என்று கை கோர்த்த பணி. அந்த மகத்தான பணியின் முன் உங்கள் செயல்கள்தான் தீவிரவாதம்.. வாழ்வை இழந்து நடுத்தெருவில் நிற்கும் மக்களிடம் ஓட்டுக் கேட்கும் தீவிரவாதி நீங்கள்... உதவ வந்தவனிடம் என்னிடம் கொடு என கெட்டவார்தைகளால் அர்ச்சனை செய்யும் தீவிரவாதி நீங்கள். மக்களை அடிமைகளாகவே வைத்திருக்க நினைக்கும் தீவிரவாதி நீங்கள். எங்கள் அரசியல் தீவிரவாதிகளே... தயவு செய்து இனிமேல் எம் சகோதரர்களை அப்படி அழைக்காதீர்கள். 

கடைசியாக ஒன்று அல்லக்கைகளே... கோவிலில் இருக்கும் தெய்வம் கோட்டையில் இருப்பதுபோல் குதிக்காதீர்கள். கோட்டைக்கு அந்த தெய்வத்தை அனுப்பியவர்கள் இன்று அநாதையாய் ஆதரவற்று நிக்கிறார்கள்... அவர்களின் ஒவ்வொரு ஓட்டும் சகாயங்களையும் இறையன்புகளையும் சைலேந்திர பாபுகளையும் தெய்வங்களாக ஆக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். இதே வேகத்தோடு எம் மக்கள் இருக்கும் பட்சத்தில் கோட்டையில் இருக்கும் தெய்வத்திற்கு உற்சவமே நடக்காமல் முடங்க வேண்டியிருக்கும். நாளைய தீர்ப்பை இன்றே எழுதிக் கொண்டிருக்கும் எம்மக்கள் இனி விழித்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன். இனி வரும் காலம் இளைஞர்களின் கையில் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை.
-'பரிவை' சே.குமார் 

24 கருத்துகள்:

  1. உண்மைதான் நண்பரே
    மக்கள்இனி விழத்துக் கொள்வார்கள்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  2. கண்டிப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்... இது ஒரு மாபெரும் வாய்ப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      இனியும் விழி திறக்கவில்லை என்றால் நாம் தூங்கிப் போக வேண்டியதுதான்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  3. அனைத்தும் அருமையாக சொல்லியுள்ளீர்கள் நண்பரே

    //மக்களின் முதல்வர் என சிறையில் இருந்த போது கண்ணீர் சிந்தி, வெளியில் வந்த போது கொட்டும் மழையில் நின்று கத்திய மக்கள் வெள்ளத்தில் தத்தளித்தபோது//

    ஏன் ? என்பதே எனது கேள்வி நண்பர் டி.டி அவர்கள் சொல்வதுபோல நல்லதொரு வாய்ப்பு இன்னும் 5 மாதத்தில் அவ்வளவுதான் என்னால் எழுதமுடியும் தொடர்ந்தால் வரம்பு மீறி விடும் வேண்டாமே.. இந்த நேரத்தில் என்று நிறுத்துகிறேன்

    தமிழ் மணம் 3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அண்ணா...
      ஆறு மாதத்தில் அடையாறு மறந்து காசுக்கு வாக்களிக்கும் மக்களாக நாம் மாறிவிடுவோம்.
      காப்பாற்ற வந்த படகுகள் ரோட்டோரத்தில் கிடக்க, அவனவன் வேலைக்கு போய்க்கொண்டிருக்கும் சென்னையாக மாறிவிட்டது. அப்புறம் நாம எப்படி அவர்களை விரட்டுவது...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  4. வணக்கம்
    மக்கள் இனியாவது வழிக்க வேண்டிய காலம் அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம5
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ரூபன்...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  5. விளக்கமான பதிவு! நன்று!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  6. அருமை குமார்! நிச்சயமாக மக்கள் விழித்தெழும் நேரம் இது. விழித்தெழ வேண்டும். பயமாக இருக்கின்றது எங்கேனும் இலவசங்களும், நோட்டும் மயக்கிவிடுமோ என்று. நோட்டு "நோட்டா" வானால் நன்றாக இருக்கும். இல்லையேல் நல்லதொரு மனிதர் உள்ளே வரவேண்டும். இல்லையேல் தமிழகத்திற்கு வாழ்வு இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க துளசி சார்...
      நோட்டா எதுவும் செய்யாது சார்... மக்கள் பணியாற்றும் நல்லவர்கள் இளைஞர்களை ஒரு குழுவாக்கி நிற்க வைத்து ஜெயிக்க வைக்க வேண்டும்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  7. அருமையான கருத்துகள்.ஆனால் நம் மக்கள் திருந்துவார்களா? சந்தேகம்தான்.ஒரு இறப்பு வீட்டில் அந்த இறந்த மனிதரின் உடல் மேல் தானத் தொகையை மனைவியிடம் கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்ளும் கும்பல்தானே இந்த அரசியல் கும்பல்.ஆனால் ஒன்று எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.எரியும் கொள்ளியில் எந்தகொள்ளி நல்ல கொள்ளி ??????????வேறு யார் இதற்கு மாற்று என்பதுதான் மிகப் பெரிய கொடுமை.
    கலாகார்த்திக் கார்த்திக் அம்மா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே...
      இனியும் திருந்தவில்லை என்றால் தமிழகத்தை காப்பாற்ற யாராலும் முடியாது...

      எல்லாக் கொள்ளியும் கெட்ட கொள்ளியே என்ன செய்ய அதில் நல்லாதாய் பார்ப்போம்.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  8. அருமையான கருத்துகள்.ஆனால் நம் மக்கள் திருந்துவார்களா? சந்தேகம்தான்.ஒரு இறப்பு வீட்டில் அந்த இறந்த மனிதரின் உடல் மேல் தானத் தொகையை மனைவியிடம் கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்ளும் கும்பல்தானே இந்த அரசியல் கும்பல்.ஆனால் ஒன்று எல்லோரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.எரியும் கொள்ளியில் எந்தகொள்ளி நல்ல கொள்ளி ??????????வேறு யார் இதற்கு மாற்று என்பதுதான் மிகப் பெரிய கொடுமை.
    கலாகார்த்திக்
    karthik amma

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அம்மா...
      தங்களது கருத்து இரண்டு முறை வந்துள்ளது...
      மேலே நண்பர் என நினைத்து சொல்லியிருக்கிறேன்...
      வருகைக்கு நன்றி அம்மா...
      தொடர்ந்து வாசியுங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.

      நீக்கு
  9. இனி வரும் இளைஞர் காலம் சந்தேகமில்லை. நல்ல அருமையான கட்டுரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  10. மீம்ஸ் வசனம் படித்து உருண்டு சிரித்தேன் போங்கள்.
    “வார்டு உறுப்பினர் முதல் எம்.பி. வரைக்கும் தங்களின் இந்த மாத சம்பளத்தை தமிழக மழை நிவாரண நிதிக்கு கொடுக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார்கள்“ கேரளாவில் மட்டுமல்ல, இங்கயும் தான் சொன்னார்களாம் எனக்கென்னவோ ஒரு மாச சம்பளத்தைக் கொடுக்கிறத விட ஒரு நாள் கிம்பளத்தைக் குடுத்தாலே போதுமே என்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      கில்லர்ஜி அண்ணாவின் வலைப்பூவுக்கு மட்டும் வரும் ஐயா அப்படியே நம்ம பக்கம் வராமலே போறாரே... நம்ம எழுதுறது பிடிக்கலை போலன்னு நினைச்சேன்... மெயில் பண்ணனும்ன்னு நினைச்சேன்... உங்க கருத்து வந்தாச்சு...

      நம்ம ஆளுங்க எதையும் கொடுக்க மாட்டானுங்க ஐயா... இருக்கறதை புடுங்கத்தான் பார்ப்பானுங்க...

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு
  11. அல்லக்கைகளே... கோவிலில் இருக்கும் தெய்வம் கோட்டையில் இருப்பதுபோல் குதிக்காதீர்கள். கோட்டைக்கு அந்த தெய்வத்தை அனுப்பியவர்கள் இன்று அநாதையாய் ஆதரவற்று நிக்கிறார்கள்... அவர்களின் ஒவ்வொரு ஓட்டும் சகாயங்களையும் இறையன்புகளையும் சைலேந்திர பாபுகளையும் தெய்வங்களாக ஆக்கும் என்பதை மறந்து விடாதீர்கள். அருமை! ஆனால் இவர்களின் தைரியமே மக்களின் மறதிதானே? நல்ல் பதிவு அருமை நண்பர் குமார் அவர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஐயா...
      மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையில்தானே எதன் மீதோ மழை பெய்தது போல் இருக்கிறார்கள்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

  12. இனி மக்கள் விழித்தெழுவர்
    சிறந்த திறனாய்வுப் பார்வை
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கவிஞரே...
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      நீக்கு

தங்கள் வருகைக்கு மகிழ்வும் பேரன்பும்...

நிறைகளை நிறுத்தி குறைகளைச் சொல்லுங்கள்... அது எழுத்தை மேம்படுத்தும்... நன்றி